Showing posts with label சினிமா கட்டுரை. Show all posts
Showing posts with label சினிமா கட்டுரை. Show all posts

Friday, 18 August 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -61



ஆறு தலைமுறை கண்டவர். 75 ஆண்டு திரை வாழ்க்கைக்கு சொந்தக்காரர். தெலுங்கு ரசிகர்கள் கடவுளாக கொண்டாடும் என்.டி.ராமாராவின் முதல் நாயகி, இன்று வரை சினிமாவில் நடிக்கிறார். அவர்தான் சவுகார் ஜானகி. பெரும் நடிகர்களே இவ்வளவு காலத்துக்கு திரையுலகில் தாக்குப் பிடிப்பது கஷ்டம்.


இளம் வயதிலேயே திருமணம் முடிந்து, 18 வயதில் குடும்ப சூழலால் திரைக்கு வந்த அவரது முதல் படமே அன்றைய பிரபல தயாரிப்பாளர் நாகிரெட்டியின் தயாரிப்பு. அதில், நாயகன் யார் தெரியுமா? ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆர். அவர் முதன் முதலில் நாயகனாக நடித்த 'சவுகார்' படத்தின் நாயகி இந்த ஜானகி தான். 1950ல் அந்த படம் வெளியானபோது, வி.என்.ஜானகி (எம்ஜிஆரின் மனைவி)யும்  ஹீரோயினாக இருந்ததால் பெயர் வித்தியாசத்துக்காக 'சவுகார்' படத்தின் பெயரையும் இணைத்து இவர் சவுகார் ஜானகி ஆகி விட்டார். 



பெயர் விஷயத்தில் 'வெண்ணிற ஆடை' நிர்மலா, 'வெண்ணிற ஆடை' மூர்த்தி, 'நிழல்கள்' ரவி, 'ஜெயம்' ரவி... இவர்களுக்கெல்லாம் முன்னோடி நம்ம சவுகார் ஜானகி தான்.



1950, 1960களில் பல படங்களில் நாயகியாக நடித்தாலும் இரண்டாவது நாயகி, தங்கை வேடங்களையும் தயங்காமல் ஏற்றார். 1960களில் அழுகாச்சி வேஷம் என்றால் இயக்குநர்களின் முதல் சாய்ஸ் இவர்தான். இரண்டு ஹீரோ சப்ஜெக்டிலும் நாயகியாக நிச்சயமாக இருப்பார். அதனால் சவுகார் ஜானகிக்கு பாடல்களும் கண்டிப்பாக இருக்கும்.


"மாலைப் பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி..."

"படித்திருந்தும் அறிவு கெட்டோர் ஆயிரம் உண்டு. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு..."

மாதிரியான ஹிட் பாடல்கள் இவருக்குத்தான். 


எம்ஜிஆர், சிவாஜி, எஸ்எஸ்ஆர், ஜெமினி என அன்றைய முன்னணி நடிகர்கள் எல்லோருடனும் நடித்திருக்கிறார். 'பாலும் பழமும்', 'பார் மகளே பார்', 'ஔி விளக்கு', 'பாமா விஜயம்', 'புதிய பறவை', 'பாவை விளக்கு', 'படிக்காத மேதை' என ஹிட் படங்கள் ஏராளம்.


'புதிய பறவை' படம் என்றதும் "கோப்பால் கோப்பால்..." வசனம் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், அந்த படத்தில் சிவாஜியின் மனைவியாக, கிளப் டான்சராக வித்தியாசமான வேடத்தில் சவுகார் ஜானகி நடித்திருப்பார். அதில் வரும், "பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ..." பாடல் இவருக்குத்தான். இவரை சிவாஜி கொலை செய்ததும் அதை துப்பறியத்தான் சிஐடி யாக சரோஜாதேவி வருவார்.



எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த 'ஔி விளக்கு' படத்தில் விதவைப் பெண் வேடத்தில் வரும் சவுகார் ஜானகிக்கு, "இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு..." என்ற பாடல் உண்டு. இந்த பாடல் தான், 1984ல் எம்ஜிஆர் உடல்நலக் குறைவால் நியுயார்க்கில் உள்ள புருக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவருக்கான வேண்டுதல் பாடலாக தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.



தமிழுக்கு நிகராக தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பிற மொழிகளிலும் அந்த மொழிகளின் முன்னணி நடிகர்களான நாகேஸ்வர ராவ், பிரேம் நசீர், தேவ் ஆனந்த், ராஜ்குமார் ஆகியோருடன் சவுகார் ஜானகி நடித்திருக்கிறார். 500க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் அவர், சினிமாவுக்கு நிகராக மேடை நாடகங்களுக்கும் முக்கியத்துவம் அளித்தவர்.




காலத்துக்கு ஏற்றவாறு அம்மா வேடத்தையும் தயங்காமல் ஏற்று 1980களில் ரஜினி, கமல், மம்முட்டி போன்ற ஹீரோக்களுடன் நடித்தார். 'தீ', 'தில்லுமுல்லு', 'சிவா', 'வெற்றி விழா', 'அழகன்' இப்படி பல 80ஸ் படங்களை சொல்லலாம். ரஜினி நடித்த 'தில்லுமுல்லு' படத்தில் அசத்தி இருப்பார். இவர் நடித்த வேடத்தில் தான் மிர்ச்சி சிவா நடித்த 'தில்லு முல்லு' ரீமேக் படத்தில் கோவை சரளா நடித்திருப்பார். 



1950களில் துவங்கிய சவுகார் ஜானகியின் திரைப்பயணம், 2014ல் வெளியான 'வானவராயன் வல்லவராயன்' கடந்து, சந்தானம் நடிப்பில் 2020 வெளியான 'பிஸ்கோத்' படம் கடந்தும் தொடருகிறது. 



திரை வாழ்விலும், நிஜ வாழ்விலும் பல தலைமுறையை பார்த்த சவுகார் ஜானகியின் பேத்தி வைஷ்ணவியும் நடிகை தான். 1989ல் வெளியான ஆர்.பாண்டியராஜனின் 'நெத்தியடி' பட நாயகி வைஷ்ணவி. 'நாட்டாமை' படத்தில் பொன்னம்பலத்தின் மனைவியாக வருபவரும் அவர்தான். 'சந்தனக் காற்று', 'புலன் விசாரணை', 'மாநகர காவல்', 'மகா பிரபு', 'ஜெய்ஹிந்த்'என தமிழிலும் பிற மொழிகளிலும் சுமார் ஐம்பது படங்களில் நடித்திருக்கிறார், சவுகார் ஜானகியின் பேத்தி வைஷ்ணவி.


பாட்டி சவுகார் ஜானகி திருமணத்துக்கு பிறகு, நடிக்க வந்தார். பேத்தி வைஷ்ணவி திருமணமானதும் 1996ல் நடிப்பை நிறுத்தி விட்டார். ஆனால், பின்னணி குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட 'ராக்கெட்ரி' படத்தில் நடிகை சிம்ரனுக்கு குரல் கொடுத்தவர் வைஷ்ணவி தான்.


தற்போது 90 வயதை கடந்து விட்ட சவுகார் ஜானகி, தனது முந்தைய தலைமுறையான பெற்றோர், பாட்டி ஆகியோரையும் சேர்த்து கிட்டத்தட்ட ஆறேழு தலைமுறையை பார்த்து விட்டார். இந்த பேறும் பெரும் பாக்கியமும் யாருக்கு கிடைக்கும்...!



#நெல்லை_ரவீந்திரன்

Wednesday, 5 July 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -56

சாகர சங்கமம் @ சலங்கை ஒலி, சுவாதி முத்யம் @ சிப்பிக்குள் முத்து, சங்கரா பரணம்... இந்த மூன்று படங்கள் போதும், இயக்குநர் கே.விஸ்வநாத்தின் பெயரை காலத்துக்கும் திரையுலகம் பேசிக் கொண்டிருப்பதற்கு.



நடனம் மீது பெரு விருப்பம் கொண்டு வெறியாய் சுற்றும் ஒரு கலைஞனுக்கு உதவும் பெண். அவளுடனான காதல், அந்த காதலில் தோல்வி, நடனத்தை வணிகமாக்கிய சமூகத்தின் மீது வெறுப்பு, இறுதியில் போதையில் மூழ்கி வாழ்வை முடிக்கும் கதைதான் 'சலங்கை ஒலி'.



 1980களின் காதல் இளவரசனையும் காதல் இளவரசி ஜெயப்பிரதாவையும் அப்படி காட்டி இருப்பார் இயக்குநர் கே.விஸ்வநாத். "இது மவுனமான நேரம்..." பாடலே போதும்...

படத்தில் வெவ்வேறு விதமாக வெவ்வேறு காட்சிகளில் வலம் வரும் "ஓம் நமச்சிவாயா..." பாடலும் அதில் வரும் "பஞ்ச பூதங்களும் முக வடிவாகும்..." என தொடங்கி வரும் வரிகளும் சலங்கை ஒலியோடு இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.



திருமணமாகிப் போன தனது காதலி, வயதுக்கு வந்த மகளுடன் இருப்பதை  அறிந்து காண செல்லும் காதலன்... அவன் வரும் போது விதவை கோலத்தில் தன்னை பார்த்தால் வேதனைப் படுவானே என நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு வரும் காதலி... அப்படி வரும் போது மழையில் அவளது குங்குமம் கரைய அதை கையால் மறைத்து தடுக்கும் காதலன்... 


"தகிட தகிட தகிட தகிட தம் தானா..." இது பாடல் அல்ல... காதல் காவியம்.


1980களில் விதவைக்கு பொட்டு வைப்பது, மறுமணம் எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாதது. அதிலும் சினிமாக்களில் அது போன்ற காட்சிகளை எல்லாம் ரசிகர்கள் எந்த அளவுக்கு ஏற்று கமர்சியலான வெற்றியை தரும் என்பதெல்லாம் நிச்சயம் கிடையாது. நாயகன் நாயகியை மணம் ஆனவர்களாக காண்பித்தாலே ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள். ஆனால், அதையெல்லாம் உடைத்தவர், இயக்குநர் கே விஸ்வநாத்



அதற்கு சாட்சி சுவாதி முத்யம் @ சிப்பிக்குள் முத்து. சலங்கை ஒலியில் சிவன் பாடல் பிரபலம் என்றால் இதில் ராமன் பாடலும் சீதா கல்யாணமும். மன வளர்ச்சி குறைந்த ஆட்டிசம் குறைபாடு கொண்ட நாயகன். ஒரு மகனுடன் வாழும் விதவைப் பெண், நாயகி. கிராமம், வீடு என சுற்றிலும் கொடுமைகளை அனுபவிக்கும் அந்த விதவைக்கு கோயிலில் சீதா கல்யாண வைபவம் நடக்கும் போது தாலியை கட்டி விடுவான் நாயகன். கிராமத்தாரின் எதிர்ப்புகள் சூழ, பல போராட்டங்களுக்கிடையே  நாயகனை குணமாக்கி விட்டு ஒரு குழந்தையையும் பெற்றுத் தந்து விட்டு அந்த பெண் இறந்து போவார். இதுதான் கதை. 

முழுவதும் பிளாஷ் பேக்காக செல்லும் படத்தின் முதல் காட்சியே மனைவி நினைவாக துளசியை வைத்து பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் இருக்கும் நாயகன், கடந்த கால நினைவுகளில் மூழ்குவதாகத்தான் படம் தொடங்கும். 



முந்தைய படத்தில் சிறந்த நடன கலைஞராகவும் இந்த படத்தில் சரியாக குதிக்கக் கூட தெரியாத ஆட்டிசம் நபராகவும் கமலை வாழ வைத்திருப்பார், கே.விஸ்வநாத். பிரபல நாயகியாக இருந்தாலும் துணிச்சலாக இளம் விதவையாக, ஒரு சிறுவனுக்கு தாயாக நடித்த ராதிகாவையும் பாராட்டியே ஆக வேண்டும்.

கே.விஸ்வநாத்தின் இந்த இரண்டு படங்களுமே ஓராண்டுக்கு மேல் தெலுங்கில் ஓடி வசூலை குவித்து அப்படியே தமிழ் பேசியவை. இரண்டுக்குமே எஸ்.பி.பி. கூடுதல் பலம். 'சிப்பிக்குள் முத்து'எல்லா பாடல்களுமே அவர்தான். தமிழில் அந்த படத்தில் கமலுக்கு டப்பிங்கும் எஸ்பிபி தான்.

இசைப் படைப்பான 'சங்கரா பரணம்' எல்லாம் விஸ்வநாத்தை போலவே சாகாவரம் படைத்தவை. அந்த படத்தில் யாருமே அதுவரை அறிந்திராத சோமயாஜுலுவை (இது நம்ம ஆளு பாக்யராஜின் மாமனார்) பட்டை தீட்டியிருப்பார். 



இயக்குநரை கடந்து நடிகராக கே.விஸ்வநாத்தை தனுஷின் 'யாரடி நீ மோகினி' தான் நினைவுக்கு வரும். அதற்கு முன் 'காக்கைச் சிறகினிலே...' படத்தில் பார்த்திபனின் (வடிவேலு வாடகை சைக்கிள் காமெடி வருமே) வளர்ப்பு தந்தையாக படம் முழுதும் வாழ்ந்திருப்பார், கே.விஸ்வநாத். நடித்தது மாதிரியே தெரியாது.

1960களிலேயே சினிமாவுக்கு வந்தாலும் தாமதமாகவே ஜொலித்த கே.விஸ்வநாத் வெற்றி இயக்குநராக மட்டுமல்ல... அப்பா  வேடங்களுக்கு ஏற்ற சிறந்த குணசித்திர நடிகராகவும் கொண்டாடப்பட வேண்டியவர்.

பத்மஸ்ரீ தாதா சாகேப் பால்கே விருது வரை வென்ற அவர் 90 வயதை கடந்து நிறைவான வாழ்வை வாழ்ந்திருக்கிறார். 

அதுவும் அவரது 'சங்கரா பரணம்' படம் வெளியான நாளின் நள்ளிரவில் தான் மறைந்திருக்கிறார். இசை உள்ளளவும் சங்கராபரணமும், சங்கராபரணத்துடன் விஸ்வநாத் பெயரும் வாழ்வாங்கு வாழும்.

#நெல்லை_ரவீந்திரன்

Friday, 30 June 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -55

 "எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்... அது எதற்கோ..."

"மேகமே... மேகமே..." என காற்றில் கலந்த கலைவாணி...


19 மொழிகளில் பத்தாயிரம் பாடல்கள். ஆயிரத்துக்கும் அதிகமான தனி ஆல்பம் பாடல்கள். குஜராத் (1975), ஒடிஷா (1984), ஆந்திரா (1979), தமிழ்நாடு (1979) என நான்கு மாநிலங்களில் அரசு விருது. பத்மபூஷண். இப்படி சாதனைகளுக்கு சொந்தக்காரரான கலைவாணி என்கிற வாணி ஜெயராம், வேலூரில் சாஸ்த்ரீய இசை குடும்பத்தில் பிறந்து சென்னையில் படித்து மும்பையில் பாடகி ஆனவர்.



கல்லூரி முடித்து பாரத ஸ்டேட் வங்கி பணியில் சேர்ந்து மணமாகி ஐதராபாத்தில் இருந்தபோது அவரது இசை ஆர்வத்தை அறிந்த கணவர் ஜெயராம், மும்பைக்கு குடி பெயர்ந்து  இந்துஸ்தானி படிக்க வைத்து இசை பயணத்துக்கு வழி காட்டினார். தனது கணவரின் பெயரையும் சேர்த்து கலைவாணி,  வாணி ஜெயராம் ஆனார்.



1969ல் இசைக் கச்சேரியில் பாடியபோது இசையமைப்பாளர் வசந்த் தேசாய் அவரை கவனித்து தனது மராத்தி மொழி பாடல் ஆல்பத்தில் பாட வைத்தார். அப்படியே இந்தி படத்திலும் பின்னணி பாடகியாக்கினார். 1971ல் வெளியான அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் நடித்த 'GUDDY' தான் அவரது முதல் படம். வாணி ஜெயராம் பாடிய முதல் திரைப்பாடலே ("போலே ரே பாபிஹரா...") அந்த ஆண்டின் சிறந்த பாடல். இந்தியில் ஆர்.டி.பர்மன் பண்டிட் ரவி சங்கர் போன்ற பிரபலங்களின் இசையில் பாடியவர் அப்படியே தெலுங்கில் அடியெடுத்து வைத்தார்.

தெலுங்கில் 1973ல் வெளியான 'அபிமான வந்துலு' படத்தில் முதல் பாடல். தெலுங்கில் இயக்குநர் கே.விஸ்வநாத் மற்றும் திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் கூட்டணியில் இவரது பாடல்கள் ஹிட் ரகம். அதற்கு 'சங்கராபரணம்' படத்தின் எவர் கிரீன் பாடலான "மானஸ ஸங்கரரே..." உதாரணம்.



அதன்பிறகு, தமிழில் என்ட்ரி கொடுத்த வாணி ஜெயராமின் முதல் பாடல் கண்ணதாசன் எழுதி சங்கர் கணேஷ் இசையமைத்த 'வீட்டுக்கு வந்த மருமகள்' படத்தின் "ஓரிடம் உன்னிடம்... என் தேவையை கேட்பது யாரிடம்..." பாடல். 

ஆனால், தமிழ் ரசிகர்களுக்கு அவரை அறிமுகம் செய்தது,  1974ல் வெளியான 'தீர்க்க சுமங்கலி' படத்தின் "மல்லிகை  என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா..." பாடல் தான். அந்த ஆண்டு 'எங்கம்மா சபதம்' படத்தில் பாடியதை தொடர்ந்து அதன் இசையமைப்பாளர் விஜய பாஸ்கர் கன்னடத்திலும் வாணி ஜெயராமை அறிமுகம் செய்தார்.

1970களின் மத்தியில் துவக்கி 1980களின் பிற்பகுதி வரை தமிழில் சுசீலா, ஜானகி குரல்களுக்கு நிகராக  இவர் குரலும் ஒலித்தது. பலரும் இவர் பாடிய பாடல்களை ஜானகி என்றே  நினைத்திருப்பார்கள். வாணியை பெண் எஸ்பிபி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு குரலில் லாவகம், உச்சரிப்பு, சுத்தம் இருக்கும். 80களின் வானொலி ரசிகர்களால் இவரது பாடல்களை மறக்கவே முடியாது.


"எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது எந்த தேவதையின் குரலோ..."

"நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நெய் மணக்கும் கத்தரிக்கா...", 

"நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்..."

"இன்று சொர்கத்தின் திறப்பு விழா.. புது சோலைக்கு வசந்த விழா..."

""பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா..."

"மேகமே மேகமே பால் நிலா தேயுதே தேகமே தேயினும்...", 

"நான் ஒன்ன நெனைச்சேன் நீ என்ன நெனைச்சேன் தன்னாலே ரெண்டு ஒண்ணாச்சி...",  

"மழைக்கால மேகம் ஒன்று.."

"ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது..." 

"அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே..."

"மூங்கில் இலை காடுகளே முத்து மணி மேகங்களே பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்.."

"சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்கார பூங்குயிலே..."


எம்ஜிஆர், ஜெயலலிதா, சிவாஜி, கமல், ரஜினி, பாக்யராஜ், ராம்கி படங்கள் வரை பாடியிருக்கும் அவரது பாடல்களை பட்டி(யலு)க்குள் அடைக்க முடியாது. 

1990களின் துவக்கத்திலேயே பாடுவதை குறைத்தாலும் முருகன், அம்மன், கண்ணன் பக்தி பாடல்கள் பஜனைகள், கீதா கோவிந்தம், இசை ஆல்பங்கள் அதிகம் பாடி இருக்கிறார். 

1980களில்  ஈழ போர் உச்சத்தில் இருந்தபோது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக பாடியவர்.

மராத்தி, இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், குஜராத்தி, மார்வாரி, பெங்காளி, ஒரியா, போஜ்புரி, ராஜஸ்தானி, உருது, பஞ்சாபி, துளு, படகா, சமஸ்கிருதம், ஹர்யான்வி, ஆங்கிலம் என பாடியவர். 

"எல்லா மொழிகளிலும் அதன் த்வனி தவறாமல் உச்சரிக்கும் வாணி ஒரு ஆயுள் கால பாடகி..." இது வாணி ஜெயராம் பற்றி கவியரசர் கண்ணதாசன் சொன்ன வார்த்தைகள். 

"முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன்..." என பாடியவர் உயரிய பத்ம பூஷண் விருது அறிவிப்பை கேட்டும் அதை கைகளில் பெறாமலேயே தைப்பூச நாளில் முருகனிடம் சென்று விட்டார்.

#நெல்லை_ரவீந்திரன்

Sunday, 25 June 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -54

 தமிழ் படங்களை தாண்டி பிற மொழி படங்களை பார்க்கும் ஆர்வம் சாதாரணமாக வராது. அந்தந்த மொழிகளில் யாரேனும் ஒருவர் அல்லது ஒரு சிலர் நம்மை கவர்ந்தால்தான் ஆர்வம் வரும். அப்படி மலையாளத்தில் என்னை கவர்ந்தவர் மம்முட்டி. வழக்கறிஞர் முகமது குட்டி, மம்முட்டியாக திரையுலகில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகள் கடந்து விட்டது.



1971ல் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நுழைந்த மம்முட்டி, அடுத்த பத்து ஆண்டுகளில் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார். 1980களில் தொடங்கிய திரை ஆட்டம், அவரது மகன் துல்கர் சல்மான் வருகைக்கு பின்னும் தொடர்கிறது.


துப்பறியும் கேரக்டர் மம்முட்டியின் ஸ்பெஷால். அடிதடி, ஆக்ரோஷம், அனல் பறக்கும் சண்டை எதுவுமே இல்லாமல் உண்மையை வரவழைக்கும் கேரக்டர். சுருக்கமாக சொன்னால் சிபிஐ அதிகாரி. அவரை அடையாளப்படுத்தியதும் அதுதான் (ஒரு சிபிஐ டைரி). அதற்காக ஒரு வட்டத்துக்குள் அடக்கி விட முடியாது. அம்பேத்கர் வேடமெல்லாம் அவரது வாழ்நாள் சாதனை.



மலையாளம் தாண்டி தமிழ் உட்பட பல படங்களில் அதகளம் செய்திருக்கிறார். தமிழில் 1990களில் அறிமுகமான மம்முட்டியின் முதல் படம் 'மவுனம் சம்மதம்'. அமலா ஜோடி. வில்லனாக நாகேஷ். நடிகர் சரத்குமார் அதில் ஜூனியர். கொலை வழக்கில் வக்கீலாக ஆஜராகி துப்பறியும் வேடத்தில் பின்னி இருப்பார். அந்த படத்தில் எதுகை மோனையோடு ஜதி லயம் கூட்டும் 'கல்யாண தேன் நிலா, காய்ச்சாத பால் நிலா...' பாடல் இப்போதும் அனைவரையும் முணுமுணுக்க வைக்கும்.


அடுத்து பாலசந்தரின் 'அழகன்'. அதிக படிப்பறிவு இல்லாத சாதாரண ஓட்டல் ஓனர்.  வீட்டில் ஏராளமான குழந்தைகளை வளர்க்கும் மனைவியை இழந்த நபர். பானுப்ரியா, மதுபாலா என பல நாயகிகள்  கொண்ட இந்த படத்தில் மம்முட்டியை தவிர வேறு யாரையும் பொருத்தி பார்க்க முடியாது. மலையாளம் கலந்து பேசும் தமிழ், அலட்டாமல் சிரமப்படாமல் வெகு இயல்பான நடிப்பு இதெல்லாம் அவரது பலம். விடிய விடிய காதலியுடன் தொலைபேசியில் பேசும் "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா, இன்னும் இருக்கா..." பாடல் எவர் கிரீன் காதலர் கீதம். அதில் வரும் "ஜாதி மல்லி பூச்சரமே..." பாடலும் அப்படித்தான்.


மணிரத்னம் இயக்கத்தில் ரஜினியுடன் மம்முட்டி இணைந்த 'தளபதி', இன்றளவும் நட்புக்காக கொண்டாடப்படும் படம். தாதா வேடத்தில் மம்முட்டி. தேவா, சூர்யா கேரக்டர்கள் சாகா வரம் பெற்றதற்கு காரணம் மம்முட்டி. 



மக்களாட்சி, மறுமலர்ச்சி, கிளிப்பேச்சு கேட்க வா, புதையல், எதிரும் புதிரும், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ஆனந்தம், விஸ்வ துளசி இப்படி மம்முட்டியின் நேரடி படங்கள் பட்டியல் ரொம்ப குறைச்சல். அவரது தமிழ் டப்பிங் படங்களும் அப்படித்தான். ஆனால் மம்முட்டியை தெரியாத தமிழ் ரசிகர்கள் இல்லை என்பதே நிஜம்.




விஜயகாந்துக்கு சின்ன கவுண்டர், ரஜினிக்கு எஜமான் மாதிரி மம்முட்டிக்கு மறுமலர்ச்சி. ஊர் பெரிய மனிதராக வாழ்ந்திருப்பார். 'நன்றி சொல்ல உனக்கு.. வார்த்தை இல்லை எனக்கு..' பாடல் ஹிட் வரிசை ரகம். கிளிப்பேச்சு கேட்க வா படத்தின் கனகாவுடன் பாடும்  'சிவகாமி மனசில...' டூயட் பாடலும் அப்படித்தான்.


கன்டெய்னர் லாரியில் பணத்தை அள்ளிச் சென்ற தமிழக அரசியலை பேசிய படம் 'மக்கள் ஆட்சி'. ஆர்கே செல்வமணி இயக்கிய இந்த படத்தில் மிக லோ கிளாஸாக இருந்து முதல்வராவார் மம்முட்டி.  ஜோடி ரோஜா. 'இருவர்' படத்துக்கு முன்னோடி இந்தப்படம். ரோஜா, ஆர்.சுந்தர்ராஜன் இருவருடனும் சேர்ந்து படம் முழுவதும் பின்னி இருப்பார் மம்முட்டி.


நான்கு அண்ணன் தம்பிகளில் மூத்த அண்ணனாக கூட்டு குடும்ப தலைவனாக 'ஆனந்தம்', ராணுவத்தில் கால் இழந்து ஒருதலைக் காதலராக 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்'. மெல்லிய குடும்ப கதைக்கு 'விஸ்வ துளசி'. இப்படி மம்முட்டியின் ஒவ்வொரு படமும் மனம் கவர்ந்தவை. அரை நூற்றாண்டை கடந்து விட்டது, அவரது திரைப் பயணம்.



தமிழில் ரஜினி, அஜித், முரளி, நாகேஷ், நெப்போலியன், சரத்குமார், அரவிந்த்சாமி, மணிவண்ணன், டெல்லி கணேஷ், அமலா, பானுப்ரியா, ரோஜா, கனகா, தேவ்யானி, ஐஸ்வர்யா ராய், ஸ்ரீவித்யா என பிரபல நட்சத்திரங்களுடனும் பாலசந்தர், மணிரத்னம் போன்ற பெரிய இயக்குநர்களிடமும் இணைந்து நினைவில் நிற்கும் படங்களை தந்தவர் மம்முட்டி...

#நெல்லை_ரவீந்திரன்

Tuesday, 20 June 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -53

 சினிமாவில் மிக உச்சம் பெற்றவர் கிடையாது. முழுக்க முழுக்க நாயகியும் இல்லை. ஆனால் 35 ஆண்டுகளுக்கு மேல் இரண்டு தலைமுறை ரசிகர்களுக்கு பரிச்சயமானவர், ரம்யா கிருஷ்ணன்.  

மலையாளம்,  தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி இப்படி ஐந்து மொழிகளில் நடித்திருக்கும் அவருக்கு தமிழில் முதல் படம் 'வெள்ளை மனசு'. 1986ல் வந்த அந்த படத்தின் ஹீரோ ஒய்.ஜி.மகேந்திரன்.! இதே போல கவுண்டமணி ஹீரோவாக நடித்த படங்களில் ஒன்றான 'ராஜா எங்க ராஜா' படத்தின் ஹீரோயினும் இவர்தான். ஆரம்ப கால சத்யராஜின் 'முதல் வசந்தம்' படத்திலும் நாயகி. இப்படி நாயகியாக நடித்தாலும்  முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் துணை நாயகிதான்.


'படிக்காதவன்' படத்தில் ரஜினியின் தம்பி மனைவி, 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தில் கமலுக்கு தங்கை, விஜயகாந்தின் 100வது படமான 'கேப்டன் பிரபாகரனில்'  சரத்குமாரின் காதலி இப்படியாகவே சென்ற ரம்யா கிருஷ்ணன் நடிப்புக்கு தீனி போட்டது 'படையப்பா' நீலாம்பரி கேரக்டர். 

அதுவே திருப்பு முனையாக அமைய, பத்து ஆண்டுகளுக்கு பின் தமிழில் மீண்டும் பிசியானார். பிரபுவுடன் 'பட்ஜெட் பத்மநாபன்', சரத்குமாருடன் 'பாட்டாளி'. கமலுடன் 'பஞ்ச தந்திரம்' என சிக்ஸரடித்தார். பஞ்ச தந்திரம்  மேகி அலைஸ் மரகதவல்லிக்கு கிட்டத்தட்ட 40 வயசு!

கூடவே, 1990களின் இறுதியில் தமிழ் திரையுலகில் அம்மன் படங்கள் என்றால் கூப்பிடு ரம்யாவை என்ற நிலைமைதான். 'ராஜகாளி அம்மன்', 'பொட்டு அம்மன்', 'அன்னை காளிகாம்பாள்', ' ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி',  இப்படி பலவிதமான அம்மன் அவதாரத்தில் தூள் கிளப்பினார்.


அப்புறம் கொஞ்சம் ஓய்வெடுத்து படங்களை குறைத்துக் கொண்டாலும் பிற மொழிகளில் ஆதிக்கம் செலுத்திய இந்த 80ஸ் நாயகியை 2கே கிட்ஸ்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தது 'பாகுபலி'. உலக அளவில் சினிமா ரசிகர்களிடம்  ராஜமாதா சிவகாமியாக ரம்யாவை கொண்டு சேர்த்தது 'பாகுபலி'. 

"இதுவே என் கட்டளை... என் கட்டளையே சாசனம்..." இந்த வசனம் அவரால்தான் உயிர் பெற்றது. கம்பீரம், அசால்ட்டான பார்வை, அலட்சியமான வசன உச்சரிப்பு இதுதான் ரம்யாவின் அடையாளம். இதுதான் 'குயின்' என ஜெயலலிதா வேடத்தில் அவரை நடிக்க வைத்தது.

சூர்யாவுடன் 'தானா சேந்த கூட்டம்', சிம்புவுடன்  'வந்தா ராஜாவாத்தான் வருவேன்' என இன்றைய தலைமுறை வரை நடித்து விட்டார். 

1980களில் வெளியான படங்களின் ரம்யாவையும் இன்றைய ரம்யாவையும் பாருங்கள். மொத்தமாகவே மாறி இருப்பார். இன்று வரை பெரிய திரை சின்னத்திரை என கலக்கும் ரம்யாவின் அழகில் மயங்காதோர் யார்...?


"வயசானாலும் ஒன் அழகும் ஸ்டைலும் இன்னும் கொறையல..."

இந்த டயலாக் படையப்பாவுக்கு மட்டுமல்ல, நீலாம்பரிக்கும்தான்...

#நெல்லை_ரவீந்திரன்

Thursday, 15 June 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -52

 'அமைதிப்படை' அமாவாசைன்னா இன்னைக்கு வரை சத்யராஜ் பெயர்தான் எல்லோர் நினைவுக்கும் வரும். ஆனா, அதுக்கு பின்னால முன்னால பக்கத்திலன்னு எல்லா பக்கமும் இருந்த ஒரே ஆளு மணிவண்ணன் தான்.  ரெண்டு பேருமே ஆரம்ப கால நண்பர்கள்.



 1979ல் பாரதிராஜாகிட்ட கதாசிரியரா, அசிஸ்டண்ட் இயக்குநரா உதவியாளரா சேர்ந்து 'அலைகள் ஓய்வதில்லை' மாதிரி சில படங்கள் எல்லாம் பண்ணிட்டு முதன் முதலா 1982ல் மணி வண்ணன்  இயக்கிய படம் 'கோபுரங்கள் சாய்வதில்லை'. மோகன், சுகாசினி, ராதா நடிச்ச அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

அதுக்கு அப்புறம் இளமை காலங்கள் 'நூறாவது நாள்', '24 மணி நேரம்', 'விடிஞ்சா கல்யாணம்', 'சின்னத் தம்பி பெரிய தம்பி', 'முதல் வசந்தம்', 'பாலைவன ரோஜாக்கள்', 'ஜல்லிக்கட்டு', 'கனம் கோர்ட்டார் அவர்களே', 'முதல் வசந்தம்', 'புது மனிதன்,' 'தெற்கு தெரு மச்சான்'-ன்னு மணிவண்ணன் இயக்குன படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட். 

மொத்தம் 50 படங்கள் இயக்கம். அதில் சரி பாதி அவரது நண்பர் சத்யராஜ் நடிச்சது. 1982ல் ஆரம்பிச்சி 'அமைதிப் படை', 'நாகராஜ சோழன் எம்.ஏ. வரை 2013 வரை முப்பது வருஷத்துக்கு மேல படங்களை இயக்கியவர் மணிவண்ணன். சிவாஜி கணேசனையும் இயக்கி இருக்கிறார்.

ஆரம்பத்திலருந்தே 'கல்லுக்குள் ஈரம்', 'நிழல்கள்' மாதிரி சில படங்கள்ல குட்டி குட்டி வேஷத்தில நடிச்சிருக்காரு. ஆனா முழு நீள வில்லனா பெரிய கேரக்டரில அவர் நடிச்ச படம் 'கொடி பறக்குது'. அதில் ரஜினிக்கு வில்லன். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அந்த படத்தில மணிவண்ணனுக்கு டப்பிங் குடுத்தவர், பாரதிராஜா.



அதுக்கு அப்புறம் இயக்கத்தோட கூடவே நிறைய படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சாரு மணிவண்ணன். அப்பிடி அவர் நடிச்ச படத்தோட மொத்த எண்ணிக்கை 400ஐ தொடும்.

சிவாஜி, ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, அர்ஜுன், பார்த்திபன், விஜய், அஜித் என எல்லா நடிகர்களுடனும் நடிச்ச பெருமை மணிவண்ணனுக்கு உண்டு. 

அப்பா, வில்லன், துணை கதாபாத்திரம்னு எல்லாவற்றிலும் கலந்து கட்டி துவம்சம் பண்ணியவர், மணிவண்ணன்.  20 ஆண்டு கால தீவிர நடிப்பு வாழ்க்கையில் ஒரு படத்தில் கூட அவரது நடிப்பு சோடை போனது கிடையாது. அரசியல் நக்கல் நையாண்டி வசனங்களை பேசிய துணிச்சல்காரர். 

அதே நேரத்தில், 'உள்ளத்தை அள்ளித்தா', 'சூரிய வம்சம்', அவ்வை சண்முகி, 'முறைமாமன்' மாதிரி பல படங்களை பார்த்தால் முழு நேர காமெடியன்களுக்கே டஃப் கொடுத்திருப்பார். ரெண்டு முறை தமிழக அரசின் சிறந்த காமெடியன் விருதையும் வாங்கி இருக்கிறார், மணிவண்ணன்.



'கோகுலத்தில் சீதை' போன்ற பல படங்களில்  தந்தை வேடத்துக்கு மிக பொருத்தமானவரா பார்க்கலாம். 'கொடி பறக்குது' மாதிரியே பல படங்கள்ல கொடூரமான வில்லனாவும் மணிவண்ணனை பார்க்கலாம். சத்யராஜ், கவுண்டமணியோடு இவரும் சேர்ந்து விட்டால் அன்லிமிட் லூட்டிக்கு 100 சதவீதம் கேரண்டி.



கதாசிரியர், டைரக்டர், அப்புறம் நடிகரா பார்த்தால் காமெடியன், வில்லன், குணச்சித்திரம்னு எல்லா விதத்திலயும் தமிழ் சினிமாவ கலக்கின மணிவண்ணனுக்கு பல பாடல்கள்ல நடிக்கிற வாய்ப்பும் உண்டு. அப்பிடி மணிவண்ணன் பாடுற எல்லா பாடல்களிலயும் இசையமைப்பாளர் தேவாவோட குரல் மிக பொருத்தமா இருக்கும் மணிவண்ணனே பாடுற மாதிரி இருக்கும்.



தமிழ் சினிமா மிக சீக்கிரமா இழந்த ஜாம்பவான்கள்ல மணிவண்ணனும் ஒருத்தர். 30 வருஷத்துக்கு மேல சினிமாவில இருந்த அவர் 50 பிளஸ் வயசிலேயே மறைந்தது தமிழ் திரைக்கு பெரிய இழப்பு.

#நெல்லை_ரவீந்திரன்

Sunday, 30 April 2023

அறிந்த பொக்கிஷம் அறியாத பவளங்கள் -48

தமிழ் சினிமா கொண்டாடத் தவறிய திறமையாளர்களில் இவரும் ஒருவர். இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் இப்படி ஏதாவது ஒன்றில் சாதனை படைத்தாலே அவர்களை கொண்டாடி தீர்ப்போம். ஆனால், இவர் இந்த மூன்றிலுமே ஏராளமான ஹிட் கொடுத்து சாதனை படைத்தவர். கூடவே, தான் இயக்கிய படங்களுக்கு கதாசிரியர். பாடகர், பின்னணி குரல், நடிப்பு என்றும் பன்முகம் உண்டு.


அவர் தான் கங்கை அமரன். இசைஞானி இளையராஜாவின் தம்பி. இளையராஜா கூடவே திரையுலகுக்கு வந்த கங்கை அமரன் பற்றி நிறைய எழுதலாம்.

1977ல் வெளியான '16 வயதினிலே' படத்தின் "செந்தூரப் பூவே செந்தூரப் பூவே ஜில்லென்ற காற்றே..." பாடலும் இவர்தான். அஜித்தின் 'மங்காத்தா' படத்தின் "விளையாடு மங்காத்தா..." பாடலும் இவர்தான்..


1980ஸ் ஹிட்டான 'கோழி கூவுது' படம் இவர் இயக்கம் தான். 1990ஸ் ஹிட்டான 'கரகாட்டக்காரன்' இயக்கமும் இவர்தான்.


1970ஸ் இறுதியில்  துவங்கி பாடலாசிரியராக இவர் எழுதிய பாடல்கள் இன்றளவும் ரசிகர்களை கட்டிப் போடும் ரகம்...

"பூவரசம் பூ பூத்தாச்சி பொண்ணுக்கு தேதி வந்தாச்சி..."

"நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நெய் மணக்கும் கத்தரிக்கா..."

"உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை..."

"வெத்தல வெத்தல வெத்தலயோ..."

"பூங்கதவே தாழ் திறவாய் பூவாய் பெண் பாவாய்..."

"என் இனிய பொன் நிலாவே..."

"ஆசய காத்துல தூது விட்டு.."

"காற்றில் எந்தன் கீதம் காணாத உன்னை தேடுதே..."

"சிறு பொன்மணி அசையும் விழி... பொன்மணி தாள லயம்..."

"புத்தம் புது காலை பொன்னிற வேளை..."

"இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே..."

"போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்..."

இவை எல்லாம் கங்கை அமரன் எழுதிய பாடல்களின் சாம்பிள்கள். ராமராஜனின் 'கரகாட்டக்காரன்' விஜயகாந்தின்  'அம்மன் கோவில் கிழக்காலே' மாதிரி சில படங்களில் அனைத்து பாடல்களையும் எழுதியவர் இவர்தான். 



1977 துவங்கி 2kஸ் படங்களான 'மங்காத்தா' படத்தில் "விளையாடு மங்காத்தா...", "இது எங்க பலே லக்கா..." பாடல்களையும்  'கோவா' படத்தில் ஆன்ட்ரியா பாடிய "இதுவரை இல்லாத உணர்விது இதயத்தில்..." பாடலும் 'சென்னை 28' படத்தில் "சரோஜா சாமா நிக்காலோ..." பாடலும் கங்கை அமரன் தான். தலைமுறைகளை கடந்தும் நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதிக் கொண்டிருப்பவர்.


அடுத்ததாக, இசையமைப்பாளர் என எடுத்துக் கொண்டால், 1979ல் வெளியான 'ஒரு விடுகதை ஒரு தொடர்கதை' படம்தான் இவரது முதல் இசை. சுமார் 75 படங்களுக்கு கங்கை அமரன் இசையமைத்திருக்கிறார். 

"பொன்மானத் தேடி நானும் பூவோட வந்தேன்..." பாடலின் எங்க ஊரு ராசாத்தி இவர் இசை தான்.



கமலின் 'வாழ்வே மாயம்' படத்துக்கு இவர் தான் இசை. இதை இளையராஜா இசை என்றே ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். பாக்யராஜின்  'சுவரில்லாத சித்திரங்கள்', 'மவுன கீதங்கள்', ராமராஜனின் 'நம்ம ஊரு நல்ல ஊரு'. பிரபுவின் 'சின்னத் தம்பி பெரியத் தம்பி', 'என் தங்கச்சி படிச்சவ'. 

அப்புறம் 'அத்தமக ரத்தினமே' ("அள்ளி அள்ளி வீசுதம்மா... அன்பை மட்டும் அந்த நிலா நிலா..." பாடல்) இப்படி இவர் இசையமைத்த ஹிட் படங்களை வரிசைப் படுத்தினால் ஆச்சரியமூட்டும்.

சுமார் 70 படங்களுக்கு கங்கை அமரன்  இசையமைத்திருக்கிறார். இளையராஜாவின் ஆரம்ப கால 1980ஸ் படங்களுக்கு இசை உதவி இவர்தான். 



அடுத்ததா பார்த்தால், பாடலாசிரியர், இசையமைப்பாளர், இதுக்கும் மேல அவர் பல சூப்பர் ஹிட் படங்களின் இயக்குநரும் கூட. சுமார் 20க்கும் அதிகமான படங்களை இயக்கி இருக்கிறார், கங்கை அமரன்.

1982ல் வெளியான பிரபு, சில்க் ஸ்மிதா, சுரேஷ், விஜி நடித்த 'கோழி கூவுது' படம் தான் அவரது இயக்கத்தில் வெளியான முதல் படம்.  முதல் படமே சூப்பர் ஹிட். தமிழ் திரையுலகின் அழிக்க முடியாத சாதனை காவியமான 'கரகாட்டக்காரன்' படமும் இவர் இயக்கியதுதான். 

ராமராஜனுக்கு மட்டும் 'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'வில்லுப் பாட்டுக்காரன்', 'செண்பகமே செண்பகமே' என சுமார் பத்து படங்களை கங்கை அமரன் இயக்கி இருக்கிறார்.



பிரபு நடித்த ஹிட் படமான 'கும்பக்கரை தங்கய்யா', விஜயகாந்தின் 'கோயில் காளை' (இந்த பட பாடல்கள்  ஹிட்) படங்களும் கங்கை அமரன் இயக்கியவைதான். இவர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு கதாசிரியரும் பாடலாசிரியரும் கூட இவரேதான்.

இது தவிர, பாக்யராஜின் ஆரம்ப கால படங்களில் அவருக்கு கங்கை அமரன் டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார் என்பது கூடுதல் ஆச்சர்யம்.

இது போலவே, "பூஜைக்கேத்த பூவிது நேத்து தான பூத்தது...", "வாடிப்பட்டி மாப்பிள்ள எனக்கு வாக்கப்பட்டு வாடி என நாக ரத்தினமே..." என பாடகராகவும் கங்கை அமரன் பாடிய பாடல்களை நிறைய சொல்லலாம்.


சினிமாவில் தனக்குத் தெரிந்த எல்லா துறையிலும் பாதம் பதித்து ஜொலிக்கும் அமர் சிங் என்ற கங்கை அமரன், 1977ல் துவங்கி அவரது வாரிசுகளான வெங்கட் பிரபு,  பிரேம்ஜியின் இன்றைய படங்கள் வரையிலும் ஹிட் அடித்து வருகிறார்.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Saturday, 8 April 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -47

80ஸ் மோகனையும் எஸ்.என். சுரேந்தரையும் பற்றி பேசியதுமே இவர் நினைவையும் தவிர்க்க முடியவில்லை. 1980களில் வெளியான படங்களில் பெரும்பாலும் காதல் காவியங்கள்தான். அதனால் ரொமான்டிக் ஹீரோக்களும் அதிகம். அவர்களில் மோகனுக்கு அடுத்ததாக குறிப்பிடத்தக்கவர் இவர். இன்றைய சிவகார்த்திகேயன், விமல் மாதிரி... அவர்தான் சுரேஷ்.



எடிட்டிங், டான்ஸ் இப்படித்தான் சினிமாவுக்குள் வந்தவர் சுரேஷ். நல்ல டப்பிங் ஆர்ட்டிஸ்டும் கூட. ஆனால், நடிகராகி விட்டார். 1981ல் சந்தான பாரதி இயக்கத்தில் வெளியான 'பன்னீர் புஷ்பங்கள்' படம் தான் நடிகராக அறிமுகம். அந்த படத்தில் அவருக்கு பள்ளிக்கூட பிளஸ் டூ மாணவன் வேடம். அப்போது சுரேசுக்கு 20 வயது கூட ஆகவில்லை.



உண்மையில், பாரதிராஜாவின் 'அலைகள் ஓய்வதில்லை' படம் தான் இவரது அறிமுகமாக இருந்திருக்க வேண்டியது. ஆனால், சந்தானபாரதி படத்தில் நடிப்பதற்கு முதலில் ஒப்புக் கொண்டு விட்டதால், பாரதிராஜாவின் படத்தில் நடிக்கவில்லை. இதனால் தான், நவரச நாயகன் கார்த்திக்கை இயக்குநர் பாரதிராஜா அறிமுகப்படுத்தினார்.


'பன்னீர் புஷ்பங்கள்' பட வெற்றிக்கு பிறகு அடுத்த ஆண்டே கங்கை அமரன் இயக்கத்தில் பிரபுவுடன் சுரேஷ்  நடித்த 'கோழிகூவுது' செம ஹிட். தபால்காரர் ராமகிருஷ்ணனாக சுரேஷ் வருவார். அவருக்கு ஜோடி விஜி. பிரபுவுக்கு சில்க்ஸ்மிதா. அந்த படத்தின் பாடல்கள் இன்றளவும் கொண்டாடப்படும் ரகம்.

அதன்பிறகு, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு காதல் நாயகனாக வலம் வந்தார் சுரேஷ். நதியா, ரேவதி... இவருடைய வெற்றி ஜோடிகள். 'உன்னை நான் சந்தித்தேன்', 'பூக்களை பறிக்காதீர்கள்', என இந்த ஜோடிகளின் ஹிட் படங்கள் ஏராளம்.


'வெண்ணிற ஆடை', 'காதலிக்க நேரமில்லை' படங்களின் பிரபல  இயக்குநர் ஸ்ரீதர், இவரை ஆரம்பத்தில் அறிமுகப்படுத்துவதற்கு தயங்கி நிராகரித்தார். ஆனால், 1985ல் அவரே 'உன்னைத் தேடி வருவேன்' படத்தில் சுரேஷை நடிக்க வைத்தார்.


நடிகர் சுரேஷ் மிக மிக உயரமானவர். சுமார் ஆறு அடி உயரம். அதனால் டூயட் பாடும்போதெல்லாம் முழங்காலை லேசாக வளைத்தபடியே ஆடுவார். அதுவும் உயரம் குறைந்த நதியா, ரேவதி போன்றவர்களுடன் எல்லாம் அவர் நடித்தது வேற லெவல். அதே நேரத்தில் 80ஸ்களில் டிரெண்டிங்கில் இருந்த டிஸ்கோ டான்சை மிக அருமையாக ஆடிய நடிகர்களில் சுரேஷும் முக்கியமானவர்.

 'அபூர்வ சகோதரிகள்' படத்தில் "ரோஸி மை நேம் இஸ் ரோஸி...", "என்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை..." பாடல்களை சொல்லலாம். அந்த படத்தில் சுரேஷுக்கு ஜோடி ஊர்வசி. நம்பவே முடியாத அளவில் 'முந்தானை முடிச்சி' ஊர்வசி செம்ம கிளாமரா நடிச்சிருப்பார். அந்த டிஸ்கோ நடன பாடல்களுக்கு இசை பப்பிலஹரி. இந்தி இசையமைப்பாளர். 1980களில் இளையராஜா உச்சத்தில் இருந்ததால் பிற மொழி இசையமைப்பாளர்கள் பலர் வந்தனர். ஆர்.டி.பர்மன், லட்சுமிகாந்த்- பியாரிலால், வரிசையில் பப்பிலஹரியும் ஒருவர்.

1980களில் துவங்கி தமிழில் சுமார் 100 படங்களில் சுரேஷ் நடித்திருக்கிறார். எல்லா படங்களுமே  ரொமான்டிக் வேடமாவே வந்ததால் போரடித்து, 1990களின் துவக்கத்தில் தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்டார். அங்கு வெரைட்டியான ரோல்களில் நடித்த சுரேஷ், அனைத்து மொழிகளிலும் சேர்த்து மொத்தம் 250க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். படங்களும் தயாரித்திருக்கிறார்.

நம்மில் பலரும் சுரேஷ் என்ற பெயரை நிறையவே கேள்விப்பட்டிருப்போம். ஒவ்வொருவருக்கும் குறைந்தது ஐந்து நண்பர்களாவது இருப்பார்கள். ஆனால், 2கே கிட்ஸுகளுக்கு இந்த சுரேஷ் பற்றி அதிகம் தகவல்கள் தெரிந்திருக்காது. அவர்களுக்கான தகவல் இது...

அஜித்தின் 'அசல்' படத்து வில்லன்... விஜயின் 'தலைவா' படத்தில் ஆஸ்திரேலிய ஓட்டல் ஓனர் கம் போலீஸ் அதிகாரி... இவரேதான்.



1990களில் தெலுங்கு பக்கமா போன சுரேஷ்,  சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு பின் தமிழுக்கு திரும்பி வில்லன், குணச்சித்திரம் என நடித்ததோடு சின்னத்திரைகளிலும்  தலை காட்டி வருகிறார்.

பதிவின் ஆரம்பத்தில் சுரேஷை டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என சொன்னோம் இல்லையா..? அதுதான் இந்த பதிவின் நிறைவு தகவல். 'ஆசை' படத்தில் அஜித் பேசும் குரல் இவருடையது தான். இதுபோல நாகார்ஜுனா நடித்து ஹிட்டான 'ரட்சகன்' போன்ற சில படங்களுக்கும் அவருக்கு குரல் கொடுத்தவர் நடிகர் சுரேஷ்தான்...

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்