Tuesday, April 5, 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 36= வை.ரவீந்திரன்


தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 2016 சட்டப்பேரவை தேர்தலில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டும். அதாவது, கால்பங்கு வாக்காளர்களின் வயது 18 முதல் 22க்குள் தான். தமிழக சட்டப்பேரவை வரலாறு குறித்த தகவல்களை அவர்கள் அறிந்து கொள்ளவே இந்த பதிவை தொடர்ச்சியாக எழுதி வந்தேன். 


1996 தேர்தலுக்கு பிறகு, தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை. திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. சுமார் 30 ஆண்டுகளாக கருணாநிதியும் ஜெயலலிதாவும் எதிர் எதிராக மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றனர். நடுவில் அவ்வப்போது சில கட்சிகளும் அணிகளும் பூதாகரமாக காணப்பட்டாலும் கூட, இவர்களை தவிர்த்து யாருமே வெற்றி பெற்றதில்லைஉதாரணமாக, 1996 தேர்தலில் மார்க்சிஸ்ட்டுடன் கூட்டணி வைத்து 177 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய மதிமுக கட்சியாகட்டும், 2006ம் ஆண்டு தேர்தலில் புதிதாக தோன்றிய விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகமாகட்டும் தேர்தல் நேரத்தில் மட்டுமே சலசலப்பை ஏற்படுத்தின. வேறு எந்த விளைவுகளையும் ஏற்படுத்த முடியவில்லை. தற்போது, 2016 தேர்தலிலும் மக்கள் கூட்டணி, பாமக என தேர்தல் களத்தில் பரபரப்பு தொற்றியுள்ளது. முடிவு மே 19ல் தெரியும்.
2006 தேர்தலைத் தொடர்ந்து 96 எம்எல்ஏக்களை மட்டுமே வைத்து பெரும்பான்மை பலமின்றி 5 ஆண்டு காலம் ஆட்சி செய்த கருணாநிதி சாதனை குறிப்பிடத்தக்கது. 1996 தேர்தல் வெற்றிக்கு பிறகு ஜெயலலிதாவை கருணாநிதி அரசு கைது செய்ததும் அதன்பின்னர், 2001 தேர்தல் வெற்றிக்கு பிறகு கருணாநிதியை ஜெயலலிதா அரசு கைது செய்ததும் வரலாற்று பதிவுகள்.

இடையே, 2011 தேர்தலுக்கு முன்பாக 2008ம் ஆண்டில் சட்டப்பேரவை தொகுதிகளின் எல்லைகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டன. அதனால், சில தொகுதிகள் மாயமாகின (உம்: சென்னையில் பூங்காநகர், புரசைவாக்கம்) சில புதிய தொகுதிகள் உதயமாகின (உம்: சென்னையில் மாதவரம்). எனினும், சட்டப்பேரவை தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 234 என்பதில் மாற்றமில்லை. வாக்காளர் எண்ணிக்கை மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் நடைபெற்ற இந்த சீரமைப்புக்கு பிறகு, பாராளுமன்ற தொகுதிகளுக்கு அடங்கிய சட்டப்பேரவை தொகுதிகளிலும் மாற்றம் ஏற்பட்டது. அதன்படியே, 2009 பாராளுமன்ற தேர்தல் நடந்தது.  

தேசிய அரசியலைப் பொறுத்தவரையிலும் அரசியலில் சோனியா அடியெடுத்து வைத்தது, பாஜக வளர்ச்சி என்பது போன்ற தகவல்களையும், 1996 முதல் கடந்த 20 ஆண்டு கால தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றை பல்வேறு தரப்பினரும் அலசுவதால் அவற்றில் இருந்து தமிழக தகவல்களையும் புதிய வாக்காளர்கள் பெற்றிருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் எனது இந்த தொடரை தற்போதைக்கு நிறைவு செய்கிறேன்.

மீண்டும் வேறு ஒரு களத்தில் ... 
வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ... 
சந்திப்போம் நண்பர்களே ...


நன்றி

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 35= வை.ரவீந்திரன் 
 
1991 தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் அமைந்த ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. வளர்ப்பு மகன் திருமணம், கும்பகோணம் மகாமகம் கூட்ட நெரிசலில் பக்தர்கள் பலி என சர்ச்சைகள் வரிசை கட்டி நின்றன. மத்தியிலும் நரசிம்ம ராவ் ஆட்சியின் மீது ஊழல் புகார்கள் எழுந்தன. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு என தொடர்ந்தது.1991 தேர்தலுக்கு பிறகு தான், தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும் வழக்கம் இடைவிடாமல் தொடருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழ்நிலையில், 1996ம் ஆண்டு சட்டப்பேரவைக்கும், பாராளுமன்றத்துக்கும் சேர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது, அதிமுக கூட்டணி தொடரும் என காங்கிரஸ் மேலிடம் சார்பாக பிரதமர் நரசிம்ம ராவ் அறிவித்தார்.உடனே, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அதிமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று கூறி மூப்பனார் தலைமையில் ஒரு பிரிவினர் போர்க்கொடி தூக்க, சத்தியமூர்த்தி பவனில் கலவரம் ஏற்பட்டது. பெரும்பான்மையானோர் மூப்பனார் வசம் இருந்ததால் தமிழ் மாநில கட்சி தோன்றி, திமுகவுடன் கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணிக்கு ரஜினி காந்த் கொடுத்த ‘வாய்ஸ்’, தானாக முன் வந்து நடிகர் சரத்குமார் மேற்கொண்ட பிரச்சாரம் என டாப் கியரில் ஓடியது. மறுபுறம், ஊழல் கூட்டணி என்று முத்திரை குத்தப்பட்ட அதிமுக, காங்கிரஸ் கூட்டணி பரிதாபமாக இருந்தது. இந்த தேர்தலில் தான் முதன் முறையாக, திமுகவில் இருந்து பிரிந்து சென்ற வைகோ தலைமையிலான மதிமுக போட்டியிட்டது. திமுக அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மதிமுக அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்திருந்தன.    

  

1996ம் ஆண்டு மே 2ம் தேதி நடந்த தேர்தலில் திமுக / தமாகா கூட்டணி 221 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. 4வது முறையாக தமிழக முதல்வரானார் கருணாநிதி. தமாகாவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. பர்கூர் தொகுதியில் திமுகவின் அறிமுக வேட்பாளர் சுகவனத்திடம் முதல்வர் ஜெயலலிதா தோல்வி அடைந்தார். அதுபோல, விளாத்திகுளம், சிவகாசி என இரண்டு இடங்களில் போட்டியிட்ட வைகோவும் தோல்வி அடைந்தார்.

(நினைவுகள் சுழலும்)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 34= வை.ரவீந்திரன்

தமிழக சட்டப்பேரவைக்கு 1991ல் தேர்தல் நடந்தபோது, பாராளுமன்றத்துக்கும் மூன்று கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ஆயத்தமாக தொடங்கின. அதிமுகவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்தன. ‘எம்ஜிஆர் பார்முலா’ படி சட்டப்பேரவைக்கு அதிக தொகுதிகளில் (168) அதிமுகவும் பாராளுமன்றத்துக்கு அதிக தொகுதிகளில் (26) காங்கிரசும் போட்டியிட்டன. 

 திமுக அணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஜனதா தளம் கட்சியும் இடம் பெற்றன. அப்போது, ஜனதா தளம் கட்சியின் தலைவராக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருந்தார். மேலும், ஜெயலலிதாவுடன் கருத்து மோதலால் அதிமுகவில்  வெளியேறிய திருநாவுக்கரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரும், தாயக மறுமலர்ச்சி கழகம் நடத்தி வந்த நடிகர் டி.ராஜேந்தரும் திமுக அணியில் இணைந்தனர்.

ஆட்சிக் கலைப்புக்கு நியாயம் கேட்டு திமுக பிரச்சாரம் செய்தது. அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாகவும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக திமுக செயல்படுவதாகவும் அதிமுக கூட்டணி பிரச்சாரம் செய்தது. இந்த நிலையில், பாராளுமன்றத்துக்கு முதல்கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதிகளுக்கு 1991 மே 20ம் தேதி அன்று வாக்குப்பதிவு முடிந்தது. 
அதற்கு மறுநாளில் தேசத்தையே உலுக்கிய கோர சம்பவம் ஒன்று, தமிழ் மண்ணில் நடந்தது. தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மே 21 அன்று சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தேர்தல் ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. 
அதன்படி, ஜூன் மாதம் தேர்தல் நடைபெற்றது. ராஜீவ் படுகொலையால் எழுந்த அலையில், 225 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. 164 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. காங்கேயம், பர்கூர் என இரண்டு தொகுதியில் வெற்றி பெற்ற ஜெயலலிதா, தமிழக முதல்வராக தேர்வானார். 1991ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி தமிழக முதல்வர் பதவியை ஏற்றபோது அவருக்கு வயது 43. தமிழகத்தில் மிக இளம் வயதில் முதல்வர் பதவியேற்ற பெருமை ஜெயலலிதாவையே சேரும்.திமுக கூட்டணிக்கு 7 இடங்கள் மட்டுமே கிடைத்தன. சென்னை துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த கருணாநிதி, அந்த பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக இணைப்பை எதிர்த்த பி.எச்.பாண்டியன், சுயேச்சையாக சேரன்மாதேவி தொகுதியில் வெற்றி பெற்றார். இந்த சட்டப்பேரவை தேர்தலில்தான் முதன் முறையாக பாமக களம் இறங்கியது. அந்த கட்சி சார்பாக பண்ருட்டி தொகுதியில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.

சட்டப்பேரவை தேர்தலுடன் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து 39 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி வென்றது. மத்தியில் காங்கிரஸ் சார்பாக பிரதமரானார் பி.வி.நரசிம்மராவ்.

(நினைவுகள் சுழலும்)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 33= வை.ரவீந்திரன்தமிழக சட்டப்பேரவையில் 1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி அன்று முதல்வர் கருணாநிதி பட்ஜெட் தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சி தலைவரான ஜெயலலிதா எழுந்து, தனது வீட்டுக்குள் போலீஸார் அத்துமீறி நுழைந்தது குறித்த பிரச்சினையை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தார். கருணாநிதி கையில் இருந்த பட்ஜெட் உரை நகலை பறிக்க முயன்றார். (அப்போது சட்டப்பேரவையில் ஓரிரு அடி இடைவெளியில் தான் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவரும் எதிர் எதிரில் அமர்ந்திருப்பார்கள். பின்னாளில் மோதல்கள் அதிகரித்ததும் ஆளும் கட்சி வரிசை மற்றும் எதிர்க்கட்சி வரிசை இருக்கைகளுக்கு இடையிலான இடைவெளி அதிகப்படுத்தப்பட்டது)
  

கருணாநிதி கையில் இருந்த பட்ஜெட் உரையை ஜெயலலிதா பறிக்க முயன்றதன் தொடர்ச்சியாக சட்டப்பேரவைக்குள் கலவரம் உருவானது. ஜெயலலிதாவை தாக்க துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் பாய்ந்து வந்தனர். அவர்களை திருநாவுக்கரசு, சாத்தூர் ராமச்சந்திரன் போன்றோர் தடுத்து ஜெயலலிதாவை பாதுகாத்தனர். எனினும், கலவரத்தில் ஜெயலலிதாவின் புடவை கிழிக்கப்பட்டது. 
 
 சட்டப்பேரவையில் இருந்து தலைவிரி கோலமாக வெளியே வந்த ஜெயலலிதா, ‘மீண்டும் இந்த பேரவைக்குள் முதல்வராகத்தான் நுழைவேன்’ என அறிவித்தார்.  மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த எஸ்.ஆர்.ராதாவை எதிர்க்கட்சி தலைவராக்கினார். இதன்பிறகு, கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்காக சட்டப்பேரவைக்கு வெளியில் காங்கிரசுடன் இணைந்து தீவிரமாக செயல்பட தொடங்கினார்.இந்த நிலையில், 1989 நவம்பரில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில், அதிமுகவும் காங்கிரசும் இணைந்து போட்டியிட்டு தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளை கைப்பற்றின. நாகப்பட்டினம் தொகுதியில் மட்டும் ஆளும் திமுக அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. எனினும், அகில இந்திய அளவில் வெறும் 197 இடங்களை மட்டுமே பெற்று காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அதன் பிறகு இதுவரையிலும் மத்தியில் தனிப்பெரும்பான்மையை (272+) காங்கிரஸ் கட்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

143 இடங்களில் மட்டுமே வென்றிருந்த ஜனதா தளம் தலைவர் வி.பி.சிங், உதிரி கட்சிகளின் ஆதரவோடு தேசிய முன்னணி தலைவராக பிரதமர் பதவியை ஏற்றார். அவருக்கு கம்யூனிஸ்ட்டுகளும் பாஜகவும் வெளியில் இருந்து ஆதரவளித்தன. தமிழகத்தில் ஒரு எம்பி தொகுதியில் கூட திமுக வெற்றி பெறா விட்டாலும் கூட அந்த கட்சியின் மேல்சபை எம்பியாக இருந்த முரசொலி மாறனுக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டது. பின்னர், மண்டல் கமிஷன் பரிந்துரை மற்றும் அயோத்தி ராம ஜென்ம பூமி விவகாரத்தில் பாஜக ஆதரவை வாபஸ் பெற்றதால் வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்தது. அவரது கட்சியில் இருந்து (தேவிலால், தேவேகவுடா, சவுதாலா, மேனகா காந்தி உள்ளிட்ட ஆதரவாளர்களுடன்) பிரிந்த சந்திரசேகரை பிரதமராக்கி அவரது ஆட்சிக்கு (197 எம்பிக்களுடன்) வெளியில் இருந்து ஆதரவளித்தார் ராஜீவ்காந்தி. மத்தியில் சாதகமான ஆட்சி அமைந்ததும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினார் ஜெயலலிதா. 
1980ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து எம்ஜிஆர் ஆட்சியை கலைக்க கருணாநிதி எப்படி நெருக்கடி கொடுத்தாரோ, அதே போன்ற நெருக்கடியை அதிமுக கொடுக்க தொடங்கியது. விளைவாக.... 1991ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியை சந்திரசேகர் அரசு கலைத்தது. அடுத்த மாதமே சந்திரசேகரின் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ராஜீவ்காந்தி வாபஸ் பெற்றார். இதனால், 1991ம் ஆண்டு மே மாதத்தில் பாராளுமன்றத்துக்கும், தமிழக சட்டப்பேரவைக்கும் சேர்த்து தேர்தல் அறிவிப்பு வெளியானது.

(நினைவுகள் சுழலும்...)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 32= வை.ரவீந்திரன்

தமிழகத்தில் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி மீண்டும் அமர்ந்த பிறகு, 1989 தேர்தல் தோல்வி குறித்து அதிமுகவின் இரண்டு அணிகளும் ஆராயத் தொடங்கின. அப்போது தான், ‘வாக்கு வங்கி’ முதன் முதலில் ஆய்வு செய்யப்பட்டது. அந்த தேர்தலில் திமுக பெற்ற வாக்குகள் 33 சதவீதம். பெரும்பாலான தொகுதிகளில் 2ம் இடத்தை பிடித்த ஜெ.அணி பெற்ற வாக்குகள் 22 சதவீதம், ஜா. கூட்டணி பெற்றது 12 சதவீத வாக்குகள். இது தவிர, 19 சதவீத வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருந்தது. 

அதற்கு முந்தைய 1984ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி பெற்றிருந்த வாக்கு சதவீதத்தில் 1989 தேர்தலில் அந்த அணியில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், 1984ல் அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் அனைத்தும் 1989ம் ஆண்டு தேர்தலில் மூன்றாக சிதறியதாலேயே ஆட்சியை திமுக கைப்பற்றியது என்ற உண்மையை அதிமுகவின் இரு அணியினரும் உணரத் தொடங்கினர். இதனால், கட்சியை மீண்டும் இணைக்கும் முயற்சிகள் ஆரம்பமானது. 
தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே ஜெயலலிதாவும், ஜானகி அம்மாளும் சந்தித்தனர். முன்னதாக சென்னையில் தேவகி அம்மாள் மருத்துவமனையில் வைத்து நலம் விசாரிக்கும் விதமாக சந்திப்பு நிகழ்ந்தது. இரு அணிகளும் முறைப்படி இணைந்ததும் இரட்டை இலை சின்னமும் மீண்டும் பெறப்பட்டது. இந்த இணைப்பை பிடிக்காத சிலர் வெளியேறினர் அல்லது தனிக்கட்சி தொடங்கினர். பி.எச்.பாண்டியன் இணையவில்லை. எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை நடிகர் பாக்யராஜ் தொடங்கினார். இதற்கிடையே, பொதுத் தேர்தலின்போது வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டு இருந்த மதுரை கிழக்கு, மருங்காபுரி ஆகிய தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுக களமிறங்கி இரண்டு தொகுதிகளையுமே கைப்பற்றியது. மீண்டும் அதிமுக தலையெடுக்க தொடங்கிய சமயத்தில், போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்குள் போலீஸார் நுழைந்து, அவர் எழுதியதாக கூறப்பட்ட ராஜினாமா கடிதம் ஒன்றை கைப்பற்றினர். எதிர்க்கட்சி தலைவர் வீட்டுக்குள் அத்துமீறி போலீஸார் நுழைந்த சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கடும் கண்டனக் குரல் எழுந்தது. அத்துமீறி வீட்டுக்குள் நுழைவது கிரிமினல் குற்றம் என கூறப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையிலும் இந்த சம்பவம் எதிரொலித்தது. நிதித் துறை பொறுப்பு வகித்த முதல்வர் கருணாநிதி, 1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி அன்று பட்ஜெட் தாக்கல் செய்ய எழுந்தார். அதன் பிறகு, சட்டப்பேரவையின் நிலவரம் கலவரமானது. 1988 ஜனவரி 28 போலவே மீண்டும் ஒரு கருப்பு தினம் உருவானது.

(நினைவுகள் சுழலும்)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 31= வை.ரவீந்திரன்

தமிழகத்தில் எம்ஜிஆர் இல்லாத முதலாவது தேர்தலான 1989ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் முழு வீச்சாக களமிறங்கியது திமுக. எப்போதுமே தேர்தல் அறிக்கையில் முக்கிய கவனம் செலுத்தும் அந்த கட்சியின் அன்றைய கோஷம், ‘செய்வதை சொல்வோம், சொன்னதை செய்வோம்’. முக்கிய பண்டிகை நாட்களில் 5 கிலோ இலவச அரிசி வழங்குவதாக திமுக அறிவித்தது பிரபலமாக பேசப்பட்டது. ஏனெனில், அப்போது ரேஷன் அரிசி விலை கிலோ ரூ.3.75. மேலும், தேசிய அளவில் பிரபலமாகிக் கொண்டிருந்த வி.பி.சிங், திமுகவுக்கு ஆதரவாக தமிழகத்தில் பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் கட்சிக்காக 14 முறை தமிழகம் வந்த பிரதமர் ராஜீவ், சிறிய நகரங்களில் கூட பொதுக் கூட்டங்களில் பங்கேற்றார். எம்ஜிஆரால் கலையுலக வாரிசு என அறிவிக்கப்பட்ட பாக்யராஜ், அந்த தேர்தலில் ஜானகி அணிக்காக பிரசாரம் செய்தார். ஜெயலலிதா போட்டியிடும் தொகுதியில் களமிறங்க வெண்ணிற ஆடை நிர்மலா தயாரானார். ஜெ. அணியில் அப்போதைய முன்னணி நடிகரான ராமராஜன், செந்தில் போன்றோர் பிரசாரம் செய்தனர். ‘முதுகுளத்தூர் தொகுதியில் என்னுடன் போட்டியிட தயாரா?’ என பாக்யராஜூக்கு செந்தில் சவால் விட்டார். அன்றைய தேர்தல் களத்தில், இந்த நான்கு அணிகளுமே சமமாக காணப்பட்டன. ஜெயலலிதா, ஜானகி இருவருமே சிறிய கிராமங்களில் கூட வீதி, வீதியாக திறந்த வேனில் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். தேர்தலுக்கு பிறகு தொங்கு சட்டசபை அமையும் அல்லது ஜெ. அணி, காங்கிரஸ் கூட்டணி அரசு அமையும் என்றே பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர். ஆனால், தேர்தல் முடிவில் 169 இடங்களை திமுக கூட்டணி வென்றது. திமுக மட்டும் 150 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலம் பெற்றது. மார்க்சிஸ்ட் 15 இடங்களை பெற்றது. சென்னை துறைமுகம் தொகுதியில் 32 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதியும், ஆயிரம் விளக்கு தொகுதியில் 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலினும் வெற்றி பெற்றனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழக முதல்வரானார் கருணாநிதி. 1989 ஜனவரி 27 அன்று தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்றார். தேர்தலில், 27 இடங்களை அதிமுக ஜெ. அணி கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. போடி தொகுதியில் 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன் முறையாக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்தார், ஜெயலலிதா. மேலும், தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமையையும் பெற்றார். (வேறு யாரும் இன்னும் பெண் எதிர்க்கட்சி தலைவராகவில்லை) ஆண்டிபட்டியில் அவரை எதிர்த்து ஜானகி அணி சார்பாக போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலா, 4வது இடத்தை பிடித்து டெபாசிட்டை பறிகொடுத்தார்.   

தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 26 இடங்கள் கிடைத்தன. தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மூப்பனார் வெற்றி பெற்றார். அதிமுக ஜா. அணியில் சேரன்மாதேவி தொகுதியில் இருந்து பி.எச்.பாண்டியன் மட்டுமே வெற்றி பெற்றார். ஆண்டிபட்டியில் ஜானகி அம்மாள் தோல்வியடைந்தது மட்டுமல்ல, 3வது இடத்தை பிடித்தார்.ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்திருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திருவையாறு தொகுதியில் தோல்வியடைந்தார். அங்கு இரண்டாம் இடத்தை பிடித்தார். சில மாதங்களிலேயே தனது தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியையும் கலைத்து விட்டு ஜனதா தளத்தில் ஐக்கியமானார்.

இந்த தேர்தல் முடிவுகளால் அதிமுகவில் மாற்றங்கள் நிகழத் தொடங்கின.

(நினைவுகள் சுழலும்)

Monday, April 4, 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 30எலக்சன் ரீவைண்டு ... 30
=========
மத்தியில் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எதிராக போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், 1989ம் ஆண்டு ஜனவரி 21ல் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. தமிழக தேர்தல் களம் சுறுசுறுப்பானது. இந்த தேர்தலில் தமிழகம் 4 முனை போட்டியை கண்டது. தேர்தலின்போது, நான்கு அணிகளுமே சம பலத்துடன் காணப்பட்டன.

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் வேறு சின்னத்தை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் அதிமுகவின் இரண்டு அணிகளும் இருந்தன. இறுதியாக ஜானகி தலைமையிலான அணிக்கு (அதிமுக ஜா) இரட்டை புறா சின்னம் ஒதுக்கப்பட்டது. அதிமுக (ஜா) தலைமையிலான கூட்டணியில் சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி இணைந்தது. ஜானகி அணி 175 இடங்களிலும், சிவாஜி கட்சி 50 இடங்களிலும் போட்டியிட்டன.

ஜெயலலிதா தலைமையிலான அணி (அதிமுக ஜெ) ‘சேவல்’ சின்னத்தை பெற்றது. ஜெயலலிதா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இடம் பெற்றது. அதிமுக (ஜெ) மட்டும் 198 தொகுதிகளில் போட்டியிட்டது. ஜி.கே.மூப்பனார் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியில் தா.பாண்டியனின் கம்யூனிஸ்ட் இணைந்தது. அந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மட்டும் 214 தொகுதிகளில் போட்டியிட்டது. எப்பாடுபட்டாவது தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வரும் எண்ணத்தில் 14 முறை தமிழகம் வந்து சென்றார், பிரதமர் ராஜீவ்.


ஏற்கனவே, தேசிய அளவில் ‘தேசிய முன்னணி’யில் இணைந்திருந்த திமுக, அந்த பெயரிலேயே கூட்டணி அமைத்தது. கருணாநிதி தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இரா.செழியன் தலைமையிலான ஜனதா கட்சி இடம் பெற்றன. திமுக மட்டும் 202 தொகுதியில் போட்டியிட்டது.   இதற்கிடையே, ஜெயலலிதா அணிக்குள் சில மாதங்களிலேயே குழப்பம் ஏற்பட்டு நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், ராசாராம் ஆகிய 4 மூத்த தலைவர்களும் வெளியேறினர். அதிமுக (நால்வர் அணி) என்று அழைக்கப்பட்ட அந்த அணியும் ‘தென்னை மரம்’ சின்னத்தில் களமிறங்கியது. 

‘உதிர்ந்த உரோமங்கள்’, ‘கறந்த பால் மடி புகாது’, ‘கருவாடு மீன் ஆகாது’ என்பது போன்ற பிரபல விமர்சன வசனங்களுடன் நடைபெற்ற 1989 சட்டப்பேரவை தேர்தலின் முடிவு எப்படி அமைந்தது ...?

(நினைவுகள் சுழலும்) 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 29= வை.ரவீந்திரன்.

தமிழகத்தில் 1988ல் ஜனாதிபதி ஆட்சி தொடங்கியதும் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கான பணிகளை கட்சி மேலிடம் தொடங்கியது. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடப்பது போலவும் நியாயமான நிர்வாகம் நடப்பதாகவும் தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. ஆட்டோ சங்கர் வழக்கு பிரபலமானது இந்த சமயத்தில் தான். இது தவிர, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக ஜி.கே.மூப்பனார் நியமிக்கப்பட்டார்.மறுபுறம், அதிமுகவுக்குள் பங்காளி சண்டை கொடிகட்டி பறந்தது. அதிமுக (ஜா), அதிமுக (ஜெ) என கட்சி இரண்டாக பிளவு பட்டது. இரு தரப்பில் இருந்தும் பறந்த விமர்சனக் கணைகள் அனைத்துமே காது கூசச் செய்பவை. இரண்டு அணிகளுக்குமே அதிமுக பொதுக்குழுவில் சம பலத்தில் ஆதரவு இருந்தது. அதனால், இரண்டு அணிகளுமே கட்சிக்கு உரிமை கொண்டாடின. இறுதியில் எந்த அணிக்கும் இல்லாமல் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

அதிமுக நிலைமை இப்படி இருக்க... 1977ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று தேர்தல்களில் திமுக தோல்வி அடைந்ததாலும், 1984 தேர்தலில் சட்டப்பேரவை கட்சி அங்கீகாரம் பெறுவதே சிக்கலாகி போனதாலும், 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத திமுகவால் இனிமேல் தலையெடுக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கருதினர். அடுத்த ஆட்சி நம்முடையதே என்ற உற்சாகத்துடன் வலம் வரத் தொடங்கினர்.

முன்னதாக, அதிமுக ஜெயலலிதா அணியுடன் கூட்டணி அமைத்தால் என்ன என்ற யோசனையும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மத்தியில் எழுந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக இருந்த சிவாஜி கணேசன், அந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து வெளியேறினார். 1988 பிப்ரவரியில் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியை தொடங்கினார்.இதற்கிடையே, மத்தியில் ராஜீவ் அரசுக்கு எதிராக போபார்ஸ் பீரங்கி பேர ஊழல் விஸ்வரூபமெடுத்தது. அவர் மீது குற்றச்சாட்டு கூறிய அமைச்சர் வி.பி.சிங் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். எனவே, ‘ஜன மோர்ச்சா’ என்ற கட்சியை தொடங்கிய வி.பி.சிங், பின்னாளில் ஜனதா தளத்துடன் இணைந்து லோக்தளம், அசாம் கணபரிஷத், தெலுங்கு தேசம் என பல்வேறு மாநில கட்சிகளை இணைத்துக் கொண்டு அகில இந்திய அளவில் காங்கிரசுக்கு எதிராக ‘தேசிய முன்னணி’ என்று கூட்டணியை உருவாக்கினார். அந்த கூட்டணியில் தமிழகத்தில் இருந்து திமுக இணைந்தது. இத்தகைய அரசியல் சூழ்நிலையில் 1989ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியது.

(நினைவுகள் சுழலும்)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 28
= வை.ரவீந்திரன்.

ஜானகி அம்மாள் தலைமையிலான அரசை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் எஸ்.எல்.குரானா உத்தரவிட்டதை தொடர்ந்து, 1988ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடியது. வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக, காங்கிரஸ் ஆதரவை ஜானகி அரசு நாடியபோது, ‘பிளவுபட்ட அதிமுகவில் எந்த அணியையும் காங்கிரஸ் ஆதரிக்காது’ என ராஜீவ் கைவிரித்து விட்டார்.

கடைசிகட்ட முயற்சியாக திமுக ஆதரவை ஆர்.எம்.வீரப்பன் நாடிச் சென்றார். அவரது யோசனையை திமுக நிராகரித்து விட்டது. மேலும், திமுக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுமே தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதற்கிடையே, சட்டப்பேரவையில் ஜெயலலிதா ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 33 பேரை பதவி நீக்கம் செய்வதாக சபாநாயகர் பி.எச்.பாண்டியன் அறிவித்தார். ஏற்கனவே, திமுகவில் 10 பேர் நீக்கப்பட்டு இருந்ததால், தமிழகு சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 191 ஆக குறைந்தது. 

காங்கிரஸ், திமுக புறக்கணித்தது போக மீதமுள்ள 111 எம்எல்ஏக்களில் 99 பேரின் ஆதரவோடு ஜானகி அம்மாள் அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் பி.எச்.பாண்டியன் அறிவித்தார். ஜெ. ஆதரவு எம்எல்ஏக்கள் நீக்கம் தொடர்பான வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. மைக்குகளை பிடுங்கிக் கொண்டு அதிமுகவின் இரு பிரிவு எம்எல்ஏக்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். சட்டப்பேரவைக்குள் போலீஸாரை வரவழைத்து அமைதியை நிலைநாட்ட வேண்டிய சூழல் உருவானது. போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம் தலைமையில் போலீஸார் நுழைந்து எம்எல்ஏக்களை வெளியேற்றினர்.தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற வரலாறு காணாத கலவரத்தால் ஜானகி அம்மாள் தலைமையிலான அரசை 1988ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி ராஜீவ்காந்தி தலைமையிலான மத்திய அரசு கலைத்தது. வெறும் 24 நாட்கள் மட்டுமே தமிழக முதல்வராக ஜானகி அம்மாள் இருந்தார். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. பின்னர், புதிய ஆளுநராக 1988 பிப்ரவரியில் பி.சி.அலெக்சாண்டர் பொறுப்பேற்றார்.

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடிக்க நல்ல சந்தர்ப்பம் என கருதி காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வேலைகள் தொடங்கின. ஜனாதிபதி ஆட்சி அமலான ஆறு மாதங்களுக்குள் தேர்தலை நடத்தாமல் மேலும் ஆறு மாத காலத்துக்கு தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை ராஜீவ் அரசு நீட்டித்தது.  

(நினைவுகள் சுழலும்)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 27
= வை.ரவீந்திரன்

1969ம் ஆண்டில் புற்றுநோய் சிகிச்சைக்காக முதல்வர் அண்ணா சென்ற சமயத்திலேயே தமிழகத்தின் இடைக்கால முதல்வராக பதவி வகித்த பெருமை உடையவர், நாவலர் நெடுஞ்செழியன். எம்ஜிஆர் சிகிச்சை பெற சென்றபோதும் அவரே இடைக்கால முதல்வராக இருந்தார். எம்ஜிஆர் மறைந்த போதும் நாவலரே இடைக்கால முதல்வர். ஆனால், முதல்வர் பதவிக்கு திடீரென ஜானகி அம்மாளை நிறுத்தியதால் அதிர்ச்சி அடைந்தார்.  ஜெயலலிதா தலைமையில் மற்றொரு பிரிவு உருவானது. மொத்தமுள்ள 132 அதிமுக எம்எல்ஏக்களில் இடைக்கால முதல்வராக இருந்த நெடுஞ்செழியன், அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, சாத்தூர் (கேகேஎஸ்எஸ்ஆர்) ராமச்சந்திரன் உட்பட 35 பேர் ஜெயலலிதா தலைமையில் அணி திரண்டனர். இந்த நால்வரும் தான் ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சிக்கு முதலில் அடித்தளமிட்டவர்கள்.  அப்போது, ஜெயலலிதா ஆதரவு எம்எல்ஏக்களை வெளியூருக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்திருந்த நிகழ்வும் அரங்கேறியது.அதேநேரம், சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன், அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், கா.காளிமுத்து உட்பட 97 எம்எல்ஏக்கள் ஜானகி அம்மாள் ஆதரவாளராக இருந்தனர். ஜானகி அம்மாள் தலைமையிலான அதிமுக ஆட்சி தொடர வேண்டுமானால் 118 எம்எல்ஏக்கள் தேவை. ஆனால், தனக்கு ‘வானளாவிய அதிகாரம்’ இருப்பதாக கூறிய சபாநாயகர் பி.எச்.பாண்டியன், அரசியல் சட்ட நகலை எரித்ததாக திமுக எம்எல்ஏக்கள் 10 பேரை, ஏற்கனவே 1986 டிசம்பரில் சஸ்பெண்ட் செய்திருந்தார். மேலும், திமுகவின் சட்டப்பேரவை கட்சி அங்கீகாரத்தையும் ரத்து செய்திருந்தார். அதனால், 113 பேரின் ஆதரவு இருந்தால் போதும்.

இதுபோன்ற, சிக்கலான சூழ்நிலையில், 1988ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி  தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஜானகி அரசு கொண்டு வந்தது. அந்த நாள்... பாரம்பரியமிக்க தமிழக சட்டப்பேரவையின் கருப்பு தினமாக அமைந்தது. தமிழக மக்களும் தமிழக சட்டப்பேரவையும் அதுவரை காணாத அவலங்கள் அன்று அரங்கேறின.

(நினைவுகள் சுழலும்)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 26= வை.ரவீந்திரன்
======

தமிழகத்தில் ஹாட்ரிக் வெற்றியுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக  முதல்வராக பொறுப்பேற்ற எம்ஜிஆரின் உடல்நிலை, 1985க்கு பிறகு சீராக இல்லை. பக்கவாதம் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று குணமாகி இருந்தாலும் தொடர் மருத்துவ பரிசோதனைக்காக அடிக்கடி அமெரிக்கா சென்று வந்தார். அவரது குரலும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. 1984ம் ஆண்டில் உடல்நலக் குறைவுக்கு முன்பாக, மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆயிரமாவது பிறந்த நாள் (சதய) விழாவில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசியதுதான் எம்ஜிஆர் கடைசியாக ஆற்றிய நெடிய உரை என கூறலாம்.இந்த நிலையில், கட்சியிலும் ஆட்சியிலும் இரண்டாம் நிலை தலைவர்கள் ஆதிக்கம் மேலோங்கியதால் ஊழல் புகார்கள் அதிகமாக எழுந்தன. மூத்த தலைவர்களுக்குள் புகைந்த உட்கட்சி பூசலின் விளைவாக, சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் தோல்வி, 1986 உள்ளாட்சி தேர்தலில் தோல்வி (97 நகராட்சிகளில் 64ஐ திமுக கைப்பற்றியது), சட்ட மேலவையில் பட்டதாரி, ஆசிரியர் தொகுதிகளில் தோல்வி என தொடர்ந்தது. இந்த காலகட்டத்தில் தான், தமிழகத்தில் சட்ட மேலவை கலைக்கப்பட்டதும் நினைவில் கொள்ளத்தக்கது.இப்படியாக சென்று கொண்டிருந்த அரசியல் சூழலில் ஒரு சோகம் நிகழ்ந்தது. மூன்றாவது முறையாக முதல்வரான எம்ஜிஆர், சரியாக அடுத்த மூன்றே ஆண்டுகளில் 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி உயிரிழந்தார். அவர் மறைவை தொடர்ந்து, அதிமுக மூத்த தலைவர்களுக்குள் வெளிப்படையாகவே கோஷ்டி கானம் ஒலிக்க தொடங்கியது.

கட்சிக்குள் ஜெயலலிதா வளர்ச்சியை பொறுக்க முடியாத நிலைமையில் சிலர் இருந்தனர். எம்ஜிஆர் இறுதி ஊர்வலத்தின்போது, அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராணுவ வண்டியில் இருந்து ஜெயலலிதா கீழே தள்ளப்பட்டார். அதில் இருந்தே, தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியது. கீழே தள்ளப்பட்ட ஜெயலலிதா, அரசியலில் எழுச்சி காணத் தொடங்கினார்.  எம்ஜிஆர் உடல் அடக்கம் செய்யப்பட்ட சில நாளிலேயே அதிமுகவில்  பிளவு ஏற்பட்டது. அதுவரை அரசியல் பக்கமே எட்டிப்பார்க்காமல் இருந்த எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாளை அரசியலுக்கு அழைத்து வந்து 1988 ஜனவரி 7 அன்று அவரை முதல்வராக்கினார் ஆர்.எம்.வீரப்பன். தமிழகத்தின் முதல் பெண் முதல்வரானார் ஜானகி. அவரை கட்சியில் சிலர் ஏற்கவில்லை. இடைக்கால முதல்வராக இருந்த நெடுஞ்செழியனும் ஏமாற்றமடைந்தார்.

(நினைவுகள் சுழலும்)

Friday, April 1, 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 25= வை.ரவீந்திரன். 

தமிழகத்தில் 1984ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் களம் முற்றிலும் வித்தியாசமானது. ஆளும் அதிமுக கூட்டணியில் அதிமுக தலைவர் எம்ஜிஆர், தமிழகத்தில் இல்லை. அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். மற்றொரு கட்சியான காங்கிரசில் பிரபலமான தலைவரான இந்திரா மறைந்ததோடு, மக்களுக்கு பரிச்சயமே இல்லாத அவரது மகன் ராஜீவ் காந்தி தலைமை வகித்தார். எதிர்க்கட்சியான திமுக தலைவர் கருணாநிதி, தேர்தலில் போட்டியிடவே இல்லை.  இதுபோன்ற சூழ்நிலையில், அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற எம்ஜிஆர் உடல்நிலை குறித்து பலவாறாக பேசப்பட்டது. தேர்தல் களத்திலும் அதுவே எதிர்க்கட்சிகளின் பிரதான பிரச்சாரமாக அமைந்தது. அதையும் தாண்டி, அமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் எம்ஜிஆர். அப்படியே, அமெரிக்காவில் எம்ஜிஆர் சிகிச்சை பெறுவதை வீடியோ படமாக்கி, கிராமங்கள்தோறும் அதிமுகவினர் திரையிட்டனர். அதிமுக மூத்த தலைவர்களின் இடையூறுகளை கடந்து, தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார் ஜெயலலிதா. அதிமுக பார்டருடன் கூடிய வெள்ளை புடவையை தனக்கான அடையாளமாக்கிக் கொண்டார். இந்திரா மறைவு, எம்ஜிஆரின் உடல்நலக் குறைவு என 1984 தேர்தலில் அனுதாப அலை மிகப்பெரியதாகவே வீசியது. முடிவில், 234 தொகுதிகளில் 195 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது.அதிமுக மட்டும் தனியாக 132 இடங்களை வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. திமுக கூட்டணிக்கு 34 இடங்கள் கிடைத்தன. அதில், 24 இடங்களை திமுக பெற்றது. ஆயிரம் விளக்கு தொகுதியில் கே.ஏ.கிருஷ்ணசாமியிடம் 2300 வாக்கு வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் 61 இடங்களில் வென்ற காங்கிரசுக்கு 1967க்கு பிறகு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. 1967 தேர்தலின்போது குண்டடிபட்டு படுத்துக்கொண்டே எம்எல்ஏவாக ஜெயித்த எம்ஜிஆர், இந்த தேர்தலில் அமெரிக்காவில் இருந்தபடியே தமிழகத்தில் ஆட்சியை பிடித்தார். ஆண்டிபட்டி தொகுதியில் 32 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். அமெரிக்க சிகிச்சை முடிந்து 1985ம் ஆண்டு பிப்.4ம் தேதி சென்னை திரும்பிய எம்ஜிஆர், பிப்.10ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்றார். தமிழகத்தில் தொடர்ந்து மூன்று தேர்தல்களை சந்தித்து ஹாட்ரிக் வெற்றி பெற்ற முதல்வர் எம்ஜிஆர் ஒருவரே.தமிழக சட்டப்பேரவை தேர்தலோடு நடந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. வடசென்னை, மத்திய சென்னை இரண்டு தொகுதிகளில் மட்டும் திமுக வென்றது.

(நினைவுகள் சுழலும்)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 24= வை.ரவீந்திரன்.
இந்திரா காந்தி மறைவுக்கு பிறகு பிரதமரான ராஜீவ்காந்தி, முன் கூட்டியே பாராளுமன்ற தேர்தலை நடத்த விரும்பினார். எனவே, தமிழக சட்டப்பேரவை தேர்தலையும் (1985 ஜூன் வரை பதவிக்காலம் இருந்த போதிலும்) சேர்த்து நடத்த முடிவு செய்யப்பட்டது. அமெரிக்க மருத்துவமனையில் எம்ஜிஆர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

1984ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி நடைபெற்ற தேர்தலில், ஏற்கனவே உறுதி செய்தபடி 155 தொகுதிகளில் அதிமுகவும், 73 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிட்டன. 1980 தேர்தலில் எம்ஜிஆருடன் இருந்த இரண்டு கம்யூனிஸ்டுகளும் இந்த தேர்தலில் கருணாநிதி தலைமையிலான திமுக அணிக்கு சென்றன. அதில், ஜனதா கட்சியும் சேர்ந்து கொண்டது. திமுக அணியில் 167 தொகுதிகளில் திமுக போட்டியிட்டது. இரண்டு கம்யூனிஸ்டுகள் மற்றும் ஜனதாவுக்கு தலா 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
தமிழக அரசியல் களத்தில் 1984 தேர்தலுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அந்த தேர்தல் களத்தில்தான் முதன் முறையாக ஜெயலலிதா, ஸ்டாலின் இருவரும் களமிறங்கினர். திரையுலகில் ஒதுங்கி இருந்த ஜெயலலிதா, 1981ம் ஆண்டு நவம்பரில் மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் நடந்த ‘காவிரி தந்த கலைச்செல்வி’ நாட்டிய நாடகம் மூலம் அரசியல் அரங்குக்குள் அடியெடுத்து வைத்தார். அடுத்த ஆண்டே அதிமுக உறுப்பினரான அவருக்கு, 1983ம் ஆண்டில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் பதவி தரப்பட்டது. அப்போது, தமிழகத்தில் எம்ஜிஆர் அறிமுகம் செய்த சத்துணவு திட்டத்தின் உயர்மட்ட குழு உறுப்பினராகவும் ஜெயலலிதா நியமிக்கப்பட்டார். மொழி ஆளுமை காரணமாக, 1984ல் அதிமுக சார்பாக மாநிலங்களவை எம்பி பதவியும் கிடைத்தது. பின்னர், கட்சியின் கொபசெ என்ற அடிப்படையில் 1984 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பிரச்சார பீரங்கியாக ஜெயலலிதா களம் இறங்கினார்.அதுபோல, திமுக தலைவரின் மகன் என்பதாலேயே எமர்ஜென்சி கால சிறைக் கொடுமையை அனுபவித்ததோடு மு.க.ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் ஆரம்பமானது. திமுக பொதுக்குழு உறுப்பினர் என்ற பதவியில் தொடங்கி கட்சிக்குள் மெதுவாக வளர்ந்து இளைஞர் அணியையும் வளர்த்து வந்த மு.க.ஸ்டாலின், 1984 சட்டப்பேரவை தேர்தலில் தான் முதன் முறையாக போட்டியிட்டார். . 


சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமியை எதிர்த்து அவர் களமிறங்கினார். அந்த தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடவில்லை. அப்போது, அவர் சட்டமேலவை உறுப்பினராக (எம்எல்சி) இருந்தார்.

(நினைவுகள் சுழலும்)