“சாந்தா, ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்..? உன் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே...”
“என் இசை... உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்...”
“தேனோடு சேர்ந்த தெள்ளமுது, கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல். இந்த சிங்கார வேலன் சன்னதியில் நம் சங்கீத அருவிகள் ஒன்று சேரட்டும்... பாடு சாந்தா, பாடு...”
‘கொஞ்சும் சலங்கை’ படத்தில் ஜெமினி, சாவித்திரி உரையாடலை தொடர்ந்து, ‘சிங்கார வேலனே தேவா...’ என தொடரும் அந்த குரல்..., சுப்பையா நாயுடு இசையில், நாதஸ்வர சக்கரவர்த்தி காருகுறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வரத்தோடு பின்னி பிணைந்து..., இன்றும் மனதை மயக்குகிறது.
1962ல் வெளியான அந்த படத்தில், பத்து பாடல்கள் வரை உண்டு. கந்த சஷ்டி பாடிய சூலமங்கலம் ராஜலட்சுமியும் கூட, வள்ளலாரின் ‘ஒருமையுடன் உனது திருவடி நினைக்கின்ற...’ என்ற முருகன் பாடல் பாடி இருப்பார். ஆனால், இன்றும் சிங்கார வேலன் தான், நினைவில் நிற்கிறது, அந்த காந்தர்வ குரலால்.
அந்த பாடலுக்கு ஐந்தாண்டுக்கு முன்பே, தமிழில் அறிமுகமாகி இருந்தாலும்... ஒரே ஆண்டில் ஆறு மொழிகளில் நூறு பாடல்களை பாடி இருந்தாலும்... சிங்கார வேலன் அருளில் தான் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
அறிமுகமான கால கட்டத்தில், லீலா, ஜிக்கி, சுசீலா என பின்னணி பாடகிகள் பலர் இருந்ததால், வாய்ப்புகள் அரிதானது. ஆனாலும், 1960களில் ஒலித்த குரலின் இனிமை, குழைவு, வசீகரம் ஆறு தசாப்தங்களை கடந்தும் அப்படியே இருந்தது, இறைவன் அளித்த வர பிரசாதம்.
1960களில் தொடங்கி, 1970களின் பிற்பகுதி வரை டிஎம்எஸ் - சுசிலா ஜோடிக்குரல் தான் பிரதானம். எம்ஜிஆரின் 50வது படமான ‘நல்லவன் வாழ்வான்’ (1961) படத்தில் லீலா, சுசீலா பாடியவை, நாயகிக்கானவை. இவர் பாடிய ‘அடிச்சிருக்கு நல்லதொரு சான்சு...’ நம்பியாருக்கான ஜோடிப்பாடல்.
சுமார் இருபது ஆண்டுகள், இதுபோன்றே இருந்தாலும், ஜெமினி போன்ற பிற நடிகர்களின் பட வாய்ப்புகளில் நிறைவாகவே பாடினார்.
தேனிலவு படத்தின் “ஓஹோ எந்தன் பேபி, நீ வாராய் எந்தன் பேபி...’ போலீஸ்காரன் மகள் படத்தில் ‘இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலை கேட்கிறேன்...’ என பல பாடல்கள் நிறைவானவை.
1970களின் இறுதியில் தொடங்கியது, இவரது இசை சாம்ராஜ்யம். அடுத்த 25 ஆண்டுகள், இவரது குரலில் தான் தமிழ் திரை இசை வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல், இவரது கால்ஷீட் கிடைக்காமல், அறிமுகமாகி நறுமணம் வீசிய மலர்கள் தான் சித்ரா, ஸ்வர்ணலதா.
இளையராஜா அறிமுக படமான அன்னக்கிளி, ஸ்ரீதேவியின் அறிமுக பாடலான 16 வயதினிலே ‘செந்தூரப்பூவே...’, ராதிகா அறிமுக பாடலான கிழக்கே போகும் ரயில் ‘பூவரசம் பூ பூத்தாச்சி...’ ராதா அறிமுகமான அலைகள் ஓய்வதில்லை, ‘புத்தம் புது காலை...’ இப்படி அடுத்த தலைமுறைகளுக்கு பாடியவர், அதற்கு இளம் தலைமுறை அனிருத் இசையிலும் வேலையில்லா பட்டதாரியில் ‘அம்மா... அம்மா...’ பாடலையும் பாடினார்.
ஜெயலலிதாவுக்கும் அவர் தாய் சந்தியாவுக்கும், தேவிகாவுக்கும் அவர் மகள் கனகாவுக்கும், லட்சுமிக்கும் அவர் மகள் ஐஸ்வர்யாவுக்கும் பின்னணி பாடி இருக்கிறார்.
நான்கு, ஐந்து தலைமுறைகளுக்காக பாடிய இவரது பாடல்களில் எஸ்பிபி உடனான பாடல்கள் அனைத்தும் தேனில் தோய்த்த பலாச்சுளைகள். எஸ்பிபியை திரையில் பின்னணி பாட வருமாறு அறிவுறுத்தியவரே இவர் தான். இருவரின் குரல்களும் மாயாஜாலம். இசைக்கும், பாடல் வரிகளுக்கும் உயிருட்டியவை. ‘ஆவாரம்பூ’ போன்ற சில படங்கள் இருவரின் பாடல்களாலேயே இன்றளவும் பிரபலமானவை.
‘சிங்கார வேலனே தேவா...’ நாயனத்தோடு இயைந்து நின்றது போலவே, ‘அழகு மலராட அபிநயங்கள் சூழ...’ பரதத்தோடு இயைந்து நிற்கும். சலங்கை ஒலி ‘ஓம் நமச்சிவாயா...’வும் அப்படித்தான். இந்த பாடல் வாயிலாக எஸ்.பி.ஷைலஜா என்ற பின்னணி பாடகிக்கே, பின்னணி பாடிய பெருமை பெற்றவர். அவர்கள் ‘காற்றுக்கென்ன வேலி...’ பாடல் பொங்கி வரும் பிராவக குரல்.
வரிகளின் ஊடே, சிணுங்கல், சிருங்காரம், செல்ல சிரிப்பு இப்படி சில விஷயங்களை செய்து பாடலை உயிர்ப்பிப்பது இவரும் எஸ்பிபியும் தான். இருவர் பாடல்களும் மனிதனின் எந்த சூழலையும் மாற்றும் வித்தை அறிந்தவை.
எந்த இடத்தில் எஸ்பிபி சில்மிஷங்கள் செய்வார் என்பதை அறிந்து இவர் பாடியதால், இருவர் குரலை தனித்தனியே ரெக்கார்டிங் செய்து பின், இசையுடன் கோர்த்தாலும், நெருடல் இருக்காது. அப்படித்தான், இருவரின் ஜோடி பாடல்கள் பல, 1980களில் உருவாகின.
தனது மார்கண்டேய குரலை என்றும் 16ஆக வைத்திருந்தாலும், 6 வயது குழந்தை தொடங்கி 60 வயது மூதாட்டி வரைக்கும் குரல் மாற்றும் வித்தைக்காரர். 1960களில் எம்.எஸ். ராஜேஸ்வரி தான், குழந்தை நட்சத்திரங்களுக்கு பின்னணி பாடுவார். ஆனால், குழந்தைக்கும் குமரிக்கும் ஒரே நேரத்தில் குரல் கொடுத்தவர்.
‘டூத் பேஸ்ட் இருக்கு, டவல் இருக்கு குளிச்சிடு மாமா...’ ‘டாடி டாடி ஓ மை டாடி, உனை கண்டாலே ஆனந்தமே..’ என குழந்தை குரலில் கொஞ்சி பாடியவர். தல அஜித்தின் மனைவி ஷாலினி, பேபி ஷாலினியாக, 1980களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது, அவருக்காக பாடியவர்.
பல மொழிகளில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பாடல்களை பாடி, தேசிய விருது, பல மாநிலங்களின் விருதுகள் என வாங்கி குவித்தவர். மிக, மிக தாமதமாக 2013ல் ‘பத்ம பூஷண்’வழங்கியபோது, ஏற்க மறுத்தவர். படங்களிலும் மேடை கச்சேரிகளும் பாடியவர், பத்தாண்டுக்கு முன், இளம் தலைமுறைக்கு வழி விடுவதாக கூறி, பாடுவதை நிறுத்திக் கொண்டார்.
தமிழ் ரசிகர்களின் முப்பொழுதும் உடன் பயணிக்கும் கற்கண்டு பாடல்களில் இவரது பாடல்களே முதன்மையானவை. அவை ஒலித்துக் கொண்டிருக்கும் வரை, வானம்பாடியாக வாழ்ந்திருப்பார்.
#நெல்லை_ரவீந்திரன்

No comments:
Post a Comment