Wednesday 19 May 2021

கி.ரா - அஞ்சலி

 கரிசல் மண் இலக்கிய தந்தை தமிழ்  எழுத்துலக  பிதாமகன் கரிசல் மண்ணிலேயே விதையாகி விட்டார்.

புதுச்சேரியில் இருந்த நாட்களில் அவருடன் கிடைத்த அனுபவத்தை அசை போட்டு பார்க்கிறேன். சில இடங்கள் மட்டும்தான் சிலரை உயிர்ப்புடன் வைத்திருக்கும். என்னை பொருத்த வரை அதுபோன்ற இடம் என்றால் புதுச்சேரி. ஆன்மீக பூமி, எழுத்தாளர்களின் சுவர்க்க புரி. நாற்பதுக்குள் மறைந்த பாரதியும் சரி. சதம் எட்டிய கி.ரா.வும் சரி. இதற்கு சரியான உதாரண நாயகர்கள்.

புதுச்சேரி பல்கலை கழகத்தின் கவுரவ விரிவுரையாளராக மட்டுமே பணியாற்றிய கி.ராஜநாராயணனுக்கு ஓய்வுக்கு பின்னும் அரசு குடியிருப்பில் வீடு வழங்கி கவரவம் செய்தது புதுச்சேரி அரசு. புதுச்சேரி லாஸ்பேட்டையில் உளள அந்த குடியிருப்பில்தான் பல தசம ஆண்டுகளாக அவர் வசித்தார். தமிழகத்தில் இப்படி ஒரு கவுரவம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.

பத்து ஆண்டுகளுக்கு முன், புதுச்சேரி சென்ற புதிதில் கி.ரா அங்கிருக்கிறார் என்பது மட்டும் தெரியும். எங்கிருக்கார் என தெரியாது. ஒருநாள் கமல்ஹாசன் அங்கு வந்து சென்றதாக செய்தி வந்தது. கி.ரா. 90வது பிறந்த நாளையொட்டி யாரும் அறியாமல் இரவு நேரம்  வந்து திரும்பி இருக்கிறார். எழுத்தாளர்களை பாராட்டுவதில் கமல் தனி ரகம். கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதை கவனித்திருக்கலாம்.

கமல் வந்து சென்ற பின்தான், லாஸ்பேட்டையில் நான் குடியிருந்த வீட்டில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்குள் அவர் வசிப்பது தெரிந்தது. ஒருநாள் காலை வேளையில் அவரது வீட்டை தேடிச் சென்றபோது, அந்த குடியிருப்புக்குள்ளேயே பல தெருவை சுற்றி கடைசியாக ஒரு பிளாக்கில் மேல்தள வீடு ஒன்றை அங்குள்ளவர்கள் காட்டினார்கள். அங்கு சென்று பார்த்தால் அது எழுத்தாளர் பிரபஞ்சன் வீடு. ஆம். புதுச்சேரி அரசு அவருக்கும் அதே லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கி இருந்தது.

இந்து தமிழ் இதழின் புதுச்சேரி பதிப்பு ஆசிரியரான பின்புதான் கி.ரா. அறிமுகம் வாய்த்தது. நான்கைந்து முறை அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறேன். அப்போது இந்து தமிழில் தொடர் ஒன்றை கி.ரா. எழுதிக்கொண்டிருந்தார். அவரது கையெழுத்துப் பிரதியை வாங்கி வருவதற்காக சென்றதுண்டு. ஆண்டுதோறும் நடத்தும் வாசகர் விழாவுக்கும் கி.ரா. வந்திருந்தார். அவருடன் பேசும்போது கிராமத்தில் தாத்தாவிடம் பேசும் உணர்வு தான் வரும். தமிழில் வட்டார மொழிகளை மறக்கக் கூடாது என்பது அவரது உறுதியான எண்ணம்.



இந்த சந்திப்புக்கெல்லாம் சிகரமான ஒரு சந்திப்பு உண்டு. அது என் வாழ்நாளில் மறக்கவே முடியாததொரு தருணம். 

அந்த நல்ல நாளின் காலைப்பொழுதில் இயக்குநர் லிங்குசாமியின் புதிய திரைப்பட வேலைகளுக்காக அவருடன் புதுச்சேரி வந்திருந்தார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். ஏற்கனவே எனது புத்தக வெளியீடு மூலம் எஸ்.ரா. அறிமுகமாகி இருந்ததால் என்னை தொலைபேசியில் அழைத்தார். அவரது புதிய புத்தகம் ஒன்று வெளியாகி இருந்த தருணம் அது. 

கி.ரா அவர்களை நேரில் பார்த்து தனது புத்தகத்தை தர வேண்டும் என்றும் கி.ரா வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறும் கேட்டார். ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கும் சிறந்த தருணம் அது. கடற்கரை சாலை பகுதியில் உள்ள அதீதி ஓட்டலில் தங்கி இருந்த எஸ்.ரா.வை எனது பைக்கில் அழைத்துக் கொண்டு கி.ரா. வீட்டுக்கு சென்றேன். தமிழின் மிகப் பிரபலமான இரண்டு எழுத்தாளர்கள், அவர்களுடன் நான் மட்டும். அவர்களின் இரண்டு மணி நேர நீண்ட உரையாடலின்போது, நான் கேட்ட விஷயங்களை மட்டுமே புத்தகம் போடும் அளவுக்கு இருந்தது. 

கோபல்லபுரம் தாத்தா கி.ரா, தனது இளமை பருவ அனுபவங்களை எல்லாம் எஸ்.ரா.வுடன் அசை போட்டுக் கொண்டார். சின்ன வயதில்  எலும்புறுக்கி நோயால் அவதிப்பட்டிருக்கிறார். புதுமைப் பித்தனை பதம் பார்த்த அதே வியாதி. அதில் இருந்து மீண்டு, எமன் வாயில் இருந்து ஆங்கிலேய மருத்துவர் ஒருவர் அவரை மீட்டு வந்தது. புதுச்சேரி பல்கலைக் கழக பேராசிரியராக வந்து அங்கேயே குடியேறியது என ஏராளமான தகவல்களை கூறினார். 

அந்த காலத்தில் எல்லாம் ஊர்களுக்கு எப்படி பெயர் வைத்தார்கள் என வேறொரு தளத்தில் கி.ரா. உரையாடல் திரும்பியது சுவாரஸ்யம். புதுச்சேரிக்குள் உள்ள பதஞ்சலி முனிவர் சிலை, வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் சிலை (மரத்தால் ஆனது) எனவும் உரையாடல் நீண்டது. அவரவர் சொந்த ஊர் எத்தனை ஆண்டு பழமையானது, அதன் பெயர் காரணம் போன்றவயெல்லாம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். எத்தனை பேர் அதில் குறைந்த பட்ச ஆர்வம் காட்டியிருப்பாம் என்ற எண்ணம் தான் அப்போது மேல் எழுந்தது.

அவருக்கு பதிலாக, எஸ்.ரா. கூறிய அனுபவங்கள் தனி சுவை. அவர் தேசாந்திரி என்பது அவரை வாசித்த வாசகர்கள் அனைவரும் அறிந்த விஷயம். வட மாநிலம் ஒன்றில் மாவோயிஸ்ட் நிறைந்த ஒரு மலைப்பகுதி கிராமத்துக்கு சென்று வந்தது,  அந்த பகுதி மக்களின் கலாச்சாரம், வரவேற்பு முறை, அந்த பகுதியின் புதிய விருந்தினர்களை பற்றிய தகவல்கள் உடனடியாக மாவோயிஸ்டுகளின் கவனத்துக்கு செல்வது என அவரது தகவல் சுரங்கம் விரிந்தது. 

கிராமங்களின்  பெயர்கள் பற்றிய உரையாடலின்போது, காஷ்மீர் எல்லையையொட்டி சில கிராமங்களுக்கு தமிழில் பெயர்கள் இருப்பதை குறிப்பிட்டார் எஸ்.ரா. அங்குள்வர்களுக்கு அது பற்றி எதுவும் தெரியவில்லை என்றும் தமிழர்கள் யாரேனும் அங்கு வரை வியாபாரத்துக்கு சென்றிருக்கலாம் எனவும் எஸ்.ரா. கூறினார். இரண்டு இமயங்களின் உரையாடலும், எழுதப்படாத இரு புத்தகங்களை படித்து முடித்த திருப்தியை அளித்தது.



அதன்பிறகு, அதீதி ஓட்டலுக்கு எஸ்.ரா அவர்களுடன் திரும்பியபோது, கி.ரா. உடனான சந்திப்பு பற்றி பேசியபடியே வந்தோம். அப்போது, எஸ்.ரா. கூறிய வார்த்தைகள், 

"தற்சமயம், 90 வயது கடந்து வாழும் முதுபெரும் தமிழ் எழுத்தாளர்கள் இருவர் மட்டும் தான். ஒருவர் கி.ரா., மற்றொருவர் கலைஞர்".

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். இருவருமே சதமடிப்பார்கள் என நினைத்தோம். காலத்தின் கணக்கு வேறு மாதிரியாகிப் போனது...

#நெல்லை_ரவீந்திரன் 

மிக அரிய வாய்ப்பின் தருணத்தை அன்றைய எனது மொபைலில் படம் எடுத்துக் கொடுத்தவர், கி.ரா.வின் புதல்வர்.