Thursday, 30 June 2011

மனிதன்

வேட்டை நாய்
என்னை விரட்டுகிறது
முதுமை

அங்கங்கள்
ஒவ்வொன்றிலும்
விதம் விதமான
வியாதி அறிகுறிகள்

அனைவருக்கும்
இனிப்பான எனக்கு
இனிப்பு நோய்

நீண்டு சென்ற
கடந்த காலத்தை விட்டு
சுருங்கி நிற்கும்
எதிர்காலத்தை நோக்கினால்

அச்சத்தின் நிழல்
மொத்தமாய் படிகிறது ஆனாலும்
நல்ல செயல்களில்
ஈடுபட மறுக்கிறது மனம்!

= வை.ரவீந்திரன் 

Tuesday, 28 June 2011

அரிசி மரம்


நண்டு நடக்கும்
நீரோடையில்
நீந்திக் குளித்த
ஞாபகம்

பெரிய ரோட்டில்
பழுதாகி நின்ற
பேருந்தில் படியேறி
விளையாடிய
ஞாபகம்

புளிய மரம் ஏறி
பழம் பறித்து &பின்
பங்கிட்டு சண்டையிட்ட
ஞாபகம்

பனை மரத்தின்
பாதியில் பார்த்திட்ட
கிளி பிடித்து வளர்த்த
ஞாபகம்

ஆணொன்று
பெண்ணொன்று என
ஆடும் பசுவும் வளர்த்த
ஞாபகம்

ஆலங்கட்டி மழையில்
ஆட்டம் போட்டு
அம்மாவிடம் அடி வாங்கிய
ஞாபகம்

எண்ணத் திரையில்
எப்போதாவது
எழுகின்றன ஞாபகங்கள்
பட்டணத்து இரைச்சலில்.....

தேவைகள் அதிகமானதால்
தேடல்கள் அதிகமானது
அவசர உலகில்
அவசர அவஸ்தைகள்

காலைக்கடன் கழிக்க
கால்மணி வரிசை
வாளி நீருக்கு
வரிசையோ வரிசை

அவசரக் குளியலில்
அவசரப் பயணம்
களைப்பை போக்க & ஒளிரும்
எலக்ட்ரான் திரை

சாப்ட்வேர்
வலைப் பின்னலில்
சகலமும்
அறியலாம்

அருமை மகன்
அருகமர்ந்து கேட்டான்
அப்பா! எப்படி இருக்கும்
அரிசி மரம்?

= வை.ரவீந்திரன்

Tuesday, 26 October 2010

நேருவுக்கு வளைந்து கொடுக்காத மருமகன்


பெரோஸ் காந்தி. காங்கிரஸ் கட்சியில் உள்ள பலருக்கு இந்த பெயர் ஞாபகம் இருக்குமா என்பது சந்தேகமே. இவர், நேருவின் மருமகன். இந்திராவின் கணவர், ராஜீவின் தந்தை, சோனியாவுக்கு மாமனார், ராகுலுக்கு தாத்தா. பெரோஸ் காந்தியிடம் இருந்து தான், ராகுல் வரையிலும் ‘காந்தி’ என்ற பெயர் ஒட்டிக் கொண்டு வருகிறது. இந்திராவின் தந்தை ‘நேரு’ குடும்பத்தைச் சேர்ந்தவர்.

பெரோஸ் காந்தியின் தந்தை ஜெஹாங்கீர் காந்தி. தாயார் ரத்தினமாய் காந்தி. இவர்கள், பார்சி இனத்தை சேர்ந்தவர்கள். இந்த தம்பதிக்கு மகனாக 1912&ம் ஆண்டு செப்டம்பர் 12&ந் தேதி அன்று பம்பாய் நரிமன் மருத்துவமனையில் பெரோஸ் பிறந்தார். மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த குடும்பம், இது.

ஆனால், இந்திராவோ அலகாபாத்தில் அரண்மனை போன்ற பங்களாவில் பிறந்தவர். இந்திராவின் தாத்தா மோதிலால் நேரு காலத்தில் இருந்தே பெரிய பணக்காரர்கள். அந்த காலத்திலேயே வெளிநாட்டுக்கு சென்று பாரீஸ்டர் பட்டம் பெற்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டுக் காருக்கு வெள்ளைக்காரர் ஒருவரையே டிரைவராக நியமிக்கும் அளவுக்கு வசதி மிகுந்தது, நேரு குடும்பம். இந்தியாவில் முதன் முதலில் வெள்ளைக்கார டிரைவரை வேலைக்கு வைத்ததும் நேரு குடும்பம் தான்.

கமலா நேருவின் அறிமுகம் காரணமாக அலகாபாத் ஆனந்தபவனில் (இந்திராவின் பங்களா) நடைபெறும் அனைத்து விழாவிலும் கலந்து கொண்டார், பெரோஸ் காந்தி. கமலா நேருவை தனது தாயார் போலவே கருதி அன்பு செலுத்தி வந்தார். நேரு குடும்பத்து அறிமுகத்தின் பரிணாம வளர்ச்சியாக, பெராஸ் & இந்திரா இடையே காதல் மலர்ந்தது.
1942&ம் ஆண்டு மார்ச் 16&ந் தேதி அன்று அலகாபாத் ஆனந்த பவனில் பெரோஸ் & இந்திரா திருமணம் நடந்தது. நேரு குடும்பத்து மகளான இந்திரா, ‘இந்திரா காந்தி’ ஆன தினம் அது.

மிகவும் எளிமையாக திருமணம் நடந்தது என்றே கூற வேண்டும். ஏனெனில், முக்கிய விருந்தினர்கள் யாருமே இந்த திருமணத்தில் பங்கேற்கவில்லை. குறிப்பாக, மகாத்மா காந்தி கூட கலந்து கொள்ளவில்லை.
திருமணத்துக்கு பிறகு, போர்ட் ரோட்டில் உள்ள சிறிய வீட்டில் பெராஸ் & இந்திரா தம்பதி குடியேறியது. பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதி அனுப்புவதால் கிடைக்கும் பணத்தை கொண்டு பெரோஸ் குடும்பத்தை நடத்தினார்.
துணிச்சலான, நேர்மைத் திறன் மிக்க பத்திரிகையாளர், அவர். அவருடைய பெரும்பாலான எழுத்துகளால் ஆங்கில அரசு நிலை குலைந்தது. ஆங்கிலேயே அரசின் தந்தி தொடர்பு சேவையை துண்டிக்கும் திட்டத்திலும் முக்கிய பங்காற்றினார். 1930&ம் ஆண்டு மாணவப் பருவத்திலேயே சுதந்திர போராட்டத்தில் குதித்தார்.
1942&ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.200 (அந்தக் காலத்தில்) அபராதமும் விதிக்கப்பட்டது. அதே, போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்திராவும் தடியடிக்கு ஆளானதோடு, 243 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.
கணவன்&மனைவி இருவரும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இருவரும் சந்தித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. வாரம் ஒருமுறை கடிதம் எழுதிக் கொள்ளலாம். ஒரே சிறைக்குள் இருந்து கொண்டு இருவரும் கடிதம் எழுதிக் கொண்டாலும் கடுமையான சோதனைக்கு பிறகே கையில் கொடுக்கப்பட்டன. அதுவும் 90 சதவீதம் வரை அழிக்கப்பட்டிருக்கும்.
திருமணம் முடிந்த 6 மாதங்களுக்குள்ளேயே, இளம் தம்பதிகளாக இந்த சோதனைகளை அனுபவித்தனர்.

மணவாழ்க்கை தொடர்ந்து கொண்டு இருந்தது. ஒரு கட்டத்தில் இந்திராவிடம் இருந்து அன்பு, அரவணைப்பு, ஆறுதல் போன்றவற்றை தொடர்ந்து எதிர்பார்க்க முடியாது என்ற முடிவுக்கு பெரோஸ் வந்தார். ஏற்கனவே, மது மற்றும் புகைப் பழக்கம் அவருக்கு உண்டு. தற்போது, அவை வரம்பு மீறிய நிலைக்கு சென்றன.
இந்திரவோ தனது எதிர்காலம் மற்றும் தனது குழந்தைகள் (ராஜீவ், சஞ்சய்) எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விவாகரத்து செய்ய விரும்பவில்லை.

அதே நேரத்தில், தனது மருமகன் பெரோஸ் காந்திக்கு நிரந்தர வேலை ஏதாவது இருந்தால் நல்லது என மாமனாரும் பிரதமருமான ஜவஹர்லால் நேரு விரும்பினார். அந்த எண்ணத்தை புரிந்து கொண்ட இந்திரா, தனது தந்தையின் எண்ணத்தை தங்களுடைய குடும்ப நண்பரான ராம்நாத் கோயங்காவிடம் (இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர்) தெரிவித்தார். ஏற்கனவே, இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் கட்டுரைகளை பெரோஸ் எழுதியவர் தான். எனவே, எக்ஸ்பிரஸ் நாளிதழில் இணையாசிரியர் வேலையை பெரோசுக்கு கோயங்கா அளித்தார்.
பெரோஸ் காந்தியின் இறுதிக் காலம் வரை அவருக்கு துணையாக இருந்தவர் என்பதால் ராம்நாத் கோயங்காவை ‘சாச்சா’ (மாமா) என்றே இந்திரா காந்தி அழைப்பது வழக்கம்.
1952&ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் (பின்னாளில் இந்திரா குடும்பத்தினரின் பரம்பரை தொகுதியாகி விட்டது) பெரோஸ் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார். இன்சூரன்ஸ் கம்பெனிகளை நாட்டுடைமை ஆக்குவதை வரவேற்றார். பாராளுமன்றத்தில் சூறாவளியைப் போல பேசும் பெரோஸ் காந்தியின் சொல்லாற்றல் மற்றும் நேர்மையான வாதத்திறளால் பாராளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் அவருடைய செல்வாக்கு உயர்ந்தது.
ஜவஹர்லால் நேருவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த டி.டி.கே. போன்றவர்களுக்கு எதிராக, வலுவான ஆதாரங்களுடன் பெரோஸ் காந்தி பேசிய பேச்சுகள் அனைத்தும் நேருவையே கலங்கச் செய்தன. நேருவுக்கு வளைந்து கொடுக்காத மருமகனாக பெரோஸ் இருந்ததால், நேரு அவருடைய நிரந்தர பகைவரானார். நேருவுக்கு பாராளுமன்றத்தில் அடி மேல் அடி கொடுத்துக் கொண்டிருந்தார், பெரோஸ் காந்தி. பெரோசின் நேர்மை, துணிவு, உண்மை போன்ற குணங்கள் நேருவை பகைவராக்கியது.

ஒரு நாள், கடுமையான மார்பு வலி காரணமாக பெரோஸ் காந்தி நினைவு இழந்தார். அதற்கு முன்பு, ‘இந்து எங்கே?’ என்று புலம்பிக் கொண்டே இருந்தார். அதாவது, மனைவி இந்திரா காந்தியை தேடினார். திடீர் என ஒருமுறை அவர் கண் விழித்தபோது சோகமே உருவாக இந்திரா அமர்ந்திருப்பதை பார்த்தார். அவரிடம், ‘எப்போது வந்தாய்? ஏன் இவ்வளவு கவலையாக இருக்கிறாய்?’ என்று கேட்டு விட்டு மீண்டும் மயக்கமானார்.

எல்லாவற்றையும் மறந்து விட்டு ஒரே குடும்பமாக வாழலாம் என முடிவு எடுத்த சமயத்தில் தான் மரணம் அவரை தழுவியது. இறக்கப்போகும் தருணத்தில் இனிமையான நினைவுகள் வரும். எனவே தான், தனது மனைவியிடம், ‘ஏன் கவலையுடன் இருக்கிறாய்?’ என அன்புருக கேட்டார். அரசியலில் உச்ச கட்டத்தில் இருந்தபோதே, பெரோஸ் காந்தி மரணமடைந்து விட்டார். 1960&ம் ஆண்டு செப்டம்பர் 8&ந் தேதி அன்று பெரோஸ் காந்தி இறக்கும்போது அவருக்கு வயது 47.


பெரோஸ் காந்தியின் உடலை சுத்தம் செய்யும் பொறுப்பை இந்திரா காந்தியே செய்தார். யாரையும் துணைக்கு வைத்துக் கொள்ளவில்லை. பெரோஸ் காந்தியின் இறுதி ஊர்வலம் சுமார் 2 கி.மீ.க்கு மேல் சென்றது. வழி நெடுகிலும் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது.
பெரோஸ் காந்திக்கு இவ்வளவு செல்வாக்கு உள்ளதா? என நேருவே வியந்தார். இவ்வளவு இருந்தும் என்ன பயன்? பெரிய குடும்பத்தின் வேண்டாத மருமகனாயிற்றே?

மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் நினைவிடத்துக்கு எல்லோரும் அஞ்சலி செலுத்தி விட்டு செல்கின்றனர். ஆனால், பெரோஸ் காந்தியின் நினைவிடத்துக்கு ஒருவர் கூட வந்து அஞ்சலி செலுத்துவது கிடையாது. கேட்பாரின்றி அந்த நினைவிடம் கிடக்கிறது.
வாழும்போது எப்படி இருந்தார் என்பதை விட, சாகும்போது ஒரு மனிதர் என்னவாக இருந்தார் என்பது தான் இந்த உலகத்தில் முக்கியம் போல தெரிகிறது.

= வை.ரவீந்திரன் 

Saturday, 18 September 2010

ராணிக்கே இதுதான் கதி










ராஜஸ்தான் சரித்திரத்தில் ஜெய்ப்பூர் மகாராணி காயத்ரி தேவிக்கு சிறப்பான ஒரு இடம் எப்போதுமே உண்டு. ‘மக்களின் மகாராணி’ என அழைக்கப்பட்டார் என கூறுவதோடு, மக்களால் அவர் மிகவும் நேசிக்கப்பட்டார் என்றே கூற வேண்டும். 1962 நடந்த பாராளுமன்றத் தேர்தலில் சுவராஜ்யா கட்சி சார்பாக ஜெய்பூர் பாராளுமன்ற தொகுதியில் மகாராணி போட்டியிட்டார்.


அந்த தேர்தலில் பதிவான 2,46,516, வாக்குகளில் 1,92,909 வாக்குகளை பெற்று கின்னஸ் சாதனையை காயத்ரி தேவி படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல, 1967, 1971 ஆகிய பாராளுமன்ற தேர்தல்களிலும் தொடர்ந்து மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்ற பெருமைக்கு உரியவர்.


மகாராணி காயத்ரி தேவிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர் மீது வரி மோசடி வழக்கு தொடர்ந்து சிறையில் தள்ளுவதற்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி முயற்சி செய்தால் அவருடைய செல்வாக்கு எந்த அளவுக்கு இருந்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.


மேற்கு வங்காளம் கூச்பிகார் ராஜா ஜிதேந்திர நாராயணனின் மகள் காயத்ரி தேவி. ஜெய்ப்பூர் மகாராஜா மான்சிங்கை 1940&ம் ஆண்டு மணந்தார். 12 வயது சிறுமியாக காயத்திரி தேவி இருந்தபோதே, அவருடைய அழகில் மான்சிங் மனதை பறி கொடுத்திருந்தார். அதனாலேயே, காத்திருந்து 3&வது மனைவியாக காயத்திரி தேவியை மான்சிங் மணந்து கொண்டார் என்றும் கூறுகிறார்கள்.



உலகின் முதல் பத்து அழகிகளில் ஒருவராக ‘வோக்’ பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டவர், மகாராணி காயத்திரி தேவி. அவருடைய ஒரே மகன் ஜகத் சிங், 1997&ம் ஆண்டு இறந்து விட்டார். பேரன் தேவராஜ், சொத்தில் பங்கு பெறுவதற்காக கோர்ட்டுகளில் பொழுதைக் கழித்துக் கொண்டு இருக்கிறார்.


மகாராஜா மான்சிங்கின் மூன்றாவது மனைவியாக காயத்திரி தேவி இருந்தார் அல்லவா? ஏற்கனவே, மகாராஜா மணந்து கொண்ட இரண்டு மூத்த தாரங்களின் மூலமாக பிரித்விராஜ் சிங், ஜெய்சிங் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவ்வளவும் இருந்து என்ன பயன்?


ராஜஸ்தான் ராஜ குடும்ப வழக்கப்படி, மகாராஜாவோ அல்லது மகாராணியோ இறந்து விட்டால், அவர்களை எரியூட்டிய இடத்தில் ‘சத்ரி’ என்ற பெயரில் நினைவிடம் கட்டுவார்கள். அதுபோல மகாராஜா மான்சிங் மற்றும் அவருடைய முதல் இரண்டு மனைவிகளான மருதார் அன்வர், கிஷோர் அன்வர் ஆகியோர்க்கு ‘சத்ரி’ கட்டப்பட்டுள்ளன.


ஆனால், தன்னுடைய 90&வது வயதில் மரணமடைந்த மகாராணி காயத்திரி தேவிக்கோ, அவர் மறைந்து ஒரு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ராஜ குடும்ப வாரிசுகள் யாருக்கும் அவருக்கு நினைவிடம் கட்டக் கூட நேரமில்லை. ராஜ குடும்ப சொத்துகளுக்கு உரிமை கொண்டாடுகிறார்களே தவிர, தங்களுடைய கடமையை செய்ய யாருமே தயாராக இல்லை.


ராஜபுத்திர வழக்கப்படி ராஜ குடும்பத்தினரின் மறைந்த தினத்தன்று அவர்களுடைய நினைவாக, அவர்களுடைய நினைவிடத்துக்கு மக்கள் வந்து விளக்கேற்றி வைப்பார்கள்.


உலகப் பேரழகியாகவும், மக்களின் உள்ளம் கவர்ந்த ஜெய்ப்பூர் மகாராணியாகவும் கின்னஸ் சாதனை புரியும் வகையில் மக்களின் பேராதரவை பெற்ற தலைவியாகவும் வலம் வந்த மகாராணி காயத்திரி தேவிக்கு நினைவிடம் கட்டக்கூட யாருமே இல்லை என்றால், இதை என்னவென்று சொல்லுவது?


இவவளவு சிறப்பு வாய்ந்த ஜெய்ப்பூர் மகாராணிக்கே இது தான் கதி.


றேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களாய் உருவாகி இருக்கும் நமது அரசியல்வாதிகள் மட்டுமல்ல. தன்னிலை மறந்து ஆடும் சாதாரண மனிதர்களும் இதில் இருந்து பாடம் படித்தால் நல்லது.

-நன்றி ‘தினமணி’

= வை.ரவீந்திரன் 

Tuesday, 14 September 2010

பேராசைப் பெருந்தகையே போற்றி


அண்ணாவின் கவிதை
-----------------------------
பேராசைப் பெருந்தகையே போற்றி
பேசநா இரண்டுடையாய் போற்றி
தந்திர மூர்த்தி போற்றி
தாசர்தம் தலைவர் போற்றி
வஞ்சக வேந்தே போற்றி
வன்கண நாதா போற்றி
கொடுமைக் குணாளா போற்றி
கோழையே போற்றி
பயங்கொள்ளிப் பரமா போற்றி
படுமோசம் புரிவாய் போற்றி
சிண்டுமுடித் திடுவாய் போற்றி
சிரித்திடு நரியே போற்றி
ஒட்டுவித்தை கற்றோய் போற்றி
உயர் அநீதி உணர்வோய் போற்றி
எமது இனம் கெடுத்தோய் போற்றி
ஈடில்லாக் கேடே போற்றி
இரை இதோ போற்றி! போற்றி
எத்தினேன் போற்றி போற்றி
- இந்தக் கவிதை, 1945 ம் ஆண்டு அறிஞர் அண்ணாவால் எழுதப்பட்டது.

சற்றேறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்த கவிதையில் அண்ணாவின் துணிச்சல், தெளிவு, கருத்துச் செறிவு தெளிவாகத் தெரிகிறது. மனித மேம்பாடு பேணப்படுவதற்கான போராட்டமே தனது இயக்கம் என்றும் அந்த போராட்டத்தை புனிதப் போர் என்றும் அறிவித்த அண்ணா, இத்தகைய கவிதையை எழுதியிருக்கிறார்.
குறிப்பு:- யாருக்கோ அண்ணா எழுதிய இந்தக் கவிதை, 65 ஆண்டுகள் கழிந்த நிலையில், அவருடைய சீடருக்கு பொருத்தமாக இருப்பது மிகவும் விந்தையாக உள்ளது.

= வை.ரவீந்திரன்

கோவிந்த ராஜன் கமிட்டி & தமிழக அரசின் குள்ள நரித்தனம்



தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் ஏகோபித்த ஆதரவோடும் (!), பாராட்டுகளுடனும் (!) பீடு நடை போட்டு வரும் தமிழக அரசின் புதிய முயற்சி, கோவிந்தராஜன் கமிட்டி.
அதாவது, தமிழகம் முழுவதும் புற்றீசல் போல முளைத்துள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுப்பதற்காகவும் அப்பாவி பெற்றோர்களை பாதுகாக்கவும் புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக அந்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியும் மிக தீவிரமாக பரிசீலனை செய்து ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு வகுப்புக்கும் எந்த அளவுக்கு கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து அரசுக்கு அளித்தது.
அந்த அறிக்கையை வெளியிடுவதிலேயே அரசின் குயுக்தி வெளியாகி விட்டது. அறிக்கையின் முழு விபரங்களும் இணைய தளத்தில் வெளியிடப்படும் என கூறப்பட்டது போல அரசு செய்யவில்லை. ஒவ்வொரு பள்ளியின் அறிவிப்பு பலகையிலும் கட்டண விபரங்களை ஒட்ட வேண்டும் என்பதையும் கட்டாயமாக்கவில்லை. மாறாக, கோவிந்தராஜன் கமிட்டியிலேயே மேல்முறையீடு செய்வதற்கு தனியார் பள்ளிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் தவறு ஏதும் கிடையாது. ஏனென்றால், பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் தனியார் பள்ளிகளுக்கு நிவாரணம் அளிப்பது சரியே.
அதைத் தொடர்ந்து, 6 ஆயிரம் பள்ளிகள் மேல் முறையீடு செய்தன. தமிழகத்தில் மொத்தம் 8 ஆயிரம் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மேல் முறையீட்டை விசாரித்த கோவிந்தராஜன் கமிட்டி, ‘இந்த ஆண்டு நாங்கள் நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். மேல் முறையீட்டு மனுக்களை பரிசீலித்து, அது தொடர்பான விசாரணைக்கு கால அவகாசம் தேவைப்படுவதால் அந்த பணிகள் முடிந்தபிறகு நிர்ணயிக்கப்படும் புதிய கட்டணத்தை அடுத்த கல்லி ஆண்டு (2011&12) வசூலிக்கலாம்’ என்று கூறியது.
இங்கு தான், தமிழக அரசின் குள்ளநரித்தனம் வெளிப்படுகிறது. அதாவது, தேர்தல் ஆண்டான இந்த ஆண்டில் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்து விட்டால் பெற்றோரான பொதுமக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும். அதனால், வித்தியாசமானதொரு முடிவை அறிவித்து விட்டது. சரி. இத்துடன் பிரச்சினை முடிந்து விட்டதா? என்றால் அது தான் இல்லை. தமிழகம் முழுவதும் பல்வேறு மெட்ரிகுலேசன் பள்ளிகளின் முன்பு பெற்றோர்கள் திரண்டு, அறிவிக்கப்பட்ட கட்டணத்துக்கு அதிகமாக வசூலிப்பதாக கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் சென்னை முதல் பல்வேறு நகரங்களிலும் இது நடைபெறுகிறது.
கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரையில் தமிழக அரசு உறுதியாக இருந்தால், அதை கண்டிப்பாக பின்பற்றுமாறு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு உத்தரவிடலாமே? அதை ஏன் செய்யவில்லை. தலைநகர் சென்னையில் சில மேல்தட்டு பள்ளிகளில் எல்.கே.ஜி. சேர்ப்பதற்கே ரூ.50 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இதெல்லாம் தமிழக அரசுக்கு தெரியாமல் நடைபெறுகிறதா? 11&ம் வகுப்பில் கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல் உள்ளிட்ட முதல் பாடப்பிரிவில் படிப்பதற்கு சில மெட்ரிகுலேசன் பள்ளிகளில் ஒரு பருவத்துக்கு ரூ.75 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டணத்துக்கு அந்த பள்ளிகள் கூறும் விளக்கம் என்ன தெரியுமா? நல்ல பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலமாக பாடம் சொல்லித் தரப்படுகிறது. சிறந்த வகுப்பறை, மின் விசிறி வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி இப்படி பல்வேறு வசதிகள் செய்து தரப்படுவதாகவும் கூறுகின்றன. இவை உண்மையாகவே இருக்கலாம். அரசு பள்ளிகளை விட, சற்று தரமானதாக இருப்பதால் தானே ரூ.75 ஆயிரம் கொடுத்து பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் முன் வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் அளிக்கும் நிலையில், இத்தகைய மேல்தட்டு பள்ளி ஆசிரியர்களுக்கும் அதற்கு நிகராகவே சம்பளம் அளிக்கப்படுகின்றன. இத்தகைய பள்ளிகளில் பணி புரியும் பல ஆசிரியர்கள், அரசு வேலைக்கு செல்ல விரும்பவதில்லை என்பதும் கூடுதல் தகவல்.
இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், இப்படிப்பட்ட பள்ளிகளை கோவிந்தராஜன் கமிட்டி கட்டுப்படுத்துகிறதா? என்பதே எனது கேள்வி. ஏனெனில், கமிட்டியின் பரிந்துரையை அமல் படுத்த உத்தரவிடும் ஆளும் மற்றும் அதிகார வர்க்கத்தில் உள்ளோரின் வாரிசுகளே இந்த பள்ளிகளில் தானே படிக்கின்றனர். விரல் விட்டு எண்ணும் அளவில் உள்ள இந்த பள்ளிகளை விட்டு விட்டு, மற்ற மெட்ரிகுலேசன் பள்ளிகள் தான் இப்போது படாதபாடு படுகின்றன. கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரையை ஏற்றால் ஆசிரியர்களின் சம்பளத்தில் ‘கை வைக்க’ நேரிடும். (பல பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான இன்கிரிமெண்ட் போடப்படவில்லை என்பது கூடுதல் தகவல்). அதே நேரத்தில், கட்டணத்தை வசூலிக்கும்போது பெற்றோரின் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.
இந்த இடத்தில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் என்ற இரண்டு ஆடுகளை மோதவிட்டு ரத்தம் குடிக்க காத்திருக்கும் குள்ள நரித்தனம் தான் தமிழக அரசின் திட்டமாக இருக்கிறது. இல்லாவிட்டால், ஏதாவது ஒரு நிலையில் உறுதியாக இருந்திருக்குமே? முன்பே, நான் குறிப்பிட்டது போல கோவிந்த ராஜன் கமிட்டி பரிந்துரைகளில் உறுதியாக இருந்தால், அதை தீவிரமாக அமல்படுத்த உத்தரவிடலாமே? அதை விட்டு விட்டு, பெற்றோருக்கும் பள்ளிகளுக்கும் இடையே மோத விட்டு வேடிக்கை பார்ப்பது ஏன்? தமிழக அரசின் இத்தகைய செயல்களால், பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
தான் படிக்கும் பள்ளிக் கூடத்தின் முன்னால், தன்னுடைய அம்மாவோ அப்பாவோ போராட்டம் நடத்துவதை பார்க்கும் ஒரு மாணவன், தனது பள்ளியைப் பற்றி என்ன நினைப்பான்? தனது ஆசிரியர், தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பற்றிய அவனது மதிப்பீடு என்னவாக இருக்கும்?
இத்தகைய நிலையில் படித்து வளரும் அந்த எதிர்காலத் தலைமுறை எப்படி இருக்கும்? மாதா, பிதா, குரு, தெய்வம் & என தெய்வத்துக்கு ஒரு படி மேலாக வைத்து போற்றப்படும் ஆசிரியர்களை இந்த மாணவத் தலைமுறை போற்றிப் பாராட்டுமா?
அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு ஏராளமாக சம்பளத்தை அள்ளிக் கொடுக்கும் தமிழக அரசு, சுமார் 8 ஆயிரம் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் (சராசரியாக ஒரு பள்ளிக்கு 50 பேர் என்றால் கூட, 4 லட்சம் பேர்) நிலைமையை யோசித்து பார்க்கிறதா? அந்த ஆசிரியர்களுக்கென குறைந்தபட்ச ஊதியம் எதையாவது கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்து இருக்கிறதா? கட்டணத்தோடு, அது பற்றியும் பரிசீலித்து முடிவு எடுப்பது அவசியம்.
தனியார் பள்ளிகள் அனைத்தும் கட்டணக் கொள்ளை அடிப்பதாக கருதினால், அதற்கு கடிவாளம் போடும் வகையில் கடுமையான சட்டங்களை இயற்றலாம். அல்லது, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கலாம். தனியார் பள்ளி ஆசிரியர்களைப் போல, அரசு பள்ளி ஆசிரியர்களையும் கடுமைமயாக வேலை வாங்கினால் தானாகவே அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். தனியார் பள்ளிகளின் வியாபாரம் பிசு பிசுத்துப் போகும்.
தமிழகத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அரசு பள்ளிகள் இல்லை என்றால், அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடைமை ஆக்கி விடலாமே? இலவச கலர் டி.வி. ஒரு ரூபாய் அரிசி போன்றவற்றுக்கு பதிலாக கல்விக்கு செலவிடலாமே? கலர் டி.வி.யை யார் கேட்டது? தனியார் பள்ளிகளை அரசுடையாக்கும் செலவுக்காக அரிசியின் விலையை ரூ.3 வரை உயர்த்தலாமே-? ‘அன்ன சத்திரம் ஆயிரம் கட்டுவதை விட, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலே புண்ணியம் யாவிலும் சிறந்தது’ என்பது நம்முடைய முன்னோர் வாக்கு.
இதை எல்லாம் விட்டு விட்டு, தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக பெற்றோரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக கட்டண நிர்ணயம் என்ற நாடகத்தை நடத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். பெற்றோரையும் & தனியார் பள்ளி நிர்வாகங்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் குள்ள நரித்தனத்தை எந்த காரணத்தை கொண்டும் நியாயப்படுத்த முடியாது. பள்ளிக் கல்வியில் அரசியல் விளையாட்டை காண்பிப்பது, எதிர்கால சமூகத்தையே அரித்து விடும். குளறுபடியான பள்ளிக் கல்வியால் எதிர்காலத்தில் குழப்பமான சமுதாயம் உருவாகும்.

= வை.ரவீந்திரன் 

Monday, 13 September 2010

காஷ்மீருக்கு ஒரு நீதி, ஈழத்துக்கு ஒரு நீதியா?




இந்தியாவின் தலை பகுதி பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. இன்று நேற்றல்ல. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக. ஆனால் கடந்த சில மாதங்களாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கிறது. நான் சொல்லுவது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். காஷ்மீர் பற்றி தான் சொல்லுகிறேன். இந்தியாவின் பிரஸ்டீஜ் போன்று கருதப்படும் காச்மீருக்காக மத்திய அரசு கொடுத்த விலை கொஞ்சம் நஞ்சம் அல்ல.

அரசியல் சட்டத்தில் 370 வது பிரிவு காஷ்மீருக்கு தனி அந்தஸ்து அளிக்கிறது. இதன் மூலமாக, காஷ்மீருக்குள் இந்தியாவை சேர்ந்த வேறு யாரும் கை அகல நிலம் கூட வாங்க முடியாது. இது மட்டும் அல்ல. தேவையான அளவுக்கு தாரளமாக மத்திய அரசின் நிதி வேறு வாரி வழங்க படுகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில், தற்போதைய மன்மோகன் சிங் அரசு சில லூசுத்தனமான முடிவுகளை எடுத்து கொண்டு வருகிறது.
அதாவது, கலவர பூமியான காஸ்மீரில் இருக்கும் ராணுவத்துக்கு என்று சில அதிகாரங்கள் உள்ளன. அந்த அதிகாரங்கள் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. சில மாவட்டங்களில் ரத்தும் செய்யப்பட்டு விட்டது. இது தவிர, காஸ்மீருக்கு சுயாட்சி அளிக்கவும் பரிசீலனை நடைபெறுகிறது. இது போன்ற கோரிக்கைகளை எல்லாம் முன் வைப்பவர் யார் தெரியுமா? காஸ்மீரில் ஆட்சி செய்யும் அனுபவமே இல்லாத சின்ன பயன் முதல்-மந்திரி உமர் அப்துல்லா.
தமிழ் நாட்டை போலவே, தந்தை-மகன்-பேரன் என்று காஸ்மீரிலும் தொடருகிறது, பரம்பரை அரசியல்.
ந்த சின்ன பயன் கோரிக்கையை மன்மோகன் சிங்கும் கேட்டுக் கொண்டு இருக்கிறார். என்ன வெட்கக் கேடு. அதற்கு ஆமாம் சாமி போடுவது, நம்ம ஊரு சீமான் வீட்டு செல்ல பிள்ளை (உபயம் கருணாநிதி) ப. சிதம்பரம். ராணுவ மந்திரி அந்தோணி, நிதி மந்திரி பிரணாப் ஆகியோர் எதிர்த்தும் இத்தகைய கேடுகெட்ட முடிவுகள் எடுக்கப் படுகின்றன.
இந்த இடத்தில, காஸ்மீரில் உள்ள பிரிவினை தலைவர்கள் குறிக்கோள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம். 'நம்முடைய போராட்டங்கள் எந்த வடிவில் இருந்தாலும் சரி. நேரத்துக்கு ஏற்ப போராட்டங்கள் மாறலாம். அனால். நமது குறிக்கோள் ஒன்றே. சுதந்திர காஸ்மீர் மட்டுமே நமது லட்சியம்' - என்பது பிரிவின தலைவர்களின் முழக்கம். தற்போதைய போராட்டம், கல் வீச்சு.
தன்னுடைய கொடிய நோய்க்கு மும்பையில் அறுவை சிகிச்சை செய்து விட்டு காஷ்மீர் சென்றதும் நடந்த வரவேற்பு கூட்டத்தில் பேசிய கிலானி என்ற பிரிவினைவாத தலைவர், 'காஸ்மீரை சட்ட விரோதமாக இந்திய ஆக்கிரமித்து வைத்து இருக்கிறது. எனவே, இந்திய மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும்' என முழக்கமிட்டார்.இது போன்ற கொள்கை பிடிப்பு கொண்ட தலைவர்களின் உறுதி மொழியை ஏற்று இரண்டு நாட்களுக்கு முன்னால் ரம்ஜான் ஊர்வலத்துக்கு அனுமதி கொடுத்தார், சின்ன பையன் உமர். இதுதான் சமயம் என்று, ஆயிரக்கணக்கான பிரிவினைவாத இளைஞர்கள் ஒன்று திரண்டு வன்முறை-இல் இறங்கி விட்டனர். அரசின் ஆசிர்வாதத்தோடு பிரிவினைவாதிகள் ஒன்று கூடி விட்டனர்.
இது போன்ற முன் யோசனை இல்லாத முட்டாள் தனமான முதல் மந்திரி மற்றும் பொறுப்பற்ற பிரதமரை எங்கேயாவது பார்க்க முடியுமா? இந்த கும்பல் காஸ்மீர் பிரச்சினையை தீர்க்க போகிறதாம்?
சரி, காஸ்மீர் பிரச்சினை எக்கேடு கேட்டும் போகட்டும். அது பற்றி விளக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு தகவல்களும். இப்போ விசயத்துக்கு வருவோம்.
இப்போது காஷ்மீர் போராட்டத்தை தனி ஈழ போராட்டமாகவும், இந்தியாவை இலங்கையாகவும் ஒப்பிட்டு பார்க்கலாம். இதை மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசே ஒப்பிட்டுக் கொண்டது. இலங்கையில் கடந்த ஆண்டு யுத்தம் நடந்தபோது, 'காஸ்மீர் கலவரத்தை ஒடுக்கும் நாம், தனி ஈழத்தை எப்படி ஆதரிக்க முடியும்' என கேட்டவர்கல் தான் இந்த காங்கிரசார். மன்மோகன், சிதம்பரம் போன்றவர்கள் இப்படி தான் கூறிக் கொண்டார்கள்.
சரி.
அவர்கள் வாதப்படி வைத்துக்கொண்டால் இப்போது ராணுவத்தை முற்றிலுமாக இறக்கி காஸ்மீரில் முழு தாக்குதலை நடத்த வேண்டியது தானே? இலங்கை-இல் தமிழர்களை முற்றிலுமாக ஒழிக்க இந்திய உதவி செய்தது அல்லவா? அது போல, காஸ்மீரிலும் முழு அளவில் தாக்குதல் நடத்த அமெரிக்கா, இங்கிலாந்து இப்படி உதவிகள் கேட்கலாமே, ராஜா பக்சே போல. மேலும், பொன்சேகா போல ஒரு தளபதியை நியமித்து முழு வீச்சில் தாக்குதல் நடத்தி காஸ்மீரை சுடுகாடக்கலாம்.
அரசியல் ரீதியாக, இதற்கும் கருணாநிதி ஆதரவு தருவார். வேண்டுமானால், அந்த தாக்குதலை சர்வதேச அளவில் மூடி மறைக்க தேவையான ஆலோசனைகளும் தருவார். ராஜா பக்சே விடமும் கூடுதல் அறிவுரைகளை பெற்றுக் கொள்ளலாம்.
அதை விட்டு விட்டு, 370 வது சட்டப் பிரிவு, சுயாட்சி, ராணுவத்துக்கு அதிகாரத்தை விலக்குவது என்று சிறு பிள்ளை தனமாக செய்வது ஏன்? இலங்கை தமிழனுக்கு ஒரு நியாயம். காச்மீரிக்கு ஒரு நியாமமா? இது போன்ற தீர்வுகளை அப்போது இலங்கை அரசிடம் ஏன் கூறவில்லை. மாறாக, ஆயுதமும் ஆட்களும் அனுப்பி போரை முன் நின்று நடத்தியது ஏன்?
சண்டை முடிந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் கூட, இன்னமும் ஈழத்தில் நெருக்கடி நிலை நீடிக்கிறதே? ஆனால், காஸ்மீரில் வெட்டு குத்து நடக்கும் போதே ராணுவத்துக்கு அதிகாரத்தை குறைக்கும் யோசனை முன் வைக்கப் படுகிறதே?
இலங்கையில், தமிழர் பகுதிகளில் மீண்டும் தனி நாடு போராட்டம் எழுந்து விடக்கூடாது என்பதற்காக சிங்களர்கள் குடி அமர்த்தப்பட்டு வருகின்றனர். ராஜ பக்சே செய்யும் இந்த முடிவை ஆதரித்து, அங்கு புனரைமைப்பு பணிகளுக்கு கோடிகளை கொட்டும் இந்திய அரசு, காஸ்மீரிலும் மற்ற மாநிலத்தை சேர்ந்த மக்களை குடி அமர்த்தலாமே?அனால், அங்கிருந்து விரட்டப்பட்ட பண்டிட்டுகளுக்கு கூட, ஆதரவு அளிக்கவில்லையே ஏன்? ராஜா பக்செவுக்கு இருக்கும் துணிச்சல், தெனாவட்டு மிகப் பெரிய நாடு என்று கூறிக் கொள்ளும் இந்தியாவுக்கும் அதை ஆளும் மன்மோகனுக்கும் இல்லையே? தமிழன் என்று கூறிக்கொள்ளும் சிடம்பரத்துக்கும் இல்லையே?
அப்போது தனி ஈழ போராட்டத்தை கடுமையாக எதிர்த்த சிதம்பரம், இப்போது வேறு மாதிரி வேஷம் போடுவது ஏன்?கஷ்மீர் பிரச்சினை என்றால் ஒரு நீதி! ஈழம் என்றால் தமிழன் என்றால் ஒரு நீதியா?


= வை.ரவீந்திரன் 

Sunday, 12 September 2010

எனது மூத்த மகன்


* உன் பார்வை
முதன் முதலில்
என் பக்கம்
திரும்பியபோது
பனி பூக்களை
தூவிய பரவசம்

* தாயின் கருவறைக்கு
விடை கொடுத்து
நீ
பூமியை தொட்டு
பார்த்த அந்த
கணப் பொழுதில்
உணர்வுகளின்
உரசலை தாண்டி
காதலின்
அர்த்தங்களை - நாங்கள்
பூரணமாக
புரிந்து கொண்டோம் 

= வை.ரவீந்திரன் 

Friday, 20 August 2010

விதியே, விதியே என் செய்ய நினைத்தாய்?

தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால் ஜகத்தினை அழித்து விடுவோம் - என்று ஆக்ரோசமாக விழி சிவந்த பாரதி பிறந்த பூமி இது.
ஆனால், இந்த புண்ணிய தேசத்தின் கடைக்கோடி மனிதனுக்கும் உணவு கிடைக்கிறதா என்றால் அது சற்றே சிந்தனைக்கு உரிய விசயம். இதற்குத்தானா நாம் சுதந்திரம் வாங்கினோம்? மனிதனின் அடிப்படை தேவை என கருதப்படும் உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றில் அனைவரும் தன்னிறைவு பெற்று விட்டோமா?
அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் என அணைத்து பொருட்களுமே ஏழைகளுக்கு எட்டாக் கனியாகி விட்டன. ஆறு ஆண்டுகளுக்கு முன் 13 ரூபாய்க்கு விற்கப்பட்ட சாதா பொன்னி அரிசி விலை 40 ரூபாய் ஆகி விட்டது. சமையல் எண்ணெய் விலை மூன்று மடங்கு அதிகரித்து விட்டது. அட சிங்கிள் டீ கூட ரெண்டு மடங்கு விலை ஏறி விட்டது. ஹோட்டலுக்கு சென்றால் விலை பட்டியலை பார்த்தாலே மயக்கம் வருகிறது. அந்த மயக்கத்தை தெளிவிக்க தண்ணீர் கேட்டால் அதற்கும் தனி விலை. குடிக்க தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் புண்ணிய தேசம் இந்தியாவாகத்தான் இருக்கும். தண்ணீர் என்பது மனிதனின் அடிப்படை உரிமை. அதை வழங்க வேண்டியது அரசின் கடமை. இதை, மக்களே உணராமல் பிண்டங்களாக இருக்கிறார்கள். என்ன செய்வது?இது உணவு பிரச்சினை. உணவுக்கே பிரச்சினை என்ற நிலையில் மானத்தை காக்கும் உடை பற்றி கேட்கவே வேண்டாம். பலருக்கு மானமே கிடையாது என்பது வேறு விஷயம். அடுத்ததாக இருப்பிடம். நகர் பகுதிகளில் புறா கூண்டுக்குள் அடைந்து கிடக்கும் அவல நிலையிலேயே மக்கள் உள்ளனர். கிராமங்களிலோ நிலைமை பரிதாபம். விளை நிலங்கள் எல்லாம் அரசால் கையகப் படுத்தப் பட்டு விலை நிலங்களாகி வருகின்றன. அந்த நிலங்கள் எல்லாம் பன்னாட்டு முதலாளிகளுக்கு படையல் விரிக்கப் படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களுக்கு 100 ஏக்கர் மட்டும் தேவை என்றால் கூட 500 முதல் ஆயிரம் ஏக்கர் வரை எடுக்கப் படுகின்றன. இது போக, உள்ளூர் அரசியல் தாதாக்களின் ரியல் எஸ்டேட் ஆதிக்கம் வேறு.
இப்படி, இந்திய குடிமகனுக்கு அணைத்து வழிகளிலும் இருந்து அடி விழுகிறது. வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்பட்டு வருகிறான். நகரம் முதல் கிராமம் வரை இது தான் நிலைமை. 10 சதவீதத்துக்கும் குறைவான மக்கள் மட்டுமே கவலை இன்றி செல்வா செழிப்பில் உள்ளனர்.நிலைமை இப்படி இருக்க, நம்மை ஆட்சி செய்வதற்காக நம்மால் தேர்வு செய்யப்பட்டவர்களின் செயல்கள் வெட்கக் கேடாக உள்ளன. தனி ஒரு மனிதனுக்கு உணவு கிடைக்கிறதா என்பதை பற்றி சிந்திக்க வேண்டிய தலைவர்களோ, தங்களுடைய சம்பளத்தை பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மாத சம்பளம் 50 ஆயிரமாக உயர்த்தியதோடு, அலவன்சுகளும் மூன்று முதல் நான்கு மடங்கு வரை அதிகரிக்கப் பட்டுள்ளது. இவ்வளவு கொடுத்த பிறகும் திருப்தி அடையவில்லை. பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு ஒத்திவைக்கும் நிலைமைக்கு கொண்டு செல்கின்றனர். இந்த வெட்கக் கேட்டை எங்கேயாவது பார்க்க முடியுமா? சம்பளம் போதவில்லை என்று போராடும் லாலு மற்றும் முலாயம் ஆகியோரின் சொத்து விவரங்களை கேட்டால் தலை சுத்தும். பீகாரில் உள்ள மாடுகள் கூட, லாலு பிரசாத் பெயரை சொல்லுமே?
இவர்களை விடுங்கள், இப்போது எம்.பி.க்களாக இருக்கும் ஒவ்வரும் சோத்துக்கே கஷ்டப் படுபவர்களா? தேர்தலில் போட்டிடும் பொது இவர்கள் காண்பித்த சொத்து விபரங்கள் பல கோடியை தாண்டுமே? இவர்களுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாதா?
மத்திய மந்திரி சபை செயலாளரை விட ஒரு ரூபாயாவது அதிகம் பெற வேண்டும் என்பது இவர்கள் நோக்கம். அதாவது என்பது ஆயிரத்து ஒரு ருபாய் வேண்டுமாம். என்ன கொடுமை இது? அதிகார வர்க்கமும் ஆளும் வர்க்கமும் சம்பளத்தில் போட்டி போடுகின்றன. இந்திய குடிமகனோ வயிற்றில் ஈர தஊணியை கட்டிக் கொண்டு அதை வேடிக்கை பார்க்க வேண்டிய அவல நிலையில் இருக்கிறான்.விதியே, விதியே என் செய்ய நினைத்தாய்? எங்கள் மக்களை.

Sunday, 15 August 2010

வாழ்க ஜனநாயகம்

நாட்டின் 64 ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியது.

''2004 ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பு ஏற்றதும் விவசாய வளர்ச்சி 7 ,8 ஆண்டுகளாக திருப்திகரமாக இல்லை என்று அறிந்தோம். அதனால் விவசாயத்தில் முதலீட்டை அதிகரித்தோம். மாவட்ட அளவில் விவசாய வளர்ச்சி திட்டங்களை ஊக்குவித்தோம். இதனால், தற்போதைய நிலையில் விவசாய வளர்ச்சி குறிப்பிட்ட அளவில் உயர்ந்து விட்டது"

இதை பார்த்ததும் நாட்டில் முப்போகம் விளைந்து விவசாயம் செழித்து விட்டது என்று நீங்கள் நினைத்தால் அது பிரதமரின் தவறு கிடையாது. இதற்கு அவரே அடுத்த வரியில் பதில் சொல்லி இருக்கிறார். ''எனினும், நாம் அடைய வேண்டிய இலக்கு மிகப் பெரியதாக உள்ளது. அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும். அப்போது தான் 4 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும்"

பாருங்கள் மக்களே, 4 சதவீத வளர்ச்சி என்பது மிகப்பெரிய இலக்காம். அப்படி என்றால், அவருடைய பாஷையில் இப்போதைய வளர்ச்சி என்ன?
தொழில் வளர்ச்சி, ஒட்டு மொத வளர்ச்சி எல்லாம் 9 சதவீதம் வரை இலக்கு வைக்கும்போது விவசாயம் இப்படி கிடக்க காரணம் என்ன?
சிறப்பு பொருளாதார மண்டலம், கார், செல்போன் இப்படி கிடைத்தால் மட்டும் போதுமா? மனிதனின் வயிற்று பசியை இவை ஆற்றி விடுமா என்ன?
சரி. இவற்றை விடுங்கள். நாடு முழுவதும் பணவீக்கம், விலைவாசி விண்ணை முட்டிக் கொண்டு இருப்பது பற்றி அவர் சொன்னதையும், அதற்கு அவர் சொன்ன தீர்வு பற்றியும் பாருங்கள்.
'' கடந்த சில மாதங்களாக பணவீக்கம் அதிகரித்து வருவதால் நீங்கள் அதிக இன்னல்களுக்கு ஆளாகி இருப்பீர்கள். குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலமாகவே பணவீக்கத்தை கட்டுப் படுத்த முடியும்"

இப்படி ஒரு பிரதமரை எந்த நாடாவது பார்த்ததுண்டா? இவர் யார்? விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமாம். இவருக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தமே கிடையாதோ?
வோட்டுக்கு காசு வாங்கும் ஜென்மங்கள் இருப்பதாலேயே இது போன்று அவரால் பேச முடிகிறது. பணவீக்கத்தை கட்டுப் படுத்தினால் விலை வாசி குறையுமா? விலைவாசியை குறைத்தால் பணவீக்கம் குறையுமா? இந்த பொருளாதார புலி விளக்குவாரா?

என்ன செய்வது? நாட்டில் நிலவும் எந்தவித பிரச்சினைகளையும் தீர்க்க முடியாத ஒரு அரசு. இலங்கை போன்ற சுண்டைக் காய் நாடுகளுக்கு கூட பயந்து நடுங்கும் பிரதமர். பாகிஸ்தானுக்கு சென்று அங்கேயே மூக்கு உடை பட்டு திரும்பும் வெளிஉறவு மந்திரி. இப்படிப்பட்ட நாட்டில் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் உணர்ச்சி இல்லா மக்கள்.
வாழ்க ஜனநாயகம். ஓங்குக நம் சுதந்திரத்தின் பெருமை.

= வை.ரவீந்திரன்