Sunday, January 29, 2017

வெற்றியை நோக்கி ... 15

ஆசை நூறு வகை

உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஏதோ ஒன்றை மையமாகக்  கொண்டே இயங்குகின்றன. சக்கரத்தை சுழலச் செய்யும் அச்சாணி போல அது செயல்படுகிறது. அதேபோல, மனித இனத்தையும் இயக்கும் அச்சாணி ஒன்றும் உண்டு. அது, ஆசை என்ற இரண்டெழுத்து மந்திரம். அதுவே, மனித வாழ்க்கையை முன்னோக்கி தள்ளிச் செல்லும் எந்திரம். 

மனித இனத்தின் பிரதானமான குணமாகவே ஆசை மாறி விட்டது. ஆடையின்றி இந்த உலகில் பிறந்த நாம் ஆசையின்றி பிறந்தோமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஆனால், அந்த ஆசை தான் மனிதனின் துன்பகரமான வாழ்க்கைக்கு திறவுகோலாகவும் அமைகிறது என்றால் மிகையில்லை. ஆசையே துன்பத்துக்கு காரணம் என்றார் புத்தபிரான். ஒரு மனிதனுக்கு தீராத துன்பத்தை தருபவை எவை என்று பட்டியலிட்டால் பொறாமைக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ஆசையை வைக்கிறார், திருவள்ளுவர்.

மனதுக்குள் குடியமர்ந்து கோலோச்சி ஒட்டு மொத்த மனித உடலையும் ஆட்டிப்படைக்கும் ஆசை பல வகைப்படும். சாலையில் நடந்து செல்லும் மனிதனுக்கு சைக்கிள் மீது ஆசை. சைக்கிள் வைத்திருப்பவனுக்கு பைக் மீதும் பைக் வைத்திருப்பவனுக்கு கார் மீதும் ஆசை. பஸ், ரயில் என பயணம் செய்து அலுத்தவனுக்கு வானில் மிதந்து செல்லும் விமானத்தில் பயணம் செய்து விட வேண்டும் என்பது தீரா ஆசை. எனவே, ஆசைக்கு அளவுகோல் இல்லை. அது, தொட்டு விட தொட்டு விட தொடரும் பயணம். 

இவை, சின்னச் சின்ன ஆசைகளாக இருக்கும் வரை எந்தவொரு பிரச்சினையும் இல்லை. அதுவே, பேராசையாக வடிவம் கொள்ளும்போது பிரச்சினைகளும் விசுவரூபம் எடுக்கத் துவங்கும். குறுக்கு வழியில் வாழ்க்கையை திசை திருப்பிச் செல்வதும் பேராசையே. அதனால் தான், ‘ஆசை, கோபம், பயம் ஆகியவற்றில் இருந்து விடுபடுபவரே உறுதியானவர்’ என பகவத்கீதை கூறுகிறது. மனிதனின் பேராசைக்கு அடிப்படை காரணமாக இருப்பது பணம். ஏனெனில், மனிதனின் கல்வி, அதிகாரம், செல்வாக்கு, குடும்பம் என அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது பணம்.

500 ரூபாய் அல்லது 1000 ரூபாய் பணத் தாளை நன்றாக கசக்கி, அழுக்கேற்றி கொடுத்தால் கூட மனம் கோணாமல் வாங்கிக் கொள்ளும் ஒரு மனிதன், அந்த பணத்தாளை விட அதிக விலையில் இருக்கும் ஒரு ஆடையை மிகவும் கசக்கி அழுக்காக கொடுத்தால் அணியத் தயங்குகிறான். அதுபோன்று ஆடை அணிந்த சக மனிதனையும் ஏற்க மறுக்கிறான். உயிரற்ற ஒரு காகிதம், உயிருள்ள மனிதனை எப்படியெல்லாம் பல வழிகளில் ஆட்டிப் படைக்கிறது.

ஆனால், பல ஆயிரம் செலவு செய்து படுக்கையை வாங்கினாலும் நிம்மதியான தூக்கத்தை வாங்க முடியுமா? ஏராளமாக செலவழித்து வீடு நிறைய புத்தகங்களை அடுக்கினாலும் அவற்றை படித்த உடன் அறிவை பெற எந்த பணமாவது உதவுமா? இதை அறிவுப்பூர்வமாக சிந்திக்க துவங்கினால் பணத்தின் மீதான பேராசையானது ஓடோடி வந்து சிந்தனை சிறகின் மீது திரையை போட்டு அமுக்கி விடும். அதற்காக, ஆசையை துறக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில், முன்பே கூறியபடி மனித வாழ்வை இயக்குவதே ஆசை என்ற அச்சாணி தான். ஆனால், அந்த ஆசையானது ஒரு அளவுக்குள் அடங்கி இருக்கச் செய்ய வேண்டும்.

கண்ணாடிப் பொருட்களை வீடு வீடாக எடுத்துச் சென்று விற்பனை செய்யும் ஒருவன் இருந்தான். அவனுக்கு தனது வியாபாரத்தில் முன்னேற்றம் அடைந்து ஊரே மதிக்கும் பெரிய ஆளாக வர வேண்டும் என்பது நெடுநாளைய தீராத ஆசை. அத்துடன், அந்த ஊரின் தலைவருடைய மகள் மீதும் அவனுக்கு ஒரு கண். அவருக்கு பிறகு தானே அந்த ஊரின் தலைவராக வேண்டும் என்ற ஆசையும் அவனுக்குள் வேர் பிடித்து வளர்ந்து நின்றது.

ஒரு நாள் கண்ணாடிப் பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் சென்றபோது நண்பகல் நேரத்தில் மதிய உணவு உண்டு விட்டு சாலையோர மர நிழலில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான். உண்ட மயக்கத்தில் அப்படியே தலை சாய்த்து உறங்கத் துவங்கினான். அவன் கொண்டு வந்த கண்ணாடிக் கூடை, கால்மாட்டில் இருந்தது. நல்ல தூக்கத்தில் பட்டப் பகலிலேயே கனவு காண ஆரம்பித்து விட்டான்.

அந்த கனவில் வழக்கம்போல ஊரின் மிகப்பெரிய வியாபாரி ஆனான். ஊர் தலைவரின் மகளையும் திருமணம் செய்தான். திருமணம் முடிந்து அந்த ஊரின் அடுத்த தலைவராகவும் தேர்வாகி விட்டான். ஒரு நாள் வீட்டில் பஞ்சணையில் சாய்ந்தபடியே மனைவியை (அதாங்க ஊர் தலைவருடைய பெண்) அழைத்து காலை அமுக்கி விடச் சொன்னான். அந்த பெண், ஏதோ நினைவில் இருந்ததால் அவனைக் கவனிக்கவில்லை. இதனால், கோபமடைந்த அவன், காலால் அந்த பெண்ணை எட்டி மிதித்தான். அடுத்த வினாடியே அவனது காலில் ரத்தம் கசியத் தொடங்கியது. அவனது கனவும் கலைந்தது.

மனைவியாக வந்த ஊர் தலைவரின் பெண்ணை எட்டி உதைப்பதாக நினைத்துக் கொண்டு கால் அருகே வைத்திருந்த கண்ணாடிப் பொருட்களை மிதித்து நொறுக்கி விட்டான். கனவிலேயே ஆகாயத்தில் கோட்டை கட்டிய அவனுடைய பேராசையால், ஏற்கனவே இருந்த முதலுக்கும் மோசமாகிப் போனது. இனிமேல், மீண்டும் வியாபாரத்தை துவக்க வேண்டுமானால் அந்த ஊர் தலைவரிடம் சென்று கடன் வாங்கினால் தான் உண்டு. பேராசை பெரு நஷ்டத்தை விளைவிக்கும் என்பதே இந்த கதையின் கருத்து. 

இதையே, பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா இப்படி கூறுகிறார். ‘கடலில் எவ்வளவோ நதிகள் வந்து கலந்தாலும் கடலின் நீர் மட்டம் உயர்ந்து பொங்கி வழிவதில்லை. தன்னுள் வந்து சேரும் அனைத்து நதிகளின் நீரையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு இயல்பாகவே இருக்கிறது.

அதுபோலவே, தனக்குள் அனைத்து ஆசைகளையும் யார் அடக்கி வைத்துக் கொள்கிறாரோ? அவருக்குத்தான் மன அமைதி கிடைக்கும். ஆசையின் மீது பேராசை கொண்டிருப்பவனுக்கு மன அமைதி எப்போதுமே கிடைப்பதில்லை.

(வெற்றி பயணம் தொடரும்…)

வெற்றியை நோக்கி ... 14

வெற்றிக் கூட்டணி


வெற்றி என்ற சிகரத்தை எட்ட ஏராளமான சக்தி தேவை. கருவிகளிலும் இயந்திரங்களிலும் உற்பத்தியாவது மட்டுமே சக்தி அல்ல. ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் அறிவாற்றலும் மிகப்பெரிய சக்தி. இன்று நாகரீக வளர்ச்சி என நாம் கூறுவது எதை தெரியுமா? மனித இனத்தின் வளர்ந்து நிற்கும் அறிவாற்றலின் ஒட்டு மொத்த கூட்டு தொகுப்பை தான்.

அறிவியல் பாடங்களில் தனிமங்களை பற்றி படித்திருப்போம். வெவ்வேறு குணாதிசயங்களை கொண்ட தனிமங்கள் ஒன்று சேரும்போது புதிய வடிவிலான பொருள் கிடைக்கும். நாம் எழுதும் பேனா, இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் பேப்பர் என எதை எடுத்தாலும் பல்வேறு தனிமங்கள் அல்லது துகள்களின் கூட்டுத் தொகுப்பு. இதை அப்படியே மனித ஆற்றலுடன் பொருத்திப் பாருங்கள். தனி ஒரு மனிதனின் அறிவாற்றலுக்கு பதிலாக பல்வேறு மனிதர்களின் கூட்டுறவுடன் கூடிய அறிவாற்றல் இணைந்தால்....? அதன் சாதனையே தனி அல்லவா....?

மனிதர்களின் சிந்தனை இரண்டு வகைப்படும். ஒன்று சுயமாக சிந்தனை செய்வது. தனக்குள் வந்து சேரும் அல்லது தனக்கு போதிக்கப்படும் சிந்தனையை வரவேற்று ஏற்றுக் கொள்வது அல்லது ஒதுக்கி தள்ளுவது என்பது மற்றொன்று. இதையே, ‘சுயபுத்தி, சொல்புத்தி’ என முன்னோர் கூறினர். காற்று வெளியில் தவழ்ந்து வீடுகளுக்கு ஒலியாகவும் படக் காட்சிகளாகவும் நுழையும் தொலைக்காட்சி மற்றும் வானொலி தகவல்களை சற்று யோசித்துப் பாருங்கள். எந்தவித கம்பித் தொடர்பும் இல்லாமல் வான் வழியாகவே நம்மை வந்து சேருகின்றன. மனிதர்களின் மூளைகளுக்கு இடையிலும் அந்த குணம் உண்டு.

இரண்டு பேருக்கு இடையே கண்ணுக்கு புலப்படாத ஒரு பிணைப்பு இருப்பது அதிசயமானது அல்ல. ஒருவரை பார்த்ததும் பிடித்து விடுகிறது. கண்டதும் காதல், அவனை பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது என்பது போன்ற வார்த்தைகள் எல்லாம் மனித மூளைகளுக்கு இடையிலான கண்ணுக்கு தெரியாத பரஸ்பர பரிமாற்றத்தின் விளைவுகளே. இரு மனிதர்களிடம் நடைபெறும் இந்த பரிமாற்றத்தால் இருவருக்கும் ஆனந்தம் விளையலாம் அல்லது வெறுப்பு உருவாகலாம்.

அதே நேரத்தில் இரண்டு மனமும் ஒருங்கிணைந்தால் அது பேராற்றலாக மாறி விடும். இனிமையாக செல்லும் இல்லற வாழ்க்கையில் இதை நாம் கண்கூடாக காணலாம். கணவன், மனைவி இடையே விட்டுக் கொடுத்தும் தோள் கொடுத்தும் செல்லும் குடும்பமானது உலக வாழ்க்கையில் வெற்றி பெறும். அந்த ஒத்திசைவு என்பது ஏதாவது ஒரு இடத்தில் சறுக்கினால் மறுகணமே ஒட்டு மொத்த குடும்ப வாழ்க்கையும் அதல பாதாளத்தில் வீழ்ந்து விடும்.

இதையே ஒரு நிறுவனம் அல்லது ஒரு புதிய முயற்சிக்கு ஒப்பிட்டுப் பாருங்கள். ஒட்டு மொத்தமாக ஒருங்கிணைந்து இருக்கும் இரண்டு மனிதர்களின் சிந்தனை அல்லது அதற்கு மேற்பட்ட பல்வேறு மனிதர்களின் சிந்தனைகள் ஒன்று சேர்ந்தால் அங்கு மிகப்பெரிய சிந்தனையும் பேராற்றலும் வேலை செய்ய துவங்கி விடும். ராணுவம், மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் போன்றவற்றில் இதை நாம் கண்கூடாக காண முடியும். ‘தனி மரம் தோப்பாகாது’ என்பது நம்முடைய தமிழ்ப் பழமொழி.

ஒரு குழு என எடுத்துக் கொண்டால் அதில் பல்வேறு தனி நபர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு நபருக்கும் தனித்தனி ஆற்றல் உண்டு. இது போன்ற தனித்தனி ஆற்றல்களை ஒன்று சேர்த்து பேராற்றலை உருவாக்கினால் வெற்றி நிச்சயம். சில பெரிய நிறுவனங்களின் வெற்றிக்கு இதுவே சூட்சும மந்திரம். வெளியில் இருந்து பார்ப்பதற்கு அந்த நிறுவனத்தின் தலைவர் மிகப்பெரிய திறமைசாலி என்பது போல தோன்றும்.

உண்மையில், அவருக்கு பின்னால் மனதை ஒன்றாக வைத்திருக்கும் மனோ ரசாயன வித்தை அறிந்த ஒரு சிறந்த குழுவின் கூட்டு முயற்சி கண்டிப்பாக இருக்கும். அந்த குழுவை மிகச் சரியாக வழி நடத்திச் செல்லுவதில் அந்த தலைவர் திறமைசாலியாக இருப்பார். தற்காலிக அளவிலாவது ஒரு குழுவின் மனநிலையை ஒட்டு மொத்தமாக ஒரே நிலைக்கு கொண்டு வருவதில் அவர் தலைசிறந்த நிபுணராக இருப்பார். அதே நேரத்தில் இதுபோன்ற பேராற்றலை ஒருங்கிணைக்கும் ஒரு கூட்டத்தில் தனிநபர் ஒருவரின் சிந்தனை மாற்றுக் கருத்துடன் இருந்தால் அங்கு பேராற்றல் தத்துவமும் மிகப்பெரிய சிந்தனையாற்றல் உருவாக்கமும் சிதைந்து போகும். டீம் ஒர்க் என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். அந்த வார்த்தைக்கு அர்த்தம், இதுதான்.

மகாபாரதக் கதையில் பாண்டவர், கவுரவர் இடையிலான போர்க்களக்காட்சி. போரில், யுத்த விதிகளின்படி கர்ணனுக்கு தேரோட்டியாக சல்லியனை துரியோதனன் நியமித்து இருப்பான். சல்லியன் ஒரு தேசத்தின் மன்னர். அதனால் வேண்டா வெறுப்பாக அவர் தேரோட்டி வரும் சூழ்நிலையில்,  போர்க்களத்தில் மணலுக்குள் தேர் சக்கரம் சிக்கி விடுகிறது. உடனே, அதை தூக்கி விடுமாறு கர்ணன் கூறுகிறான். ஏற்கனவே, ஒரு தேசத்தின் மன்னரான தன்னை கர்ணனுக்கு தேராட்டியாக்கி விட்டனரே என்ற கடுப்பில்  சல்லியன் இருந்தான். அதனால், ‘அது என் வேலை அல்ல. தேர் ஓட்டுவது மட்டுமே எனது பணி’ என கூறியதோடு கர்ணனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டான்.
ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றிய நிலையில், தேரை அப்படியே போர்க்களத்தில் விட்டு விட்டு, கர்ணனையும் தனியாக தவிக்க விட்டு  போர்க்களத்தை விட்டே சல்லியன் புறப்பட்டுச் சென்று விட்டான். அதன்பிறகு, கர்ணனே கீழிறங்கி தேரை சரி செய்யும்போது அர்ச்சுனனின் அம்புக்கு பலியாவான். இன்றும் கூட, இழிவான அல்லது துரோக செயலில் ஈடுபடும் ஒருவரை ‘சல்லிப்பயல்’ என வசைமொழி கூறுவது உண்டு. கூட்டணியாக செயல்படும் ஒரு பணியில் இது போன்ற முரண்பாடுகள் தோன்றினால் இழப்பும் தோல்வியும் ஏற்படும் என்பதையே மகாபாரதக் கதையில் வரும் இந்த நிகழ்ச்சி சுட்டிக் காட்டுகிறது. அதே நேரத்தில் பாண்டவர் தரப்பில் கிருஷ்ணர் கூறும் ஒவ்வொரு வார்த்தையையும் வேதவாக்காக ஏற்று படைகளும் தளபதிகளும் மன்னர்களும்  செயல்பட்டனர். அதனால், வெற்றியும் பாண்டவர் அணிக்கே கிடைத்தது.

ராமாயணக் கதையிலும் கூட, இறுதிகட்டப் போரில் ராவணனிடம் இருந்து தம்பி விபீடணன் பிரிந்து சென்றான். மற்றொரு தம்பி கும்பகர்ணனோ அண்ணனுடன் வாக்குவாதம் செய்த பிறகே செஞ்சோற்று கடன் தீர்ப்பதற்காக போர்க்களத்துக்கு சென்று மடிந்தான். இப்படி முரண்பாடுகள் தலை தூக்கியதாலேயே ராவணன் படை அழிந்தது. ராமபிரான் படையிலோ, ராமர் சொல்லை வேதவாக்காக கொண்டு வானரப் படை செயல்பட்டது. வெற்றியும் பெற்றது. மனித மனங்கள் இணைந்தால் மட்டுமே வெற்றிக் கூட்டணி சாத்தியமாகும் என்பதற்கு இவை எல்லாம் இதிகாசங்கள் கூறும் வெற்றிக் கூட்டணி பற்றிய செய்திகள்.

நிகழ்கால வரலாற்றிலேயே பல்வேறு உதாரணங்களை நாம் கண்கூடாக காணலாம். எனவே, ஒரு செயலை வெற்றிகரமாக முடிப்பதற்கு பல்வேறு மனிதர்களின் மனங்களை ஒருங்கிணைந்து செயல்படுவோம். வெற்றிக் கூட்டணியை உருவாக்குவோம்.

(வெற்றி பயணம் தொடரும்…)

வெற்றியை நோக்கி ... 13

புறங்கூறுதல் அழகல்ல...


எந்தவொரு பயணமாக இருந்தாலும் செல்லும் வழியை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். வெற்றி பயணத்துக்கும் அது பொருந்தும். பயணத்தை ஊக்குவிப்பவை எவை? பயணத்துக்கு தடைக் கற்களாக இருப்பவை எவை? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வரிசையில் வெற்றிக்கான பயணத்தின் தடைக் கற்களில் முதன்மையானது, குறை காணும் வழக்கம். மனித மனத்தை குழப்பத்தில் ஆழ்த்தி கலங்கிய குட்டையாக மாற்றுவதில் இதற்கு முக்கிய இடம் உண்டு.

குறை காணும் குணத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று நேரடியாகவே ஒருவரை அடுத்தடுத்து குறை கூறிக் கொண்டு இருப்பது. மற்றொன்று, மூன்றாவது நபரிடம் குறை கூறுவது. அதாவது, கோள் மூட்டுதல். இதை, புறங்கூறுதல் என திருவள்ளுவர் கூறுகிறார். மேலும், புறங்கூறாமையை வலியுறுத்தி ஒரு அதிகாரமே எழுதி வைத்துள்ளார். ஒரு குறளில், ‘புறம் கூறி பொய்யாக நடித்து உயிர் வாழ்வதை விட செத்து விடுவது மேலானது’ என மிகக் கடுமையாக கூறுகிறார். மற்றொரு குறளில், ‘பிறருடைய குறையை தேடிக் கண்டுபிடித்து மற்றவரிடம் கோள்  மூட்டுபவனின் குறையை மற்றவர்கள் கவனிக்காமல் விட்டு விடுவார்களோ?’ என கேட்கிறார். அந்த அளவுக்கு புறங்கூறுதல் என்பது மிகவும் மோசமான குணம்.

இந்த உலகில் உள்ள உயிரினம் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு விதமான மன நிலை உண்டு. இதுவரை யாருமே பார்த்திராத ஒரு பொருளை விவரித்து கூறுவதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொருவரும் வெவ்வேறு வித வகையிலான கற்பனையிலேயே அந்த பொருளை காண்பார்கள். இதுபோலவே, ஒரே விதமான வேலையை இரண்டு வெவ்வேறு நபர்களிடம் அளித்தால் இருவரும் வெவ்வேறு வழிமுறைகளில் அந்த வேலையை செய்து முடிப்பதை காணலாம். உலகில் உள்ள எந்த ஒரு பாதையும் நேர் கோட்டில் இல்லை என்பதே உண்மை.  

மனிதர்களின் இந்த முரண்பாடான செயல்களே குறை காணும் வழக்கத்துக்கும் அடிகோலுகிறது. ஒருவருக்கு ஒருவர் தங்களின் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ளாமை, புரிந்து கொள்ளுதல் இல்லாமை, கருத்து வேற்றுமை போன்றவற்றின் விளைவே அடுத்தவருடைய குணம் மற்றும் செயல்களில் குறை காண்பதில் முடிகிறது. ‘மற்றவரின் குணங்களை நீ கணிக்க துவங்கினால், அவர் மீது அன்பு செலுத்த உனக்கு நேரம் இருக்காது’ என்கிறார், அன்னை தெரசா.

பொதுவாகவே, தன்னை பற்றி குறை கூறுபவரை ஒரு பொருட்டாகவே மற்றவர் எடுத்துக் கொள்வதில்லை. அதே நேரத்தில், ஒருவரை குறை கூறும்போது யாருடனும் ஒப்பிட்டு பேசுவது சரியான செயல் அல்ல. அதுபோன்ற வார்த்தைகள் கூறுபவருக்கு வேண்டுமானால் எளிதான வெறும் வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால், அதை கேட்கும் சம்பந்தப்பட்ட நபருக்கு மிகவும் வேதனை அளிக்கும் சொற்களாக அவை அமையும். தீயினால் சுட்ட வடுவை விட நாவினால் சுட்ட வடு மிகவும் ரணம் மிகுந்தது அல்லவா? ஒருவரை மதிப்பீடு செய்து அவரை குறை காணும் உரிமை யாருக்குமே அளிக்கப்படவில்லை.

மற்றவரை மாற்ற நினைத்து அவரை குறை காண்பதை விட்டு விட்டு அவரை அவருடைய இயல்பிலேயே ஏற்றுக் கொள்ள முயற்சிப்பது நன்மை விளைவிக்கும். அதன் மூலமாக, அவர் நம் வசமாகக் கூடும். இதனால் தான், பிறருடைய நல்ல குணங்களை மட்டுமே நினைத்துப் பார்த்தால் வாழ்நாள் முழுவதும் இனிமையாக அமையும் என்கிறார், ரமண மகரிஷி.

குறை காணும் குணம் யாரிடம் இருக்கும் தெரியுமா? மோசமானவர்களிடம் மட்டுமே அது நிரம்பி வழிந்து கிடக்கும். இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரத கதையின் கிளைக் கதை ஒன்று உண்டு. குருகுல பயிற்சியின்போது சமூக நிலைமையை கண்டறிந்து வருமாறு கவுரவர்களில் மூத்தவரான துரியோதனனையும், பாண்டவர்களில் மூத்தவரான தருமரையும் குரு அனுப்பி வைக்கிறார். இருவரும் தனித்தனியாக வெளியுலகை சுற்றிப் பார்க்க கிளம்பினர். சமூகத்தில் உள்ள பலதரப்பட்ட மக்களையும் சந்தித்தனர். ஓரிரு நாட்கள் இந்த பயிற்சி தொடர்ந்தது. குரு நிர்ணயித்த நாட்கள் முடிந்ததும் இருவருமே குருகுலம் திரும்பினர்.

அவர்களை குரு அழைத்தார். முதலில் தருமரை அழைத்து, ‘உலகை சுற்றிப் பார்த்தாயே? உனக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன? எனக்கு விளக்கமாக கூறு’ என்றார். ‘அய்யா, இந்த உலகம் மிகவும் மகிழ்ச்சியானது. உலகில் உள்ள மக்கள் அனைவருமே மிகவும் நல்லவர்களாக உள்ளனர். மாதம் தவறாது மழை பொழிகிறது என்றால் அந்த நல்லவர்களால் தான். மக்கள் அனைவருமே மகிழ்ச்சியாக உள்ளனர்’ என தருமர் பதிலளித்தார்.

அடுத்து துரியோதனனிடமும் அதே கேள்வியை எழுப்பினார், குரு. அதற்கு துரியோதனன், ‘அய்யா. இந்த உலகம் மிகவும் பொல்லாதது. எங்கு பார்த்தாலும் சூது, நயவஞ்சகம், பொறாமை. அப்பப்பா. மக்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் மோசமானவர்களாகவே திரிகின்றனர். அதனால், மகிழ்ச்சி என்பதையே அறியாமல் இருக்கின்றனர்’ என்று பதிலளித்தான்.

இதில் இருந்து என்ன தெரிகிறது? இருவருமே ஒரே ஊரின் பகுதியை தான் சுற்றி பார்த்தார்கள். ஆனால், இருவரின் கண்களும் வெவ்வேறு விதமாக அந்த ஊரை பார்த்துள்ளது. ஒருவருடைய மனம் எப்படி இருக்கிறதோ? அதன்படியே வெளி உலகும் அவருடைய கண்களுக்கு புலப்படும் என்பதே இந்த கிளைக்கதை மூலமாக மகாபாரதம் நமக்கு கூறும் செய்தி.

குறை காணும் வழக்கத்தை ஒருவன் ஏற்படுத்திக் கொண்டான் என்றால், அவனிடம் திறமை இல்லை அல்லது திறமை குறைந்து கொண்டு வருகிறது என்பதே அர்த்தம். நேர் வழியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியாத ஒருவன் தான், தனது எதிராளியை மோசமான வகையில் மிகவும் அசிங்கப்படுத்துவதன் மூலம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளலாம் என நம்புவான். 

எனவே, அடுத்தவர் மீது குறை காணும் போக்கை விட்டொழிப்பது என்பது வெற்றிக்கான ஏணியின் ஒரு படிக்கட்டு. அதே நேரத்தில், ஒருவன் தன் மீது குறைகளை கூறிக் கொண்டு இருந்தால் அதை பொருட்படுத்தாமல் இருப்பதும் வெற்றிக்கான சூட்சும மந்திரமே. குறைகளை விட்டொழிப்போம். வெற்றிப் பாதையில் முன்னேறுவோம்.

(வெற்றி பயணம் தொடரும்…)

வெற்றியை நோக்கி ... 12

மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்

மூன்றெழுத்து. இந்த எழுத்துகளை உச்சரித்தாலே உற்சாகம் தொற்றிக் கொள்ளும். உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். தமிழிலும், தமிழர் வாழ்விலும் மாற்றத்தையும் மலர்ச்சியையும் ஏற்படுத்துவது மூன்றெழுத்து. மூன்றெழுத்துக்காக எதையும் செய்ய பெரும்பாலானோர் தயாராக இருக்கின்றனர். இப்படி, மூன்றெழுத்தின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஹலோ. வெயிட் வெயிட் வெயிட். ஏதேதோ கற்பனையில் மிதக்க வேண்டாம். வெற்றி, சாதனை, பணம், பதவி என்பது போன்ற மூன்றெழுத்துகள் தான் அவை. அந்த மூன்றெழுத்துகளை எப்படியாவது அடைய வேண்டும் என்பதில் அனைவருக்குமே ஒரு வித வேகம் இருப்பது உண்மை. இதில் அனைவருடைய மூச்சு காற்றும் அடங்கி இருக்கிறது. அட. வேகம், மூச்சு, காற்று மூன்றெழுத்து தொடருகிறதே. சரி. விஷயத்துக்கு வருவோம்.

அனைவருடைய உள்ளத்திலும் ஏதாவது ஒரு இலக்கை நிர்ணயம் செய்து அதை அடைய உழைப்பது வழக்கம். அந்த இலக்கை அடைவதே வெற்றி கனியை பறிப்பது அல்லது வெற்றி கோட்டையை எட்டுவது என கருதுகின்றனர். ஆனால், எந்தவொரு இலக்கும் கைக்கெட்டும் தொலைவில் எளிதாக அமைந்து விடுவது இல்லை. அந்த இலக்கை நோக்கி நாம் தான் படிப்படியாக முன்னேறி செல்ல வேண்டும். நாம் ஒரு அடி முன்னெடுத்து வைத்தால் கடவுளும் நம்மை நோக்கி இரண்டடி எடுத்து வருவார், என்கிறது ஆன்மிகம். அது வெற்றியை நோக்கிய பயணத்துக்கும் பொருந்தும்.

எந்தவொரு வேலையாக இருந்தாலும் கடமை என்ற மூன்றெழுத்து இருந்தால் மட்டுமே வெற்றி என்ற மூன்றெழுத்து நம் வசப்படும். திரைப்படம், அரசியல், கல்வி, அறிவியல், விஞ்ஞான ஆராய்ச்சி என ஒவ்வொரு துறையிலும் உயர்ந்து நிற்கும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை உற்று நோக்கினால் அவர்களின் வெற்றிக்கு பின்னால் ஓய்வறியாத உழைப்பும் கடமை உணர்வும் இருப்பதை அறிய முடியும். இதையே, ‘கடமையை செய் பலனை எதிர்பாராதே’ என பகவத் கீதை கூறுகிறது. அதாவது, எந்தவித எதிர்பார்ப்பும் பிரதிபலனும் இல்லாத கடமை உணர்வே வெற்றி கோபுரத்தை அலங்கரிக்கும்.

ஏதோ ஒன்றை எதிர்பார்த்து செய்யும் வேலையை கடமை என கூற முடியாது. கடன் என்று தான் கூற முடியும். பழங்காலத்தில் வேலை செய்தால் கூலியாக பணத்துக்கு பதில் நெல் அளந்து கொடுப்பது வழக்கம். அந்த கால கட்டத்திலும் கடனுக்கு வேலை பார்த்தவர்கள் இருந்துள்ளனர். இதனாலேயே, கட்டிட வேலையை முடித்து விட்டு கூலிக்காக புறப்பட்டுச் செல்லும் ஒரு தொழிலாளி, ‘நெல் கொண்டு போகும் வரை நில்லாயோ நெடுஞ்சுவரே’ என கூறியதாக பழமொழி உண்டு. அதாவது, நான் கூலியாக நெல் பெற்று செல்லும் வரையாவது நில் என தான் கட்டிய சுவரை பார்த்து அந்த தொழிலாளி கூறினானாம். இது எப்படி இருக்கிறது?
அவனுடைய வழித் தோன்றல்கள் இன்றும் கூட இந்த உலகில் இருக்கின்றனர். ஆனால், அவர்களால் வெற்றி என்னும் கோட்டையை அடைய முடியாது.
கடமை என்றால் எப்படி இருக்க வேண்டும்? அதற்கு ஒரு புராணகதையை உதாரணமாக கூறலாம். சிவபெருமான் தலையில் தும்பை மலர் சூடி இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். ‘தும்பை மலர் சூடும் ஈசன் திருப்பாதமே...’ என்ற பாடலையும் கேட்டிருப்போம். இந்த தும்பை விஷயத்தில் கடமை உணர்வை வலியுறுத்தும் சுவாரஸ்ய பின்னணி உண்டு.

அந்த காலத்தில் தேவதாசி முறை இருந்தது. ஊர் தோறும் ஆடல் மகளிர் எனப்படும் விலைமாதர்கள் வசித்து வந்தனர். அதுபோன்ற ஒரு விலைமாது குலத்தில் பிறந்த ஒரு பெண், தனது பிறப்பு குறித்து தினந்தோறும் கவலையில் ஆழ்ந்திருந்தாள். ஆனாலும், தனது விலைமாது தொழிலில் மிகுந்த கடமை உணர்வுடன் செயல்பட்டாள். ஒவ்வொரு நாளும் யார் முதலில் தன்னிடம் வந்து பணம் தருகிறாரோ அவரையே அன்றைய தினத்தில் மகிழ்விப்பது அவளது வழக்கம். அதன்பிறகு, அரசரே வந்தாலும் பொன்னை கொட்டி கொடுத்தாலும் ஏற்பதில்லை என்பது அவளுடைய கொள்கை.

ஒருநாள் ஏராளமான காணிக்கையுடன் அந்த நாட்டு அரசர் அவளை நாடி வந்தார். ஆனால், அவர் வரும் முன்பே மிக வயதான கிழவர் ஒருவர், அந்த பெண்ணை நாடி வந்து பொருளை அள்ளி கொடுத்திருந்தார். எனவே, கிழவரை விட்டு விட்டு அரசரை அழைக்க அந்த பெண் விரும்பவில்லை. விலைமகளாக இருந்தாலும் கடமை மற்றும் கொள்கையில் இருந்து தவறாமல் கிழவரை வீட்டுக்குள் அழைத்தாள். அரசனின் பொன், பொருளை திருப்பி அனுப்பினாள்.

அதே நேரத்தில், மிகவும் வயதான அந்த கிழவரால் ஒரு அடி கூட நகர முடியாமல் தேவதாசி வீட்டு படுக்கையிலேயே விழுந்து விட்டார். முதுமை மற்றும் நோய் காரணமாக படுக்கையிலேயே அசைவற்று கிடந்த அந்த கிழவருக்கு நாள் முழுவதும் பணிவிடை செய்வதே தனது கடமை என அந்த பெண் கருதினாள். ஒருநாள் முடிந்து இரவு கடந்து மறுநாள் பொழுது புலர்ந்தது. அப்போது தான் தெரிந்தது. வந்தவர் கிழவர் அல்ல. வயோதிக உருவத்தில் வந்த சிவபெருமான்.

‘பெண்ணே, நான் கொடுத்த சிரமங்களை இந்த அளவுக்கு பொறுத்துக் கொண்டாயே உனக்கு என் மீது வருத்தம் இல்லையா?’ என சிவபெருமான் கேட்டார்.

‘இல்லை. ஒவ்வொரு நாளும் ஒருவரை கணவனாக ஏற்றுக் கொள்ளும் விலைமாது நான். இன்றைய தினம் கணவராக வந்த உங்களுக்கு கடமை தவறாமல் பணிவிடை செய்து விட்டேன். அவ்வளவுதான். விலைமகளான எனக்கு இதில் என்ன வருத்தம்? இது எனது கடமை’ என்றாள்.

அதைக் கேட்ட சிவபெருமான் அகம் மகிழ்ந்து, ‘பெண்ணே. மானுடப் பிறவி உனக்கு இன்றோடு முடிந்தது. அடுத்த பிறவியில் நீ தும்பை மலராக பிறப்பாய். என்னை பூஜிக்க தும்பை மலரை பக்தர்கள் பயன்படுத்துவார்கள்’ என வரமளித்தார். தும்பை பூவை சிவபெருமான் சூடுவதற்கு பின்னால் கடமை உணர்வுடன் தொடர்புடைய இந்த புராண கதை இருக்கிறது.

அலுவலகங்களில் பணியாற்றுவோரும் சரி. வேறு எந்த தொழில் புரிபவராக இருந்தாலும் சரி. நமக்கு கிடைக்கும் ஊதியம் அல்லது வருமானத்துக்கு இந்த அளவுக்கு வேலை செய்தால் போதும் என கருதக் கூடாது. அதற்கு பெயர் கடன். அதையும் தாண்டி நம்முடைய கடமை என ஒன்று உள்ளது. அதுதான், பிற்காலத்தில் நம்மை பாதுகாக்கும் கவசமாக இருக்கும். கடமையை கண்ணும் கருத்துமாக செய்யும் மனிதருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு சேரும். வெற்றியும் குவியும். கடமை என்ற மூன்றெழுத்தே வெற்றி என்னும் மூன்றெழுத்தின் உயிர் மூச்சு.

(வெற்றி பயணம் தொடரும்…)

வெற்றியை நோக்கி … 11

நீங்களும் பாஸ் தான்

உயரச் செல்ல வேண்டும் என்பதில் அனைவருக்குமே விருப்பம் அதிகம். இது தொன்று தொட்டு தொடரும் வழக்கம். பண்டைய அரசர் காலங்களில் விண்ணை முட்டும் ராஜ கோபுரங்கள், வான் தொடும் அரண்மனை, கோட்டை, கொத்தளங்கள் என அனைத்தையுமே மிகப் பெரியதாக அமைத்தனர். அதன் அடிப்படை உளவியல் என்னவென்றால், நான் உயர்ந்தவன் என்பதே. இது அனைவருக்குமே அடி மனதில் இருக்கும் குணம். ஆனால், உண்மையில் அதுபோன்ற வாய்ப்பும் சந்தர்ப்பமும் கிடைத்து விடுகிறதா என்ன?

ஒருவேளை கிடைத்து விடக் கூடும். அப்படி ஒரு சூழ்நிலையில் உயர்ந்த பதவியை தக்க வைத்துக் கொள்வதில் மிகப்பெரிய சிரமம் ஏற்படும். அதனாலேயே பதவி என்பது முள் கிரீடம் என சொல்லி வைத்துள்ளனர். தலைமை பீடத்தை எட்டுவதை விட அந்த பீடத்தை தக்க வைப்பதில் தான் போட்டி அதிகம். ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் உங்களுக்குள் உள்ள திறமையை கண்டு வியந்து நிர்வாக பொறுப்பை அளித்து விட்டனர் என வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு, வழக்கமான பணி முறையையே கையாண்டால் வெற்றி என்பது எட்டாக் கனியாகவே இருக்கும். உங்களுடைய பணி நேரம் மாறும். அது சாதாரணம். அதற்கும் மேல் சில விஷயங்கள் உள்ளன.

உங்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களை திறமையாக கையாண்டு நிர்வாக பொறுப்பில் எப்படி பாஸ் ஆகிறீர்கள் என்பதே மேட்டர். தலைமை என்றதும் முதலில் குழப்பமும் தடுமாற்றமும் ஒரு சேர வந்து நிற்பது இயல்பு. அதை வெற்றிகரமாக தாண்டிச் சென்று திறமையாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியின் ஒளிக்கீற்று தென்படும். அதற்கு சில சூட்சுமங்கள் உள்ளன. எப்படிப்பட்ட அலுவலகமாக இருந்தாலும் சரி. கண்டிப்பாக அங்குள்ள ஊழியர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். அந்த மூன்று பிரிவுக்குள் தான் நிச்சயமாக அவர்கள் இருப்பார்கள்.

முதலாவது பிரிவில் நேர்மை, உண்மை, பணிவு கொண்ட பணியாளர்கள் அடங்குவர். இரண்டாவது பிரிவில் ஒழுக்கமின்மை, சோம்பேறித்தனம், விளையாட்டு தனம் போன்றவற்றின் மொத்த குத்தகைதாரராக உள்ள ஒரு பிரிவு இருக்கும். இந்த இரண்டு பிரிவுக்கும் இடைப்பட்ட லெவலில் ஒரு சாரார் எப்போதுமே இருப்பார்கள். நேரம் மற்றும் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு இந்தப் பக்கத்திலோ அல்லது அந்தப் பக்கத்திலோ அவர்களுடைய குணம் வெளிப்படும்.

குடும்ப சிக்கல், சரியான சம்பள உயர்வு கிடைக்காமை, விரும்பிய இடம் மாற்றம் கிடைக்காமை, நிராசை என ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு குறைகள் இருக்கக் கூடும். யாருக்கு என்ன சிக்கல் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். நேர்மையாகவும் உண்மையாகவும் பணியாற்றும் ஊழியர்களை அவ்வப்போது பாராட்டினாலே போதும். அவர்கள் குளிர்ந்து விடுவார்கள். மேம்போக்கான பொதுவான பாராட்டாக இல்லாமல் அவர்களுடைய ஏதாவது ஒரு செயலை ஆதாரத்துடன் எடுத்துக் கொண்டு பாராட்ட வேண்டும். அதுவே, அவர்களுக்கு உற்சாக டானிக்காக மாறி விடும்.

அதே நேரத்தில், மற்ற ஊழியர் மத்தியில் பாராட்டுவதும் தவறாகிப் போகும். இதில் தான் அலுவலக சூட்சுமம் இருக்கிறது. ஏனெனில், இந்த அலுவலகத்தில் அவன் மட்டும்தான் வேலை பார்க்கிறானோ, நாம் யாரும் வேலை பார்க்கவில்லையோ என்பது போன்ற எண்ணம் மற்ற ஊழியர் மத்தியில் காரணமே இல்லாமல் எழக் கூடும். எனவே, தனியாக அழைத்து பாராட்டுவது மிகுந்த பலனை தரும்.

இரண்டாவது பிரிவைச் சேர்ந்தவர்கள் எதற்கும் மசியாதவர்கள். அறிவாற்றல் இருந்தாலும் தங்களை தாங்களே பெரியவர்கள் என மெச்சிக் கொண்டு அந்த வட்டத்துக்குள்ளேயே இருப்பவர்கள். அவர்களின் திறமைகளை கண்டறிந்து அதற்கு ஏற்ற மாற்றத்தை அவர்களுக்குள் ஏற்படுத்த வேண்டும். அதற்கு நீண்ட காலம் பிடிக்கலாம். உடனடி மாற்றத்தை எதிர்பார்த்து பஞ்ச தந்திரங்களை கையாண்டால் அது நிலைக்காது. ஏனெனில், அலுவலக நிர்வாக சட்ட விதிகளும் ஓரளவுக்குத்தான் துணைக்கு வரும். அந்த சட்ட விதிகளை அடிக்கடி பிரயோகித்தால் எதிர் விளைவையே ஏற்படுத்தும்.

இது மட்டுமல்ல, அடிக்கடி பணி இடம் மாறுதலுக்கு உட்பட்ட தலைமை பதவியாகவே இருந்தால் கூட குறைந்த பட்சம் 4 ஆண்டுகளாவது அந்த ஊழியர்களுடன் இணைந்து பணியாற்ற நேரிடும். எனவே, மனிதாபிமானத்துடன் கூடிய இனிய அணுகுமுறையே எப்போதும் நல்ல பலனை அளிக்கும்.

‘நீ ஒருவரை விரும்பும்போது அவரிடம் இல்லாத பல விஷயங்களை மிகைப்படுத்திக் கொள்கிறாய். அதேபோல, ஒருவரை வெறுக்கும்போதும் ஒரு சில விஷயங்களை மிகைப்படுத்திக் கொள்கிறாய். விரும்பும்போது கடவுளாக தெரியும் நபர், வெறுக்கும்போது பிசாசாக தோற்றமளிக்கிறார். உண்மையில் அவர் கடவுளும் இல்லை. பிசாசும் இல்லை. அவர், அவராகவே இருக்கிறார். நாம் மிகைப்படுத்திக் கொள்வதில் தான் அனைத்தும் இருக்கிறது’ என்பது ஓஷோ அறிவுரை.

எனவே, எந்த ஒரு ஊழியராக இருந்தாலும் தராசு போல நடுநிலைமையுடன் அணுக வேண்டும். இது அலுவலக பணிக்கு மட்டுமல்ல. வாழ்க்கையிலும் உதவும். தனிப்பட்ட குணத்திலும் எரிச்சல், கோபம் போன்றவற்றை அறவே ஒழிக்க வேண்டும். பொறுமை, தன்னடக்கம் கண்டிப்பாக தேவை. நிதானமற்ற பேச்சு காரியத்தை கெடுக்கும். முதலில் இவற்றை கடைப்பிடிப்பதும் மிகவும் கஷ்டமாக தெரியும். மன அழுத்தம் கூட வரலாம். ஆனால், நாளடைவில் இந்த குணங்கள் தான் மிகவும் நல்லதொரு கவசமாக மாறும்.

ஒருமுறை தனது சீடர்களுடன் ராஜகிரியில் இருந்து நாளந்தா நோக்கி புத்த பிரான் பயணம் மேற்கொண்டார். அவரும் புத்த பிட்சுகளும் குழுவாக சென்றபோது வழியில் ஒருவர், அவர்களை மறித்தார். பின்னர், மிக மோசமான வார்த்தைகளால் புத்தரை நோக்கி அந்த மனிதர் திட்டத் தொடங்கினார். அதைக் கேட்ட, சீடர்களான புத்த பிட்சுகள் அனைவரும் கடும் ஆத்திரம் அடைந்தனர். ஆனால், புத்தரின் முகத்தில் எந்த வித சலனமும் இல்லை. ஓவியத்தில் வரைந்த தாமரை மலர் போன்று மலர்ந்து காணப்பட்டது. அதைக் கண்ட பிட்சுகள் ஆச்சரியம் அடைந்தனர்.

பிறகு, அந்த மனிதர் போய் விட்டார். இதையடுத்து, நாளந்தா நோக்கிய பயணம் அவர்களது பயணம் தொடர்ந்தது. சீடர்களுக்கு பொறுக்க முடியவில்லை. தங்களுக்குள் குமைந்து கொண்டிருந்த கேள்வியை புத்த பிரானை பார்த்து கேட்டனர்.

அதற்கு பதிலளித்த புத்தர், “யுத்த களத்தில் புகுந்து செல்லும் யானை மீது அனைத்து திசைகளில் இருந்தும் அம்புகள் பாய்ந்து வந்து தாக்கும். ஆனால், அவற்றை பொறுத்துக் கொண்டு தனது இலக்கு நோக்கி அது நடந்து செல்லும். அது போலத்தான், எனது செயல்பாடும். இகழ்ச்சியும், புகழ்ச்சியும் எனக்கு ஒன்றே. இரு சூழ்நிலைகளிலும் சம நிலையில் இருப்பதே உண்மையான தர்மம்” என விளக்கம் அளித்தார்.

மலர்ந்து நிற்கும் மலர்கள் அனைத்தும், தம் மீது அருவருப்பான வண்டு அமர்ந்தாலும் முகம் சுளிப்பதில்லை. கொடூர மனிதர்கள் இருக்கிறார்களே என்பதற்காக சூரியன் உதிக்காமல் இருப்பதில்லை. அன்பும் அரவணைப்பும் ஒன்று சேர்ந்திருந்திருந்தால்...
.
.
நீங்களும் பாஸ் தான்.

(வெற்றி பயணம் தொடரும்…)

Friday, January 27, 2017

வெற்றியை நோக்கி … 10

காலம் பொன் போன்றது

காலம், நேரம், தருணம் இப்படி பல்வேறு பெயர்களில் அழைத்தாலும் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத விஷயம் அது. ஓலைக் குடிசையின் வழியே வானை நோக்கிக் கொண்டிருக்கும் சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி. ஒரு நிறுவனத்தின் மிகப்பெரிய அதிகாரியாக இருந்தாலும் சரி. உலகிலேயே மிக அதிகாரம் படைத்த அமெரிக்க அதிபராக இருந்தாலும் சரி. உலகின் மிகப்பெரிய பணக்காரர் வரிசையில் முதலிடத்தில் இருந்தாலும் சரி. அனைவருக்குமே இறைவன் அளித்திருப்பது ஒரே மாதிரியான கால அளவு தான். ஒரு நாளுக்கு 24 மணி என்பது அனைவருக்குமே சமமானது.
 
அனைவரிடமும் மணிக்கு தலா 60 நிமிடங்கள் வீதம் வாரியாக முழுதாக 24 மணி நேரம் தரப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அந்த காலத்தை பயன்படுத்தும் விதத்தை பொறுத்தே ஒவ்வொருவரின் வெற்றி, தோல்வி, வாழ்க்கைத் தரம், வேலை, புகழ், பணம், பதவி, சொகுசான வாழ்க்கை, அடுத்தவரை அண்டி நிற்கும் நிலைமை என பலதரப்பட்ட நிலைமைகளும் ஏற்படுகின்றன. நேரம் போதவில்லை. பொழுது போகவில்லை என்பதெல்லாம் சோம்பேறிகளின் கூற்று. ஏனெனில், தினமும் 3 கோடியே 15 லட்சத்து 36 ஆயிரம் விநாடிகள் நமக்குத் தரப்பட்டுள்ளன.

இந்த பூவுலகில் மனிதனின் சராசரியான வாழ்நாள் 65 ஆண்டுகள் என வைத்துக் கொண்டால் தோராயமாக ஒவ்வொருவருக்கும் சுமார் 25 ஆயிரம் நாட்கள் மட்டுமே கடவுளால் எண்ணி வழங்கப்பட்டு இருக்கின்றன. முன்பின் அறியாத ஊருக்குச் சென்றால் கையில் சிறிதளவே இருக்கும் பணத்தை எந்த அளவுக்கு மிகச் சிக்கனமாக செலவு செய்கிறோமோ? அதுபோலவே, இந்த நாட்களையும் மிக மிக கவனமாக செலவு செய்ய வேண்டும்.

அப்படி நாம் செய்திருக்கிறோமா? இந்த கேள்வியுடன் கடந்த காலத்தை நாம் சிறிது திரும்பிப் பார்த்தால் திருப்தியான பதில் கிடைக்காது என்பதே கசப்பான உண்மை. காலாவதியான செக் போல கடந்து விட்ட கடந்த காலம் குறித்து யோசிப்பதில் அர்த்தம் கிடையாது. செலவழிக்காமல் கையில் குவிந்து கிடக்கும் ரொக்கப் பணம் போல இருக்கும் நிகழ்காலம் குறித்து யோசிக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெறவும் வேலையில் முன்னேறவும் நிகழ்கால முடிவுகள் அர்த்தம் நிறைந்தவை. அவசியமானவை.

அந்த முடிவுகளை எடுப்பதற்கு முன், திட்டமிடுதல் மிகவும் முக்கியமானது. நேரத்தை மிகச் சரியாக நிர்வகிப்பதில் தான் ஒவ்வொருவருடைய வெற்றியின் சூட்சுமமும் அடங்கி கிடக்கிறது. ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலைகளை முதலில் பட்டியலிட்டு கொள்ள வேண்டும். முதலில் எந்த வேலை என்பதை அறிந்து அந்த வேலைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பெரியவர்களும் இதையே, ‘பருவத்தே பயிர் செய்’ என்றனர். அதாவது, மிகச் சிறந்த விளைச்சலை பெற வேண்டுமானால் மிகச் சரியான மழைப் பருவத்தை அறிந்து அதற்கு ஏற்ற சரியான விதையை நிலத்தில் விதைக்க வேண்டும். 

இது, வாழ்க்கைக்கும் 100 சதவீதம் பொருந்தும். இளமை பருவத்தில் வேலையை தேடிக் கொள்ள வேண்டும். காலம் கடந்து விட்டால் எக்ஸ்பயரி ஆன உணவு பொருட்கள் எப்படி உதவாதோ? அதுபோலவே எக்ஸ்பயரி ஆகி விடுவோம். ‘பர்ஸ்ட் இம்ப்ரஸன் இஸ் பெஸ்ட் இம்ப்ரஸன்’ என ஆங்கிலத்தில் கூறுவார்கள். முதலில் தோன்றும் அபிப்பிராயமே நல்ல அபிப்பிராயமாக இருக்கும். இதையே, ‘முதல் கோணல் முற்றும் கோணல்’ என்ற வார்த்தைகளில் கூறி வைத்தனர். உங்களுடைய கால நிர்ணய பட்டியலை எப்படி முதலில் வகுத்துக் கொள்கிறீர்களோ? அதற்கு ஏற்பவே பலன் கிடைக்கும். அதிகாலையிலேயே பணிகளை சுறுசுறுப்பாக துவங்க வேண்டும். அடுத்தவரை சார்ந்து இருக்காமல் சுயமாக வேலையை செய்து முடிப்பது எப்படி என்பதை சிந்திக்க வேண்டும். அந்த சிந்தனை தான் ஒருவரை உச்சத்திற்கு கொண்டு செல்லும்.

எதையுமே நல்ல விதமாகவும் நேர்மறை எண்ணத்துடனும் அணுக வேண்டும். ஒரு நாளின் 24 மணி நேரத்தில் வீண் பேச்சு, தூக்கம், பொழுதுபோக்கு போன்றவற்றை குறைத்து பயனுள்ள பணிகளுக்கு ஒதுக்க வேண்டும். நேரம் தவறாமை மிகவும் அவசியம். நல்ல நேரம், கெட்ட நேரம் என்பதெல்லாம் அவசியம் அற்றவை. எல்லா நேரமும் நல்ல நேரமே. ஒவ்வொரு நாளின் முடிவிலும் அன்றைய தினத்தில் செய்த சிறப்பான பணி எது என உங்களுக்குள் ஒரு கேள்வியை எழுப்பி நல்லதொரு பதிலை பெற்று விட்டீர்கள் என்றால் எதிர்காலம் சிறப்படையும்.

(வெற்றி பயணம் தொடரும்…)

வெற்றியை நோக்கி … 9

மறந்துடாதீங்க ப்ளீஸ்...

‘சார். உங்கள எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. ஆனா, சட்டுன்னு நினைவுக்கு வர மாட்டேங்குது’ இது போன்ற வார்த்தைகளை அவ்வப்போது நாம் கேட்க நேரிடும். இவற்றை சொல்லும் நபர்கள் வேண்டுமானால் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், வார்த்தைகள் வேறுபடுவதில்லை. நாமே கூட, நல்ல பரிச்சயமான பள்ளித் தோழன் அல்லது நீண்ட காலம் கழித்து சந்திக்கும் நண்பன் பெயரை பார்த்த உடனேயே நினைவுக்கு கொண்டு வர முடிவதில்லை.

மாடியில் உள்ள படிக்கட்டுகளை பாருங்கள். ஒவ்வொரு படிக்கட்டுக்கும் அடுத்த படிக்கட்டுக்கு செல்ல வழி ஏற்படுத்தி தருவதோடு பணி நிறைவடைந்து விடுகிறது. அதுபோலத்தான் மனமும். ஒரு வேலை முடிந்ததும் அடுத்த வேலையை பார்க்கச் சென்று விடும். உங்களுக்கு 30 வயது என்று வைத்துக் கொள்வோம். உங்களின் 5 வயதில் இருந்து 25 வயது வரையிலான உங்களுடைய நினைவுகளை வரிசையாக கூறச் சொன்னால் அதிக பட்சமாக 24 மணி நேரத்துக்கு மேல் கூறுவதற்கு உங்களிடம் எதுவும் இருக்காது.

அந்த 24 மணி நேரத்திலும் நீங்கள் கூறும் வார்த்தைகளை அவ்வப்போது ‘நல்லா நினைவிருக்கு’ என்ற வலு சேர்க்கும் வாதத்துடன் தான் கூறுவீர்கள். ஏனெனில் மனித மனம் என்பது மறப்பதில் கில்லாடி. அதில் ஒரு சில விஷயங்கள் விதி விலக்கு. உண்மையில், மனிதனை மிருகங்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுவது, இந்த நினைவாற்றல் தான். ஆனால், நினைவாற்றல் என்பதை மனப்பாடம் செய்து கொள்வது என அனைவரும் தவறாக புரிந்து கொள்கின்றனர். அதனால் தான் பள்ளி மாணவர்கள், பாடங்களை உருப்போடும் பழக்கத்தில் ஊறிப்போய் இருக்கின்றனர். நினைவாற்றல் என்பது வேறு. அது 3 வித தன்மை உடையது.

முதலாவது, பட்டறிவு மூலமாக பெறும் செய்திகள். இதை நம்முடைய மனது உள்வாங்கி நரம்புகள் வழியாக நரம்பு மண்டலத்தில் பதிவு செய்கிறது. இரண்டாவது அந்த நரம்பு மண்டலத்தில் தகவல்கள் பதிவாகி இருக்கின்றன. மூன்றாவதாக நமது பட்டறிவு மூலமாக அந்த நினைவுகளை மீண்டும் கொண்டு வருவது. இது தவிர, நம்முடைய தகவல்களை குறிப்பெடுத்து பதிவு செய்து கொள்வதும் கூட நினைவாற்றலை அதிகரிக்கும்.

பள்ளிக்கூடங்களில் நடத்தும் போட்டிகளின்போது நாம் ஒரு போட்டியை கவனிக்கலாம். ஒரு அறைக்குள் ஏராளமான பொருட்களை வரிசையாக அடுக்கி வைத்து அதை கவனித்துவிட்டு வெளியே வந்து அதில் உள்ள பொருட்களை நினைவு படுத்தி பட்டியலிட்டு எழுதி கொடுக்கச் சொல்வார்கள். இது நினைவாற்றலை அதிகரிக்கும் போட்டிகளில் ஒன்று. ஆசிரியர்களும் கூட பாடங்களை திட்டமிட்டு நினைவுப்படுத்தி, குறிப்பெடுத்து வந்தால் தான் சிறப்பாக மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத் தர முடியும்.

மனித மனத்தில் எழுத்துகள், வார்த்தைகளை விட காட்சிகளே எளிதில் பதியும். இன்றைய சமூகத்தில் பத்திரிகை, இலக்கியங்கள் ஆகியவற்றை விட சினிமா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதே இதற்கு சிறந்த உதாரணம். பாடங்களை விட படங்களே மனித மனதில் நன்றாக நினைவில் நிற்கும். அதனால், எந்தவொரு தகவலையும் படக்காட்சிகள் போல மனதில் பதிவு செய்து கொள்வது நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் தொடர்புடையவற்றை சேர்த்து நினைவில் பதிவு செய்வது நல்லது.
நினைவாற்றல் என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மூளைக்கான மிகச் சிறந்த பயிற்சி என்றும் கூறலாம். எந்த அளவுக்கு மூளை சுறுசுறுப்பாக செயல்படுகிறதோ அந்த அளவுக்கு நல்லது.

மறதியை மறக்கடித்து நீடித்த நினைவாற்றலை பெற இளமையிலேயே சில பயிற்சிகளை கடைப்பிடித்தால் போதும். முதுமையிலும் நினைவாற்றலை தக்க வைத்துக் கொள்ள முடியும். எளிதான சில பயிற்சிகளை முறையாக பின்பற்றி வந்தால் ஷார்ட் டெம் மெமரி லாஸ் முதல் அல்சமீர் வரை ஏராளமான மறதி நோய்களை தடுக்கலாம். நினைவாற்றலை இறுதிக் காலம் வரை பாதுகாக்கலாம்.

முதலாவதாக, புதிய மொழிகளை கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். புதிதாக ஒரு மொழியை கற்றுக் கொண்டு எங்கே போகப் போகிறோம் என்ற கேள்வி மனதுக்குள் எழலாம். மொழி ஆர்வம் என்பது தனிப்பட்ட திறமையை வளர்ப்பதற்கு மட்டும் உதவவில்லை. புதிய வார்த்தைகளை அறிந்து கொண்டு அவற்றின் அர்த்தங்களை புரிந்து கொள்வது நினைவாற்றலை பெருக்குவதற்கு அதிகமாக உதவுகிறது. வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு விதமான சொற்களை அதிகமாக அறிந்து வைத்துக் கொள்வது மறதியை போக்கும்.

அடுத்ததாக, புதிர் கணக்குகள், வார்த்தை விளையாட்டு, எண் கணிதம், சுடோகு, புதிர் போன்றவற்றில் ஈடுபடலாம். இதனால், பொது அறிவு வளருவது மட்டுமல்லாமல் நினைவாற்றலும் வளரும். குறுக்கெழுத்துப் புதிர்களை விடுவிப்பதும் விடுகதைகளுக்கு விடை கண்டுபிடிப்பதும் நினைவாற்றலை பெருக்கும் கலைகள். இவை எல்லாம் சிறிய குழந்தைகளுக்கான வேலை என்று ஒதுங்காமல் நினைவாற்றலுக்கான மருந்தாக நினைத்து களத்தில் இறங்கினால் மறதி ஓடிப்போகும்.

நினைவாற்றலை தக்க வைப்பதில் இசைக்கும் முக்கிய பங்கு உள்ளது. மெலடியான இசையில் பாடல்களை கேட்பது மூளைக்கு சிறந்த பயிற்சி. அந்த பாடல்களின் வார்த்தைகளை கேட்டு அப்படியே பாடிப் பார்ப்பதும், பாடல் வரிகளை முணுமுணுப்பதும் ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வதற்கான மிகச் சிறந்த பயிற்சி.
முன்பெல்லாம் குழந்தைகளுக்கு வீடுகளில் இருக்கும் பெரியவர்கள் கதை சொல்வதை பார்த்திருப்போம். இந்த கதை சொல்லி முறை கூட, ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது. அதை, தங்களுக்குள் பேசிக் கொள்வது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது, தான் படித்த ஒன்றை அல்லது தனக்கு தெரிந்த ஒரு தகவலை தனக்குள் மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொள்வது. இது, தகவல்களை மூளையில் பதிந்து வைத்துக் கொள்ளும் பயிற்சியாகும். நம்முடைய முன்னோரிடம் இருந்து செவி வழியாக நமக்கு வந்து சேர்ந்துள்ள ஏராளமான கர்ணப் பரம்பரை கதைகளை இதற்கு உதாரணமாக கூறுவது மிகப் பொருத்தமாக இருக்கும். அதனால், இன்று முதல் உங்கள் வீட்டு செல்லக் குட்டிகளுக்கு கதைகள் சொல்லுவதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.

வெவ்வேறு விதமான புத்தகங்களை படிப்பதும் நினைவாற்றலை பெருக்கும். புத்தகங்கள், செய்தித் தாள்கள், செய்திக் கட்டுரைகள், பல்வேறு துறை சார்ந்த பெரிய மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகள் என அனைத்தையும் தேடிப் பிடித்து படிக்க வேண்டும். இதற்காக தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் ஓய்வான நேரம், ரயில் அல்லது பேருந்து பயண நேரம் போன்ற சமயங்களில் வாசிக்கலாம். அதே நேரத்தில், படித்த புத்தகத்தின் கருத்துகளை மீண்டும் நினைவு படுத்திக் கொள்வது அவசியம். சில ஆண்டுகளுக்கு முன் படித்த கதைகளை கூட நினைவுப்படுத்தி பார்க்கலாம். இதுவும், நினைவாற்றலை மேம்படுத்த உதவும் நல்ல பயிற்சி.
மூளையை வலிமை பெறச் செய்வதற்கென தனியாக சில பிரத்யேக உடல் பயிற்சிகள் உள்ளன. கண், கை, நரம்பு போன்ற உறுப்புகளுடன் தொடர்புடைய அந்த பயிற்சிகளையும் தவறாமல் மேற்கொள்ளலாம். 

ஒரு படம் அல்லது வார்த்தையோடு தொடர்புடைய வார்த்தைகளை தொடர் வரிசையில் பட்டியலிடுவதும் நினைவாற்றலை தக்க வைத்துக் கொள்வதற்கான சிறந்த வழி. டிவிக்களில் ஒளிபரப்பாகும் கேம் ஷோக்களும் பத்திரிகைகளில் வெளியாகும் புதிர் போட்டிகளும் இந்த வகையை சேர்ந்தவையே. அவற்றை நாமே நண்பர்களுடனோ, வீட்டிலோ செய்து பார்க்கலாம். இதுவும் நீண்டகால நினைவாற்றலுக்கு நிச்சய உத்தரவாதம்.

மறதி இல்லாமையே நினைவாற்றல் என கூறப்படுகிறது. இந்த மறதியின்மை என்ற சொல்லை பொச்சாவாமை என கூறுகிறார், வள்ளுவர். அதனால் தான், பொச்சாவாமை என்ற தலைப்பில் தனி அதிகாரம் எழுதியுள்ளார். ‘பொச்சாப்பு கொல்லும் புகழை’, ‘பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை’, ‘பொச்சாப்பு உடையார்க்கு இல்லை நன்கு’ என 10 குறள்களை அடுக்குகிறார். எனவே, எப்போதுமே மறந்திடாதீங்க... நினைவாற்றல் நல்லது. அதுவே வெற்றிக்கு சிறந்தது.

(வெற்றி பயணம் தொடரும்…)

வெற்றியை நோக்கி … 8

மன அழுத்தம் தொலைப்போம்


இப்போ இந்த வேலய என்னால செய்ய முடியாது... எனக்கு மூடு சரியில்ல... நான் டென்சனா இருக்கேன்... என்ன தொந்தரவு பண்ணாத, ப்ளீஸ்... எனக்கு மட்டும் ஏன் இப்படில்லாம் நடக்குதோ... மனசே சரியில்ல.... சில நேரங்களில் சில மனிதர்கள் அல்ல. பல நேரங்களில் பல மனிதர்களும் இப்படித்தான் புலம்பிக் கொண்டு இருக்கின்றனர். ஒருவர் எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும்கூட மனச்சோர்வு, மன அழுத்தம் ஏற்பட்டால் அத்தனை திறமைகளும் காற்றில் அகப்பட்ட கற்பூரமாக கரைந்து காணாமல்  போய்விடும்.

காலச்சக்கரம் வேகமாக சுழன்று கொண்டு இருக்கிறது. முன்பெல்லாம் வயல், வரப்பு, காடு, கழனி என பூமிப்பந்து மிக அழகாக பசுமையுடன் காட்சி அளித்தது. காட்டை அழித்து நாட்டை காட்டுகிறேன் என்ற பெயரில் பூமியையே கான்கிரீட் காடாக மாற்றி வரும் மனித இனத்துக்கு இயற்கை தந்த பரிசுகளில் ஒன்று மன அழுத்தம்.

பாஸ்ட் புட் காலமாக மாறிவிட்ட இன்றைய நாட்களில் பள்ளி பருவத்திலேயே மன அழுத்தம் வந்து விடுகிறது. எந்த நேரமும் ஒரே விதமான வேலையிலோ அல்லது படிப்பிலோ மூழ்கி கிடந்தால் மன அழுத்தம் தானாகவே வந்து சேரும். எரிச்சல், ஷார்ட் டெம்பர் எனப்படும் எளிதில் கோபப்படுதல், அடிக்கடி மனம் மாறுதல் போன்றவை மன உளைச்சலின் ஆரம்ப கட்ட அறிகுறிகள்.

எந்த நேரமும் குழப்பமான மனதுடனே இருக்கும் மன உளைச்சல்காரர் முன்பு சிரித்த முகத்துடன் ஒருவர் சென்றால் கூட, எரிச்சல் தான் ஏற்படும். ஏனெனில், குழப்பமான மனம் தான் மன உளைச்சலுக்கு ஏற்ற நல்ல விளைச்சல் நிலம்.

ஆரோக்கியமான மனிதனுக்கு தினமும் 8 மணி நேர உறக்கம் தேவை. உறக்கமின்மையும் மனச்சோர்வுக்கு ஒரு காரணியே. ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டு இருப்பவருக்கு கண்டிப்பாக மனச்சோர்வு வந்து விடும்.

அதன் விளைவாக உயர் ரத்த அழுத்தம் என்பது போன்ற வியாதிகள் வரிசையில் நிற்கும். உடனே, மருத்துவரிடம் சென்றால் நன்றாக ஓய்வு எடுக்குமாறு அறிவுரை கிடைக்கும். வீக் எண்ட், சம்மர் ஹாலிடே என என்ஜாய் பண்ணுவதற்கு வழி ஏற்படுத்தி வைத்திருப்பது, இதனால் தான். அதற்காக, மன அழுத்தத்தை போக்க விடுமுறை தினம் வரை காத்திருக்க தேவையில்லை. அன்றாட வாழ்க்கை முறையை சரியாக வைத்துக் கொண்டாலே போதும். விளையாட்டு, தியானம், யோகா என மனதை திருப்பலாம். ஓடி விளையாடு பாப்பா என குழந்தைகளுக்கு அறிவுரை கூறிய பாரதியார், மாலை முழுவதும் விளையாட அறிவுறுத்துகிறார். இது பெரியவர்களுக்கும் பொருந்தும் அறிவுரை.

உள்ளுக்குள் யார் மீதாவது கோபமோ, அதிருப்தியோ நிலவினால் அதுவே நாளடைவில் மன அழுத்தத்தை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்று விடும்.  உதாரணமாக, ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்துக் கொண்டு அதற்குள் சில தக்காளிப் பழங்களை போட்டு வையுங்கள். பிளாஸ்டிக் பைக்குள் இருந்து வெளியிலோ அல்லது வெளியில் இருந்து உள்ளுக்குள்ளோ காற்று கூட புக முடியாது. இந்த பையை நீங்கள் எங்கு சென்றாலும் எந்நேரமும் கூடவே சுமந்து செல்லுங்கள். ஒருநாள் அல்லது இரண்டு நாள் வரை உங்களால் அதுபோல சுமந்து செல்ல முடியுமா? அதன்பிறகு என்னவாகும்? பிளாஸ்டிக் பைக்குள் இருக்கும் தக்காளிப் பழம் அழுக ஆரம்பித்து ஒரு அருவருப்பையும் துர்நாற்றத்தையும் உங்களுக்கு தரும் அல்லவா?

இப்போது பிளாஸ்டிக் கவர் என்பது உங்களுடைய மனம் என்றும் தக்காளிப் பழம் என்பது அந்த மனதுக்குள் நிறைந்து கிடக்கும் அதிருப்தி அல்லது கோபம் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். மனதுக்குள் தேவையற்ற அதிருப்திகளையும் கவலை, கோபம் போன்றவற்றையும் அந்த தக்காளிப் பழங்களைப்போல சுமந்து திரிந்தால் மனதை அவை குப்பை தொட்டியாக்கி விடும். ஆனால், மனம் என்பது குப்பைகளை கொட்டி வைக்கும் தொட்டி அல்ல.

தேசிய குற்றப்பதிவு ஆவணங்களின் அறிக்கைப்படி, 2012ம் ஆண்டில் மட்டும் 1,35,000 பேர் இந்தியாவில் தற்கொலை செய்துள்ளனர். இதில், தமிழகத்தின் எண்ணிக்கை 2300. இது தவிர, தற்கொலை முயற்சிகளின் எண்ணிக்கை தனி. தற்கொலை நிகழ்வுகளுக்கு அடிப்படை காரணம் மன அழுத்தம். காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்தாலே உடலில் உள்ள 72 ஆயிரம் நரம்புகளும் 640 தசைகளும் புத்துணர்ச்சி பெறும் என வல்லுனர்கள் கூறுகின்றனர். வீடு, அலுவலகம் என செக்கு மாடு போல சுழன்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் இருந்து விடுபட்டு சற்று கவனத்தை திருப்பினால் மனம் இலகுவாகும். வீட்டில் தோட்டம் அமைத்திருந்தால் அதில் காலாற நடந்து செல்லலாம். பசுமையான தாவரங்கள், புல்வெளிகள் போன்றவற்றை காணும்போது மனதில் உற்சாகம் பீறிடும். அதனால் தான், புத்துணர்ச்சிக்காக மலை வாசஸ்தலங்களுக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது.

அலுவலக பணி நேரம் முழுவதும் கணினி முன்பாகவே செலவு செய்பவர்கள், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை 10 நிமிட நேரம் பசுமையான ஒன்றை பார்த்தால் கண்ணில் சோர்வு நீங்கும். மன அழுத்தத்தின் சிறந்த தோழன் தனிமை. எனவே, எப்போதுமே தனிமையாக இருப்பது நல்லதல்ல. சுற்றியுள்ளவர்களுடன் கலகலப்பாக இருக்கலாம் அல்லது சூழ்நிலையை கலகலப்புடன் வைத்திருப்பவர்களுடன் நட்புறவை வளர்க்கலாம்.

மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வை போக்குவதற்கு ஏராளமான எளிய பயிற்சிகள் உள்ளன. அவற்றை பின்பற்றி நடந்தால், இந்த நாள் மட்டுமல்லாமல் எல்லா நாளுமே இனிமையாக அமையும். வெற்றிக்கும் அதுதானே தேவை.

(வெற்றி பயணம் தொடரும்…)

வெற்றியை நோக்கி … 7

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்

கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு என வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேற்றம் என்பது போட்டி நிறைந்த உலகில் சவால்கள் நிறைந்ததாகவே உள்ளது. புத்திசாலித்தனத்துடன் கூடிய சாமர்த்தியமான பேச்சுக்கலையும் உங்களை சவால்களை எதிர்கொள்ளச் செய்யும். பேச்சுக்கலை என்று கூறியதும் கையில் பை, கழுத்தில் டை அணிந்த தோற்றத்துடன் விற்பனை பிரதிநிதிகளின் டிப்டாப் உருவம் மனதுக்குள் வருவதை தவிர்க்க முடியாது. ஆனால், அவர்கள் மட்டுமே பேச்சுக்கலைக்கு உதாரணம் அல்ல.

வீட்டுக்கு அருகே மளிகைக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சியும் ஒருவகையில் சிறந்த பேச்சுக்கலை வல்லுநர் தான். தகவல் தொழில் நுட்பம், மருந்து உற்பத்தி, வீட்டு உபயோக பொருள் தயாரிப்பு, மீடியா, கல்வித்துறை, ஆயுள் காப்பீடு, வாகன உற்பத்தி என எந்தவொரு துறையாக இருந்தாலும் ஒவ்வொரு நிறுவனமும் மார்க்கெட்டிங் டிவிஷன் என்ற ஒரு பிரிவை கண்டிப்பாக வைத்திருக்கிறது. அவ்வளவு ஏன்? வாடகை வீடு பிடித்து தரும் தரகர், ரியல் எஸ்டேட் விற்பனையாளர் என பல்வேறு பரிமாணங்களில் விற்பனை பிரதிநிதிகளை நாம் தினந்தோறும் சந்திக்கிறோம்.

உங்கள் ஊரில் அருகாமையில் உள்ள நகைக்கடைகளையோ அல்லது ஜவுளிக் கடைகளையோ அப்படியே ஒரு முறை சுற்றிப் பாருங்கள். பின்னர், அந்த காட்சிகளை உங்கள் மனதுக்குள் ஒழுங்குபடுத்திப் பாருங்கள். அந்த கடைகளில் சிறந்த கடை என ஏதாவது ஒரு கடையை தான் மக்கள் கருதி கூட்டமாக அலைமோதுகின்றனர், அல்லவா? இதற்கு காரணம் என்ன? அனைத்து கடைகளிலும் தங்கம் தான் விற்கின்றனர். ஜவுளியும் அதுபோன்றதே. பிறகு எப்படி? குறிப்பிட்ட அந்த கடையில் மட்டும் கூட்டம் குவிகிறது? அங்குதான் பேச்சுக்கலையும் தன்னம்பிக்கையும் உதவுகிறது. இப்போது நீங்கள் மனதுக்குள் நினைத்த கடையை மறுபடியும் ஒருமுறை அலசிப் பாருங்கள். குறிப்பிட்ட அந்த கடை உரிமையாளர், அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோரிடம் மக்களை கவர்ந்து இழுக்கும் பேச்சுக்கலை இருப்பதை உணர முடியும்.

அனைவருக்குமே கம்ப்யூட்டர் பற்றி தெரியும். எவ்வளவு சிறப்பான சூப்பர் கம்ப்யூட்டராக இருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு தான் அதற்கு நினைவு சக்தி உண்டு. இப்போது அனைவர் கைகளிலும் தவழும் ஆன்ட்ராய்டு, ஐபோன், ஐபாட் போன்றவற்றின் நிலைமையும் அதுவே. அவற்றின் நினைவாற்றல் நிரம்பி வழிய தொடங்கினால் செயல்பாடு மெதுவாகி விடும். சிஸ்டம் ஸ்லோவாகும் பட்சத்தில் குறிப்பிட்ட அளவுக்கு அதில் உள்ள தகவல்களை அழிப்பது கட்டாயமாகி விடும். ஆனால், மனித மூளை அப்படிப்பட்டது அல்ல. கம்ப்யூட்டரை விட சிறந்தது. மிகச்சிறந்த நினைவாற்றல் கொண்ட மனிதன் கூட மூளையின் மிகக் குறைந்த சதவீத பகுதியையே பயன்படுத்துவதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மனித மனம் 360 டிகிரி கோணத்தில் சிந்திக்கும் ஆற்றல் பெற்றது. அந்த சிந்தனையின் இறுதி முடிவானது அந்த மனதுக்கு சொந்தக்காரருக்கு லாபமாகவே அமையும். கூடுமானவரை அதற்காகவே மனம் பாடுபடும். ஒரு பொருளை மறைத்து வைத்தால் அதை அரிதான பொருளாக மனம் கருதும். தடுக்கப்பட்ட பொருளை பெற மிகவும் விரும்பும். ஒருவர் கையில் இருந்து வலுக்கட்டாயமாக ஒரு பொருளை பறித்தால் அதை எப்படியாவது மீண்டும் அடைய வேண்டும் என்ற எண்ண விதை அவருடைய மனதில் ஊன்றப்படுகிறது. அதாவது, எதிரில் உள்ள நபரின் ஆசையானது அந்த கணமே தூண்டப்படுகிறது.

இதுவே, மனித மனதின் அடிப்படை. இதை மிகச் சரியாக புரிந்து கொண்டு வாதத் திறமையும் நன்றாக அமைந்து விட்டால் எதிராளியையும் வசப்படுத்தலாம். உலகில் மக்கள் போற்றும் முன்னணி தலைவர்கள் அனைவருமே பேச்சுக் கலையில் சிறந்தவர்களே. அடுத்தடுத்து அழகான சொற்களால் பலமுறை கூறப்படும் ஒரு பொய் கூட நாளடைவில் மெய் என்னும் ஆடையை அணிந்து கொள்ளும். அந்த அளவுக்கு பேச்சுக்கலை என்பது மிகவும் வலிமையானது.

அதுவும் எதிராளியை பேச்சில் வெல்வது என்பது மிகச் சாதாரணமானது அல்ல. ஏனெனில், அவரும் உங்களைப் போலவே எதிராளியை (உங்களை) வெல்லும் எண்ணத்தில் இருப்பவர் தான். அதனால் தான், நீங்கள் ஒரு விற்பனையாளராக இருந்தால் வாடிக்கையாளரின் கூற்றுக்கு உடன்படுவது போலவே முதலில் பேச வேண்டும். அவரது கருத்துகளை வரவேற்று ஆமோதித்துக் கொண்டே இருக்க வேண்டும். இது இருவருக்கும் இடையே ஒருவித புரிதலை முதலில்  உருவாக்கும்.

ஒரு கட்டத்தில், ‘அட. மிகவும் நல்லவராக இருக்கிறாரே? நம் இருவரின் அலைவரிசையும் ஒத்துப்போகிறதே?’ என எதிரில் இருப்பவர் கருதத் துவங்கும் தருணம் தான் நம்முடைய வெற்றிக்கான முதல் புள்ளி. அந்த தருணம் முதல் அவரது மனதை நமது கட்டுப்பாட்டில் எளிதாக கொண்டு வந்து விடலாம். அதன்பிறகு, நம்முடைய குறிக்கோள் என்னவோ? அதை மெதுவாக அவருடைய மனதுக்குள் புகுத்த தொடங்கினால் வேலை எளிது.

பேசுங்கள். மனம் விட்டு பேசுங்கள். உங்கள் குறிக்கோள் நிறைவேறும் விதத்தில் பேசுங்கள். ஏனெனில், வாயுள்ள பிள்ளை பிழைக்கும். நீங்களும் வாயுள்ள பிள்ளையாகி அடுத்தவர் மனதை படியுங்கள். பின்னர், அந்த மனதில் இடம் பிடியுங்கள். அதன் மூலமாக வெற்றியாளராகுங்கள்.

(வெற்றி பயணம் தொடரும்…)

வெற்றியை நோக்கி … 6

 உன்னை அறிந்தால்...

யானை, தனது பலத்தை அறியாது என கூறுவார்கள். யானைக்கு மட்டுமல்ல, மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த வார்த்தைகள் பொருந்தும். குறிப்பாக, இளைஞர்களில் பலருக்கும் உள்ள குறைபாடு இது. தன்னை பற்றியே முழுமையாக அறிந்து கொள்ளாமல் ஒவ்வொரு வாய்ப்பையும் ஒதுக்கி தள்ளுவது வியப்பானது. உண்மையில், உள்ளுக்குள் உள்ள திறமையை சரியாக அறிந்து செயல்படுவதில் தான் ஒவ்வொருவரின் வெற்றி சூட்சுமம் அடங்கி இருக்கிறது.

ஒருவர், தனக்குள்ளேயே எத்தகைய சிந்தனையை வளர்த்துக் கொள்கிறாரோ? அதற்கு ஏற்பவே அவருடைய வளர்ச்சியும் அமையும். தன் ஆளுமை என்பது உள்ளாடை. சுற்றுப்புற சூழல் என்பது மேலாடை. இந்த இரண்டையுமே மிக நேர்த்தியாக நெய்து தரும் திறமையான நெசவு தொழிலாளியாக இருப்பது மனம். எனவே, தனக்குத் தானே ஒருவன் ஊக்குவித்துக் கொள்ளும் எண்ணமே அவனை மிகச் சிறந்தவனாக்குகிறது அல்லது அவனை நிர்வாணப்படுத்துகிறது. இதைத் தான், ‘உன்னை அறிந்தால்.... நீ உன்னை அறிந்தால் ... உலகத்தில் போராடலாம்...’ என கூறுகின்றனர்.

ஆரம்பத்தில் உங்களை நீங்களை கண்டறிவதில், உங்களுக்குள் புதைந்து கிடக்கும் திறமையை கண்டறிவதில் சுணக்கம் ஏற்படலாம். ஆனால், விடா முயற்சி என்ற தூண்டிலை கொண்டு அதை கைப்பற்றி விட முடியும். அதன்பிறகு, அந்த திறமை அடிப்படையிலான குறிக்கோளை வரையறை செய்து கொண்டு அதை நோக்கிய பாதையில் பயணத்தை அமைக்க வேண்டும். தினந்தோறும் உங்கள் குறிக்கோளை நினைவு படுத்தினால் உங்களின் பாதை எளிதாக புலப்படும். நான் தன்னம்பிக்கை உள்ளவன்; துணிச்சலானவன்; நான் வெற்றி பெறுவேன் என்ற தாரக மந்திரத்தை உங்களுக்குள் கூறிக் கொண்டே இருங்கள். உங்களை நீங்களே அறிந்து கொண்டால் உலக வாழ்க்கையில் போராடலாம்.

தனக்குள்ளேயே தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு இருக்கும் ஒவ்வொருவரும் ஹெலன் கெல்லரின் வாழ்க்கை பாடத்தை அறிந்து கொள்ளுவது அவசியம். சிறிய வயதிலேயே பேசும் திறன், கேட்கும் திறன், பார்வை திறன் அனைத்தையும் இழந்தும் கூட தொடுதல், உணருதல் ஆகியவற்றை கொண்டே படித்து பட்டம் பெற்று உலகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளின் ஒப்பற்ற பிரதிநிதியாய் காலம் கடந்து உயர்ந்து நிற்கிறார், ஹெலன் கெல்லர்

நல்ல உடல் நிலையுடன் இருப்பவருக்கே ஆயிரம் இன்னல்கள் உள்ள உலகில், ஹெலன் நிலைமையை சில நிமிடங்கள் யோசித்துப் பாருங்கள். தன்னம்பிக்கை, அனுபவம், கல்வி என ஒவ்வொரு படிகளிலும் எந்த அளவுக்கு ஏறுகிறோமோ அந்த அளவுக்கு வெற்றியின் உயரமும் அதிகமாகும். வெற்றி பயணத்தில் தோல்வியை கண்டு துவளக் கூடாது. ஒரு தோல்வியில் இருந்து இன்னொரு தோல்வியை நோக்கிச் சென்றாலும் உற்சாகம் குறையக்கூடாது. தோல்விகளின் எண்ணிக்கை அதிகமானால் தான் வெற்றி ருசிக்கும். அதற்கு, உங்கள் மீது உங்களின் நம்பிக்கை அதிகரிக்க வேண்டும்.

எந்தவொரு வாய்ப்பாக இருந்தாலும் அதன் கதவானது ‘இழு’ என்றே இருக்கும். எனவே, வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் சாதகமாக்கிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். நேர்மறை எண்ணமே வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும். முன்னேற்றம் என்பது மெதுவாக நடைபெறுகிறதே என கவலைப்படக் கூடாது. மெதுவான வேகம் ஒருபோதும் பிரச்சினை அல்ல. ஒரே இடத்தில் தேங்கி கிடப்பது தான் பிரச்சினை.

ஒரு புத்தகத்தின் முகப்பு அட்டையை வைத்து அந்த புத்தகத்தை எடை போட முடியாது. அதுபோலலே, வெளித்தோற்றத்தை வைத்தே ஒரு மனிதரையோ, சக ஊழியரையோ மதிப்பீடு செய்ய முடியாது. அவ்வாறு மதிப்பிடவும் கூடாது. அதுபோல, தேவையற்ற விமர்சனமும் பூமராங் போல திரும்பி வந்து தாக்கக் கூடும் என்பதால் அதையும் தவிர்க்க வேண்டும். உங்களை முழுவதுமாக ஆராய்ந்து அறிந்து கொள்வதைப் போலவே மற்றவர்களையும் முழுவதுமாக உணர வேண்டும்.

எனது வாழ்க்கையில் உலகத்தை மாற்ற நினைத்து தோல்வியடைந்தேன். பக்கத்து வீட்டுக்காரர்களை மாற்ற நினைத்து தோற்றேன். சக ஊழியர்களை மாற்ற நினைத்து தோல்வியை தழுவினேன். என் வாழ்க்கையில் பல ஆண்டுகளை இப்படியே கழித்து விட்டேன் என புலம்புவது கால விரயம். சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்வது அவசியம். இதைத்தான், ‘அப்டேட்டாக இருக்கிறான்’ என கூறுகின்றனர். புறச் சூழ்நிலை மட்டுமல்ல நீங்கள் சார்ந்துள்ள துறைக்கும் இது பொருந்தும். உங்களை முழுமையாக உணர்ந்து, எந்த நேரமும் அப்டேட்டாக இருந்தால் நீங்களும் ஒரு வெற்றியாளராக, சாதனையாளராக வலம் வரலாம்.

(வெற்றி பயணம் தொடரும்…)

வெற்றியை நோக்கி … 5

தனித்துவமே தனி மனித அழகு

மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஒரு குணம் உண்டு. அது, அடுத்தவரை அல்லது எதிராளியை தனக்கு அடி பணிய வைத்து விட வேண்டும். அடுத்தவர்களை பிட்டுக் களிமண்ணாக பார்ப்பதோடு அந்த களிமண்ணை தனக்கு ஏற்ற வடிவத்தில் பதுமையாக்கி விட வேண்டும் என துடிக்கின்றனர். இதையே களிமண்ணாக கருதப்படும் நபரும் நினைக்கும்போது முரண்பாடு தலை தூக்குகிறது. அதன் விளைவாக எழும் வார்த்தைகளே, ‘என்னால் ஒத்துப்போக முடியவில்லை’. உண்மையில், இயற்கைக்கு மாறான குணம் இது. இயற்கை படைத்த ஒரு மனிதனை மற்றொரு மனிதன் செயற்கையாக எப்படி மாற்ற முடியும்?

இந்த உலகில் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். ஒரே உருவம் கொண்ட இரட்டையர்களிடம் கூட குண வேறுபாடுகள் உண்டு. ஒவ்வொரு தனி மனிதருக்கும் பெற்றோர் வழியாக குறிப்பிட்ட அளவும் தாத்தா, கொள்ளுத்தாத்தா என பரம்பரை வழியாக குறிப்பிட்ட அளவிலும் குணம் வந்து சேரும் என்கிறது, விஞ்ஞானம். ஒரே வீட்டில் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு இடையே கூட வேறுபாடுகள் சகஜம். உண்மையில் உள்ளம், தோற்றம், மரபு என பல்வேறு ரீதியில் மனிதர்கள் ஒவ்வொருவரும் வேறுபட்டு இருக்கிறார்கள்.

ஒரு பொருளை வேண்டாம் என நீங்கள் ஒதுக்கி வைக்கும்போது, அந்த பொருளை கிடைப்பதற்கு அரிய பொருளாக மற்றொருவர் கருதிக் கொண்டு இருப்பதை அறிய மாட்டீர்கள். அது, உங்களுக்கு தானாக வந்து கிடைத்த அருமையான வேலையாக இருக்கலாம் அல்லது உங்களுக்கு பிடிக்காத வண்ணம் கொண்ட சாதாரண உடையாகவும் இருக்கலாம்.
கணிதவியலில் நிகழ்தகவு (பிராபபிளிடி) என்ற ஒரு பாடம் உண்டு. அதாவது, எந்தவொரு விஷயத்திலும் எந்த அளவுக்கு நிகழ்வுகள் நடைபெற சாத்தியம் உள்ளது என்பதை குறிக்கும் கோட்பாடே நிகழ்தகவு. அந்த கோட்பாட்டின்படி வெறும் 30 நாணயங்களை சுண்டி விடுவதாக வைத்துக் கொண்டாலே கோடிக்கணக்கான நிகழ்தகவு கிடைக்கும். எனவே, உலகில் உள்ள 700 கோடி மக்களும் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்களாக இருப்பதில் வியப்பில்லை.

வித்தியாசங்களில் தான் இந்த உலகமே அழகாக மாறி இருக்கிறது. உதாரணத்துக்கு, நீங்கள் பார்க்கும் பொருட்கள் உட்பட அனைத்துமே ஒரே மாதிரியாக அமைந்து விட்டாலோ அல்லது உங்கள் ரசனைக்கு ஏற்றவாறே அமைந்து விட்டாலோ எவ்வளவு காலத்துக்கு அதை பார்த்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க முடியும். நிச்சயமாக, ஒரு கட்டத்தில் உங்களுக்கு அது போரடித்துவிடும். எனவே, ஒவ்வொரு வேறுபாட்டையும் அனுபவிக்க கற்றுக் கொள்ள வேண்டும், மனிதர்களின் மாறுபாடான குணங்கள் உட்பட.

ஒவ்வொரு மனிதனின் குணமும் அவ்வப்போது மாறுபடும் இயல்பு கொண்டது. புறச் சூழ்நிலை நன்றாக அமைந்தால் ஒரு மனிதனை வெற்றியாளனாக மாற்றி விடும். ஒவ்வொரு மனிதனும் சூழல்களின் கூட்டால் உருவாக்கப்படுபவர்களே. இதைத் தான், எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே.. என பாடி வைத்துள்ளனர். அன்னை மட்டும் அல்ல. ஐம்புலன்கள் வழியாக நுழையும் ஒவ்வொரு விஷயங்களும் அதன் தன்மைக்கு ஏற்ப ஒரு மனிதனை மாற்றி அமைக்கின்றன. கேட்கும் பாடல், படிக்கும் பாடம், புத்தகங்கள், நண்பர்கள் என ஒவ்வொன்றும் மனிதர்களின் குணங்களை அழகுறவோ அல்லது அழகற்றதாகவோ செதுக்கும் உளிகளே.

பெற்றோர் கூறும் அறிவுரை, பள்ளிகளில் போதிக்கும் ஒழுக்கம், சமூகமும் நண்பர்களும் கற்றுத்தரும் விஷயங்கள், ஆன்மிக சொற்பொழிவு, செய்தித்தாள் மற்றும் புத்தகங்கள் வாயிலான அறிவுசார் தகவல் என ஒவ்வொன்றும் மனித பண்புகளை மாற்றும் புறச் சூழ்நிலைகளே. இத்தகைய புறச்சூழலை மிகச் சரியாக உள்வாங்கினால் நாளடைவில் அதுவே வெற்றியாளராக மாற்றும். நல்ல உடல் வலிமை உடைய ஒருவனுடைய மனதை பலவீனமாக்கி செயலற்றவனாக மாற்றவும் சமூக சூழ்நிலையால் முடியும்.

மனம் என்பது நன்கு பதப்படுத்தப்பட்ட நிலம். அதில் எதை விதைத்தாலும் நன்றாக துளிர் விட்டு வேர் பிடிக்கும். நல்ல விதைகள் விதைக்கப்பட்டால் பயன் தரும் சோலையாகும். மோசமான விதைகள் தூவினால் கள்ளி காடாக மாறிப்போகும். எனவே, உங்களுடைய புறச்சூழ்நிலையை, எண்ணங்களை, நோக்கத்தை நல்ல விதமாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருடைய குணாதிசயங்கள் குறித்து கவலை அடைந்து அவர்களை திருத்த முயற்சிப்பது உங்களின் கால விரயமாகவே முடியும்.

தோல்வியில் தைரியத்தையும் வெற்றியில் அமைதியையும் பின்பற்றுங்கள். மற்றவரை விட அதிகமாக அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். மற்றவரை விட அதிகமாக வேலை செய்யுங்கள். மற்றவரை விட குறைவான எதிர்பார்ப்பை வைத்திருங்கள். மிகப்பெரிய பூட்டையும் சிறிய சாவியே திறக்கிறது. அதுபோல, எளிமையான வார்த்தைகள் தான் பெரிய சிந்தனைகளை வெளிக் கொண்டு வருகின்றன. எண்ணங்களே வாழ்க்கையின் ஏணிப்படி.
மணம் வீசும் மலர்களை பாருங்கள். மல்லிகை, முல்லை, இருவாட்சி என ஒவ்வான்றும் தனக்கென தனித்துவமான மணம், தோற்றத்துடன் இருக்கின்றன. நிறைந்த சபைதனில் தனக்கென தனித்துவமான திறமை இருந்தால் மட்டுமே குன்றிலிட்ட விளக்காக பிரகாசிக்க முடியும். எனவே, ஒவ்வொருவரும் தனக்கென தனித்தன்மையை உருவாக்கிக் கொண்டு வெற்றி என்னும் பாதையில் மலர்ந்து மணம் வீசுங்கள். 

(வெற்றி பயணம் தொடரும்…)

Sunday, January 22, 2017

வெற்றியை நோக்கி … 4

அச்சம் தவிர்த்து உச்சம் தொடு...

அச்சம். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருடனும் ஒட்டி பிறந்த குணம். குழந்தை பருவத்தில் இருந்தே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவள உணவுடன் அச்சமும் சேர்ந்தே பிசைந்து ஊட்டப்படுகிறது. இருளில் ஆரம்பித்து நீண்டு செல்லும் அச்ச உணர்வை பட்டியலிட்டால் விஷம் போல அந்த பட்டியல் நம்மை அச்சுறுத்தும். அறியா வயதில் சரியாக உணவு உண்ண மறுக்கும் குழந்தையிடம் பூச்சாண்டி வருவதாக பயமுறுத்துவது இன்றும் கூட தொடருகிறது. ஒவ்வொரு அம்மாக்களும் வெவ்வேறு பெயர்களை சூட்டினாலும் பூச்சாண்டி, பூச்சாண்டி தான்.

இதுபோல சற்றே வளர்ந்த குழந்தைகள், அந்தி கருக்கலுக்கு பிறகும் வெளியே விளையாடிக் கொண்டு இருந்தால் அவர்களை வீட்டுக்கு அழைக்க பயன்படுவது பேய். இதையே, ‘வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு சொல்லி வச்சாங்க... உன் வீரத்த கொழுந்திலேயே கிள்ளி வச்சாங்க...’ என பாடியதோடு வேலையற்ற வீணர்கள் கூறும் அந்த மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாக கூட நம்ப வேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளார், பட்டுக்கோட்டையார்.

குழந்தை பருவத்தில் பதிய வைக்கும் இந்த அச்ச உணர்வு, சற்று பெரியவனானதும் அகன்றால் பரவாயில்லை. ஆனால், வளர்ந்து இளைஞனான பிறகும் தொடர்ந்தால்...? சற்றே சிக்கலான பிரச்சினை தான். அது, நமது எதிர்காலத்தையே பாழாக்கி விடும். இன்றைய இளைஞர்களுக்கு அடிப்படை பலவீனமாக இருப்பது அச்ச உணர்வும் அதன் கூடவே வரும் தயக்கமும் தான். பள்ளிக்கூட தேர்வில் ஆரம்பிக்கும் இந்த அச்சமானது வேலை தேடல், வெளியூர் பயணம், நேர்முக தேர்வு, வேலை கிடைத்த பிறகு பணியை சிறப்பாக முடித்தல் என ஒவ்வொரு கட்டத்திலும் விடாது கறுப்பாக தொட்டுத் தொடர்கிறது. 

மனதை கவர்ந்த பெண்ணிடம் காதலை வெளிப்படுத்துவது, காதலித்த பெண்ணை மணமுடிப்பது என பயமே வாழ்க்கையாகி தெனாலி திரைப்பட சோமன் கேரக்டராகவே மாறி விடுகின்றனர். இப்படி அச்சமே வாழ்க்கையாக தொடர்ந்தால், அது சாதனை பயணத்துக்கு முட்டுக்கட்டை போடும். எந்தவொரு செயலாக இருந்தாலும் அதில் பயம் கொள்ளுவது என்பது நாளடைவில் பல்வேறு பரிணாமங்களை பெற்று தனது கோர பற்களை காட்டத் துவங்கும்.

சகிப்பு தன்மை இன்மை, பேராசை, பொறாமை, சந்தேகம், பழி உணர்வு, சுயலாபம் என வெவ்வேறு ஆபத்தான பலவீனங்களை கூடவே அழைத்து வருவது அச்ச உணர்வே. அச்சங்களால் விளையும் எச்சங்களே பல்வேறு பிரச்சினைகளுக்கும் பாதை அமைத்து தருகிறது.

அதனால் தான், ‘அச்சம் தவிர்; ஆண்மை தவறேல்’ என பெரியோர் கூறி வைத்துள்ளனர். களர் நிலம் எப்போதுமே விவசாயத்துக்கு உதவாது. அந்த நிலத்தால் எந்த பயனும் கிடையாது. நன்கு பண்பட்ட நிலமே செழிப்பான விளைச்சலை தரும். அதுபோலவே உள்ளமும் மனமும் பக்குவப்பட்டு நிற்க அச்சத்தை தவிர்ப்பது மிகவும் அவசியம்.

முதன் முதலில் இந்தியாவுக்கு கடல் மார்க்கமாக வழி கண்டு பிடிப்பதாக கூறிக் கொண்டு கப்பலில் புறப்பட்ட கொலம்பஸ் மனதுக்குள் அச்சம் எழுந்திருந்தால் அமெரிக்காவோ, மேற்கு இந்திய தீவுகளோ நம் கண்களுக்கு அகப்பட நீண்ட நாளாகி இருக்கும். எந்தவித உதவியும் இல்லாமல் அச்சமின்றி கடலுக்குள் பயணம் செய்ததாலேயே இந்தியாவுக்கு பதிலாக அமெரிக்காவுக்கு அவரால் கடல் பாதையை கண்டறிய முடிந்தது. 

அதுபோலவே, இந்தியாவுக்கு பதிலாக வேறு ஒரு இடத்துக்கு கொலம்பஸ் வழி தவறிச் சென்று விட்டாரே, அதுபோல நாமும் எங்காவது கண்காணா தேசத்துக்கு சென்று விடுவோமோ? என வாஸ்கோடகாமா அச்சப்பட்டு நின்றிருந்தால் இந்தியாவுக்கு கடல் பாதை அமைந்திருக்குமா? அந்த அச்சமற்ற வீரர்களின் விளைவாக அமைந்த கடல் பாதைகள் தான் இன்றளவும் கடல் வழி சரக்கு போக்குவரத்து மேம்பட வழி வகுத்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சில நேரங்களில் தனி மனிதனின் அச்சமில்லாத குணமானது, ஒரு தேசத்தின் எதிர்காலத்துக்கு விளக்கேற்றி வைக்கலாம்.

இன்றைய நவீன விஞ்ஞான யுகத்தில் விண்வெளி ஆராய்ச்சி என்பது சாதாரணமாகி விட்டது. பூமியை சுற்றிலும் செயற்கை கோள்களை ஏவும் மனித மனதுக்குள் அச்சம் தோன்றி இருந்தால் இது சாத்தியமாகுமா? சந்திரன், செவ்வாய் என கிரகம் தாண்டி மனித படைப்புகளும் மனிதனும் சீறிப் பாய்ந்து கொண்டிருப்பதற்கு அச்சமற்ற மனமே காரணம். விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் அளவுக்கு மனிதர்கள் பக்குவமடைந்து விட்டனர்.

சில நேரங்களில் அச்சத்துக்கு பதிலாக தயக்கம் மேலோங்கி நிற்கும். இது, அச்சத்தின் உடன் பிறந்த இளைய சகோதரன். அச்சத்தினால் ஏற்படும் அளவுக்கு மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தாவிட்டாலும் தனி மனித வாழ்வை சீர்குலைத்துவிடும். எனவே, அச்சம், தயக்கம் எதுவாக இருந்தாலும் அவை வெற்றிப் பாதையின் தடைக்கற்கள் என்பதே உண்மை. எனவே, இன்றே தயக்கத்தை விட்டொழிப்போம். அச்சம் தவிர்ப்போம்.

(வெற்றி பயணம் தொடரும்…)

Tuesday, January 3, 2017

வெற்றியை நோக்கி … 3

விடாமுயற்சி... விஸ்வரூப வெற்றி...

வெற்றிக் கனியை ருசித்து விட வேண்டும் என அனைவருமே விரும்புகின்றனர். ஆனால், எந்தவொரு கனியும் எளிதில் கிடைத்து விடுவதில்லை. விதை விதைத்து, நீர் பாய்ச்சி, மரம் வளர்த்து, பூத்து குலுங்கிய பிறகே காய் விளைந்து கனியும். வெற்றிக் கனியும் அது போன்றதே.

அதற்கும் சில அடிப்படை சூட்சுமங்களும், தகுதிகளும் அவசியம். அவற்றை வளர்த்துக் கொண்டால் வெற்றி தேவதையே நேரில் வந்து வெற்றி மாலையை சூட்டுவாள். அப்படி, வெற்றி தேவதையை வரவழைக்கும் அடிப்படை தகுதிகளில் ஒன்று முயற்சி. அதுவும், விடாமுயற்சி. உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்குள்ளும் இந்த குணம் மறைந்து கிடக்கிறது. அதை வெளிக் கொண்டு வருவதில் தான் சிறப்பு அடங்கி கிடக்கிறது.

சிறிய எறும்பு கூட விடாமுயற்சிக்கு சிறந்த உதாரணமே. வரிசையாக சென்று கொண்டிருக்கும் எறும்பு கூட்டத்தின் குறுக்கே ஏதாவது ஒரு சிறிய காகிதத்தை வைத்து தடுத்து பாருங்கள். உடனே, அது தயங்கி நிற்காது. காகிதத்தை சற்று சுற்றி வந்து புதிய பாதையை அமைத்து விடும். இதுபோல, எத்தனை இடத்தில் நீங்கள் தடுப்பு வைத்தாலும் அவற்றை தாண்டி செல்வது எறும்பின் குணம். கானகத்தில் வேட்டையாடும் மிருகங்களும், இரையாகும் மிருகங்களும் விடாமுயற்சியை தன்னகத்தை வைத்துள்ளன. அது, அவற்றின் வாழ்வாதார பிரச்சினை.

அனைவருக்குமே ஏதேனும் ஒரு பிரச்சினை துளிர்விட்டபடியே இருக்கும். மலர் பாதையிலேயே நடைபயிலும் வரம் பெற்று வந்தவர் யாரும் கிடையாது. பிரச்சினைகளையும் தோல்விகளையும் கண்டு ஓடி ஒளியக் கூடாது. பிரச்சினைகளையும் தோல்விகளையும் கண்டு ஓடி ஒளிவது அதற்கு தீர்வாக அமையாது.  உங்களுடைய திறமைகளை வளர்த்து அனுபவத்தை வளப்படுத்தும் வாய்ப்பாக அந்த பிரச்சினைகளை மாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம். 

பூட்டுகளை தயாரிப்பவர் யாரும், வெறுமனே பூட்டுகளை மட்டும் தயாரித்து விற்பதில்லை. ஒவ்வொரு பூட்டுக்கு ஏற்ப சாவிகளையும் சேர்த்தே தயாரிக்கின்றனர். கடவுளும் அப்படியே. பிரச்சினை என்ற பூட்டை மட்டும் நம்மிடம் அவர் தருவதில்லை. தீர்வு என்ற சாவியையும் சேர்த்தே தருகிறார். ஆனால், அந்த சாவி எது என்பதை நாம் அறியாமல் இருப்பதே வெற்றிக்கு தடையாக இருக்கிறது. பிரச்சினை என்னும் பூட்டுக்கு உரிய சாவியை கண்டறிய விடாமுயற்சி அவசியம்.

சில நேரங்களில், பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் வாய்ப்பு கை நழுவி போகலாம். அந்த தோல்வியை ஜீரணிக்க முடியாமல் கண்களை குளமாக்கி நின்றால் வெற்றிப் பாதை மறைந்து விடும். தோல்விக்கு பின்னாலேயே நின்று கொண்டிருக்கும் மற்றொரு வாய்ப்பை, கண்ணீர் காணாமல் போகச் செய்து விடும். அதுபோன்ற சமயங்களில் தோல்வியை கண்டு துவளாமல் விடாமுயற்சியுடன் தொடர்ந்து போராட வேண்டும். அதற்கு சரித்திர காலம் தொட்டு ஏராளமானோர் உதாரண நாயகர்களாக இருக்கின்றனர்.

கஜினி முகமதுவின் சோமநாதபுரம் படையெடுப்பு பற்றி வரலாற்று பாட புத்தகங்களில் படித்திருப்போம். ஒவ்வொரு முறை தோல்வியை தழுவியபோதிலும் சளைக்காமல் 18 முறை போர் தொடுத்து இறுதியில் வெற்றி பெற்ற அவருடைய சரித்திரம், விடாமுயற்சிக்கு உதாரணம். அதனால் தான் இன்றளவும் அவர் சுட்டிக் காட்டப்படுகிறார். 

அமெரிக்க ஜனாதிபதி பதவி என்பது உலகின் அதிகபட்ச அதிகாரம் மிகுந்த பதவி. அந்த பதவியை எட்டிப் பிடித்த ஆபிரகாம் லிங்கன் வாழ்க்கை முழுவதும் தோல்வியின் படிக்கட்டுகளில் எழுதப்பட்டதே. இளம் வயதில் தாயார் மரணம், 1831 மற்றும் 1834 ஆண்டுகளில் மாகாண தேர்தலில் தோல்வி, பணி இழப்பு, 1835ம் ஆண்டு திருமணத்துக்கு நிச்சயம் செய்த பெண் மரணம், நரம்பு தளர்ச்சி நோயால் 6 மாத மருத்துவமனை வாசம், 1838ல் சபாநாயகர் தேர்தலில் தோல்வி, 1843, 1846, 1848 ஆண்டுகளில் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் தோல்வி, 1854ம் ஆண்டு செனட் தேர்தலில் தோல்வி, 1856ம் ஆண்டு துணை ஜனாதிபதி தேர்தலில் தோல்வி, 1858ம் ஆண்டு செனட் தேர்தலில் 3வது முறையாக தோல்வி இப்படி தொடர்ந்து 30 ஆண்டுகளாக தோல்விகளை மட்டுமே எதிர்கொண்ட ஆபிரகாம் லிங்கன் சோர்ந்து விடவில்லை.  ஒவ்வொரு தோல்வியிலும் துவண்டு விடாமல் பீனிக்ஸ் பறவையாய் உற்சாகத்துடன் எழுந்து விடாமுயற்சியுடன் பணியை தொடர்ந்தார். அதனாலேயே 1860ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியாக பதவியேற்றார்.

ஒட்டு மொத்த இந்திய தேசமும் கொண்டாடும் அப்துல் கலாம் வாழ்க்கையும் விடாமுயற்சியினால் கட்டமைக்கப்பட்டதே. ராமநாதபுரத்தில் கடலோர கிராமத்தில் பிறந்து, நாளிதழ்களை வீடு வீடாக போடுவதால் கிடைத்த பணத்தைக் கொண்டு கல்வி கற்றவர். கல்லூரி படிப்பில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற போதிலும் விடாமுயற்சியால் ஏரோநாடிகல் என்ஜினீயரிங் முடித்து போர் விமானி தேர்வுக்கு சென்றார். ஆனால், அங்கு அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனாலும் மனம் தளராது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) விஞ்ஞானி ஆனார். பல ஏவுகணைகளை கண்டறிந்தார். அத்துடன் நிற்காமல் மாற்றுத்திறனாளிகளுக்காக மிகவும் எடை குறைவாக 400 கிராம் எடையில் செயற்கை கால், இருதய நோயாளிகளுக்கு கருவி என வேறு துறைகளிலும் அவரது கண்டுபிடிப்புகள் விரிந்தன. தான் அறிந்தவற்றை மற்றவருக்கும், மாணவர்களுக்கும் கற்றுத் தர வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது இறுதி மூச்சு வரை பள்ளி, கல்லூரி மாணவர்களை தேடிச் சென்றார். அவரது விடாமுயற்சி தான் அவரை மக்கள் குடியரசு தலைவராகவும் இந்திய தேசத்தின் தலைமகனாகவும் மாற்றியது.
தோல்வி, அடக்குமுறை, நிராகரிப்பு இவற்றால் மனம் வெதும்பி ‘விதி செய்த சதி’ என மூலையில் முடங்கி கிடந்தால் வெற்றி கிடைக்காது. விடாமுயற்சி அவசியம். ‘ஊழையும் உட்பக்கம் காண்பர்’ என வள்ளுவர் கூறுகிறார். அதாவது, விடாமுயற்சியுடன் உத்வேகம் கொண்டு உழைப்பவர்களால் விதியை புறமுதுகிட்டு ஓடச் செய்ய முடியும் என்கிறார்.

தோல்வியால் மூலையில் முடங்கி கிடந்தால் அங்கேயும் உங்களுக்கு விடாமுயற்சி பற்றிய பாடம் கற்பிக்கும் ஒரு ஜீவனை காண முடியும். அது, சிலந்தி. வீட்டுக்குள் வலை விரிக்கும் சிலந்தியின் கூட்டை நீங்கள் எத்தனை முறை பிரித்து போட்டாலும் தனது வாயாலேயே புதுப்புது வீடுகளை கட்டி குடி புகுந்து விடும். அற்ப இனமான சிலந்தியிடம் உள்ள விடாமுயற்சி கூட ஆறறிவு படைத்த மனித இனத்துக்குள் இல்லையா? இருக்கிறது. உங்களுக்குள் புதைந்து கிடக்கும் அந்த புதையலை தோண்டி எடுங்கள். வெற்றி நிச்சயம்.

(வெற்றி பயணம் தொடரும்…)