Friday 31 July 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்...6

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, திருமண மகால்கள் காலம் துவங்கும் முன்பு, மணமாகி புகுந்த வீட்டுக்கு புது மணப்பெண் புறப்படும்போது ஒரு பாடல் கட்டாயமாக ஒலிக்கும். அது, "புருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே, தங்கச்சி கண்ணே, சில புத்திமதிகள சொல்லுறேன் கேளே முன்னே". அந்த குரலுக்குச் சொந்தக்காரர் திருச்சி லோகநாதன்.



ஊமைப்படங்களில் இருந்து பேசும் படமாக சினிமா உலகம் மாறிய புதிதில் எட்டு கட்டையில் பாடவும், சுருதி சுத்தமாக வசனம் பேசவும் தெரிந்தவர்கள் மட்டுமே நடிக்க முடியும். இரவல் குரலுக்கு நிச்சயமாக சினிமாவில் இடம் கிடையாது. அதில் இருந்து டப்பிங் நுட்பத்துக்கு சினிமா மாறியபோது முதலில் ஒலித்த குரல் இவருடையது. 

1947ல் வெளியான ராஜகுமாரி படத்தில் எம்.என்.நம்பியாருக்கு குரல் கொடுத்திருந்தார், திருச்சி லோகநாதன். அதுதான் தமிழ் சினிமாவின் முதல் பின்னணி குரல். அதன்பிறகு, 1965 வரையிலும் சுமார் 20 ஆண்டுகளில் அன்றைய முன்னணி இசையமைப்பாளர் பலரின் பாடல்களுக்கு பாடி இருக்கிறார்.

தமிழ், தெலுங்கில் பாடல்களை பாடியிருக்கும்  திருச்சி லோகநாதனின் ஒவ்வொரு பாடலும் தனி ரகம். மந்திரி குமாரி (1950) படத்தில் வில்லன் நடராஜனுக்காக இவர் பாடிய "வாராய் நீ வாராய் புலி என்னை தொடர்ந்தே புள்ளி மான் நீயே வாராய்", "உலவும் தென்றல் காற்றினிலே" பாடல்கள் கிளாசிக்கல். 

டவுண் பஸ் படத்தில் "பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா துயரம் இதுதானா...", தை பிறந்தார் வழி பிறக்கும் படத்தில் "ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே..." வண்ணக்கிளி படத்தில் "அடிக்கிற கைதான் அணைக்கும், அணைக்கிற கைதான் அடிக்கும்..இனிக்கிற வாழ்வே கசக்கும், கசக்கிற வாழ்வே இனிக்கும்..." பாடல்கள் எல்லாம் சோக ரகங்கள் என்றால்

ஆரவல்லி படத்தின் "சின்னக் குட்டி நாத்தனா, சில்லறைய மாத்தினா..." "ஏபிசிடி படிக்கிறேன், ஈஎப்ஜிஎச் எழுதுறேன்...", இரும்புத்திரை படத்தின் "கையில வாங்கினேன் பையில போடல, காசு போன இடம் தெரியல, என் காசு போன இடம் தெரியல..." என இவரது ஜாலி பாடல்கள் தனி ரகம்.

எவர்கிரீன் பாடலான "கல்யாண சமையல் சாதம், காய்கனிகளும் பிரமாதம், அந்த கவுரவர் பிரசாதம், இதுவே எனக்கு போதும்..." என அசாத்திய சிரிப்புடன் கடோத்கஜன் அரக்கன் போலவே பாடும் பாடல் இன்றைய தலைமுறையை கூட நின்று கேட்க வைக்கும்.

சிவாஜி கணேசன் நடித்த கப்பலோட்டிய தமிழன் படத்தில், "வெள்ளிப் பனி மலை மீதுலவுவோம், அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்..." கர்ணன் படத்தில் "நாணி சிவந்தன மாதரார் கண்கள்..." என அவரது குரல் ஒவ்வொரு பாடலிலும் வெவ்வேறு விதமாக ஜாலம் காட்டும். 

1950களில் பிரபல பின்னணி பாடகராக இருந்த திருச்சி லோகநாதன் ஒரு பாடலுக்கு 500 ரூபாய் வரை சம்பளம் வாங்கியிருக்கிறார். இந்தியா சுதந்திரம் பெற்ற சமயத்தில் தங்கம் விலை சவரனுக்கு 15 ரூபாய் என்றால் கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் சம்பள விஷயத்திலும் அவர் கறார் ரகம். 

1954ல் வெளியான சிவாஜியின் தூக்கு தூக்கி படத்தில் எட்டு பாடல்களுக்கு நான்காயிரம் கேட்டபோது தயாரிப்பாளர்கள் பேரம் பேசியதால், "மதுரையில் இருந்து ஒருத்தர் பாட வந்திருக்கிறார் அவரை பாடச் சொல்லுங்கள்" என கூறி விட்டு போய் விட்டாராம். அந்த மதுரைக்காரர் தான் டிஎம் சவுந்தரராஜன். 

எதை மனதில் வைத்து திருச்சி லோகநாதன் சொன்னாேரோ தெரியவில்லை. மந்திரி குமாரி (1950) படத்திலேயே "அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் வைத்தே" என்ற பாடலை பாடிய போதிலும் அதிக அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்த டிஎம்எஸ்சுக்கு தூக்கு தூக்கி ஒரே படத்தில் எட்டு பாடல்கள் கிடைத்தது. அந்த படம் அவரை தூக்கி விட்டதால், அதன் பிறகு டிஎம்எஸ்சுக்கு ஏறுமுகம் தான்.

அதே நேரத்தில், 1960களுக்கு பின் முழுக்க முழுக்க பின்னணி பாடல்களே கோலோச்ச துவங்கியதோடு நடிகர்களின் குரலுடன் பாடலின் குரலையும் ஒப்பிட்டுப் பார்க்கும் மனநிலை கொண்ட ரசிகர்களும் அதிகரித்தனர். தனித்துவமாக ஒலிக்கும் திருச்சி லோகநாதனின் குரல் நடிகர்களின் குரலுக்கு ஒத்துப்போகாத நிலையில் 1965ல் அவரது இசை பயணம் முடிவுக்கு வந்தது.

தமிழின் முதல் நகைச்சுவை ஜோடியான காளி என்.ரத்னம் - சி.டி. ராஜகாந்தம் தம்பதியின் மருமகன்தான் திருச்சி லோகநாதன். இவரது வாரிசுகளும் பின்னணி பாடகர்கள் தான். 

நிழல்கள் படத்தின் "பூங்கதவே தாழ் திறவாய், பூவாய் பெண் பாவாய்...", மெல்லப் பேசுங்கள் (1983) படத்தின் "செவ்வந்தி பூக்களில் செய்த வீடு, வெண்பஞ்சு மேகமே கோலம் போடு...", கோழி கூவுது "அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே..." என 1980களில் பின்னணி பாடிய தீபன் சக்கரவர்த்தி, 

கமல் நடித்த நாயகன் படத்தில் "அந்தி மழை மேகம்" முதலாளியம்மா படத்தில் "ஆத்தோரம் ஆலமரம்" உள்ளிட்ட பாடல்களை பாடிய டிஎல் மகாராஜன் இருவரும் திருச்சி லோகநாதனின் இசை வாரிசுகளே...

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

Wednesday 29 July 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்...5

மாயி படத்தில் கோக்கு மாக்கு பண்ணி கோவை சரளாவுக்கும் வடிவேலுவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கும் அந்த தாத்தாவை எளிதில் மறக்க முடியாது. உனக்காக எல்லாம் உனக்காக படத்தில் கார்த்திக் தாத்தாவாக கவுண்டமணியுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டியும் சாதாரண ரகம் கிடையாது. அந்த தாத்தா காக்கா ராதாகிருஷ்ணன்.



அவரது திரையுலக பிரவேசம் 70 ஆண்டுகளுக்கு முந்தையது. ஆறேழு வயதிலேயே நாடகம் நடிக்கத் தொடங்கி, நவாப் ராஜமாணிக்கம் நாடகக் குழு, என்எஸ் கிருஷ்ணன் நாடகக் குழு போன்றவற்றில் நடித்துக் கொண்டிருந்தார். ராதாகிருஷ்ணனின்முதல் திரைப்படம் 1949ல் வெளியான மங்கையர்க்கரசி. டேய் வேலை வேணும்னா காக்கா பிடிக்க தெரியணும்டான்னு அம்மா சொன்னதற்காக அப்பாவியாய் ஒரு காக்காவை மரத்தில் ஏறி பிடித்துக் கொண்டு வேலை கேட்க செல்லும் வேடம். அதில் இருந்து ராதாகிருஷ்ணன் என்ற பெயருக்கு முன்னால் "காக்கா" ஒட்டிக் கொண்டது.


மங்கையர்க்கரசிக்கு பிறகு, அண்ணா வசனத்தில் நல்ல தம்பி, தாய் மகளுக்கு கட்டிய தாலி, கருணாநிதி வசனத்தில் மனோகரா, எம்ஜிஆருடன் தாய்க்குப்பின் தாரம் என ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார், காக்கா ராதாகிருஷ்ணன். நடிகர் திலகம் சிவாஜிகணேசன், இவரது நெருங்கிய நண்பர், சினிமாவுக்கு முன்பே. சிவாஜியை நாடகக் குழுவில் அறிமுகம் செய்து வைத்தவரே இவர்தான்.



கண்ணடிப்பது போல ஒரு பக்கம் சுருங்கி இருக்கும் கண், இவரது ஸ்பெஷாலிட்டி. தமிழ், தெலுங்கு என 500க்கும் மேல் படங்களில் நடித்திருக்கும் காக்கா ராதாகிருஷ்ணன், 1962 வரை சுமார் 15 ஆண்டுகாலம் தமிழில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் கலக்கியவர்.

அண்ணா, கருணாநிதி இருவரின் வசனத்திலும் நடித்திருக்கும் இவரது படங்களில் உத்தம புத்திரன், ஆரவல்லி, வன சுந்தரி, மனோகரா, தாய்க்குப்பின் தாரம் போன்றவை பெயர் சொல்பவை. மனோகராவில் சிவாஜியின் தம்பி இவர்தான். மாலையிட்ட மங்கை (1958) படத்தில் இவரது ஜோடி மனோரமா. அதாவது ஆச்சி மனோரமாவின் முதல் திரை நாயகன் காக்கா ராதாகிருஷ்ணன்.

நடுவில் சுமார் கால் நூற்றாண்டு காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியவர். நடிகர் சங்கத் தேர்தலில் எம்ஜிஆரை எதிர்த்ததால் இந்த நிலைமை என்றும் கூறுவது உண்டு. இந்த அஞ்ஞான காலத்தில் தபால்காரன் தங்கை (1970) குறிப்பிடத்தக்கது.

குணா படத்தின் மூலம் வைல்ட் கார்டு ரவுண்ட் என்ட்ரி போல 1992 முதல் மீண்டும் அவர் நடிக்கத் துவங்கினார். குணா, வசூல் ராஜா எம்பிபிஎஸ், காதலுக்கு மரியாதை, உன்னைத்தேடி என கலக்கிய காக்கா ராதாகிருஷ்ணன், தேவர் மகன் படத்தில் சிவாஜி கணேசனுக்கு தம்பியாக நடித்ததை மறக்க முடியாது. முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் இருந்தபடியே நாசருடன் இணைந்து மிரட்டும் வில்லத்தனம் ஆஸம்.



ஆனாலும் லூசு தாத்தாவாகவும் இன்னசண்ட் தாத்தாவாகவும் அவர் கலக்கியதுதான் செகண்ட் இன்னிங்ஸில் இக்கால ரசிகர்கள் மனதில் இருப்பவை. பிரபுதேவா, கார்த்திக், அஜித், விஜய்,  கவுண்டமணி, வடிவேலு என இந்த தலைமுறை நடிகர்களுடன் சிக்ஸரடித்த காக்கா ராதாகிருஷ்ணன் பற்றி நாகேஷ் சொன்ன வார்த்தைகள்...

"நேரம் மட்டும் சரியாக கூடி இருந்தால் இவன் எங்கள எல்லாம் மிஞ்சி எங்கோ போயிருப்பான்"

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

Tuesday 28 July 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 4



சினிமாவில் இப்போதெல்லாம் அவ்வளவு எளிதாக விலங்குகளை காண்பிக்க முடியாது. அதற்கு ஆயிரத்தெட்டு ஃபார்மாலிட்டிஸ். ஆனால், இவர் படம் என்றால் நிச்சயம் புலி, சிறுத்தை, யானை மாதிரியான மிருகங்கள் கண்டிப்பாக இருக்கும். அவர்தான் இன்றைய தலைமுறையினர் பலரும் அறிந்திராத தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர். ஆடு ஒன்று பிரதானமாக நடித்த ஆட்டுக்கார அலமேலு படம் வரை அவரது தயாரிப்புகள் தமிழ் சினிமாவில் ஏராளம். கட்டுமஸ்தான உடல், ஆஜானுபாகுவான தோற்றம் காரணமாக சாண்டோ (சாண்டோ என்பது ஒருவரின் பெயர், அவரைப் பற்றியது என்ன என்பது தனிக்கதை) ஒட்டிக் கொண்டது.



கொங்கு மண்டலத்தை சேர்ந்த இவர் விவசாய, பஞ்சாலை கூலி தொழிலாளியாக இருந்து நடிக்க வந்து தயாரிப்பாளராக உயர்ந்தவர். சின்ன சின்ன வேஷம் போட்டுக் கொண்டிருந்த தேவர், ராஜகுமாரி (1947) படத்தில் மெயின் வில்லன் ஆனார். அந்த படம் தான் எம்ஜிஆர் நாயகனாக நடித்த முதல் படம். எம்ஜிஆரின் முதல் வில்லன் தேவர் தான். இரண்டாவது வில்லன் நம்பியார். படம் மந்திரி குமாரி (1950).

ராஜகுமாரியில் எம்ஜிஆருடன் தேவருக்கு ஆரம்பித்த நட்பு மிக ஆழமாக மாறியது. அடுத்தடுத்த எம்ஜிஆர் படங்களில் சண்டைக் காட்சிகளில் தேவருக்கு இடம் உண்டு. சர்வாதிகாரி, குலேபகாவலி என எம்ஜிஆர் படங்களில் வில்லன் குரூப்பில் சாண்டோ எம்எம்ஏ சின்னப்பா தேவரை முரட்டு மீசையுடன் பார்க்கலாம். 

தமிழ் சண்டை காட்சிகள் நிறைந்த படம் என்ற வார்த்தைகளை 40, 50 வயதினர் மறந்திருக்க முடியாது. அதை அறிமுகம் செய்தவர் தேவர் என்றே கூறலாம். வாள் சண்டை காட்சிகள் பிரதானமாக இருந்த தமிழ் சினிமாவில் சிலம்பம், குஸ்தி டைப் சண்டை காட்சிகளை பிரபலமாக்கியவர் அவரே.



நட்பின் காரணமாக தேவரை தயாரிப்பாளராக்கினார், எம்ஜிஆர். தேவர் பிலிம்ஸ் என்ற பேனரில் சின்னப்பா தேவர் தயாரித்த முதல் படம் எம்ஜிஆர் - பானுமதி நடித்த தாய்க்குப்பின் தாரம். காளையை அடக்குவது, சிலம்பம், முறைப்பெண் என கிராமத்துக்கே உரித்தான அம்சங்கள் நிறைந்தது அந்த படம். தமிழ் சினிமாவில் தந்தை மகன் பாசத்தை கூறும் பாடல் உண்டு என்றால், அது இந்த படத்தின் பாடல் மட்டுமே.

அதன்பிறகு, அன்று பிரபலமாக இருந்த ரஞ்சன் (நீலமலை திருடன் படம்) போன்ற வேறு சில நடிகர்களை வைத்து படம் தயாரித்து தோல்வியடைந்த தேவர், பின்னர் எம்ஜிஆருடன் மீண்டும் கைகோர்த்து 10 ஆண்டுகளில் 16 படங்களை தயாரித்தார். வேட்டைக்காரன், விவசாயி, தாய்சொல்லை தட்டாதே, நீதிக்குப்பின் பாசம் என தொடங்கி நல்லநேரம் வரை நீடித்தது இந்த காம்பினேஷன். எம்ஆர் ராதா - எம்ஜிஆர் விவகாரம் வரை இந்த அணியில் கண்ணாம்பாள், எம்ஆர் ராதா இருவருக்கும் பெற்றோர் வேடம் நிச்சயம் உண்டு. பெரும்பாலும் நாயகனின் விதவை தாயாக கண்ணாம்பாள். நாயகியின் தந்தையாக எம்ஆர் ராதா இருப்பார்.

தயாரிப்பாளரானாலும் எட்டு முழ வேட்டி, வெள்ளை நிற மேல் துண்டு மட்டுமே அவரது உடை. கடைசி வரை தேவரை மொதலாளி என்றே அழைத்தவர் எம்ஜிஆர். 16 படங்களில் பலவற்றை இயக்கிய எம்.ஏ.திருமுகம் MA, சின்னப்பா தேவரின் சகோதரர். 1960களில் குறிப்பிடத்தக்க இயக்குநராக திருமுகம் இருந்தார்.

சினனப்பா தேவர், மிக தீவிரமான முருக பக்தர்.  தனிப்பிறவி  படத்தில் எம்ஜிஆருக்கு முருகன் வேஷம் போட்டு அழகு பார்த்தவர். எம்ஜிஆரையே முருகா என அழைப்பது தேவரின் வழக்கம். படங்களில் கிடைக்கும் லாபத்தில் கணிசமான தொகையை மருதமலை, பழனி என முருகனின் அறுபடை வீடுகளுக்கு ஏராளமான திருப்பணிகள் செய்து மகிழ்ந்தவர். 1960களில் சரியான பாதை மற்றும் மின்வசதி இல்லாமல் இருந்த மருதமலைக்கு அந்த வசதிகளை செய்து தந்தவர்.

தெய்வ பக்தியால் தேவர் தயாரித்த படங்கள் தெய்வம், திருவருள், துணைவன். தெய்வம் படத்தின் பாடல்கள் இன்றளவும் பக்தி பாடல்கள் வரிசையில் அனைவரையும் கவருபவை. மருதமலை மாமணியே முருகையா... நாடறியும் சுவாமி மலை... மாதிரியான பாடல்கள் சின்ன உதாரணங்கள்.



சிவாஜி கணேசனை வைத்து இவர் படம் எடுத்ததே இல்லை. சிவாஜிக்கான கதை தன்னிடம் வரவில்லை என்பது தேவர் கூறிய விளக்கம். அதே நேரத்தில் இந்தியிலும் படங்களை தயாரித்த தேவர், ராஜஷே்கன்னாவை வைத்து எடுத்த ஹாதி மேரே ஸாதி படம் சூப்பர்ஹிட். அந்த படம் தான் தமிழில் யானைகளுடன் எம்ஜிஆர் நடித்த நல்லநேரம் ஆனது. 

தேவர் பிலிம்ஸ் போலவே தண்டாயுதபாணி பிலிம்ஸ் என்ற பெயரிலும் படங்களை தயாரித்தார் சாண்டோ சின்னப்பா தேவர். ரஜினி நடித்த தாய் மீது சத்தியம் படம்தான் தேவரின் கடைசி படம். தயாரிப்பில் படம் இருந்தபோதே இறந்து விட்டார்.

ஆனால், அவரது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தார், அவரது மருமகன் தியாகராஜன். ரஜினியின் ஆரம்பகால ஹிட் படங்களான ரங்கா, தாய்வீடு, அன்புக்கு நான் அடிமை, தர்மத்தின் தலைவன் போன்றவை தேவர் பிலிம்ஸ் தயாரிப்புகளே...

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Saturday 25 July 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 3

தமிழ் சினிமா எனும் பொக்கிஷத்தில் புதைந்து கிடக்கும் பவளங்களில் இருந்து இன்று மின்னும் பவளம், காளி என்.ரத்னம். எழுபது ஆண்டுகளுக்கு முன்பே அவர்  மறைந்தாலும் அவரை மறக்க முடியாது. நாடக உலகின் தந்தை பம்மல் சம்பந்த முதலியாரிடம் பயிற்சி பெற்றவர், காளி என்.ரத்னம். அப்போதெல்லாம் சினிமாவுக்கு முந்தைய பயிற்சி களம் நாடகம்தான். அதில் முக்கியமானவராக இருந்தார்.

எம்.ஜி.ஆர், அவரது அண்ணன் சக்ரபாணி போன்றவர்களை நாடக குழுக்களில் ஆதரித்து வளர்த்தவர். நடிகராக இருப்பவருக்கு உடல் முக்கியம் என எம்ஜிஆர் அறிவுரை கூறுவதுண்டு என்பதை பல நடிகர்கள் சொல்லக் கேட்டிருக்கலாம். அந்த அறிவுரையை எம்ஜிஆருக்கு சொல்லிக் கொடுத்தவரும் இவர்தான். ஆரம்ப காலங்களில் குஸ்தி, மல்யுத்தம் என தற்காப்பு கலைகளை எம்ஜிஆருக்கு கற்றுக் கொடுத்த வாத்தியார் காளி என்.ரத்னம். அதாவது, வாத்தியாரின் வாத்தியார்.



தலையை முழுமையாக மழித்து மொட்டை தலையுடன் தான் இருப்பார், காளி என்.ரத்னம். நடிக்கும் படங்களின் கதாபாத்திரத்துக்கு ஏற்ப விக் வைத்துக் கொள்வார் அல்லது தலைப்பாகை கட்டிக் கொள்வார். வாய் நிறைய வெற்றிலையை குதப்பிக் கொள்வதும் உண்டு.


தமிழ் திரையுலகின் முதலாவது ஆக்சன் ஹீரோ பியு சின்னப்பா நடித்த உத்தம புத்திரன் (இது சிவாஜியின் உத்தம புத்திரனுக்கு 20 ஆண்டு முந்தையது) படத்திலேயே முன்னணி நகைச்சுவை நடிகர். ஆமாம். இன்றைய நகைச்சுவை நடிகர்களுக்கு நான்கு தலைமுறை முந்தியவர் காளி என்.ரத்னம்.



இவரும் சிடி ராஜகாந்தமும் இணைந்து கலக்கிய காமெடிகள் கிளாசிக் ரகம். என்எஸ்கே-மதுரம் ஜோடி கலக்கிய காலகட்டத்தில் காளி என் ரத்னம் ஜோடியும் தமிழ் சினிமாவை கலக்கியது. என்எஸ்கிருஷ்ணன் தம்பதி போலவே, இந்த ஜோடியும் நிஜத்திலும் தம்பதியே. காளி என்.ரத்னம்-சி.டி.ராஜகாந்தம்  இவர்களின் மருமகன் தான், அககால பிரபல பின்னணி பாடகர் திருச்சி லோகநாதன்.


இன்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன் 1941ல் வெளிவந்த சபாபதி படம் ஒன்று போதும். காளி என்.ரத்னம் என்ற நடிகர் எக்காலத்துக்கும் உரியவர் என்பதை சொல்ல. ஒரே விதமான செந்தமிழ் வசனங்களும், பாடல்களும் ஆக்கிரமித்திருந்த காலத்தில் சபாபதி திரைப்படம் வித்தியாசமானது. படத்தின் ஹீரோ டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு சம்பளம் 70 ரூபாய். ஆனால், காளி என்.ரத்னத்தின் சம்பளம் அந்த படத்தில் 3000 ரூபாய்! 


அன்றைய முன்னணி இயக்குநர்கள் எல்லீஸ் ஆர்.டங்கன், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் போன்றவர்களின் ஃபேவரைட் இவர்தான். பதிபக்தி, சந்திரகாந்தா, ஸ்ரீமுருகன், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி. இவை எல்லாம் காளி என்.ரத்னம் நடித்த ஹிட் படங்களில சில. 


1946ல் வெளியான ஸ்ரீமுருகன் படத்தில் பிரதான வேடத்தில் எம்ஜிஆர் நடித்திருந்தார். கதாநாயக அந்தஸ்தை நெருங்கி சென்று கொண்டிருந்த சமயம் அது. அந்த படத்தில் சிவன் வேடத்தில் நடித்த எம்ஜிஆரின் ருத்ரதாண்டவம், அக்கால சினிமா ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

நாடக காலம் தொடங்கி சினிமா வாழ்க்கையிலும் எம்ஜிஆருக்கு  உதவியாக இருந்தவர், காளி என்.ரத்னம். ஆனால், தமிழ் சினிமாவின் முதலாவது மூத்த நகைச்சுவை நாயகனை 52 வயதிலேயே இறைவன் தன்னிடம் அழைத்துக் கொண்டது காலத்தின் கோலம்.

சரி. வாத்தியாரின் வாத்தியாரான இந்த காளி என்.ரத்னம் யார். எப்படி நடிப்பார்? சன் லைஃப் சேனலை அதிகமாக  பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக இந்த கேள்வி எழாது. அடுத்த முறை 'சபாபதி' ஔிபரப்பாகும் போது காளி என்.ரத்னம், டிஆர் ராமச்சந்திரன், மற்றுமொரு நகைச்சுவை நடிகர் சாரங்கபாணி மூவரும் அடிக்கும் லூட்டியை மிஸ் பண்ணாதீங்க...



(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Thursday 23 July 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 2

தமிழ் சினிமாவின் அறியப்படாத அல்லது இன்றைய தலைமுறை அறிந்திராதவர்களில் முக்கியமான ஒருவர் ஏ.பி.நாகராஜன். கதாசிரியர், நடிகர், இயக்குநர்.

80 மற்றும் 90களில் சிறுவர்களாக இருந்த அனைவருமே திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர் படங்களின் வசனங்களை அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. அந்த அளவுக்கு விழாக்கால மைக் செட்களில் ஒலி வடிவமாக ஆண்டுக் கணக்கில் ஓடியவை இந்த படங்கள். இந்த படங்களின் இயக்குநர் தான் ஏ.பி.நாகராஜன்.

சிவாஜி கணேசனின் கர்ணன்,  ஜெயலலிதா, சிவகுமார் நடித்த கந்தன் கருணை. அப்புறம் திருமால் பெருமை, அகஸ்தியர், காரைக்கால் அம்மையார் என இவர் தெறிக்கவிட்ட பக்தி திரைப்படங்கள் ஏராளம். சிவன், முப்பெருந்தேவியர், முருகன், அவ்வையார், மகாபாரத கிருஷ்ணன், கர்ணன், 80 வயது சிவனடியார் நாவுக்கரசர் என அனைவருக்குமே தமிழ் நெஞ்சங்களில் நிரந்தர வடிவத்தை உருவாக்கித் தந்ததில் அவரது பங்கு அதிகம்.

இதனாலேயே தெய்வீக இயக்குநர் என்றே அறியப்பட்டவர். 

நாடக ஜாம்பவான் அவ்வை சண்முகத்திடம் பயிற்சி பெற்று சினிமாவுக்கு முதலில் கதாசிரியராகத்தான் இவர் நுழைந்தார். கூடவே நடிப்பு, தயாரிப்பு என சிறகை விரிக்க துவங்கினார். பழம்பெரும் நடிகர் விகே ராமசாமியுடன் சேர்ந்து 1960களில் சில படங்களை தயாரித்திருக்கிறார்.

ராமனாக என்டி ராமாராவ், பரதனாக சிவாஜி என வாழ்ந்த, 1958ல் வெளியாகி 250 நாட்களுக்கு மேல் ஓடிய சம்பூர்ண ராமாயணம் திரைப்படமும் இவரது கைவண்ணம் தான். இந்தியிலும் அந்த படம் டப்பிங் செய்யப்பட்டது. அதற்காக முழுக்க முழுக்க பக்தி பழம் என ஏபி நாகராஜன் மீது முத்திரை குத்தி விடவும் முடியாது.

கொங்கு தமிழ் வசனத்தை திரையில் அறிமுகம் செய்த மக்களை பெற்ற மகராசி, பாவை விளக்கு போன்றவை இவரது எழுத்தில் உருவான காவியங்களே. 1962ல் வடிவுக்கு வளைகாப்பு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி திருவிளையாடல் என்ற பிளாக் பஸ்டரை கொடுத்த கையோடு அடுத்த 15 ஆண்டுகளில் இவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் வெள்ளி விழா கண்டவை.

சிவாஜி கணேசன் பத்மினி நடித்த எவர்கிரீன் தமிழ் காவியம் தில்லானா மோகனாம்பாள், குருதட்சணை, குலமகள் ராதை. இவையெல்லாம் ஏபி நாதராஜனின் இயக்கத்தில் உருவான படங்கள். சிவாஜி கணேசனை மட்டும் 16 படங்களில் இயக்கி இருக்கிறார்.

தமிழின் முதலாவது சினிமா ஸ்கோப் என்ற பெருமையை பெற்ற ராஜராஜ சோழன்.

சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில் நடித்த அவரது நூறாவது படமான நவராத்திரி. இந்த படங்கள் எல்லாம் ஏபி நாகராஜன் என்ற மகத்தான இயக்குநரின் மணி மகுடத்தில் வைரக் கற்கள்.

சிவாஜியை மட்டுமல்ல எம்ஜிஆரையும் இயக்கியவர், ஏபி நாகராஜன். ஒன்பது நாயகிகளுடன் எம்ஜிஆர் நடித்த நவரத்தினம் திரைப்படம் ஏ.பி.நாகராஜன் இயக்கம் தான். எம்ஜிஆர், என்டிஆர், ஜெயலலிதா என மூன்று முதல்வர்களை இயக்கிய ஏபி நாகராஜன் வேறு யாருமல்ல...



திருவிளையாடல் படத்தில் "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்ற கணீ்ர் குரலுடன் சிவனுடன் சொல் சமர் புரியும் நக்கீரர் தான். ஐம்பதை எட்டும் முன் சிவனடி சேர்ந்தது, தமிழ் திரையுலகின் துரதிர்ஷ்டம்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

Monday 20 July 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -1


எந்த மனநிலையையும் சாந்தப்படுத்துவது காட்சிகள்தான். சஞ்சலம், கோபம், துயரம் இப்படி மனித மனங்களின் எல்லா உணர்வுகளையும் ஆசுவாசப்படுத்துவது காட்சிகளே. ஜன்னலோர பயணத்தின் இயற்கை காட்சியும் அப்படியே. எழுத்துகளை விட, மனதில் ஆழமாக ஆணி அடித்தது போல பதிவது காட்சிகள் தான். காட்சிகளால் கூறும் தகவல், எளிதில் அழியாது.

அதனால்தான் காட்சியாக அடிக்கடி காணும் அனைவருமே மனதுக்கு நெருக்கமாகி விடுகின்றனர், நீண்ட நாள் பழகியவர்கள் போல். இன்றைய யூ டியூப் தொடங்கி டிவி, கலர் சினிமா, கருப்பு வெள்ளை சினிமா வரை இதுதான் நிதர்சனம். இதில் சினிமா வேற லெவல். அது ஒரு பொழுதுபோக்கு, போதை இப்படி பல விமர்சனங்கள் வந்தாலும் சினிமா சினிமா தான். புறச்சூழ்நிலையை மறந்து மகிழ்ச்சியை தருவதில் உலகில் முதலிடம் சினிமாவுக்குத்தான்.

அதிலும் நூற்றாண்டை எட்டப்போகும் தமிழ் சினிமா பெருங்கடல். இந்த கடலுக்குள் திமிங்கலம், சுறா, டால்பின், திருக்கை, விலாங்கு இப்படி நிறைய அறிந்திருக்கலாம். ஆனால், பெரிதும் அறியாத பல வகைகளும் நிறைந்ததே பெருங்கடல். அப்படி இருப்பதே பூரணத்துவம்.

அந்த பூரணத்துவம் பெற்ற தமிழ் சினிமா எனும் சாகரத்தில் புதைந்து கிடக்கும் பொக்கிஷத்தில் வைரம், வைடூரியம், தங்கம் என பலவற்றை அறிந்தபோதிலும், பலரும் அறியாத பவளங்களை அறிமுகப்படுத்தலாம் என நினைக்கிறேன்.

முதல் சினிமாஸ்கோப் படம், பேசும்படம், முன்னணி ஹீரோக்களுக்கு சவால் விட்ட ஹீரோக்கள், ஹிட் படங்களை கொடுத்து காணாமல் போனவர்கள், மிகப்பெரிய பிரபலங்களின் குட்டி குட்டி ரகசியங்கள் இப்படி நிறைய சுவாரஸ்யங்கள் சினிமாவை தாண்டி உண்டு.

இயக்குநராக ராமராஜன், இசையமைப்பளர் பாக்யராஜ், இசையமைத்த எஸ்பிபி. திரையில் மின்னி மறைந்த மின்மினி ஹீரோயின்கள் இப்படி பலப்பல கலந்த சினிமாவை திரும்பிப் பார்ப்போம் வாருங்கள். நான் நேரில் அறிந்த 35 ஆண்டுகள். அதற்கு முந்தைய 25 ஆண்டுகள். இந்த அறுபதில் புதைந்து கிடக்கும் ஆச்சரியங்களுடன் ஆரம்பிப்போம், தமிழ் சினிமாவின் பவள தேடலை...

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்


Friday 17 July 2020

கொரோனா... வெறுமை...

 1997 பிப்ரவரி. 

சென்னையில் முதன் முதலில் காலடி வைத்தது, அப்போதுதான். இன்று அளவுக்கு அன்றைய சென்னை கிடையாது. போக்குவரத்து நெரிசல், குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமைமாதிரியான விஷயங்கள் எல்லாம் இல்லை. அண்ணா சாலையே மதிய நேர வெயிலில் காற்று வாங்கிக் கொண்டு இருக்கும்.


கண்ணெதிரிலேயே ஆனால் கண்ணுக்கு புலப்படாமல் சென்னையும் அதன் போக்குவரத்தும் வளர்ந்தது. நெரிசலில் பிதுங்கி பாரிமுனையில் இருந்து கோயம்பேடு ஓட்டம் பிடித்தன வெளியூர் பேருந்துகள். வட சென்னையில் மின்ட் தொடங்கி மேம்பாலங்களின் ஆதிக்கம் ஒருபுறம் பறக்கும் ரயில், மெட்ரோ ரயில்என மறுபுறம். ஷேர் ஆட்டோ, டாக்சிகள் என ஒரு பக்கம். பெருந்தீனிக்கு முன் போக்குவரத்து பசி அடங்கியதே இல்லை.


காலை நேரத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கினால் கூட்ட நெரிசலே, தூக்கி வந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் விட்டு விடும். இதை எல்லாம் 2020 பார்க்காமலேயே போய் விடுமோ. நான்கு மாதங்களாகி விட்டது. சும்மா இருப்பது எத்தனை கஷ்டம்? அதை விட அந்த சும்மாவுக்கு பின்னால் பின் விளைவுகளின் கோரம்... பயங்கரம்... ஒவ்வொருவருக்கும் ஒரு வித அனுபவம். 


முதல் சில வாரங்களாக அலுவலகத்துக்கு கார் பயணம். பின் சில வாரங்களாக பைக் பயணம். தினமும் சராசரியாக இரு வழி பயணம் சுமார் 60 முதல் 65 கிலோ மீட்டர் இருக்கும். செவி வழியாக... செய்திகள் வழியாக...  வந்து சேரும் கொரோனா கால கொடுமைகள் ஒரு புறம் இருக்க... கண் வழி காட்சிகள் பல...


அவ்வப்போது தளர்வுகள் என அறிவித்தாலும் அதிகபட்சம் இரவு எட்டுக்குள் அடங்கி விடுகிறது சென்னை. எட்டுக்குள் அடங்கும் நகரமா இது?  30 கிலோ மீட்டர் தூர பயணத்தில் ஒருவரை கூட வழியில் காண முடியாத அத்துவான இரவுகளையும் பார்த்ததுண்டு.

காலை, மாலை, இரவு இப்படி எந்த வேளையில் வெளியில்  செல்லும்போதும் ஏதோ ஒன்றை முனகிக் கொண்டே இருக்கிறது, நீண்டு வளைந்து கருத்துக் கிடக்கும் சென்னையின் தார்ச் சாலைகள்.



#நெல்லை_ரவீந்திரன்

Wednesday 15 July 2020

காமராஜர்... சகாப்தம்...

 தமிழ்நாட்டின் இன்றைய கல்வி வளர்ச்சிக்கு அஸ்திவாரம். வெறும் 7% கல்வியறிவை 9 ஆண்டுகளில் 37% ஆக்கிய படிக்காத மேதை....

ஐஐடி மாதிரியான உயர்கல்வி நிறுவனங்களை 60 ஆண்டுக்கு முன்பே தமிழ் நாட்டுக்கு தந்த  தலைவர்...

தெற்கில் இருந்து வடக்கு வரை இன்று உச்சரிக்கப்படும்  அணைகளின் நீர்த்திவலைகள் ஒவ்வொன்றும் ஓயாமல் உச்சரிப்பது இவரது பெயரையே...

சென்னை எம்.ஆர்.எல்.(சிபிசிஎல்), நெய்வேலி, சேலம் என தொழில் வளத்தையும் மேம்படுத்திய கருப்பு தங்கம்...

அறிக்கைகளையே சாதனைகளாக பட்டியலிடும் மார்க்கெட்டிங் வித்தை  தலைவர்களை பார்த்துக் கொண்டிருக்கும் விழிகள் எல்லாம், இப்படி ஒரு தலைவர் இருந்தாரா என இமைக்க மறந்து நிற்கின்றன...

அரியணையை வென்ற மறு ஆண்டே, தேச சேவைக்காக  பதவியை துறந்த தியாக திருவிளக்கு...

இனம் காட்டும் நிறம். குணம் கூறும் உடை.  துணிச்சலை பறைசாற்றும் உடல்வாகு. கை கூப்பி வணங்கத் தோன்றும் முகம் என நான்கும் இணைந்த நல்லவர். ஒரு சில துளிகளுக்குள் அடக்க முடியாத மகா சமுத்திரம்.

மாதம் முழுவதும் கத்திரிக்காய் சாம்பார் சாப்பாடு என்றாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்து சாப்பிட்டால் அவருக்கு அது விருந்து சாப்பாடு. 

ஆண்டுக்கு இரண்டே இரண்டு நாட்கள் சீஸன் சமயத்தில் குற்றாலம் போய் தங்கி வருவதே அதிகபட்ச சந்தோஷம்!

பத்திரிகையாளர்களுக்கு அவர் கூறிய அறிவுரை எந்தக் காலத்திலும் பொருந்திச் செல்லக் கூடியது. ‘ஒண்ணு, நீங்க பத்திரிகைக்காரனா இருங்க. அல்லது அரசியல்வாதியாவோ பிசினஸ்மேனாவோ இருங்க. மூணாகவும் இருக்க முயற்சி பண்ணாதீங்க!’

ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் பேசுவார். அவரளவுக்குச் சுருக்கமாக பேச யாராலும் முடியாது.

உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதிலளித்தார். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார்.

இரண்டு முறை பிரதமர் வாய்ப்பு வந்தும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கிவிட்டு  ‘கிங் மேக்கர்’ பட்டத்தை மட்டும் தக்க வைத்துக் கொண்டவர். 

வட இந்தியர்களுக்கு ‘காலா காந்தி’, பெரியாருக்கு ‘பச்சைத் தமிழர்’,  தமிழர்களுக்கு என்றும் அவரே பெருந்தலைவர்.



இருக்கும்போது கைவிட்டு விட்டு கல்லறைக்கு மலர் தூவும் குணாளர்களின் சிலுவைகளையும் மலர்களாய் சுகமாக சுமந்த குணாளா... குணக் கொழுந்தே...


Monday 13 July 2020

கொரானா (கொடூர) காலம்...

 1997 பிப்ரவரி. 

சென்னையில் முதன் முதலில் காலடி வைத்தது, அப்போதுதான். இன்று அளவுக்கு அன்றைய சென்னை கிடையாது. போக்குவரத்து நெரிசல், குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமை மாதிரியான விஷயங்கள் எல்லாம் இல்லை. அண்ணா சாலையே மதிய நேர வெயிலில் காற்று வாங்கிக் கொண்டு இருக்கும்.

கண்ணெதிரிலேயே ஆனால் கண்ணுக்கு புலப்படாமல் சென்னையும் அதன் போக்குவரத்தும் வளர்ந்தது. நெரிசலில் பிதுங்கி பாரிமுனையில் இருந்து கோயம்பேடு ஓட்டம் பிடித்தன, வெளியூர் பேருந்துகள். வட சென்னையில் மின்ட் தொடங்கி மேம்பாலங்களின் ஆதிக்கம் ஒருபுறம். பறக்கும் ரயில், மெட்ரோ ரயில்என மறுபுறம். ஷேர் ஆட்டோ, டாக்சிகள் என ஒரு பக்கம். இந்த பெருந்தீனிக்கு முன் மாநகரின் போக்குவரத்து பசி அடங்கியதே இல்லை.

காலை நேரத்தில் சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இறங்கினால் கூட்ட நெரிசலே, தூக்கி வந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் விட்டு விடும். 

இதை எல்லாம் 2020 பார்க்காமலேயே போய் விடுமோ?

நான்கு மாதங்களாகி விட்டது. சும்மா இருப்பது எத்தனை கஷ்டம்? அதை விட அந்த சும்மாவுக்கு பின்னால் பின் விளைவுகளின் கோரம்... பயங்கரம்... ஒவ்வொருவருக்கும் ஒரு வித அனுபவம். 

முதல் சில வாரங்களாக அலுவலகத்துக்கு கார் பயணம். பின் சில வாரங்களாக பைக் பயணம். தினமும் சராசரியாக இரு வழி பயணம் சுமார் 60 முதல் 65 கிலோ மீட்டர் இருக்கும். செவி வழியாக... செய்திகள் வழியாக...  வந்து சேரும் கொரோனா கால கொடுமைகள் ஒரு புறம் இருக்க... கண் வழி காட்சிகள் பல...

அவ்வப்போது தளர்வுகள் என அறிவித்தாலும் அதிகபட்சம் இரவு எட்டுக்குள் அடங்கி விடுகிறது சென்னை. எட்டுக்குள் அடங்கும் நகரமா இது?  30 கிலோ மீட்டர் தூர பயணத்தில் ஒரு மனிதரை கூட வழியில் காண முடியாத அத்துவான இரவுகளையும் பார்த்ததுண்டு.

காலை, மாலை, இரவு இப்படி எந்த வேளையில் வெளியில்  செல்லும்போதும் ஏதோ ஒன்றை தனக்குள்ளேயே முனகியபடி புழுங்கிக் கிடக்கிறது, நீண்டு வளைந்து கருத்துக் கிடக்கும்  சென்னையின் கொரானா ஊரடங்கு கார தார்ச் சாலைகள்.


Wednesday 1 July 2020

கொரோனா ரிலாக்ஸ்

 பொது முடக்கத்தால் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மக்களின் பொழுதுபோக்குக்காக விஜய் டிவியின் ரீ டெலகாஸ்ட் 'மகாபாரதம்' கிளைமாக்ஸை நெருங்கி விட்டது.




ஆறு ஆண்டுகளுக்கு முன் அரை மணி நேர எபிஸோடுகளாக சுமார் ஓராண்டுக்கு மேல் நீடித்த இந்த தொடர், இப்போது தினமும் இரண்டு மணி நேரம் வீதம் நூறு நாட்களில் நிறைவை நெருங்கியுள்ளது.


இந்த வேளையில் இந்த தொடர் பற்றி அந்த நாளில் எழுதிய எனது எழுத்துகள்...

👇👇👇👇


யாராவது ஒருவர் நீட்டி முழக்கி கதை அளந்து கொண்டு இருந்தால், ‘நீ என்ன மகாபாரத கதையா சொல்கிறாய்?’ என்று கேட்பது வழக்கம். அந்த அளவுக்கு மகாபாரதம் என்றால் மிக நீநீநீளளமான இதிகாச காவியம். 


சாந்தனு மகாராஜாவுக்கு பிறகு விசித்திர வீரியன். அவனுக்கு பிறகு, திருதராஷ்டிரன் மற்றும் பாண்டு. அவர்களுடைய வாரிசுகள் துரியோதனன் மற்றும் தர்மர், அர்ச்சுனன். அர்ச்சுனனின் மகன் அபிமன்யு, அவனது புதல்வன் பரீட்சித்து என 6 தலைமுறையினரைப் பற்றிய நீண்ட நெடிய வரலாறு, அது. 


அந்த வரலாற்றில் 5 தலைமுறையினருடன் வாழ்ந்தவர், சாந்தனு மற்றும் கங்கா தேவிக்கு மகனாக பிறந்த தேவவிரதன் எனப்படும் பீஷ்மர். இன்றைய தலைமுறையிடம் இவ்வளவு நீண்ட இதிகாச கதையை படிக்கும் பொறுமையை நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது. 


அதனால்தானோ என்னவோ? டிவி சேனல்களில் அவ்வப்போது மகாபாரதத்தை நெடிய தொடராக ஒளிபரப்புகின்றனர். கால் நூற்றாண்டுக்கு முன் தூர்தர்ஷனில் ‘இத் கோ மஹாபாரத் கதா’ என்ற டைட்டில் பாடலுடன் தொடர் ஆரம்பிக்கும்போது மொழி புரியாவிட்டாலும் அதை ரசித்து பார்க்க பெரிய கூட்டமே காத்து கிடந்தது. பின்னர், மொழி வாரி சேனல்கள் பெருகியதால் பிராந்திய மொழிகளிலேயே மகாபாரதம் காண முடிகிறது. ஆனாலும், அதன் நீண்ட நெடிய வடிவாக்கத்தை சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் சலிப்பு இல்லாமலும் மக்களுக்கு தருவதில் ஒவ்வொரு சேனலும் வேறுபட்டன. 


அதில் ஸ்டார் குழுமத்தை சேர்ந்த விஜய், வித்தியாசமாக நிற்கிறது. ஏற்கெனவே, ஸ்டார் பிளஸ் சேனலில் இந்தியில் ஒளிபரப்பான தொடரின் டப்பிங் வெர்சன் தான் ஸ்டார் விஜய் ஒளிபரப்பிய மகாபாரதம். டப்பிங் நெடி சிறிது கூட இல்லாமல் அசல் தமிழ் தொடர் உணர்வை அளித்தது.


கிருஷ்ணன், சகுனி, துரியோதனன் ஆகிய வேடங்களை ஏற்றவர்களின் நடிப்பு பிரமிக்கத்தக்கது. முகத்தில் சாந்தமும், கருணையும், சமயோசித சாணக்கியத்தனமும் ஒருங்கே காட்சியளித்த கிருஷ்ணரை காணும்போது உண்மையில் கிருஷ்ணர் இப்படித்தான் இருப்பாரோ என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. 


ஒற்றை கண்ணை மட்டும் திறந்து கொண்டு சதி ஆலோசனைகளை அள்ளி விடும் சகுனி கதாபாத்திரத்தை ஏற்றவரின் நடிப்பு மிகவும் அசாதாரணமானது. இதிகாச சகுனி கூட, இப்படி இருந்திருப்பாரா என்பது சந்தேகமே? 


பீஷ்மர், துரோணர், நேத்திரங்களை இழந்த திருதராஷ்டிரர், காந்தாரி, பாஞ்சாலி, அர்ச்சுனன், அசுவத்தாமன், கர்ணன், அபிமன்யு என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுடைய பங்களிப்பை நிறைவாக செய்திருந்தனர்.


தமிழில் எழுதப்பட்ட டப்பிங் வசனங்களும் கூட எதுகை, மோனையோடு மிக அழகாக அமைந்திருந்தன. கீதை உபதேசம் செய்யும் காட்சிகள், மிக முக்கியமான தருணங்களில் நடைபெறும் வாக்குவாதங்கள் போன்றவற்றில் கையாளப்பட்ட வார்த்தை ஜாலங்களே இதற்கு உதாரணம். 


தமிழில் பின்னணி குரல் கொடுத்தவர்களுக்கும் தொடரின் அபரிமிதமான வரவேற்பில் முக்கிய பங்கு உண்டு. காட்சி அமைப்பில் சிறு பிசிறு கூட இல்லாமல் இதிகாச காலத்தை கண்முன்னே நிறுத்தியதில் ஸ்டார் விஜய்க்கு ஷொட்டு. 


அஷ்டவசுக்களில் ஒருவராக இருந்து கங்கா தேவியின் மூலமாக மானிட பிறவியை அடைந்தவரும் ராஜநீதிகளை அறிந்தவருமான பீஷ்மரால் துரியோதனன் உள்ளிட்ட கவுரவர்களின் தவறுகளை தடுக்க முடியவில்லை. பீஷ்மர் என்ற மாபெரும் துணை இருப்பதாலேயே அஸ்தினாபுர யுவராஜன் துரியோதனனின் அட்டகாசத்தை அண்டை நாட்டு அரசர்களால் தட்டிக் கேட்க முடியவில்லை. தனது தமையன் பாண்டுவுக்கு சொந்தமான அரசை கூட, அவனது புத்திரர்களுக்கு அளிக்க திருதராஷ்டிரனுக்கு மனம் இல்லை. அவனது புத்திரபாசம் தடுத்தது. புத்திர பாசத்தால் தனது மகன் அசுவத்தாமனுக்கு ஒரு ராஜ்ய பரிபாலனம் கிடைக்கும் என்பதாலேயே துரியோதனனை சார்ந்து இருந்து அவனது தவறுகளை குரு துரோணராலும் இடித்துக் கூற முடியவில்லை. 


இப்படி இன்மைகள் அதிகரித்தபோது அரசன் வழியிலேயே குடிமக்களும் செல்வார்கள் என்பதால் ஒரு யுகத்தை அழித்து புதிய யுகம் படைத்ததாக கிருஷ்ணர் கூறுகிறார். 


மாபெரும் சபையில் ஒரு பெண்ணுக்கு (அதுவும் ராஜகுலத்தை சேர்ந்தவருக்கே) நேரிட்ட அவமதிப்பு தொடங்கி உத்தரையின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை பிரம்மாஸ்திரத்தால் அழிக்க நினைக்கும் அசுவத்தாமன் வரை ஒவ்வொரு தவறுக்கும் தண்டனைகளை வாரி வழங்கும் கிருஷ்ணரிடம் பாஞ்சாலி கேட்கும் கேள்விகள் சிந்திக்க தூண்டுபவை. 


இவ்வளவு கோரமான யுத்தம் எதற்காக? எதிரிகளாக இருந்தாலும் மிக கொடூரமாக உயிரிழந்த பிறகு அவர்கள் மீது பரிதாபமே தோன்றுவதோடு எனது தரப்பிலும் வாரிசுகளை இழந்து நிற்கிறோமே? அனைத்து லீலைகளையும் புரிபவன் நீ என்பது உண்மை என்றால், மனிதர்களின் மனதை மாற்றி இருக்கலாமே? மாபெரும் நாசகார யுத்தத்தை நிகழ்த்தியது ஏன்? இப்படி அடுக்கடுக்காக துருபத கன்னிகை பாஞ்சாலி எழுப்பும் கேள்விகளுக்கு கிருஷ்ணர் கூறும் பதில், எக்காலத்துக்கும் பொருந்தும். 


‘ஒவ்வொரு ஜீவாத்மாவுக்கும் அவர்களாகவே சுயமாக சிந்தித்து செயல்படும் சுதந்திரம் உண்டு. (அதில் கடவுளும் தலையிட முடியாது). ஆனால், அக்கிரமம் அதிகரித்து அதர்மம் தலை தூக்கினால் அதை ஒட்டு மொத்தமாக அழித்து புதிய யுகம் படைப்பது கடவுளின் கடமை. அதுதான், இந்த யுத்தத்தில் நடைபெற்றது.


அபிமன்யுவின் மனைவி உத்தரை வயிற்றில் வளரும், உலகை எட்டிப் பார்க்காத சிசு கூட கர்ப்பத்திலேயே உயிரை இழந்து மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. அந்த சிசுவே, ‘பரிட்சீத்து மகராஜா’வாக (அர்ஜுனனின் பேரன்) புதிய பாரதத்தை தொடங்குவான்’ என்பதே அந்த பதில். 


18 நாள் மகாபாரத யுத்தத்தில் காந்தார அரசன் சகுனி, அஸ்தினாபுர அரசன் துரியோதனன், திரிகர்த்த தேச அரசன் சுதர்மன், சிந்து அரசன் ஜயத்ரதன், பாஞ்சால தேச அரசன் துருபதன், மத்ரிய அரசன் சல்லியன், அங்க தேச அரசன் கர்ணன், உத்தரதேச அரசன் விராடன் என பல்வேறு தேசத்து அரசர்களும் கொல்லப்படுகின்றனர்.


கிருஷ்ணர் கூறுவது போல முற்றிலுமாக அனைத்து ஆட்சிகளும் துடைத்து எறியப்பட்டு புதிய ஆட்சி மலருகிறது. அக்கினியில் உதித்த பாஞ்சாலி மற்றும் நாடிழந்து நின்ற பாண்டவர்கள் மட்டுமே யுத்தத்தின் முடிவில் உயிர் பிழைத்து நிற்கின்றனர். 


மகாபாரதத்தில் கிருஷ்ணர் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் உற்று நோக்கினால் பல்வேறு கருத்துகள் பொதிந்த தத்துவ விசாரங்களாகவே உள்ளன. கூடுமான வரை அவற்றை ஸ்டார் விஜய் சரியாக கையாண்டு இருக்கிறது. ஆங்காங்கே சில தவறுகளும் குறைகளும்


(உதாரணம்=அபிமன்யு வதத்தில் கோரம், குந்தி மற்றும் காந்தாரி போன்ற மூத்த ராஜமாதாக்களின் இளமை தோற்றம்) இருந்தாலும் நிறைவு பெற்ற மகாபாரதம், நிறைவாகவே இருக்கிறது. இனிமேல், மஹாபாரதம் இல்லா பொழுதை நினைத்தால் வெறுமை கவிழ்கிறது.


‘விதியாடும் விளையாட்டில் 

சதி வலையில் வீழ்ந்தனரே

தர்மம்... இங்கு பலியானதே

சதி செய்த சூழ்ச்சி தனில்

கதியின்றி போயினரே...’

 

‘அகிலம் போற்றும் பாரதம்

இது இணையில்லா ஒரு காவியம்

தர்ம, அதர்ம வழியினிலே

நன்மை, தீமையின் நடுவினிலே

விளையும் போரினில் சத்தியம் வென்றிடுமோ...’


‘கிருஷ்ணனின் மகிமையும்

கீதையின் பெருமையும்

ஒன்றாக சங்கமிக்கும்

ஒரு புண்ணிய காவியம் 

மகாபாரதம்... மகாபாரதம்...’


ஆகிய பாடல்கள் காதுகளில் ரீங்காரமிட்டுக் கெண்டிருக்கின்றன.

மீள் பதிவின் எடிட்டட் வெர்ஷன்

கொரோனா முடிந்து புது யுகம் பிறக்கும் நம்பிக்கையுடன்

#நெல்லை_ரவீந்திரன்