Monday, February 29, 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 9

= வை.ரவீந்திரன்.

தமிழகத்தில் 1962ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு சரிவு ஏற்பட தொடங்கியது. இதை அறிந்த காமராஜர், கட்சியை வளர்ப்பது அவசியம் என அறிந்தார். அதனால், உதயமானது ‘கே பிளான்’. அதாவது, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும். 

அந்த திட்டத்தை அறிவித்ததோடு நிற்காமல், முதல் ஆளாக தனது முதல்வர் பதவியை 1963 காந்தி ஜெயந்தி அன்று ராஜினாமா செய்தார். காமராஜரை பின்பற்றி 6 மத்திய அமைச்சர்களும், 6 மாநில முதல் அமைச்சர்களும் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர். பின்னாளில் பிரதமர் பதவிக்கு வந்த லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.

தமிழகத்தில் முதல்வர் பதவிக்காக 10 ஆண்டுக்கு முன் தன்னை தீவிரமாக எதிர்த்த பக்தவத்சலத்தையே முதல்வர் பதவியில் அமர்த்தினார் காமராஜர். 1963ம் ஆண்டு அக்.2ம் தேதி அன்று காந்தி பிறந்த தினத்தில் முதல்வர் பதவியேற்றார் பக்தவத்சலம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கடைசி முதல்வர் என்ற பெயர் தனக்கு கிடைக்கும் என்று பக்தவத்சலம் அப்போது அறிந்திருக்கவில்லை.  


அவர் பொறுப்பேற்ற பிறகு, தமிழக அரசியல் வரலாறு மெதுவாக மாறத் தொடங்கியது. சட்டசபையில் எதிர்க்கட்சியினரின் மனம் நோகாமல் கருத்து சொல்வதில் பக்தவத்சலம் வல்லவர். ராஜாஜி கூட, அவரை பதிலளிக்குமாறு கூறுவது உண்டு. ஆனால், அவரது அரசின் நிர்வாக குறைபாடு, விலைவாசி உயர்வு, இந்தி திணிப்பு என காங்கிரஸ் கட்சிக்கு போதாத காலம் ஆரம்பமானது.

போராட்ட களங்களில் முன்னிலை, இந்தி எதிர்ப்பு போராட்டம், தனித்துவமான தமிழ் நடை, மேடைச் சொற்பொழிவு என மாணவர்கள் மத்தியிலும் மக்கள் மனதிலும் திமுக விசுவரூபம் எடுக்கத் தொடங்கியது.

(நினைவுகள் சுழலும்)

Friday, February 26, 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 8


= வை.ரவீந்திரன்.

சென்னை மாகாணத்தில் 1962ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக, ‘1961ம் வருடத்திய இரட்டை வாக்குரிமை தொகுதிகள் கலைப்பு சட்டத்தின்’ கீழ் இரட்டை உறுப்பினர் தொகுதிகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டன. அதே நேரத்தில், தலித் மக்களுக்கும், பழங்குடியினருக்கும் அதே பிரதிநிதித்துவம் தொடர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 167ல் இருந்து 205 ஆக உயர்த்தப்பட்டது. அவற்றில் தனி தொகுதிகள் அடையாளம் காட்டப்பட்டன.  

இந்த தேர்தலில் காமராஜர் தலைமையில் ஆளும் காங்கிரஸ் கட்சி தனியாக களம் இறங்கியது. இந்த தேர்தலிலும் காமராஜரை ஆதரித்து பெரியார் பிரச்சாரம் செய்தார். காமராஜரை தனது வாரிசு என்றும் அறிவித்தார்.

மற்றொரு புறம், திமுகவில் சர்வாதிகாரம் மேலோங்குவதாக கூறி கட்சியில் இருந்து ஈவிகே சம்பத் பிரிந்து சென்றார். அவர் தொடங்கிய தமிழ் தேசிய கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்டுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதே நேரத்தில் அண்ணா தலைமையில் இரண்டாவது தேர்தலை திமுக சந்திக்க தயாரானது. இந்த தேர்தலில் அரசியல் கட்சி அங்கீகாரத்தை பெற்றதோடு கட்சிக்கு நிரந்தர சின்னமாக உதயசூரியன் சின்னத்தையும் திமுக பெற்றிருந்தது. 1957ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களில் பெரும்பாலானோர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர்கள் என்பதாலேயே அந்த சின்னத்தை திமுக விரும்பி தேர்வு செய்தது.

10 ஆண்டுகளுக்கு முன் 1952ம் ஆண்டு குலக்கல்வி திட்டத்தை அறிமுகம் செய்ததோடு திமுகவை ஜென்ம விரோதியாக கருதிய ராஜாஜி, தனது சுதந்திரா கட்சியை இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டார். அந்த சமயத்தில் காங்கிரஸை தமிழகத்தில் அழித்து ஒழிக்க எந்த எல்லைக்கும் போக தயாராக இருந்த ராஜாஜி, ‘‘தங்களை வகுப்புவாத கட்சி என வெளிப்படையாக கூறிக் கொள்ளும் கட்சிகளை விட மிக அதிகமான அளவில் வகுப்புவாத கொள்கைகளை கொண்ட கட்சி காங்கிரஸ்’ என கடுமையாக விமர்சித்தார்.  திரையுலக பிரபலங்கள் நிறைந்த கட்சியாக திமுக இருந்தது. திரைப்படங்களில் திமுக கொள்கைகளை பிரபலப்படுத்தியதோடு கட்சி மேடைகளிலும் உரையாற்றி வந்த புரட்சி தலைவர் எம்ஜிஆர், லட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர் போன்றோர் திமுகவுக்காக தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்தனர். தேனி தொகுதியில் திமுக வேட்பாளராக எஸ்எஸ்ஆர் போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போது காங்கிரஸ் கட்சியில் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ளாமல் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தனது ஆதரவை ஈவிகே சம்பத் கட்சிக்கு அளித்தார். 


 
1962ம் ஆண்டு நடைபெற்ற 3வது சட்டப்பேரவை தேர்தல் முடிவில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியே மீண்டும் வெற்றி பெற்றது. தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைத்தார் காமராஜர். எனினும், முந்தைய தேர்தலை விட 12 இடங்கள் குறைவாக 139 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றியது. மேலும்,  1962ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி பெற்ற இந்த வெற்றிதான், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த இறுதி வெற்றி. அதன்பிறகு 55 ஆண்டுகளாகியும் மீண்டும் தமிழக அரியணையை காங்கிரஸ் கைப்பற்றவில்லை.

முந்தைய 1957ம் ஆண்டு தேர்தலில் 13 இடங்களை பெற்றிருந்த திமுக, 1962ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 50 இடங்களில் வென்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஆனால், கட்சித் தலைவரான அண்ணா, தனது சொந்த தொகுதியான காஞ்சிபுரத்தில் தோல்வி அடைந்தார். எதிர்க்கட்சி தலைவராக நாவலர் நெடுஞ்செழியன் பொறுப்பேற்றார். எதிர்க்கட்சி துணைத் தலைவரானார் கலைஞர் கருணாநிதி.

(நினைவுகள் சுழலும்...)

Thursday, February 25, 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 7

= வை.ரவீந்திரன். 

ஒரு சின்னதாக ‘கோட்டை’யை பற்றிய ரீவைண்ட் பிளஸ் அலசல். தமிழகத்தில் உள்ள எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் ‘கோட்டை’யை பிடிப்பது தான் கனவாக இருக்கும். அந்த அளவுக்கு தமிழக ஆட்சி நிர்வாகத்துடன் இரண்டற கலந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டைக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. அது தனிக்கதை. ஆனால், ஆரம்ப காலங்களில் புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக சட்டப்பேரவை (சென்னை மாகாணம்) கூட்டம் நடைபெற்றது இல்லை.
1935ம் ஆண்டில் இரண்டு அவைகளைக் கொண்ட சட்டப்பேரவையாக சென்னை மாகாணத்தில் அமைவதற்கு முன்பு, 1920ல் மேலவை மட்டும் கொண்ட சென்னை மாகாண சட்டப்பேரவையை ஆங்கிலேயர்கள் அமைத்திருந்தனர். அதன் முதல் கூட்டம் 1921ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி அன்று புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கவுன்சிலர் அறைகளில் நடைபெற்றது. 1937 வரை இங்கு தான் கூட்டங்கள் நடைபெற்றன.

1935ம் ஆண்டில் இரண்டு அவைகளைக் கொண்ட சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது.
இதனால், 1937 முதல் 1938 வரை சென்னை சேப்பாக்கத்தில் சென்னை பல்கலைக் கழகத்தில் உள்ள செனட் இல்லம், 1938 முதல் 1939 வரை அரசினர் தோட்டத்தில் (கலைஞர் ஆட்சியில் கட்டிய புதிய சட்டசபை வளாகம் என்னும் பல்நோக்கு மருத்துவமனை) உள்ள ராஜாஜி மண்டபம் ஆகியவற்றில் சட்டப்பேரவை கூட்டங்கள் நடத்தப்பட்டது. அதன்பிறகு, 1946ல் புனித ஜார்ஜ் கோட்டைக்கே சட்டப்பேரவை திரும்பியது.

ஆனால், சுதந்திர இந்தியாவின் முதல் சட்டப்பேரவையில் 375 பேர் தேர்வு செய்யப்பட்டதால் இடப்பற்றாக்குறை காரணமாக, 1952ம் ஆண்டு முதல் அரசினர் தோட்டத்தினுள் உள்ள கலைவாணர் அரங்கத்தில் (வாலாஜா சாலையில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம்) சட்டப்பேரவை கூடியது. 1956ம் ஆண்டு வரை சென்னை மாகாணத்தின் முதலாவது சட்டப்பேரவை கூட்டம் அனைத்தும் கலைவாணர் அரங்கில் தான் நடைபெற்றது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, கேரளா, ஆந்திரா, கர்நாகடக மாநிலங்கள் பிரிந்து சென்னை மாகாண உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்தது. இதனால், 1957ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு சென்னை மாகாண (தமிழக) சட்டப்பேரவை திரும்பியது. மேலும், கூட்டம் நடத்துவதற்காக சட்டமன்ற கூடம் அமைக்கப்பட்டது. தற்போது, கூட்டம் நடைபெறும் இடம் தான் அது. இந்த அரங்கில் தான், 1957ம் ஆண்டு இரண்டாவது சட்டப்பேரவை முதல் தொடர்ச்சியாக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வருகிறது. 

இந்த கால இடைவெளிக்குள், 1959ம் ஆண்டில் ஒரு மாதம் ஊட்டி அரண்மனையில் சட்டப்பேரவை கூடியது. அதுபோல, 2006ம் ஆண்டு பொறுப்புக்கு வந்த திமுக ஆட்சியின்போது அரசினர் தோட்டத்தில் புதிதாக கட்டிய சட்டப்பேரவை கட்டிடத்தில் (இப்போது பல்நோக்கு பொது மருத்துவமனை) 2010 மார்ச் முதல் 2011 மே வரை தமிழக சட்டப்பேரவை நடைபெற்றது என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய தகவல்.  

(நினைவுகள் சுழலும்...)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 6

= வை.ரவீந்திரன். 

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு முற்றிலுமாக தமிழக பகுதிகளை மட்டுமே கொண்டதாக அமைந்த சென்னை மாகாணத்துக்கு முதன் முறையாக நடந்த தேர்தலாக 1957 சட்டப்பேரவை தேர்தலை கூறலாம். மொத்தம் 167 தொகுதிகள். அதில் இரட்டை உறுப்பினர் தொகுதிகள் 38 (தலித் 37, பழங்குடி 1). இதை சேர்த்தால் மொத்தம் 205 எம்எல்ஏக்களை தேர்வு செய்ய வேண்டும். ஒரு நியமன எம்எல்ஏ பதவியும் உண்டு.

இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்குள் காமராஜரால் தோற்கடிக்கப்பட்ட ராஜாஜி, அந்த கட்சியில் இருந்து வெளியேறி, ‘இந்திய தேசிய ஜனநாயக காங்கிரஸ்’ என்ற தனிக்கட்சி தொடங்கி போட்டியிட்டார். இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக், சோசிலிஸ்ட் கட்சி, பிரஜா சோசலிஸ்ட் போன்றவையும் இந்த தேர்தலில் களத்தில் நின்றன.

ராஜாஜி கட்சியும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தலைமையிலான பார்வர்டு பிளாக் கட்சியும் கூட்டணி அமைத்து 59 தொகுதிகளில் போட்டியிட்டன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தாமல் வெளிப்படையான ஆதரவை இந்த கூட்டணி அளித்தது.இந்த கட்சிகளுக்கு இடையே புது வரவாக ஒரு கட்சியும் இந்த தேர்தலை சந்தித்தது. அது திமுக. தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை தொடங்கி வைத்த அண்ணா தலைமையிலான திமுகவுக்கு இதுவே முதல் தேர்தல். கட்சி ஆரம்பித்து சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் களத்தில் இறங்கியது. 1956ம் ஆண்டு திருச்சி மாநாட்டில் எடுத்த முடிவின்படி தேர்தலில் குதித்த திமுகவுக்கு அரசியல் கட்சி அங்கீகாரம் இல்லை.

சுயேச்சை சின்னத்தை தேர்வு செய்யும் கட்டாயம் நேரிட்டதால், ‘உதய சூரியன்’ சின்னத்தை திமுக வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். ஆனால், திமுக நிறுத்திய 117 வேட்பாளர்களில் பலருக்கு உதய சூரியன் சின்னம் கிடைக்கவில்லை. காஞ்சியில் அண்ணாவும், சேலம் தொகுதியில் நெடுஞ்செழியனும் சேவல் சின்னத்தில் தான் போட்டியிட்டனர். ஆனால், குளித்தலையில் கலைஞருக்கு உதயசூரியன் சின்னம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.அந்த தேர்தலில் முதல்வர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி மீண்டும் வென்று ஆட்சி அமைக்க வேண்டும் என பெரியார் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். திமுக தலைவர்களை ‘கண்ணீர் துளிகள்’ என்றே வருணித்த பெரியார், ‘கல்வி, வேலை என தமிழனுக்கு உயர்வை தந்த காமராஜரை ஆட்சியில் இருந்து அகற்ற திமுக கருதுகிறது’ என்று பிரச்சாரம் செய்தார்.

தேர்தல் முடிவில் 151 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. தொடர்ந்து 2வது முறையாக முதல்வரானார், காமராஜர். அவரது அமைச்சரவையில் அவர் தவிர 7 அமைச்சர்கள் மட்டுமே.

இந்த தேர்தலில் சுயேச்சையாக களம் இறங்கிய திமுக 13 இடங்களை பெற்றது. ராஜாஜி கட்சிக்கும் 13 இடங்கள் கிடைத்தன. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்து யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. ஆனால், கட்சி அங்கீகாரம் இல்லாததால் திமுகவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், ராஜாஜி கட்சிக்கு சுயேச்சைகள் சிலர் தாவியதால் எதிர்க்கட்சி அந்தஸ்து அவரது கட்சிக்கு கிடைத்தது.

காஞ்சிபுரத்தில் இருந்து அண்ணா, குளித்தலையில் இருந்து கருணாநிதி, எழும்பூரில் இருந்து அன்பழகன், ஆயிரம் விளக்கில் இருந்து ஆசைத்தம்பி என திமுகவின் பெரிய தலைவர்கள் முதன் முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தனர்.

(நினைவுகள் சுழலும்)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 5

= வை.ரவீந்திரன். 

சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையில் சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவை பதவியேற்ற பிறகு ஆந்திர மாநிலத்தில் இருந்து தனி மாநில கோரிக்கை வலிமையாக எழுந்தது. இந்த கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமுலு மரணம், ராஜாஜி அமல்படுத்திய குலக்கல்வி திட்டம் என சிக்கல்கள் தொடர்ந்தன. இதற்கிடையே, மொழிவாரி மாநிலமாக சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா பிரிக்கப்பட்டது.

மொத்தம் உள்ள 375 உறுப்பினர்களில் 140 பேர் ஆந்திராவுக்கும் 4 பேர் (பெல்லாரி மாவட்டம்) மைசூருக்கும் சென்றதால், தமிழகத்தை உள்ளடக்கிய சென்னை மாகாண சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 231 ஆக குறைந்தது. பின்னாளில் மலபார் பகுதி கேரளாவுடன் இணைந்ததால் 190 என சுருங்கியது. இப்படி ஒரு சூழ்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் காமராஜரின் செல்வாக்கு வளர்ந்தது.
 
குறிப்பாக, ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் பிராமணர், பிராமணர் அல்லாதோர் என்ற பிளவு காங்கிரஸ் கட்சிக்குள் அதிகரித்தது. பக்தவத்சலம், சி.சுப்பிரமணியன் போன்ற தலைவர்கள் எதிர்ப்பையும் மீறி காமராஜர், பெருந்தலைவரானார். வேறு வழியே இல்லாத நிலைமையில், உடல்நிலை காரணமாக முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக ராஜாஜி அறிவித்தார். எனினும், தனக்கு பிறகு சி.சுப்ரமணியம் முதல்வராக ஆதரவு தெரிவித்தார்.

ஆனால், கட்சி எம்எல்ஏக்கள் மத்தியில் நடந்த வாக்கெடுப்பில் ராஜாஜி ஆதரவு பெற்ற சுப்ரமணியம் தோல்வி அடைந்தார். காமராஜர் வென்றார் 1954 மார்ச் 31ம் தேதி அன்று காங்கிரஸ் எம்எல்ஏக்களால் முதல்வராக தேர்வானார் காமராஜர். பின்னர், ஏப்ரல் 13ம் தேதி பதவியேற்றார்.தனது எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டு, அப்போது காலியாக இருந்த குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று சட்டப்பேரவைக்குள் காமராஜர் அடியெடுத்து வைத்தார். 1954ல் காமராஜர் அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 7. அப்போது, சுயமரியாதை இயக்கத்தினரும் கூட காமராஜரை கொண்டாடினர். ‘குணாளா, குலக் கொழுந்தே’ என காமராஜரை பெருமையுடன் அண்ணா அழைத்ததும் இந்த காலகட்டத்தில் தான். திமுகவின் ஆரம்ப காலம் அது.   

1952 முதல் 1957 வரையிலான முதலாவது சட்டப்பேரவை கால கட்டத்துக்குள் சென்னை மாகாணத்தில் இருந்து கிட்டத்தட்ட ஆந்திரா, கேரளா, கர்நாடக பகுதிகள் பிரிந்து சென்று விட்டன. அதே நேரத்தில், மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பு காரணமாக கேரளாவில் இருந்த தமிழ் பேசும் பகுதிகளான கன்னியாகுமரி, செங்கோட்டை போன்றவை தமிழகத்துடன் இணைந்தன.

அதனால், பாராளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகள் புதிய மறு வரையறை உத்தரவு‘ 1956-ன் கீழ் தமிழக பகுதிகளை மட்டுமே கொண்டதாக சென்னை மாகாணம் மாறியது. அதன், சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 205 என வரையறுக்கப்பட்டது. இந்த எண்ணிக்கையிலேயே 1957ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை நோக்கி தமிழகம் சென்றது.

(நினைவுகள் சுழலும்...)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 4

= வை.ரவீந்திரன். 

இந்தியாவில் 21 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்குரிமை பெற்ற முதலாவது தேர்தல் 1952ம் ஆண்டு தேர்தல் தான். அந்த தேர்தல் முடிவில், சென்னை மாகாணத்தில் ஆட்சி அமைக்க கம்யூனிஸ்ட் கட்சியினர் உரிமை கோரினர். உடனே, ராஜாஜியை அனுப்பி காங்கிரஸ் ஆட்சிக்கு வழி ஏற்படுத்த காங்கிரஸ் தலைமை தீர்மானித்தது. அந்த திட்டத்தை எதிர்த்த காமராஜர், ‘கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஐக்கிய ஜனநாயக கூட்டணியை ஆட்சி அமைக்க விடுவோம். அதுதான் ஜனநாயகம். பல கட்சிகள் அடங்கிய அந்த கூட்டணி அரசு விரைவிலேயே கவிழ்ந்து விடும்’ என்று அறிவுறுத்தினார். 

அதை காங்கிரஸ் மேலிடம் ஏற்கவில்லை. காங்கிரஸ்காரரான ஆளுநர் பிரகாசாவும் அதை விரும்பவில்லை. ராஜாஜியை மேலவை நியமன எம்எல்ஏவாக நியமித்து,, அவரை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் பிரகாசா அழைத்தார். அமைச்சரவை சிபாரிசின் படியே நியமன எம்எல்ஏ நியமிக்கப்பட வேண்டும். ஆனால், அந்த விதிகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டார் ஆளுநர் பிரகாசா.இதற்கிடையே, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், சுயேச்சைகள் பேரம் பேசப்பட்டனர். பேரம் கூடி வந்தது. 1939ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியின்போது ஆளுநரிடம் அதிகாரம் குவிந்திருப்பதாக கூறி ஆட்சியில் இருந்து வெளியேறிய அதே காங்கிரஸ், 1952ம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் ஆளுநரின் அபரிமிதமான அதிகாரத்தின் ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்தது. 
 
இதையடுத்து, நடந்த சபாநாயகர் தேர்தலில் காங்கிரசை சேர்ந்த சிவசண்முகம் பிள்ளை, 206 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். பின்னர், ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அந்த வகையில், சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்திய பெருமையை சென்னை மாகாண சட்டப்பேரவை பெற்றது. 1952 ஜூலை 3ம் தேதி நடந்த அந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 200 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ராஜாஜி அமைச்சரவை வெற்றி பெற்றது. ஆட்சியை எதிர்த்து 150 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். ஒரு வழியாக பல்வேறு சதுரங்க வேட்டைகளுக்கு பிறகு, சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. காமன்வீல் கட்சி, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவு, 15 சுயேச்சைகள் காங்கிரசில் சேர்ந்தது, கிரிசிகார் கட்சியை உடைத்தது என பல்வேறு கோல்மால்களுடன் காங்கிரஸ் ஆட்சி சாத்தியமானது. அப்போது, கட்சித் தாவல் தடைச்சட்டம் இல்லாதது வசதியாக இருந்தது.

இப்படியாக, முதல்வர் பொறுப்புக்கு வந்த ராஜாஜி அமைச்சரவையில் 14 பேர் அமைச்சர்களாகினர். ஆனால், இவ்வளவு களேபரங்களுக்கு இடையே அமைந்த ராஜாஜி ஆட்சி, ஓராண்டு காலம் மட்டுமே நீடித்தது. பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்து எம்பியாக வெற்றி பெற்றிருந்த காமராஜர், சென்னை மாகாண முதல்வரானார். அது எப்படி சாத்தியமானது ...?

(நினைவுகள் சுழலும் ...)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 3

= வை.ரவீந்திரன். 

இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, 1950ம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி சென்னை மாகாணத்தில் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 375. அதில், 66 இரட்டை உறுப்பினர் தொகுதிகள். தற்போது, தனித் தொகுதிகள் போன்று தலித், பழங்குடி இனத்தவருக்காக அப்போது அதிகமான வாக்குகள் உள்ள தொகுதிகளில் இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்வது வழக்கம். அதன்படி, 66 இரட்டை உறுப்பினர்களில் 62 தலித், 4 பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டது. அந்த கணக்குப்படி பார்த்தால் தொகுதிகள் 306. ஆனால், தேர்வாகும் உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) எண்ணிக்கை 375.

ஆங்கிலேய ஆட்சியில் இருந்தது போலவே, சென்னை மாகாண எல்லைக்குள் தமிழக பகுதிகள் மட்டுமன்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளும் உள்ளடங்கி இருந்தன. இதுபோன்ற சூழலில், 1952ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் கட்சி, கிஷான் மஸ்தூர் கட்சி, பி.டி.ராஜன் தலைமையிலான நீதிக்கட்சி, காமன்வீல் கட்சி என பல்வேறு கட்சிகள் களமிறங்கின. இந்த தேர்தலில் சென்னை மாகாணம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு பரவலாக கடும் எதிர்ப்பு இருந்தது.

எனினும், சென்னை மாகாணம் முழுவதும் பரவலாக 367 வேட்பாளர்களை நிறுத்திய ஒரே கட்சி காங்கிரஸ்தான். கம்யூனிஸ்ட் 131 இடங்களிலும் சோசலிஸ்ட் கட்சி 163 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தின. மற்றவை எல்லாம் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் என அந்தந்த பிராந்தியங்களில் செல்வாக்கு பெற்ற பிராந்திய கட்சிகள். ஆனாலும், சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலே காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.

1952ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் முடிவில் காங்கிரஸ் கட்சிக்கு 152 இடங்களே கிடைத்தன. ஆட்சி அமைக்க 188 உறுப்பினர்கள் தேவை. இந்த தேர்தலில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் முதல்வர் குமாரசாமி ராஜா தோல்வி அடைந்தார். அவருடைய அமைச்சரவையில் இருந்த பக்தவத்சலம், மாதவ மேனன் உட்பட 5 அமைச்சர்களும் தோல்வியை தழுவினர். மலபார் பிராந்தியத்தில் 4, ஆந்திராவில் 43, கர்நாடகத்தில் 9, தமிழகத்தில் 96 என்ற கணக்கில் காங்கிரசுக்கு வெற்றி கிட்டியது. 


இந்திய கம்யூனிஸ்ட் (62) பிரகாசம் தலைமையிலான கிஷான் மஸ்தூர் பிரஜா (35) உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணியினர் ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் 166 இடங்களுடன் சுயேச்சைகள் ஆதரவோடு ஆட்சி அமைக்க தயாராகினர். மேலும், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் ஸ்ரீ பிரகாசாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மத்தியில் உட்பட நாடு முழுவதும் வெற்றிக் கொடி நாட்டி இருந்த காங்கிரஸ் கட்சிக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது.

நாடு விடுதலை பெற்ற பிறகு சென்னை மாகாணத்துக்கு நடந்த முதல் தேர்தலிலேயே மாற்று கட்சியை ஆட்சி அமைக்க அனுமதிப்பதா? அதுவும் கம்யூனிஸ்ட் தலைமையில் ஆட்சியா? என்ற எண்ணம் காங்கிரஸ் தலைமைக்கும் காங்கிரஸால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கும் தோன்றியது. அதன் பிறகு என்ன நடந்தது ...?

(நினைவுகள் சுழலும் ...)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 2

= வை.ரவீந்திரன். 

சென்னை மாகாணத்தில் 1939ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி ராஜினாமா செய்த பிறகு, இரண்டாம் உலகப் போர் காரணமாக தேர்தல் தள்ளிப்போனது. சுமார் 7 ஆண்டு கால ஆளுநர் ஆட்சிக்கு பிறகு 1946ம் ஆண்டு பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த கால இடைவெளிக்குள் அரசியலில் எவ்வளவோ மாற்றங்கள். சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர் பதவி தொடர்பாக கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது.

இடையில் சிறிது காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய ராஜாஜி, மீண்டும் கட்சிக்குள் வந்திருந்தார். அவருக்கும் காமராஜருக்கும் இடையிலான மோதலை தணிக்க ஆசிப் அலியை கட்சி மேலிடம் அனுப்பி வைத்தது. படேலும் உட்கட்சி பூசலில் கவனம் செலுத்தினார்.

இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் சுயமரியாதை இயக்கம் வேகமாக வேரூன்றத் 1944ம் ஆண்டு பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் உதயமானது. ஆனால், தேர்தல் அரசியலில் இருந்து அந்த கட்சி ஒதுங்கி இருக்க தீர்மானித்தது. அதே நேரத்தில், கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீக்கப்பட்டதால் தேர்தலை சந்திக்க தயாராக இருந்தது. அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியும் களத்தில் இறங்க ஆயத்தமானது.  

இப்படியான சூழ்நிலைகளுக்கு இடையே 1946ம் ஆண்டு சென்னை மாகாண தேர்தல் நடந்தது. தேர்தலில் 163 இடங்களுடன் மீண்டும் காங்கிரஸ் கட்சியே வென்றது. காயிதே மில்லத் தலைமையிலான முஸ்லிம் லீக், 28 இடங்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்தது. ஏற்கனவே, உட்கட்சி பூசலில் தவித்த காங்கிரசுக்குள் ஆட்சி அமைப்பதில் பெரிய ரகளையே நடந்தது. ராஜாஜியை முதல்வராக்க கட்சி மேலிடம் (காந்தி, நேரு) விரும்பியது.

அதை காமராஜர் (தமிழகம்), மாதவ மேனன் (கேரளம்) போன்ற மாகாண காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தனர். இறுதியாக நடந்த ஓட்டெடுப்பில் ராஜாஜி தோல்வி அடைந்தார். அதனால், சென்னை மகாண முதல்வராக 1946ம் ஆண்டு டி.பிரகாசம் பொறுப்பு ஏற்றார். உட்கட்சி குழப்பத்தால் அடுத்த ஆண்டே அவரது அமைச்சரவை கவிழ்ந்தது.அதனால், 1947ம் ஆண்டில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும் அவருக்கு பிறகு 1949ம் ஆண்டில் குமாரசாமி ராஜாவும் அடுத்தடுத்து முதல்வராகினர். 1951ம் ஆண்டு வரை இந்த ஆட்சி நீடித்தது. இந்த இடைவெளிக்குள் இந்தியா சுதந்திரம் பெற்று குடியரசு நாடானது என்பதும் அதன்பிறகு, சுதந்திர இந்தியாவுக்கு தனியாக அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதும், பல கட்சி ஜனநாயக ஆட்சி முறையை இந்தியா சுவீகரித்து கொண்டதும் தனி வரலாறு. 

(நினைவுகள் சுழலும் ...)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 1

= வை.ரவீந்திரன்.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்திய அரசு சட்டம்'1935-ன் படி, 1937ம் ஆண்டு சென்னை மாகாணம் உட்பட இந்தியா முழுவதும் 11 மாகாணங்களுக்கு சட்டப்பேரவை, மேலவை தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தை உள்ளடக்கிய சென்னை மாகாணத்துக்கு நடந்த இந்த தேர்தலில் 215 இடங்களில் 159 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.

பொப்பிலி ராஜா தலைமையிலான நீதிக்கட்சி 21 இடங்களை பிடித்தது. அந்த கட்சியின் தலைவர் பொப்பிலி ராஜா தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் அநேக இடங்களில் பலரும் போட்டியின்றி (அன் ஆப்போஸ்டு) தேர்வாகி இருந்தனர். சாத்தூரில் இருந்து தேர்வான காமராஜரும் அவர்களில் ஒருவர்.

இந்தியா முழுவதும் காங்கிரஸ் வெற்றி பெற்றபோதிலும் மாகாண ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டம் இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க மறுத்தது. அதனால், 2வது பெரிய கட்சியான நீதிக்கட்சி தலைமையில் 1937 ஏப்ரல் 1ம் தேதி இடைக்கால அரசு அமைந்தது. சுமார் 4 மாதங்கள் நீடித்த அந்த அரசின் முதல்வர் கர்மா வெங்கட ரெட்டி நாயுடு. நீதிக் கட்சியின் மூத்த தலைவர் ஏ.டி.பன்னீர் செல்வம், எம்.ஏ. முத்தையா செட்டியார் உட்பட 5 பேர் அமைச்சர்களாகினர்.
அதன்பிறகு, ஆங்கிலேயருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தாங்கள் வெற்றி பெற்ற மாகாணங்களில் ஆட்சி பொறுப்பை ஏற்க காங்கிரஸ் காரியக் கமிட்டி முன் வந்தது. அதனால், சென்னை மாகாண முதல்வராக 1937 ஜூலையில் ராஜாஜி பொறுப்பேற்க அவர் தலைமையில் 9 பேர் சென்னை மாகாண அமைச்சர்களாக பதவியேற்றனர். 


ஆனால், இரண்டாம் உலகப்போரில் இந்தியாவையும் பங்கெடுக்கச் செய்வதை கண்டித்து 1939ம் ஆண்டில் காங்கிரஸ் அமைச்சரவை ராஜினாமா செய்தது. இதனால், சென்னை மாகாணத்தில் ஆளுநர் ஆட்சியை பிரிட்டிஷ் அரசு அமல்படுத்தியது.

(நினைவுகள் சுழலும்...)

Tuesday, February 9, 2016

தட்டழியும் தட்டச்சு இயந்திரங்கள்கால் காசு உத்தியோகம் என்றாலும் கவர்மென்ட் உத்தியோகம் பார்க்கணும். 40 வயதை தாண்டியவர்களுக்கு இந்த அறிவுரை இப்போதும் நினைவில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட அரசு வேலையை கைப்பற்ற 20 ஆண்டுகளுக்கு முன் முக்கிய தகுதியாக கருதப்பட்டது, தட்டச்சு. இதனால், 1990களில் தட்டச்சு பயிற்சிக்கு இருந்த மவுசு தனி. சில பகுதிகளில் அட்மிஷன் கிடைப்பதே குதிரைக் கொம்பு என்ற நிலைமை எல்லாம் இருந்தது. மையங்களில் உள்ள தட்டச்சு இயந்திரங்களை விட மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் உள்ளூர் பெரிய மனிதர்களின் சிபாரிசுகளும் கூட தேவைப்பட்ட காலம் அது. சில மையங்களில் டூடோரியலும் இணைந்து செயல்பட்டது. மினி கல்லூரி போல இயங்கிய தட்டச்சு மையங்களில் காதல் மலர்கள் மலர்ந்த அனுபவத்தை நடுத்தர வயதை கடந்தவர்களிடம் கேட்டு பார்க்கலாம். 


அப்போது 10வது தேர்ச்சி பெற்றால் மட்டுமே தட்டச்சு தேர்வு எழுத முடியும். இப்போது, 7வது முடித்தாலே ‘பிரி ஜூனியர்’ தேர்வை எழுதலாம். ஆனாலும், தட்டச்சு வழக்கொழிந்து வருகிறது. மகாராஷ்டிராவில், 2015ம் ஆண்டு நவம்பருக்குள் தட்டச்சு மையங்களை முற்றிலுமாக நீக்கி விட்டு கம்ப்யூட்டர் டைப்பிங் கற்றுத் தருமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், தட்டச்சு மையங்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் தட்டச்சு மையங்களாக மாறி வருகின்றன. டெல்லி, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இது அமலாகி விட்டது. காகித பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கை என இதற்கான காரணம் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அந்த அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை என்றாலும் தட்டச்சு மையங்கள் தட்டழிந்து தான் வருகின்றன. 


இன்றைய தட்டச்சு மையங்களில் பெரும்பாலானவை, முந்தைய தலைமுறையால் விட்டு செல்லப்பட்டு வாரிசுகள் நடத்தி வருபவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தட்டச்சு மையங்களின் நிலைமை குறித்து அவற்றின் நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘எங்கள் தந்தை நினைவாக இதை தொடர்ந்து நடத்தி வருகிறோம்’ கம்ப்யூட்டர் கீ போர்டு பயிற்சிக்காகவே மாலை நேரங்களில் மாணவர்கள் வந்து செல்கின்றனர். அந்த காலத்தில் மணவர்களுக்கு மெஷின்களை ஒதுக்கி கால அட்டவணை போடுவதே தனி வேலையாக இருந்தது. இப்போது, நிலைமை தலைகீழாகி விட்டது. எனினும், டைப்பிஸ்ட் பணிக்கு தட்டச்சு தேர்ச்சி கட்டாயம் என டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளதால் மனதில் கொஞ்சம் நிம்மதி ஏற்படுகிறது’ என்கின்றனர்.
இன்றைய அலுவலகங்களில் தனியாக நெட்வொர்க் என்ஜினீயர்கள் இருப்பது போன்று. முன்பெல்லாம் தட்டச்சு இயந்திரங்களை பராமரிக்கவும் பழுது பார்க்கவும் தனி மெக்கானிக்குகள் இருந்தனர். ரெமிங்டன், கோத்ரேஜ், பாசிட் போன்ற முன்னணி தட்டச்சு இயந்திர தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் புதிய மாடல்களை அறிமுகம் செய்யும்போது தங்கள் செலவிலேயே மெக்கானிக்குகளுக்கு பயிற்சி அளித்தன. இது மட்டுமல்ல தட்டச்சு தேர்விலும் தட்டச்சு இயந்திர பராமரிப்பு குறித்த கேள்விகள் கேட்கப்படும் என்பதால் மெக்கானிசம் வகுப்புகள் தனியாக உண்டு. அதற்காக, தட்டச்சு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கு வார இறுதி நாட்களில் மெக்கானிக் ஒருவர் வந்து பயிற்சி அளிப்பது உண்டு.
தற்போது, தட்டச்சு  மையங்களே தத்தளிக்கும் நிலையில் மெக்கானிக்குகளுக்கு வேலை இல்லை. இதனால், பிளம்பிங், வயரிங் என வேறு வேலைகளுக்குச் சென்று விட்டனர். எனினும், 60 வயதை கடந்த ஒரு சிலர் மட்டும் ‘அந்த காலத்தில் ஓய்வே இல்லாமல் ஊர் ஊராக சென்று சர்வீஸ் செய்து வந்தோம்’ என்று நினைவலைகளை அசை போட்டபடி, இன்னமும் மெக்கானிக் பணியை தொடருகின்றனர். தபால் அலுவலகங்களில் இருந்த தந்தி முறை வழக்கொழிந்து விட்டது போல, தட்டச்சும் முடிந்து விடுமோ என்ற நிலைமை உருவாகி உள்ள போதிலும், அப்படி ஏற்படாது என்ற நம்பிக்கையுடன் காலம் தள்ளுகின்றன, தட்டச்சு பள்ளிகள். நம்பிக்கை தானே வாழ்க்கை....!!!! 

= வை.ரவீந்திரன்.

கல்லாகிப் போன மரங்கள்உலகில் மனிதர்கள் விட்டுச் சென்ற சுவடுகளை விட மரங்களின் சுவடுகளே உலகின் தொன்மைக்கு சில சமயங்களில் சிறந்த ஆவணங்களாகி விடுகின்றன. மரத்தில் அமரும் பறவைகள், சுற்றியுள்ள நீர் நிலைகள், மக்களின் வாழ்க்கை முறை என மரத்தை சுற்றிலும் ஏராளமான அனுபவங்கள் புதைந்து கிடக்கின்றன. நாளுக்கு நாள் வளரும் நாகரீக வளர்ச்சியால் மரங்கள் மீதான அக்கறை மறைந்து வருகிறது. மரங்களை நம்பி வாழும் பறவை இனங்களும் அரிதாகிப் போய் விட்டன.

ஆனாலும், மரங்களுக்கு என பல்வேறு தனிச் சிறப்புகள் உண்டு. கோயில்களில் தல விருட்சமாக போற்றப்பட்டு வருவது காலம் தொட்ட மரபு. இப்போது நீங்கள் வாசித்துக் கொண்டு இருக்கும் இந்த காகிதம் கூட, மரத்தின் மற்றொரு பரிணாமம் தான். இத்தகைய மரங்களுக்கு காலம் கடந்து வாழும் சக்தியும் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? அதற்கான பதிலை தேடி நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம். தமிழகத்திலேயே இருக்கிறது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து கிழக்கே 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள திருவக்கரை என்ற கிராமத்தில் அதற்கான பதிலை கண்கூடாக பார்த்து அறிந்து கொள்ளலாம். தமிழகத்தின் மிகப்பழமையான வரலாற்றை கூறும் அரிக்கமேடு, சுற்றுக்கேணி போன்ற பகுதிகளுக்கு அருகில் தான் இந்த திருவக்கரை உள்ளது. இந்த ஊரில் இருந்து 1 கி.மீட்டர் தொலைவில் தனிப் பெரும் வனமாக விரிந்து கிடக்கிறது, கல்மர தேசிய பூங்கா.

பூங்காவின் வாயிலில் நம்மை வரவேற்றபடி பிரமாண்டமாக நிமிர்ந்து நிற்கும் ஆலமரத்தின் வயது 300க்கு மேல். உயிருடன் இருக்கும் அந்த மரமானது பூமியில் ஏராளமான விழுதுகளை பாய்ச்சி பேரன், பேத்திகளோடு காலம் தள்ளும் கொள்ளுத் தாத்தா போல மலர்ச்சியுடன் நிற்கிறது. அந்த மரத்தில் இருந்து இடதுபுறமாக திரும்பி சென்றால் கல் மர பூங்காவின் நுழைவு வாயில்.

உள்ளே, வழி நெடுகிலும் தரையில் குறுக்கும் நெடுக்குமாக அமைதியாக தூங்கிக் கொண்டு இருக்கின்றன, கல் மரங்கள். கால தேவனின் அசுரத்தனமான சுழற்சியை கண்டு மயங்கி கிடக்கும் இந்த மரங்கள் அனைத்துமே 2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை. காலத்தால் எகிப்து மம்மிகளுக்கு முத்தவை. ஆனால், எத்தனை பேருக்கு இந்த தகவல் தெரியும்?
1 அடி முதல் 30 அடி வரையில் பல வகையான மரங்கள் இங்கு கல்லாக மாறிக் கிடக்கின்றன. 250 ஏக்கர் பரப்பளவில் 200க்கும் மேற்பட்ட கல் மரங்கள் உள்ளன. ஆயிரமாயிரம் ஆண்டு பழமை ஏறி உறைந்து கிடக்கும்  அவற்றை தொட்டு பார்த்தால் மரம் என்றே நம்ப முடியவில்லை. தங்களுடைய உயிரை காலத்திடம் ஒப்படைத்து விட்டு உடலில் மணலை கொஞ்சம் கொஞ்சமாக பூசிக் கொண்டு கல்லாக சமைந்து கிடக்கின்றன, ஒவ்வொரு மரமும்.

சங்கராபரணி ஆற்றின் கரையோரம் இருப்பதால் காட்டு வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு காலப்போக்கில் மணலோடும், கூழாங் கற்களோடும் சேர்ந்து வெப்ப அழுத்த மாற்றங்களால் மரத் தன்மையை இழந்து சிலிக்கானை ஏற்றுக் கொண்டு கல்லாக மாறி இருக்கலாம் என கருதப்படுகிறது. கல் போன்றே தோற்றமளிக்கும் இவற்றை மரம் என்று எப்படி கூற முடியும்? என்ற கேள்வி மனதில் எழுகிறது. அதற்கு பதில். கணுக்கள்.

கல்லாக மாறினாலும் மரங்களுக்கே உரித்தான கணுக்கள் அவற்றில் காணப்படுகின்றன. அதை வைத்து தான் தொல்லியல் மற்றும் புவியியல் ஆய்வாளர்கள் அவற்றை கல் மரங்கள் என கண்டறிந்துள்ளனர். திருவக்கரையில் உள்ள இந்த மரங்கள் குறித்து கென்னட் என்ற ஆங்கிலேயர் 17ம் நூற்றாண்டில் ஆய்வு மேற்கொண்டார். அதன் மூலமாக திறந்த விதை தாவர இனங்கள் மற்றும் மூடிய விதை தாவர இனங்களை சேர்ந்த மரங்கள் இங்கு இருப்பது தெரியவந்தது. புன்னை, புளி, கட்டாஞ்சி, ஆமணக்கு போன்ற தாவர வகைகளை சேர்ந்த மரங்கள் இங்கு கல்லாக மாறிக் கிடக்கின்றன. நம்முடைய மண்ணின் காலம் கடந்த தொன்மைக்கு மவுன சாட்சியாக உள்ள இந்த கல் மரங்களை 1957ம் ஆண்டு முதல் இந்திய அரசின் புவியியல் ஆய்வு துறை பாதுகாத்து வருகிறது. ஆனால், இரவு நேரங்களில் சரியான விளக்கு வசதி இல்லாத காரணத்தால் இங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கல் மரங்கள் திருடு போகின்றன.

கல்லாக கிடக்கும் இந்த மரங்களும் சரி. கண் முன்னே நிமிர்ந்து நிற்கும் மரங்களும் சரி. மனிதர்களின் பேராசையால் கண்ணெதிரிலேயே மறைந்து வருகின்றன என்பதே நிதர்சனமான உண்மை. 

= வை.ரவீந்திரன்.

அகநானூற்று கல்யாண வைபோகம் . . .அன்பு, தோழமை, உறவு என்பது போன்ற வார்த்தைகளின் நிஜ வடிவங்களாலேயே மனித வாழ்க்கை கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த வார்த்தைகளுக்கு முழுமையான உருவம் கொடுத்தால்... அதுவே வாழ்க்கைத் துணை. ஒவ்வொருவரின் வாழ்விலும் இல் வாழ்க்கையின் ஆரம்ப தருணம் என்பது மறக்க முடியாத திருநாள். அதுவும், கற்பு நெறி தவறா தமிழர் பண்பாட்டில் அந்த நாளுக்கு கூடுதல் சிறப்பு நிச்சயமாக உண்டு.

அதே நேரத்தில், இரு மனங்கள் இணையும் திருமண விழாவின் கொண்டாட்டங்களை சற்றே கூர்ந்து நோக்கினால் வெவ்வேறு விதமாக அமையும். சாதி, இனம், மதம் என பலவகையான சடங்குகள், சம்பிரதாயங்கள். ஒவ்வொன்றும் தனித்தனி விதம். வீடியோ, புகைப்படங்கள் என நினைவுகள் பொக்கிஷமாக இருந்தாலும், ‘எனது திருமணம் எப்படி நடந்தது தெரியுமா?’ என கூறியபடி மனதுக்குள் பூட்டி கிடக்கும் ஒவ்வொரு நினைவையும் அசைபோடுவது மகிழ்வான தருணமாக அமையும்.

ஆண் அல்லது பெண், அதுபோன்ற நினைவுகளில் மூழ்கி இருப்பதையும் அதன் வழியாக திருமண சடங்கு வைபவங்களையும் எடுத்துக் கூறுவது கவிஞர்களின் மரபு. அதில், சங்க கால புலவர்களும் விதிவிலக்கு இல்லை. சங்ககால அக இலக்கியமான அகநானூறில் நல்லாவூர் கிழார் என்ற புலவர், ஒரு ஆண் மகன், தன்னுடைய திருமண நிகழ்வு தொடங்கி முதலிரவு வரை நினைவுபடுத்திப் பார்ப்பதை பாடி வைத்திருக்கிறார். அது, பெற்றோரால் பார்த்து முடித்து வைக்கப்பட்ட திருமணம்.  தமிழர்களின் திருமணம் என்பது அதிகாலை நேரத்தில் தான் நடைபெறுவது வழக்கம். நாகரீக மோகமும், சந்தை மயமாக்கலும் வருவதற்கு முன் சமீபகாலம் வரை பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் தான் திருமணத்தை நடத்துவது தமிழர்களின் வழக்கம். இன்னமும் கூட, தமிழகத்தின் சில சிறிய கிராமங்களில் அந்த நடைமுறை நீடிக்கிறது. அதுபோன்ற ஒரு அதிகாலை வேளையில் தான், அவனுடைய திருமண நிகழ்வுகள் தொடங்குகின்றன. அதை, அவன் கூறுகிறான் பாருங்கள்...

“உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை

பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரைகால்

தண் பெரும் பந்தர்த் தருமணல் ஞெமரி

மனை விளக்குறுத்தி, மாலை தொடரி

கனை இருள் அகன்ற கவின்பெறு காலை

கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்

கேடு இல் விழுப்புகழ் நாள் தலைவந் தென...

உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்

பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்

முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர”

அதாவது,
கரிய இருள் நீங்கி அழகிய விடியற்காலை பொழுது உதிக்க தொடங்குகிறது. கோள்களின் ஆதிக்கம் நீங்கிய (கிரகணம் இல்லா) வளைந்த வெண்மையான நிறத்துடன் உள்ள நிலவை குற்றமற்ற சிறந்த புகழை உடைய ரோகிணி அடைகிறது. அந்த சமயத்தில் உளுந்து பருப்பு போட்டு சமைத்த களி என்னும் ருசி மிகுந்த உணவை உற்றாரும் உறவினர்களும் உண்டு மகிழ்ச்சி ஆரவாரத்துடன் இருக்கின்றனர்.

அதனால், இல்லம் முழுவதும் கலகலப்பு நிறைந்து இருக்கிறது. வரிசையாக கால்களை (கம்பங்கள்) நட்டு வைத்து பெரிய மணப்பந்தல் போடப்பட்டு இருக்கிறது. குளிர்ச்சி தரும் அந்த பந்தலுக்குள் மணல் பரப்பி அதன் மீது விளக்கை ஏற்றிவைத்து அதில் மலர் மாலைகளை தொங்க விட்டனர்.

அந்த மணப்பந்தல் அருகே உச்சந்தலையில் குடங்களை ஏந்தியவரும் (பூரண கும்பம்), வாய் அகன்ற புதிய மண் பாத்திரம் சுமந்தவரும் வந்து நின்றனர். திருமணத்துக்கான சம்பிரதாயம், சடங்குகளை அறிந்த வயதில் மூத்த பெண்கள் ஒன்று சேர்ந்து திருமண நிகழ்ச்சிக்கு தேவையான ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து எடுத்து வைத்தனர்.

“புதல்வற் பயந்த திதலை அவ்வயிற்று

வால்இழை மகளிர் நால்வர் கூடி

‘கற்பின் வழாஅ, நற்பல உதவிப்

பெற்றோற் பெட்கும் பிணையை ஆக’ என

நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி

பல் இருங்கதுப்பின் நெல்லொடு தயங்க

வதுவை நல் மணம் கழிந்த பின்றை

கல்லென் கம்மையர், ஞெரேரெனப் புகுதந்து

‘பேர் இற் கிழத்தி ஆக’ எனத்தமர் தர”

குழந்தைகளை பெற்றெடுத்ததால் தோன்றிய தேமல் கொண்ட அழகிய வயிற்றை உடைய பெண்கள் (குழந்தை குட்டிகளுடன் உள்ள சுமங்கலிப் பெண்கள்) நான்கு பேர், தூய ஆடைகளும் அழகிய அணிகலன்களும் அணிந்து கொண்டு சூழ்ந்து நின்றனர். பின்னர், ‘கற்பு நெறி தவறாமல், இல்லற வாழ்வில்  நல்ல உதவிகளை செய்து, உன்னை மனைவியாக பெற்ற உன் கணவனை நீ பெரிதும் விரும்பும் பெண்ணாக ஆவாய்’ என கூறி வாழ்த்தினர்.

கூடவே, பூக்களை கலந்த மங்கள நீருடன் நெல் மணிகளையும் (அட்சதை) தூவினர். அவை அனைத்தும் கருங்கூந்தலில் சிதறி கிடக்க இனிதாக திருமணம் நடந்து முடிந்தது. அதன்பிறகு... உறவினர்களும் சுற்றத்தாரும் விரைந்து வந்து, ‘இல்லற வாழ்வில் மிகப்பெரிய இன்பத்தை பெற்று நீ சிறந்த இல்லாளாக ஆகுக’ என வாழ்த்தினர். மேலும், அவளின் கரம் பிடித்து என்னிடம் அவளை முழுமையாக ஒப்படைத்தனர். திருமணம் நிறைவாக முடிந்தது.

அடுத்ததாக, அவனும் அவளும் முதன் முதலாக தனி அறையில் சந்திக்கின்றனர். அந்த முதல் சந்திப்பும், மணப்பெண்ணின் நாணமும் எப்படி இருந்தது என்பதை மணமகன் வாயிலாக புலவர் விவரிக்கிறார் பாருங்கள். 

“ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்

கொடுமம் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து

ஓடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ

முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப”

முதலிரவில், ஒரு அறையில் தனியாக விடப்பட்டோம். அவள், நாணத்தால் தனது முதுகை வளைத்து கிடந்தாள். புடவைக்குள் முற்றிலுமாக அவள் ஒடுங்கிக் கிடந்த இடத்தை நான் அடைந்தேன். அவளை கட்டித் தழுவும் விருப்பத்தோடு அவள் முகத்தை மூடி இருந்த புடவையை சற்று திறந்தேன். அப்போது, அவளின் நிலைமை எப்படி இருந்தது.


“அஞ்சினள் உயிர்த்த காலை, யாழநின்

நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை என

இன் நகை இருக்கை, பின் யான் வினவலின்

செஞ்சூட்டு ஒண் குழை வண்காது துயல்வர்

அகம்மலி உவகையள் ஆகி, முகன் இகுத்து

ஒய்யென இறைஞ்சியோளே - மாவின்

மடம் கொள் மதைஇய நோக்கின்”

அவளது புடவையை எடுத்ததுமே, தனது பெண்மையால் அஞ்சி நெஞ்சம் படபடக்க பெருமூச்செறிந்தாள். அவளிடம் நான், ‘பயப்படாதே, உன் மனதில் நினைப்பதை மறைக்காமல் துணிவுடன் கூறு’ என ஆறுதலுடன் கூறினேன். அதனால், அவள் மகிழ்ச்சி அடைந்தாள். கலைமானின் குணமான மடம், செருக்கு நிறைந்த பார்வை, ஒடுங்கிய கூந்தல், மாலை நிறம் ஆகியவற்றுடன் கூடிய அவளுடைய காதில் சிவப்பு மணிகள் பதித்த குழை (ஜிமிக்கி) மெதுவாக காற்றில் அசைந்தாடியது. அவள், மேலும் வெட்கத்துடன் கூடிய மகிழ்ச்சியால் முகத்தை தாழ்த்தி தலை குனிந்தாள்.இவ்வாறாக, தனது திருமண நாளின் நிகழ்வுகளை மனம் மகிழ்ச்சியுடன் நினைவு கூறுகிறான், அகநானூறு காலத்து தமிழ் இளைஞன். புலவர் நல்லாவூர் கிழாரின் இந்த செய்யுள் பாடலை படித்ததும், கண்ணதாசனும் அவரது பாடலும் நினைவில் வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை. அது, 1962ம் ஆண்டு வெளியான, ‘குடும்பத் தலைவன்’ திரைப்படப் பாடல். அந்த குடும்பத் தலைவனும் தனது திருமண நிகழ்வை கனாக் காண்கிறான் பாருங்கள். 

“திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
கூரை நாட்டுப் புடவை கட்டிக் குனிந்திருப்பாளாம் - ஒரு
கூடை நிறையும் பூவைத் தலையில் சுமந்திருப்பாளாம்
சேர நாட்டு யானைத் தந்தம் போலிருப்பாளாம் - நல்ல
சீரகச்சம்பா அரிசி போலச் சிரிச்சிருப்பாளாம்
செம்பருத்திப்
பூவைப் போல செவந்திருப்பாளாம் - நைசு
சிலுக்குத் துணியப் போலக் காற்றில் அசைந்திருப்பாளாம்
செப்புச் சிலை போல உருண்டு தெரண்டிருப்பாளாம் - நல்ல
சேலஞ்சில்லா மாம்பழம் போல்
கனிந்திருப்பாளாம்”

சங்க கால அகநானூறு செய்யுள் பாடலுக்கும் கவிஞரின் 20ம் நூற்றாண்டு திரைப்பட பாடலுக்கும் இடையில் தான் என்ன அழகான பொருத்தம்.

= வை.ரவீந்திரன் 

http://issuu.com/kaatruveli/docs/____________________________________2364b2aee627d5/87?e=1847692/34493156