Tuesday, 21 April 2020

ரேடியோ பொட்டி

 வேலை இல்லாதவனின் பகல் போழுதும் நோயாளியின் ராப் பொழுதும் ரொம்பவே நீளமா இருக்கும். இன்னியோட சரியா ஒரு மாசமாச்சி... 99 சதவீதம் பேரு மொத நிலையிலத்தான் இருப்பாங்க. இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் ஒரே ஆறுதல் சினிமா இல்லன்னா மியூஸிக்..

மியூஸிக்னதும் எனக்கு மொதல்ல ஞாபகத்துக்கு வருவது ரேடியோ தான். பெரிய சைஸ் ஓனிடா டிவி மாதிரியே இருக்கிற ரேடியோதான் நான் பாத்த மொத ரேடியோ. அத வால்வு ரேடியோன்னும் சொல்லுவாங்க. மெட்ராஸ்ல போலீஸ் வேலை பாத்து ரிட்டையர்டாகி வந்த மெட்ராஸ் தாத்தா வீட்டில அந்த ரேடியோ இருந்திச்சி.

காலைல ஆறு மணிக்கு 40 செகண்டுக்கு ஓபன் மியூசிக் ஓடும். அப்புறமாத்தான் ஸ்டேஷன திறப்பாங்க. முதல்ல ஒரு நிமிஷத்துக்கு வந்தே மாதரம். அதுக்குப் பிறகு தான் நிகழ்ச்சி ஆரம்பிக்கும். சாயந்திர நேரம் விவசாய செய்திக்காக பாடுற சுழன்றும் ஏர் பின்னது உலகம் பாட்டு, கிராமியக் கலை நிகழ்ச்சில்லாம் திருநெல்வேலி ஸ்டேசன்ல தனி ரகம்.

செல்போனுக்கு கவர் மாட்டிருக்கிற மாதிரி ரேடியோவுக்கும் தோல் கவர் மாட்டி பத்திரமா வச்சிருப்பாஙக சில பேரு. மர்பி கம்பெனி ரேடியோ அப்ப ரொம்ப பேமஸ்.

இந்திரா காந்திய சுட்டுக் கொன்னப்ப ரெண்டு நாளைக்கு ஓடிட்டிருந்த மியூஸிக். இன்னும் நெனவில இருக்கு. சோகத்த கொஞ்சம் கொஞ்சமா கரைச்சி காது, மனசுன்னு ஆரம்பிச்சி ஒடம்பு பூரா பரவ விட்டிச்சி. ஊர் முழுசும் கடைங்க அடைச்சிக் கிடக்க, கொலைங்கிற செய்தியும் சேந்தப்ப அந்த சோகத்தோட கொஞ்சம் திகிலும் கலந்து கிடந்திச்சி.

அதிலருந்து ஒரு ஆறு மாசத்துக்குள்ள நாங்களும் ஒரு செகண்ட் ஹேண்ட் ரேடியோ வாங்கிட்டோம். ஒரு ஞாயிற்றுக் கிழம மத்தியானம் பெரிய கோயில் தெருவில ரேடியோவ வாங்கிட்டு அத கேட்டுக்கிட்டே வீட்டுக்கு ரொம்ப மெதுவாவே நடந்து போனேன். அதில கேட்ட மொத பாட்டு "திருவிழா, திருவிழா, இளமையின் தலைமையில் ஒருவிழா..." அடுத்த பாட்டு "காளிதாசன் கண்ண தாசன் கவிதை நீ... எழுத வா படிக்க வா". இது முடியும்போது தான் வீட்டுக்கு போய் சேர்ந்தேன். மூணு நிமிஷ தூரத்த பத்து நிமிஷம் நடந்தேன்.

தெரிஞ்ச டெயிலர்கிட்டருந்து வாங்கின அந்த ரேடியோ வித்தியாசமானது. அது பிலிப்ஸ் கம்பெனி ரேடியோ. அதில, பண்பலை, மத்திய அலை இத்தோட சிற்றலை 1, சிற்றலை 2, சிற்றலை 3ன்னு ஐந்து விதமா மாத்திக்கலாம்.

வெளிநாடுகள்ல தமிழ் ஒலிபரப்பு டைம் எல்லாம் நோட் போட்டு எழுதி வச்சி அந்தந்த ஸ்டேஷனை போட்டு பார்ப்போம். ரேடிேயோவோட கெப்பாசிட்டிய செக் பண்றதோட அவங்களோட தமிழ கேக்கும்போது கூடுதல் சந்தோஷம். வெரித்தாஸ், மணிலா, பிபிசி லண்டன் அவ்வளவு ஏன் பாகிஸ்தான்லருந்து கூட 20 நிமிஷம் தமிழ் நிகழ்ச்சி இருந்திச்சி.

இலங்கையில உச்சகட்ட பிரச்சினையா இருந்த நேரம் அது. புலிகள் செய்திக்கு பிபிசின்னா, பாட்டுக்கு அதே இலங்கை அரசோட ஸ்டேஷன்தான். இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் அப்படின்னு கொழும்பு ஸ்டேஷன் ஒலிபரப்புற பாட்டுக்கு தென் தமிழகமே அடிமைன்னு சொல்லலாம். இது போக கண்டி ஸ்டேனும் எங்க ரேடியோல வரும்.

முழு நேரமும் தமிழ் சினிமா பாட்டுக்களா போட்டாலும் அதையும் வித்தியாசமா செய்வாங்க கொழும்பு ஸ்டேஷன்ல. சிறுகதை ஒண்ண சொந்தமா ரெடி பண்ணி அதுக்கு ஏத்த மாதிரியான பாடல்களை நடுவில செருகி அரை மணி நேரம் போடுறது வேற லெவல். கதைய வாசிக்கிறவங்க குரல்லயே ஜாலம் காட்டுவாங்க. ஏதாவது ஒரு கேள்விய கேட்டு அடுத்து வரும் பாட்டுக்குள்ள பதில் இருக்குற மாதிரி போடுறதும் தனி ரகம்.



பிபிசி செய்தின்னா ஆனந்தி, ஆகாசவாணின்னா சரோஜ் நாராயண்சாமி. அதே மாதிரி கொழும்பு ஸ்டேஷன்னா ராஜேஸ்வரி சண்முகம். பெரும்பாலும் கதையோட சேர்ந்த பாடல் நிகழ்ச்சியில அவங்கதான் வருவாங்க. மூணு மணி நேர சினிமாவ ஒரு மணி நேரமா சுருக்கி போடுற ஒலிச் சித்திரம் நிகழ்ச்சிக்கு நெறைய ரசிகருங்க உண்டு.

ஊரு பக்கம் குடும்பம் குடும்பமா பீடி சுத்துற வேல பாத்ததால கொழும்பு ஸ்டேஷன் தான் பெரிய பொழுதுபோக்கு. அப்பப்ப விடுதலைப் புலிகள் ஸ்டேஷனும் வரும். இதோ புலி வருகுது திட்டத்தில், அராஜகம் ஒழியுது மொத்தத்தில் என்ற விக்ரம் பாடல்தான் அதில் ஃபேவரைட். அது மாதிரி பாட்டுகள் கொழும்பு ஸ்டேஷனில் கேட்க முடியாது.

இலங்கை ஸ்டேஷன் இந்த அளவுக்கு வாழ்க்கையோட இணைஞ்சிருந்தாலும் திருநெல்வேலி ரேடியோவோட மவுசும் தனிதான். சினிமா பாட்டு போடுற நேரம், யாரும் சொல்லாமலேயே எல்லா வீட்டு ரேடியோவும் கோரசா பாடிட்டிருக்கும். பலருக்கு சினிமா பாட்டு வசனம் எல்லாம் மனப்பாடமா இருக்கும்.

இசை மட்டும் இல்லைன்னா மனுச மனம் பேதலிச்சிப் போவும். அது ரேடியோ காலத்தில ஆரம்பிச்சி பல பாதைங்கள கடந்து இப்ப முழு நேர பண்பலை வரை வளந்து நிக்குது. ஆண்ட்ராய்டு ஆப்பில் கூட ரேடியோ ஸ்டேஷன் வரிச கட்டி வருது. 

பேட்டரி ரேடியோவ கொர கொர இரைச்சலோட தலை மாட்டில வச்சி தூங்கினதோட லேட்டஸ்ட் வெர்ஷன் தான் பண்பலை ரேடியோவ ஹெட்ஸெட் மாட்டி கேட்டுகிட்டே தூங்குறது.

எப்ப எங்க எந்த பாட்டு போடுவாங்கன்னு காத்திருந்த நிலைமை மாறி, எப்ப நம்மள இந்தாளு கேக்க ஆரம்பிப்பான்னு பாட்டுங்கல்லாம் ஏங்கிக் கிடக்கிற காலம் வந்திடுச்சி.

அதுக்காவ மியுசிக் மலிஞ்சி போச்சின்னு சொல்லிற முடியாது. அது, மனுஷ மனம் பேதலிக்காம தடுக்கிற ஹைட்ராக்ஸி குளோரோ குயின்... 

அதாங்க.. மனுஷனோட மூச்ச சீராக்கும் மருந்து.

சென்னைக்கு வந்த புதுசில ஆல் இண்டியா ரேடியோ பி அலைவரிசையில நாலைஞ்சி முறை இளைய பாரதம் நிகழ்ச்சில நானும் இந்த ஹைட்ராக்சி குளோரோ குயின குடுத்திருக்கேன்ல..

#நெல்லை_ரவீந்திரன்

Sunday, 19 April 2020

டெண்ட் கொட்டாய்

 சீர்காழி கோவிந்த ராஜனோட கணீர் குரல், விநாயகனே வினை தீர்ப்பவனே... வேழ முகத்தோனே...ன்னு என காத்துல தவழ்ந்து வரும்போதே மனசுக்குள்ள உற்சாகம் ஊற்றெடுக்கும். பழைய ரெக்கார்டு தட்டு சுழல சுழல குழாய் செட் உச்சஸ்தாயில் கூப்பிடும். காலைலேயே வீட்டில பெர்மிசன் வாங்கிருந்தா இன்னும் கூடுதல் சந்தோசம்.

ஊரில இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலவுல இருந்தா கூட, புளிய மரங்கள்ல விளையாடிகிட்டிருக்க காத்து, பயித்தங் காடு வழியா பாட்ட சுமந்து கிட்டு வரும். அது பாட்டு மட்டுமில்ல. ஒரு சிக்னலும் கூட. அன்னிக்கு என்ன படம் ஓடுதோ அதுக்கு ஏத்த மாதிரி, எம்ஜி ஆர் பாட்டு, சிவாஜி பாட்டுன்னு போடுவாங்க.

திறந்தாச்சின்னா அதுக்கு ஒரு பாட்டு, டிக்கெட் குடுக்க ஆரம்பிச்சதும் ஒரு பாட்டு, படம் போடப் போறாங்கன்னா அதுக்கும் ஒரு பாட்டு இது தான் எங்க ஊரு டூரிங் டாக்கீசுக்கு பொது விதி. டிக்கெட் குடுக்க ஆரம்பிச்சதும் வீட்லருந்து கிளம்பினா போதும். படம் ஆரம்பிக்கவும் போயிரலாம்.

சாயந்தரம் ஆறே முக்காலுக்கு படம் போட்டுருவாங்க. தரை டிக்கெட், பெஞ்சு டிக்கெட்டுன்னு ரெண்டு விதம். பெஞ்சின்னா சிமெண்ட் சிலாப் போட்டு வச்சிருப்பாங்க. அப்பாடான்னு சாஞ்சோம்னா, பின்னாடி இருக்கவங்க மடியிலதான் போய் விழனும். அப்புறம் அவ்ளோதான்.

அதனால, தரை டிக்கெட் தான் நம்ம ஃபேவரைட். நல்ல ஆத்து மணல் போட்டு வச்சிருப்பாங்க. கொட்டகைக்கு வெளியில கூட மண்ண குமிச்சி வச்சி உக்காந்தும் படம் பார்க்கலாம், படுத்துக் கிட்டும் பாக்கலாம். கோடை வெயில் காலத்திலல்லாம், அப்பிடி படுத்துக்கிட்டு ஃபர்ஸ்ட் ஷோ பாக்கிறதே தனி சுகம். 

பிலிம் ஓட்டுற சத்தம், ஆபரேட்டர் ரூம்லேருந்து திரை வரைக்கும் நீளமா இருக்கிற புகை, அத்தோட, படம் பாத்துக்கிட்டிருக்கவங்க யாராவது இழுத்து விடுற புகை. இதுக்கு நடுவில பொம்பிளையாளுங்க தலையில வச்சிருக்கிற பூ வாசம். இப்பிடியான கதம்பமான டெண்ட் 

கொட்டாய் வாசன, இப்பவும் மூக்க சுத்திகிட்டே இருக்கு.


இன்டெர்வெல் நேரத்தில கை முருக்கு விப்பாங்க பாருங்க அந்த ருசிய இதுவரை எதுவுமே அடிச்சிக்கல. டூரிங் தியேட்டர்லல்லாம் நாலு பார்ட்டா படம் போடுவாங்க. அதனால மூணு இன்டர்வெல் வரும். 

அப்பல்லாம் ஆபரேட்டர் ரூமுக்கு வெளியில நின்னு ரீல் மாத்துறத வேடிக்க பாக்குறது தனி ஆச. பெரிய ஆளா ஆனதும் எப்பிடியாவது ஆபரேட்டராயிடனும்னு கூட நெனப்பு வந்து போகும். அத மனசில வச்சி.வீட்டில பிலிம் ஓட்டி பாத்தது தனி கதை.

அது ரஜினி, கமல் காலம்னாலும் எம்ஜிஆர் ஆட்சி காலம். அதனால சனி ஞாயிறுன்னா எம்ஜிஆர் படம் நிச்சயம். சிவாஜி படமும் சில வாரங்கள்ல போடுவாங்க. எம்ஜிஆரோட படங்கள்ல 80க்கும் மேல எனக்கு காமிச்சது டூரிங் தியேட்டர்தான். அப்பப்ப சிவாஜி படமும் பாக்கிறது உண்டு.

ரொம்பவும் அழுகாச்சியா படம் போச்சிதுன்னா பனை ஓலை சங்கீதமும், சிலு சிலுன்னு காட்டுக்குள்ளற வீசுற காத்தும் தானாவே கண்ணுல தூக்கத்த வரவழைச்சிரும். 

தியேட்டருக்கே கூட இது மாதிரி சோகம் வந்திருக்கு. அதான் வசந்தம்ங்கிற பேர்ல கொஞ்ச நாளும் குமரன்ங்கிற பேர்ல கொஞ்ச நாளும் டூரிங் தியேட்டர் ஓடிச்சி. வேற சில சிக்கல் வந்தா ரெண்டு முணு நாளு மூடிருவாங்க. அப்பிடித்தான் அந்த ஏழு நாள் படம் ஏழு நாள் ஓடிச்சி. அதாவது படம் ஓடுணுது முணு நாள் தான். மத்த நாள்ல தியேட்டர் மூடிக் கிடந்தது.

சனி, ஞாயிறு இல்லாம மத்த நாளுங்கள்ல ரஜினி, கமல், பாக்யராஜ், பாண்டியன் படங்கள போடுவாங்க. அந்த நாளுங்கள்ல வருத்தப்படாத வாலிபர்கள நெறைய பார்க்கலாம். அப்பல்லாம் கள், சாராய கடைங்க உண்டு. அதனால, சித்தப்பு, மாமான்னு சொந்தக்கார குடிமகன்களும் நிறைஞ்சிருப்பாங்க.

இதனாலேயே சனி, ஞாயிறு தான் ஊருக்காரங்க அதிகமா வருவாங்க. சனிக்கிழம பீடிக்கடை சம்பள நாள் வேற. இந்த நினைவுகளல்லாம் புகையா மனசெல்லாம் சுத்திட்டிருக்கு.

இப்ப தினசரியும் சன் லைப், முரசு, கே டிவி சேனல்கள்ல போடுற படங்கள் எல்லாம் அந்த புகை மேல வெளிச்சம் போடுறதால, பழைய நெனப்பெல்லாம், தனித்தனி படங்களா மனசுக்குள்ள டெண்ட் கொட்டாய் போட்டு ஓடிட்டிருக்கு.

#நெல்லை_ரவீந்திரன்

Tuesday, 14 April 2020

கொரோனா கால தனிமை

 பிரபல மனநல மருத்துவர் திரு.ருத்ரன் பதிவிலிருந்து..



மூன்றாவது வாரத்தில் மனம் சோர்வடையும் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் எதிர்பார்த்ததைவிடவும் அதிகம் பேர் பாதிப்பின் ஆரம்பக் கட்டத்திற்கு வந்து விட்டார்கள்.

சாலைகளில் அசாதாரணமான ஒரு நிசப்தம், அவ்வப்போது பொறுப்பற்ற சில விடலைகளின் வாகன வேகத்தால் நாராசமாகிறது.


வீடுகளிலும் பேச்சு குறைந்து விட்டது. புத்தகங்கள் பாதியில் மூடப்பட்டு கிடக்கின்றன. டிவியில், கணினியில் படங்கள் ஓடவில்லை. எல்லா கண்களும் கைகளில் இருக்கும் செல்பேசியில் - விரல்களால் நீவி நீவி  செய்திகளையும் பொய்களையும் பார்த்துக் கொண்டு தேதி கிழமை தெரியாத மெத்தனத்தில் வாழ்க்கை நின்று விட்டது போல் தோன்றுகிறது. 


தொழில்நுட்பம் தெரியாத சிலர் தெரிந்தது போல் பேசுபவர் சொன்னதை நினைவில் வைத்துக் கொண்டு வெறுமையில் கிடக்கிறார்கள்.  நாம் மாறிவிட்டோமா? மீண்டும் பழைய நிலைக்குச் செல்வோமா? என்று யாருக்கும் புரியாத ஒரு மந்த நிலை. ஒரு நாளில் நாற்பது தடவை தொற்று எண்ணிக்கை, சாவு எண்ணிக்கை என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதை விட்டுவிட்டார்கள்.  


பல எழுத்தாளர்களின் பேனா முனைகள் உலர்ந்து கிடக்கின்றன, ஓவியத்திரைகள் வெள்ளையாகவே இருக்கின்றன. எல்லா நாட்களும் இரவின் தூக்கத்தை நோக்கியே நகர்கின்றன. 


வாழ்வை நடத்துவதே தினசரி போராட்டம் என்று பழகிய வறியவர்கள் கூட திகைத்து விட்டார்கள். தினமும் வேலை, வேலைக்கு ஊதியம், ஊதியத்தில் வாழ்க்கை எனும் இயல்பு பிரழ்ந்து விட்டது. வேலை இல்லை, வெளியே போகவும் முடியாது, பொருட்கள் வாங்கவும் பணம் இல்லை என்ற நிலையில் உதவிகள் எங்கிருந்து எப்போது வரும் எனும் ஏக்க எதிர்பார்ப்பில் அவர்களது நாட்கள் தேய்ந்தன. 


அவர்களிடம் வேலை வாங்கிப் பழகிவிட்ட நடுத்தர வர்க்கம் தன் வேலையைத் தானே செய்வதன் சிரமத்தை இயல்பாக லகுவில் ஏற்றுக் கொண்டது. ஆனாலும் பழகிய வசதிகள் இல்லாதது ஓர் இறுக்கத்தை அவர்களிடமும் ஏற்படுத்தி விட்டது. இன்னும் ஒரு வாரம், இரண்டு வாரம் எனும் கணக்குகளில் அவர்களுக்கு நம்பிக்கை போய்விட்டது.


வீட்டிலேயே அடைபட்டிருக்கும் குடும்பத்தில் நெருக்கத்துக்குப் பதிலாய் இறுக்கம் கூட ஆரம்பித்தது. சிறு தவறுகள் பெரிதாய்த் தெரிந்தன, பொழுது போவது பெரும் பாரமாகியது. வளமான வாழ்வை அமைத்துக் கொண்டவர்களுக்குப் பணி செய்ய இன்னமும் சிலர் இருந்தார்கள். அவர்களது இயல்பு எனும் கேளிக்கை, சமூக வலைவிரிப்புகள் மட்டுமே இல்லாமல் போயின. 


குடிப்பதற்கும் புகைப்பதற்கும் பழகியவர்களுக்கு அவை இல்லாமல் ஒருவித எரிச்சல் இருந்து கொண்டே வந்தது. அதன் வெளிப்பாடு வீட்டில் இருப்பவர்களின் மீது தேவையில்லாத கோபமாய் வந்து கொண்டிருந்தது. 


திடீரென்று அறிவிக்கப்பட்ட நாடடங்கில் திட்டமிடாமல் வந்த உறவினர்கள் சில வீடுகளில் பாரமாக உணரப்பட்டனர். அவர்களுக்குப் போக முடியாமல், இவர்களுக்கும் அனுப்ப முடியாமல், செலவுகளோடு உறவு சிக்கல்களையும் பல வீடுகள் சமாளிக்கத் திணறின. அத்தியாவசியத்திற்கே மிகுந்த பிரயத்தனம் தேவைப்படும்போது, இளைப்பாற எந்த செலவும் சாத்தியமில்லாமல் போனது.  


இதன் அடுத்த கட்டம்தான் மனநலம் பாதிக்கப்படும் நிலை. பதட்டத்தில் ஆரம்பித்து, வெறுப்பில், விரக்தியில் தொடர்ந்து, எரிச்சலாய் வெளிப்பட்டு முடிவில் மனச் சோர்வில் முடியும்.

இந்த வாரத்திற்குப்பின் மனச் சோர்வின் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். அதனை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்.


மனச் சோர்வின் ஆரம்ப அறிகுறிகள் உறக்கம் கெடுதல், உணவுப் பழக்கத்தில் மாறுதல், எதிலும் நாட்டமின்மை, கவனச் சிதறல், சோகமான மனநிலை, தனிமை நாடுதல், ஆர்வம் இருந்த காரியங்களிலும்  ஈடுபட முடியாத நிலை, பேசுவதும் பிறரிடம் தொடர்பு கொள்வதும் குறைதல். 


மெல்ல, மணிக்கொருமுறை செல்பேசியில் கணினியில் கொரோனா செய்தி தேடுவதும் குறைந்து விடும். வெளியிலிருந்து பார்ப்பவர்க்கு இது சோம்பல் போல் தெரியும். இவர்களை இதே மனச் சோர்வில் விட்டுவிட்டால் விளைவுகள் விபரீதமாகவும் முடியலாம். 


இப்படி யாராவது இருந்தால் அவர்களிடம் பேசுங்கள். வெட்டியாகவாவது பேசுங்கள். அறிவுரை ஆலோசனை என்றெல்லாம் ஆரம்பிக்காமல் அடுத்த வீட்டின் பூனை பற்றி கூட பேசுங்கள். அவர்கள் உங்கள் பேச்சை விரும்பாவிட்டாலும் பேசுங்கள். அந்நேரம் அவர்களது சோகம் எரிச்சலானாலும் அது அவர்களுக்கு உதவும். இது பற்றி நிறைய பேச வேண்டியிருக்கிறது. இதற்கான நேரம் வந்து விட்டது.

Sunday, 15 March 2020

கொரோனா

பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல், நிபா வைரஸ், சார்ஸ் வைரஸ் இந்த வரிசையில் கொரோனா. முந்தையவை எல்லாம் இந்த அளவுக்கு இல்லை. ஆனால், இதன் தாக்கம் கொடூரம். சீனாவில் ஆயிரக்கணக்கில், இத்தாலியில் ஒரே நாளில் 250 என பலி வாங்கி, கார்பரேட் வங்கி போல 130 நாடுகளில் கிளை பரப்பி நிற்கிறது, இந்த கொள்ளை நோய்.



சீதபேதி, கக்குவான் இருமல், காலரா, தட்டம்மை, டிபி மாதிரி நோய்களுக்கான மருந்து பரவலாக இல்லாதபோது கொத்து கொத்தாக உயிர் பலி வாங்கியது. 50ஐ நெருங்கிய, கடந்தவர்களுக்கு இது தெரியும். இன்ன காரணம் என தெரியாமலேயே பலரும் உயிர் இழந்த காலம் அது.

 'பேதியில போறவன், கொள்ளையில போறவன்' மாதிரியான கிராமத்து பாட்டிகளின் சரளமான ஏச்சுகள் எல்லாம் காலரா மற்றும் கொள்ளை நோய்களில் இருந்து வந்தவை தான். அது போன்ற கொள்ளை நோய் தான் இதுவும்.

கொள்ளை நோயால் அரண்டு கிடந்த சமயத்தில் அமெரிக்காவின் ஸ்கைலாஃப் ராக்கெட் விழுந்து உலகம் அழியப் போவதாக கூறி, வீட்டில் வளர்த்த ஆடு, கோழிகளை எல்லாம் அடித்து சாப்பிட்டதும் உண்டு. அப்புறம் ஸ்கைலாஃப் ராக்கெட் கடலுக்குள் விழுந்தது தனிக்கதை. 

இதற்கு கொஞ்சமும் குறையாத பீதியை ஏற்படுத்தி கொத்து கொத்தாக உயிர் பறிக்கும் கொரோனா என்ற கொள்ளை நோயும் இந்த சோகமும் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு புதிது. ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதாவது ஒன்று கொத்தாக உயிர் பறிக்கிறது. உயிர்களை பறிப்பதில் போரும் நோயும் ஒன்று.

புதுப்புது நோய்கள், புதுப்புது மருந்துகள். காலரா, அம்மை, சீதபேதி, டிபி, காமாலை, கக்குவான் இருமல் இதெல்லாம் கொள்ளை நோய்களாக இருந்ததென்றால் இன்றைய தலைமுறையினர் யாராவது நம்புவார்களா? இதற்கும் தீர்வு இருக்கும். 

கார்பரேட் கம்பெனிகளின் திட்டம்,  வல்லரசுகளின் சதி. இப்பிடியாக கொரோனா உட்பட எல்லாவற்றுக்கும் ஒரு குரூப் காரணம் சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால், சுய சுத்தமும், கட்டுப்பாடும் ஆரோக்யத்தின் அடிப்படை.

#கந்தையானாலும்_கசக்கிக்கட்டு 

#கூழானாலும்_குளித்துக்குடி

இதெல்லாம் நம்ம முன்னோர்கள் நமக்குச் சொல்லி நாம மறந்து விட்ட வார்த்தைகள். அதை கடைப்பிடித்தால்

#சுத்தம்_சுகம்தரும்

Thursday, 20 February 2020

இடது கை

இடது கை எப்போதுமே சபிக்கப்பட்டது. வலது கை தரும் மரியாதையை மகிழ்வுடன் ஏற்கும் மக்கள் இடது கையின் மரியாதையை கூட அவமரியாதை சின்னமாகவே பார்க்கிறார்கள். 

வலது கை செய்யும் வேலைகள் என சில உண்டு. அது உயர்வாக கருதப்படுகிறது. பெருமையுடன் பட்டியலிடலாம். அந்த வேலையை வலது கை தான் செய்ய வேண்டும் என்பது  நியதி. அநேகமாக அதை எழுதியதும் வலக் கையாகத்தான் இருக்கக் கூடும்.

வலது கையே போன மாதிரி இருக்கு... இப்பிடி சொல்கிறவர்களிடம் இடது கை போனா பரவா இல்லையான்னு.. இடது கை கூட கேட்க முடியாது. இதுதான் நிஜம்.

இடது கைக்கு தரப்படும் வேலைகள்...? நினைத்துப் பார்க்க கூட மனம் மறுக்கிறது. உண்மையில் இடக்கை இல்லா விட்டால் வலக்கைக்கு ஏது தனி மரியாதை. ஊனம்... அங்கஹீனன்... இப்படித்தானே கூப்பிடும் நிலை உருவாகும்.

இந்த ஏற்ற தாழ்வு பற்றி #இடக்கை நாவலில் எஸ்.ராமகிருஷ்ணன் இப்படி கூறுகிறார்.

👉 வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாது என்கிறார்கள். இடது கைக்கு தெரியாமல் வலது கை என்னவெல்லாமோ செய்கிறது.  வலது கைக்கு கிடைக்கும் மரியாதை ஏன் இடது கைக்கு கிடைப்பதில்லை. இடது கையை எப்போதுமே அற்பமாக ஏன் நாம் கருதுகிறோம்.

வலது கை சூதாடுகிறது. வலது கை ஆளை அடிக்கிறது. கள்ளத்தனமாக பணம் வாங்குகிறது. ஆனாலும் வலது கை புனிதமானது. ஒரே உடலில் இருந்தாலும் இரண்டு கையும் ஒன்றில்லை. இடது கை புறக்கணிக்கப்பட்ட ஒன்றே👈

இப்படியாக அவர் கூறிச் செல்கிறார்.

கைகளில் மட்டுமல்ல மனிதரிலும் இடது கை வகையினர் உண்டு. அப்படி பிரித்து வைத்திருக்கிறார்கள். அற்பமாக பார்க்கப்படும் அவர்களை வலது கை வகையினர் ஒரு  பொருட்டாக ஒருபோதும் பார்த்ததே இல்லை. 

இடது கை பிரிவில் இருந்து அதிர்ஷ்ட வசமாக யாராவது வலது கை வகையினராக மாறினாலும், அவரும் கூட இடது கை பிரிவை அற்பமாக பார்க்க பழகி விடுகின்றார். ஏனென்றால் இடதை எப்போதுமே அற்பமாகவே நாம் கருதுகிறோம்.

சமூகம், பணி சூழல், அரசியல், நிர்வாகம் இப்படி எங்கெங்கும் இந்த இரண்டு வகை பிரிவு நிறைந்திருக்கிறது... நீடித்திருக்கிறது...

Wednesday, 22 January 2020

இடக்கை - நாவல்

 ஒவ்வொரு வருஷமும் புத்தக காட்சிக்கு போனாலும் சில புத்தகங்கள் சிலரது புத்தகங்கள் மட்டுமே என்னை கவரும். முன்பெல்லாம் படிப்பதற்கு நிறைய நேரம் இருக்கும்.  செய்தி சேனல் வேலையில் அது சாத்தியமில்லாதது இப்போது ஒரு காரணம். ஆபீஸ் வீடு இடையிலான பயண தூரம் நேரமும் கூட மற்றொரு காரணம் தான். இந்த முறையும் சென்று வந்ததோடு வழக்கம் போல சில புத்தகங்களை மட்டுமே வாங்கி வந்தேன். சின்னவன், பெரியவன் விருப்ப லிஸ்ட் தனி.


கதைகள், நாவல், வருணனை நிறைந்த கட்டுரைகள் என்னைக் கவருபவை. அந்த வகையில் எப்போதுமே எனக்கு பிடித்த எழுத்தாளர் சாண்டில்யன். மிகப்பெரிய கதையோட்டத்தின் ஊடே அவரது வருணனை பூஞ்சோலை. காட்சிகளை அவர் விவரிப்பது மனதுக்குள்ளேயே அழகிய திரைச் சீலையை விரித்து பயாஸ்கோப் காட்டும். வெறுமனே ஓடும் கதைகள் என்னை கவர்வதி்ல்லை. பொன்னியின் செல்வனை விடவும் கடல்புறா தான் எனது ஆல்டைம் ஃபேவரைட். போர்க்களக் காட்சி, நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய விவரணை இது மாதிரி நிறைய சொல்லலாம். காதல் காட்சிகளும் கூடத்தான். சாண்டில்யன் வேற லெவல்.


சாண்டில்யனை போலவே, என்னை கவர்ந்த நான் ஆராதிக்கும் எழுத்தாளர் எஸ்ரா. இப்போது இந்த கணத்தில் கண் முன்னே நிகழும் ஒரு காட்சியை கூட அருமையான ரசனையான கட்டுரையாக மாற்றும் எழுத்தாற்றல் அவருக்கே சொந்தமானது. எனது மானசீக குருவும் கூட. விகடனில் வெளியான துணையெழுத்து, தேசாந்திரி தொடர்களில் இருந்தே அவரை தொடர்கிறேன். 



இந்த புத்தகக் காட்சியிலும் அவரது "இடக்கை" வாங்கி வந்து வாசிக்க ஆரம்பித்தால், 20 பக்கங்களுக்குள் அவருக்கே உரித்தான எத்தனை மேற்கோள் வாசகங்கள். யான் பெற்ற அனுபவத்தை ஊரும் பேரும் பெற இதோ சில....


"எல்லா வெற்றிகளும் சந்தோஷங்களும் துயரங்களும் வெறும் நினைவுகளாக மட்டுமே மிஞ்சியிருக்கின்றன என்பது எவ்வளவு வேதனையானது. இவ்வளவுதானா மனித வாழ்க்கை" 

- அந்திம அவுரங்கசீப் நினைவில்  எஸ்ரா வார்த்தைகள்.


"உறக்கம் இரவு புகட்டும் பால். முட்டி முட்டி பால் குடித்த குழந்தை கண் அயர்வது போலத்தான் மனிதர்கள் உறங்குகிறார்கள். உறக்கம் எவ்வளவு சிறந்த மருந்து. எல்லா இரவும் ஒன்றுபோல் தோன்றினாலும் ஒவ்வொரு இரவும் தனித்துவமானது. தனி வாசனையும் இயல்பும் கொண்டது"


"அதிகாரத்தை ருசிக்க விரும்புகிறவன் கடவுளையும் ஏமாற்றவே முயற்சிக்கிறான். அவன் மனக்குரல் கடவுளை சாந்திப்படுத்த என்ன வேண்டும். கடவுளிடம் எப்படி மன்னிப்பு கேட்க வேண்டும் என கற்றுத் தருகிறது"


"எந்த பேரரசனாலும் உதிர்ந்த பூவை மரத்தில் ஒட்ட வைத்து விட முடியாது. இயற்கையை எவராலும் வெல்ல முடியாது. அது ஒரு மர்மம். புதிர். அவிழ்க்க அவிழ்க்க நீண்டு கொண்டே செல்லும் புதிர்"


"காலில் மணல் ஒட்டிக் கொண்டிருந்தால் உதறுவதில்லையா. மணலை நாம் கண்டு கொண்டா இருக்கிறோம். எளிய மனிதர்களின் சாவும் காலில் ஒட்டிய மணல் போலத்தானே என நினைத்திருந்தார். ஆனால், காலம் அந்த மணல் கண்ணில் விழுந்த துகள் போல உறுத்திக் கொண்டிருக்கும் என்பதை உணர்த்தி விட்டது"


"மனித நாக்கு ஓநாயினுடையதை விடவும் சிறியது. ஆனால், அது எவ்வளவு பேசுகிறது. புரள்கிறது. சதி செய்கிறது"

Thursday, 7 November 2019

கமல் '65... கலை.'60....

திரைத்துறையில் 60 ஆண்டுகள் நிலைத்து நிற்பதும், முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பதும் சாதாரண விஷயம் கிடையாது. அடுத்தடுத்த தலைமுறையினரை சரியாக புரிந்து வைத்திருந்தால் மட்டுமே சாத்தியம். ஏவி மெய்யப்ப செட்டியாரின் கரம் பிடித்து திரையுலகம் வந்தபோது, தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரும் நடித்துக் கொண்டு இருந்தார்.



'ஏக் துஜே கேலியே', 'மரோ சரித்திரா', 'மூன்றாம் பிறை' என பல மொழிகளில் கமலை பார்த்து காதல் வளர்த்த ஒருவர(ள)து மகன்(ள்), இன்று தனது இளமையில் அதே கமல் படங்களை வியந்து ரசிக்கிறான்(ள்).

திரையுலக பிரபலத்தின் மூலம், அடுத்தகட்ட உயர்வை எதிர்பார்த்து கிடக்கும் நடிகர்கள் மத்தியில், தமிழ் திரையுலகின் அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியை சிந்திப்பவர், இந்த 'கலைஞன்'. 20 ஆண்டுகளுக்கு பிந்தைய நுட்பத்தை இப்போதே பரீட்சித்து பார்ப்பவர். 

பாலசந்தர் மூலமாக நடிப்பை நோக்கி கமலை காலம் இழுந்து வந்தபோது,  வழக்கம் போலவே, 'கடமையை செய் பலனை எதிர்பாராதே' என்ற கீதையின் வழியில் நடந்தார். அதனால் தான், நடிப்பையும் தாண்டி பாடகர், எழுத்து, பாடல், இயக்கம், தயாரிப்பு என திரையுலகின் மற்ற துறைகளிலும் அவரது பங்களிப்பு நீட்சி பெற்றது.

16 வயதினிலே, அவள் அப்படித்தான், ராஜபார்வை, சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, இந்தியன், அபூர்வ சகோதரர்கள், குணா, மூன்றாம் பிறை, பேசும்படம், ஆளவந்தான், ஹே ராம், பாசவலை, குருதிப் புனல், தசாவதாரம் என அவரது முயற்சிகள் ஒவ்வொன்றும் திரை உலகில் பரந்து விரிந்து உலக அளவில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. 

கமலின் 60 ஆண்டு கலைப்பயணத்தை 60 ஆயிரம் பக்கங்கள் எழுதலாம். கமலின் குழந்தை நட்சத்திரத்துக்கும், பருவ நட்சத்திரத்துக்கும் இடைப்பட்ட காலம் மட்டுமே, பல விதமான ருசிகரங்கள் நிறைந்த தகவல் சுரங்கம். 

பால்யம் முடிந்து பருவம் தொடங்கியபோது,  நடிப்பா? நடனமா? என மயங்கி, பிறகு நடனமே என தேர்ந்து தங்கப்பா மாஸ்டரிடம் நடன கலைஞராக சேர்ந்தவர், கமல். 'தசவதாரம்' படத்தில் பல்ராம் நாயுடு கேரக்டர் பயன்படுத்தும் ரிங்டோனின் 'ஜிந்தோ ஜிந்தகி ஜீவிதம்' என்ற தெலுங்கு பாடலின் நடன மாஸ்டர் கமல் தான்.

ஒரு படத்தை உருவாக்கும்போதே, கதை தொடர்பான அனைத்து விஷயங்களையும் தேடி பிடித்து படித்து தெரிந்து கொள்ளும் பழக்கம் இருந்ததால் தான், 'சண்டியர்' பெயருக்கு எதிர்ப்பு கிளம்பியதும், அதை விட மிக பொருத்தமான 'விருமாண்டி'  தலைப்பை உடனடியாக தேர்வு செய்ய முடிந்தது. 

எந்த துறையில் இருப்பவர்களுக்கும், அவரவர் துறையில் சிறப்பாக விளங்குவது எப்படி என்பதற்கு கமலின் திரை தொழில் மீதான அர்ப்பணிப்பே சிறந்த உதாரணம். 

மகராசன், தெனாலி, சதி லீலாவதி, பம்மல் கே. சம்பந்தம், பஞ்சதந்திரம், காதலா காதலா, வசூல் ராஜா என வயிறு குலுங்க சிரிக்க வைக்கவும் அவரால் முடியும்.. 

16 வயதினிலே, மூன்றாம் பிறை, குணா, மகாநதி, சலங்கை ஒலி,  என ரசிகர்களை உருக வைக்கவும் அவரால் முடியும். 

பேசும்படம், குருதிப் புனல், அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம், விஸ்வரூபம் என அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியை காட்டவும் அவரால் முடியும்

ஹே ராம், உன்னைப்போல் ஒருவன், விருமாணாடி, விஸ்வரூபம் என வித்தியாசமான கதை களத்துக்குள் புகுவதோடு, இந்தியன் தாத்தா, அவ்வை சண்முகி மாமி, தசாவதாரம் பாட்டி என தன்னை முற்றிலும் மறைத்து புதிய தோற்றத்தில் தோன்றவும் அவரால் முடியும். 

மற்ற நடிகரைப் போல, சாமான்ய ரசிகர்களை திருப்திபடுத்தும்  மசாலா படங்களை தரவும் அவரால் முடியும். ஏனெனில், அவர் சகலாகலா வல்லவன்...

சாகர் (1985) சுவாதி முத்யம் என்ற சிப்பிக்குள் முத்து (1986) நாயகன் (1987) தேவர்மகன் (1992) குருதிப்புனல்(1995) இந்தியன் (1996) ஹேராம் (2000) என ஏழு முறை ஆஸ்கர் கதவை தட்டி இருக்கிறார், கமல். 

கதாநாயகன் ஆன போது பீல்டில் இருந்தவர்கள் ஜெயலலிதா, லதா, மஞ்சுளா. அதன்பிறகு சுஜாதா, ஸ்ரீபிரியா, ஸ்ரீதேவி. அம்பிகா, ராதா, ரேகா. சிம்ரன், குஷ்பு, மீனா, ரம்பா, சினேகா, திரிஷா, நயன்தாரா என நாயகிகள் மாறினாலும் தொடரும் முன்னணி நாயகன். 



இதுபோலவே, சிவகுமார், விஜயகுமார் தொடங்கி டி.ராஜேந்தர், பாக்யராஜ், மோகன், விஜயகாந்த், சரத்குமார், ராமராஜன், கார்த்திக், சத்யராஜ், விஜய், அஜித், தனுஷ், சிம்பு கடந்து சிவகார்த்திகேயன் உடனும் செல்கிறது, கமலின் கலைப்பயணம்.

'மருதநாயகம்' பட பூஜைக்காக இங்கிலாந்து ராணியையே சென்னை அழைத்து வந்த கமல், தமிழ் திரையுலகை ஒரு சாரதி போல முன் அமர்ந்து  ஓட்டிச் செல்கிறார் என்றே கூறலாம். 

அட... கமலின் தாயார் ராஜலட்சுமி, அவரை எப்போதுமே உண்மை பெயரான பார்த்தசாரதி என்றே கூப்பிடுவாராம்... தெரியுமா...?

#நெல்லை_ரவீந்திரன்

Tuesday, 29 October 2019

சுஜித்... ஒரு பாடம்...

வழக்கம் போலவே வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில் ஃபா்வர்டு மெஸேஜ் குவிகின்றன. விசேஷ தினங்களில் வாழ்த்து செய்திகள் போலவே, இப்போதும் துக்கம், கண்ணீர் என... எவ்வளவு அழுது புண்டாலும், குழந்தை சுஜித் திரும்பப் போவதில்லை.

ஆனால் எத்தனை பேர் இதை படிப்பினையாக எடுப்பார்கள். இது மில்லியன் டாலர் கேள்வி. வீட்டில் ஒரு குழந்தை இருந்தாலே சமாளிப்பது கடினம். அதுவும் தவழும் பருவத்தில் இருந்து நடக்கும் பருவம் என்றால் கேட்கவே வேண்டாம். குழந்தையை சமாளிக்க பத்து பேராவது தேவை. அதாவது, பத்து இருபது கண்கள் அவசியம்.

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சுவரில் மாட்டும் எல்ஈடி கிடையாது. அப்போது, வீடுகளில் ஸ்டாண்டில் இருக்கும் டிவியை இழுத்து தலையில் விழுந்து பலியான சோகங்கள் நடந்ததுண்டு. இப்போதும் பெரிய சைஸ் தண்ணீ்ர் பாததிரத்துக்குள் குழந்தை விழும் பரிதாபங்களும் நீடிக்கிறது.

சுஜித் வீடு இருப்பது பல ஏக்கர் விளை நிலத்துக்கு மத்தியில். அதில் சோளப்பயிர் வேறு. அவர்கள் வீட்டு ஆழ்துளை கிணறை மூடாமல் விட்டதோடு, அதன் அருகே நான்கு மற்றும் இரண்டு வயது குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்தது அஜாக்கிரதை அல்லாமல் வேறு என்ன? அரை கிலோ மீட்டர் இடைவெளியில் தான் மற்ற வீடுகள் இருப்பதும் கவனிக்கத்தக்கது.

விடுமுறை காலங்களில் ஏரி, கல் குட்டைகளில் மூழ்கி பலியாவது சமீபத்திய பேனர் பலி வரை அஜாக்கிரதையோடு தனி மனித ஒழுக்கமும் குறைந்து வருவதே கூடுதல் காரணம். 

பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியானதும் குரல் எழுப்பியவர்களில் பெரும்பாலானோர் முதல் பிறந்த நாள் தொடங்கி காது குத்து,  பூப்புனித நீராட்டு விழா, திருமணம், பணி நிறைவு, 16ம் நாள் காரியம், நினைவு நாள் என அக்கம்பக்கத்தினர் பற்றிய சுய நினைவின்றி பேனர் வைத்திருப்பார்கள். எங்கள் தெரு முனையில் மாதந்தோறும் பத்து பதினைந்து பேனர்களாவது முளைத்து விடும், திருப்பத்தில் வரும் வாகனங்களை மறைத்தபடி... இதில் எதுவும் அரசியல் பேனர்கள் கிடையாது.

சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் தினசரி செய்தியான நிலையில், சாலையில் எத்தனை பேர் முறையான ஆவணங்கள், லைசன்சுடன் வாகனம் ஓட்டுகிறார்கள். 18 வயதுக்கு குறைவான சின்ன சின்ன பசங்க கைகளில் இரு சக்கர வாகனங்கள் கிடைப்பது எதனால்..? அங்கும் தனி மனித ஒழுக்கம் மிஸ்ஸிங். 

அந்த சிறுவர், சிறுமிகள் எஸ்கேப்ஆகி போனாலும் அவர்களின் தாறுமாறு டிரைவிங்கால் எத்தனை விபத்துகள் தெரியுமா? ஒருவேளை அவர்களுக்கே ஏதாவது நேரிட்டால்...? எல்லாவற்றுக்கும் மேலாக, இதன் மூலம், வருங்கால தலைமுறைக்கும் தனி மனித ஒழுக்கத்தை மறக்கடித்து விட்டோம்.

அத்தி வரதர் என்றதும் ஒரு சிறிய நகருக்கு பெருங் கூட்டமாக கிளம்பி சென்று நெரிசலில் சிக்கி சாவது. மாமல்லபுரத்தை சுத்தமாக்கி வைத்திருந்தால் ஒரே நாளில் படையெடுத்துச் சென்று அந்த ஏரியாவையே ஒட்டு மொத்த குப்பையாக்கி வருவது. சுஜித் மீட்பு பணி என்றதும் வல்லுநர் குழு போல கிளம்பி வருவது. அவன் மறைந்ததும் நாள் முழுவதும் கண்ணீர் சிந்தி வருந்துவது.

உணர்வில் ஓவர் பொங்கலாகவும் சுய அறிவை கழற்றி வைத்து விட்டு, யாரோ இழுக்கும் இழுப்புக்கெல்லாம் ஆட்டம் போடும் தோல் பொம்மையாகவும்  இருக்கும் மக்களிடம் இதை தவிர வேறு என்ன எதிர் பார்க்க முடியும்? மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவத்தை தவிர...

#நெல்லை_ரவீந்திரன்

Wednesday, 23 October 2019

ஊங்கூரு அம்மங் கொட

 புரட்டாசிய பெருமாளுக்கு குடுத்திட்டதால, ஆடி தான், சென்னையில அம்மன் மாசம். ஆனா, திருநவேலி பக்கம்லாம் புரட்டாசி, ஐப்பசி மாசந்தான் அம்மன் கோயிலுங்க எல்லாம் களை கட்டும். மூணு நாள் கொடை விழாவில ரெண்டு செட்டு மேளம், ரெண்டு ஜோடி கரகம், வில்லு கச்சேரி, கணியான் கூத்துன்னு செம போர்சா நடக்கும். திங்கள் கெழம ஆரம்பிச்சி, புதன்கெழம சாயந்திரம் கெடா வெட்டோட கொடை முடியும்.

கொஞ்சம் வசதியா இருக்க கோயிலா இருந்தா, ஞாயிற்று கெழம நைட்ல பெரிய தெர கட்டி சினிமா போடுவாங்க. திருநவேலி ஐங்சன்ல போய், படத்துக்கு புக் பண்ணிட்டு வருவாங்க. மொதல்ல கருப்பு வெள்ள படம். நைட் 10 மணிக்கு மேல த்ரீ பேஸ் கரண்டு வந்த பெறவு கலர் படம். பெரும்பாலும் எம்ஜிஆர் சிவாஜி படந்தான். பட்டிக்காடா பட்டணமா, மாட்டுக்கார வேலன் மாதிரி படங்கல்லாம் மண்ண குவிச்சி வச்சி பாத்திருக்கோம். இளவட்டங்க சங்கம் இருக்கிற ஊருல, கூட ஒரு புதுப்படமும் ஓடும். அப்பிடித்தான் நல்லவனுக்கு நல்லவன் படம் முடிஞ்சப்ப, திங்க கெழம விடிஞ்சிட்டு.

கால் நூற்றாண்டு ஓடுனதே தெரியல. எவ்ளோ மாற்றம். நான் மட்டும் என்ன அப்பிடியேவா இருக்கேன். ஒவ்வொரு ஊரும் பத்து வருஷத்துக்கு ஒருக்கா, பாம்பு சட்டய உரிச்ச மாதிரி, புதுசா மாறும்னு சொல்லுவாங்க. அத அனுபவிச்சி பாத்திருக்கேன். அப்பிடித்தான், எங்க ஊரு அம்மன் கொடயும். சுமாரா 10 வருஷத்துக்கு அப்புறமா, இந்த வருஷம் எப்பிடியாவது போயே தீரணும்னு முடிவு பண்ணி, போயிட்டு வந்தேன்

ஏழு நாள் கொடையா மாறிப் போயிருக்கு, எங்கூரு அம்மன் கொட. டிவியிலயே சகட்டு மேனிக்கு படம் போடுறதால சினிமாப்படம் பிடிச்சிருந்த இடத்த... நகைச்சுவை பட்டிமன்றம் ஒரு நாள், பாட்டுக் கச்சேரி ஒரு நாள், விளக்கு பூஜை ஒரு நாள்னு வரிசையா பிடிச்சிருந்திச்சி. அப்புறமா கோயில்ல வழக்கமா நடக்கிற பூஜை, பொங்கல், கெடா வெட்டுதான். ஆனா... நெறையவே மாற்றம்... 

ரெண்டு செட்டு மேளத்தில ஒண்ணு கட்... செண்ட மேளம் புதுசா சேந்திருக்கு... மூணு நாள் பாடுன கணியான் கூத்து... ஒரு நாள் நைட்  மட்டும்னு மாறியாச்சி. அங்கேயும் அஞ்சாறு பாட்டிங்க மட்டும் கத கேக்க இல்லைன்னா கணியான் கூத்து ஸோலோ பெர்ஃபார்மன்ஸ் தான். அப்புறம் நையாண்டி மேளம்,  கரகாட்டம்... அங்கன பாத்தா வழக்கம்போல நல்ல கூட்டம்... அம்மன் சன்னதிலயே நடந்ததால வில்லு பாட்டு பக்கம் கூட்டம் பரவால்ல.

செவ்வாய் கிழமை சாயந்தரம் சாமி ஊர் விளையாடி வரும்போது, நையாண்டி மேளம், செண்ட மேளம்னு வழக்கமான உற்சாகம் கொறையல. அந்த நேரத்தில, தெருவில குறுக்கால குறுக்கால ரெண்டு பக்க வீட்டை இணைக்கிறா மாதிரி  வேப்பிலை தோரணம் கட்டிட்டே போவாங்க. இப்ப அது முன்ன மாதிரி அதிகமா இல்ல. ஒவ்வொரு தெருவிலயும் பேருக்கு ஒண்ணு ரெண்டு தான். அத கட்டுறதுக்கு களம் இறங்குற ஆளுங்க இல்லயா... மாடி வீடுங்களா மாறினதாலயான்னு பட்டி மன்றம் வைக்கலாம் போல...

செவ்வா நைட்ல திரும்பவும் அடுத்த ரவுண்டு சாமி ஊர் சுத்தினப்ப... செண்ட மேளம், நையாண்டி மேளத்தோட ஆயிரங்கண் பானை, மொளப்பாரி ஊர்வலம்னு ஊரே களை கட்டிச்சி... நள்ளிரவுக்கு பிறவு, சப்பரத்தில வீதி, வீதியா முத்தாரம்மன் உலா வந்தது, எனக்கு புதுசு. எங்க வீட்டு முன்னால அதிகாலை 4 மணிக்கு சாமி வந்தப்ப... பரவசம்... மகிழ்ச்சி...

புதன்கிழமை மஞ்சப்பான பொங்கல்... கெடா வெட்டு... மொளப்பாரிய சுத்தி வந்து கும்மிப்பாட்டுன்னு கொடை நிறைவா முடிஞ்சிச்சி.




முத்தாரம்மனுக்கும் அசுரனுக்கும் நடக்கிற சண்டையில, கடைசியா சரணடையிற அசுரன், தனக்கு பலி கொடுக்கணுமின்னு வேண்டுவானாம். இது வில்லுப்பாட்டு கதையில பாடினாங்க. கெடா வெட்டும்போது அதுதான் நினைவுக்கு வந்திச்சி. கடைசி நாளில அண்டா கணக்கில சோறு வடிச்சி, கறிக் கொழம்பு வச்சி படையல் போட்டு முத்தாரம்மனுக்கு படைச்சிருந்தாங்க. இந்த பெரும் படப்பு பத்தி தனியாவே எழுதலாம்... 

எழுதியிருக்கேன்... 

👇👇

http://thileeban81.blogspot.com/2015/11/blog-post.html?m=1

கொடை விழாவில முத்தாரம்மன் தொடங்கி, சந்தன மாரியம்மன், கருப்பசாமின்னு ஒவ்வொரு கூடத்திலயும் ஆடின சாமியாடிங்கள பார்த்தப்ப...  சின்ன சின்ன பசங்களா தெரிஞ்சாங்க... அவங்களோட பழைய உருவம் தெரிஞ்சிது.. அப்பல்லாம் தாத்தாக்கள் தான் சாமியாடுவாங்க... இப்ப ரெண்டு பெண் சாமியாடிங்களும் இருந்தாங்க.. இவங்க அடுத்த தலைமுறைன்னு தெளிவானப்பத்தான், நம்ம வயசும் அரை சதத்தை எட்டுதேங்கிறது லேசா ஒறைச்சிது.

நெல்லை ரவீந்திரன்

Sunday, 11 August 2019

காற்றின் மொழி

பைக் வேகம் அதிக பட்சம் 40, 45 கிலோ மீட்டர். 30 கிலோ மீட்டர் தூரத்தில இருக்கிற ஆபீசுக்கு போற வழியில பாதியில ஒரு குட்டி பிரேக். இது மாதிரி சில கொள்கையோட ஒரு வாரமா மறுபடியும் பைக் ஓட்ட ஆரம்பிச்சாச்சி. அப்பிடித்தான்  மெரினா பீச் பக்கம் ஆல் இண்டியா ரேடியோ எதிரில இன்னிக்கு காலையில குட்டி பிரேக். 

அந்த டீக்கடையில நாலு பேர் மேல என் கவனம் போச்சிது. ஒரு அம்மா, அப்பா, ரெண்டு பசங்க. அவங்களுக்கு சுமாரா பதினைஞ்சி வயசுக்கு மேல இருக்கும். பசங்க ரெண்டு பேருமே வித்தியாசமா சைகை பண்ணிட்டிருந்ததை கவனிச்சப்பத்தான் புரிஞ்சிது. அவங்க, டெஃப் அண்ட் டம்ப் பசங்க. அந்த ரோட்டிலேயே பக்கத்தில இருக்கிற பள்ளியில படிக்கிறவங்க போலும்.

விடுமுறை நாள்ங்கிறதால பையன பாக்க அப்பா, அம்மா வந்திருக்காங்க. கூட இருந்தது பையனோட பிரண்ட்... காத்துல கை வெரல்கள வீசி.. உள்ளங் கைகள குவிச்சி... ரெண்டு கைகளையும் ஒரு மாதிரியா விரிச்சி... தன்னோட மூக்கு, காது, வாய்னு தொட்டுகிட்டு ... 60 கிலோ மீட்டர் வேகத்தில அவங்க பேசுறத பாத்தப்ப எனக்கு என்னல்லாமோ நெனப்பு. அந்த அப்பாவுக்கு அந்த பாஷை பரிச்சயம் இல்ல போல. அந்த அம்மா ஓரளவுக்கு பையன்கிட்ட அவனோட மொழியில பேசிட்டிருந்தாங்க. 

என் பாஷை உன் பாஷைன்னு அடிச்சிட்டிருக்கோமே. காத்துல கோடு கிழிச்சி படம் வரைஞ்சி அபிநயம் பிடிச்சி பேசுற இந்த சைகைமொழி எவ்வளவு உயர்ந்தது. இத கிமு 5ம் நூற்றாண்டில கண்டு பிடிச்சிருக்காங்க. உலகம் முழுசும் 137 வகையான சைகை மொழி இருக்காம். இது மட்டும் இல்லைன்னா எத்தனை பேர் வாழ்க்கை இருண்டு போயிருக்கும். இன்னமும் கூட, எத்தனைை பேர்  இந்த மொழிய அங்கீகரிச்சிருக்கோம். சினிமா, டிவிய எல்லாம் இவங்களால பார்த்து லேசில புரிஞ்சிக்க முடியுமா? இது மாதிரி நிறைய கேள்விங்க எனக்குள்ள...



முன்னெல்லாம் தூர்தர்சன்ல இவங்களுக்காகவே ஒரு நியூஸ் டைம் உண்டு. இப்ப உண்டான்னு தெரியல. தூர்தர்சன்ல சினிமா போடும்போது கூட, விண்டோ பாக்ஸ் வச்சி அந்த பாஷை தெரிஞ்ச டீச்சர் ஒருத்தர் கைகளால வெளக்குவாருன்னு ஞாபகம். இப்ப உள்ள டிவிக்கள்ல புதிய தலைமுறை டிவியில அது மாதிரி ஒரு நியூஸ் புல்லட்டின் தெனமும் ஓடுது.

காலேஜ் டைம்ல டைப் ரைட்டிங் கிளாஸ் போனப்ப இது மாதிரி ஒரு பிரண்ட் உண்டு. அங்க வேலை பாத்துக்கிட்டே படிச்சிட்டிருந்தான். டைப்பிங், ஸ்டென்சில் கட்டிங் (80ஸ், 90ஸ் கிட்ஸ்களுக்கு தெரியும்), ஜெராக்சுன்னு அவன் பம்பரமா சுத்துவாப்ல. எனக்கு கிளாஸ் டைம் ஈவினிங்கிறதால அப்ப ஓய்வா இருப்பான். அந்த சமயத்தில இன்ஸ்டிடியூட் இன்சார்ஜ் அக்கா கூட உக்காந்து அரட்டை அடிக்கிறப்ப அவனோட பாஷை மெள்ள மெள்ள புரிஞ்சிது. ஜோக், அன்னிக்கு நடந்த சுவாரஸயம்னு அவனோட மொழியில கேக்கிறப்ப வித்தியாசமா இருக்கும்.

காலேஜுக்கு பிறகு பாளயங்கோட்டையில ஒரு சீட்டு கம்பெனில (அப்ப சீட்டு கம்பெனிங்க ரொம்ப பேமஸ்) வேல பாத்தப்ப ஜெயிலுக்கு பக்கத்தில ஹாஸ்டலோட சேந்து டெஃப் அண்ட் டம்ப் ஸ்கூல் ஒண்ணு இருந்திச்சி. அங்க உள்ள ஃபாதர் சீட்டு போட்டிருந்ததால மாசம் ரெண்டு மூணு தடவ அங்க போவேன். அந்த ஸ்கூல் பசங்க (எல்லாம் குட்டி பசங்க) பேசிட்டிருப்பத பாக்கிறப்ப மனசு லேசா வலிக்கும். என்னோட பழய நெனப்பையெல்லாம் ரெண்டு பசங்களும் இன்னிக்கு கிளறி விட்டிட்டாங்க. 

தினசரி வாழ்க்கையில ஓவரா பேசுறவங்க... இங்கேயும் அங்கேயும் போட்டு குடுக்கிறவங்க... பொரணி பேசுறவங்க.. இந்த மாதிரி கேரக்டருங்கள பாக்கிறப்ப... ஆண்டவா வாயையும் காதையும் ஏன் படைச்சேன்னு தோணும். ஆனா... அந்த நெனப்பு தப்புன்னு சொல்றதுக்காகவே இந்த பசங்க என் கண்ணில பட்டாங்கன்னு நெனைக்கிறேன்..

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது...

அதனினும் அரிது...

கூன், குருடு, செவிடு இன்றி பிறத்தல் அரிது... என்ற அவ்வையின் பார்வையில் நாம் பாக்கியசாலிகள்.

#நெல்லை_ரவீந்திரன்