Sunday, 21 August 2016

தேவதை மொழி..

வார்த்தைகள் இல்லா
வர்ணமற்ற பொழுதொன்றில் 
புருவத்தை சற்றே உயர்த்தி
கறுப்பு வெள்ளை விழிகளால்
வினா எழுப்பி நின்றாய்...
கண்களாலேயே
அபிநயம் பிடித்தபடி
புருவத்தை மட்டும்
சில கணம் நெளித்து
கண்ணின் மணிகளை
சுழற்றியபடி நீ எழுதிய
எழுத்தில்லா சொற்காவியங்கள்
காற்றில் நீந்தி வந்து
என்னை சேர்ந்த சமயத்தில்
கற்றுக் கொள்ள தொடங்கினேன்
தேவதை விழி மொழியை...

மனித நேயம்....

உலகெலாம் உறவென
பூச்செண்டு கரம் நீட்டிய
பூங்குன்றனாரும்
வாடிய பயிர் கண்டு
வாடிய வள்ளலாரும்
அவதரித்த மண் இது...

சமய குரோதங்கள்
சங்கறுத்து நிற்க
சாதி பேதங்களும்
சுற்றி நின்று அச்சுறுத்த
வீச்சரிவாளின் நுனியில்
பேச்சின்றி கிடக்கிறது
இன்றைய மனித நேயம்...

கடல் கடந்த தேசத்தின்
ஐந்தறிவு ஜீவனுக்கும்
கண் காணா ஊரில்
துடிக்கும் உயிருக்கும்
கண்ணீர் வடிக்கும்
இதயங்களில் இருந்து
கண்ணெதிரில் நசுங்கும்
மனித நேயத்துக்காக
துளியும் ஈரமில்லை....

இனி ஒரு விதி செய்வோம்
நம் வீதிகளில் இருந்தே
மனித நேய சாலையை
செப்பனிடுவோம்...

தொடங்கும் இப்பணியால்
நாளைய நம் உலகில்
மனித நேயம் பூச்செடி
மலர்ந்து மணம் வீசட்டும்...
சாதி சமய மாச்சரியங்கள்
அதற்கு எருவாகட்டும்...

நவீன மனு நீதி

ஆராய்ச்சி மணி ஒலிக்க
யாரங்கே என விளித்தான்
நவீன மனு நீதி
சேதியுடன் வந்தனர்
சேனையின் வீரர்கள்
கண்ணீருடன் நிற்கிறது
அபலை பசு ஒன்று
இளவரசர் தேரில் சிக்கி
சிதைந்து போனதாம்,
அந்த பசுவின் கன்று...
யோசித்தான் மனு நீதி,
பின்னர், அழைத்தான்...
லகுட பாண்டிகளுள்
ஒரு அப்பாவி
லகுட பாண்டியை
பசுங் கன்றின்
உயிர் கொலைக்கு
காலையில் விசாரணை
தப்பாமல் ஆஜராகுமாறு
ஆணையிட்டான்
வீட்டுக்கு மானியம்
குழந்தைகளுக்கு சொத்து
மனைவிக்கு அரண்மனை பணி
அடுக்கடுக்காக வழங்கினான்
நவீன மனு நீதி
விசாரணை மண்டபம்...
தேருக்கு முன் சென்றது
பசுவின் குற்றமாக கருதி ...
தேரோட்டிக்கு விதித்தனர்
ஆயுள் தண்டனை
புகார் இந்திர விழாவில்
கருணையின் பேரில்
தேரோட்டியை விடுவிக்கலாம்
மனு நீதியும், மகனும்
மனதினுள் யோசித்தனர்
நீதியை யாசித்த பசுவின்
கண்ணீர் உறைந்தது
பசுவும் கல்லாய் சமைந்தது
நவீன மனு நீதி சோழன்
மகிழ்கிறான், மகனுடன்...

கழுதை....

கழுதை கெட்டா குட்டிச் சுவரு. இந்த பழமொழியை எல்லோரும் கேட்டிருப்போம். ஆனால், கழுதை என்ற விலங்கை இன்றைய தலைமுறையினரில் எத்தனை பேர் நேரில் பார்த்திருப்பார்கள்...? இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்.

முன்பெல்லாம், கிராமங்களில் வீடு, வீடாக அழுக்குத் துணிகளை சேகரித்து கழுதை மீது பெரிய பொட்டலமாக (பொதி மூட்டை) கட்டி, துவைப்பதற்கு கொண்டு செல்வார்கள். அந்த தொழிலில் ஈடுபடுவோர், அதற்கென வீடுகளில் கழுதைகளை வளர்த்து வந்தனர். அதிக அளவில் அழுக்கு இருக்கும் துணியை வீட்டில் வெள்ளாவி (வெந்நீரில் துணியை வேக) வைத்துக் கொள்வார்கள். அதன்பிறகு, ஊருக்கு வெளியே உள்ள குளம், ஊருணி போன்றவற்றில் துவைத்து கழுதையின்மீது ஏற்றி கொண்டு வருவார்கள். விசேஷ தினங்கள் தான் கழுதைக்கு விடுமுறை தினம்.

எங்கள் ஊரில் சித்திரை மாத கொடை விழாவின்போது, ஊரில் உள்ள கழுதைகள் எல்லாம் ஒட்டு மொத்தமாக ஒரு இடத்தில் கூடி நிற்கும். கழுதை வாலில் பட்டாசு கொளுத்தி ஓட விடுவதும், பனை ஓலையை கட்டி விடுவதும் சிறிய வயது விளையாட்டுகள். தனக்கு பின்னால் இருந்து வினோதமாக ஒரு சத்தம் கேட்கத் தொடங்கியதும் அச்சத்தில் கழுதை ஓட்டம் பிடிக்க, அந்த சத்தமும் அதன் பின்னாலேயே செல்வதால் மிக வேகமாக ஓட்டம் பிடிக்கும்.



இப்போது குளமும் இல்லை. ஊருணியும் இல்லை. கழுதையும் இல்லை. இது வாஷிங் மெஷின் காலம். வீதிகளில் சின்ன சின்ன சில்மிஷங்கள் செய்து ஓடி விளையாண்ட சிறுவர்களும் இப்போது இல்லை. ஏனென்றால், இது டெம்பிள் ரன் காலம். அதனால் தான், ‘என்னைப் பார் யோகம் வரும்’ என்ற அதிர்ஷ்ட சட்டங்களுக்கு இடையே புகைப்படமாக மாறி விட்டது, கழுதை.
= பாரு. இங்க ஒரு கழுத கம்ப்யூட்டர் முன்னால ஒக்காந்துகிட்டு பழச கிளறிகிட்டு இருக்கு..ன்னு ‘சின்ன கவுண்டர்’ கவுண்டமணி பாணியில நீங்க நெனைக்கிறது எனக்கு கேட்குது...

Tuesday, 5 April 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 36



= வை.ரவீந்திரன்


தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 2016 சட்டப்பேரவை தேர்தலில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டும். அதாவது, கால்பங்கு வாக்காளர்களின் வயது 18 முதல் 22க்குள் தான். தமிழக சட்டப்பேரவை வரலாறு குறித்த தகவல்களை அவர்கள் அறிந்து கொள்ளவே இந்த பதிவை தொடர்ச்சியாக எழுதி வந்தேன். 


1996 தேர்தலுக்கு பிறகு, தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை. திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. சுமார் 30 ஆண்டுகளாக கருணாநிதியும் ஜெயலலிதாவும் எதிர் எதிராக மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றனர். நடுவில் அவ்வப்போது சில கட்சிகளும் அணிகளும் பூதாகரமாக காணப்பட்டாலும் கூட, இவர்களை தவிர்த்து யாருமே வெற்றி பெற்றதில்லை



உதாரணமாக, 1996 தேர்தலில் மார்க்சிஸ்ட்டுடன் கூட்டணி வைத்து 177 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய மதிமுக கட்சியாகட்டும், 2006ம் ஆண்டு தேர்தலில் புதிதாக தோன்றிய விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகமாகட்டும் தேர்தல் நேரத்தில் மட்டுமே சலசலப்பை ஏற்படுத்தின. வேறு எந்த விளைவுகளையும் ஏற்படுத்த முடியவில்லை. தற்போது, 2016 தேர்தலிலும் மக்கள் கூட்டணி, பாமக என தேர்தல் களத்தில் பரபரப்பு தொற்றியுள்ளது. முடிவு மே 19ல் தெரியும்.




2006 தேர்தலைத் தொடர்ந்து 96 எம்எல்ஏக்களை மட்டுமே வைத்து பெரும்பான்மை பலமின்றி 5 ஆண்டு காலம் ஆட்சி செய்த கருணாநிதி சாதனை குறிப்பிடத்தக்கது. 1996 தேர்தல் வெற்றிக்கு பிறகு ஜெயலலிதாவை கருணாநிதி அரசு கைது செய்ததும் அதன்பின்னர், 2001 தேர்தல் வெற்றிக்கு பிறகு கருணாநிதியை ஜெயலலிதா அரசு கைது செய்ததும் வரலாற்று பதிவுகள்.





இடையே, 2011 தேர்தலுக்கு முன்பாக 2008ம் ஆண்டில் சட்டப்பேரவை தொகுதிகளின் எல்லைகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டன. அதனால், சில தொகுதிகள் மாயமாகின (உம்: சென்னையில் பூங்காநகர், புரசைவாக்கம்) சில புதிய தொகுதிகள் உதயமாகின (உம்: சென்னையில் மாதவரம்). எனினும், சட்டப்பேரவை தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 234 என்பதில் மாற்றமில்லை. வாக்காளர் எண்ணிக்கை மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் நடைபெற்ற இந்த சீரமைப்புக்கு பிறகு, பாராளுமன்ற தொகுதிகளுக்கு அடங்கிய சட்டப்பேரவை தொகுதிகளிலும் மாற்றம் ஏற்பட்டது. அதன்படியே, 2009 பாராளுமன்ற தேர்தல் நடந்தது.  

தேசிய அரசியலைப் பொறுத்தவரையிலும் அரசியலில் சோனியா அடியெடுத்து வைத்தது, பாஜக வளர்ச்சி என்பது போன்ற தகவல்களையும், 1996 முதல் கடந்த 20 ஆண்டு கால தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றை பல்வேறு தரப்பினரும் அலசுவதால் அவற்றில் இருந்து தமிழக தகவல்களையும் புதிய வாக்காளர்கள் பெற்றிருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் எனது இந்த தொடரை தற்போதைக்கு நிறைவு செய்கிறேன்.

மீண்டும் வேறு ஒரு களத்தில் ... 
வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ... 
சந்திப்போம் நண்பர்களே ...


நன்றி

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 35



= வை.ரவீந்திரன் 
 
1991 தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் அமைந்த ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. வளர்ப்பு மகன் திருமணம், கும்பகோணம் மகாமகம் கூட்ட நெரிசலில் பக்தர்கள் பலி என சர்ச்சைகள் வரிசை கட்டி நின்றன. மத்தியிலும் நரசிம்ம ராவ் ஆட்சியின் மீது ஊழல் புகார்கள் எழுந்தன. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு என தொடர்ந்தது.



1991 தேர்தலுக்கு பிறகு தான், தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும் வழக்கம் இடைவிடாமல் தொடருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழ்நிலையில், 1996ம் ஆண்டு சட்டப்பேரவைக்கும், பாராளுமன்றத்துக்கும் சேர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது, அதிமுக கூட்டணி தொடரும் என காங்கிரஸ் மேலிடம் சார்பாக பிரதமர் நரசிம்ம ராவ் அறிவித்தார்.



உடனே, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அதிமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று கூறி மூப்பனார் தலைமையில் ஒரு பிரிவினர் போர்க்கொடி தூக்க, சத்தியமூர்த்தி பவனில் கலவரம் ஏற்பட்டது. பெரும்பான்மையானோர் மூப்பனார் வசம் இருந்ததால் தமிழ் மாநில கட்சி தோன்றி, திமுகவுடன் கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணிக்கு ரஜினி காந்த் கொடுத்த ‘வாய்ஸ்’, தானாக முன் வந்து நடிகர் சரத்குமார் மேற்கொண்ட பிரச்சாரம் என டாப் கியரில் ஓடியது. 



மறுபுறம், ஊழல் கூட்டணி என்று முத்திரை குத்தப்பட்ட அதிமுக, காங்கிரஸ் கூட்டணி பரிதாபமாக இருந்தது. இந்த தேர்தலில் தான் முதன் முறையாக, திமுகவில் இருந்து பிரிந்து சென்ற வைகோ தலைமையிலான மதிமுக போட்டியிட்டது. திமுக அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மதிமுக அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்திருந்தன.    

  

1996ம் ஆண்டு மே 2ம் தேதி நடந்த தேர்தலில் திமுக / தமாகா கூட்டணி 221 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. 4வது முறையாக தமிழக முதல்வரானார் கருணாநிதி. தமாகாவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. பர்கூர் தொகுதியில் திமுகவின் அறிமுக வேட்பாளர் சுகவனத்திடம் முதல்வர் ஜெயலலிதா தோல்வி அடைந்தார். அதுபோல, விளாத்திகுளம், சிவகாசி என இரண்டு இடங்களில் போட்டியிட்ட வைகோவும் தோல்வி அடைந்தார்.

(நினைவுகள் சுழலும்)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 34



= வை.ரவீந்திரன்

தமிழக சட்டப்பேரவைக்கு 1991ல் தேர்தல் நடந்தபோது, பாராளுமன்றத்துக்கும் மூன்று கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ஆயத்தமாக தொடங்கின. அதிமுகவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்தன. ‘எம்ஜிஆர் பார்முலா’ படி சட்டப்பேரவைக்கு அதிக தொகுதிகளில் (168) அதிமுகவும் பாராளுமன்றத்துக்கு அதிக தொகுதிகளில் (26) காங்கிரசும் போட்டியிட்டன. 

 திமுக அணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஜனதா தளம் கட்சியும் இடம் பெற்றன. அப்போது, ஜனதா தளம் கட்சியின் தலைவராக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருந்தார். மேலும், ஜெயலலிதாவுடன் கருத்து மோதலால் அதிமுகவில்  வெளியேறிய திருநாவுக்கரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரும், தாயக மறுமலர்ச்சி கழகம் நடத்தி வந்த நடிகர் டி.ராஜேந்தரும் திமுக அணியில் இணைந்தனர்.

ஆட்சிக் கலைப்புக்கு நியாயம் கேட்டு திமுக பிரச்சாரம் செய்தது. அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாகவும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக திமுக செயல்படுவதாகவும் அதிமுக கூட்டணி பிரச்சாரம் செய்தது. இந்த நிலையில், பாராளுமன்றத்துக்கு முதல்கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதிகளுக்கு 1991 மே 20ம் தேதி அன்று வாக்குப்பதிவு முடிந்தது. 




அதற்கு மறுநாளில் தேசத்தையே உலுக்கிய கோர சம்பவம் ஒன்று, தமிழ் மண்ணில் நடந்தது. தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மே 21 அன்று சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தேர்தல் ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. 




அதன்படி, ஜூன் மாதம் தேர்தல் நடைபெற்றது. ராஜீவ் படுகொலையால் எழுந்த அலையில், 225 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. 164 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. காங்கேயம், பர்கூர் என இரண்டு தொகுதியில் வெற்றி பெற்ற ஜெயலலிதா, தமிழக முதல்வராக தேர்வானார். 1991ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி தமிழக முதல்வர் பதவியை ஏற்றபோது அவருக்கு வயது 43. தமிழகத்தில் மிக இளம் வயதில் முதல்வர் பதவியேற்ற பெருமை ஜெயலலிதாவையே சேரும்.



திமுக கூட்டணிக்கு 7 இடங்கள் மட்டுமே கிடைத்தன. சென்னை துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த கருணாநிதி, அந்த பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக இணைப்பை எதிர்த்த பி.எச்.பாண்டியன், சுயேச்சையாக சேரன்மாதேவி தொகுதியில் வெற்றி பெற்றார். இந்த சட்டப்பேரவை தேர்தலில்தான் முதன் முறையாக பாமக களம் இறங்கியது. அந்த கட்சி சார்பாக பண்ருட்டி தொகுதியில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.

சட்டப்பேரவை தேர்தலுடன் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து 39 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி வென்றது. மத்தியில் காங்கிரஸ் சார்பாக பிரதமரானார் பி.வி.நரசிம்மராவ்.

(நினைவுகள் சுழலும்)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 33



= வை.ரவீந்திரன்



தமிழக சட்டப்பேரவையில் 1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி அன்று முதல்வர் கருணாநிதி பட்ஜெட் தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சி தலைவரான ஜெயலலிதா எழுந்து, தனது வீட்டுக்குள் போலீஸார் அத்துமீறி நுழைந்தது குறித்த பிரச்சினையை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தார். கருணாநிதி கையில் இருந்த பட்ஜெட் உரை நகலை பறிக்க முயன்றார். (அப்போது சட்டப்பேரவையில் ஓரிரு அடி இடைவெளியில் தான் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவரும் எதிர் எதிரில் அமர்ந்திருப்பார்கள். பின்னாளில் மோதல்கள் அதிகரித்ததும் ஆளும் கட்சி வரிசை மற்றும் எதிர்க்கட்சி வரிசை இருக்கைகளுக்கு இடையிலான இடைவெளி அதிகப்படுத்தப்பட்டது)
  

கருணாநிதி கையில் இருந்த பட்ஜெட் உரையை ஜெயலலிதா பறிக்க முயன்றதன் தொடர்ச்சியாக சட்டப்பேரவைக்குள் கலவரம் உருவானது. ஜெயலலிதாவை தாக்க துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் பாய்ந்து வந்தனர். அவர்களை திருநாவுக்கரசு, சாத்தூர் ராமச்சந்திரன் போன்றோர் தடுத்து ஜெயலலிதாவை பாதுகாத்தனர். எனினும், கலவரத்தில் ஜெயலலிதாவின் புடவை கிழிக்கப்பட்டது. 
 
 சட்டப்பேரவையில் இருந்து தலைவிரி கோலமாக வெளியே வந்த ஜெயலலிதா, ‘மீண்டும் இந்த பேரவைக்குள் முதல்வராகத்தான் நுழைவேன்’ என அறிவித்தார்.  மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த எஸ்.ஆர்.ராதாவை எதிர்க்கட்சி தலைவராக்கினார். இதன்பிறகு, கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்காக சட்டப்பேரவைக்கு வெளியில் காங்கிரசுடன் இணைந்து தீவிரமாக செயல்பட தொடங்கினார்.



இந்த நிலையில், 1989 நவம்பரில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில், அதிமுகவும் காங்கிரசும் இணைந்து போட்டியிட்டு தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளை கைப்பற்றின. நாகப்பட்டினம் தொகுதியில் மட்டும் ஆளும் திமுக அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. எனினும், அகில இந்திய அளவில் வெறும் 197 இடங்களை மட்டுமே பெற்று காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அதன் பிறகு இதுவரையிலும் மத்தியில் தனிப்பெரும்பான்மையை (272+) காங்கிரஸ் கட்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

143 இடங்களில் மட்டுமே வென்றிருந்த ஜனதா தளம் தலைவர் வி.பி.சிங், உதிரி கட்சிகளின் ஆதரவோடு தேசிய முன்னணி தலைவராக பிரதமர் பதவியை ஏற்றார். அவருக்கு கம்யூனிஸ்ட்டுகளும் பாஜகவும் வெளியில் இருந்து ஆதரவளித்தன. தமிழகத்தில் ஒரு எம்பி தொகுதியில் கூட திமுக வெற்றி பெறா விட்டாலும் கூட அந்த கட்சியின் மேல்சபை எம்பியாக இருந்த முரசொலி மாறனுக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டது. 



பின்னர், மண்டல் கமிஷன் பரிந்துரை மற்றும் அயோத்தி ராம ஜென்ம பூமி விவகாரத்தில் பாஜக ஆதரவை வாபஸ் பெற்றதால் வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்தது. அவரது கட்சியில் இருந்து (தேவிலால், தேவேகவுடா, சவுதாலா, மேனகா காந்தி உள்ளிட்ட ஆதரவாளர்களுடன்) பிரிந்த சந்திரசேகரை பிரதமராக்கி அவரது ஆட்சிக்கு (197 எம்பிக்களுடன்) வெளியில் இருந்து ஆதரவளித்தார் ராஜீவ்காந்தி. மத்தியில் சாதகமான ஆட்சி அமைந்ததும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினார் ஜெயலலிதா. 




1980ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து எம்ஜிஆர் ஆட்சியை கலைக்க கருணாநிதி எப்படி நெருக்கடி கொடுத்தாரோ, அதே போன்ற நெருக்கடியை அதிமுக கொடுக்க தொடங்கியது. விளைவாக.... 1991ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியை சந்திரசேகர் அரசு கலைத்தது. அடுத்த மாதமே சந்திரசேகரின் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ராஜீவ்காந்தி வாபஸ் பெற்றார். இதனால், 1991ம் ஆண்டு மே மாதத்தில் பாராளுமன்றத்துக்கும், தமிழக சட்டப்பேரவைக்கும் சேர்த்து தேர்தல் அறிவிப்பு வெளியானது.

(நினைவுகள் சுழலும்...)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 32



= வை.ரவீந்திரன்

தமிழகத்தில் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி மீண்டும் அமர்ந்த பிறகு, 1989 தேர்தல் தோல்வி குறித்து அதிமுகவின் இரண்டு அணிகளும் ஆராயத் தொடங்கின. அப்போது தான், ‘வாக்கு வங்கி’ முதன் முதலில் ஆய்வு செய்யப்பட்டது. அந்த தேர்தலில் திமுக பெற்ற வாக்குகள் 33 சதவீதம். பெரும்பாலான தொகுதிகளில் 2ம் இடத்தை பிடித்த ஜெ.அணி பெற்ற வாக்குகள் 22 சதவீதம், ஜா. கூட்டணி பெற்றது 12 சதவீத வாக்குகள். இது தவிர, 19 சதவீத வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருந்தது. 

அதற்கு முந்தைய 1984ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி பெற்றிருந்த வாக்கு சதவீதத்தில் 1989 தேர்தலில் அந்த அணியில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், 1984ல் அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் அனைத்தும் 1989ம் ஆண்டு தேர்தலில் மூன்றாக சிதறியதாலேயே ஆட்சியை திமுக கைப்பற்றியது என்ற உண்மையை அதிமுகவின் இரு அணியினரும் உணரத் தொடங்கினர். இதனால், கட்சியை மீண்டும் இணைக்கும் முயற்சிகள் ஆரம்பமானது. 




தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே ஜெயலலிதாவும், ஜானகி அம்மாளும் சந்தித்தனர். முன்னதாக சென்னையில் தேவகி அம்மாள் மருத்துவமனையில் வைத்து நலம் விசாரிக்கும் விதமாக சந்திப்பு நிகழ்ந்தது. இரு அணிகளும் முறைப்படி இணைந்ததும் இரட்டை இலை சின்னமும் மீண்டும் பெறப்பட்டது. இந்த இணைப்பை பிடிக்காத சிலர் வெளியேறினர் அல்லது தனிக்கட்சி தொடங்கினர். பி.எச்.பாண்டியன் இணையவில்லை. எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை நடிகர் பாக்யராஜ் தொடங்கினார். 



இதற்கிடையே, பொதுத் தேர்தலின்போது வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டு இருந்த மதுரை கிழக்கு, மருங்காபுரி ஆகிய தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுக களமிறங்கி இரண்டு தொகுதிகளையுமே கைப்பற்றியது. மீண்டும் அதிமுக தலையெடுக்க தொடங்கிய சமயத்தில், போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்குள் போலீஸார் நுழைந்து, அவர் எழுதியதாக கூறப்பட்ட ராஜினாமா கடிதம் ஒன்றை கைப்பற்றினர். எதிர்க்கட்சி தலைவர் வீட்டுக்குள் அத்துமீறி போலீஸார் நுழைந்த சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கடும் கண்டனக் குரல் எழுந்தது. அத்துமீறி வீட்டுக்குள் நுழைவது கிரிமினல் குற்றம் என கூறப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையிலும் இந்த சம்பவம் எதிரொலித்தது. நிதித் துறை பொறுப்பு வகித்த முதல்வர் கருணாநிதி, 1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி அன்று பட்ஜெட் தாக்கல் செய்ய எழுந்தார். அதன் பிறகு, சட்டப்பேரவையின் நிலவரம் கலவரமானது. 1988 ஜனவரி 28 போலவே மீண்டும் ஒரு கருப்பு தினம் உருவானது.

(நினைவுகள் சுழலும்)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 31



= வை.ரவீந்திரன்

தமிழகத்தில் எம்ஜிஆர் இல்லாத முதலாவது தேர்தலான 1989ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் முழு வீச்சாக களமிறங்கியது திமுக. எப்போதுமே தேர்தல் அறிக்கையில் முக்கிய கவனம் செலுத்தும் அந்த கட்சியின் அன்றைய கோஷம், ‘செய்வதை சொல்வோம், சொன்னதை செய்வோம்’. முக்கிய பண்டிகை நாட்களில் 5 கிலோ இலவச அரிசி வழங்குவதாக திமுக அறிவித்தது பிரபலமாக பேசப்பட்டது. ஏனெனில், அப்போது ரேஷன் அரிசி விலை கிலோ ரூ.3.75. மேலும், தேசிய அளவில் பிரபலமாகிக் கொண்டிருந்த வி.பி.சிங், திமுகவுக்கு ஆதரவாக தமிழகத்தில் பிரச்சாரம் செய்தார். 



காங்கிரஸ் கட்சிக்காக 14 முறை தமிழகம் வந்த பிரதமர் ராஜீவ், சிறிய நகரங்களில் கூட பொதுக் கூட்டங்களில் பங்கேற்றார். எம்ஜிஆரால் கலையுலக வாரிசு என அறிவிக்கப்பட்ட பாக்யராஜ், அந்த தேர்தலில் ஜானகி அணிக்காக பிரசாரம் செய்தார். ஜெயலலிதா போட்டியிடும் தொகுதியில் களமிறங்க வெண்ணிற ஆடை நிர்மலா தயாரானார். ஜெ. அணியில் அப்போதைய முன்னணி நடிகரான ராமராஜன், செந்தில் போன்றோர் பிரசாரம் செய்தனர். ‘முதுகுளத்தூர் தொகுதியில் என்னுடன் போட்டியிட தயாரா?’ என பாக்யராஜூக்கு செந்தில் சவால் விட்டார். 



அன்றைய தேர்தல் களத்தில், இந்த நான்கு அணிகளுமே சமமாக காணப்பட்டன. ஜெயலலிதா, ஜானகி இருவருமே சிறிய கிராமங்களில் கூட வீதி, வீதியாக திறந்த வேனில் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். தேர்தலுக்கு பிறகு தொங்கு சட்டசபை அமையும் அல்லது ஜெ. அணி, காங்கிரஸ் கூட்டணி அரசு அமையும் என்றே பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர். 



ஆனால், தேர்தல் முடிவில் 169 இடங்களை திமுக கூட்டணி வென்றது. திமுக மட்டும் 150 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலம் பெற்றது. மார்க்சிஸ்ட் 15 இடங்களை பெற்றது. சென்னை துறைமுகம் தொகுதியில் 32 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதியும், ஆயிரம் விளக்கு தொகுதியில் 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலினும் வெற்றி பெற்றனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழக முதல்வரானார் கருணாநிதி. 1989 ஜனவரி 27 அன்று தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்றார். 



தேர்தலில், 27 இடங்களை அதிமுக ஜெ. அணி கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. போடி தொகுதியில் 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன் முறையாக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்தார், ஜெயலலிதா. மேலும், தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமையையும் பெற்றார். (வேறு யாரும் இன்னும் பெண் எதிர்க்கட்சி தலைவராகவில்லை) ஆண்டிபட்டியில் அவரை எதிர்த்து ஜானகி அணி சார்பாக போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலா, 4வது இடத்தை பிடித்து டெபாசிட்டை பறிகொடுத்தார்.   

தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 26 இடங்கள் கிடைத்தன. தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மூப்பனார் வெற்றி பெற்றார். அதிமுக ஜா. அணியில் சேரன்மாதேவி தொகுதியில் இருந்து பி.எச்.பாண்டியன் மட்டுமே வெற்றி பெற்றார். ஆண்டிபட்டியில் ஜானகி அம்மாள் தோல்வியடைந்தது மட்டுமல்ல, 3வது இடத்தை பிடித்தார்.



ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்திருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திருவையாறு தொகுதியில் தோல்வியடைந்தார். அங்கு இரண்டாம் இடத்தை பிடித்தார். சில மாதங்களிலேயே தனது தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியையும் கலைத்து விட்டு ஜனதா தளத்தில் ஐக்கியமானார்.

இந்த தேர்தல் முடிவுகளால் அதிமுகவில் மாற்றங்கள் நிகழத் தொடங்கின.

(நினைவுகள் சுழலும்)