முறியடிக்க முடியா பல சாதனைகளை படைத்து, தமிழக மக்கள் மனதில் நீங்கா புகழுடன் இருப்போரில் பலரும் படிக்காத மேதைகள் தான். அவர்களில் ஒருவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.,
இளமையிலேயே தந்தையை இழந்து, தற்கொலை முடிவுக்கு சென்ற தாயுடன் சாவின் விளிம்பு வரை சென்று மீண்டவர், தன் அழியாத இசையால் பலரையும் இன்றளவும் மீட்டெடுக்கிறார்.
அன்றைய சென்னை மாகாணமான மலபார் பகுதியில் பிறந்து, பள்ளிப்படிப்பை கூட முடிக்காமல், ஜுபிடர் பிக்சர்சில் வேலைக்கு சேர்ந்தார். தியாகராஜ பாகவதர் கொடிகட்டி பறந்த காலத்தில், அன்றைய இசையமைப்பாளர்கள் பலரிடம் ஹார்மோனியம் வாசித்து உதவியாளராக பணிபுரிந்தார்.
1940களில் பிரபலமாக இருந்த சி.ஆர்.சுப்புராமனிடம் உதவியாளராக இருந்தபோது, 1952ல் சுப்புராமன் திடீர் மறைவால், அவர் பாதியில் வைத்திருந்த படங்கள் அனைத்துக்கும், நண்பர் ராமமூர்த்தி உடன் இணைந்து இசையமைத்து கொடுத்தார், எம்.எஸ்.வி.,
அப்படி கொடுத்த ஏராளமான படங்களில் அமர காவியமான 'தேவதாஸ்', போன்றவையும் உண்டு. இருவரின் இசையும் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனை ஈர்க்க, அவர் வாயிலாக 1952 முதல் திரை இசையில் ஜொலிக்க தொடங்கினர், விஸ்வநாதன், ராமமூர்த்தி இரட்டையர்கள். 1965 வரை கருப்பு வெள்ளை படங்களில் இசையால் வர்ண ஜாலங்களை நிகழ்த்தினர்.
ஆலயமணியின் ‘பொன்னை விரும்பும் பூமியிலே...’ பாசமலரின் ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி..’ என நூற்றுக்கணக்கில் இந்த இரட்டையர்களின் பாடல்கள் அனைத்தும், இன்றளவும் இரவு நேர தாலாட்டுகள். 1965ல் எம்.ஜி.ஆரின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு பின் இருவரும் பிரிந்து தனித்தனியாக பயணத்தை தொடங்கி, தனி சாம்ராஜ்யமே நிகழ்த்தினாலும், சாம்ராட்டாக தன்னை ஒருபோதும் நினைக்காத வெள்ளை மனம் கொண்டவர், எம்.எஸ்.வி.,
1953ல் ‘ஜெனோவா’ வாயிலாக எம்ஜிஆரின் அறிமுகம் கிடைக்க, இறுதி வரை நட்பு நீடித்தது. எம்.ஜி.ஆரின் பாடல்களில் அவரது வருங்காலத்தை முன்கூட்டியே கணித்த அனைத்துமே விஸ்வநாதன் கைவண்ணம் தான்.
‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்...’, 'அச்சம் என்பது மடமையடா...‘, குறுக்கு வழியில் வாழ்வை தேடிடும் குருட்டு உலகமடா...’, 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...' என தொடங்கி ‘கூந்தல் கருப்பு, குங்குமம் சிவப்பு...’ என காதல் பாடல்களையும் கூட விட்டு விடாமல், அதிமுக ஆரம்பித்த பின், 'நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்...' என உலகம் சுற்றும் வாலிபன், ‘தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொடி...’ என 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' வரை அனைத்து கொள்கை பாடல்களுமே எம்.எஸ்.வி., தான்.
எம்.ஜி.ஆர்., படங்களில் வாலியின் வரிகளுக்கும், சிவாஜி படங்களில் கண்ணதாசனின் வரிகளுக்கும் இசை எனும் உயிரூட்டி 1960,70களில் இசையின் பொற்காலத்தை உருவாக்கினார். காட்டு வெள்ளமாய், மனித வாழ்க்கையின் தத்துவத்தை வார்த்தை பிரவாகமாக அள்ளி வீசிய கண்ணதாசனின் சாகாவரம் பெற்ற வரிகளுக்கு கரைகளை கட்டமைத்து, வெள்ளத்தை ஆறாக்கி, அதில் நம்மை அமைதியாக பயணம் செய்ய வைத்தவர் எம்.எஸ்.வி.,
கண்ணதாசன் எம்எஸ்வி இருவரின் பிறந்த தினமும் ஒரே நாள் என்பது ஆச்சர்யம்.
கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி, கிளாசிகல், வெஸ்டர்ன் என அனைத்தையும் கரை கண்ட படிக்காத மேதை. மெல்லிசை மன்னர் என்பதால், மென்மையான இசைக்கு மட்டுமே சொந்தக்காரர் என்ற பிம்பத்தை, காட்சிகளின் பின்னணி இசைகளிலும் சேஸிங் காட்சிகளின் இசையிலும் அடித்து நொறுக்கினார். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ மாதிரியான படங்களில் எல்லாம் வெஸ்டர்னில் கலக்கினார்.
1950களின் பாகவதர் கால இசையமைப்பாளர்கள், 1960களின் கே.வி.மகாதேவன் போன்றவர்கள் என கடந்து, அவர் இசைத்துறைக்கு வந்தபோது பிறந்திடாத, இளையராஜாவின் இசைக்கும் டஃப் கொடுத்தவர்.
'பிரியா', 'இளமை ஊஞ்சலாடுகிறது' என இளையராஜா இசையமைக்க, ‘பில்லா’, ‘நினைத்தாலே இனிக்கும்’ என அடுத்தகட்ட ரசிகர்களையும் தன்வசப்படுத்தியவர் எம்.எஸ்.வி., ஈகோ பார்க்காமல் இளையராஜா உடனும் இணைந்து இசையமைத்த ‘மெல்லத் திறந்தது கதவு’ பட பாடல்கள் இன்றைய ரசிகனையும் கவர்பவை.
‘மயக்கும் மாலை பொழுதே நீ போ போ...’ (குலேபகாவலி), ‘தென்றல் உறங்கிடும் போதும், சிந்தை உறங்கிடும் போதும்..’ என 1950களுக்கும்... ‘பாலிருக்கும் பழமிருக்கும் பசி இருக்காது...’ என 1960களுக்கும் மென்மையாக இசையமைத்தவர், ‘பச்சைக் கிளி முத்துச் சரம்...’ என 1970 களுக்கும், ‘இனிமை நிறைந்த உலகம் இருக்கு, இதிலே உனக்கு கவலை எதுக்கு...’ என 1980ஸ், 1990ஸ் ரசிகனுக்கும் ரசனையையும் அறிந்து இசை விருந்து படைத்தவர் எம்.எஸ்.வி.,
இசையை கடந்து பாடுவதும், நடிப்பதும் எம்.எஸ்.வி.,யின் பெரு விருப்பம். அவை, பிற்காலங்களில் தான் நிறைவேறின. கமலின் ‘காதலா காதலா’, அஜித்தின் ‘காதல் மன்னன்’ என பல படங்களில், விஸ்வநாதனை நேரில் தரிசிக்கும் பாக்கியத்தை ரசிகனுக்கு தந்து, தனது விருப்பத்தையும் நிறைவேற்றிக் கொண்டார்.
இசையமைப்பாளர் என்றாலே, அவர்களின் குரல்களுக்கு தனி வசீகரம் இருக்கும் என்பதை ‘சம்போ சிவ சம்போ...(நினைத்தாலே இனிக்கும்)’ பாடல் வாயிலாக காண்பித்து, ரகுமான் இசையில் ‘ஆலால கண்டா, ஆடலுக்கு தகப்பா.. (சங்கமம்)’ பாடல் வரை நிரூபித்தார்.
டி.வி., தொடருக்கு, ‘தையாரே தையா...’ என ஆரம்பித்து ‘கங்கா, யமுனா.. சரஸ்வதி..’ என அவர் பாடியது இன்றும் காதில் ஒலிக்கிறது.
ஈழத்து வலியை, ‘விடை கொடு எங்கள் நாடே...’ என 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உச்சஸ்தாயில், உருக்கும் குரலுடன் பாடிய பாடல், இன்று கேட்டாலும் கண்ணீர் வரும்.
அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர்., ஜானகி என ஆறு முதல்வர்களை அவர்களின் ஆரம்ப காலம் தொட்டெ அறிந்தவர் என்றாலும், அந்த எண்ணமே இல்லாத குழந்தை மனதுக்காரர்.
‘நீராரும் கடலெடுத்த...’ என நம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மெட்டு போட்டு இசையமைத்தவர் எம்.எஸ்.வி.,
'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...' மாதிரியான பக்தி ஆல்பங்களும் தந்தவர்.
2011ல் ஆட்சியில் இருந்தபோது, எம்.எஸ்.வி.,க்கு மிகப்பெரிய பாராட்டு விழா நடத்தி, ‘திரை இசை சக்கரவர்த்தி’ என்ற பட்டத்துடன் 60 தங்க நாணயங்கள், கார் என பரிசளித்து கவுரவித்தார், ஜெயலலிதா. ஜெயலலிதா திரையில் பாடிய பாடல்களில் பெரும்பாலானவை, எம்.எஸ்.வி., இசை தான்.
தமிழில் 800 படங்கள் உட்பட, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் சுமார் ஆயிரம் படங்கள்; நூற்றுக்கணக்கில் பக்தி பாடல் ஆல்பங்கள் என தமிழ் கூறும் நல்லுலகின் காற்று வெளியை, வெல்லக்கட்டியாக மாற்றிச்சென்ற மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.,யின் நினைவு பதிவு இது.
‘உன் இசை கேட்டால், புவி அசைந்தாடும்... (தவப்புதல்வன்)’ என கண்ணதாசன் மிகச்சரியாகவே எழுதி வைத்திருக்கிறார்.
#நெல்லை_ரவீந்திரன்

No comments:
Post a Comment