Friday, February 17, 2017

வெற்றியை நோக்கி ... 22

   
வெற்றிக்கு முன்…
இந்த உலகில் பிறந்த  ஒவ்வொரு மனிதரிடமும், தங்களுக்குள் இருக்கும் ஆற்றலாக அவர்கள் நம்புவதை விட அதிகமான ஆற்றல் குடி கொண்டிருக்கிறது. அதை அவர்கள் அறிவதில்லை. ஒவ்வொருவரும் தன்னை சுய பரிசோதனை செய்து தன்னிடம் உள்ள திறமையை கண்டறிந்து வெற்றிப் பாதை நோக்கி செல்ல வழி காட்டுவதே தன்னம்பிக்கை அறிவுரைகள். அதற்கு பல்வேறு பெயர்களை சூட்டினாலும் அதன் பொருள் ஒன்றுதான். பல ஆயிரம் ஆண்டுகளாகவே மனிதர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த அறிவுரைகள் தொடர்ந்து போதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த அறிவுரைகள் மேலோட்டமாக புரிந்து கொள்ளப்படுகிறதே அன்றி, உள்ளுணர்வுடன் புரிந்து கொள்ளப்படுவதில்லை. உள்ளுணர்வுடன் புரிந்து கொண்டு நடக்கும்போது வெற்றியின் முதல் படிக்கட்டு புலப்படும். 

சாத்தியமே இல்லை என கருதும் ஒன்றை நோக்கி படிப்படியாக முன்னேறி செல்வதே வெற்றிக்கான வழிமுறைகள். மெதுவாகவும் படிப்படியாகவும் முன்னேறாமல் ஏதோ ஒரு மந்திரக் கோலால் ஒருவர் உயர்ந்தபட்ச அதிகாரத்தை அடைந்து விட்டார் என்றால் அவருக்கு மட்டுமல்லாமல் அவரால் அதிகாரம் செலுத்தப்படும் நபர்களுக்கும் அது அழிவையே தேடித் தரும். அதே வேளையில் தனக்குள் ஒளிந்து கிடக்கும் ஆற்றலை மிகச் சரியாக கண்டறிந்து வழி நடத்தாமல் போனாலும் அழிவு நிச்சயம். ஏனெனில், ஒருவரை வெற்றியின் சிகரத்துக்கு கொண்டு செல்வதற்கு அந்த ஆற்றலுக்கு எந்த அளவு வலிமை உண்டோ, அதே அளவுக்கு அவரை அழிக்கவும் அந்த ஆற்றலுக்கு வலிமை உண்டு. அதனால் தான், எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் என்று முன்னோர் கூறி வைத்து இருக்கின்றனர்.

இந்த பூமியில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒதுக்கப்பட்ட அதிகபட்ச நேரம் என்பது மிகவும் சொற்பமானது. தீபத்தை ஏற்றி வைத்து அணைப்பது போன்றது. எனவே, நடுக்காட்டிலோ ஆள் அரவமற்ற பாலைவனத்திலோ செல்லும் அச்சமற்ற பயணி போல எதிர்பார்ப்பு இல்லாமல் பயணிப்பது அவசியம்.  முன்னேற்றம் என்ற கீழ் வானத்தில் புத்திசாலித்தனம் என்னும் கதிரவன் உதித்தால் அறியாமை, சோம்பல், தோல்வி, ஏமாற்றம் என வெற்றிப் பாதைக்கு தடைக்கற்களாக இருக்கும் அனைத்தும் உதிரிகளாகி பொசுங்கி விடும். அதே நேரத்தில், வாழ்க்கையின் எந்தவொரு கணத்திலும் உண்மையான உழைப்பும் நேர்மையும் மட்டுமே வெற்றிப் பாதைக்கு வழி அமைத்து தரும்.
விடா முயற்சி, கற்பனை வளம், தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாடு, உற்சாகம், சகிப்பு தன்மை, ஆளுமை திறன் என வெற்றிப் பாதைக்கு ஏராளமான உந்து சக்தி இருக்கலாம். அதன் கூடவே, அன்பு என்னும் விதையை தூவிச் செல்லுங்கள். அதனால் விளையும் அறுவடை மகத்தானதாக இருக்கும். தோல்வி என்பது வெளியில் இருந்து வருவது அல்ல. உள்ளுக்குள்ளேயே இருந்து வெளிப்படுவதாகும். எனவே, ஒவ்வொரு மனிதரும் தனக்குள் உள்ள வெற்றிக்கான குணங்களில் பலவீனமானது எது என்பதை கண்டுபிடித்து அறிந்து சரி செய்து கொள்வது அவசியம். நம்முடைய பலவீனத்தை விட மிக மோசமான தடை எதுவும் கிடையாது, என்கிறார் ஆங்கில சிந்தனையாளர் எமர்சன்.
மனித மனங்களுக்கு எதிர்மறை உணர்ச்சிகள் அதிகம். பத்தில் ஒரு பங்கு மட்டுமே நேர்மறை எனப்படும் பாசிடிவ் எண்ணங்கள் உள்ளன. எதிர்மறை எண்ணங்களை எண்ணினால் பயம், வெறுப்பு, கோபம், எரிச்சல், பொறாமை, பதற்றம், விரக்தி, படபடப்பு, மன அழுத்தம், தாழ்மை உணர்வு, குற்றவுணர்ச்சி என ஏராளமாக பட்டியலிடலாம். நேர்மறை எண்ணம் என பட்டியலிட்டால் சந்தோஷம், வியப்பு, உற்சாகம் இப்படி மிக குறைவானதாகவே தேறும். இது, சமூகம் கட்டமைத்துள்ள மனித இயல்பு. அதனாலேயே எதிர்மறை எண்ணங்கள் குறித்த செய்திகளையே மனம் அதிகமாக விரும்புகிறது.

இத்தகைய நெருக்கடியில் இருந்து வெளியேறினால் மட்டுமே வெற்றியை நோக்கி செல்ல முடியும். எதிர்மறை எண்ணங்களை வேரறுக்க நேர்மறை எண்ணங்களை வளர்க்க வேண்டும். அதை மனதுக்குள் அடிக்கடி கூறி பார்த்துக் கொள்வதும் அவசியம். ‘ஆல் இஸ் வெல்’, ‘உன்னால் முடியும்’, ‘யெஸ்’ இது போன்ற வார்த்தைகளால் நம்மை நாமே ஊக்கமளித்துக் கொள்ள வேண்டும். இதை நம்முடைய தினசரி உணவு போல தொடருவது அவசியம்.  

மனித வாழ்க்கையில் வெற்றி என்ற சொல்லுக்கு அர்த்தமாக பார்க்கப்படுவது சொகுசான வாழ்க்கை, பணம், பதவி, அதிகாரம் மற்றும் அதற்கு நிகரானவை தான். உண்மையில், நல்ல குணாதிசயங்களே ஒவ்வொரு வெற்றிக்கும் அடிப்படையாக இருக்கிறது. நல்ல குணங்களையும் நேர்மறை எண்ணங்களையும் ஒருவர் வளர்த்துக் கொண்டு இருந்தால் அவரை பற்றிய மற்றவர்களின் கருத்துகள் ஒரு பொருட்டே அல்ல. ஏனெனில், இறுதி வெற்றி அவர்கள் பக்கமே இருக்கும்.

ஆன்மிக பூமியான இந்தியாவின் பழங்கால புராணங்களும் இதிகாசங்களும் அதைத்தான் வெவ்வேறு கதை வடிவங்களில் வலியுறுத்துகின்றன. மகாபாரதத்தில் பாண்டவர்&கவுரவர் மோதல், ராமாயணத்தில் ராம பிரான்&ராவணன் மோதல் என ஒவ்வொன்றும் நல்ல குணங்களை கொண்டவர்களுக்கே இறுதி வெற்றி என்பதை வலியுறுத்துபவையாகவே உள்ளன. அத்தகைய நல்ல குணங்களை அடிப்படையாக கொள்வதோடு வெற்றி பெற தேவையான அனைத்து தகுதிகளையும் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொண்டால் வெற்றி நிச்சயம். அந்த வெற்றியை நோக்கிய பாதையில் நடை போட்டு செல்ல அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

(முற்றும்)

வெற்றியை நோக்கி ... 21

ஆறு மனமே ஆறு    


ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வெற்றி பெறும் எண்ணம் மேலோங்கி இருக்கும். ஆனால், அந்த மனதுக்குள் ஆறு விதமான குணங்கள் நுழைந்து விட்டால் வெற்றி என்பது அதோகதியாகிவிடும். நம் அனைவரையுமே தனது கொடூர முகத்துடன் அந்த குணங்கள் துரத்திக் கொண்டே இருக்கின்றன. அந்த ஆறும் எவை தெரியுமா? சகிப்பு தன்மை இல்லாமை, பேராசை, பழிவாங்கும் உணர்ச்சி, தற்செருக்கு அல்லது தலைக்கனம், பிறர் மீது சந்தேகம், பொறாமை.

இவற்றில் சகிப்பு தன்மை இல்லாத குணமானது உறவுகளையும், நட்புகளையும் அழித்து விடும். வாழ்க்கையில் முன்னேறவும் வெற்றி பெறவும் உறவுகளும் நட்புகளும் தேவை அல்லவா? அப்படி இருக்கும்போது இதுபோன்று நிகழ்ந்தால் துயரம் தான் மிஞ்சும். இது மட்டுமல்ல சண்டை, சச்சரவுகளும் நீடிக்கும். மாறுபட்ட சிந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தால் மட்டுமே சகிப்பு தன்மை வளரும். அதற்கு மிக அதிகமான பயிற்சி தேவை.

பேராசை என்பது தனக்குள் வேலி அமைத்து மற்றவரை வெளியேற்றுவதில் இருந்து தொடங்குகிறது. ஆசையை மனதால் கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது பேராசை உருப்பெறுகிறது. செல்வம், சொத்து, பணம் என அனைத்தையும் பார்த்து அவற்றின் பின்னால் ஓடுவது பேராசையின் குணாதிசயங்கள். பேராசை அளவுக்கு மீறும்போது பழிவாங்கும் உணர்வும் ஆட்கொள்ளத் தொடங்கும்.

பழிவாங்கும் உணர்ச்சி மனதுக்குள் குடியேறத் தொடங்கினால் புகழையும், பெருமையையும் சீர் குலைக்கும். அவ்வளவு ஏன்? வாழ்க்கையையே புரட்டி போட்டு விடும். மிகப்பெரிய சாதனையாளர்களாக இருந்தாலும், வெற்றி பெற்ற மனிதராக இருந்தாலும் பழிவாங்கும் உணர்ச்சியானது அவரைக் குப்புறத் தள்ளி விடும். எனவே, அதை மனதுக்குள் நுழைய விடாமல் பாதுகாப்பது அவசியம். 

அடுத்தவர்களின் திறமை மீது நம்பிக்கை வைப்பதும் ஒரு வகையில் முன்னேற்றத்துக்கான வழியே. அடுத்தவர் மீது நம்பிக்கை இல்லாமல் போனால், உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை குறைந்து போகும். நம்பிக்கை இல்லாமல் எந்த ஒரு மனிதனும் வெற்றியை பெற முடியாது. அடுத்தவர் மீதான நம்பிக்கையின் வலிமையை, ‘கடுகு விதை அளவு விசுவாசம் இருந்தால் மலையை புரட்டலாம்’ என்று பைபிள் கூறுகிறது. நம்பிக்கை ஊட்டுவது என்பது தங்கத்தால் திரி செய்து ஒளியை ஏற்றுவது போன்றதாகும். எனவே, மற்றவர்களிடம் நம்பிக்கையை விதைத்து பலன் பெறுங்கள். 

அதே வேளையில், நம்பிக்கையின்மை என்பது நாளடைவில் சந்தேக குணமாக மாறி விடும். சந்தேகம் எழும்போது தானாகவே மனதுக்குள் செருக்கு தோன்றும். தற்செருக்கு என்ற தலைக்கனம் அதிகரிக்கும்போது, ‘நான்’ என்ற வார்த்தை மிக அதிக அளவில் தோன்றும். அதுபோன்ற நபர்கள், பேசுவதிலும் எழுதுவதிலும் அந்த வார்த்தையே அதிகமாக பயன்படுத்துவார்கள். உங்களை சுற்றிலும் உள்ளவர்களில் ‘நான்’ என்ற வார்த்தையை திரும்ப திரும்ப உச்சரிக்கும் நபர்களை ஆய்வு செய்தால் நிச்சயமாக சந்தேக குணம் உடையவராகவே இருப்பார்.

பயனுள்ள ஒரு வேலையைச் செய்யும் ஒருவன் தன்னைப் பற்றியும் தன்னலம் பற்றியும் முற்றிலுமாக மறந்து விட்டால் அவனை ஒருபோதும் சந்தேகம் நெருங்காது. சந்தேகம், தற்செருக்கு எனப்படும் தலைக்கனம் அல்லது தற்பெருமை உடையவர்களால் வெற்றி என்ற இலக்கை எட்டவே முடியாது. மற்றவர்களை விடுங்கள். நீங்கள் அதுபோன்று இருக்கிறீர்களா? என்பதை முதலில் சரி பார்த்துக் கொள்ளுங்கள். சந்தேகமும், தற்பெருமையும் உங்களை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள்.

சந்தேகத்துக்கு இளைய சகோதரன் பொறாமை. ஆண், பெண் என அனைத்து தரப்பினரிடமும் இந்த குணம் குடி கொண்டிருக்கும். பொறாமைக்கு பல்வேறு வடிவங்கள் உண்டு. அது, பல்வேறு வகைப்படும். வீட்டுக்குள் நுழைந்தால் குடும்பம் சிதறும். பொறாமை நுழைவதே தெரியாது. மனம் அல்லது மூளைக்குள் மெதுவாக பதுங்கி பதுங்கி நுழையும். சரியான சந்தர்ப்பம் கிடைக்கும் போது அது பூதாகரமாக வெளிப்படும். அது மட்டுமல்ல. குடும்ப உறவுகள் மற்றும் தொழில், முன்னேற்றம் என அனைத்தையும் அழித்து விடும்.

அதனால் தான்,
   ‘அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்று
   தீயுழி உய்த்து விடும்’
என்று திருவள்ளுவர் கூறி வைத்துள்ளார்.

அதாவது, பொறாமை என்னும் பாவி குணமானது செல்வத்தை அழித்து விடும். நரகம் என்னும் தீ குழிக்குள் தள்ளி விடும் என்று எச்சரிக்கிறார்.

பொறாமை என்ற குணமானது வளர்ந்து நம்முடைய கழுத்தை நெரிக்கும் முன் அதன் கழுத்தை மிதித்து விட வேண்டும்.

சரி. மேற்சொன்ன இந்த ஆறு வகையான குணங்களை மனதுக்குள் நெருங்க விடாமல் யாரேனும் இருக்கிறீர்களா? இதற்கு நிச்சயமாக ஆம் என்ற பதில் கிடைக்காது. ஆம். என்ற பதிலை நீங்கள் கூறினால் நீங்கள் ஆயிரத்தில் ஒருவர். வெற்றி தேவதை மாலையுடன் உங்களுக்காக காத்திருக்கிறாள் என்று உறுதியாக கூற முடியும்.         


(வெற்றி பயணம் தொடரும்…)

வெற்றியை நோக்கி ... 20

உற்சாக மனநிலை    

உங்கள் தினசரி வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நாளில் காலையில் இருந்தே ஏமாற்றமும் தோல்வியும் தொடர்ந்தால் உங்களுடைய மனநிலை எப்படி இருக்கும்? ‘காலங்காத்தால யாரு முகத்துல முழிச்சோமோ’ என்ற எண்ணம் மெதுவாக மனதுக்குள் துளிர் விடும். பிறர் மீது பழி போடுவதை விடுத்து உங்களுக்குள் உற்றுப் பாருங்கள். காலையில் எழுந்ததும் மனதுக்குள் சோம்பலும், உற்சாகமின்மையும் குடி கொண்டால் அந்த நாள் எப்படி அமையும்?

ஒரு நாளின் தொடக்கத்தில் உற்சாகமான மனநிலை அமைந்தால் தான் அந்த நாளில் வெற்றி முழுமையாகும். ஒரு மனிதனை வெற்றியாளராக மாற்றுவதில் உற்சாகமான மனநிலை முக்கிய பங்கு வகிக்கிறது. மனம் சோர்ந்திருக்கும் சமயத்தில் உற்சாகம் தரும் துள்ளல் இசையை கேட்டால் ஏற்படும் மாற்றத்தை உணர முடியும். எப்போதும் உற்சாகமான மனநிலையில் இருப்பவரையும் தன்னைச் சுற்றி இருப்பவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டு இருப்பவரையும் யாரும் எளிதில் மறக்க மாட்டார்கள்.

விளையாட்டு, வர்த்தகம், கல்வி, சமூகம், அரசியல், திரைப்படம், வர்த்தகம் என ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற்ற நம்பர் ஒன் சாதனையாளர்களை உற்று நோக்கினால் ஒரு ஒற்றுமை புலப்படும். அவர்கள் அனைவருமே சோர்வு என்பதே அறியாமல் தானும் உற்சாகமாக இருந்து தன்னைச் சார்ந்து இருப்பவர்களையும் உற்சாகப்படுத்தும் கலையில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். மிகச் சிறந்த என்டர்டெய்னர்களுக்குத்தான் எப்போதுமே மவுசு.

விற்பனைத் துறைகளில் வெற்றிகரமாக உள்ளவர்களிடம் இத்தகைய உற்சாகம் எந்நாளும், எந்த நேரமும் குடிகொண்டு இருப்பதை காண முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் அவர்களால் அந்த துறையில் ஜொலிக்க முடியாது. உற்சாகமான சூழ்நிலையை அவர்களாகவே ஏற்படுத்திக் கொள்வதையும் காணலாம்.

அதனாலேயே, சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஒவ்வொன்றிலும் இதுபோன்ற விற்பனை பிரதிநிதிகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறிய அளவிலான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். கூட்டத்தில் நிறுவனத்தின் உயர் அதிகாரி அல்லது வெளியில் இருந்து முக்கிய சொற்பொழிவாளர் யாரையாவது அழைத்து வந்து உற்சாகமூட்டும் கருத்துகளை பேசச் செய்வார்கள். மனதுக்குள் சிறிதளவு தொய்வு ஏற்பட்டாலும் வேலையிலும் அதன் விளைவாக நிறுவனத்தின் வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படும்.

வெற்றியை உருவாக்கிக் கொள்ள மிகுந்த செயல்திறன் தேவை. செயல்திறன் மிக்க மனிதனாக இருப்பதற்கு அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்வது மட்டுமே போதுமானதல்ல. அறிந்து கொள்வது, செயல் திறன் இரண்டுமே மிகவும் அவசியம். அறிந்து கொண்டதை செயலாக்கி காட்டுவதற்கு உற்சாகம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

மீனுக்கு தண்ணீர் எவ்வளவு அவசியமோ அதுபோல வெற்றிக்கு உற்சாகம் மிகவும் முக்கியம். மனதுக்குள் உற்சாகம் வடிந்து போவதற்கு முக்கிய காரணமாக இருப்பது எதிர்மறை எண்ணம். அந்த எண்ணம் தோன்றிய மறுகணமே உற்சாகம் காணாமல் போய்விடும். வாய்ப்புகளால் உருவாவது அல்ல. தானாகவே, புறத் தூண்டலால் ஏற்படுவதுதான் உற்சாகம்.

ஒரு பிரபலமான சோப் உற்பத்தி நிறுவனப் பொருட்களின் விற்பனையில் சில நாட்களாக மந்தமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து, மார்க்கெட்டிங் முதுநிலை மேலாளர்களின் கூட்டம் கூட்டப்பட்டது. அதில், பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த முக்கியமான விற்பனைப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் விற்பனை மந்தமானது குறித்து விவாதம் ஆரம்பித்தது. ஆளாளுக்கு ஒரு காரணம் கூறினார்கள். ‘மாற்று நிறுவனத்தின் போட்டி பலமாகி விட்டது’, ‘மக்களின் வாங்கும் திறன் குறைந்து விட்டது’, ‘நம்முடைய உற்பத்தி பொருளுக்கு இன்னும் அதிக விளம்பரம் தேவை’ - இப்படி பல்வேறு யோசனைகள் அந்த கூட்டத்தில் முன் வைக்கப்பட்டன.

உடனே, நிறுவனத்தின் முதலாளி எழுந்து அனைவரையும் அமைதியாக இருக்குமாறு கூறினார். பின்னர், நிறுவனத்தில் கேன்டீன் நடத்துபவரை அழைத்து வந்தார். கூட்டத்தில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கேண்டீன்காரருக்கு இந்த கூட்டத்தில் என்ன வேலை? என நினைத்தனர். ஏற்கெனவே, அந்த நிறுவனம் நட்டத்தில் செல்வதாக வதந்திகள் கிளம்பி இருந்ததால், நம்முடைய முதலாளிக்கு ஏதோ ஆகி விட்டது என்றே அவர்கள் கருதினர்.

சிறிது நேரம் மவுனம் நிலவியது. பின்னர், மெதுவாக முதலாளி பேசத் தொடங்கினார். ‘நம்முடைய நிறுவனத்தில் முன்பு இருந்த கேன்டீன் உரிமையாளர், தகுந்த லாபம் கிடைக்கவில்லை என்று கூறிச் சென்று விட்டார். தற்போது, புதிதாக கேன்டீன் உரிமையை இவர் எடுத்திருக்கிறார். இவருக்கு முந்தைய நபருக்கு வழங்கியது போல இவருக்கு நிறுவனத்தில் இருந்து மானியத் தொகை வழங்குவதில்லை. கேன்டீன் நடத்தும் இடத்துக்கு கூட வாடகை வசூலிக்க தொடங்கியுள்ளோம். ஆனாலும், இவருக்கு அதிக லாபம் கிடைக்கிறது. நகருக்குள்ளும் புதிதாக ஒரு கேன்டீன் திறந்திருக்கிறார். எப்படி? அதற்கு காரணம் என்ன? இப்படி கேள்விகளை எழுப்பிவிட்டு அவரே பதில் கூறத் தொடங்கினார்.

“பழைய கேன்டீன் உரிமையாளர், குறிப்பிட்ட நேர அளவில் மட்டும் தான் திறந்து வைத்திருந்தார். நமது நிறுவனத்தில் தினமும் 10 மணி நேரத்துக்கு மேல் உற்பத்தி நடைபெறுகிறது என்பதும் 16 மணி நேரம் வரை ஊழியர்கள் பணியாற்றுவதும் அனைவருக்கும் தெரியும். இதை சரியாக புரிந்து கொண்டு கேன்டீன் நேரத்தை அதிகப்படுத்தி இருக்கிறார், இந்த புதிய உரிமையாளர். மனதுக்குள் உற்சாகத்தை ஏற்படுத்திக் கொண்டு எந்த சமயத்தில் எந்த பொருள் தேவை என்பதை கணித்துக் கொண்டு செயல்படுகிறார்.

இப்போது, உங்களுடைய பிரச்சினைக்கு வருகிறேன். உங்களுடைய விற்பனைக் குறைவுக்கு நீங்கள் தெரிவித்த காரணங்கள் எதுவுமே பொருத்தமானவை அல்ல.  நமது நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாக பரவும் தகவல்களை நீங்கள் நம்பத் தொடங்கி விட்டீர்கள். அதனால், உங்களுக்குள் உற்சாகம் குன்றி விட்டது. அதுதான் விற்பனை சரிவுக்கு உண்மையான காரணம்.

அந்த எண்ணத்தை முற்றிலுமாக துடைத்து எறியுங்கள். இன்றில் இருந்து தினமும் குறைந்தது 5 ஆர்டர்களாவது பிடிக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் விடாப்பிடியாக இருந்து சாதித்தீர்கள் என்றால் விற்பனை அதிகரிக்கும். நிறுவனத்தின் லாபமும் தானாகவே ஏறு வரிசையில் அமைந்து விடும்”

இப்படி மிக நீளமான உரையை முதலாளி முடித்த மறுகணமே வந்திருந்தவர்களின் மனதுக்குள் உற்சாக ஊற்று சுரக்கத் தொடங்கியது. அதன்பிறகு, அந்த நிறுவனம் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது என்று சொல்லவும் வேண்டுமோ?

ஏற்கெனவே கூறியது போல, உற்சாகம் என்பது புறத்தூண்டல்களால் வருவது. அத்தகைய சூழ்நிலையை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மனதுக்கு பிடித்தமான வேலையில் சேர்ந்து பணியாற்றுவது, எப்போதுமே உற்சாகத்துடன் இருக்கும் மனிதர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது, மற்றவருக்கு உதவி செய்யும் ஆற்றலை வளர்த்துக் கொள்வது, நேர்த்தியான ஆடை அணிவது போன்றவை உற்சாகத்தை தானாகவே வரவழைக்கும் காரணிகளில் சில.

மனதுக்குள் உற்சாக வெள்ளம் கரை புரளத் தொடங்கினால் தானாகவே வெற்றியை நோக்கி அது நம்மை இழுத்துச் செல்லும்.

(வெற்றி பயணம் தொடரும்…)

வெற்றியை நோக்கி ... 19

தேடல் சுகமானது

இந்த உலகத்தில் நாம் பிறந்த காரணம் என்ன? எதற்காக இந்த உலகுக்கு வந்திருக்கிறோம்? எங்கிருந்து நாம் வருகிறோம்? இது போன்ற கேள்விகளை எழுப்பினால் யாருக்குமே பதில் கூற தெரியாது. மனித வாழ்க்கை என்னும் புதிருக்கு பல ஆண்டுகளாக பலரும் விடை தேடி முயன்று பார்த்தும் எதுவும் கிடைக்கவில்லை. நம்மை படைத்த படைப்பாளியான இறைவனும் ஏதோ ஒரு காரணத்துக்காகவே ஒவ்வொருவரையும் படைத்துள்ளார். அதற்காக, அந்த காரணத்தை அவனே நிறைவேற்றி முடித்து வைப்பான் என விட்டு விட முடியுமா? இந்த கேள்விகளை மனதில் சுமந்து கொண்டே பிறப்பில் இருந்து இறப்பு வரை ஏதோ ஒன்றை அடைவதற்காக மனம் துரத்திக் கொண்டே செல்கிறது.
குழந்தைப் பருவத்தில் கையில் உள்ள பொம்மையை விட மற்றொரு குழந்தையின் கையில் இருக்கும் பொம்மை அல்லது கடையில் இருக்கும் பொம்மை அழகாக இருப்பது போல தெரியும். வளர்ந்து இளைஞனான பிறகு நல்ல வசதியும் செழிப்பான பேங்க் பேலன்சும் உள்ளவனை பார்த்து மனம் தடுமாறுகிறது. தெருவில் காய்கனி விற்பவன், அந்த வழியாக காரில் செல்லும் மனிதரை பார்த்து மனம் விசனம் கொள்கிறான். அதே நேரத்தில், அலுவலகத்தில் குளு குளு அறையில் இருக்கும் அந்த மனிதரோ வங்கி கணக்கில் மேலும் சில கோடிகளை எப்படி உயர்த்துவது என ஆர்வமாகிறார். ஏனெனில், ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இந்த சிந்தனை ஒளிந்துள்ளது.

இதை திருப்தியின்மை என்பார்கள், சிலர். ஆனால், அதை அடுத்தகட்ட முயற்சிக்கான தேடல் என்றும் கூறலாம். இக்கரைக்கு அக்கரை பச்சை அல்லது தூரத்து பசுமை கண்ணுக்கு குளிர்ச்சி என்றும் கூட ஒரு சிலர் கூறுவது உண்டு. ஆனால், மகிழ்ச்சி என்பது கைக்கெட்டும் தொலைவில் எப்போதுமே இருந்ததில்லை. சராசரி மாத வருமானம் உள்ள ஒருவனுக்கு திடீரென சம்பள உயர்வு அளிக்கப்பட்டால் உடனே கூடுதல் தொகையை அப்படியே சேமிப்பில் அவன் போடுவதில்லை. கையில் வைத்திருக்கும் சைக்கிளை மாற்றி விட்டு பைக் வாங்கலாமா அல்லது நல்ல வசதியான வீட்டுக்கு செல்லலாமா என சிந்தனை உருவாகும். அந்த சிந்தனையின் அடிப்படையில் தான் தேடல் உருவாகிறது.
ஒருவனுக்கு மிக அழகான வீடு கட்டி சுற்றிலும் தோட்டம் அமைத்துக் கொள்ள ஆசை என்று வைத்துக் கொள்வோம். அதுபோன்ற வீட்டை அவன் கட்டிய பிறகு, மேலும் சில செடிகளை அதில் நட்டு வைக்க ஆசைப்படுவான். பின்னர், அந்த தோட்டத்தை பாதுகாப்பதற்காக சுற்றிலும் வேலி அமைப்பான். அதன்பிறகு, ஒரு கார் வாங்கி அது வந்து செல்ல பாதை அமைப்பான். அந்த காரை நிறுத்துவதற்கு சிறிய ஷெட் அமைப்பான். இப்போது, தோட்டத்தின் நடுவே அவன் கட்டிய வீடு சின்னதாகி விடும். ஏராளமான அறைகளுடன் கூடிய பெரிய பங்களா போன்ற வீட்டில் குடியேற வேண்டும் என்ற ஆசை மெதுவாக அவனுக்குள் குடியேறும். மனித மனதுக்குள் தேடல் குணம் கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து சென்று சொகுசான வாழ்க்கையை நோக்கி பயணிக்கிறது.

ஆனால், கண்ணுக்கு தெரிந்து கைக்கு கிட்டாத வரையிலும் எந்தவொரு பொருளும் அழகு தான். அதை வேறு யாராவது பெற்று விட்டால் அதிசயமாகவே பார்ப்போம். அந்த பொருளின் மதிப்பும் பெரிதாக தெரியும். அதுவே, நம்முடைய கைக்கு கிடைத்து விட்டால் அதன் மீதான ஆர்வம் வடிந்து விடும். தூரத்தில் இருந்து பார்க்கும்போது மலைகளும் மலை முகடுகளும் பசுமையாக மிக அழகுடன் காட்சி அளிக்கும். ஆனால், அருகில் சென்றால் மரம், மண், பாறை என்று சீர் குலைந்து கிடப்பதை காணலாம். தேடல் என்பது இதுபோன்ற முடிவையும் தரலாம். இந்த உலக வாழ்க்கையை துறந்து ஆன்மிக பாதையில் செல்லலாம் என முடிவெடுத்தால் அப்போதும் எந்த வழியை தேர்வு செய்வது என்ற தேடலுடன் கூடிய வினா எழும்பும். 

மனித வாழ்க்கை என்பது தேடல் இருக்கும் வரை தான் ருசிக்கும். அதே நேரத்தில் தேடல் மட்டுமே வாழ்க்கையாகி போய் விடக் கூடாது. அங்கு அதிருப்தியும் மகிழ்ச்சியின்மையும் மேலோங்கி நிற்கும். அதனால் தான், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எதையோ துரத்திச் செல்வது போல மனிதன் ஓடிக் கொண்டு இருக்கிறான். அந்த ஓட்டமானது குழப்பத்துடன் இருந்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்காது. குழப்பத்துடன் கூடிய ஓட்டத்தை விட தெளிவான சிந்தனையுடன் கூடிய நடைபயணமே சிறந்தது. இதன் காரணமாகவே, தன்னம்பிக்கை தொடர்பான வகுப்புகளில் எல்லாம் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சுய சார்புடன் வளர வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். அதற்கு, திருப்தியுடன் கூடிய தேடல் அவசியம்.

(வெற்றி பயணம் தொடரும்…)

வெற்றியை நோக்கி ... 18

தன்னம்பிக்கை

‘சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும்’ - என்பது நம்முடைய முன்னோர் வாக்கு. மிக அழகான ஒரு ஓவியத்தை படைப்பதற்கு முன் அதை தாங்கிக் கொள்ளும் தளம் ஒன்று நிச்சயம் தேவை. அதன்படி பார்த்தால், வாழ்க்கையில் வெற்றி என்னும் மிக அழகான ஓவியத்தை படைப்பதற்கு சுவராக இருப்பது தன்னம்பிக்கை. இது தான், ஒரு மனிதனை வெற்றியாளராக, சாதனை மனிதராக மாற்றுகிறது.

மலையில் பிறந்து கானகத்தில் ஊர்ந்து பாறைகளில் ரணமாகி மக்களால் மாசுபடுத்தப்பட்டு செல்லும் நதியை பாருங்கள். மிகப்பெரிய அருவியாக வீழ்ச்சியை சந்தித்தாலும் மீண்டும் எழுந்து நின்று நதியாக ஓடுகிறது. கடலில் கலக்கும் வரை நதியின் ஓட்டம் நிற்பதில்லை. மேற்பரப்பில் சலசலப்பும் பயங்கர ஓசையும் எழும்பினாலும் நதியின் ஆழமான பகுதியில் நிசப்தமும் அமைதியான ஓட்டமும் நீடித்து இருக்கும். அதுதான், நதி தரும் தன்னம்பிக்கை பாடம். மனிதர்கள் பின்பற்ற வேண்டிய பாடம்.

ஒருவர், தனது ஆழ் மனதுக்குள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் அதுவே வெற்றி என்னும் விருட்சமாக வெளிப்படும். அடி மனதுக்குள் பயம், தோல்வி, தாழ்வு மனப்பான்மை என வளர்ந்து வந்தால் அதுவே பூமராங் போல திரும்பி வெளிப்படும். மனித உடலில் மூன்றாவது கையாக கடவுள் இணைத்திருப்பதே தன்னம்பிக்கை.

‘உங்களுக்கு வெற்றியை தருவது வேறு யாருமல்ல. நீங்கள் மட்டும்தான்’ என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். ஒரே விதமான படிப்பு, பயிற்சி, வேலை திறன் ஆகியவை கொண்டவர்களில் ஒருவர் மட்டும் உயர்ந்த நிலைக்கு செல்வதும் மற்ற பலரும் அவருக்கு கீழே பணிபுரிய நேருவது ஏன்? இந்த சிந்தனை உங்களுக்குள் அடிக்கடி எழுந்திருக்கலாம். அதுபோன்ற சூழ்நிலைகளை நேரிலும் பார்த்திருக்கக் கூடும்.

அவ்வாறு உயர்ந்தவரை நீங்கள் உற்று நோக்கினால் அவருக்கு மற்றவர்களை விட தன்னம்பிக்கை அதாவது தன் மீதான நம்பிக்கை பல மடங்கு அதிகமாக இருப்பதை கண்கூடாக காணலாம். முகபாவனை, நடை,  பேச்சு போன்றவற்றை கவனித்தாலே ஒருவரின் தன்னம்பிக்கையை மிக துல்லியமாக எடை போட்டு விட முடியும். ஒருவரிடம் தன்னம்பிக்கை குடி கொண்டிருந்தால் முகம் மற்றும் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளிலும் அது துளிர் விடுவதை காணலாம்.

பிரபல ஆலிவுட் நடிகர் ஜிம்கேரி நடித்த ‘யெஸ் மேன்’ திரைப்படத்தின் கதை இது. வங்கி ஊழியராக இருக்கும் ஜிம்கேரி வாழ்வில் எதுவுமே ருசிக்கவில்லை. அவரது மனைவி பிரிந்து சென்று விடுவார். எதிர்மறை எண்ணங்களையே மனதுக்குள் வைத்திருப்பதால் பலவித சிரமங்களை எதிர் கொள்ள நேரிடும். வாழ்க்கை சவால்களை சந்திக்க தைரியம் இல்லாத மனிதராக வலம் வருவார், ஜிம்கேரி.

ஒரு நாள், அந்த ஊரில் நடைபெற்ற வெற்றிக்கான வழிகள் பற்றிய ஆலோசனை வகுப்பில் அவர் கலந்து கொள்வார். அங்கு, சில அறிவுரைகள் கூறப்பட்டன. ‘எதிர்மறை எண்ணங்களை மாற்றுங்கள்’, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ‘சரி. செய்கிறேன்’ என்று கூறுங்கள். ‘யெஸ்’ என்ற சொல்லையே எப்போதும் நீங்கள் கூறிப்பாருங்கள். உங்கள் வாழ்க்கையை அந்த சொல் மாற்றிவிடும்.

இந்த அறிவுரைகளைக் கேட்டதும், அதைப் பின்பற்றிப் பார்த்தால் என்ன என்ற சிந்தனை அவருக்குள் தோன்றும். அதை செயல்படுத்த தொடங்கியதுமே ஜிம்கேரி வாழ்க்கையில் நினைத்துப் பார்க்காத மாற்றங்கள் ஒவ்வொன்றாக நிகழத் தொடங்கும். புதிய உறவுகள், நட்புகள், வங்கிப் பணியில் பதவி உயர்வு, புதிய எண்ணங்கள் என வரிசையாக அவரை நாடி வரும். மிகவும் நெருக்கடியான தருணங்களில் கூட அவருடைய மனம் எதிர்மறை எண்ணங்களை கைவிட்டு நேர்மறை எண்ணங்களை உருவாக்கியது. அதனால், தைரியமாக பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி பெற முடிந்தது.

‘யெஸ்’ என்ற ஒற்றை வார்த்தை, ஒருவரின் வாழ்க்கையையே முற்றிலுமாக மாற்றி விடுகிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஏராளமான அபார திறமைகள் புதைந்து கிடக்கின்றன. அவை மிகச் சரியாக மலர்வதில் தான் வெற்றி அடங்கியுள்ளது. மொட்டாக இருக்கும் ஒரு மலர், ஒவ்வொரு இதழாக விரிந்து அதிகபட்சமாக இதழ்களை விரித்து முழுமையான மலராக மாறும். அதுபோல, மனித மனதும் அதிகபட்ச வளர்ச்சியை அடையும் வரை மலருகிறது. அந்த அதிகபட்ச வளர்ச்சி அல்லது எல்லை என்பது அந்தந்த மனிதனின் இயல்பு மற்றும் அதற்கு அந்த மனிதன் எந்த அளவுக்கு வேலை தருகிறான் என்பதை பொருத்தது.

உலகில் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யங்களை அடக்கி ஆளும் அனைத்து மனிதர்களும் அடிப்படையில் தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் தான். நீங்கள் வெற்றி பெற விருப்பம் கொண்டு, வெற்றி பெற இயலாது என கருதினால் நிச்சயமாக வெற்றி பெறப் போவதில்லை. அதே நேரத்தில் வலிமை வாய்ந்த மற்றும் உறுதியானவர்களுக்கு வெற்றி கிட்டும் வரை போராட்டங்கள் ஓய்வதில்லை.

(வெற்றி பயணம் தொடரும்…)

வெற்றியை நோக்கி ... 17

இலக்கு நோக்கிய பயணம்

இந்த உலகில் அனைத்துக்குமே ஒரு இலக்கு உண்டு. வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு சென்றால் கூட, அதுவும் ஒரு இலக்கு தான். வெளியூர் பயணம், இன்ப சுற்றுலா என ஒவ்வொன்றும் ஒரு இலக்கை நோக்கிய நகர்தலாகவே இருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் இருக்கும் இந்த இலக்கு என்ற வார்த்தையானது, ஒட்டு மொத்த மனித வாழ்க்கைக்கும் பொருந்தும். அது, நீங்கள் என்னவாக போகிறீர்கள் என்ற இலக்கு. உலக மனிதர்களில் 90 சதவீதம் பேர், எந்தவித இலக்கையும் நிர்ணயிக்காமல் தான் வாழ்கின்றனர்.

ஒரு மனிதன், தன்னுடைய இலக்கை தேர்வு செய்வதில் இரண்டு வகையான காரணங்கள் குறுக்கீடு செய்யும். ஒன்று, பொருளாதார ரீதியிலானது. மற்றொன்று, உளவியல் ரீதியிலானது. இதில் உளவியல் ரீதியிலான சவால்களை எதிர் கொள்வது மிகவும் முக்கியம். குத்துச் சண்டை போட்டிக்கு தயாராகும் வீரரை நீங்கள் உற்று நோக்கினால் ஒன்று புரியும். தனது உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் வலிமையாக்கும் பயிற்சியை அவர் மேற்கொள்வார். அதுபோல, குதிரையை நாம் கவனித்தால் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான நடை, ஓட்டம் என தனித்தனி பாணியுடன் இருக்கும். பந்தயம், தடை தாண்டுதல், பயணம், வண்டி இழுத்தல் என ஒவ்வொரு பணிக்கும் வேறு வகையான பயிற்சிகள் குதிரைக்கு அளிக்கப்படும்.

இந்த பயிற்சிகள் அனைத்தும் இலக்கை நோக்கிய மனித பயணத்துக்கும் பொருந்தும். இலக்கு, வெற்றி என்றதும் அனைவருடைய நினைவிலும் பணம் மட்டுமே பிரதானமாக வந்து செல்வதை தவிர்க்க முடிவதில்லை. மிகப்பெரிய செல்வந்தராகி விட்டால் போதும், வாழ்க்கையில் வெற்றி அடைந்து விட்டதாக நாம் கருதுகிறோம். அதுவும் ஒரு வகையான வெற்றி என வைத்துக் கொண்டாலும் அனைவருமே செல்வந்தராவது என்பது அரிதான ஒன்று.

பள்ளி பருவத்தில் ஆசிரியர்கள் வழக்கமாக ஒரு கேள்வியை எழுப்புவது உண்டு. ‘வளர்ந்து பெரியவனாக அல்லது பெரியவளாக ஆனதும் என்னவாக ஆசைப்படுகிறாய்?’. இந்த கேள்விக்கு டாக்டர், என்ஜினீயர், வக்கீல் என்ற ரெடிமேடான பதில்கள் எப்போதுமே கைவசமாக மாணவர்கள் வைத்திருப்பார்கள்.

அந்த பருவத்தை தாண்டிய பிறகு, அந்த மாணவன் அல்லது மாணவியிடம் அதே கேள்வியை கேட்டால் அடி மனதில் உள்ள லட்சியத்தை கண்டிப்பாக அடையாளம் காட்டி கூறுவார்கள். அது தான், உண்மையான இலக்கு அல்லது இலட்சியம். அதில் அலட்சியமாக இருப்பது சரியானது அல்ல. அதை அடைவதற்கு தினமும் 5 முறையாவது அதை மனதுக்குள் நினைத்துப் பார்க்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதை பார்க்கும் விதத்தில் எழுதியும் வைத்துக் கொள்ளலாம். மேலும், லட்சியத்தை நோக்கிய பயணத்தை திட்டமிட்டு வகுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

வறுமையில் வாடிய நெப்போலியன், தனக்குள் ஒரு லட்சியத்தை வகுத்து கொண்டதாலேயே பிரான்ஸ் தேசத்தின் சர்வாதிகாரியாக முடிந்தது. இளம் வயதில் செய்தித் தாள்களை வீடு வீடாக போடும் பேப்பர் பாயாக இருந்த எடிசனும், அப்துல் கலாமும் தங்களுக்குள் லட்சியத்தை வகுத்துக் கொண்டதாலேயே பார் போற்றும் விஞ்ஞானியாக ஜொலிக்க முடிந்தது. இலக்கு இல்லாத வாழ்க்கை பயணம் என்பது பழுதான சுக்கானுடன் நடுக்கடலில் அலையும் கப்பலை போன்றது. சுக்கான் சரியாக இல்லாமல் கடலுக்குள் ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் சுற்றி முழு எரிபொருளையும் அந்த கப்பல் இழந்து விடும். உண்மையில் கரைக்கு செல்லும் அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக அந்த கப்பலில் எரிபொருள் இருந்தாலும் சுக்கான் பழுதானதால் அனைத்துமே வீணாகப் போகும்.

இதுபோலவே, பள்ளி படிப்பு முடிந்ததும் அடுத்த இலக்கு என்ன? என்பதில் நோக்கம் இல்லாமல் பல்வேறு விதமான பாதைகளில் மனம் சென்றால் கவனம் சிதறும். இலக்கை வடிவமைக்க முடியாமல் திணற நேரிடும்.  அதன் விளைவு. இலக்கை நோக்கிய பயணத்தில் முழுமையான ஆற்றல் கிடைக்காமல் பலவீனம் ஏற்படும். அதே நேரத்தில், திரும்ப திரும்ப ஒரே வகையிலான பயிற்சியை அளிக்கும்போது இலக்கை நோக்கி நம்முடைய மனம் பயணம் செய்யும். இதற்கு மகாபாரத நிகழ்வு ஒன்றை கூறலாம்.

மகாபாரதம் என்றதும் வில்லாளன் அர்ச்சுனன் தான் முதலில் நினைவுக்கு வருவான். அவனைப் பற்றிய கதைதான் இது.  அர்ச்சுனன் உள்ளிட்ட பாண்டவர்கள் மற்றும் துரியோதனன் உள்ளிட்ட கவுரவர்கள் இளம் வயதினராக இருந்தபோது அவர்கள் அனைவருக்கும் வில்வித்தை கற்று கொடுத்தவர், துரோணாச்சாரியார். வில்வித்தை பயிற்சி முடிந்த ஒரு நாளில் மாணவர்களான கவுரவ, பாண்டவர்களுக்கு வில்வித்தை தேர்வு நடத்த துரோணாச்சாரியார் முடிவு செய்தார். அனைவரையும் ஒரு மாமரத்தின் கீழ் அழைத்து வந்தார். முதலில் துரியோதனனை அழைத்து அந்த மரத்தின் குறிப்பிட்ட கிளையில் தொங்கும் மாம்பழத்தை அம்பு எய்தி வீழ்த்துமாறு கூறினார்.

அதற்கு முன், மாம்பழம் தெரிகிறதா? என துரோணர் கேட்டார். தெரிகிறது என துரியோதனன் பதிலளித்தான். அது மட்டுமல்ல. அவர் அடுத்தடுத்து கேட்ட ஒவ்வோரு கேள்விகளுக்கும், மரம் தெரிகிறது; கிளை தெரிகிறது; மாமரத்தில் பழம் அருகில் உள்ள இலைகள் தெரிகின்றன; என ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளித்துக் கொண்டிருந்தான். இறுதியாக அம்பை எய்துமாறு குரு துரோணர் உத்தரவிட்டார். துரியோதனன் அம்பை எய்தான். ஆனால், துரியோதனன் விட்ட அம்பானது மாம்பழத்தை வீழ்த்தவில்லை. வேறு திசை நோக்கி பயணித்தது.

அடுத்ததாக அர்ச்சுனனை அழைத்தார், துரோணர். துரியோதனனிடம் கேட்ட அதே கேள்விகளை திரும்பவும் அர்ச்சுனனிடமும் கேட்டார். அனைத்து கேள்விகளுக்குமே 'இல்லை’ என்ற பதில் மட்டுமே திரும்பத் திரும்ப அர்ச்சுனனிடம் இருந்து வந்தது. உடனே, ‘உனக்கு என்ன தான் தெரிகிறது?’ என துரோணர் கேள்வி கேட்டபோது, ‘மாம்பழத்தை தாங்கி நிற்கும் காம்பு மட்டும் எனது கண்ணுக்கு தெரிகிறது’ என அர்ச்சுனன் பதிலளித்தான். அம்பை எய்யுமாறு குரு துரோணர் உத்தரவிட, மிகச்சரியாக மாம்பழத்தை வீழ்த்தியது, அர்ச்சுனன் விட்ட அம்பு.

மாம்பழம் வீழ துவங்கியதுமே தன்னுடைய வில்லை தரையில் கீழே போட்டு விட்டு ஓடோடி சென்று மாம்பழம் தரையில் விழாதவாறு தனது மடித் துணியை விரித்து பிடித்தான். பின்பு, அதை தனது குரு துரோணருக்கு காணிக்கையாக அர்ச்சுனன் அளித்தான்.

இது தான் இலக்கை நோக்கிய தெளிவான பயணத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு. தனது இலக்கை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அதே சிந்தையுடன் இருந்ததாலேயே காலத்தை வென்ற வில்லாளனாக அர்ச்சுனன் விளங்குகிறான். எனவே, நம்முடைய இலக்கை மிகச் சரியாக வகுத்து வைத்துக் கொண்டு அதை நோக்கி பயணம் செய்வோம். அதற்கு முன், நம்முடைய இலக்கு நன்மை பயப்பதாகவும் அடுத்தவருக்கு தீங்கிழைக்காததாகவும் இருப்பதையும் உறுதி செய்து கொள்வோம்.

(வெற்றி பயணம் தொடரும்…)

வெற்றியை நோக்கி ... 16


ஒத்திசைவான மனம்

பிரபஞ்ச வெளியில் சூரியன், பூமி, சந்திரன் உள்ளிட்ட கோள்கள் நீந்திக் கொண்டு இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தொலைவுக்குள் நிற்பதாலேயே பூமி என்னும் இந்த உலகம் சாதாரணமாக இயங்கி கொண்டு இருக்கிறது. இந்த ஒத்திசைவு என்பது சிறிது மாறினாலும் நிலைமை தலைகீழாகி விடும்.

திரைப்படம் பார்க்கச் செல்கிறோம். அந்த திரைப்படத்தின் வசன ஒலியும் காட்சியும் தொடர்பற்றோ அல்லது சில வினாடிகள் இடைவெளியிலோ இருந்தால் எப்படி இருக்கும்? உங்களால் எவ்வளவு நேரம் அப்படி பொறுமையாக காண முடியும்? தலையை அசைத்து இனிமையாக கேட்கும் பாடல் வரிகளில் கூட இசையும் வார்த்தைகளும் ஒத்திசைவுடன் இருந்தால் மட்டுமே ரசிக்க முடிகிறது. மனதை கட்டிப்போடும் கதாகாலட்சேபம், பிரார்த்தனை கூட்டம், பிரசங்கம் போன்ற நிகழ்வுகளில் இசையுடன் சேர்ந்து ஒத்திசைவுடன் இருக்கும் வசீகர சொற்பொழிவுகள் தான் மனதை ஈர்க்கும். குடும்பத்திலும் ஒத்திசைவு இல்லாவிட்டால் சிதைந்து விடும்.

இவை அனைத்தும் தனி மனிதனுக்கும் பொருந்தும். மனித உடல் இயங்குவதே ஒத்திசைவு அடிப்படையில் தான். உடலுக்குள் ஏராளமான உள்ளுறுப்புகள் இருக்கின்றன. அவை அனைத்தும் மிகச் சரியான அசைவில் ஒருங்கிணைந்து இயங்காவிட்டால் உடலுக்கு கேடு ஏற்படும். வெளிப்புற நெருக்கடி ஏற்படும்போது உடலும் மனமும் ஒத்திசைவுடன் இல்லாத நிலை உருவாகும். அந்த சமயங்களில் அஜீரணம், பசியின்மை போன்ற கோளாறுகள் ஏற்படுவது உண்டு.

மனித மனம் என்பது குறைந்தபட்சம் 2 வகையில் இருந்து அதிகபட்சமாக 6 வகையில் இயங்கக் கூடியது. இந்த ஆறு வகையான உள் மனதை கட்டுப்படுத்தி இயங்கச் செய்வதே வெற்றிக்கு அடித்தளம். கல்வி என்ற சொல்லின் ஆங்கில வார்த்தை எஜூகேசன் என அனைவருக்கும் தெரியும். ‘எஜூகோ’ என்பது லத்தீன் வார்த்தை. அதில் இருந்து வந்தது தான் எஜூகேசன். எஜூகோ என்றால் உள்ளிருந்து வளர்வது என்று பொருள். ஆம். உள்ளுக்குள் வளர்ந்து வெளிப்படுவதுதான் கல்வி.

உண்மையான கல்வி என்பது அறிவாற்றலை ஒட்டு மொத்தமாக மூளைக்குள் குவித்து வைத்திருப்பது அல்ல. மனதை மிகச் சரியாக ஒருங்கிணைத்து தனது அறிவாற்றலை சரியான வழியில் பயன்படுத்திக் கொண்டு இருப்பதாகும். அதனால் தான் வெளித் தோற்றத்தில் படிப்பறிவற்றவராக இருப்பவர்கள் கூட மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை கட்டி காப்பவராக இருக்கின்றனர். சட்டம், மருத்துவம் அல்லது இதுபோன்ற உயர் கல்வியில் தங்கப்பதக்கம் வென்றவர்களை காட்டிலும் சராசரியாக கல்வி கற்றவர்கள், அந்தந்த துறைகளில் உயர்ந்து நிற்பதை காணலாம். அதற்கு மனமும் மூளையும் ஒரே திசையில் பயணிக்க வேண்டும்.

உலகில் மிகப்பெரிய வெற்றியாளராக, அறிவு மிகுந்தவராக அறியப்படும் அனைவரும் பெரிய அறிவாளிகள் அல்ல. அனைத்தையுமே அறிந்தவர்களும் அல்ல. சராசரி அறிவுக்கும் குறைந்தவர்களாக கூட இருக்கலாம். ஆனால், தாங்கள் அறிந்து வைத்துள்ளவற்றை சரியான சமயத்தில் சரியான முறையில் வெளிப்படுத்துபவர்களாக இருப்பார்கள். தனது அறிவை முழுமையான முறையில் மிகச் சரியாக பயன்படுத்துவதே அவர்களின் வெற்றி ரகசியம். அதற்கு அடிப்படையாக இருப்பது உள் மனதின் சரியான ஒருங்கிணைப்பு.

ஆண்டுதோறும் ஏராளமான இளைஞர்களை பட்டதாரிகளாக்கும் மிகப்பெரிய கல்வி குழுமங்களின் உரிமையாளரான கல்வியாளர் ஒருவருக்கு  பூர்வீக சொத்து ஒன்று கிடைத்தது. மலைப்பாங்கான பகுதியில் இருந்த அந்த இடத்தில் எதுவுமே விளையாது. அந்த நிலத்தால் எந்த உபயோகமும் இல்லை என அவர் கருதினார். அதனால், யாரிடமாவது விற்கலாம் என்ற யோசனையில் இருந்தார். இதற்கிடையே, அந்த வழியாக காரில் சென்ற கல்வியறிவு குறைந்த வர்த்தகர் ஒருவரின் கண்ணில், அந்த இடம் தென்பட்டது.

அவருடைய பார்வையில், மிக அமைதியான இடமாக அது தோன்றியது. மேலும், அங்கிருந்து பார்த்தபோது மலை முகடுகளும் இயற்கை காட்சிகளும் வித்தியாசமாக காட்சி அளித்தன. உடனே, கல்வியாளரை அணுகி அந்த நிலத்தை விலைக்கு தருமாறு கேட்டார். அவரும் மிக மகிழ்ச்சியாக குறைந்த விலைக்கு தனது நிலத்தை அந்த வர்த்தகருக்கு விற்று விட்டார். நிலத்தை வாங்கியவரோ, அந்த வழியாக சென்ற நெடுஞ்சாலை ஓரத்தில் சிறியதாக ஒரு உணவு விடுதி மற்றும் தங்கும் விடுதியை முதலில் கட்டினார். வியாபாரம் மெதுவாக சூடுபிடிக்கத் துவங்கியதும் அந்த இடத்தை முற்றிலும் பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றினார்.

சுற்றிலும் பல கி.மீட்டர் தொலைவுக்கு அங்குள்ள மக்களுக்கு விடுமுறையை கழிக்க பொழுதுபோக்கு பூங்கா போன்ற முக்கிய இடங்களோ, கடல் பரப்போ இல்லை என்பதால் அது பிரபலமடைய தொடங்கியது. அருகில் இருந்த மற்றொரு இடத்தையும் அவர் விலைக்கு வாங்கியதோடு ஆழ்துளை கிணறுகளை அமைத்து பண்ணை மற்றும் பூங்காக்களை அமைத்தார். எதற்குமே உதவாது என கல்வியாளரால் கருதப்பட்ட இடம், இப்போது பச்சைப் பசேலென அருமையான பூங்காவானது. அங்கிருந்த தங்கும் விடுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கி இருந்து விடுமுறையை கழிக்கத் தொடங்கினர்.

இதை பார்த்த அந்த கல்வியாளர், ‘பல ஆண்டுகளாக கல்வி நிலையங்கள் நடத்தி நான் சம்பாதித்ததை ஒரே ஆண்டில் இவர் சம்பாதித்து விட்டாரே?’ என ஆச்சரியமடைந்தார். இத்தனைக்கும் அந்த நிலத்தை வாங்கியவர் பள்ளிப் படிப்பை தாண்டாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரால் அதை எப்படி சாதிக்க முடிந்தது? அதற்கு காரணம், மனமும் மூளையும் ஒரே திசையில் பயணித்தது தான்.

ஒவ்வொருவரும் தனக்குள் இருக்கும் ஆறு வகையான மனதை ஒரே லகானில் பூட்டினால் ஒத்திசைவாக மாற்றினால் அந்த மனக் குதிரையின் வேகமும் வெற்றியும் அலாதியானது. அதைத்தான், அந்த வழிப்போக்கர் நிரூபித்தார். நாமும் அந்த வழிப்போக்கராக மாறினால் வெற்றி நிச்சயம்.

(வெற்றி பயணம் தொடரும்…)