Monday 25 July 2011

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா

பரந்து விரிந்த இந்த உலகில் பட்டங்களை ஆளவும், சட்டங்களை போடவும் பெண்கள் அதிகாரம் பெற்றவர்களாக இருப்பதை 75 ஆண்டுகளுக்கு முன்பே தேசியக் கவி பாரதி கனவாக பார்த்தார். 21&ம் நூற்றாண்டை கடந்து விட்ட போதிலும் பாரதியின் கனவு, கனவாகவே நீடிக்கிறது என்பது வேதனையான உண்மை.

இந்தியாவின் உயரிய பதவிகளாக ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, மாநில முதல்வர் என அத்தனை அதிகாரம்மிக்க பதவிகளையும் பெண்கள் அலங்கரித்து விட்டனர். ஆனால், அந்த பதவிகளுக்கு வந்த அனைவருமே தனிப்பட்ட திறமைகளால் உயர்ந்தவர்கள். ஆணாதிக்க சமூகத்தை வென்று வெற்றிக் கனியை பறித்தவர்கள்.
அதே நேரத்தில், உயரிய அதிகார அமைப்புகளான பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு உரிய பங்கை இதுவரை பெற முடியவில்லை. வாக்காளர்களில் 45 சதவீதத்துக்கு அதிகமாக உள்ள பெண்கள் சமுதாயத்தில் இருந்து 10 சதவீதம் பேர் கூட பாராளுமன்றத்துக்கோ, சட்டசபைகளுக்கோ தேர்வு செய்யப்படுவதில்லை.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் கூட, 9 சதவீதத்துக்கு குறைவாகவே பெண் எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். மக்கள் தொகையில் ஆண்களுக்கு சரி நிகராக உள்ள பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (33 சதவீதம்) இடங்களையாவது ஒதுக்கீடு அளிக்குமாறு நீண்ட நெடுங்காலமாக கோரிக்கை ஒலிக்கிறது.
இந்த நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆட்சியின்போது, 1996&ம் ஆண்டு செப்டம்பர் 12&ந் தேதி அன்று பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்காக, அரசியல் சட்டத்தில் 81&வது திருத்தம் மேற்கொள்ளும் வகையில் மசோதா தயாரிக்கப்பட்டது.
ஆனால், அறிமுக நிலையிலேயே பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பெண்களுக்கான ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் பெண்களுக்கும் உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது அவர்களில் ஒரு தரப்பினரின் வாதம்.
வெளித் தோற்றத்துக்கு மிகவும் நல்ல வாதம் போல தோன்றினாலும், பெண்கள் இட ஒதுக்கீட்டை தள்ளிப் போட நினைக்கும் சூழ்ச்சியே அதில் மேலோங்கி நிற்கிறது. உண்மையும் அதுதான். அதனால் தான், மசோதா நிறைவேறவே இல்லை.
அதன் பிறகு, வாஜ்பாய் தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு சார்பில் 1998&ம் ஆண்டு மீண்டும் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, வேறு மூன்று சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டதால், அரசியல் சட்டத்தில் 84&வது திருத்தம் செய்யும் வகையில் மசோதா தயாரிக்கப்பட்டது.
இரண்டாவது முறையும் பெண்கள் மசோதா தோல்வியில் முடிந்தது. அதன் பிறகு, 1999, 2002, 2003, 2004 என அடுத்தடுத்து பாராளுமன்றத்தில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதே தவிர நிறைவேறவே இல்லை.
ஒவ்வொரு முறை பாராளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்தாலும், அந்த ஆட்சி முடிந்ததும் தானாகவே மசோதா காலாவதி ஆகி வந்ததால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு புதிய யுக்தியை கையாண்டது.
டெல்லி மேல்&சபைக்கு ஆயுள் காலம் முடிவே கிடையாது. எனவே, மசோதா காலாவதியாகாமல் இருப்பதற்காக டெல்லி மேல்சபையில் 2008&ம் ஆண்டு தாக்கல் செய்தது. பல்வேறு முட்டுக்கட்டைகள், இடையூறுகளை தாண்டி 2010&ம் ஆண்டு மார்ச் 9&ந் தேதி அன்று டெல்லி மேல்சபையில் மசோதா நிறைவேறியது.
அப்போதும் கூட, சாதாரணமாக மசோதா நிறைவேறி விடவில்லை. சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8&ந் தேதி அன்று உலகமே அதிர்ச்சி அடையும் வகையில் டெல்லி மேல்சபையில் அமளியும், மைக் உடைப்புகளும் அரங்கேறின. அதையும் மீறி, அதற்கு மறுநாள் மசோதா நிறைவேற்றப்பட்டது. அவையில் இருந்த 245 எம்.பி.க்களில் 186 பேர் ஆதரவு அளித்தனர்.
அதன் பிறகு, பாராளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அந்த சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது, ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்னமும் பாராளுமன்றத்தில் அந்த மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்க முடியவில்லை.
ஒவ்வொரு முறை பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கும்போதும், 'இந்த கூட்டத் தொடரில் மகளிர் மசோதாவை நிறைவேற்ற முயற்சி செய்வோம்' என்பது மத்திய ஆட்சியாளர்களின் வழக்கமான பல்லவியாகவே அமைந்து விட்டது.
இப்போது நடைபெறுகிற பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரிலும் வழக்கம்போல(!) மகளிர் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்காக, கடந்த ஜூலை மாதம் மட்டும் இரண்டு முறை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமார் கூட்டி விட்டார். ஆனாலும், பலனில்லை.
அனைத்து கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு தான் இந்த சட்டத்தை அமல் படுத்துவோம் என மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. இந்த உறுதிக்கு என்ன காரணம் என யாருக்குமே தெரியவில்லை. ஏனெனில், அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால் போதும்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ், பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, அ.தி.மு.க., தி.மு.க., தெலுங்கு தேசம் என பல்வேறு கட்சிகளும் ஆதரவு அளிக்கின்றன. இந்த கட்சிகளின் ஆதரவு இருந்தாலே மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்து விடும்.
முதன் முதலில் 1996&ம் ஆண்டு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அறிமுகமாகும் போது, அரசியல் சட்டத்தின் 81&வது திருத்தமாக கொண்டு வரப்பட்டது. ஆனால், 2008&ம் ஆண்டு டெல்லி மேல்சபையில் தாக்கல் செய்தபோது அரசியல் சட்டத்தின் 108&வது திருத்தமாக மசோதா தாக்கலானது. அதாவது, இந்த காலகட்டத்துக்குள் 27 திருத்தங்களை அரசியல் சட்டத்தில் செய்துள்ளனர். ஆனால், மகளிர் மசோதாவுக்கு மட்டும் தான் இன்னமும் விடிவு காலம் பிறக்கவில்லை.
மகளிர் மசோதாவுக்கு ஆதரவாக, காங்கிரஸ், பா.ஜனதா, கம்யூனிஸ்டு என அனைத்து அரசியல் கட்சிகளின் பெண் தலைவர்களும் ஒன்று சேர்ந்து போராடி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், 'அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு மட்டுமே மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என வறட்டு பிடிவாதம் காட்டுவது அரசியல் நாடகம்' என பெண்கள் அமைப்பினர் கடுமையாக சாடி வருகின்றனர்.
அனைத்து நிலைமைகளையும் ஆராய்ந்து பார்த்தால், அவர்களுடைய கூற்று முற்றிலும் நிதர்சனமாக உண்மை. இந்த அரசியல் நாடகம் முடிந்து, 'கிளைமாக்ஸ்' மகளிர் இட ஒதுக்கீடு மசோதா எப்போது வரும் என்பதே இந்திய பெண்களின் எதிர்பார்ப்பு.
‘மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும்’ என்பார்கள். ஆனால், இந்திய பெண்கள் என்ன பாவம் செய்தனரோ-? ஆண்டாண்டு காலமாக அவர்களுடைய உரிமைப் போராட்டம் முடிவின்றி நீடிக்கிறது.
ஒரு ஆண் கல்வி கற்றால் ஒருவர் மட்டுமே பயனடைவார். ஆனால், ஒரு பெண் கல்வியறிவு பெற்றால் ஒட்டு மொத்த குடும்பம் அல்லது 100 பேர் வரை கல்வியறிவு பெறுவார்கள். கல்விக்கு மட்டுமல்ல அதிகாரத்துக்கும் இது பொருந்தும். இதை அனைவரும் உணர்ந்தால் சமூகத்துக்கு நல்லது.
''''''''''''''''

பாக்ஸ் 1
=====
பெண்களுக்கு எத்தனை தொகுதிகள்?
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அமலுக்கு வந்தால் பாராளுமன்றத்தில் உள்ள 543 இடங்களில் 181 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். அதுபோல, இந்தியா முழுவதும் உள்ள மாநில சட்டசபைகளில் மொத்தம் இருக்கும் 4109 எம்.எல்.ஏ. பதவிகளில் 1370 எம்.எல்.ஏ. பதவிகள் பெண்களுக்கு கிடைக்கும். பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாராளுமன்ற, சட்டசபை தொகுதிகள் அனைத்தும் மூன்று தேர்தல்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
2009&ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 59 பெண்கள் வெற்றி பெற்று எம்.பி.க்களாகி உள்ளனர். அதில், காங்கிரஸ் சார்பாக 23 பேரும், பா.ஜனதா சார்பாக 13 பேரும் வெற்றி பெற்றனர். இது, 11 சதவீதம். அதுபோல, தமிழக சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் 14 பெண்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாகி உள்ளனர். இது, வெறும் 6 சதவீதம். நியமன எம்.எல்.ஏ.வாக நான்சி அனன் என்ற பெண் டாக்டர் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
''''''''''''

பாக்ஸ் 2
=======
எதிர்ப்பாளர்களின் குரல்


மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் ராஷ்டிரிய ஜனதா தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி என அனைவருமே கூறும் ஒரே காரணம், மகளிருக்கான இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதாகும்.
இதில் முலாயம் சிங் மட்டும் சற்று வித்தியாசமான விளக்கத்தை கூறுகிறார். ஏற்கனவே, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்காக 22 சதவீத பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இனி பெண்களுக்கும் 33 சதவீத தொகுதிகளை ஒதுக்கினால் பாராளுமன்றத்தில் 55 சதவீத இடங்கள் இட ஒதுக்கீட்டிலேயே போய் விடும். இது தான் முலாயம் எடுத்து வைக்கும் வாதம்.
அதற்கு பதிலாக 10 சதவீத இடங்களை பாராளுமன்றத்தில் பெண்களுக்கு ஒதுக்கலாம். அரசியல் கட்சிகளே 10 சதவீத இடங்களை கண்டிப்பாக பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம். என்பது போன்ற யோசனைகளையும் அவர் தெரிவிக்கிறார். இது தவிர, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு அரசியல் கட்சியும் 33 சதவீதம் பெண் வேட்பாளர்களை களத்தில் இறக்கலாம் என்ற யோசனையையும் எதிர்ப்பாளர்களில் சிலர் முன் வைக்கின்றனர்.

சுமை தாங்கி


= வை.ரவீந்திரன் 


தெரு முனையை தாண்டி வீட்டிற்குள் ரவி நுழையும் முன்பே, லேசான விசும்பல் ஒலி வரவேற்றது. சந்தேகமே இல்லை. அது, அனுசுயாவின் குரல் தான். கூடவே, அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கும் அகல்யாவின் குரலும் கேட்டது. இந்த முறை என்ன பிரச்சினையோடு வந்திருக்கிறாளோ? யோசனையுடன் வீட்டிற்குள் நுழைந்தான், ரவி.

அனுசுயா, ரவியின் தங்கை. திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் கடந்து விட்டன. ஒரு மாதம் கூட, முழுமையாக கணவன் வீட்டில் இருந்தது இல்லை. ஒவ்வொரு முறை கணவன் வீட்டில் இருந்து வரும்போதும் அவளையும் அவளுடைய கணவன் முரளியையும் சமாதானப்படுத்தி அனுப்புவதே ரவிக்கும் அவனது மனைவி அகல்யாவுக்கும் முழு நேர வேலையாகி விட்டது.

அனுசுயா பிறந்த சில ஆண்டுகளிலேயே பெற்றோரை பறி கொடுத்து விட்டாள். அப்போது, ரவி வளர்ந்து பெரியவனாகி இருந்ததால் அனுசுயாவுக்கு அவனே தாயுமானவனாக மாறினான். அதில் இருந்து ரவியின் உலகம் அனுசுயா. அதுபோல, அனுசுயாவின் உலகம் ரவி. தாய், தந்தையரை சரியாக அறிந்திராத அவளுக்கு அண்ணன் ரவி தான் எல்லாமுமாக இருந்தான். குடும்பப் பொறுப்பை தோளில் சுமந்ததாலேயே, இளமையிலேயே பக்குவமும் முதிர்ச்சியும் ரவிக்கு தானாகவே அமைந்து விட்டன.

தங்கை மீது பாசத்தை கொட்டிய ரவி, அவளை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தான், பட்டப்படிப்பை முடித்த கையோடு அவளுக்கு வரன் பார்க்க தொடங்கிய போது தான் பிரச்சினை முளைத்தது. தன்னோடு கல்லூரியில் படித்த ஒரு மாணவனை காதலிப்பதாக அனுசுயா கூறியபோது ரவி அதிர்ச்சி அடைந்தான். அதுவரை, தனக்கு மட்டுமே சொந்தமாக இருந்த தங்கையின் பாசத்தில் பங்கு கொள்ள வேறொரு நபர் நுழைந்ததை கண்டு சற்றே கலக்கமுற்றான்.

வாழ்க்கை விதியில் பெண்ணும் நெற்கதிரும் ஒரே இனம் தானே! நாற்றங்காலில் வளர்ந்து நிற்கும் நெல் நாற்றுக்களை எடுத்து வயலில் நடுவது போலவே, வீட்டில் வளர்ந்து நிற்கும் இளம் பெண்களும் புகுந்த வீட்டில் வாழ்க்கையை தொடருபவர்கள் தானே!

மனதை ஒரு வழியாக தேற்றிக் கொண்டு தங்கையின் மனதை கவர்ந்த அந்த மாணவ நண்பன் குறித்து விசாரிக்கும் முயற்சியை ரவி தொடங்கினான். அவனுக்கு கிடைத்த தகவல்கள் எதுவும் திருப்திகரமாக இல்லை.

முரளி, அவனது பெயர். சரியான வேலை எதுவும் இல்லாமல் ஊர் சுற்றித் திரிகிறான் என்பது ரவியிடம் சிலர் கூறிய தகவல். அதே நேரத்தில், அவனது குடும்பப் பின்னணியை பற்றி விசாரித்தபோது அந்த அளவுக்கு மோசமாக இருக்கவில்லை.

ஆனாலும், தனது தங்கை அனுசுயாவிடம் பல்வேறு விஷங்களையும் எடுத்துக் கூறினான். காதலுக்குத் தான் கண்கள் கிடையாதே! செம்புலப் பெயல் நீர் போல விழுந்த இடத்தின் தன்மைக்கு ஏற்றாற்போல மாறுவதற்கு பெயர் தானே காதல். இறுதியில் காதல் வென்றது.

தனது சக்திக்கு ஏற்ற வகையில் திருமணத்தை சிறப்பாகவே ரவி செய்து முடித்தான். இந்த இடத்தில் அகல்யா பற்றி கூறுவது மிகவும் முக்கியம். ஏனெனில், சுக துக்கங்களில் முழுமையாக பங்கு பெறும் சக தர்மினியாக அவள் வாய்த்தது ரவி செய்த பூர்வ ஜென்ம புண்ணியம்.

தனது குடும்பத்திலேயே பல்வேறு இக்கட்டான நிலைமைகளை கண் கூடாக பார்த்த அனுபவம் அகல்யாவுக்கு உண்டு. அதனால், ரவியின் நிலைமையை நன்றாகவே புரிந்து வைத்திருந்தாள். ரவியின் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் பக்க பலமாகவே இருந்து வந்தாள். நல்ல தங்காள் கதையில் வரும் அண்ணன் மனைவியை போன்றவள் அல்ல, அவள்.

ஒவ்வொரு முறை தாய்வீட்டுக்கு அனுசுயா வரும்போதும் ‘தாயினும் சாலப் பரிந்து ,,,’ என்பதற்கு ஏற்ப தாயைப் போலவே அவளை அகல்யா பேணிப் பாதுகாத்தாள்.

திருமண சடங்குகளின் போது, மண்டபத்தில் பொய்க் கோபத்துடன் சென்ற மாப்பிள்ளையை ரவி சமாதானப் படுத்தி அழைத்து வந்தான். திருமணச் சடங்குகளில் அதுவும் ஒன்று. ஆனால், அன்றை தினத்தில் இருந்து மாப்பிள்ளையையும் தங்கையையும் சமாதானப்படுத்துவதே ரவியின் முழு நேர வேலையாகிப் போனது தான் சோகம்.

இப்போது கூட ஏதோவொரு பிரச்சினைக்காகவே, அனுசுயாக வீட்டுக்கு வந்திருக்கிறாள் என்பதை ரவி புரிந்து கொண்டான். அனுசுயாவை ஆறுதல் படுத்தும் மனைவி அகல்யாவை நினைத்து மனதுக்குள் பெருமிதம் அடைந்தாலும், இப்போது முளைத்துள்ள பிரச்சினை என்னவாக இருக்கும் என்ற யோசனையே மேலோங்கியது.

இரவு நேர சாப்பாட்டுக்கு பிறகு, அனுசுயாவிடம் மெதுவாக விசாரிக்க ஆரம்பித்தோம். இது போன்ற குடும்ப பிரச்சினைகளை அலசி ஆராய ஏற்ற நேரம் அது தானே? மெல்லிய விசும்பலுடன் பேசத் தொடங்கினாள், ரவியின் அருமைத் தங்கை.

எந்த வேலையும் இல்லாமல் வெட்டியாக சுற்றித் திரிவதே முரளியின் முழு நேரப் பணி. சில வேளைகளில் நண்பர்கள் அளிக்கும் உற்சாக விருந்தில் கலந்து கொள்ளுவதும் உண்டு. கடந்த வாரத்தில் ஒரு நாள் வீட்டில் சமையல் செய்வதற்கு எதுவுமே இல்லை என்பதை அனுசுயா சுட்டிக் காட்டியபோது மெதுவாக வாய்த் தகராறு ஆரம்பித்தது.

முதலில் வாய்த் தகராறாக ஆரம்பித்த அந்த சச்சரவு, சில மணித் துளிகளில் சண்டையாக மாறியது. இறுதியில் கை கலப்பில் முடிந்தது. வீட்டில் இருந்த சில பாத்திரங்களுக்கும் அன்றைய தினம் போதாத வேளையாக அமைந்தது. இந்த சந்தர்ப்பத்தின்போது, அனுசுயாவுக்கு சரமாரியாக அடி விழுந்துள்ளது.

காதலித்து திருமணம் செய்தவர்கள் என்பதால் முரளியின் பெற்றோர் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. புகுந்த வீட்டில் எந்த ஆதரவும் இல்லாமல் தான் அனுசுயா இருந்தாள். அதன் காரணமாக, அண்ணன் வீட்டுக்கு கிளம்பி வந்து விட்டாள். விசும்பலுக்கிடையே தொடங்கிய இந்த சம்பவத்தை அனுசுயா விவரித்து முடிக்கும்போது, கண்ணீரும் கம்பலையுமாக காணப்பட்டாள்.

கண்ணீரும் சோகமும் கலந்ததாக இரவு கழிந்தது. ரவியின் வீட்டுக்கு அது புதியதல்ல, அனுசுயா திருமணத்துக்கு பிறகு, அது சாதாரணமாகி விட்டது. பொழுது விடிந்ததும் முதல் வேலையாக முரளியை தேடி ரவி புறப்பட்டான். நல்ல வேளையாக வீட்டில் இருந்தான். காலை நேரம் அல்லவா?

வழக்கமான சம்பிரதாய விசாரிப்புகளுக்கு பிறகு, முரளியுடன் சமாதானம் பேசத் தொடங்கினான், ரவி. முதலில், மாப்பிள்ளை முறுக்கு காட்டினாலும் இறுதியில் அடக்கமாகவே முரளி பேசினான். இதுவும் வழக்கமாக நடைபெறுவது தான். வேலை வெட்டி இல்லாமல் சுற்றித் திரியும் முரளிக்கு ரவியை விட்டால் ஆளில்லை.

ஒரு வழியாக மைத்துனனை ரவி சமாளித்து விட்டான். தன்னுடனேயே முரளியை அழைத்து வந்தான். ரவியுடன் வீட்டுக்குள் நுழைந்த முரளியை பார்த்ததும் அனுசுயா முகத்தை திருப்பிக் கொண்டாள். தற்போது, இரண்டாவது சமாதானப்படலம் ஆரம்பித்தது.

ஒரு வழியாக அனைத்தும் சுமூகமாக முடிந்து தங்கையையும், மைத்துனரையும் வழி அனுப்பி வைப்பதற்காக அவர்களை அழைத்துக் கொண்டு பஸ் நிலையத்துக்கு ரவி வந்தான். மூவரிடையே நிலவும் ஒரு விதமான இறுக்கத்தை பிரதிபலிப்பதை போலவே, வானமும் இறுக்கமாக மூடிக் கொண்டு இருந்தது.

இறுக்கத்தை சிறிது தளர்த்துவது போல, ‘மாப்ளே! தங்கச்சி சின்ன பொண்ணு. அவள நீங்க கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க. ஆத்திரப்படும்படி நடந்தா கூட கொஞ்சம் அனுசரிச்சுப் போங்க. உங்கள கெஞ்சி கேட்டுக்கறேன்’’ என ரவி பேசினான்.

கடந்த வாரத்தில் ஒரு நாள் சண்டையின்போது, தன்னை கன்னத்தில் அறைந்ததோடு இடுப்பிலும் எட்டி மிதித்ததாக அனுசுயா கூறியது ரவி மனதில் நிழலாடியது.

அப்படியே, அனுசுயா பக்கம் திரும்பி, ‘‘மாப்பிள்ளையின் மனம் கோணாமல் நடந்து கொள்ளம்மா, மாப்பிள்ளை வீட்டில் உள்ளவர்களையும் அனுசரித்துச் செல். எதிர் வாதம் பேசாமல் கொஞ்சம் அமைதியாகவே இரும்மா’’ என அறிவுரை கூறினான்.

ஆனால், மைத்துனன் முகத்தில் வீறாப்பும், மிடுக்கும் நிரவி இருந்தது. பேசிக் கொண்டே, மைத்துனனிடம் சில ரூபாய் நோட்டுகளை ரவி நீட்டியபடி, ‘மாப்ளே, பஸ் செலவுக்கு வச்சுக்கோங்க’ என்றான்.

’வேண்டாம், மச்சான்’ என வாய் கூறிய அதே நேரத்திலும் மிடுக்கு குறையவில்லை. எனினும், சட்டைப் பையில் ரூபாய் நோட்டுகளை ரவி திணித்தான். அந்த சமயத்தில் பஸ் வந்தது.

அனுசுயாவும், மைத்துனரும் ஏறியதும் பஸ் புறப்பட்டது. பஸ் பின்னாலேயே சிறிது தொலைவு ஓடிய ரவி, ’மாப்ளே, தங்கச்சிய பத்திரமா பாத்துக்குங்க, எதாவது பேசினா அவள மன்னிச்சிடுங்க’ ‘தங்கச்சி. பாத்து நடத்துக்கம்மா’

இப்படி கூறியபடியே சென்ற ரவியின் கண்களில் நீர் முட்டிக் கொண்டு இருந்தது. எந்த கணத்திலும் கன்னத்தில் கோடு போட தயாரானது. அப்போது, இறுகிக் கிடந்த வானத்தின் எங்கோ ஒரு மூலையில் பலத்த சப்தத்துடன் இடி இடித்தது. கூடவே, வானில் இருந்து மழைச் சாரல்கள் சீறி வந்தன.

ரவியின் கன்னத்தில் வடியத் தொடங்கிய கண்ணிர், மழை நீரில் கரைந்து போனது. அண்ணன்களின் துயரத்தில் வானமும் பங்கு கொள்கிறதோ?

பயம்

சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்த மதிய வேளை.

தாம்பரம் செல்லும் மின்சார ரெயிலில் ஜன்னல் ஓர இருக்கை கிடைத்தது. ரெயில் புறப்பட்டதும் எதிர் காற்றின் மிதமான வருடலால் சூரியனின் வெம்மை சற்று தணிந்தது போல இருந்தது. பயணத்தின் போது கண்ணயரும் பழக்கத்துக்கு நான் ஆட்படவில்லை.

ரெயில் பெட்டியில் என்னோடு பயணித்த சக பயணிகளை ஒவ்வொருவராக கவனித்தேன். எதிர் வரிசை இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு சிறுவன், என்னை கவர்ந்தான். அவனது தோற்றத்தைப் பார்த்தால் சாதாரண பயணி போல தெரியவில்லை. அவனுடன் யாரும் இல்லை என்றும் உணர்ந்தேன். அவனது கண்களை உற்று நோக்கியபோது பய ரேகைகள் அதில் காணப்பட்டன.

பயம். ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஒளிந்து கிடக்கிறது. உறுப்புகளைப் போலவே, பயமும் ஒரு அங்கமாக உடம்போடு ஒட்டியே இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பயம். பயத்தின் பெயர்கள் மாறலாம். ஆனால், பயம் என்பது பயம் தானே!

சிறு வயதில் நிலாச் சோறு ஊட்டும் போதே, ஒவ்வொருவருக்கும் பயமும் சேர்த்தே ஊட்டப்படுகிறது. சிறுவர்களின் கதைகள் அனைத்துமே பயத்தையே பேசுகின்றன. பயத்தை மையமாக கொண்ட பேய், பிசாசு கதைகளை பகிர்ந்து கொள்வதில் சிறுவர்களுக்கிடையே ஆர்வம் அதிகம். மந்திரவாதி கதைகளும் பயத்துக்கு அடித்தளம் போட்டு வைக்கின்றன. ஹாரிபாட்டர் வரிசை மந்திர கதைகளில் சிறுவர்கள் வசமாகி கிடப்பதில் ஆச்சரியம் இல்லை.

பயத்தை வெல்ல முடியாது. அதை ஏற்றுக் கொள்வதே புத்திசாலித்தனம். ஒரு சில பயங்கள், வயது ஏற ஏற தானாகவே மறைந்து விடும்.

பகல் நேரத்தில் சாதாரணமாக தோன்றும் பூனை கூட, இரவில் பயமுறுத்துகிறது. விளக்கு ஒளியில் மின்னும் நாய், மாடுகளின் கண்களும் பயத்தை உண்டாக்குகின்றன.

இந்த சிறுவனை பார்க்கும்போது வீட்டில் இருந்து ஓடி வந்தவனாக இருக்கலாம் என தெரிகிறது. உலகில் உலவிக் கொண்டு இருக்கும் காணாமல் போன, தொலைந்து போன கூட்டத்தில் இவனும் ஒருவனா?
பயத்தை விட மிகவும் வேதனை தருவது, காணாமல் போவது. இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

சிறு வயதில் நானும் காணாமல் போய் இருக்கிறேன்.

அது ஒரு கோடைக் காலம். 10&ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. நான் எதிர்பார்த்தபடியே இரண்டு பாடங்களில் தோல்வி. ஆனால், வீட்டில் இதை எதிர்பார்க்கவில்லையே? நிச்சயமாக எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.

என்ன செய்யலாம்? தேர்வு முடிவு தெரியும் முன், வீட்டை விட்டு காணாமல் போவதே சிறந்தது என முடிவு செய்தேன். வீட்டின் கெடுபிடிகள், கட்டுப்பாடுகள், ஒழுக்க விதிகள் போன்ற கடுமையான வரையறைகளும் என்னை தொலைந்து போகத் தூண்டின.

தொலைந்து போவதென்றால் தெரிந்தவர்கள் யாரும் இல்லாத கண் காணாத இடத்துக்கு செல்வதே உசிதமானது. கண் காணாத இடத்துக்கு செல்வதாலேயே காணாமல் போவது என்ற பெயர் வந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

என்னை போன்றவர்களுக்காகவே, கெட்டும் பட்டணம் சேர் என சொல்லி வைத்திருப்பார்கள் போல. அவர்களுடைய கூற்றை பொய்யாக்காமல் சென்னை செல்ல தீர்மானித்தேன். கையில் கொஞ்சம் பணத்துடன் சென்னை பயணம் தொடங்கியது.

நள்ளிரவு தாண்டிய நேரத்தில் சென்னையை அடைந்தேன். அப்படியே, கடற்கரை நோக்கி எனது கால்கள் சென்றன. நினைவுகளோ வீட்டை நோக்கி சென்றன.

ஏகாந்தமான நிலையில் இருந்து கடற்கரை போலவே எனது நிலைமை இருந்தது. ஆனால், உள்ளமோ கடல் அலைகள் போல கொந்தளிப்பதும் அடங்குவதுமாக மாறிக் கொண்டிருந்தது.

வீட்டில் என்னை தேடத் தொடங்கி இருப்பார்களா? காலையில் தான் தேடுவார்களா? யாரிடம், எங்கு முதலில் தேடுவார்கள்? எப்படி தேடுவார்கள்? பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் போலவே விடை தெரியாத கேள்விகள் மனதில் கும்மாளமிட்டன. மனக் குழப்பத்தினால் தூக்கம் வரவில்லை.

மறுநாள் காலையில் கடற்கரையும் அதன் அருகில் நீண்டு சென்ற சாலையும் பரபரப்பாகின. சென்னையின் புதிய பரபரப்பை கண்டு மனம் பிரமிப்பில் ஆழ்ந்தது. இந்த ஜனத்திரளுக்குள் மீண்டும் ஒருமுறை காணாமல் போய் விடுவேனோ என்ற பீதியும் சேர்ந்து கொண்டது. கண்ணெதிரே தோன்றும் ஒவ்வொருவரும் பயத்தை ஏற்படுத்துவதாகவே தோன்றியது.

திருவல்லிக்கேணி நோக்கி எனது கால்கள் பயணித்தன. பார்த்தசாரதி பெருமாள் கோவிலின் பிரமாண்டத்தில் மெய் மறந்து நின்றேன்.

அந்த கோவிலுடன் தொடர்புடைய பாரதியார், சுவாமி விவேகானந்தர் நினைவில் வந்து சென்றனர். அவர்களும் கூட, நாடோடியாக உலகை சுற்றித் திரிவதில் விருப்பம் கொண்டவர்கள் தானே. நானும் அவர்களைப் போல் ஆவேனோ? நாடோடியாக சுற்றித் திரிவேனோ? நினைவலைகள் தாலாட்ட கோவில் பிரகாரத்தில் கண்ணயர்ந்தேன்.

பாரதி, விவேகானந்தர் மட்டுமல்ல அம்மா, அப்பா, அண்ணன், அக்காள் என ஒவ்வொருவராக வந்தனர். தூக்கம் கலைந்தது. இரவு நெருங்கியதும் மீண்டும் கடற்கரை பக்கமாக ஒதுங்கினேன்.

எப்போதுமே, உலகம் முழுவதும் காணாமல் போன ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டு இருக்கிறது. காணாமல் போகும் நபர், துறவியாகவோ, ஞானியாகவோ, சமூக விரோதியாகவோ, பித்தனாகவோ, சூதாடியாகவோ அல்லது அதிர்ஷ்டம் இருந்தால் பெரும் பணக்காரனாகவோ மாறலாம். அதுபோன்று நானும் மாறுவேனோ?
சிந்தனைகளின் அலைக்கழிப்பில் தூக்கம் வரவில்லை. இப்படியே இரண்டு நாட்கள் கழிந்தன. மெரினா கடற்கரை, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை என எனது நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன.

அன்று கோடை வெயிலுக்கேற்ற இதமான கடற்காற்று வீசிக் கொண்டிருந்தது. கடற்கரை மணலில் புரண்டு கொண்டிருந்தபோது, அம்மா சமைத்து வைத்த சாம்பார் வாசம் என்னை சுற்றி வருவதை உணர்ந்தேன்.
அம்மிக் கல்லில் விழுதாக மசாலா அரைத்து எனது அம்மா சமைக்கும் கறிக் குழம்பும், கருவாடு குழம்பும் ஊரையே சுண்டி இழுக்கும். சாம்பார் தாளிக்கும் வாசமும் சப்தமும், பசியற்ற வேளையிலும் சங்கீத தாலாட்டும்.

அப்பாவின் பாசம், அண்ணனின் நேசம், அக்காளின் அரவணைப்பு. சிந்தனைகளின் கொந்தளிப்பால் கண்களில் நீர் பெருகி காது மடல்களில் வழிந்தது. குழப்பம் அதிகமான நிலையில், உடனடியாக வீட்டுக்கு செல்ல மனது துடித்தது.

கையிலோ பணம் இல்லை. மீண்டும் ஒரு நாள் சுற்றித் திரிந்த நிலையில், ஊரில் இருந்து வந்த சுற்றுலா பேருந்து ஒன்று மெரினா கடற்கரையில் நிற்பதை கவனித்தேன். யாராவது தெரிந்தவர்கள் இருக்கலாம் என்ற ஆவலினால் அருகே சென்று பார்த்தேன்.

எனது அண்ணனுடன் பள்ளியில் படிக்கும் பாபு என்ற அண்ணனின் தந்தையை கவனித்தேன். எனது உயிர் திரும்பியது போல உணர்ந்தேன். அவரிடம் சென்று, கண்களில் நீர் வழிய எனது நிலைமையை கூறினேன். சுற்றுலா ஏற்பாடு செய்தவருடன் அவர் பேசினார். அந்த பேருந்தில் எனக்கும் ஒரு இடம் அளித்தனர்.

ஐந்து நாட்களுக்கு பிறகு வீடு திரும்பியபோது புதிய இடத்துக்கு வந்தது போல உணர்வு கண நேரம் தோன்றியது. சமையலறையில் அம்மா இருந்தார். எனது கண்களையும் தோற்றத்தையும் பார்த்தே எனது நிலைமையை உணர்ந்திருப்பார் போலும். ஒரு தட்டில் சூடாக சாதமும், சாம்பாரும் போட்டு எடுத்து வைத்தார்.

ஆனால், ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அப்பா, அண்ணன், அக்காள் இப்படி அனைவருமே! வார்த்தைகளை விட மவுனத்துக்கு வலிமை அதிகம் என்பதை உணர்ந்தேன். சொற்களால் திட்டி இருந்தாலோ, கைகளால் அடித்திருந்தாலோ இந்த அளவுக்கு வலி எனக்கு ஏற்பட்டிருக்காது. அவர்களின் மவுனம் ஏற்படுத்திய வலி என்னை உருக்கியது.

அன்று இரவில் அண்ணனும், அக்காளும் வந்து சொன்னார்கள். ஐந்து நாட்களாக வீட்டில் யாருமே தூங்கவில்லையாம். என்னை காணாமல் தவித்ததை பற்றி கூறினார்கள்.

தொலைந்து போவது என்பது தனி நபரின் துயரம் மட்டுமல்ல. அது பலரையும் பாதிக்கும் பெரிய துன்பம். விபத்தை விட பெரிய வலியை ஏற்படுத்துவது, அது.

ஊரை விட்டு தொலைந்து வேறு ஊர்களில் வேறு பெயர்களில் வாழும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் துயரம் மிகுந்தவை. அவர்களின் கடை விழியில் பிரிவின் துயரம் இழையோடிக் கொண்டு இருக்கும்.
இந்த கனத்த நினைவுகளுடன் ரெயிலில் எதிரில் இருந்த சிறுவனுடன் பேசத் தொடங்கினேன்.

ஏனெனில், சாவை விடவும் தொலைந்து போவது என்பது பெருந்துன்பம். சம்பந்தப்பட்டவருக்கு மட்டுமல்ல. அவரை சார்ந்தவர்களுக்கும்!

= வை.ரவீந்திரன் 

Tuesday 12 July 2011

மழையின் பரிமாணங்கள்

மழைத்துளி விழுந்து மண்ணின்
மணம் எழுந்ததால் எழுதினேன்!
ஜலதோஷம் பிடிக்கிறது என்றாலும்
குழந்தைக்கு நனைவதே பிடிக்கிறது

கூரையில் இருந்து வழியும்
மழையில் நனைந்த சுகம்
அடுக்கு மாடி கட்டிடத்தின்
சன்னல்களில் இல்லை

ஒவ்வொரு முதல் மழையிலும்
பாட்டியின் குரல் ஒலிக்கிறது
முதல் மழையில் நனையாதே
உடலுக்கு சுகவீனம் வரும்

இது மழைத்துளி அல்ல
சோர்வு வடுக்களை துடைத்தெறிய
மேகப்பஞ்சு நெய்து அனுப்பிய
மழைத் துணி!

= வை.ரவீந்திரன்