Tuesday 17 March 2015

கம்பர் பார்வையில் இலங்கை


மிக நெடிய நீண்ட நாட்களுக்கு பிறகு இலக்கியம் மீது கொண்ட காதலால் விளைந்த கட்டுரை இது.... 

 = வை.ரவீந்திரன்.


வால்மீகி எழுதிய ராமாயணத்துக்கும் கம்பரின் ராமாயணத்துக்கும் ஏராளமான வேறுபாடு உண்டு. தமிழருக்கே உரித்தான பண்பாட்டை மிகச் சிறப்பாக கம்பர் விவரித்திருப்பார். தமிழ் இலக்கியங்களில் கம்பரின் ராமாயண காவியம் தனித்துவமானது. கம்பரின் கற்பனை வளமும் இலக்கிய புலமையும், உவமை செறிவும் அதில் நிறைந்து காணப்படும். அந்த காவியத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியும் இலக்கிய ஆர்வலர்களின் ரசனைக்கு சிறந்த விருந்தாக இருப்பதாலேயே, ‘கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும்’ என்ற சொல் வழக்கு தமிழில் உருவானது.

பல்வேறு காண்டங்களாக பகுக்கப்பட்டிருக்கும் ராமாயணத்தில், ‘சுந்தர காண்டம்’ பகுதி சிறப்பு வாய்ந்தது. சுந்தரன் என்றால் அழகன் என்று பொருள். கம்பர் சுட்டிக் காட்டும் அந்த அழகன் யாரெனில் அனுமன். ஒருவரது புறத்தோற்றம் மட்டுமே அழகு அல்ல. சவுந்தர்யம், பராக்கிரமம், அறநெறி, தீமையை வேரறுத்தல் போன்ற குணங்களை கொண்டவரே உண்மையான அழகன் என அனுமனின் குணங்களை வெளிக்காட்டி பெருமைப்படுத்தி மகிழ்கிறார், கம்பர்.

இலங்கையில் அசோக வனத்தில் சிறைப்பட்டு கிடக்கும் சீதையின் நிலை குறித்து அறிந்து வருவதற்காக புறப்பட்டுச் செல்கிறான், அனுமன். வங்கக் கடலை கடந்து இலங்கை தீவுக்குள் அனுமன் நுழைந்ததும் அனுமனின் கண்கள் வழியாகவே இலங்கை மாநகரின் அழகையும் அதில் புதைந்து கிடக்கும் ஆபத்தையும் ஒரு சேர விவரிக்க தொடங்குகிறார். இலங்கையை மூதூர் என்று குறிப்பிடுவதோடு அந்த படலத்துக்கும் ‘ஊர் தேடு படலம்’ என்றும் பெயர் சூட்டியுள்ளார். சுந்தர காண்டத்தில் உள்ள படலங்களில் மிகப் பெரியதாக இந்த படலம் உள்ளது.

ஒரு விருந்தினராக வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டால் சிறப்பு விருந்தினராகவே இருந்தால் கூட, அந்த நாட்டின் சிறப்பான பகுதிகளை மட்டுமே சுட்டிக் காட்டுவார்கள். மறைக்க வேண்டியதை மறைத்து உயர்த்த வேண்டியதை உயர்த்தி காட்டும் மரபே இன்று வரை தொடருகிறது. அதனால்தான், இலங்கையை முழுவதும் சுற்றிக் காண்பிக்கும் வகையில் ‘ஏரியல் வியு’ எனப்படும் கழுகுப் பார்வை மூலமாக விவரிக்கிறார்.

ஒரு பொன் அந்தி மாலைப் பொழுதில் பவள மலையில் சென்று இறங்குகிறான், அனுமன். அங்கு இருந்தபடியே இலங்கையை காண்கிறான், மாருதி. அந்த இடத்தில் இலங்கையின் பரப்பளவும், தோற்றமும் சுட்டிக் காட்டப்படுகிறது. முட்டை வடிவில் காணப்படும் இலங்கை, 700 யோசனை பரப்பளவு கொண்டதாகவும் 3 பிரிவுகளாகவும் கடல், மலை, காடு போன்ற இயற்கை அரண்களோடு மதில், அகழி என்று பாதுகாப்பு அரண்கள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது.

இந்திரன் மாளிகையை விட சிறந்ததாக வானுயர்ந்து நிற்கும் மாளிகைகள் உள்ளன.தெருவின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு செல்வது என்பது ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்வதை போன்றதாகும். சூரியனிடம் உள்ளது போன்ற ஒளி மிகுந்த திடகாத்திரமான குதிரைகள், யானைகள், மக்கள் கூட்டம் என இலங்கை நகரம் நிறைந்து காணப்படுகிறது. அங்குள்ள மரங்கள் கூட, இந்திரனிடம் இருந்து ராவணன் பறித்து வந்த கற்பக தருக்கள் என்று வருணிக்கிறார், கம்பர்.

அடுத்தபடியாக, கம்பரின் கற்பனை திறன் சிறகடித்து பறப்பதை பாருங்கள். மலை போல உயர்ந்து நிற்கும் மதில் சுவர்களை தாண்டி நுழைய முடியாத காரணத்தால் மின் மினி பூச்சி போல கதிரவனின் ஒளி நகருக்குள் நுழைகிறதாம். சூரியனின் கதிர்கள் படாத காரணத்தால் மிகுந்த கரிய நிறமுடைய அரக்கர்களின் மேனிகளும் கூட சற்று வெளுப்படைந்து காணப்படுகிறதாம். நகரில் உள்ள தரை முழுவதும் பொன்னாகி விட்டதாலும் மாளிகைகளில் பொன், முத்து, வைரம், மணிகள் நிறைந்து காணப்படுவதாலும் அந்த ஒளியே சூரியனின் ஒளியை விழுங்கி விட்டது என்றும் கம்பர் விவரிக்கிறார்.  

இதை, ‘கறங்கு கால் புகாகதிரவன் ஒளிபுகா மறலி...’ என்று ஆரம்பித்து,

 ‘அறம் புகாதிந்த அணிமதிர் புறத்து நின்றகத்தின்...’ என்ற வரிகளுடன் நிறைவு செய்கிறார்.

அதாவது, இலங்கைக்குள் சூரியன் எவ்வாறு புகுந்து செல்ல முடியவில்லையோ அதுபோல அறநெறியும் அந்த மதில் சுவருக்குள் புக முடியாமல் புறத்தே நிற்கிறது என்று கூறுகிறார். அறம் நுழைய முடியாத அந்த மதிலுக்கு அப்பால் என்ன நடக்கிறது? அதையும் விவரிக்கிறார். வீணை இசைப்பதில் வல்லவனான ராவணனுக்கு இனிய இசை மீது அதிக மோகம் உண்டு. தனது கொடியிலேயே வீணையை இலச்சினையாக பொறித்தவன். அவன் வழியிலேயே இலங்கை நகர மாந்தர்களும் இனிய இசையை இசைத்து மகிழ்ந்து கிடக்கின்றனர்.


‘சாடியுள் நறவம் உண்டாள் தன் உரு வேறுபாட்டை

ஆடியுள் நோக்கி நானோ அல்லனோ.....’
என்ற வரிகள் மூலமாக மது மயக்கத்தில் கண்ணாடி முன்பு மருங்கி நிற்பதை சுட்டிக் காட்டுகிறார்.

அதே நேரத்தில் இலங்கை பெண்களின் குரலையும் அனுமன் வாயிலாக வியந்து
‘குழலும் வீணையும் யாழும் என்றினைய குழைய

மழலை மென்மொழி கிளிக்கிருந் தளிக்கின்ற மகளிர்’ 

என பாராட்டுகிறார், கம்பர்.


தேவாதி தேவர்களையும் வெற்றி கொண்டு தனது அடிமைகளாக ராவணன் வைத்திருந்தான் என்பது தெரியும். அவர்களும் இலங்கை நகரில் எப்படி இருக்கிறார்கள் என்பதை,

‘சித்திரப் பந்தியில் தேவர் சென்றனர்

இத்துணை தாழ்தனம் முனியும் என்றுதம்

முத்து இன ஆரங்களும் முடியின் மாலையும்

உத்தரீ யங்களும் இரிய ஒடுவார்’
என கூறுகிறார். 

அலுவலக நேரத்தை கடந்து சென்றால் சம்பளப் பிடித்தம் செய்வார்களோ என்று அஞ்சி ஓடும் தனியார் நிறுவன ஊழியர்கள் போல தேவர்கள் ஓடுகிறார்கள். எப்படி? மார்பில் அணிந்திருந்த மாலைகளும், அணிந்திருந்த ஆடைகளும் துவண்டு சரிய ஓட்டம் பிடிக்கின்றனர். அரண்மனைக்குள் நுழையும் போது அவர்கள் பணிந்த முறையானது, அடிமை வாழ்க்கையை சுட்டிக் காட்டுகிறது.

இதுபோல, ரம்பை, திலோத்தமை உள்ளிட்டோர் செல்வதை
‘உருப்பசி உடைவாள் எடுத்தனள் தொடர

      மேனகை வெள்ளடை உதவ

செருப்பினை தாங்கி திலோத்தமை செல்ல

       அரம்பையர் குழாம் புடைசூழ.....’   என்று பாடியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, பல தேசத்து மன்னர்களும் இலங்கை வேந்தனின் தாழ் பணிந்து தொழுது நிற்கின்றனர். அவ்வாறு மண்ணில் மண்டியிடும்போது கழுத்தில் அணிந்த மாலைகளில் இருந்து முத்து மற்றும் மணிகள் உதிருகின்றன. சூடியுள்ள பூக்களில் இருந்து மகரந்த தூள்கள் சிதறுகின்றன. இவை எல்லாம் தெருவில் குப்பைகளாக தேங்குகின்றன. அவற்றை வாயு பகவான் உடனுக்குடன் பெருக்கித் தள்ளி தெருவை சுத்தம் செய்கின்றான். இதில், மற்றொரு உட்பொருளும் பொதிந்துள்ளது. முத்தும், மணியும் தெருவில் கிடந்தாலும் யாரும் அதை பொருட்படுத்தாத அளவுக்கு செல்வச் செழிப்பில் இலங்கை இருக்கிறது என்பதே அதன் அர்த்தம்.  கம்பனின் கற்பனை வளத்தை என்னவென்று வியப்பது...?

பவள மலைக்கு அனுமன் வந்து நெடுநேரமாகி விட்டது. அங்கிருந்தபடியே இலங்கையை பார்த்த அவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை. இப்போது, இருட்ட தொடங்கி விட்டது. இலங்கையின் வானில் மெதுவாக இருள் கவிவதை, ‘ராவணனின் பாவம் போல வளர்ந்து, அவனது பழி போல பரந்து விரிகிறது இருள்’ என கம்பர் வருணிக்கிறார்.

இலங்கை நகரின் புற அழகை இந்த அளவுக்கு வருணித்து விட்டு அப்படியே அரண்மனை நோக்கி பயணிக்கிறார், கம்பர். அனுமன் வாயிலாக. ஆம். இருள் கவியத் தொடங்கியதும் பவள மலையில் இருந்து புறப்பட்டு அரண்மனைக்குள் உள்ள மாளிகைகளை நோக்கி செல்கிறான், அனுமன். சீதையை காணும் முன் அரண்மனைக்குள் அவன் பார்த்த காட்சிகளை விவரிப்பது தனி ரகம். அள்ளிப் பருக பருக சுவை குறையாத கம்ப ராமாயணத்தின் சிறு பகுதி இது

= வை.ரவீந்திரன்