டைரக்டர் டச்...
டைரக்டர் டச்னு சொல்லுவாங்க...
அது இவருக்காகவே வந்த வார்த்த.
மொதல்ல அசிஸ்டன்ட் டைரக்டர், கதாசிரியர்னு அறிமுகமாகி அப்பிடியே சில நிமிஷம் ஸ்கிரீன்லயும் தலய காட்டினாரு. '16 வயதினிலே' படத்தில நாட்டு வைத்தியராவும், 'சிவப்பு ரோஜாக்கள்'ல ஓட்டல் சர்வராவும் தல காட்டினவரு அடுத்த அஞ்சாறு வருஷத்தில கமல், ரஜினிக்கு ஈக்குவலா டஃப் குடுத்தாருன்னா அவரோட தெறமைய தவிர வேறென்ன..?
கிராமத்து டைரக்டர் பாரதிராஜாவோட 'டிக் டிக் டிக்', 'சிவப்பு ரோஜாக்கள்' 'ஒரு கைதியின் டைரி' மாதிரியான கிரைம் திரில்லர் படங்களுக்கு இவருதான் அஸ்திவாரம்.
'கன்னிப் பருவத்திலே', 'விடியும் வரை காத்திரு' மாதிரி படங்கள்ல இவரோட வில்லன் வேஷத்த சினிமா ரசிகருங்களால மறக்க முடியுமா?
ஆரம்ப காலத்தில இவருக்கு டப்பிங் குரல்தான். 'புதிய வார்ப்புகள்', 'பாமா ருக்மணி' எல்லாம் இரவல் குரல்தான். 'ஒரு கை ஓசை' படத்தில வாய் பேச முடியாதவராவே நடிச்சிருப்பாரு. ''மவுன கீதங்கள்' தான் இவரோட சொந்த குரலில் வந்த மொத படம்.
அதுக்குள்ள பெஸ்ட் வசனகர்த்தா, பெஸ்ட் நடிகர்னு விருதுகள வாங்கிக் குவிச்சிட்டாரு...
அதுக்குப் பிறவு அவரோட காலம் தமிழ் சினிமாவோட வசந்த காலம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு கூடவே இசை இப்படி ஒருத்தரே பல அவதாரம் எடுத்தது எல்லாம் சினிமாவுல அந்த காலகட்டம் தான்.
1980களில் பவர் கண்ணாடி போட்டுக்கிட்டு ஒருத்தரு சினிமா ஹீரோவா ஃபேமசாவுறது எல்லாம் நெனச்சிப் பார்க்க முடியுமா? அவரால மட்டுந்தான் முடியும். சினிமா ஹீரோவுக்கே தேவையான டான்சும் அவருக்கு சுத்தமா வராது...
இவரு ஒரு ரூட்டுன்னா, அந்த சமயத்தில டி.ஆர். இன்னொரு ரூட்டு. ரெண்டு பேரோட அதகளத்தில கமல், ரஜினி படங்களே தயங்கின காலம் உண்டு. அவங்களுக்கு ஈக்குவலா இவங்களுக்கும் ரசிகர் பட்டாளம் உண்டு.
'இன்று போய் நாளை வா', 'முந்தானை முடிச்சி', 'சின்ன வீடு', 'அந்த ஏழு நாட்கள்', 'இது நம்ம ஆளு', 'எங்க சின்ன ராசா', 'தாவணிக் கனவுகள்', 'சுந்தர காண்டம்' 'வீட்ல விஷேசங்க' இப்பிடி இவரோட சூப்பர் டூப்பர் ஹிட் ஏராளம்.
தமிழ் சினிமாவில மொத மொத ஒரு கோடிக்கு யாவாரம் ஆன படம் 'தாவணிக் கனவுகள்'னு சொல்லுவாங்க... அதில் அவரோட குருநாதர் பாரதிராஜாவையும் நடிக்க வச்சிருப்பாரு.
ரஜினியோட சேர்ந்து நடிச்ச 'நான் சிவப்பு மனிதன்' ரிலீஸ் ஆனப்ப ரெண்டு ரசிகருங்க பிரச்னையால தியேட்டர்காரங்க தலைய பிடிச்சிக்கிட்டது தனிக்கத.
இருபது பிளஸ் வயசிலருந்த கோவை சரளாவுக்கு அம்மா வேஷம் கட்டி பார்த்தவர். எல்லோரும் கவர்ச்சியாகவே பார்த்த சில்க் ஸ்மிதாவுக்கு புடவைய கட்டி தனக்கு ஜோடியாக்கி ஹீரோயினா அழகு பார்த்தவர்.
சினிமாவோட சிம்ம சொப்பனம் சிவாஜி கணேசனை 'தாவணி கனவுகள்' படத்துல வேற கோணத்தில காமிச்ச துணிச்சல் காரர். ஒரு படம்னாலும் சிவாஜி சினிமா வாழ்க்கையில இவரு மறக்க முடியாத மனிதர்.
நாலு லைன் கதய, சுவாரஸ்யமா திரைக்கதயா மாத்தி, சுவையான காட்சிங்களோட ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் குடுக்கிற சிறந்த திரைக்கதையாசிரியர் இந்தியாவிலயே இவரு ஒருத்தரு தான்.
அதுக்கு நல்ல உதாரணம் எது தெரியுமா? எம்ஜிஆர் நடிச்சி பாதியில விட்ட 'அண்ணா நீ என் தெய்வம்' படத்தோட ஸீன்கள மட்டும் வச்சிக்கிட்டு அப்பிடியே தன் பாணிக்கு மாத்தி சூப்பர் ஹிட் படமா குடுத்த 'அவசர போலீஸ் 100' படம்.
இவரைப்போல இவரது சிஷ்யர்களான பாண்டிய ராஜன், பார்த்திபனும் நடிகர் கம் இயக்குநர்கள்...
இவர் படத்துல எல்லாமே 'நச்' ஸீன்கள் தான். அதிலயும் சூப்பரா ரசிகர்களை கவருத மாதிரி வார ஸீன்ல 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'னு தன்னோட பெயரை போடுறது இவரோட ஸ்டைல்.
இவரோட திரைக்கதையை பார்த்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனே கூப்பிட்டு குடுத்த இந்தி படம் 'ஆக்ரி ரஸ்தா...'
இவரோட 'இன்று போய் நாளை வா' படத்தோட ரீ மேக் தான் சந்தானம் நடிச்ச 'கண்ணா லட்டு திங்க ஆசையா' இவர் படத்துக்கு தனியா காமெடியன் அவசியமில்ல. இவரே திருட்டு முழியோட பண்ற சேட்டைகளை போதுங்கிற அளவுக்கு இருக்கும்.
இவரு ஒரு இசையமைப்பாளரும் கூட... 'இது நம்ம ஆளு' படத்துக்கு இசையும் இவர் தான்...! அந்த படத்தில "பச்ச மல சாமி ஒண்ணு உச்சி மல ஏறுதுன்னு..." பாட்டும் இவரு பாடுனது தான்...
தமிழ் சினிமா வரலாற எழுதினா, இவருக்குன்னு பெரிய தனி அத்தியாயம் உண்டு. முருங்கைக் காய், சின்ன வீடு மாதிரி நெறைய விஷயங்கள ஒரே வார்த்தையில புரிய வச்ச ரச வாத வித்தைக்கு சொந்தக்காரர்.
எம்ஜிஆர் தன்னோட வாயால, தன்னோட வாரிசுன்னு சொன்ன ஒரே ஆளு இவர் மட்டுந்தான்.
எம்ஜிஆர மாதிரியே தமிழ் சினிமாவில இவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னோட பள்ளிப்பருவ ஹீரோ இவரு. என்னையே 'எங்க சின்ன ராசா' வெளியான சமயத்தில 'சின்ராசு'ன்னு கூப்பிட்ட நண்பர்களும் உண்டு...
திரையுலகை தாண்டி 'பாக்யா'ங்கிற பெயரில் பல்சுவை வார இதழ் பத்திரிகையையும் 30 வருஷத்துக்கும் மேல் நடத்துன பத்திரிகையாசிரியர். குட்டிக் கதைகளோட அவரு சொல்ற கேள்வி பதில் பகுதி பிரசித்தம்.
பாமா ருக்மணி' படத்தில் இவரோட நடிச்ச பிரவீணா முதல் மனைவி. அவர் மறைஞ்சதும் 'டார்லிங் டார்லிங் டார்லிங்' படத்தில் நடிச்ச பூர்ணிமாவை இரண்டாவது மனைவியா கட்டிகிட்டாரு. நடிகர் சாந்தனு, இவரோட மகன்
2006ல் வந்த 'பாரிஜாதம்' பட ஹீரோயின் சரண்யா, இவரோட மகள்.
இன்றைய தலைமுறை நடிகர்கள் வரைக்கும் அப்பா கேரக்டரிலும் நடிச்சிட்டாரு. இறக்கும் வரையிலும் ஆக்டிவா வாழ்ந்து மறைந்த எம்ஜிஆரின் 'கலை உலக வாரிசு' 'புரட்சி திலக'த்துக்கு அஞ்சலி...
#நெல்லை_ரவீந்திரன்


