Saturday, June 21, 2014

புதுச்சேரி வீதிகளின் பெயர்களில் வரலாறுபுதுச்சேரி வீதிகளின் பெயர்களில் வரலாறு

ஒவ்வொரு மனிதரையும் அடையாளம் காண்பதில் முகம் எவ்வளவு பங்கு வகிக்கிறதோ, அதே அளவிலான பங்கை முகவரி வகிக்கிறது. முகவரி என்பது சில வேளைகளில் சரித்திர பதிவுகளாகவும் மாறுகின்றன. அதுபோன்ற முகவரிக்கு முதுகு தண்டாக இருப்பது வீதி.

வீதிகளை அடையாளம் காண்பதற்கு பெயர் சூட்டும் வழக்கம் பல நூற்றாண்டுகளாகவே நீடித்து வருகிறது. ஆனால், ஒருமுறை சூட்டப்பட்ட பெயர், நூற்றாண்டு கடந்து இருக்குமா என்பது சந்தேகமே? சென்னை மாநகரில் தமிழ் பெயர்களை சூட்டும் திட்டத்தினால் பல்வேறு வீதிகளின் பெயர்கள் மாற்றம் பெற்று விட்டன. அத்துடன் சாதி பெயர்களையும் நீக்கியதால் பாரம்பரியம் மிக்க வீதிகளும் கூட புதிய பெயரை ஆடையாக போர்த்தி நிற்கின்றன.

ஆனால், சின்னஞ்சிறிய மாநிலமான புதுச்சேரியில் உள்ள சில தெருக்களின் பெயர்கள் நூற்றாண்டுகள் கடந்தும் அப்படியே நீடித்து வருகின்றன. அதில் ஒன்று புஸ்சி வீதி. 

யார் அந்த புஸ்சி?

இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கத்தை நிலை நாட்டுவதில் முக்கிய பங்காற்றிய டூப்ளக்ஸ், புதுச்சேரி கவர்னராக பதவி வகித்தபோது அவருடைய தளபதியாக இருந்தவர் புஸ்சி. 1747 முதல் 1754ம் ஆண்டு வரை டூப்ளக்ஸ் தலைமையில் பிரெஞ்சிந்திய தளபதியாக புஸ்சி இருந்தார். டூப்ளக்ஸ் காலத்துக்கு பின் 1783 முதல் 1785 வரை புதுச்சேரியில் கவர்னராகவும் இருந்துள்ளார்.

புஸ்சியின் வீரத்தினால் புதுச்சேரியில் இருந்து செஞ்சி, வந்தவாசி, தக்காணம் என பிரெஞ்சு எல்லை விரிவடைந்தது.  ‘எனக்கு இன்னும் ஒரு புஸ்சி கிடைத்திருந்தால் கர்நாடகத்தில் ஆங்கிலேயரை வேரறுத்து இருப்பேன்’ என டூப்ளக்ஸ் கூறிய வார்த்தைகளில் இருந்து புஸ்சியின் வீரத்தை அறியலாம். அதே நேரத்தில், புஸ்சி ஒரு மனித நேயர். ‘வெற்றிகளால் கிடைக்கும் விருதுகளை விட மனித உயிர் மிகவும் மதிப்பு மிக்கது’ என்பது புஸ்சி அடிக்கடி கூறும் வார்த்தைகள்.

அவரை பெருமை படுத்தும் வகையில் புதுச்சேரி நகரின் தென்பகுதியில் ஒரு வீதிக்கு அவரது பெயரை பிரெஞ்சியர் சூட்டினர். புதுச்சேரி பஸ் நிலையத்துக்கு கிழக்கு பகுதியில் அந்த வீதி உள்ளது. புஸ்சி வீதியை சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கி புஸ்சி சட்டப்பேரவை தொகுதி ஒன்றும் சமீப காலம் வரை இருந்தது. தொகுதி சீரமைப்பின்போது அந்த தொகுதி மாறி விட்டது. எனினும், புஸ்சி வீதி அப்படியே இருக்கிறது.

பிரான்சில் இருந்து புதுச்சேரிக்கு வந்து காலனி ஆதிக்கத்தில் மின்னல் கீற்றாய் ஒளி வீசிய புஸ்சியின் இறுதி மூச்சு, புதுச்சேரி மண்ணில் தான் 1785ம் ஆண்டு அடங்கியது. கடற்கரையோரம் உள்ள கப்ஸ் கோயிலின் (புனித மேரி தேவாலயம்) தென் பகுதியில் புஸ்சி சமாதி உள்ளது.ஊர் பெயரில் வீதிகள்

ஒரு நகரத்தை நோக்கி செல்லும் சாலையை அந்த நகரின் பெயரால் அழைப்பது வழக்கம். திருச்சி நெடுஞ்சாலை, மதுரை ரோடு இப்படி பெயர்கள் சூட்டப்படுவது உண்டு. ஆனால், புதுச்சேரி நகருக்குள் செஞ்சி சாலை, ஆம்பூர் சாலை என வித்தியாசமான பெயர்களை காணலாம். இதற்கும் பிரெஞ்சியரே காரணம்

ஏற்கனவே கூறியபடி, புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் காலனி ஆதிக்கம் செலுத்த பிரெஞ்சியர் தீவிரம் காட்டி வந்தனர். அந்த சமயத்தில் புதுச்சேரியில் இருந்து 3 திசைகளிலும் அவர்களின் எல்லையை முடிந்த அளவுக்கு விரிவு படுத்தி சென்றனர். அதில் மேற்கு நோக்கிய அவர்களின் பயணத்துக்கு முழுமையான வெற்றி கிடைத்தது.
அதாவது செஞ்சி, ஆம்பூர், ஆற்காடு, வந்தவாசி என தொடங்கி கர்நாடகம் வரை பிரெஞ்சு ஆட்சி எல்லையை விரிவு படுத்தி வந்தனர். ஒவ்வொரு நகரையும் கைப்பற்றும்போது புதுச்சேரியில் வெற்றி கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். அதுபோன்று செஞ்சி மற்றும் ஆம்பூர் நகரங்களை கைப்பற்றிய தருணத்தில் அதை காலம் காலமாக நினைவு கூறும் வகையில் புதுச்சேரி தெருக்களுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இரண்டு நூற்றாண்டை கடந்தும் பிரெஞ்சியர் சூட்டிய பெயர்கள் இன்றும் புதுச்சேரி வீதிகளில் நிலைத்து நிற்கிறது. 

= வை.ரவீந்திரன் 


Monday, June 16, 2014

கடவுளின் பூமி மாகே
மதுவுக்கும் பிரெஞ்சு கலாச்சாரத்துக்கும் பெயர் பெற்ற புதுச்சேரிக்கு மற்ற மாநிலங்களை விட வித்தியாசமான சிறப்பு உண்டு. இதன் 4 பிராந்தியங்களும் வெவ்வேறு இடங்களில்


பிரிந்து கிடக்கின்றன. புதுச்சேரியை தவிர்த்த மற்ற  பிராந்தியங்களான ஏனாம் ஆந்திராவிலும், காரைக்கால் தமிழகத்திலும், மாகே கேரளாவிலும் சிதறிக் கிடக்கிறது.

இதில் மாகே, கடவுளின் பூமி எனப்படும் கேரள மாநிலத்தின் அருகே அரபிக் கடலோரம் முத்துச் சிப்பியாய் கரை ஒதுங்கி கிடக்கும் எழில்மிகு நகரம்.  கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு இடையே குட்டி மல்லிகையாக மணம் பரப்பி நிற்கிறது. பசுஞ்சோலையாக பரவி கிடக்கும் மாகே நகரின் 300 ஆண்டுகளுக்கு முந்தைய பெயர் மய்யழி. மய்யழி ஆற்று கரையோரம் இருந்ததால் அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டது. மய்யழி எப்படி மாகே ஆனது என்பது மிகவும் சுவாரஸ்யம் மிகுந்த கதை. 

இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த வந்த பிரெஞ்சியரை சூரத்தில் இருந்து ஆங்கிலேயர் விரட்டியதால் 1720ம் ஆண்டு மய்யழி வந்து தஞ்சம் புகுந்தனர். அங்கு ஆட்சி செய்த படகரா மன்னர் அனுமதியோடு ஒரு கோட்டையை கட்டினர். ஆனால், ஆங்கிலேயரின் துரத்தல் தொடர்ந்தது. எனவே, பிரெஞ்சியரை காப்பாற்றுவதற்காக பிரான்சில் இருந்து வந்தார், கடற்படை தளபதி பிரான்சுவா மாகே லாபோர்தனே. ஆங்கிலேயரை அடக்கி பிரெஞ்சியர் நிரந்தரமாக தங்க வழி வகுத்து கொடுத்ததால் அவர் பெயரையே அந்த பகுதிக்கு பிரெஞ்சியர் சூட்டினர். இப்படித்தான் மய்யழி, மாகே ஆனது.

மலபார் கடற்கரைக்கே உரித்தான இளமை ததும்பும் அழகுடன் சுற்றுலா தலமாக ஜொலிக்கும் இன்றைய மாகே பகுதியில் கலங்கரை விளக்கம், மீன்பிடி துறைமுகம், தாகூர் பூங்கா என முக்கியமான இடங்களுடன் கோயில், தேவாலயம், மசூதி என ஏராளமான வழிபாட்டு தலங்களும் நம்மை வரவேற்கின்றன. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதுச்சேரி அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

மய்யழி ஆற்றின் கரையோரத்தில் walk way எனப்படும் நடைபாதை அமைக்கும் திட்டம், அதில் ஒன்று. 5 கோடி ரூபாய் செலவில் ஆற்றின் இரு கரைகளிலும் கற்களை பதித்து நடைபாதை அமைத்துள்ளனர். இந்த நடைபாதையில் மாலை நேரத்தில் ஆற்றங்கரையோரம் நடைபயில்வது அலாதியான அனுபவமாக இருக்கும். இது தவிர, மய்யழி ஆற்றில் படகு சவாரி செய்யவும் புதுச்சேரி சுற்றுலா துறை ஏற்பாடு செய்துள்ளது. மாகே பிராந்தியத்தின் தலைமை நிர்வாக அலுவலகம் இயங்கும் கட்டிடம் பிரெஞ்சியர் காலத்தில் கட்டப்பட்டது. அதை புனரமைப்பு செய்து சுற்றிலும் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

அடுத்த முறை கேரள கரையோரம் சென்றால் பிரெஞ்சு, மலையாளம், தமிழ் கலந்து கதம்ப மணம் வீசும் மாகே பகுதியையும் கண்டு வரலாமே? 
••••••••••

ராபர்ட் கிளைவை வென்ற மாகே
==================================

மய்யழியில் ஆங்கிலேயரை ஒடுக்கிய பிறகு புதுச்சேரியில் நிரந்தரமாக தங்கி இருந்து பிரெஞ்சு எல்லையை விரிவு படுத்தும் பணியில் மாகே லாபோர்தனே ஈடுபட்டார். அப்போது நடந்த ஒரு போரில் இந்தியாவில் இன்றளவும் நினைவு கூறப்படும் ஆங்கிலேய தளபதி ராபர்ட் கிளைவ் இவரிடம் தோற்றுப்போய் சரண் அடைந்தார் என்பது ஆச்சரியமூட்டும் தகவல். கிபி 1746ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி சென்னையில் இந்த சரித்திர அதிசயம் நிகழ்ந்தது.

புதுச்சேரியில் இருந்து சின்னஞ்சிறு படையுடன் கடல் மார்க்கமாக வந்து சென்னை நகரை மாகே கைப்பற்றினார். ராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேயப் படை மாகேயிடம் தோற்றுப்போனது. ஆனால், பிரெஞ்சு ஆதிக்கத்தை நிறுவுவதற்கு பதிலாக  ரூ.4 லட்சம் பவுண்டு பெற்றுக் கொண்டு ஒரு மாதத்தில் திரும்பவும் ஆங்கிலேயரிடமே சென்னையை ஒப்படைத்தார், மாகே. இதனால், பின்னாளில் பிரான்சுக்கு அவர் திரும்ப அழைக்கப்பட்டு ராஜ துரோக தண்டனை விதிக்கப்பட்டது.

= வை.ரவீந்திரன் 

Monday, June 9, 2014

ஆச்சரியமூட்டும் ஆயி மண்டபம்


மன்னராட்சி மறைந்து மக்களாட்சி மலர்ந்த பிறகும் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கென தனி அரசு முத்திரைகளை வைத்துள்ளன. முத்திரை என்பது அந்தந்த அரசுகளின் தனித்துவ அடையாளம். அந்த வரிசையில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் புண்ணிய பூமியாம் புதுச்சேரி மாநிலத்தின் அரச முத்திரையாக ஜொலிப்பது, ஆயி மண்டபம்.
புதுச்சேரி கடற்கரையோரத்தில் பாரதி பூங்காவின் நடு நாயகமாக வீற்றிருக்கும் வெள்ளை நிற ஆயி மண்டபத்துக்கு சுமார் 200 ஆண்டு கால நெடிய வரலாறு உண்டு. கிரேக்க ரோமானிய கட்டிடக் கலை கலந்து அழகுற கட்டி எழுப்பப்பட்டுள்ள ஆயி மண்டபம் எதற்காக கட்டப்பட்டது? இந்த மண்டபத்தை கட்டியவர் யார்? என அடுக்கடுக்கான கேள்விகளை பின் தொடர்ந்து சென்றால் ஆச்சரியமான தகவல்கள் நம்மை வரவேற்று விழி விரிய செய்கின்றன.  
இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன் தேவதாசி தொழில் அதிகமாக இருந்தது. அப்போது, கோயிலுக்கென்றே தங்களை அர்ப்பணித்து உழவார பணிகளை செய்பவர்கள், செல்வந்தர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்பவர்கள் எ பல்வேறு பிரிவினர் இருந்தனர். அதுபோன்ற இனத்தில் பிறந்த ஒரு பெண் தான் ஆயி. புதுச்சேரியை அடுத்த முத்தரையர் பாளையத்தில் 16ம் நூற்றாண்டில் மிகப் பெரிய மாளிகையில் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்தவர். அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக தனது மாளிகையை தானே இடித்து தள்ளிவிட்டு குளம் ஒன்றை வெட்டினார். அது தான் ஆயி குளம். புதுச்சேரியை அடுத்த முத்தரையார் பாளையத்தில் இன்றும் கூட ஆயி பெயரிலான அந்த குளத்தை காணலாம்.
ஆயி வாழ்ந்த காலத்தில் புதுச்சேரி எல்லை வரை கிருஷ்ண தேவராயரின் ஆட்சி பரவி இருந்தது. ஒருமுறை முத்தரையர் பாளையம் பகுதிக்கு அவர் நகர்வலம் வந்தபோது ஆயி உடன் மோதல் ஏற்பட்டதாகவும் அதன் விளைவாக ஆயி வாழ்ந்த மாளிகையை இடித்து தள்ளி தரைமட்டமாக்க கிருஷ்ண தேவராயர் உத்தரவிட்டதாகவும் அதனால் மாளிகையை தானே இடித்து தள்ளிவிட்டு அந்த இடத்தில் குளத்தை ஆயி வெட்டியதாகவும் செவி வழி கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன.
17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புதுச்சேரிக்குள் வலுவாக காலூன்றிய பிரெஞ்சியர், கடலோர பகுதியை கைப்பற்றி அங்கேயே நகரை நிர்மாணித்து வசிக்க துவங்கினர். கடலோரம் என்பதால் அவர்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கவில்லை. 1850களில் இந்த பிரச்சினை பெரிதாக எதிரொலிக்க துவங்கியதும் பிரான்சில் ஆட்சி செய்த மூன்றாம் நெப்போலியனிடம் முறையிட்டனர். அப்போதைய புதுச்சேரி கவர்னர் போன்டெம்ப்ஸ் மூலமாக இந்த புகார் சென்றது.
உடனே, தனது தலைமை பொறியாளர் லாமைரெஸ்சே என்பவரை புதுச்சேரிக்கு நெப்போலியன் அனுப்பி வைத்தார். அவரோ, புதுச்சேரியை சுற்றியுள்ள பகுதிகளில் எங்காவது நல்ல குடிநீர் கிடைக்கிறதா என ஆய்வு செய்தார். அப்போது லாமைரெஸ்சே கண்ணில் பட்டது, ஆயி குளம். அங்கிருந்தே நகருக்குள் குடிநீர் கொண்டு வரலாம் என லாமைரெஸ்செ தீர்மானித்தார். அதன்படி, அங்கிருந்து புதுச்சேரி நகருக்கு வாய்க்கால் வெட்டப்பட்டது அந்த வாய்க்கால் வழியாக வந்த நீரை தேக்கி வைத்த இடம் தான் இப்போதைய பாரதி பூங்கா. அங்கிருந்தே நகருக்குள் வசித்த பிரெஞ்சியருக்கு தண்ணீர் விநியோகம் துவங்கியது.
புதுச்சேரியில் பிரெஞ்சியருக்கு தண்ணீர் பிரச்சினை நீங்கிய தகவலையும் லாமைரெஸ்சே பணியையும் பாராட்டி மூன்றாம் நெப்போலியனுக்கு கவர்னர் போன்டெம்ப்ஸ் கடிதம் அனுப்பினார். அதில், லாமைரெஸ்சேயை கவுரவிக்கும் வகையில் நினைவு சின்னம் எழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மூன்றாம் நெப்போலியனோ, முழு விவரத்தையும் கேட்டதோடு புதுச்சேரி அருகிலேயே அருமையான குளம் எப்படி உருவானது என்றும் அதன் பின்னணியையும் விசாரித்தார்.
தாசி குலத்தில் பிறந்தாலும் உயர்ந்த எண்ணத்துடன் இருந்த ஆயி குணம் அவரை கவர்ந்தது. எனவே, அவள் நினைவாகவே ஒரு நினைவு சிக்கம் எழுப்பலாமே என முடிவு செய்தார். அதன் விளைவாக, ‘ஆயி என்ற தாசிப் பெண்ணின் நல்ல மனதை கவுரவிக்கும் வகையில் அவள் நினைவாக ஒரு மண்டபம் எழுப்புங்கள்’ என உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவால் எழுந்ததே ஆயி மண்டபம்.
கிரேக்க-ரோமானிய கட்டடக் கலை அம்சத்துடன் வெள்ளை நிறத்தில் ஜொலிக்கும் அந்த மண்டபம், பிரெஞ்சு மன்னர் மூன்றாம் நெப்போலியன் ஆட்சி செய்த கி.பி.1852-1870 காலத்தில் கட்டப்பட்டது. புதுச்சேரி மக்களின் குடிநீர் தேவைக்காக குளம் வெட்டிய ஆயி என்ற தாசிப் பெண்ணுக்கு  எங்கிருந்தோ வந்த பிரெஞ்சியர் கவுரவம் அளித்த நிலையில், சுதந்திரத்துக்கு பிறகு புதுச்சேரி அரசும் அந்த மண்டபத்தை அரசு சின்னமாக்கி மேலும் பெருமை படுத்தியது. புதுச்சேரி வரும் மக்களை வரவேற்றபடி, இரண்டு நூற்றாண்டுகளாக இளமை மாறாமல் ஜொலிப்புடன் வரவேற்கிறது, ஆயி மண்டபம். 

= வை.ரவீந்திரன்