Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Monday, 20 December 2021

ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனமன்று எங்கள் ஊரில் உள்ள கோயில் விசேஷ நிகழ்வு படங்களை ஊர் வாட்ஸ்அப் குரூப்பில் பார்த்ததும் நினைவுகளுக்குள் மூழ்கிப் போனேன்...

பள்ளி நாட்களில் மார்கழி மாத அதிகாலை பனித் தூறலில் நனைந்தபடியே, ஊருக்கு அருகில் உள்ள வயல்வெளி கிணற்றில் குளிக்கச் செல்வோம். குளித்து முடித்து வீடு திரும்பி நல்ல உடை அணிந்து, எங்கள் ஊரின் பெரிய கோயிலுக்கு செல்வது வழக்கம்.  



மார்கழி மாதம் முழுவதும் கோயிலின் மூன்று பிரகாரங்களை (தேரோடும் வீதி, சப்பரங்கள் வலம் வரும் வீதி, கோயிலின் உள் பிரகாரம்) சுற்றி வந்து தேவார திரட்டில் இருந்து பஜனை பாடல்களை பாடிச் செல்வோம். அப்படித்தான், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் எல்லாம் எனக்கு அறிமுகம் ஆனார்கள். 6 மணிக்கு தொடங்கும் பஜனை ஊர்வலம், 8 மணி வரை நீடிக்கும். அதன்பிறகு, வீடு திரும்பி, பள்ளி பயணம் ஆரம்பமாகும்.


மார்கழி திருவாதிரை திருநாளுக்கு 10 நாட்களுக்கு முன்பாக பஜனை பாடல்கள் மாறும். தேவார பாடல்களுக்கு பதிலாக திருவெம்பாவை பாடல்களை பாடுவோம். ஆருத்திரா தரிசனம் எனப்படும் திருவாதிரை திருநாளுக்கு முந்தைய 9வது நாள் தொடங்கி திருவெம்பாவை நோன்பு காலம் என்பதெல்லாம் பின்னாளில் அறிந்து கொண்ட தகவல். 



10வது நாளில் எங்கள் ஊர் வைத்தியலிங்க சுவாமி கோயிலில் ஆருத்திரா தரிசனம் விழா களை கட்டும். அன்றைய தினம்,  அதிகாலை எழுந்து கிணறுகளில் உள்ள மோட்டார் பம்பு செட்டில் குளித்து விட்டு 4 மணிக்கெல்லாம் கோயிலில் ஆஜராகி விடுவோம். ஆருத்திரா தரிசன தினத்தன்று பிரம்ம முகூர்த்த வேளையில் (4.30 மணி முதல் 6 மணி) அனைத்து தேவர்களும் சிவனை தரிசனம் செய்ய வருவார்கள் என்பது ஐதீகம். 



சிவபெருமானை பிடிக்காத சிலர் ஒன்று சேர்ந்து அவர் மீது மதம் பிடித்த யானை, முயலகன் என்ற அரக்கன், உடுக்கை, தீப் பிழம்பு போன்றவற்றை ஏவி விட்டதாகவும் அவற்றை சிவன் லாவகமாக பிடித்ததோடு முயலகனை தனது வலது காலின் கீழ் போட்டு மிதித்துக் கொண்டு உடுக்கை ஏந்தி, தீப்பிழம்பாக தனது செஞ்சடையை விரித்து இடது காலை தூக்கியபடி, அந்த முனிவர்கள் முன் நடனமாடிய தினமே ஆருத்திரா தரிசன நாள்  என்றும் கூறுவது உண்டு. 



அதிகாலை 5 மணி முதல் பெரிய கோயிலின் கொடி மரம் அருகில் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் ஆரம்பமாகும். பல்வேறு விதமான அடுக்கு விளக்குகளில் தீபாராதனை (ஆரத்தி, மகா ஆரத்தி) முடிந்து திருவெம்பாவையின் 21 பாடல்களும் பாடப்படும். அதன்பிறகு நடராஜர் அலங்கரித்த சப்பரத்தில் நகர்வலம் வவருவார். மார்கழி மாத பனியில், அதிகாலை வேளையில் விழித்தெழுந்து பிரம்ம முகூர்த்த வேளையில் கோயிலில் தரிசனம் காண்பது என்பது வார்த்தைகளால் எளிதில் விவரிக்க முடியாத பேரனுபவம். 

திருவாதிரை விழா எனப்படும் ஆருத்திரா தரிசனத்தின் கூடுதல் விசேஷம் களி. கண்டங்களி என்றும் அதை கூறுவோம். சரியாக சொல்வது என்றால் சர்க்கரை பொங்கலின் மாறுபட்ட வடிவமாக அந்த பிரசாதம் இருக்கும். 

ஆருத்திரா தரிசன நாளில் சேந்தனார் என்ற தொழிலாளியிடம் சிவ பெருமான் களி வாங்கி சாப்பிட்டதாகவும் அதை நினைவு கூறும் விதத்தில், ஆருத்திரா தரிசன நாளில் இறைவனுக்கு களி படைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

பள்ளிப் பருவம் முடிந்த பிறகு, மார்கழி பஜனைக்கு செல்வது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இப்போதெல்லாம் அந்த தரிசனத்தை முற்றிலுமாக தவற விடுவதாகவே கருதுகிறேன். மார்கழி மாத அதிகாலை 4 மணியானது நள்ளிரவு நேரமாகவே தெரிகிறது. 

வேலை அப்படி என்று மனதுக்குள் சொல்லி சமாளித்தாலும் எல்லாம் சிவன் செயல்...  அவன் அருளாலே அவன் தாள் பணிய முடியும்...



#நெல்லை_ரவீந்திரன்

Saturday, 22 August 2020

வெல்கம் விநாயகா...




அன்னையின் அங்கத்தில் 

அவதரித்த அழுக்குப் பிள்ளை

சாணமும் சந்தனமும் 

சமமென கருதும்

சமத்துப் பிள்ளை

எருக்கமும் அருகமும்

அருமையெனும் அன்பு பிள்ளை


எண்ணம்போல வளைந்து

எண்ணியதை நிறைவேற்றும்

எல்லோரின் வீட்டுப்பிள்ளை

நீரில் கரைத்தாலும்

தடியால் அடித்தாலும்

கோபமே கொள்ளாத

அசராத பிள்ளை 


கைப்பிடி உருண்டையோ

கடல் போல உருவமோ

மூஞ்சுறு வேடமோ

மாமன்னன் வேடமோ

மனம் கோணாமல் மகிழ்ந்து

மகிழ்வுடன் குடியேறும்

மகிழ்ச்சி பிள்ளை


நினைத்தவர் நினைத்தபடி

இழுத்தவர் இழுத்தபடி

கண்டவர் கண்டபடி

எந்தபடி எப்படியானாலும்

படிப்படியாய் உயர்த்தும்

படித்துறைப் பிள்ளை


இந்த பிள்ளை யார்

இந்த பிள்ளை யார்

என கேட்கத் தூண்டும்

எங்கள் பிள்ளையார்


#நெல்லை_ரவீந்திரன்

Sunday, 4 April 2010

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை

செப்டம்பர் 11, 1893

அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!

இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள்.
அவர்களுக்கும் என் நன்றி.

பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன்.
எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன்.

ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:

எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம் இறுதியிலே கடலில் சென்று சங்கமா பான்மையினைப் போன்று லகோர் பின்பற்றும் தன்மையாலே துங்கமிகு நெறி பலவாய் நேராயும் வளைவாயும் தோன்றினாலும் அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை அடைகின்ற ஆறே யன்றோ!
இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்:

'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.'
பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன.

அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்! அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது.

இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.

= வை.ரவீந்திரன்