Monday, 13 July 2026

புரட்சி தலைவரை தேடிச்சென்ற புரட்சி திலகம்

 டைரக்டர் டச்...

டைரக்டர் டச்னு சொல்லுவாங்க...

அது இவருக்காகவே வந்த வார்த்த. 

மொதல்ல அசிஸ்டன்ட் டைரக்டர், கதாசிரியர்னு அறிமுகமாகி அப்பிடியே  சில நிமிஷம் ஸ்கிரீன்லயும் தலய காட்டினாரு. '16 வயதினிலே' படத்தில நாட்டு வைத்தியராவும், 'சிவப்பு ரோஜாக்கள்'ல ஓட்டல் சர்வராவும் தல காட்டினவரு அடுத்த அஞ்சாறு வருஷத்தில கமல், ரஜினிக்கு ஈக்குவலா டஃப் குடுத்தாருன்னா அவரோட தெறமைய தவிர வேறென்ன..?

கிராமத்து டைரக்டர் பாரதிராஜாவோட 'டிக் டிக் டிக்', 'சிவப்பு ரோஜாக்கள்' 'ஒரு கைதியின் டைரி'  மாதிரியான கிரைம் திரில்லர் படங்களுக்கு இவருதான் அஸ்திவாரம்.

 'கன்னிப் பருவத்திலே', 'விடியும் வரை காத்திரு' மாதிரி படங்கள்ல இவரோட வில்லன் வேஷத்த சினிமா ரசிகருங்களால மறக்க முடியுமா?

ஆரம்ப காலத்தில இவருக்கு டப்பிங் குரல்தான். 'புதிய வார்ப்புகள்', 'பாமா ருக்மணி' எல்லாம் இரவல் குரல்தான். 'ஒரு கை ஓசை' படத்தில வாய் பேச முடியாதவராவே நடிச்சிருப்பாரு. ''மவுன கீதங்கள்' தான் இவரோட சொந்த குரலில் வந்த மொத படம். 

அதுக்குள்ள பெஸ்ட் வசனகர்த்தா, பெஸ்ட் நடிகர்னு விருதுகள வாங்கிக் குவிச்சிட்டாரு...

அதுக்குப் பிறவு அவரோட காலம் தமிழ் சினிமாவோட வசந்த காலம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு கூடவே இசை இப்படி ஒருத்தரே பல அவதாரம் எடுத்தது எல்லாம் சினிமாவுல அந்த காலகட்டம் தான். 

1980களில் பவர் கண்ணாடி போட்டுக்கிட்டு ஒருத்தரு சினிமா ஹீரோவா ஃபேமசாவுறது எல்லாம் நெனச்சிப் பார்க்க முடியுமா? அவரால மட்டுந்தான் முடியும். சினிமா ஹீரோவுக்கே தேவையான டான்சும் அவருக்கு சுத்தமா வராது...

இவரு ஒரு ரூட்டுன்னா, அந்த சமயத்தில டி.ஆர். இன்னொரு ரூட்டு. ரெண்டு பேரோட அதகளத்தில கமல், ரஜினி படங்களே தயங்கின காலம் உண்டு. அவங்களுக்கு ஈக்குவலா இவங்களுக்கும் ரசிகர் பட்டாளம் உண்டு. 

'இன்று போய் நாளை வா', 'முந்தானை முடிச்சி', 'சின்ன வீடு', 'அந்த ஏழு நாட்கள்', 'இது நம்ம ஆளு', 'எங்க சின்ன ராசா', 'தாவணிக் கனவுகள்', 'சுந்தர காண்டம்' 'வீட்ல விஷேசங்க' இப்பிடி இவரோட சூப்பர் டூப்பர் ஹிட் ஏராளம். 

தமிழ் சினிமாவில மொத மொத ஒரு கோடிக்கு யாவாரம் ஆன படம் 'தாவணிக் கனவுகள்'னு சொல்லுவாங்க... அதில் அவரோட குருநாதர் பாரதிராஜாவையும் நடிக்க வச்சிருப்பாரு.

ரஜினியோட சேர்ந்து  நடிச்ச 'நான் சிவப்பு மனிதன்' ரிலீஸ் ஆனப்ப ரெண்டு ரசிகருங்க பிரச்னையால தியேட்டர்காரங்க தலைய பிடிச்சிக்கிட்டது தனிக்கத.

இருபது பிளஸ் வயசிலருந்த கோவை சரளாவுக்கு அம்மா வேஷம் கட்டி பார்த்தவர். எல்லோரும் கவர்ச்சியாகவே பார்த்த சில்க் ஸ்மிதாவுக்கு புடவைய கட்டி தனக்கு ஜோடியாக்கி ஹீரோயினா அழகு பார்த்தவர். 

சினிமாவோட சிம்ம சொப்பனம் சிவாஜி கணேசனை 'தாவணி கனவுகள்' படத்துல வேற கோணத்தில காமிச்ச துணிச்சல் காரர். ஒரு படம்னாலும் சிவாஜி சினிமா வாழ்க்கையில இவரு மறக்க முடியாத மனிதர்.

நாலு லைன் கதய, சுவாரஸ்யமா திரைக்கதயா மாத்தி, சுவையான காட்சிங்களோட ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் குடுக்கிற சிறந்த திரைக்கதையாசிரியர் இந்தியாவிலயே  இவரு ஒருத்தரு தான். 

அதுக்கு நல்ல உதாரணம் எது தெரியுமா? எம்ஜிஆர் நடிச்சி பாதியில விட்ட 'அண்ணா நீ என் தெய்வம்' படத்தோட ஸீன்கள மட்டும் வச்சிக்கிட்டு அப்பிடியே தன் பாணிக்கு மாத்தி சூப்பர் ஹிட் படமா குடுத்த 'அவசர போலீஸ் 100' படம்.

இவரைப்போல இவரது சிஷ்யர்களான பாண்டிய ராஜன், பார்த்திபனும் நடிகர் கம் இயக்குநர்கள்...

இவர் படத்துல எல்லாமே 'நச்' ஸீன்கள் தான். அதிலயும் சூப்பரா ரசிகர்களை கவருத மாதிரி வார ஸீன்ல 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'னு தன்னோட பெயரை போடுறது இவரோட ஸ்டைல். 

இவரோட  திரைக்கதையை பார்த்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனே கூப்பிட்டு குடுத்த இந்தி படம் 'ஆக்ரி ரஸ்தா...'

இவரோட 'இன்று போய் நாளை வா' படத்தோட ரீ மேக் தான் சந்தானம் நடிச்ச 'கண்ணா லட்டு திங்க ஆசையா' இவர் படத்துக்கு தனியா காமெடியன் அவசியமில்ல. இவரே திருட்டு முழியோட பண்ற சேட்டைகளை போதுங்கிற அளவுக்கு இருக்கும்.

இவரு ஒரு இசையமைப்பாளரும் கூட... 'இது நம்ம ஆளு' படத்துக்கு இசையும் இவர் தான்...! அந்த படத்தில "பச்ச மல சாமி ஒண்ணு உச்சி மல ஏறுதுன்னு..." பாட்டும் இவரு பாடுனது தான்... 

தமிழ் சினிமா வரலாற எழுதினா, இவருக்குன்னு பெரிய தனி அத்தியாயம் உண்டு. முருங்கைக் காய், சின்ன வீடு மாதிரி நெறைய விஷயங்கள ஒரே வார்த்தையில புரிய வச்ச ரச வாத வித்தைக்கு சொந்தக்காரர். 

எம்ஜிஆர் தன்னோட வாயால, தன்னோட வாரிசுன்னு சொன்ன ஒரே ஆளு இவர் மட்டுந்தான். 

எம்ஜிஆர மாதிரியே தமிழ் சினிமாவில இவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னோட பள்ளிப்பருவ ஹீரோ இவரு.  என்னையே 'எங்க சின்ன ராசா' வெளியான சமயத்தில 'சின்ராசு'ன்னு கூப்பிட்ட நண்பர்களும் உண்டு...

திரையுலகை தாண்டி 'பாக்யா'ங்கிற பெயரில் பல்சுவை வார இதழ் பத்திரிகையையும் 30 வருஷத்துக்கும்  மேல் நடத்துன பத்திரிகையாசிரியர். குட்டிக் கதைகளோட அவரு சொல்ற கேள்வி பதில் பகுதி பிரசித்தம்.

பாமா ருக்மணி' படத்தில் இவரோட நடிச்ச பிரவீணா முதல் மனைவி. அவர் மறைஞ்சதும் 'டார்லிங் டார்லிங் டார்லிங்' படத்தில் நடிச்ச பூர்ணிமாவை இரண்டாவது மனைவியா கட்டிகிட்டாரு. நடிகர் சாந்தனு, இவரோட மகன்

2006ல் வந்த 'பாரிஜாதம்' பட ஹீரோயின் சரண்யா, இவரோட மகள்.

இன்றைய தலைமுறை நடிகர்கள் வரைக்கும் அப்பா கேரக்டரிலும் நடிச்சிட்டாரு. இறக்கும் வரையிலும் ஆக்டிவா வாழ்ந்து மறைந்த எம்ஜிஆரின் 'கலை உலக வாரிசு' 'புரட்சி திலக'த்துக்கு அஞ்சலி...

#நெல்லை_ரவீந்திரன்




காலமெல்லாம் காதல் வாழ்க

 தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடக்கையில் தவிக்குது மனசு தவிக்குது...

டைப் அடிக்கும் ஓவியமே கை பிடிப்பாயோ, உன்னால வாழுறேன்...

இது மாதிரியான பாட்டுகளும் அவை ஒலித்த சூழ்நிலைகளும் மனதில் அலை மோதி, நினைவுகளில் நீர் தெளித்து எழுப்பி விட்டன, அந்த இரண்டு பெண்களின் கிசுகிசுப்பு உரையாடல்.

பெரிய தொட்டியில் நிரப்பி இருக்கும் தண்ணீர் அல்லது கிணற்று தண்ணீர் எடுக்க காலை, மாலை இரு வேளையும் செல்வது பெண்கள் வழக்கம், குறிப்பாக இளங்குமரிகள். காலையில் ஊர் விழிக்க நேரமாகும், மாலைப்பொழுது தான் ஆண்டாண்டு காலமாகவே காதலுக்கே உண்டான பொழுது. கடை வீதிகளும் சுறுசுறுப்பாகி, மங்கைகளுக்கு வலை வீசும் பாடல்களும் ஒலிபரப்பாகும்.

90களில் சினிமா பாடல்களை ஆடிேயோ கேசட்டுகளில் பதிவு செய்து தரும் ரிக்கார்டிங் சென்டர்கள் அதிகம் உண்டு. அங்கு பாடல்களை தேர்ந்தெடுத்து பதிவு செய்து வந்து, டெய்லர் கடைகளில் தொடங்கி, பலவிதமான கடைகளிலும் பலவிதமான பாடல்கள் வாயிலாக யாரோ ஒருவர் யாரோ ஒருவருக்கு வலை வீசிக்கொண்டு இருப்பார். 

சம்பந்தப்பட்ட இருவருக்கும் தான் அது புரியும். பரவசப்படுத்தும். சில தருணங்களில் நேயர் விருப்பம் போல காதலர் விருப்பமாக பாடல் ஒலிக்கும். டேப் ரிகார்டரில் ரீவைண்ட் பட்டனும் ஆடியோ கேசட்டின் நாடாவும் தேயும் அளவுக்கு ஒலித்த பாடல்களும் உண்டு...

"சுமதி நாமஸ்தயே...". என்ற சிங்கார வேலன் பாடல்

"தேவி ஸ்ரீதேவி..." என்ற வாழ்வே மாயம் பாடல்கள் எல்லாம் துணிந்த காதலர்களையும்

'தண்ணி குடம் எடுத்து...' மாதிரியான  பாடல்கள் எல்லாம் மறைமுக குறிப்பால் உணர்த்தும் காதலர்களையும் அடையாளப்படுத்திக் கொண்டிருந்தவை.

‘சுவரில்லாத சித்திரம்’ படத்தில் சுதாகருக்கு இடம் தரும் டெய்லர் கவுண்டமணி போலவும் சில பரோபகாரிகளும் உண்டு. சுதாகரிடம் தோற்று போகும் பாக்யராஜ்களும் உண்டு. சில காதலர்களை பார்க்கும்போது, ‘பல மணி நேரமா எப்பிடி இப்பிடி பார்த்துக்கொண்டே இருக்காங்க..? என்னதான் பேசிகிட்டு இருப்பாங்க..?’ இப்படி எல்லாம் மனதில் தோன்றும்.

ஊரில் பணி புரிந்த ஒரு இடத்தில், கேஷியர் அண்ணனை தேடி, சரியாக ஐந்து மணிக்கு ஒரு பெண் வந்து விடுவார். அப்புறம்  ஒரு மணி நேரத்துக்கும் மேல் அவர்களை பார்க்க முடியாது. சில நாட்கள் கழித்து தான் தெரிந்தது, பக்கத்தில் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத ஒரு தெருவில், படங்களில் டி.ராஜேந்தரின் காதல் போல ‘ரொமான்ஸ்’ செய்து கொண்டு இருந்தனர். அடுத்தடுத்த நாட்களில் கடை வாசலிலேயே லவ்விய அவர்கள், திடீரென ஒருநாள் திருமணம் செய்தனர்.

இந்த திருமணங்களை ஊரில், ‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிகிட்டான்’, 'கூட்டிட்டு ஓடிட்டாங்க...' என்பார்கள். ஒரு சில காதலில், கத்தரிக்காய் முற்றி கடைத்தெரு  வரும் முன், இரு வீட்டார் பேசி, முறைப்படி முடித்து வைத்து விடுவார்கள். அவர்கள் ‘மனதில் நின்ற காதலியே, மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும்...’ என பாடிக்கொண்டிருப்பார்கள்.

இந்த காதல்கள் எல்லாம் எங்கு முளை விடும், துளிர் விடும் என்பதெல்லாம் நீண்ட கால கேள்விகள். சனி, ஞாயிறு நாட்களில் தியேட்டர்களிலும் ரொமான்ஸ் நடக்கும். சீட் நிறைந்து, எக்ஸ்ட்ரா சேர் போட்டு, நின்று கொண்டு படம் பார்க்கும் அளவுக்கு கூட்டம் இருந்தாலும், கண்களாலே கைது செய்து கொண்டு இருப்பார்கள்.  

பாபநாசம் மலையில் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை விழாவுக்காக நாட்கணக்கில் மக்கள் போய் தங்குவார்கள். அங்கும் கூட, தாமிரபரணி நதிக்கரையில் புதிய காதலுக்கு நாற்றாங்கால் பரப்புவதோடு, காதல் திருமணத்துக்கான அச்சாரமும் நடைபெறும், மறு மாதமே ஆவணி, கூடுதல் வசதி.

பின்னாளில், ஒரு பெண் மையல் கொண்டதை கூட, அறியாமல் இருந்திருக்கிறேன். அவருடன் இருந்த சில பெண்கள் சொன்ன பிறகுதான், அதை அறிந்தேன். எப்படி எங்கு காதல் துளிரும்? காதல் பார்வை எது? இப்படி காதலின் அடிப்படை விஷயங்கள் கூட புரியாத ஜடமாக இருந்திருக்கிறேன். ஆனால், காதலர்களை சரியாக இனம் காண தெரிந்தது எப்படி என்று தான் இன்று வரை விளங்கவில்லை.

ஷாப்பிங் மாலில் பில்லிங்கில் நிறைய பேர் வரிசையில் நிற்க, கடையின் மிக பரபரப்பான வேளையில், அந்த இரு பெண்களின் கிசுகிசுப்பும் இப்படித்தான் காதில் விழுந்தது. 

‘எனக்குல்லாம் ஆளு இருக்குப்பா?’ அந்த பெண் சொல்ல, இந்த பெண், அவனா... இவனா... அந்த கருப்பனா... இப்படி விசாரிக்க... ‘இல்லை.. இல்லை.. ச்சி ச்சி அவன்லாம் இல்ல..’ என சொல்லி விட்டு ‘அது சஸ்பென்ஸ்...’ என்றார். 

பில் போட்டுக்கொண்டே அந்த பெண்கள் பேசிய கிசுகிசுப்பும், காதல் நினைவில் அவர்களின் முக பூரிப்பும் எனக்கு டெய்லர், கேஷியர் அண்ணன், சொரிமுத்து அய்யன் கோவில், தியேட்டர் என எதையெல்லாமோ நினைவூட்டியது. நண்பகலின் பசி வேளையில் காதலை ருசித்துக் கொண்டிருந்தேன்.

குறுந்தொகையின் ‘செம்புலப் பெயல் நீர் போல...’ என்ற இலக்கிய காலம் தொடங்கி, இப்போதும் எப்போதும் காதலுக்கு காலம், நேரம் ஏது? அழிவும் ஏது?

#நெல்லை_ரவீந்திரன்



விண்ணோக்கி பறந்த வானம்பாடி

 “சாந்தா, ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்..? உன் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே...”

“என் இசை... உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்...”

“தேனோடு சேர்ந்த தெள்ளமுது, கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல். இந்த சிங்கார வேலன் சன்னதியில் நம் சங்கீத அருவிகள் ஒன்று சேரட்டும்... பாடு சாந்தா, பாடு...”

‘கொஞ்சும் சலங்கை’ படத்தில் ஜெமினி, சாவித்திரி உரையாடலை தொடர்ந்து, ‘சிங்கார வேலனே தேவா...’ என தொடரும் அந்த குரல்..., சுப்பையா நாயுடு இசையில், நாதஸ்வர சக்கரவர்த்தி காருகுறிச்சி  அருணாசலத்தின் நாதஸ்வரத்தோடு பின்னி பிணைந்து..., இன்றும் மனதை மயக்குகிறது.

1962ல் வெளியான அந்த படத்தில், பத்து பாடல்கள் வரை உண்டு. கந்த சஷ்டி பாடிய சூலமங்கலம் ராஜலட்சுமியும் கூட, வள்ளலாரின் ‘ஒருமையுடன் உனது திருவடி நினைக்கின்ற...’ என்ற முருகன் பாடல் பாடி இருப்பார். ஆனால், இன்றும் சிங்கார வேலன் தான், நினைவில் நிற்கிறது, அந்த காந்தர்வ குரலால். 

அந்த பாடலுக்கு ஐந்தாண்டுக்கு முன்பே, தமிழில் அறிமுகமாகி இருந்தாலும்... ஒரே ஆண்டில் ஆறு மொழிகளில் நூறு பாடல்களை பாடி இருந்தாலும்... சிங்கார வேலன் அருளில் தான் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

அறிமுகமான கால கட்டத்தில், லீலா, ஜிக்கி, சுசீலா என பின்னணி பாடகிகள் பலர் இருந்ததால், வாய்ப்புகள் அரிதானது. ஆனாலும், 1960களில் ஒலித்த குரலின் இனிமை, குழைவு, வசீகரம் ஆறு தசாப்தங்களை கடந்தும் அப்படியே இருந்தது, இறைவன் அளித்த வர பிரசாதம். 

1960களில் தொடங்கி, 1970களின் பிற்பகுதி வரை டிஎம்எஸ் - சுசிலா ஜோடிக்குரல் தான் பிரதானம். எம்ஜிஆரின் 50வது படமான ‘நல்லவன் வாழ்வான்’ (1961) படத்தில் லீலா, சுசீலா பாடியவை, நாயகிக்கானவை. இவர் பாடிய ‘அடிச்சிருக்கு நல்லதொரு சான்சு...’ நம்பியாருக்கான ஜோடிப்பாடல். 

சுமார் இருபது ஆண்டுகள், இதுபோன்றே இருந்தாலும், ஜெமினி போன்ற பிற நடிகர்களின் பட வாய்ப்புகளில் நிறைவாகவே பாடினார். 

தேனிலவு படத்தின் “ஓஹோ எந்தன் பேபி, நீ வாராய் எந்தன் பேபி...’ போலீஸ்காரன் மகள் படத்தில் ‘இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலை கேட்கிறேன்...’ என பல பாடல்கள் நிறைவானவை. 

1970களின் இறுதியில் தொடங்கியது,  இவரது இசை சாம்ராஜ்யம். அடுத்த 25 ஆண்டுகள்,  இவரது குரலில் தான் தமிழ் திரை இசை வெள்ளம் கரை புரண்டு ஓடியது. 

பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல், இவரது கால்ஷீட் கிடைக்காமல், அறிமுகமாகி நறுமணம் வீசிய மலர்கள் தான் சித்ரா, ஸ்வர்ணலதா. 

இளையராஜா அறிமுக படமான அன்னக்கிளி, ஸ்ரீதேவியின் அறிமுக பாடலான 16 வயதினிலே ‘செந்தூரப்பூவே...’, ராதிகா அறிமுக பாடலான கிழக்கே போகும் ரயில் ‘பூவரசம் பூ பூத்தாச்சி...’ ராதா அறிமுகமான அலைகள் ஓய்வதில்லை, ‘புத்தம் புது காலை...’ இப்படி அடுத்த தலைமுறைகளுக்கு பாடியவர், அதற்கு இளம் தலைமுறை அனிருத் இசையிலும் வேலையில்லா பட்டதாரியில்  ‘அம்மா... அம்மா...’ பாடலையும் பாடினார்.

ஜெயலலிதாவுக்கும் அவர் தாய் சந்தியாவுக்கும், தேவிகாவுக்கும் அவர் மகள் கனகாவுக்கும், லட்சுமிக்கும் அவர் மகள் ஐஸ்வர்யாவுக்கும் பின்னணி பாடி இருக்கிறார்.

நான்கு, ஐந்து தலைமுறைகளுக்காக பாடிய இவரது பாடல்களில் எஸ்பிபி உடனான பாடல்கள் அனைத்தும் தேனில் தோய்த்த பலாச்சுளைகள். எஸ்பிபியை திரையில் பின்னணி பாட வருமாறு அறிவுறுத்தியவரே இவர் தான். இருவரின் குரல்களும் மாயாஜாலம். இசைக்கும், பாடல் வரிகளுக்கும் உயிருட்டியவை. ‘ஆவாரம்பூ’ போன்ற சில படங்கள் இருவரின் பாடல்களாலேயே இன்றளவும் பிரபலமானவை. 

‘சிங்கார வேலனே தேவா...’ நாயனத்தோடு இயைந்து நின்றது போலவே, ‘அழகு மலராட அபிநயங்கள் சூழ...’ பரதத்தோடு இயைந்து நிற்கும். சலங்கை ஒலி ‘ஓம் நமச்சிவாயா...’வும் அப்படித்தான். இந்த பாடல் வாயிலாக எஸ்.பி.ஷைலஜா என்ற பின்னணி பாடகிக்கே, பின்னணி பாடிய பெருமை பெற்றவர். அவர்கள் ‘காற்றுக்கென்ன வேலி...’ பாடல் பொங்கி வரும் பிராவக குரல்.

வரிகளின் ஊடே, சிணுங்கல், சிருங்காரம், செல்ல சிரிப்பு இப்படி சில விஷயங்களை செய்து பாடலை உயிர்ப்பிப்பது இவரும் எஸ்பிபியும் தான். இருவர் பாடல்களும் மனிதனின் எந்த சூழலையும் மாற்றும் வித்தை அறிந்தவை. 

எந்த இடத்தில் எஸ்பிபி சில்மிஷங்கள் செய்வார் என்பதை அறிந்து இவர் பாடியதால், இருவர் குரலை தனித்தனியே ரெக்கார்டிங் செய்து பின், இசையுடன் கோர்த்தாலும், நெருடல் இருக்காது. அப்படித்தான், இருவரின் ஜோடி பாடல்கள் பல, 1980களில் உருவாகின. 

தனது மார்கண்டேய குரலை என்றும் 16ஆக வைத்திருந்தாலும், 6 வயது குழந்தை தொடங்கி 60 வயது மூதாட்டி வரைக்கும் குரல் மாற்றும் வித்தைக்காரர். 1960களில் எம்.எஸ். ராஜேஸ்வரி தான், குழந்தை நட்சத்திரங்களுக்கு பின்னணி பாடுவார். ஆனால், குழந்தைக்கும் குமரிக்கும் ஒரே நேரத்தில் குரல் கொடுத்தவர். 

‘டூத் பேஸ்ட் இருக்கு, டவல் இருக்கு குளிச்சிடு மாமா...’ ‘டாடி டாடி ஓ மை டாடி, உனை கண்டாலே ஆனந்தமே..’ என குழந்தை குரலில் கொஞ்சி பாடியவர். தல அஜித்தின் மனைவி ஷாலினி,  பேபி ஷாலினியாக, 1980களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது, அவருக்காக பாடியவர்.

பல மொழிகளில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பாடல்களை பாடி, தேசிய விருது, பல மாநிலங்களின் விருதுகள் என வாங்கி குவித்தவர். மிக, மிக தாமதமாக 2013ல் ‘பத்ம பூஷண்’வழங்கியபோது, ஏற்க மறுத்தவர். படங்களிலும் மேடை கச்சேரிகளும் பாடியவர், பத்தாண்டுக்கு முன், இளம் தலைமுறைக்கு வழி விடுவதாக கூறி, பாடுவதை நிறுத்திக் கொண்டார். 

தமிழ் ரசிகர்களின் முப்பொழுதும் உடன் பயணிக்கும் கற்கண்டு பாடல்களில் இவரது பாடல்களே முதன்மையானவை. அவை ஒலித்துக் கொண்டிருக்கும் வரை, வானம்பாடியாக வாழ்ந்திருப்பார். 

#நெல்லை_ரவீந்திரன்