Tuesday 25 June 2019

ஜனநாயகத்தின் கருப்பு தினம்

45 ஆண்டுகளுக்கு முன்.... 

இதே நாளில்... 

1975 ஜூன் 25... 

இந்திய ஜனநாயகத்தின் கருப்பு தினம். 

அன்றைய தினம் தான் ரேபரேலி தொகுதி எம்பியாக தேர்வான தனது தேர்தல் வெற்றிக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்ற ஒரே காரணத்துக்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 352வது பிரிவை அமல் படுத்தி நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அறிவித்தார், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. அவருடைய ஆணையை ஏற்று எமர்ஜென்சி அல்லது மிசா எனப்படும் நெருக்கடி நிலை உத்தரவை பிறப்பித்தவர் அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி முகமது. 

அதற்கு முன் 1962ம் ஆண்டு சீனாவுடன் யுத்தம் நடந்தபோதும், 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் யுத்தம் நடந்தபோதும் இரண்டு முறை நெருக்கடி நிலை அமலில் இருந்தது. ஆனால், 1975 மிசா நிலைமை முற்றிலும் வேறானது. கொடுமைகள் நிறைந்தது.

சுதந்திரம் பெற்றதில் இருந்தே அதிகாரத்தில் தொடர்ந்து நீடித்து வந்த குடும்பத்தை சேர்ந்த நபரால்... பாகிஸ்தான் போரில் கிடைத்த வெற்றி மற்றும் வங்க தேசம் பிரிவினையால் இரும்பு பெண்மணியாக பார்க்கப்பட்ட இந்திரா காந்தியால்... அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஜீரணிக்க முடியவில்லை. தெய்வத்துக்கு சாதாரன மனிதன் தண்டனை தருவதா...? என்ற மனோபாவத்தில் எழுந்த எண்ணம்...! 

இந்திராவின் எமர்ஜென்சி ஐடியாவுக்கு பின்னணியில் இருந்தவர்கள், அவரது இளைய மகன் சஞ்சய் காந்தி, அவரது தனி உதவியாளர் ஆர்.கே.தவான், அப்போதைய மேற்கு வங்க முதல் மந்திரி சித்தார்த்த சங்கர் ரே மற்றும் இவர்களுடன் அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி முகமது. 

இந்த நால்வர் அணியின் ஆலோசனையால் விளைந்த நெருக்கடி நிலையால் ஒரே நாள் இரவில் தேசிய அளவில் ஜெயப்பிரகாஷ் நாராயண் (ஜேபி), மொரார்ஜி தேசாய், வாஜ்பாயி, அத்வானி என எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோர் ஒட்டு மொத்தமாக கைது செய்யப்பட்டனர். இந்திராவுக்கு எதிராக தேர்தல் வழக்கு போட்டவர் உட்பட... அதன்பிறகும் ஆச்சார்யா கிருபளாணி, சரண் சிங் என இந்திராவை எதிர்த்த தலைவர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக கைதாகினர். 

தலைவர்கள் எப்படி கைது செய்யப்பட்டனர் என்பதற்கு அன்றைய இளம் தலைவர்களில் ஒருவரான ஜார்ஜ் பெர்ணாண்டஸ் (பின்னாளில் கார்கில் யுத்தத்தின் போது வாஜ்பாயி ஆட்சியில் ராணுவ மந்திரியாக இருந்தவர்) இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட படமே சாட்சி. 

அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், அரசை எதிர்க்கும் மக்கள் என எதிர்ப்படுவோரை கைது செய்ய உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் (மிசா) பயன் படுத்தப்பட்டது. மாநில அளவிலும் ஆட்சிகள் கலைக்கப்பட்டன. அதற்கு இணையான கொடுமைகளும் அரங்கேறின. இன்றைய திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக பிரமுகர்களும் சிறையில் ‘மிசா’ கொடுமைகளுக்கு ஆளானவர்களே. 

அதே நேரத்தில், இந்திரா காந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தமிழகத்தில் ஸ்தாபன காங்கிரஸ் என தனியாக கட்சி நடத்தி வந்த பெருந்தலைவர் காமராஜரும் கூட எமர்ஜென்சியால் மனம் நொந்து இருந்தார். 1975ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தியடிகள் பிறந்த நாளன்றாவது  எமர்ஜென்சி முடிவுக்கு வரும் (1977 ஜனவரி வரை எமர்ஜென்சி இருந்தது) என எதிர்பார்த்து இருந்த காமராஜரின் காதுக்கு ஆச்சார்யா கிருபளானி கைதான செய்தி தான் எட்டியது. அந்த அதிர்ச்சியிலேயே காமராஜர் உயிர் துறந்தார் என்பது வரலாறு. 

எந்த பதவியிலும் இல்லாத இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்திதான் நெருக்கடி நிலை காலத்தில் அதிகார மையமாக இருந்தார் என்றால்  நிலைமையை யூகித்துக் கொள்ளலாம். நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட அடுத்த நிமிடமே நாட்டில் உள்ள முக்கியமான பத்திரிகை அலுவலகங்களுக்கு மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. கருத்து சுதந்திரம் மற்றும் சாதாரண குடிமகனுக்கு அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள ஆறு அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. 



பத்திரிகைகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிகாரிகளின் தணிக்கைக்கு பிறகே பத்திரிகைகள் வெளியாக முடியும். அரசுக்கு எதிரான சர்ச்சையான செய்திகள் இருந்தால் அதை நீக்கி விட்டு வேறு செய்தியை சேர்க்க வேண்டும். துக்ளக், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகள் அதற்கு உடன் படாமல் அந்த செய்திகள் இருந்த இடத்தை மட்டும் வெற்றிடமாகவே வைத்து பத்திரிகைகளை வெளியிட்டன. 



1975 ஜூன் முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என்ற வீதத்தில் நெருக்கடி நிலை நீடிக்கப்பட்டு 19 மாதங்கள் வரை நீடித்தது. இந்த கால கட்டத்தில் காரணம் எதுவும் கூறப்படாமலேயே ஒன்றரை லட்சம் பேர் (இது சர்வதேச நாடுகளின் கணக்கு) கைது செய்யப்பட்டனர். டெல்லி ஜுமா மசூதி அருகே குடிசைகளில் வசித்த இரண்டரை லட்சம் முஸ்லிம்கள் துரத்தப்பட்டனர். நாடு முழுவதும் 2 கோடி ஆண்களுக்கு கட்டாயமாக குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டது. 



ஹிட்லர், முசோலினி, இடி அமீன் போன்றவர்களை நினைவூட்டிய ‘மிசா’ கொடுமைகள் அரங்கேறி 45 ஆண்டுகளாகி விட்டன. கறுப்பு நாட்களாக கடந்து போன அந்த 19 மாதங்களும் இந்திய ஜனநாயகத்தில் ஒரு கசப்பான வரலாறு.

- #நெல்லை_ரவீந்திரன்

Monday 24 June 2019

புகைப்படமாக மாறிப்போன கழுதை

கழுதை கெட்டா குட்டிச் சுவரு. இந்த பழமொழியை எல்லோரும் கேட்டிருப்போம். ஆனால், கழுதையை இன்றைய தலைமுறையினரில் எத்தனை பேர் நேரில் பார்த்திருப்பார்கள்...? 

இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம். 

முன்பெல்லாம், கிராமங்களில் வீடு, வீடாக  அழுக்குத் துணிகளை சேகரித்து கழுதை மீது பெரிய பொட்டலமாக (பொதி மூட்டை) கட்டி, துவைப்பதற்கு கொண்டு செல்வார்கள். அந்த தொழிலில் ஈடுபடுவோர். அதற்காக வீடுகளிலேயே கழுதைகளை வளர்த்து வந்தனர்.  

ஊர் முழுவதும் வீடுகளில் அழுக்கு துணியை எடுத்து வந்து வீட்டில் வெள்ளாவி (வெந்நீரில் துணியை வேக) வைத்துக் கொள்வார்கள். இந்த வெள்ளாவி வைப்பது தனி வேலை. வட்டமாக திறந்த வெளி அடுப்பு ஒன்று வீட்டு முன் கட்டி வைத்திருப்பார்கள். அதன் மீது அழுக்கு துணியை ஈரமாக்கி வேக வைப்பதுதான் வெள்ளாவி.

அதிலேயே விடாப்பிடி அழுக்கெல்லாம் லேசாக உதிர தொடங்கியதும் கழுதை மேல் பொட்டலத்தை ஏற்றிக் கொண்டு ஊருக்கு வெளியே இருக்கும் குளம், ஊருணியில் துவைத்து அங்கேயே காய வைத்து கழுதையின்மீது ஏற்றி கொண்டு வருவார்கள். 



இப்பல்லாம் குளமும் இல்லை ஊருணியும் இல்லை. அதனால கழுதைகளும் இல்லை. ஊரில் திருவிழா என்றால் பந்தலில் கலர் துணி அலங்காரத்துக்கு இப்பிடி துவைத்த சேலைகளைத்தான் பயன் படுத்துவார்கள். கோயிலில் தன்னோட சேலையை பார்த்து அதிர்ச்சியாகும் பெண்கள் பலரும் மறுநாள், அந்த சலவை தொழிலாளிக்கு தனியாக கொடை குடுப்பது தனிக் கதை. இப்பல்லாம் பந்தல் அலங்காரததுக்கு தனியாகவே துணி தயாராகிறது.

பண்டிகை, கோயில் கொடைவிழா மாதிரி விசேஷ தினங்கள் தான் கழுதைங்களுக்கு விடுமுறை நாட்கள். எங்கள் ஊரில் வைத்தியலிங்க சாமி கோயிலில் சித்திரை மாத கொடை விழாவின்போது, ஊரில் உள்ள கழுதைகள் எல்லாம் ஒட்டு மொத்தமாக சந்தைப்பகுதியில் கூடி நிற்கும்.

அதை சீண்டிப் பார்ப்பதுதான் திருவிழா ஜாலி. கழுதை வாலில் பட்டாசு கொளுத்தி ஓட விடுவதும், பனை ஓலையை கட்டி விடுவதும் சிறிய வயது விளையாட்டுகள். பின்னால் இருந்து வினோதமாக ஒரு சத்தம் கேட்கத் தொடங்கியதும் அச்சத்தில் கழுதை ஓட்டம் பிடிக்க, அந்த சத்தமும் அதன் பின்னாலேயே செல்வதால் மிக வேகமாக ஓட்டம் பிடிக்கும். நாங்களும் துரத்திச் செல்வோம்.



இப்போது குளமும் இல்லை. ஊருணியும் இல்லை. கழுதையும் இல்லை. வாஷிங் மெஷின் காலம். வீதிகளில் சின்ன சின்ன சில்மிஷங்கள் செய்து ஓடி விளையாண்ட சிறுவர்களும் கம்ப்யூட்டர் கேமில் தொலைந்து விட்டார்கள். டெம்பிள் ஃபெஸ்டிவலில் ஓடிய சிறுவர்கள் இப்போது இல்லை. டெம்பிள் ரன் சிறுவர்கள் தான். 

‘என்னைப் பார் யோகம் வரும்’ என்ற அதிர்ஷ்ட சட்டங்களுக்கு இடையே புகைப்படமாக மாறி விட்டது, கழுதை.

அது மாதிரியே... இப்பல்லாம் 'கழுத கெட்டா குட்டிச் சுவர்' கிடையாது... 'முகநூல் சுவருதான்'... 😂😂

#நெல்லை_ரவீந்திரன்

Monday 10 June 2019

காற்றில் கரைந்த கிரேஸி..

டிவி சீரியல்கள் கோலோச்சத் தொடங்கிய காலத்தில் 'கிரேஸி டைம்ஸ்', 'விடாது சிரிப்பு' மாதிரியான தொடர்கள் தான் ஃபேவரைட். இரவு சாப்பாடு முடிந்ததும் ரிலாக்ஸ் அதுதான். அப்படித்தான் கிரேஸி மீது கிரேஸ் ஆனேன். அப்புறம் நம்ம ஃபேவரைட் ஹீரோவின் ஆஸ்தான எழுத்தாளர் என தெரிந்ததும் கூடுதல் பற்று. சென்னை வந்த புதிதில் அவ்வப்போது மேடை நாடகங்களும் பார்ப்பதுண்டு.

.



நகைச்சுவை நடிப்பு என்றால் வடிவேலுவுக்கு மாற்றாக யாரையும் நினைத்து பார்க்கவே முடியாது. அதுபோல, நகைச்சுவை ஸ்கிரிப்ட் என்றால் கிரேஸி மட்டும் தான். சதிலீலாவதி, தெனாலி, மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், காதலா காதலா, வசூல்ராஜா மாதிரி படங்களை எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் போரடிக்காது. காரணம், இந்த விகடானந்தா தான்.


சேது ராமன் கிட்ட ரகசியமா..? 

ஓ நர்சோட பர்ஸா...?

மார்கபந்து முதல் சந்து...

மனமிருந்தா மார்க பந்து...

நீயும் எம்பி எம்பி பிஎஸ் படி...

ராமண்ணா... ஆங்.. அவரு பழைய டைரக்டரு...

முன்னாடி... பின்னாடி... 

என் பிரதர் கோ பரதன்...

எச்சக்கல சிங்கம்... எச்சக்கல புலி... இது மாதிரி... 

இப்பிடி வார்த்தைக்கு வார்த்தை ஃப்ளோவா நகைச்சுவை நீரோடை வழிந்தோடுவதும் டைமிங் காமெடியும் சாதாரண விஷயமில்லை. இதெல்லாம் கிரேஸி பெருங்கடலின் சில சொட்டுகள் தான். 

திரையுலக பயணம் ஒரு பக்கம் இருந்தாலும் 6500 நாடக அரங்கேற்றம். அதிலும் சாக்லேட் கிருஷ்ணா மட்டும் 500 முறை. தம்பி பாலாஜியோடு சேர்ந்து மாது, சீனு, மைதிலி, ஜானகி கேரக்டர்களோடு கிரேஸியின் அதகளம்.. தனி ரகம். ஜானகி, மைதிலி கேரக்டர் பெயர்களுக்கு தனது ஆசிரியை நினைவாக சூட்டிய பெயர் என அவரே ஒருமுறை சொல்லி இருக்கிறார்.

இதுபோல,  வெண்பா இலக்கண வரம்புக்குள் நான்கு வரி வெண்பா எழுதுவதிலும் வல்லவர் அவர். கூடவே கார்ட்டூன் வரைவதிலும் கில்லாடி. நாடக ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர் கம் வசனகர்த்தா, நடிகர், நகைச்சுவை எழுத்தாளர், வெண்பா கவிஞர், கார்ட்டூனிஸ்ட் என ஒரு மெக்கானிகல் என்ஜினீயருக்குள் ஏராளமான திறமைகளை நிரப்பி அனுப்பிய கடவுள், சாக்லேட் கிருஷ்ணனை திரும்பவும் அழைத்துக் கொண்டார். 

திரை, நாடக எழுத்தாளர், கவிஞர் என யாராவது மறைந்தால் அவரது துக்ககரமான வசனங்கள் ஏதாவது நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. ஆனால், இவரது வசனத்தில் ஒன்று கூட தேடிப் பார்த்தாலும் தென்படவே இல்லை. பாசக் கயிற்றுடன் வந்த எமன் கூட, நிச்சயமாக இவரது வசனங்களை கேட்டு, சிரித்தபடியேதான் உயிரை எடுத்துச் சென்றிருப்பான். எமனுக்கும் கூட அந்த சமயத்தில் ஏதாவது ஒரு டைமிங் காமெடி சொல்லி விட்டுத்தான் பயணித்திருப்பார், கிரேஸி...

ஜானகி, மைதிலி, மாது, சீனு இவர்களுடன் நாங்களும் மிஸ் யூ கிரேஸி...

-நெல்லை ரவீந்திரன்

Sunday 9 June 2019

இதே நாளில் அன்று

எமர்ஜென்சிக்கு பிறகு ஆட்சிக்கு வந்த ஜனதா அரசு கவிழ்ந்ததால் 1980 ஜனவரியில் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் வென்று மத்திய ஆட்சியை 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கைப்பற்றி இருந்தார், இந்திரா காந்தி. தமிழ் நாட்டில் திமுக காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களை பிடித்தது. அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த எம்ஜிஆரின் அதிமுக 2 எம்பி இடங்களை மட்டுமே பிடித்தது.

இதனால், ஆட்சியை கைப்பற்ற இதுவே சரியான தருணம் என நினைத்த கருணாநிதி, எம்ஜிஆரின் ஆட்சியை கலைக்குமாறு இந்திராவுக்கு நிர்பந்தம் கொடுத்தார். விளைவு, மத்திய ஆட்சிக்கு வந்த மறு மாதமே எம்ஜிஆர் ஆட்சியை கலைத்தார் இந்திரா. தமிழகத்தில் எம்ஜிஆர் அரசு உட்பட இந்தியா முழுவதும் ஜனதா ஆதரவு கட்சிகளின் அரசு மற்றும் ஜனதா கட்சி அரசு என ஒரே நாளில் 17 மாநிலங்களின் ஆட்சியை கலைத்தார் இந்திராகாந்தி. அப்போதெல்லாம் 356 பிரிவை பயன்படுத்தி எதிர்க்கட்சி மற்றும் பிடிக்காத முதல்வர்களின் அரசுகளை கலைப்பது காங்கிரசுக்கு கைவந்த கலை.

இப்படியாக, எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டு 1980ல் தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக, காங்கிரஸ் கூட்டணி மீண்டும் களமிறங்கியது. நாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் ஜனதா, அதிமுக இடையே உரசல் ஏற்பட்டு இரண்டும் தனியாக போட்டியிட்டன. குமரி அனந்தனின் காகாதேகா, பழ. நெடுமாறன் கட்சி போன்ற சிறிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து 177 இடங்களில் அதிமுக களமிறங்கியது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த ஐந்தாவது மாதத்தில் நடைபெற்ற இந்த சட்டப்பேரவை தேர்தலில் எம்ஜிஆரின் அதிமுக அமோக வெற்றி பெற்றது. அதிமுக அணியில் அதிமுக மட்டும் 130 இடங்களை பிடித்து, இரண்டாவது முறையாக முதல்வரானார் எம்ஜிஆர். தமிழக மக்களின் நாடாளுமன்ற தேர்தல் தீர்ப்பை வைத்து கருணாநிதியும் இந்திராவும் கணித்த கணிப்பு பொய்யாக முடிந்தது.

தமிழக அரசியலில் காமராஜருக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்தலில் வென்றார், எம்ஜிஆர். (இந்த பட்டியலில் 2016ல் ஜெயலலிதா இடம் பெற்றார்) அப்படி இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி தமிழக  முதல்வராக எம்ஜிஆர் மீண்டும் பதவியேற்றது இதே நாளில் தான்... 9-6-1980.



அதன்பிறகு, 1984 தேர்தலிலும் மூன்றாம் முறையாக ஆட்சியை கைப்பற்றி தமிழகத்தில் யாருமே முறியடிக்காத ஹாட்ரிக் வெற்றியை எம்ஜிஆர் அழுத்தமாக பதிவு செய்தார் என்பது வரலாறு.