Friday 28 January 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -30

தமிழ் சினிமாவில் கணவன் -மனைவி அண்ணன் -தம்பி, அம்மா -மகள் அப்பா -மகன் இப்படி பலர் வலம் வந்திருக்கின்றனர். அது போன்ற ஒருத்தரைத்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். அவர், பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன். தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பின்னணி பாடியிருக்கிறார்.  ஆனால், இவர்  திரை உலகுக்குள் நுழைந்தது ஒரு நடிகராகத்தான். 



சிறு வயதிலேயே மேடை நாடக குழுக்களில் சேர்ந்து பி.யு.சின்னப்பா, காளி என்.ரத்தினம், எமஜிஆர் என அக்கால பிரபலங்களுடன் நாடகங்களில் நடித்திருக்கிறார். அப்போதெல்லாம் நாடகங்களில் நடிப்பவர்களுக்கு பாடும் திறமையும் இசை ஞானமும் இருப்பது கூடுதல் பலம். அப்படித்தான் இவரும். இவருக்கு பாட மட்டுமல்ல... வயலின் மற்றும் மிருதங்கம் வாசிக்கவும் தெரியும். இவரது தந்தை லட்சுமண பாகவதர் கர்நாடக இசைக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.



1947ல் தமிழ் சினிமாவில் நடிகராக நுழைந்த ஏ.எல்.ராகவன். கிருஷ்ண விஜயம் உட்பட சில படங்களில் நடித்திருந்தாலும் இவரை பின்னணி பாடகராகத்தான் சினிமா உலகம் வெளி உலகுக்கு அடையாளம் காண்பித்தது. பாடகராக்கியவர் அன்றைய பிரபல பின்னணி பாடகர் சி.எஸ்.ஜெயராமன் (எஸ்.ஜானகியை பாடகியாக அறிமுகம் செய்தவரும் சி.எஸ்.ஜெயராமன் தான்). படம் விஜயகுமாரி. அப்போது ஏ.எல். ராகவனுக்கு சிறு வயது என்பதால் படத்தின் நாயகிக்காக பெண் குரலில் பாடினார். 



அதன் பிறகு 1950 தொடங்கி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளளுக்கு மேலாக தொடர்ந்து பின்னணி பாடியிருக்கிறார். 1970களுக்கு பின் அவ்வப்போது பாடிய ஏ.எல்.ராகவன் கடைசியாக பாடியது,  'ஆடாம ஜெயிச்சோமடா' படம்...!

சுப்பையா நாயுடு, எம்.எஸ்.வி, எஸ்.வி. வெங்கட்ராமன் என தொடங்கி இளையராஜா, தேவா வரையிலான ஏராளமான  இசையமைப்பாளர்களிடம் பாடி இருக்கிறார். டி.எம்.எஸ்., ஏ.எம். ராஜா, ஜிக்கி, ஜமுனா ராணி, எல்.ஆர். ஈஸ்வரி, எம்.எஸ். ராஜேஸ்வரி, மனோரமா, வாணி ஜெயராம் ஸ்வர்ணலதா வரையிலான பாடக, பாடகிகளுடன் இணைந்து பின்னணி பாடி இருக்கிறார், ஏ.எல். ராகவன்.



இவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் காமெடி பிளஸ் நையாண்டி ரகம். அன்றைய தமிழ் சினிமாவில் நாயகர்களுக்கு மட்டுமல்ல... நாகேஷ், தங்கவேலு போன்ற  காமெடியன்களுக்கும் பாடல்கள் இருக்கும். நம்பியார், அசோகன்,  எம்.ஆர்.ராதா, டி.எஸ். பாலையா எல்லாம் திரைப் பாடல்களுக்கு ஆடிப்பாடி நடித்திருக்கிறார்கள் என்றால் பாருங்கள். 

இன்று வரையிலும் கேட்டு பார்த்து ரசிக்க கூடிய ஹிட் பாடலான 'இருவர் உள்ளம்' படத்தின் "புத்தி சிகாமணி பெத்த பிள்ளை..." என்ற பாடல் எம்.ஆர்.ராதா நடித்ததுதான். அந்த பாடலை அவருக்காக பாடியவர், ஏ.எல்.ராகவன். 


இது போலவே "மணக்கும் ரோஜா மை லேடி, எனக்கு நீதான் சரி ஜோடி..." என்ற பாடலை 'கவிதா' படத்தில் டி.எஸ். பாலையாவுக்காக பாடி இருக்கிறார்.


அதே நேரத்தில் ஜெமினி, முத்து ராமன், கல்யாண் குமார், பாலாஜி, நாகேஸ்வர ராவ் மாதிரியான கதை நாயகர்களுக்கும் பாடி இருக்கிறார். 


'நெஞ்சில் ஒரு ஆலயம்' படத்தில் கல்யாண் குமாருக்காக பாடிய  "எங்கிருந்தாலும் வாழ்க, உன் இதயம் அமைதியில் ஆழ்க...", பாடலும்


'பார்த்தால் பசி தீரும்' படத்தில் ஜெமினிக்காக பாடிய... "அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ..."  பாடலும்


ஏ.எல்.ராகவனின் பெயரை காலா காலத்துக்கும் ஒலிக்கும் எவர்கிரீன் ரகங்கள்


ஏ.எல்.ராகவனின் குரல் மிகவும்  ரசிக்கத்தக்கதாகவும் பெகுலியர் வாய்ஸாகவும் இருந்தது ஸ்பெஷல். குறிப்பாக நாகேஷுக்கு இவரது குரல் ரொம்பவே பொருத்தமாக இருக்கும்.


"சீட்டுக்கட்டு ராஜா ராஜா என்னை திரும்பிப் பாரு லேசா லேசா..."


"உலகத்தில் சிறந்தது எது..."


"ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்கு துணியும் நெறைஞ்சிருக்கு..."


இவை நாகேஷுக்கு பாடிய பாடல்களில் சில.


"பக்கத்திலே கன்னி பெண்ணிருக்கு..." (படிக்காத மேதை படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரனுக்காக)


"ஏப்ரல் ஃபூல் என்றொரு ஜாலி..."


"என்ன வேகம் நில்லு பாமா, என்ன கோபம் சொல்லலாமா..."


இவையெல்லாம் ஏ.எல். ராகவன் பாடிய நூற்றுக்கணக்கான பாடல்களில் சில துளிகள்


பாலையாவுக்கு நாகேஷ் கதை சொல்லும் எவர்கிரீன் நகைச்சுவை இடம் பெற்ற 'காதலிக்க நேரமில்லை, படத்தில் முத்துராமனுக்காக (நடிகர் கார்த்திக்கின் தந்தை) ஏ.எல். ராகவன்  பாடியிருக்கிறார். 


இதுபோலவே 'மனிதன் மாறவில்லை' படத்தில் நாகேஸ்வர ராவுக்காக (நடிகர் நாகார்ஜுனாவின் தந்தை) பாடிய..., "காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும் கற்பக சோலையும் ஏனோ..?" என்ற காதல் பாடலை பாடியவரும் இவரே.


தமிழ், மலையாளம் கன்னடம் தெலுங்கு என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார், ஏ.எல்.ராகவன்.



திருவிழாக்களில் களை கட்டிக் கொண்டிருக்கும் மேடைக் கச்சேரிகள் எனப்படும் ஆர்க்கெஸ்ட்டிராவை முதன் முதலில் அறிமுகம் செய்த பெருமையும் ஏ.எல். ராகவனையே சேரும்.  எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சேர்ந்து ஆர்க்கெஸ்ட்டிராவை ஆரம்பித்தவர் இவரே. எக்கோ எனப்படும் எதிரொலி டெக்னாலஜி இல்லாத காலத்திலேயே குரலிலேயே எக்கோ ஜாலம் காட்டியவர்.


'வேட்டைக்காரன்' படத்தில் எம்.ஜி.ஆருக்காக டி.எம்.எஸ். பாடிய "உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால், உலகத்தில் போராடலாம்..." பாடலில் இடையே அவ்வப்போது வரும், "ஹா ஊ ஹா..." என்ற எக்கோ ஹம்மிங் இவருடையதே.


பாடகராகவே அறியப்பட்டாலும் இவருக்குள் இருந்த நடிகன் அவ்வப்போது எட்டிப்பார்க்க  தவறவில்லை. பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர ராஜனுடன் சேர்ந்து படமும் தயாரித்து நடித்திருக்கிறார். 1968ல் வெளியான 'கல்லும் கனியாகும்' படம் இவர்கள் இருவரின் தயாரிப்புத்தான். அதில் இவர்கள் இருவருமே ஹீரோவாக நடித்திருக்கிறார்கள். 



இதுபோல 1980ல் 'கண்ணில் தெரியும் கதைகள்'  என்ற படத்தையும் ஏ.எல்.ராகவன் தயாரித்திருக்கிறார். சரத்பாபு, ஸ்ரீபிரியா நடித்த இந்த படத்துக்கு கே.வி.மகாதேவன், சங்கர் -கணேஷ், ஜி.வி.வெங்கடேஷ், இளையராஜா என ஐந்து இசையமைப்பாளர்கள்...!


நடிகர், பின்னணி பாடகர் தயாரிப்பாளர் என பல முகங்களை காட்டிய ஏ.எல். ராகவன் இன்றைய டி.வி. யுகத்திலும் கால் பதித்திருக்கிறார். ஆம், தனது 65வயதுக்கு பிறகு சன் டிவியில் 2000களில் ஔிபரப்பான 'அலைகள்', 'அகல்யா' ஆகிய தொடர்களில் நடித்திருக்கிறார்.



கடந்த பதிவில் நாம் பார்த்த 'வின்னர்' படத்தில் பாட்டியாக நடித்த பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜமின் கணவர்தான் இந்த ஏ.எல்.ராகவன் என்பது கூடுதல் தகவல்.

தற்போது வரை உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவுக்கு கடந்த 2020ம் ஆண்டில் தனது 87வது வயதில் இரையாகிப் போனார் ஏ.எல்.ராகவன்

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Thursday 20 January 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -29

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களை பட்டியல் போட்டால் பி.எஸ்.வீரப்பா, நம்பியார், அசோகன், ரகுவரன், பிரகாஷ்ராஜ் என நிறைய பெயர்கள் நினைவுக்கு வரும். ஆனால் வில்லி என்றால்...? சில பெயர்களிலேயே ஸ்ட்ராக்காகி நின்று விடும். அந்த ஒரு சில பேரில் ஒருவர் எம்.என்.ராஜம். 'வின்னர்' படத்தில் வடிவேலுவின் பாட்டியாக வருவாரே அவரே தான்.



"வயசானாலும் இந்த வில்லத்தனம் மட்டும் போகல'ன்னு அந்த படத்தில் வடிவேலு பேசும் டயலாக், நம்பியாருக்கு மட்டுமல்ல,  எம்.என்.ராஜமுக்கும் பொருந்தும்தான். "இந்த கைப்புள்ள இப்ப எங்க இருக்கானோ? சாப்பிட்டானோ இல்லியோ"ன்னு இன்றைய மீம்ஸ் யுகம் வரை வலம் வரும் எம்.என்.ராஜம், தமிழ் திரையுலகில் அறிமுகமான ஆண்டு 1949. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நடித்த அன்றைய ஹிட் படமான 'நல்லதம்பி'யில் 10 வயது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார். 

குழந்தை நட்சத்திரமாக இருந்து அவருக்கு கிடைத்த புரமோஷன், வில்லி வேடம். அதுவும் சாதாரண வில்லி இல்லை. நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கே வில்லி. அவரது எவர்கிரீன் சூப்பர் ஹிட்டான 'ரத்தக் கண்ணீர்' திரைப்படத்தில் காந்தா என்ற தாசிப்பெண் வேடத்தில் வில்லியாக கலக்கி இருப்பார், எம்.என்.ராஜம்.



பணக்கார பாரீன் ரிட்டர்னாக தன்னிடம் வந்து சேர்ந்து, பின்னர் தொழு நோயாளியாக மாறிப்போன எம்.ஆர்.ராதாவை மாடிப் படிக்கட்டுகளில் அவர் எட்டி உதைக்கும் காட்சிகளும், "அடியே காந்தா ... ... ... நீ கொழுத்து திரிகிறாய். நான் புழுத்துச் சாகிறேன்" என எம்.ஆர்.ராதா பேசும் வசனங்களும், ""உங்கள் மனைவியோ பருவ மங்கை, பாலுவோ பார்த்தோர் மயங்கும் பருவ வயதினன்..." என எம்.ஆர்.ராதாவிடம் அவர் பேசும் வசனங்களும் அவரது வில்லித்தனத்தின் உச்சம் பேசும். அப்போது பதின்ம வயதுதான் எம்.என்.ராஜமுக்கு. காலால் உதைக்கும் ஸீனில் நடிக்க தயங்கியபோது நடிப்புத்தான் என ஊக்கப்படுத்தி அவருக்கு தைரியம் கொடுத்தவர் எம்.ஆர்.ராதா. 

சிவாஜி பத்மினி நடித்த 'தங்கப் பதுமை' படமும் அவரது வில்லித்தனத்துக்கு மற்றொரு உதாரணம். கண்களை உருட்டிக் கொண்டு வாயை ஒரு விதமாக சுளித்தபடி வில்லித்தனம் செய்யும் எம்.என்.ராஜம் நடிப்பை தற்போது 60ஐ கடந்தவர்களால் நிச்சயமாக மறந்திருக்க முடியாது. 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் ராவணனின் தங்கை சூர்ப்பனகை வேடம் இவருக்கு. 



இன்றைய டிவி சீரியல்களின் வில்லிகள் எல்லாம்  இவரது லேட்டஸ்ட் வெர்ஷன்கள் தான். தமிழில் 1960களில் வெளியான ஏராளமான சினிமாக்களில் குடும்ப கதைகளின் ஆஸ்தான வில்லி எம்.என்.ராஜம் தான். 

வில்லியாக மட்டுமல்ல,  குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி இருக்கிறார். அதுபோலவே எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், ஜெமினி என அன்றைய முன்னணி நாயகர்களுடன்   ஜோடி சேர்ந்து நாயகியாகவும் நடித்திருக்கிறார், எம்.என்.ராஜம். 'நாடோடி மன்னன்' படத்தில் மன்னராக வரும் எம்ஜிஆரின் ராணி மனோகரி இவர்தான். 'பாசமலர்' படத்தில் சிவாஜியின் ஜோடியும் இவர்தான். 



படங்களில் முன்னணி நாயகர்களுடன் நாயகியாக இணைந்து ஆடிப் பாடி எம்.என்.ராஜம் நடித்த சூப்பர் ஹிட் எவர்கிரீன் பாடல்கள் பல உண்டு. குறிப்பாக சிவாஜியுடன் ஏராளமான பாடல்களில் ஜோடியாக ஆடிப் பாடி இருக்கிறார்.




 எம்.என்.ராஜம் ஹிட் பாடல்களில் ஸாம்பிள்கள் சில...

'பாசமலர்' படத்தில் சிவாஜியுடன் பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்...


'பாவை விளக்கு' படத்தில் சிவாஜியுடன் காவியமா நெஞ்சில் ஓவியமா...


கொக்கர கொக்கரக்கோ சேவலே...


'தெய்வப்பிறவி' படத்தில் காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு...


'மங்கையர் திலகம்' படத்தில் ஒருமுறைதான் வரும், கதை பல கூறும், உல்லாச புதுமைகள் கூறும் இளமை வர்ணங்கள் பலவாறு காட்டும்...


'ரத்தக் கண்ணீர்' படத்தில் ஆளை ஆளை பார்க்கிறார் ஆட்டத்தை பார்க்கவில்லை ஆளை ஆளை பார்க்கிறார்...


'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தில் சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கல்கண்டே...


எம்ஜிஆருடன் 'திருடாதே' படத்தில் ஓ மிஸ்டர் பாலு...


எஸ்எஸ்ஆருடன் தாரா தாரா வந்தாரா சங்கதி ஏதும் சொன்னாரா...

அவ்வளவு ஏன்? வில்லன் நடிகர் எம்என்நம்பியாருடன் கூட ஜோடி போட்டு பாடி ஆடி நடித்திருக்கிறார், எம்.என்.ராஜம். அந்த பாடல், 'மக்களைப் பெற்ற மகராசி' படத்தில் இடம்பெற்ற ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா...




1970களுக்குப் பிறகு தனது வயதுக்கு ஏற்ற வேடங்களுக்குள் தன்னை நுழைத்துக் கொண்டு, கிராஜூவலாக தமிழ் சினிமாவில் தன்னை நீடித்துக் கொண்டார்.



பெண்மணி அவள் கண்மணி,  திருமதி ஒரு வெகுமதி, அந்த ஒரு நிமிடம், மாங்குடி மைனர் என 1980 களிலும் அவரது திரைப்பபயணம் தொடர்ந்தது. 

அதன் பிறகும் கூட 'மறுமலர்ச்சி' படத்தில் ரஞ்சித்தின் தாயார், 'பம்மல் கே சம்பந்தம்' படத்தில் கமலின் பாட்டி, 'திருப்பாச்சி' படத்தில் த்ரிஷாவின் பாட்டி, 'மருதமலை' படத்தில் ஹீரோயினின் பாட்டி, 'இம்சை அரசன் 23ம் புலிகேசி'... 

இப்படியாக, 1950களில் ஆரம்பித்த இவரது கலைப்பயணம் தொய்வு இல்லாமல் 2k கடந்தும் நீடிக்கிறது. சின்னத்திரை தொடர்களிலும் எம்.என்.ராஜம் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரம், வில்லி, நாயகி, குண சித்திரம், அம்மா, பாட்டி என எழுபது ஆண்டுகளாக நீடித்ததோடு இன்றைய மாஸ் மீடியாவான சின்னத்திரை வரையிலும் ஆரவாரம் இல்லாமல் முத்திரை பதித்த பெருமை எம்.என்.ராஜத்தை மட்டுமே சேரும்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையும் இவரையே சேரும். தமிழ் திரையுலகில் வெளிமாநில நடிகைகள் கோலோச்சியபோது மதுரையில் இருந்து வந்து தமிழ்ப் பெண்ணாக கலக்கியவர், எம்.என்.ராஜம்.

இவ்வளவு பெருமைக்குரிய எம்.என்.ராஜமின் கணவரும் ஒரு திரை பிரபலம் தான். அவர் யார் தெரியுமா? அவர் பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Monday 17 January 2022

அது ஒரு பொ(ற்)ங்கல் காலம்

வருஷா வருஷம் களை கட்டுற நாலு நாள் பொங்கல் திருழாவுக்காவ நாலு வாரத்துக்கு முன்னேயே ரெடியாயிருவோம். நெட்டூரு ரோட்டுல சுண்ணாம்பு காளவாயிக்கு போயி சாக்குல சுண்ணாம்புக் கல் வாங்கியாந்து தண்ணீரில கொட்டினதும் சுறுசுறுன்னு பொங்க ஆரம்பிச்சதுமே சந்தோஷமும் பொங்க ஆரம்பிச்சிரும். மறுநா காலைல அடங்கிக் கிடக்கிற சுண்ணாம்புத் தண்ணியில நீலப் பொடிய கலந்து சுவத்துக்கு அடிச்சதும் பொங்கல் களை கட்ட ஆரம்பிச்சிரும்.

இப்பல்லாம் ஒரு வாட்டி அடிச்சா ஏழெட்டு வருஷம் நிம்மதியா இருக்கலாம்னு பெயிண்ட் வந்தாச்சி, வீடுங்களும் மாறியாச்சி.

.

மழைய மட்டுமே எதிர்பாத்து கிடக்குற விளங்காட்டில விளைஞ்ச தட்டைப் பயிறு, கானம், சிறு பயிறு இதெல்லாம் அறுவடை முடிஞ்சி வர ஆரம்பிச்சிரும். கூடவே, பனங்காட்டு குழியில போட்டிருந்த பனங்கொட்டையும்  நல்ல பனங் கிழங்கா விளைஞ்சிருக்கும். இதெல்லாம் பொங்கல் கால ஸ்பெஷல் அயிட்டங்கள்.

.

வெள்ளையடிச்ச பிறகு, வீட்டு திண்ணையில (இப்பல்லாம் கிராமங்கள்ல கூட திண்ணைய பாக்க முடியல) காவி கலரில பட்டை பட்டையா கோடு போட்டதும் வீட்டுக்கே ஒரு பொலிவு வந்திரும்.

செம்மண்ணை எடுத்து வந்து கொழைச்சி சின்ன சைஸ் குத்துச்சட்டி அளவுக்கு கட்டியா பிடிச்சி, காய வச்சி, அதுக்கும் சுண்ணாம்பு, காவில்லாம் ரெண்டு நாளைக்கு முன்னே அடிச்சி காய வச்சிருவோம். இதுதான் பொங்கல் பானை வைக்கிறதுக்கு கல். இப்ப ஸ்டவ்விலயே பொங்கல் வைக்க ஆரம்பிச்சாச்சி. 

.

ரெண்டு வாரத்துக்கு முன்னே கடைகளல்லாம் கலர் கலர் படங்களா பொங்கல் கிரீட்டிங் கார்டு குவிஞ்சி கிடக்கும். 25 பைசா அட்டையில ஆரம்பிச்சி, கவருக்குள்ள வச்சி அனுப்புறா மாதிரி கட்டிங் படங்கள், ஜிகினா படங்கள்னு விதம் விதமா தொங்க விட்டிருப்பாங்க.



அன்றைய முதல்வர் எம்ஜிஆர், சினிமா எம்ஜிஆர் தொடங்கி ரஜினி, கமல், சில்க், அம்பிகா, ராதான்னு ஒரு வகையான படங்களும் வயல்வெளி, சாமிங்கன்னு மற்றொரு வகையான படங்களும் நிறைஞ்சிருக்கும். தீபாவளிக்கு பட்டாசுன்னா பொங்கலுக்கு இதுதான். 



சில கிரீட்டிங் கார்டுகள்ல இருக்கிற படத்தை பார்த்ததும் அனுப்பவே மனசே வராம வீட்டில ஓரமா வச்சிருந்ததும் உண்டு. தேவையான அளவு ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பலைன்னா கிரீட்டிங் கார்ட போஸ்ட் மேன் தரும்போது ஃபைன் போடுவாங்க.



பொங்கல் முடிஞ்ச பிறகு ஒரு வாரத்துக்கு நன்றி கார்டு சீஸன். பொங்கல் வாழ்த்து சொல்லி அனுப்புன ஒவ்வொருத்தருக்கும் பதிலுக்கு அந்த கார்ட அனுப்புவாங்க. அதுக்காக தனியா பொங்கல் நன்றி கார்டுகளும் விப்பாங்க... இப்பல்லாம் உடனடியா வாட்ஸ் ஆப்பிலயே ரிப்ளை பண்ணிடுறோம்.

.

மார்கழி கடைசி நாள் ராத்திரி பனங் காட்டில இருந்து பனை ஓலைக் கட்டு, பச்சை பனை மட்டை (பொங்கல் சோறு கிளறுவதுக்காக), ஆவாரம் பூ, மாவிலை, கண்புழை செடி, அருகம் புல். அப்புறம் கடையிலருந்து கரும்பு, மஞ்சக் கொழை எல்லாம் வீட்டுக்கு வந்து சேந்திரும். ஒரு பொங்கல் ன்னிக்கு காட்டிலருந்து கொண்டு வந்து தந்த ஓலைக்கட்டுக்குள்ள சின்ன சைஸ் பாம்பு ஔிஞ்சிருந்ததும் அதை உரல் உலக்கையாலேயே அம்மா அடிச்சி கொன்னதும் நினைவுகள்.

.

தை முதல் நாள் பொங்கல் அன்னிக்கு குளிருக்குள்ள காலையில நாலு மணிக்கெல்லாம் எந்திரிச்சி, குளிச்சிட்டு... காவி அடிச்சி வச்சிருக்கிற மண்ணு கட்டிய அடுப்பா கூட்டி... வெண்கலப் பானையில அம்மா பச்சரிசிய களைஞ்சி போடுவாங்க. பனை ஓலைய எடுத்து வைக்கிற வேலை எங்களது. சரியா ஈசான மூலையில பொங்க பான பொங்கி வரவும் காலையில சூரியன் வரவும் ரொம்ப சரியா இருக்கும். அப்ப அம்மா விடுற குலவைச் சத்தம் இன்னும் காதுக்குள்ளாற கேட்டுக் கிட்டே இருக்கு.

அந்த அடுப்பிலயே பச்சை மட்டைய கரண்டியாக்கி பொங்கல் சோறு ஆக்கி (பச்சை மனை மட்டை வாசத்தோட அந்த பொங்கல் சோறு இப்பவும் நாசிய சுத்திகிட்டு கிடக்கு), நிறைய காய்கனிகளை போட்டு சாம்பார், அவிச்ச பனங்கிழங்குன்னு எல்லாத்தையும் அம்மா ரெடி பண்ணிருவாங்க. அதுக்குள்ள அப்பாவோட சேந்து சாமி கும்பிட கரும்பு கட்டுறது, வீடு முழுசா சந்தனம் குங்குமம் வைக்கிறதுன்னு வேலை போயிட்டிருக்கும்.

.

ஒரு வழியா ஒம்பது மணிக்குள்ள பொங்கல் வச்சி முடிஞ்சி சாமி கும்பிட்டுட்டு, புது டிரஸ் போட்டுட்டு ஆலங்குளம் தியேட்டருக்கு முதல் ஆட்டம் (அப்ப அஞ்சி ஷோ. மொத ஷோ காலை 9.30மணிக்கு ஆரம்பிக்கும்)பார்க்க கிளம்புவோம்.

உதயகீதம், காக்கிச் சட்டை, சிப்பிக்குள் முத்து, பாட்டி சொல்லை தட்டாதே, கரகாட்டக்காரன்னு  பொங்கல் படங்கல்லாம் இன்னும் ஞாபத்துக்குள்ள, புஸ்தக மயிலிறகா பத்திரமா இருக்கு.

.

பொங்கலுக்கு மூணு நாலு நாளைக்கு விளையாட்டு விழா நடக்கும். பானை உடைத்தல், மங்கைக்கு திலகம் வைத்தல், முறுக்கு கடித்தல்னு ஜாலி விளையாட்டில தொடங்கி ஓட்டப் பந்தயம், கபடி, சைக்கிள் ரேஸ்னு வீர விளையாட்டுகள் வரை நடக்கும். பக்கத்து ஊரெல்லாம் சுத்தி வருவது மாதிரில்லாம் சைக்கிள் ரேஸ் நடக்கும். ஊரே அங்கின தான் கூடி நிப்பாங்க. சைக்கிள் ஸ்லோ ரேஸ், நைட்ல நடக்கிற மேடை போட்டிங்கள்ல பேச்சுப் போட்டி என்னோட பேவரைட். பரிசெல்லாம் கூட  வாங்கிருக்கேன்.

.

இப்பல்லாம் தை குளிருக்கு போர்வைக்குள்ள பதுங்கி கிட்டு வாட்ஸ் ஆப்பில வாழ்த்து அனுப்பும் போது, பொங்கல் விளையாட்டு விழா பாக்கும் போது அந்த கூட்டத்துக்குள்ள எங்க ஊரு போஸ்ட் மேன் காந்தி சார், தேடி வந்து வாழ்த்து அட்டைய தந்ததும் ஜன்னல் வழியா பொங்கல் வாழ்த்து கார்டை போட்டுட்டு போன ஃபிரண்டு ரவியும்தான் செல்போன் ஸ்கிரீன்ல தெரியுறாங்க.

.

ஏழு மணிக்கு எழுந்திருச்சி, ஸ்டவ் அடுப்பிலேயே அவசர பொங்கல் வச்சிட்டிருக்கப்ப தீபாவளி மாதிரி பொங்கலுக்கு மட்டன் கிடையாதாப்பான்னு பையன் கேக்குறப்ப பொங்கல கெட்டி தயிர் ஊத்தி சாப்பிட்டது ஞாபகத்துக்கு வருது.

பத்து பதினோரு மணிக்குள்ள பொங்கல முடிச்சிட்டு டிவியில சினிமா, ஜல்லிக்கட்டுன்னு லைவ் ஷோ பார்த்துட்டு, இந்தக்கால பொங்கலும் நிழற்படமாத்தான் போயிட்டிருக்கு, அடுத்த தலைமுறைக்கு எந்தவொரு உணர்வுப்பூர்வமான பொங்கல் நினைவுகளையும் பரிமாற முடியாமலேயே...

#நெல்லை_ரவீந்திரன்

Saturday 15 January 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளச்கள் -28

பிரபல வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதனை பலருக்கும் தெரியும். ஆனால் அவர் ஏராளமான ஹிட் பாடல்களின் இசையமைப்பாளர் என தெரியுமா? அவரைப் பற்றித்தான் இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். குன்றக்குடியில் பிரபல சங்கீத பரம்பரையில் பிறந்தவர் வைத்தியநாதன். கர்நாடக இசைக்கலைஞரான அவரது தந்தைக்கு மிருதங்கம், வயலின், புல்லாங்குழல், கிடார் போன்றவையும் வாசிக்கத் தெரியும். அவரிடம் இருந்து 8 வயதிலேயே வயலினை வாசிக்க கற்றுக் கொண்டார் வைத்திய நாதன்.

அதன் பிறகு, வாழ்நாள் முழுவதும் வயலினை சுமந்த குன்னக்குடி வைத்தியநாதன், பக்க வாத்திய கருவியான வயலினுக்கு தனி மரியாதையையே பெற்றுத் தந்தவர். இசைக் கச்சேரிகளில்  பாடகர் நடுநாயகமாக இருக்க மற்ற இசைக் கலைஞர்கள் எல்லாம் சுற்றி அமர்ந்திருப்பார்கள். ஆனால், இவரது கச்சேரியில் வயலின் தான் நடுநாயகம். அவர் வாசித்தால்  வயலின் பாடும், சிரிக்கும். குன்னக்குடி வைத்தியநாதனின் முக பாவனைக்கு ஏற்ப வயலின் இசைக்கும். அவரது வயலினை அனுபவித்தவர்களுக்கு இது புரியும்.

ஆரம்ப காலத்தில் இருந்து 3000 மேடைக் கச்சேரிகளுக்கு மேல் வாசித்திருக்கிறார் குன்னக்குடி வைத்தியநாதன். பிரபல இசைக் கலைஞர்களான செம்மங்குடி சீனிவாச அய்யர், மகாராஜபுரம் சந்தானம், வலையப்பட்டி சுப்பிரமணி, சூலமங்கலம் சகோதரிகள்  (கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசத்தின் பிரபலமான பாடலை பாடியவர்கள்) என கச்சேரி வாசித்திருக்கிறார் குன்னக்குடி வைத்தியநாதன். இசைக் கச்சேரிகளுடனேயே சினிமாவிலும் அடியெடுத்து வைத்தார்.



அவருக்கு சென்னையில் ஆதரவு அளித்து சினிமா என்ட்ரி கொடுத்தது சூலமங்கலம் ராஜலட்சுமி, ஜெயலட்சுமி சகோதரிகள். இசையமைப்பாளராக அறிமுகம் செய்து நிறைய பட வாய்ப்புகளையும் தந்தவர், பக்திப் படங்களின் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் (திருவிளையாடல் படத்தின் நக்கீரர்). அவர்தான் அவரது தயாரிப்பில் உருவான 'வா ராஜா வா' என்ற படத்தில் 1969ம் ஆண்டில் இசையமைப்பாளராக்கினார். அதன் பிறகு சுமார் 10 ஆண்டுகளில் 20 படங்களுக்கு இசையமைத்தார் குன்னக்குடி வைத்தியநாதன். 

எம்ஜிஆர் ஒன்பது நாயகிகளுடன் நடித்த 'நவரத்தினம்' படத்தின் இசை இவர்தான். சிவாஜி, ஜெமினி, கே.பி.சுந்தராம்பாள், சிவக்குமார் என பல பிரபலங்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தமிழ் திரையுலகின் முதல் சினிமாஸ்கோப் படமான 'ராஜராஜ சோழன்' படத்துக்கும் இவர் தான் இசையமைப்பாளர்.

சீர்காழி கோவிந்த ராஜன் நடித்த 'அகத்தியர்', கே.பி.சுந்தராம்பாளின் 'காரைக்கால் அம்மையார்', திருமலை தெய்வம், திருவருள், தெய்வம், திருமலை தென்குமரி, மனிதனும் தெய்வமாகலாம், குமாஸ்தாவின் மகள், மேல்நாட்டு மருகமள், தோடி ராகம்... இவை எல்லாம் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் உருவான படங்கள். இதில் தோடி ராகம் திரைப்படம் அவரது தயாரிப்பு என்பது கூடுதல் தகவல்.

குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த திரைப்பாடல்களில் கிட்டத்தட்ட  அனைத்துமே இன்று வரை ரசிகர்களின் மனதை வசீகரிப்பவைதான். 

தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை..., குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்..., மருதமலை மாமணியே முருகையா..., மதுரை அரசாளும் மீனாட்சி..., மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க..., என்னடா தமிழ் குமரா எனை நீ மறந்தாயோ...,  முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே நினைத்திருந்தேன்..., உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே...,

நமச்சிவாய என சொல்வோமே நால்வகை துன்பத்தை வெல்வோமே..., தக தக தகவென பாடவா சிவ சக்தி சக்தியோடு ஆடவா..., தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே... எழுதி எழுதி பழகி வந்தேன் எழுத்துக் கூட்டி பாட வந்தேன் பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்... இவை எல்லாம் குன்னக்குடியின் பக்தி ரசம் சொட்டும் பாடல்களில் சில.

இது மட்டுமல்ல..., கல் எல்லாம் சிலை செய்தான் பல்லவ ராஜா..., உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியல நம்மை கண்ண நம்மாலே நம்ப முடியல.., இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான்..., பால் பொங்கும் பருவம் அதில் நான் தங்கும் இதயம்..., குருவிக்கார மச்சானே நம்ம கடவுள் சேத்து வச்சானே..., காலம் செய்யும் விளையாட்டு அது கண்ணாமூச்சி விளையாட்டு..., 

என மற்ற பாடல்களிலும் புகுந்து விளையாடி இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக தோடி ராகம் படத்தில் இடம் பெற்ற 'கொட்டாம் பட்டி ரோட்டிலே குட்டி போற ஷோக்கில நான் ரொட்டியத்தான் திம்பனா குட்டியத்தான் பாப்பனா...' என்ற பாடல் அவரது இசையின் வேறு ரகம். அந்த பாடலை பாடியதும் அவர்தான்.

கர்நாடக இசை, வயலின், திரை இசை, பின்னணி பாடகர் என கலக்கிய குன்னக்குடி வைத்தியநாதன் பத்மஸ்ரீ, கலைமாமணி போன்ற விருதுகளை பெற்றிருக்கிறார். திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா நடத்தும் குழுவின் செயலாளராக 28  ஆண்டுகள் பதவி வகித்திருக்கிறார். இசையால் நோய்களை குணமாக்க முடியுமா என ஆய்வு செய்வதற்காக ஆராய்ச்சி மையமும் துவக்கினார்.



இசைக்காகவே வாழ்நாளை முழுமையாக ஒப்படைத்த குன்னக்குடி வைத்தியநாதன், தமிழ் சினிமாவிலும் 20 படங்களுக்கு இசையமைத்ததோடு 'திருமலை தென்குமரி' படத்துக்காக தமிழக அரசிடம் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை பெற்றிருக்கிறார்.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Saturday 8 January 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -27

தமிழ் திரைப்பட உலகின் தவிர்க்க முடியாத, பலரும் அறியாத ஆளுமையாக  சிதம்பரம் எஸ். ஜெயராமனை சொல்லலாம். சுருக்கமாக சி.எஸ்.ஜெயராமன். பின்னணி பாடகர். 1949 தொடங்கி 1965 வரை திரைப்பட பின்னணி உலகில் கோலோச்சியவர். எம்ஜிஆர், சிவாஜி, எம்ஆர் ராதா தொடங்கி கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்டிஆர் என பலருக்கும் குரல் கொடுத்திருக்கிறார், சி.எஸ். ஜெயராமன். 



'பராசக்தி' படத்தில் தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசு முன் செல்லாதடி... நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்... கா கா கா ஆகாரம் உண்ண எல்லோரும் அன்போட ஓடி வாங்க...


'ரத்தக் கண்ணீர்' படத்தில் எம்ஆர் ராதாவின் குரலுடன் இணைந்து வரும் குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி ஏது...? என அவர் பாடிய பாடல்கள் எல்லாம் அந்தக் கால சூப்பர் ஹிட். 

இதுபோலவே,  விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே... ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே குற்றால அழகை நாம் காண்பதற்கு... காவியமா நெஞ்சில் ஓவியமா அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா.. வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள் கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்...

உள்ளம் ரெண்டும் ஒன்று (புதுமைப் பித்தன் படத்தில் எம்ஜிஆருக்காக)... அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை அது அறுந்திடாமல் பாதுகாக்கும் பாசவலை... அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் அன்பே உடல் நின் உயிர் நீ ... 

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெருங் கூட்டிருக்கு கோனாரே இத ஓட்டி ஓட்டி திரிபவர்கள் ஒரு முடிவுங்காணாரே... உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்... ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே மனுஷன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே... இன்று போய் நாளை வா என எனை ஒரு மானிடன்... (சம்பூர்ண ராமாயணம் படத்தில் ராவணனுக்காக)... 

இவையெல்லாம் நூற்றுக்கணக்கில் சிஎஸ் ஜெயராமன் பாடிய பாடல்களில் சில முத்துக்கள். அவர் பாடியவற்றில் பெரும்பாலானவை, 60ஐ கடந்தவர்கள் மட்டுமல்ல இன்றைய தலைமுறையும் ரசிக்கும் வகையிலான பாடல்கள்.

இசைக்காக தன்னையே அர்ப்பணித்தவர் சிஎஸ் ஜெயராமன் என்றே சொல்லலாம். தியாகராஜ பாகவதருக்கே இரண்டு ஆண்டுகள் பாட்டு கற்று கொடுத்திருக்கிறார்.

தெய்வப்பிறவி படத்துக்காக அன்பாலே தேடிய என் அறிவு செல்வம்... என இவர் பாடிய பாடலில் வரும் பெண் குரல் ஹம்மிங்குக்காக  பாட வந்த எஸ் ஜானகியை மற்றவர்கள் திரும்ப அனுப்பியபோது தடுத்து நிறுத்தி ஜானகியை பாட வைத்திருக்கிறார். அந்த வகையில் பாடகி எஸ்.ஜானகியை தமிழ் திரையுலகுக்கு தந்தவர் சிஎஸ் ஜெயராமன் என்றே சொல்லலாம். 



சி.எஸ்.ஜெயராமனுக்கு பின்னணி பாடகர் தவிர, இன்னும் பல முகங்கள் உண்டு. அதில் ஒன்று இசையமைப்பாளர் முகம். நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் எவர்கிரீன் ஹிட் படமான ரத்தக் கண்ணீருக்கு இசையமைப்பாளர் இவர் தான். அந்த படத்தில் குற்றம் புரிந்தவன் பாடலுக்கு இடையே எம்ஆர் ராதா பேசும் வசனமும் வரும். அது போன்று திரைப்பட பாடலில் அறிமுகம் செய்து புதிய மாற்றத்தை ஏற்படுத்தி அதில் வெற்றியும் பெற்றார். 

எல்லாவற்றுக்கும் முன்பாக ஆரம்பத்தில் சிஎஸ் ஜெயராமன் ஒரு நடிகர். அப்படித்தான் 16 வயதிலேயே திரையுலகில் அடி எடுத்து வைத்தார். தமிழில் பேசும் படம் வெளியான மூன்றாம் ஆண்டில் (1934) இவர் நடித்த கிருஷ்ண லீலா வெளியானது. அதில் இவர்தான் கிருஷ்ணர். இதுபோல, கிருஷ்ண பக்தி, நல்ல தங்காள், துருவா, விஜயகுமாரி என 1950 வரை படங்களில் நடித்தார்.

அதன் பிறகுதான் அவர் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் எல்லாம். 



திரையுலகை தாண்டியும் சிஎஸ் ஜெயராமனின் சாதனைகள் அதிகம். சிதம்பரத்தில் 'கலைஞன்', என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை ஒரு சில ஆண்டுகள் நடத்தி இருக்கிறார். அண்ணா ஆட்சியில் இசைக் கல்லூரி முதல்வராகவும் எம்ஜி ஆர் ஆட்சியில் அனைத்து இசைக் கல்லூரிகளின் கவுரவ ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். 

இது தவிர டேபிள் டென்னிஸ், கேரம் விளையாட்டுகளில்  இவர் சாம்பியன். கேரம் விளையாட்டில் பதக்கம் தட்டியவர். கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த பிளேசர் ரக காரை சென்னையில் வாங்கிய இரண்டாவது ஆள் இவரே. மொத்தம் 8 கார்களை வைத்திருந்தாராம் சிஎஸ் ஜெயராமன்.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதி அம்மாளின் மூத்த சகோதரர் தான் சிஎஸ்  ஜெயராமன். கருணாநிதியின் மகனும் நடிகருமான மு.க.முத்துவுக்கு தாய்மாமன். 

தமிழ் சினிமாவின் மிக ஆரம்ப காலத்தில் நுழைந்து என்.எஸ்.கே, தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர்,  சிவாஜி, எம்.கே.ராதா, எம்.ஆர்.ராதா என திரை பிரபலங்களின் நெருங்கிய நண்பரான சிஎஸ் ஜெயராமன் பிறந்த தினம் இன்று ஜனவரி 6.

#நெல்லை_ரவீந்திரன்

Tuesday 4 January 2022

அறிந்த பொக்கிஷம் ... அறியாத பவளங்கள் -26

சினிமாவில் படிக்காத மேதைகள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். பள்ளி படிப்பை தாண்டாத கவியரசு கண்ணதாசன் எப்படியோ? திரையில் அவருக்கு முன்னோடி இவர். பொதுவுடைமைவாதி. குறுகிய காலமே வாழ்ந்தாலும் வாழ்க்கையில் பெரும்பகுதியை வறுமையில் கழித்து சமூக அவலங்களுக்கு எதிராக பாடல் வரிகளால் சாட்டை சுழற்றியவர். 

பட்டுக்கோட்டையில் திண்ணைப் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே படித்தாலும் பிறவியிலேயே கவிஞானம் பெற்றவர். தனது 15 வயதிலேயே கவிதை எழுதத் துவங்கியவர். புதுவை கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் குயில் பத்திரிகையில் பணிக்கு சேர்ந்து அ.கல்யாண சுந்தரம் என்ற பெயரை அகல்யா என்ற புனை பெயருடன் எழுத துவங்கினார். அவருக்கு எழுதவும் கவிதை வடிக்கவும் கற்றுக் கொடுத்தவர் பாரதிதாசன் தான். பட்டுக்கோட்டையாருக்கு எல்லாமே பாரதி தாசன் தான். பட்டுக் கோட்டையாரின் திருமணம் கூட பாரதிதாசன் தலைமையில் தான் நடந்தது.



பட்டு்கோட்டையாரின் தந்தையும் கும்மி பாடல்கள் எழுதுவதில் சிறந்தவர். அதனால் தானோ என்னவோ, பட்டுக் கோட்டையாரும் பாடல்களை சந்த நயத்துடனேயே எழுதுவார். சுயமரியாதை இயக்கம் பொதுவுடைமை இயக்கம் போன்றவற்றில் ஈடுபாட்டுடன் இருந்ததால் அவற்றின் ஆரம்ப கால தலைவர்களும் அவருக்கு பழக்கம். 

நாடகம், நடிப்பு, பாடல் என இருந்தாலும் அவரது வயிறு ஒருபோதும் நிரம்பியதில்லை. தோழர் ஜீவா வாயிலாக 'ஜனசக்தி' பத்திரிகையிலும் வேலை பார்த்திருக்கிறார். பல இன்னல்களுக்கு இடையே 25ஆவது வயதில் சினிமா பாடலாசிரியர் ஆனார், பட்டுக்கோட்டையார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் அவரது பாட்டுக் கோட்டை தான்.

படித்த பெண் (1956) என்ற படத்துக்கு பாடல் எழுதினாலும் முதலில் ரிலீசானது அவர் இரண்டாவது பாடல் எழுதிய மகேஸ்வரி (1955) படம் தான். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 60 படங்கள். 250 பாடல்கள். எம்ஜிஆருக்கு 7 படங்கள், சிவாஜிக்கு 11 படங்கள் என பாடல்களை எழுதினார் பட்டுக் கோட்டையார். நாடோடி மன்னன், மகாதேவி, சக்கரவர்த்தி திருமகள், அரசிளங்குமரி, திருடாதே, கலை அரசி, விக்கிரமாதித்தன் இப்படி எம்ஜிஆருக்கு.

அம்பிகாபதி, புதையல், பாகப் பிரிவினை, மக்களை பெற்ற மகராசி இப்படி சிவாஜிக்கு. கல்யாண பரிசு மாதியான படங்களில் ஜெமினிக்கு. இது மாதிரியாக  பட்டுக் கோட்டையாரின் வரிகள் தமிழ் சினிமாவில் சுழன்றடித்தன. 




திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே..., தூங்காதே தம்பி தூங்காதே பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலை எல்லாம் தூங்குதப்பா..., சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாக கூட நம்மி விடாதே நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே... 


குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா...  மனுசன் பொறக்கும்போது இருந்த குணம் போகப்போக மாறுது, எல்லாம் இருக்கும்போது போன குணம் இறக்கும்போது வந்து சேருது... பட்டப் பகல் கொள்ளையரை எல்லாம் பட்டாடைதான் மறைக்குது..., சும்மா கிடந்த நிலத்த கொத்தி சோம்பல் இல்லாம ஏர கூட்டி.. ஏற்றமுன்னா ஏற்றம் அதில் இருக்குது முன்னேற்றம்.. விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும் வீணர் எல்லாம் மாறணும்... ஆதி மகள் அவ்வை சொல்லை அலசி பார்த்தா மனசில நீதி என்ற நெல் விளையும் நெரிஞ்சி படர்ந்த தரிசிலே...


இவை எல்லாம் எம்ஜிஆரின் ஆரம்ப கால படங்களுக்கு எழுதிய வரிகள். எல்லாவற்றுக்கும் மேலாக நாடோடி மன்னனில் "நமக்கு காலம் இருக்குது பின்னே, சேரிக்கும் இனி இன்பம் திரும்புமடி, நானே போடப்போறேன் சட்டம் நன்மை புரிந்திடும் திட்டம் நாடு நலம்பெறும் திட்டம் "  என்ற வரிகள் எல்லாம் எம்ஜிஆருக்கு தீர்க்க தரிசனமாக அமைந்தவை. அதனால்தான் முதல்வரானதும் "எனது முதல்வர் நாற்காலியில் மற்ற மூன்று கால்கள் எப்படியோ தெரியாது. ஒரு கால் நிச்சயமாக பட்டுக்கோட்டையார் தான்" என கூறினார், எம்ஜிஆர்.

எம்ஜிஆருக்கு மட்டுமல்ல மற்றவர் படங்களிலும் பட்டுக்கோட்டையாரின் சாட்டை வரிகள் சுழன்றன. 

வெறும் திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிருக்கனும் அண்ணாச்சி..., குட்டி ஆடு தப்பி வந்தா கொறவனுக்க சொந்தம் தட்டுக் கெட்ட மனிதருக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்... மனுஷன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே... கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியலியே... இப்படி பாடல்களால் வெளுத்து வாங்கியவர் பட்டுக் கோட்டையார். 



அவரே தான் கைத்தறிக்காக  'சின்ன சின்ன இழை பின்னி பிணைந்து சித்திர கைத்தறி சேலை அணிந்து...' என பாடல் எழுதினார். இப்படியே பட்டுக்கோட்டையாரை அடக்கி விட முடியாது. 

சவுபாக்கியவதி படத்தில் 'கங்கை அணிந்தவா கண்டோர் தொழும் நாதா தில்லையம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா..., 

பாகப்பிரிவினை  படத்தில் 'பானை வயிற்றோனே பக்தர்களை காப்பவனே மூலப் பொருளோனே...,

பதிபக்தி படத்தில் ஓங்கார ரூபி நீ ஆங்கார மோகினி... என பக்தியிலும் புகுந்து விளையாடி இருப்பார். 

ஆரவல்லி படத்தில் 'சின்னக்குட்டி நாத்தனா சில்லறைய மாத்தினா குன்னக்குடி போகும்  கூண்டு வண்டில குடும்பத்தையே ஏத்துனா... என நையாண்டி பாடலும் அவர்தான்.

இன்றளவும் காதலின் பெருமை பேசும் கல்யாண பரிசு படத்தின் காதல் ரசம் சொட்டும்,

'துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதையை சொல்லும்..., ஆசையினாலே மனம்  அஞ்சுது கெஞ்சுது தினம்...,  வாடிக்கை மறந்ததும் ஏனோ... என அனைத்து பாடல்களையும் எழுதியவர் அவரே.

அதே படத்தில் காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் காலம் கடந்த பின்னே அமைதி எங்கு பெறுவான்... அன்பு மயில் ஆடலுக்கு மேடை அமைத்தான் துன்பம் எனும் நாடகத்தை கண்டு ரசித்தான் என்ற காதல் தோல்வி வரிகளும் அவரே. 

முகத்தில் முகம் பார்க்கலாம் விரல் நகத்தில் பவளத்தின் நிறம் பார்க்கலாம்... என காதலியை வருணீப்பதிலும் பட்டுக்கோட்டையாரை மிஞ்ச முடியாது.

ஐந்தே ஆண்டுகளில் சினிமாவுக்காக எழுதிய பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் அனைத்தும் சாகா வரம் பெற்றவை. ஆனால் அவர்தான் 29 வயதிலேயே விண்ணுலகம் சென்று விட்டார். 



மகாகவி பாரதியை போலவே புதுச்சேரியில் பட்டை தீட்டப்பட்டவர், பாரதி போலவே சமூக சீர்திருத்த பாடல்களை எழுதி வைத்து விட்டு சிறு வயதிலேயே மறைந்து போனார், இந்த மக்கள் கவிஞர்.  சைனஸ் பிரச்சினை, மூளையில் ரத்தக்கட்டு என 29 வயதிலேயே விண்ணுலகம் சென்று விட்டார், பட்டுக்கோட்டையார். 

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்