Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Thursday, 27 July 2023

அம்மா...

ஜூலை 27. 

இதே நாளின் இரவில் தான் இடியாய் வந்தது அந்த செய்தி. தொலைபேசி மட்டுமே இருந்த காலம் அது. ஊரில் இருந்து அண்ணாசாலையில் இருக்கும் அலுவலகம் சென்று அங்கிருந்து அறையில் இருந்த என்னை வந்து சேர்ந்தது, செய்தி.

ஆறு மாதத்துக்கு முன்பு தான், ஒற்றை பையுடன், வெறுங்கையுடன் சென்னைக்கு வந்து சேர்ந்திருந்தேன். அடிக்கடி ஊருக்கு செல்ல முடியாத நிலை. ஆனாலும் கூட, 40 நாட்களுக்கு முன் தான் புற்று நோயுடன் போராடியவரை கலங்கிய விழிகளுடன் ஊருக்கு சென்று பார்த்து விட்டு வந்திருந்தேன். செவியில் அந்த செய்தி விழுந்ததுமே தரை நழுவிச் சென்றது போன்ற உணர்வு.

ஒருவாறாக சமாளித்து, அடுத்து என்ன செய்வது? ஊருக்கு உடனே செல்ல வேண்டுமே. பணம்...? இரவு ஏழு மணிக்கு அலுவலகத்தில் பணம் கடனாக கேட்க முடியுமா? நண்பர்களும் என்னைப்போலவே... ஆனாலும் முயற்சித்தார்கள்.

அந்த சமயத்தில் அலுவலக சர்குலேஷன் கலெக்சன் பணத்தை அறை நண்பர் ஒருவர் வைத்திருந்தார். இரவு வேளையில் மேனேஜரிடம் அனுமதி பெற்று அந்த பணத்தை வாங்கிக் கொண்டு ஊருக்கு கிளம்பியபோது நள்ளிரவை நெருங்கி விட்டது.

பாரீசில் திருவள்ளுவரை பிடித்து, பிறர் அறியாமல் மனதுக்குள்ளேயே அழுது, புலம்பி உறங்காத விழிகளுடன் ஊர் சென்றபோது மறுநாள் மதியத்தை கடந்து விட்டது. அங்கே எல்லாம் முடிந்து விட்டது. 

ஊரில் அண்ணன் இருந்ததால் அவனை வைத்தே எல்லா காரியமும் முடிந்து விட்டது. ஆறு மாதமாக புற்று நோயுடன்  போராடித் தோற்றுப்போன உடல் தாங்காது என்றார்கள். எப்படியோ, எனக்கு உயிரும் உடலும் தந்த அந்த தெய்வத்தின் இறுதி நாளில் அருகில் இருக்கும் கொடுப்பினை வாய்க்கவில்லை.

இருபது ஆண்டுகளில் வாழ்க்கையில் எவ்வளவோ மாற்றங்கள். இன்பம், துன்பம், அதிர்ஷ்டம் என்று பல... ஆனால், கடைசி முகம் பார்க்க முடியாத அந்த துரதிர்ஷ்டம் மட்டும் நெஞ்சு கூட்டுக்குள் துடித்துக் கொண்டே இருக்கிறது, வேறு எவருக்கும் இந்த நிலைமை வரவே வேண்டாம் என்ற முணுமுணுப்புடன்...

#நெல்லை_ரவீந்திரன் 

Monday, 10 July 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -57

சிலருக்கு நிறைய துறைகளில் நிறைய விஷயங்கள் தெரியும். அதன் அடி நாதம் வரை அலசி பார்க்கவும் முடியும். ஆனால் அவர்களால் தனக்கு தெரிந்ததை மிக எளிமையாக மற்றவர்களுக்கும் புரிய வைக்க முடியுமா என்றால் சந்தேகம். ஆனால், எழுத்தாளர் சுஜாதா விதிவிலக்கானவர்.



உண்மையான பெயர் ரங்கராஜன். சென்னை எம்ஐடி-யில் படித்த என்ஜினீயர். முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் நண்பர். அறிவியல், வானியல், இயற்பியல், எழுத்து, தமிழ் இலக்கியம், சினிமா எல்லாவற்றிலும் கரை கண்டவர். மனைவி பெயரில் எழுத ஆரம்பித்து அதுவே நிலைத்து விட்டது. 100க்கும் அதிகமான நாவல்கள், 250க்கும் அதிகமான சிறுகதைகள் ஏராளமான கட்டுரைகள் என எழுதியவர்.

ஆனந்த விகடன், குமுதம், கல்கி, தினமணி கதிர் பத்திரிகைகளில் எழுதிய தொடர்கள் எல்லாம் வாசகர்களை வெகுவாக கவர்ந்தவை. பின்னாளில் நாவலாகவும் திரைப்படமாகவும் மாறியவை. கணையாழி புத்தகத்தின் கடைசி பக்க கட்டுரைகளே,  தனி தொகுப்பாக ரசனைக்குரியது.



சுஜாதாவின் எழுத்துக்களை வாசித்தால் எந்த அளவுக்கு அவர் எதிர் காலத்தை துல்லியமாக கணித்திருக்கிறார் என்பது புரியும். அறிவியல் புனைவு கதைகளுக்கு அவருக்கு நிகர் அவர்தான். கம்ப்யூட்டர் பற்றி பரவலாக அறியாத காலத்திலேயே கம்ப்யூட்டர் என்னென்ன செய்யும் என சொன்னவர். இன்றைய மெய்நிகர் தொழில் நுட்பத்தையும் ரோபோக்களையும் அந்த நாளின் அவரது கதைகளில் பார்க்கலாம். உலகை அச்சுறுத்தும் கிருமிகளையும் கூறியவர்.

அறிவியல் கதை, பிரபஞ்சம் பற்றிய கதை, அரசியல் கதை, துப்பறியும் கதை, கூடவே கிராமத்து மனிதர்களை பற்றிய கதை என எல்லாவற்றிலும் புகுந்து விளையாடியவர். அவரது ஸ்ரீரங்கத்து தேவதைகள் புத்தகம் உதாரணம். எதை தொட்டாலும் அதை விரிவாக அலசி எளிதாக விளக்கி சொல்பவர். 

கம்ப்யூட்டரின் ஆரம்ப காலத்தில் தமிழே கிடையாது, ஆங்கிலம் தான். ஆனால் தமிழில் எப்படி எழுதலாம் என்பதை சொல்லி அதற்கு கோட் உருவாக்குவது வரை ஆலோசனை சொன்னவர். இப்போது தமிழிலேயே செல்போனிலும் கம்ப்யூட்டரிலும் எழுதுவதற்கு நன்றி சொல்ல வேண்டியவர்களில் அவரும் ஒருவர்.



கமல் நடித்த பழைய 'விக்ரம்' படம் இவரது கதைதான். அதில் இவர் சொன்ன ஏவுகணை தான் இன்றைய நவீன ஏவுகணையான டொமோஹாக்.

எழுத்தாளர் சுஜாதாவை கதாசிரியர் சுஜாதாவாக சினிமாவுக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் பாலச்சந்தர். ரஜினிக்கு 'காயத்ரி', 'ப்ரியா', 'நினைத்தாலே இனிக்கும்', 'சிவாஜி' படங்கள். கமலுக்கு 'விக்ரம்', 'இந்தியன்' படங்கள். இயக்குநர் மணிரத்னத்தின் 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ரோஜா', 'உயிரே' படங்கள். இயக்குநர் சங்கரின் 'எந்திரன்', 'முதல்வன்', 'அன்னியன்' படங்கள். இப்படி தமிழ் சினிமாவின் பல ஹிட் படங்கள் சுஜாதாவின் கைவண்ணம் தான். இவரது வசனங்கள் தான்.



என்ஜினீயர் ரங்கராஜனாக சுஜாதா படைத்த முக்கிய சாதனை இன்று உள்ளாட்சி தேர்தல் முதல் நாடாளுமன்ற தேர்தல்கள் வரை பயன்படுத்தும்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம். ஈவிஎம் மெஷின்களை முதன் முதலில் வடிவமைத்து அதை அறிமுகப்படுத்திய குழுவில் இவர் முதன்மையானவர்.

என்ஜினீயராக, எழுத்தாளராக, சினிமா கதாசிரியராக தனக்கு தெரிந்த அனைத்தையும் பாமரருக்கு புரியும்படி சொல்லத் தெரிந்த திறமைசாலியாக வாழ்ந்து மறைந்த எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம் மே 3...

#நெல்லை_ரவீந்திரன்

Friday, 28 April 2023

தண்ணீர் போல் வாழுங்கள்

இந்த உலகம் தோன்றிய நாளில் இருந்து மாறாதது தண்ணீர். டைனோசர் இல்லை. மம்முத் இல்லை.  ஆனால், ஈராயிரம் ஆண்டுக்கு முன் வள்ளுவர் எழுதிய விசும்புல் துளி என்னும் தண்ணீர் அப்படியே இருக்கிறது.

இந்த உலகில் எதனுடனும் தயங்காமல் சேருவது தண்ணீர். செம்புலப் பெயல் நீர் என தமிழ் இலக்கியம் சொல்லுகிறது. விண்ணில் இருந்து தூய்மையாக விழுந்தாலும் மண்ணில் மாசாவதை பற்றி கவலை படுவதில்லை. கழிவு நீர் வாய்க்காலில் முகம் கோணாமல் கலக்கிறது. 

ஆறுகளில் நிறைந்து ஓடினாலும், குறைவாக ஓடினாலும், உப்பு கடலில் கலந்தாலும் தன்னையே மாற்றி கொள்கிறது. வீழ்ச்சியை கூட மகிழ்ச்சியுடன் செய்வது தண்ணீர் மட்டும்தான். மனிதனுக்கு சிலிர்ப்பை தருவதும் அதுவே.

ஒவ்வொரு மனிதனும் தனது அந்தரங்கத்தை தண்ணீரிடம்  முழுமையாக காண்பிக்க தயங்குவதில்லை. அந்த ரகசியத்தை ஒருபோதும் பிறரிடம் தண்ணீர் சொல்லுவதில்லை. இந்த உலகமே தண்ணீரை நம்பித்தான் இருக்கிறது. ஆனாலும் அதன் குணம் எக்காலத்திலும் மாறியது கிடையாது.

அதனால் தான், மனிதனை புனிதப் படுத்துவதற்கு பல்வேறு மதங்களிலும் நீரையே பயன் படுத்துகின்றனர். புனித நீர், புண்ணிய நதி, பரந்து விரிந்த கடல், சிறு குழந்தை கொட்டி மகிழும் விளையாட்டு பொருள், அருவெறுப்பான சாக்கடை எதுவாக இருந்தாலும் எதற்காக பயன் படுத்தினாலும் தன்மை மாறாத தண்ணீரைப் போலவே நாமும் இருப்போம்.



Wednesday, 24 December 2014

மனித நேயர் எம்ஜிஆர்


 வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்?

இந்த கேள்விக்கு பதில் காண சரித்திர புத்தகத்தை புரட்டினால் கிடைக்கும் அனைத்து பெயர்களும் வரலாறாக அறிந்தவை மட்டுமே. நம்முடைய சமகாலத்தில் வாழ்ந்து, மறைந்து 30 ஆண்டுகள் கடந்தும் ஒருவரை மக்கள் மறக்காமல் தாமாகவே முன் வந்து நினைவை போற்றுகின்றார்கள் என்றால் அந்த பெருமைக்கு சொந்தக்காரர், எம்ஜிஆர்.

கொடிது கொடிது இளமையில் வறுமை. அந்த வறுமையின் கொடூரம் தாங்காமல் இலங்கை, பாலக்காடு, சேலம், கோவை என குடும்பத்துடன் புலம் பெயர நேரிட்ட அவலத்தை சந்தித்தவர். அந்த துயர வடுக்களை அனுபவித்த காரணத்தாலேயே வாடிய மக்களை கண்ட போதெல்லாம் துயர் துடைக்க கரம் நீட்டியவர். தமிழக ஜனநாயகத்தின் வரலாற்றை எழுதினால் அவருடைய பெயரை நிச்சயமாக தவிர்க்க முடியாது. சினிமா கவர்ச்சியால் ஆட்சியை பிடித்தவர், அட்டை கத்தி வீரர் என வசைமாரி பொழிந்தவர்கள் தங்கள் உள்மனதை தொட்டுப் பார்த்தால், அவரது நீடித்த புகழுக்கு அது மட்டுமே காரணமல்ல என்ற உண்மை புரியும்.

மனித நேயம் என்பது எம்ஜிஆரின் ரத்தத்தில் ஊறிய குணம். 1940களில் சாதாரண நாடக நடிகராக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சியே அதற்கு உதாரணம். நாடக கம்பெனியில் இருந்தபோது தேநீர் அருந்தும் வேளைகளில் தினமும் எம்ஜிஆரே தேநீருக்கு பணம் அளிப்பதை பார்த்த வி.கே.ராமசாமி, ‘ஏம்பா, தினமும் நீயே கொடுக்கிறாய்..?’ என்று கேட்டபோது, ‘எங்கள் வீட்டில் நானும் என் அண்ணனும் சம்பாதிக்கிறோம். ஆனால், நம்முடன் இருப்பவர்களுக்கு அவர்கள் சம்பாத்தியம் மட்டுமே. அவர்கள் கொண்டு செல்லும் பணத்தை எதிர்பார்த்து குடும்பமே காத்திருக்கும்’ என்று பதிலளித்தவர், எம்ஜிஆர். நாடக கம்பெனியில் 4 ரூபாய் சம்பாதித்தபோது இருந்த மனித நேயத்தை லட்சங்களில் சம்பாதித்தபோதும் பட்டுப்போகாமல் காப்பாற்றியதால் தான் கோடிக்கணக்கான மக்களின் நாயகராக உயர்ந்து நிற்கிறார்.

திரை உலகிலும் தன்னால் யாருக்கும் எந்தவித நட்டமும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர். அதனால் தான், தனது முயற்சிகளை ‘நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்’ என சொந்த பணத்தைக் கொண்டே செய்து பார்த்தவர். மேலும், தனக்கு சேர வேண்டிய பணம் வந்தால் போதும் என கருதாமல் தன்னுடன் திரைப்படத்தில் பணியாற்றிய கடைக்கோடி தொழிலாளி வரை சம்பளம் பட்டுவாடா ஆகி விட்டதா என்பதை உறுதி செய்யும் குணம் தான் அரசியல் வரை அவரை அழைத்து வந்தது.
திரைப்படம் என்பது மக்களின் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்ததாலேயே புகைப் பிடிப்பது, குடிப்பது போன்ற காட்சிகளை அறவே தவிர்த்தவர். வில்லனை கை, கால்களை வெட்டி திருத்தாமல் அடி, உதையிலேயே திருத்துவது அவரது பாணி. இது என்ன சினிமாத்தனம் என்று கேட்கலாம். நிஜத்தில் எவ்வளவோ நடந்தாலும், எதிரியாக இருந்தாலும் ஒரு மனிதனை திருத்துவதற்கு அதுவே சிறந்த வழி என்பது அவரது கருத்து. ஆரம்பத்தில் தனது கதாநாயகியாக நடித்த பெண்களுக்கு மகனாக நடிக்க வேண்டிய சூழல் பின்னாளில் ஏற்பட்டபோது, அவர்களின் கதாபாத்திரத்தை அண்ணி கதாபாத்திரமாக மாற்றியவர். (உதாரணம்=உரிமைக் குரல்)

திரைப்படத்தில் தனக்கென இப்படி சில கொள்கைகளை பின்பற்றியது மட்டுன்றி, 1952ல் தான் இணைந்த திமுகவின் கொள்கைகளையும் படங்களில் புகுத்தினார், அந்த சமயத்தில் ஆளுங்கட்சியாக காங்கிரஸ் இருந்தும் கூட. அந்த துணிச்சல், வேறு எந்த நடிகருக்காவது இருக்குமா? அச்சம் என்பது மடமையடா.. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு..., உன்னை அறிந்தால்... தூங்காதே தம்பி தூங்காதே... புதியதோர் உலகம் செய்வோம்... இப்படி அவரது பாடல்களை கேட்டால் போதும் ஆயிரம் தன்னம்பிக்கை புத்தகங்களை படித்து முடித்த உற்சாகம் மனதில் ஊற்றெடுக்கும்.

எம்ஜிஆரின் இந்த குணங்கள் தான், அரசியலிலும் அவரை உச்ச நிலைக்கு கொண்டு சென்றது. தமிழகத்தில் இருந்து மாநில கட்சியை சேர்ந்தவர்கள் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்புக்கு 1977ம் ஆண்டிலேயே பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் எம்ஜிஆர். மத்தியில் மொரார்ஜி தேசாயின் ஜனதா ஆட்சிக்கும் ஆதரவு அளித்தார். காங்கிரஸ் ஆட்சிக்கும் ஆதரவு அளித்தார். இது முரண்பாடாக தெரியவில்லையா? என்று கேட்டபோது, ‘நான் தனி ஆள் அல்ல. எனது விருப்பு வெறுப்பை பார்க்க. ஒரு மாநில முதலமைச்சர். எனவே, மாநிலத்துக்கு தேவையான உதவிகளை எப்படி பெற முடியுமோ அதை எப்படியும் பெறுவேன்’ என்பது அவரது பதிலாக இருந்தது. அந்த எண்ணம் தான் தமிழக மக்களிடம் இன்னமும் நிரந்தர முதல்வராக எம்ஜிஆரை அமர்த்தி வைத்திருக்கிறது.

அதேநேரத்தில், மத்திய அரசுக்கு வளைந்து கொடுப்பவரா? என்ற சந்தேகத்தை எழுப்பியவர்களுக்கு, ‘ராணுவம் வந்தாலும் எதிர்கொள்ள தயார்’ என மத்திய அரசுக்கு துணிச்சலாக சவால் விடுத்து மறைமுகமாக பதிலளித்தவர். இலங்கையில் உச்சகட்ட இனக்கலவரம் நடைபெற்றபோது போராளிகளுக்கு வெளிப்படையான ஆதரவு அளித்ததோடு விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சென்னைக்கு அழைத்து தனது சொந்த பணம் ரூ.5 கோடியை வழங்கியவர். பின்னாளில், இந்திரா காந்தி மூலமாக புலிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க உதவியவர்.

அரிசி, உணவு, போக்குவரத்து என சாதாரண ஏழை மக்களுக்கு தேவையான அனைத்தையும் மிக நிறைவாகவே பூர்த்தி செய்தது, எம்ஜிஆரின் 10 ஆண்டு கால தொடர்ச்சியான ஆட்சி. எம்ஜிஆர் போலவே திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து கோலோச்சி விடலாம் என பலரும் கருதுகின்றனர். சிலர் முயற்சித்தும் பார்க்கின்றனர். அவர்கள் எல்லாம், ‘மனித நேயம், ஏழைகளின் மீதான அன்பு, எதிரியாக இருந்தாலும் அரவணைக்கும் குணம், தன்னம்பிக்கை, நாடி வந்தோருக்கு வாரி வழங்குதல், தேடி வந்தோருக்கு பசிப்பிணி போக்குதல் என நினைத்து பார்க்க முடியாத மாபெரும் குணங்களே அவரது நிரந்தர வெற்றிக்கு காரணம் என்பதை அறியாதவர்கள்.

இன்றளவும் தமிழக அரசியல் அரங்கில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு இருக்கும் மரியாதை அளவிட முடியாதது. அவரது சமாதியை தினந்தோறும் சுற்றி வணங்கிச் செல்லும் மக்களே அதற்கு சாட்சி.

= வை.ரவீந்திரன்




Saturday, 18 September 2010

ராணிக்கே இதுதான் கதி










ராஜஸ்தான் சரித்திரத்தில் ஜெய்ப்பூர் மகாராணி காயத்ரி தேவிக்கு சிறப்பான ஒரு இடம் எப்போதுமே உண்டு. ‘மக்களின் மகாராணி’ என அழைக்கப்பட்டார் என கூறுவதோடு, மக்களால் அவர் மிகவும் நேசிக்கப்பட்டார் என்றே கூற வேண்டும். 1962 நடந்த பாராளுமன்றத் தேர்தலில் சுவராஜ்யா கட்சி சார்பாக ஜெய்பூர் பாராளுமன்ற தொகுதியில் மகாராணி போட்டியிட்டார்.


அந்த தேர்தலில் பதிவான 2,46,516, வாக்குகளில் 1,92,909 வாக்குகளை பெற்று கின்னஸ் சாதனையை காயத்ரி தேவி படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல, 1967, 1971 ஆகிய பாராளுமன்ற தேர்தல்களிலும் தொடர்ந்து மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்ற பெருமைக்கு உரியவர்.


மகாராணி காயத்ரி தேவிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர் மீது வரி மோசடி வழக்கு தொடர்ந்து சிறையில் தள்ளுவதற்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி முயற்சி செய்தால் அவருடைய செல்வாக்கு எந்த அளவுக்கு இருந்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.


மேற்கு வங்காளம் கூச்பிகார் ராஜா ஜிதேந்திர நாராயணனின் மகள் காயத்ரி தேவி. ஜெய்ப்பூர் மகாராஜா மான்சிங்கை 1940&ம் ஆண்டு மணந்தார். 12 வயது சிறுமியாக காயத்திரி தேவி இருந்தபோதே, அவருடைய அழகில் மான்சிங் மனதை பறி கொடுத்திருந்தார். அதனாலேயே, காத்திருந்து 3&வது மனைவியாக காயத்திரி தேவியை மான்சிங் மணந்து கொண்டார் என்றும் கூறுகிறார்கள்.



உலகின் முதல் பத்து அழகிகளில் ஒருவராக ‘வோக்’ பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டவர், மகாராணி காயத்திரி தேவி. அவருடைய ஒரே மகன் ஜகத் சிங், 1997&ம் ஆண்டு இறந்து விட்டார். பேரன் தேவராஜ், சொத்தில் பங்கு பெறுவதற்காக கோர்ட்டுகளில் பொழுதைக் கழித்துக் கொண்டு இருக்கிறார்.


மகாராஜா மான்சிங்கின் மூன்றாவது மனைவியாக காயத்திரி தேவி இருந்தார் அல்லவா? ஏற்கனவே, மகாராஜா மணந்து கொண்ட இரண்டு மூத்த தாரங்களின் மூலமாக பிரித்விராஜ் சிங், ஜெய்சிங் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவ்வளவும் இருந்து என்ன பயன்?


ராஜஸ்தான் ராஜ குடும்ப வழக்கப்படி, மகாராஜாவோ அல்லது மகாராணியோ இறந்து விட்டால், அவர்களை எரியூட்டிய இடத்தில் ‘சத்ரி’ என்ற பெயரில் நினைவிடம் கட்டுவார்கள். அதுபோல மகாராஜா மான்சிங் மற்றும் அவருடைய முதல் இரண்டு மனைவிகளான மருதார் அன்வர், கிஷோர் அன்வர் ஆகியோர்க்கு ‘சத்ரி’ கட்டப்பட்டுள்ளன.


ஆனால், தன்னுடைய 90&வது வயதில் மரணமடைந்த மகாராணி காயத்திரி தேவிக்கோ, அவர் மறைந்து ஒரு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ராஜ குடும்ப வாரிசுகள் யாருக்கும் அவருக்கு நினைவிடம் கட்டக் கூட நேரமில்லை. ராஜ குடும்ப சொத்துகளுக்கு உரிமை கொண்டாடுகிறார்களே தவிர, தங்களுடைய கடமையை செய்ய யாருமே தயாராக இல்லை.


ராஜபுத்திர வழக்கப்படி ராஜ குடும்பத்தினரின் மறைந்த தினத்தன்று அவர்களுடைய நினைவாக, அவர்களுடைய நினைவிடத்துக்கு மக்கள் வந்து விளக்கேற்றி வைப்பார்கள்.


உலகப் பேரழகியாகவும், மக்களின் உள்ளம் கவர்ந்த ஜெய்ப்பூர் மகாராணியாகவும் கின்னஸ் சாதனை புரியும் வகையில் மக்களின் பேராதரவை பெற்ற தலைவியாகவும் வலம் வந்த மகாராணி காயத்திரி தேவிக்கு நினைவிடம் கட்டக்கூட யாருமே இல்லை என்றால், இதை என்னவென்று சொல்லுவது?


இவவளவு சிறப்பு வாய்ந்த ஜெய்ப்பூர் மகாராணிக்கே இது தான் கதி.


றேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களாய் உருவாகி இருக்கும் நமது அரசியல்வாதிகள் மட்டுமல்ல. தன்னிலை மறந்து ஆடும் சாதாரண மனிதர்களும் இதில் இருந்து பாடம் படித்தால் நல்லது.

-நன்றி ‘தினமணி’

= வை.ரவீந்திரன்