Thursday 15 December 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளஙகள் -38

30 வருடங்களுக்கு முன்பு ரேடியோவே கதியென கிடக்கும் வானொலி நேயராக இருந்தால் இவரை கண்டிப்பாக தெரியாமல் இருக்காது. சென்னை, திருச்சி என தமிழக வானொலி நிலையங்களில் பழைய பாடல்கள் ஒலிபரப்பாகும்போது இந்த பெயரும் நிச்சயம் ஒலிக்கும்.

இலங்கை வானொலியில் அப்துல் ஹமீது துவங்கி ராஜா, ராஜேஸ்வரி சண்முகம் மாதிரியான அறிவிப்பாளர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு எத்தனை முறை அந்த பெயரை சொல்லியிருப்பார்கள்னு அவர்களுக்கே தெரியாது. தென் தமிழகத்தில் 1980களின் வானொலி ரசிகர்களுக்கு இது தெரியும். அந்த பெயர் கண்டசாலா.



அடுத்ததாகபாதாள பைரவி படத்தில் கண்டசாலா பாடும் பாடல் என்ற அறிவிப்பும் அதைத் தொடர்ந்து வரும் "அமைதி இல்லா என் மனமே..." பாடலும் 80ஸ் வானொலி நேயர்கள் காதில் இன்றும் ஒலிக்கும்.

1950, 1960களில் இந்திய திரையுலகில் கண்டசாலா மிகவும் பிரபலம். இவர் பின்னணி பாடகர் கம் இசையமைப்பாளர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்த கண்டசாலா தெலுங்கு திரையுலகில் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் கோலோச்சியவர். சங்கீதத்தில் முறைப்படி தேர்ந்தவர். 



தெலுங்கில் இவர் இசையமைப்பாளராக அறிமுகமான 'மன தேசம்' படம்தான் ஆந்திர முன்னாள் முதல்வரும் நடிகருமான என்.டி.ஆருக்கும் முதல் படம்

தமிழில் சுமார் 20 படங்களுக்கு கண்டசாலா இசையமைத்திருக்கிறார். திரை இசை திலகம் கே.வி.மகாதேவன் இவரிடம் உதவியாளராக இருந்தவர். மாயாபஜார், பாதாள பைரவி, கள்வனின் காதலி, கல்யாணம் பண்ணிப்பார்... இதெல்லாம் கண்டசாலா இசையமைத்தவற்றில் குறிப்பிடத்தகும் தமிழ் படங்கள்.

இன்றளவும் ரசிகர்களை ஈர்க்கும் "கல்யாண சமையல் சாதம், காய்கனிகளும் பிரமாதம்..."  பாடலுக்கு இசை கண்டசாலாதான்.



ஆனால், பின்னணி பாடகராகத்தான் கண்டசாலாவை தமிழ் சினிமா அறியும். 1950 துவங்கி 1960கள் வரை ஏராளமாக பாடி இருக்கிறார். ஏஎம் ராஜா, பி.பி.ஸ்ரீநிவாஸ் கலந்த ஒரு குரல் இவருக்கு. இவரது வசீகர குரலுக்காக 'கான கந்தர்வன்' பட்டம் பெற்றிருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என திராவிட மொழிகள் அனைத்திலும், இந்தியிலும் பாடி இருக்கிறார் கண்டசாலா. பி.பி.ஸ்ரீநிவாஸ், சுசீலா, எஸ்.பி.பி போன்ற பிரபலங்களுக்கு ஆதர்ச குரு.


"உலகே மாயம் வாழ்வே மாயம் உலகில் நாம் காணும் சுகமே மாயம்..."

"முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக..."

"உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா சல்சா  செய்யடா..."

"ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா..."

'அமைதியில்லா தென் மனமே..."

இது போன்ற ஹிட் பாடல்கள் பல கண்டசாலா பாடியவை தான். 1960களில் திரைப்பட பாடல்களின் இசைத் தட்டுக்களை (ரிக்கார்டுகள்) பெரும்பாலும் பிரபல இசை நிறுவனமான ஹெச்எம்வி தான் வெளியிடும். அந்த நிறுவனத்தின் ஆஸ்தான பாடகராக இருந்தவர் கண்டசாலா. ஹெச்எம்விக்காக தனி இசை ஆல்பங்களையும் பண்ணி கொடுத்திருக்கிறார்.



திருப்பதி கோயிலின் ஆஸ்தான பாடகராகவும் இருந்தவர் கண்டசாலா. பகவத் கீதை பற்றி கண்டசாலா பண்ணிய ஆல்பம் திருப்பதி கோயிலில் ஒலிப்பது வழக்கம். 

'ஜகதேசா வீருணி கதா' என்ற தெலுங்கு படத்தின் சுமார் 7 நிமிட நீள பாடலான "சிவ சங்கரி சிவாநந்த லஹரி..." என்ற மிக பிரபலமான இந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை கலந்த ஒரு சிக்கலான பாடலை ஒரே டேக்கில் பாடியவர் கண்டசாலா. புராண, இதிகாச, பாகவதர் டைப் படங்களில் இருந்து குடும்பக் கதைகளுடன் துவங்கிய ஜனரஞ்சக சினிமாவின் மூத்த  பின்னணி பாடகர் என்ற அவரை சொல்லலாம்.

பழம்பெரும் பாடகர் கண்டசாலாவின் பிறந்த நாள் நூற்றாண்டு (4-12-2022) சமயத்தில் அவருக்கான அஞ்சலி இந்த பதிவு

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Sunday 11 December 2022

பாபா... ரீ ரிலீஸ்... அரசியல்...

இருபது வருஷத்துக்கு பிறகு 'பாபா' ரீ ரிலீஸ். ரஜினி ரசிகர்கள் கிட்ட அவரோட படங்களோட பெயர்கள  கேட்டா 'பாபா' பெயரை சொல்லுவாங்களோ இல்லையோ, ரஜினி ஹேட்டர்ஸ் கண்டிப்பா 'பாபா' பெயர சொல்வாங்க.



அது பிளாப் படம்னு அவங்க கணக்கு. அந்த படத்தோட அவரோட சூப்பர் ஸ்டார் அந்தஸ்து போச்சின்னு அப்போ  கொண்டாடுனவங்க கூட உண்டு. ஆனா இன்னைக்கும் அவருதான் சூப்பர் ஸ்டார். ரஜனி படத்தில வாய்ப்புன்னா இந்த ஹேட்டர்ஸ்தான் மொத ஆளாவும் நிப்பாங்க...!!!



'குரு சிஷ்யன்' படத்தில "நாற்காலிக்கு சண்டை போடும்..."னு பாடி அரசியல்ல மெதுவா எட்டிப் பார்த்தவர, 'அண்ணாமலை', 'முத்து' படத்தில பேசுன வசனங்களை ஜெயலலிதாவுக்கு எதிரானது மாதிரியே கொண்டாந்து கடைசியில 'பாட்ஷா' வெற்றி விழாவில அவர நேரடியாவே எதுக்கிற அளவுக்கு கொண்டாந்து விட்டாங்க.


அப்படியே 1996, 1998 தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாய்சுன்னு,  இப்போதைய விஜய் மாதிரியே அரசியல் ஜர்னலையும் விடாம பிடிச்சிட்டு இருந்த ரஜினிக்கு பாமக தான் ரெட் கார்டு போட்டுச்சி, அது மூலமா அந்த கட்சியும் பப்ளிசிட்டி தேடிச்சி.



ரஜினி புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதா? ரஜினிக்கு 14 கேள்விகள்னு ஆரம்பிச்சி அன்றைய அரசியல் பரபரப்புக்கு தீனி போட்ட கட்சி பாமக. 'பாபா' படப்பெட்டிய தியேட்டர்ல இருந்து (அப்போ பிலிம் சுருள்தான் சேட்டிலைட் டிஜிட்டல் கிடையாது) தூக்கிட்டு ஓடுனது வரை அட்ராசிட்டி நடந்திச்சி. 


கடுப்பான ரஜினி, 'ஜக்குபாய்'னு ஒரு படத்துக்கு பூஜை போட்டு "இறைவா எதிரிகளை நான் பார்க்கிறேன். துரோகிகளை நீ பார்த்துக் கொள்"னு பஞ்ச் டயலாக்கோட விளம்பரப் படுத்தினாரு. அப்புறமா அந்த படமே டிராப் ஆயிடுச்சி. பாபா படமும் பெரிசா போகலை.


2004 நாடாளுமன்ற தேர்தல்ல பாமக போட்டியிடும் தொகுதிகளில் தோக்கணும்னு கூட ரஜினி அறிக்கை விட்டார். ஆனா 5 தொகுதிகளிலயும் பாமக ஜெயிச்சிது. 'ஜக்குபாய்' டிராப், 'பாபா' தோல்வின்னு ரஜினியோட அரசியல் ஆசைக்கு அப்போ பிரேக் விழுந்தது. 



ரஜினிக்கு ஜனரஞ்சக படம்  மட்டுமே குடுக்கனும்னு பாடம் குடுத்தது பாபான்னு சொல்லலாம். சினிமா ரசிகனா பார்த்தா, அதில அவரு கெட்டப்பே அன்னியமா இருந்திச்சி. கதை (ரஜினி)யும் குழப்பம். படத்தோட வசனம் மட்டும் எழுத்தாளர் எஸ்.ரா. 'பாட்ஷா'ன்னு பிரியாணி பண்ணுன டைரக்டர வச்சி 'பாபா'ன்னு பஞ்சாமிர்தம் பண்ண வச்சா எப்பிடி இருக்கும்? ஆக, தீவிர ரஜினி ரசிகர்களை தாண்டி படம் ரீச் ஆகலை. இதுதான் உண்மையான காரணம். இதுக்கு நடுவில பாபா டி சர்ட், பாபா தொப்பின்னு லதா ரஜினி பண்ணுன தனி மார்க்கெட் அட்ராசிட்டியும் அதிருப்திக்கு காரணம்.


ரஜினி பிராண்ட் அதிரி புதிரி வெற்றி  இல்லைங்கிறதால பலரும் 'பாபா' படத்த போஸ்ட் மார்ட்டம் பண்ணி இப்ப வரைக்கும் பேசிட்டிருக்காங்க. ரஜினிய வேற மாதிரி எதிர் பார்த்த ரசிகர்களால, பாபா, ராகவேந்திரா மாதிரி ஏத்துக்க முடியல. அவரோட 100வது படமான ராகவேந்திராவும் வசூல் சாதனை படம் கிடையாது.



அடிக்கடி இமயமலை பயணம் போகிற ரகசியத்தை மக்களுக்கும் ரசிகர்களுக்கும் சொல்லனும்கிற எண்ணத்திலதான் மகா அவதார் பாபா பற்றி அந்த படத்தை சொந்த தயாரிப்பாவே ரஜினி எடுத்தார். மிக அதிக எதிர்பார்ப்போட 17 கோடிக்கு விற்பனையாகி 13 கோடிய மட்டுமே வசூலிச்சதால தயாரிப்பாளரா அந்த 4 கோடி இழப்பை ரஜினி திரும்ப குடுத்தார். அதே நேரத்தில கோவை மண்டலத்தில மட்டும் பாபா வசூல் ஒண்ணரை கோடி. இதை மூணு வருஷம் கழிச்சி 2005ல ரஜினியோடட 'சந்திரமுகி' தான் முறியடிச்சிது.



ஆக, ரஜினியோட அரசியல் ஆசைக்கு பிரேக் போட்ட படம், இப்போ அரசியலுக்கு முழுக்கு போட்ட பிறகு மறுபடியும் ரிலீசாகுது. ஆனா இப்பவும் ரஜினி ஹேட்டர்ஸோட விமர்சனம் குறையல. அதுதான் இன்னமும் ரஜினியோட மவுசு குறையலங்கிறதுக்கும் உதாரணம்.

#நெல்லை_ரவீந்திரன்

Saturday 10 December 2022

அது ஒரு கனா (தியேட்டர்) காலம்

ஓடிடி, வெப் சீரிஸ், யூ டியூப், சினிமா சேனல்கள் இப்படி எந்த வாய்ப்பும் இல்லாத சூழ்நிலையில் தியேட்டர் தான் கண் கண்ட   தெய்வம். ஆனா, நினைச்ச உடனேயே நினைச்ச படத்த பார்க்க முடியாது. பிடிச்ச படம் எப்ப எந்த தியேட்டர்ல போடுவாங்கன்னு காத்திருக்கனும். அதனால தியேட்டருக்கு போறதே திருவிழா மாதிரிதான்.

பெருநகரங்களில் வார இறுதியில்  புதுப்படங்கள் ரிலீசாகும். பிலிம் சுருள் பிரிண்டுங்கிறதால  கம்மி தியேட்டரில்தான் ரிலீஸ் பண்ணுவாங்க. ஓரிரு மாதம் கழித்து சிறு நகரங்களுக்கு அந்த படங்கள் வரும். அப்படியும் கூட படம் கிடைக்கலன்னா பழைய எம்ஜிஆர், சிவாஜி ஹிட் படங்களையே வார இறுதி நாட்களில் போட்டு ஓட்டுவாங்க. 




அப்பிடித்தான் நிறைய எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி படங்கள் எல்லாம் அறிமுகமாச்சி. 1980, 1990களில் இதுதான் பெரும்பாலான வழக்கம். ஆனாலும் அதுதான் தியேட்டர்களின் பொற்காலம். 

திருநெல்வேலியில் சுமார் பத்து தியேட்டர் இருக்கும். ஆலங்குளத்தில ரெண்டு (வைதேகி, லட்சுமி நாராயணா). பக்கத்து ஊரு குருவன்கோட்டையில ஒண்ணு (முத்து). இது தவிர ஒரு கிலோ மீட்டர்  தொலைவில  ஒரு டூரிங் டாக்கீஸ் (குமரன் அப்புறம் அதன் பெயர் வசந்தம் ஆனது) உண்டு. படம் போடும் முன்ன திரைக்கு முன்னால இருக்கிற ஸ்கிரீன் மியூசிக்கோட மெல்ல மெல்ல மேலே தூக்கிப் போறதும் சண்டை, பாடல் காட்சியில திரையை சுற்றி லைட் போடுறதும் அன்றைய ஆச்சரியங்கள்.

ஊருலயும் சரி. நெல்லையில் படிச்சப்பவும் சரி. சிவகாசி, சென்னையில வேலைக்காக போனப்பவும் சரி. தியேட்டர்களும் மனசுக்கு நெருக்கமான நண்பர்கள். சிவகாசியில ஒலிம்பிக், கணேஷ், பால கணேஷ் தியேட்டர்கள் எல்லாம் ரொம்பவும் நெருக்கம். எனக்கு இந்தி படங்களை அறிமுகம் செய்ததும் அந்த தியேட்டர்கள்தான். ஒலிம்பிக்கில் பாட்ஷா நாலு முறை பார்த்ததுண்டு. 

சென்னைக்கு வந்தப்ப தேவி காம்ப்ளக்ஸ், அபிராமி காம்ப்ளக்ஸ், ஆனந்த், சாந்தி, அண்ணா, கேசினோ, உட்லண்ட்ஸ், ஆல்பர்ட், ஈகா, மோட்சம்னு நகரம் முழுசும் நிறைய தியேட்டர்களில் சுத்துனது உண்டு. இஙகேயும் ரீ ரிலிஸ் தியேட்டர்கள்லாம் 1990களின் இறுதி வரை இருந்திச்சி. ஒருதலை ராகம்லாம் 1998ல் ஹவுஸ் புல்லா ஓடிச்சி...!



சினிமா சேனல்களும் வீடுகளில்  டிவிக்களின் ஆதிக்கமும் அதிகமானதும் தியேட்டர்களோட மவுசு குறைய ஆரம்பிச்சது. ஆரம்பத்தில மலையாளம் அது, இதுன்னு ஏதாவது பலான படங்கள போட்டு மின் கட்டண செலவுக்காக ஓட்டிட்டிருந்த தியேட்டர்கள் எல்லாம் 2கேக்கு அப்புறம் தாக்குப் பிடிக்க முடியாம உருவம் மாற ஆரம்பிச்சிது. மண்டபங்களில் கல்யாணம் பண்ற வழக்கமும் துவங்கினதால, சில திருமண மண்டபங்களா மாறிச்சி. சில வணிக வளாகமாவும், ஒண்ணு ரெண்டு மட்டும் மல்டி பிளக்சாவும் மாற ஆரம்பிச்சிது.

ஆலங்குளத்தில் இருந்த வைதேகி, முத்து அப்புறம் அந்த டூரிங் தியேட்டர் எல்லாம் காணாமப் போய் புல் முளைச்சி போச்சு. லட்சுமி நாராயணா மட்டும் இரண்டு ஸ்கிரீன்களோட மல்டி பிளக்ஸா இப்போ நவீனமா மாறியிருக்கு.

நெல்லையில பார்வதி கல்யாண மண்டபமாயாச்சி. மிகப்பெரிய தியேட்டரான சென்ட்ரல் பரிதாபமா இருக்கு. கல்லூரி நாட்களில புதுசா தொடங்குன பேரின்ப விலாஸ் கூட இதே நிலைதான். பாப்புலர், லட்சுமி, ராயல்,  பூர்ணகலா, அருணகிரி, ஸ்ரீபுரத்தில் வயல்காட்டு நடுவில சிவசக்தின்னு தியேட்டர்களா குவிஞ்சி கிடந்த நெல்லையில இப்ப மதுரை ரோட்டில இருக்கிற மல்டி பிளக்ஸ் தான் சொல்லும் படியா இருக்கு.

குற்றால சீசன் சமயத்தில  தென்காசியில் படம் பார்க்கிற பரதன், பாக்கியலட்சுமி தியேட்டருங்க கூட இப்ப இல்ல.

சிறு, குறு நகரங்களிலேயே நிலைமை இப்படின்னா மெட்ரோ நகரமான சென்னை பத்தி கேக்கவா வேணும். அண்ணா சாலையிலேயே எல்ஐசி அருகில் இருந்த அலங்கார் (கடைசி படம் 1997 பொங்கலுக்கு பெரிய மருது போட்டாங்க) சாந்தி, வெலிங்டன், பிளாசா, சித்ரா, ஸ்டார், ஆனந்த், மயிலை லஸ் கார்னர் காமதேனு, ராயப்பேட்டை பைலட், சைதை ராஜ்,  (அமர்க்களம் இங்கதான் எடுத்ததா சொல்லுவாங்க) இப்பிடி நிறைய தியேட்டருங்க காணாமப் போயாச்சி.

சத்தியமூர்த்தி பவன் பக்கத்தில ஜெயப்பிரதா, எக்ஸ்பிரஸ் மால் எதிரே இருந்த தியேட்டர் இந்தி படங்களுக்கு பிரபலம். ஜிம்கானா கிளப்புக்குள்ள பிளாசா, திருவல்லிக்கேணி ஸ்டார் ரீ ரிலீஸ் படங்களுக்கு. கெயிட்டியும் ஃபேவரைட் தான் 🤪 கெயிட்டிக்கு மேற்கு பக்கம் கூவம் ஆற்றுக்கு மேற்கில் சித்ரா இருந்தது. எல்லாமே  கனவு மாதிரி போயாச்சி.

சித்ரா, சாந்தி, ஆனந்த், மோட்சம், ஸ்டார்னு பேருந்து நிறுத்தங்களே தியேட்டர் பெயரில்தான்  அடையாளப் படுத்துன நிலைமை சென்னையில மாறிட்டிருக்கு. பிராட்வே என்பதே பிராட்வே தியேட்டரின் (தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் படம் மூன்று தீபாவளிகளைக் கடந்து ஓடுன தியேட்டர்) பெயர்தான். 


வட சென்னை மின்ட் பகுதியில் பஸ் டெப்போ அருகே பத்மநாபா தியேட்டர் இருந்தது. இப்போ அது குடியிருப்பு வளாகமாகிறது. புரசைவாக்கத்தில அபிராமி (4 தியேட்டர்) காம்ப்ளக்ஸ் இப்போ மாறியாச்சி. அருகிலேயே எம்ஜிஆர் படங்களையா போடுற மேகலா தியேட்டரும் என்ன ஆச்சின்னு தெரியல.

மகாராணி, பாண்டியன், பாரத், எம்எம் தியேட்டர் ராயபுரம் பிரைட்டன் (இப்போ ஐ ட்ரீம்ஸ்) அகஸ்தியான்னு பெரும்பாலான தியேட்டருங்கள பார்த்தாச்சி. திருமணமான பின் முதன் முதலில் படம் பார்க்கச் சென்ற தியேட்டர் அகஸ்தியா. படம் ஷாஜஹான்.


சென்ட்ரல் -திருவொற்றியூர் மெட்ரோ ரயில் பாதைக்காக அகஸ்தியாவில் ஏக்கர் கணக்கில் இருந்த மிகப் பெரிய முன் வளாகம் எடுக்கப்பட்ட பிறகு, அது தனது பிரமாண்டத்தை இழந்து, வாழ்ந்து கெட்ட பண்ணையார் போலவே மாறி இருந்தது. இப்போ முழுசாவே அதுக்கு மரண சாசனம் எழுதியாச்சி.



மல்டி பிளக்சில 5கே, 7கேன்னு கெத்தா பார்த்தாலும் தியேட்டர்ல 25ஆவது 100ஆவது நாள் காட்சியில கூட விசிலடிச்சி பார்த்ததுக்கு ஈடாகுமா?

வேகமாக வளரும் விஞ்ஞான பெருஞ் சுழலில் தியேட்டர்கள் இழுத்துச் செல்லப்பட்டாலும் 1990ஸ் கிட்ஸ்கள் ஒவ்வொருவரின் நினைவு இடுக்குகளிலும் அவரவருக்கு நெருக்கமான தியேட்டர்களின் சுகந்தமும் அங்க ஹால்ல வச்சிருக்க சினிமா பட ஷீல்டுகளும் நிறைஞ்சி கிடக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

#நெல்லை_ரவீந்திரன்

Monday 5 December 2022

அரசியல் ஆளுமை = அம்மா



ஆணாதிக்க அரசியலில்

சிகரம் தொட்டு

ஆகச் சிறந்த ஆளுமைகளும்

பெற்றிறாத வெற்றியை

தனியாளாய் பெற்று

அரசியல் அவமதிப்புகள்

தரக்குறைவு விமர்சனங்களை

வளர்ச்சிக்கு உரமாக்கி

எதிர்த்தவர்களுக்கு சிம்மமாய்

பெண்களில் ஒரு புதிராய்

.

.

நிராசை, அவமரியாதை

துரோகம், கூடா நட்பு

ஆணாதிக்க கொடுமை

இறப்புக்கு பிறகும் தொடரும் 

அரசியல் சேறு, அவதூறு என

உச்ச துயரம் கண்ட போதிலும்

ஆளுமைகளையும் கூட

தன்னை தேடி வரச் செய்த

தன்னிகரில்லா 

தமிழகத்தின் இரும்பு மனுஷி

.

.

சாதனையான சோதனை 

வாழ்க்கை நெடுகிலும்

இரும்புத் திரை மூடிய புதிர்கள்

இறப்புக்கு பின்னும் தொடரும்

விழிகளை நிறைக்கும் சோகம் 

புவியில் பிறந்தோருக்கு

அல்லவை நல்லவை என

எல்லாவற்றுக்கும் உதாரணம்

அனைத்து பெண்களுக்கும்

அரிச்சுவடி பாடம்...



#நெல்லை_ரவீந்திரன்