Wednesday 8 September 2021

அரசவைக் கவிஞருக்கு அஞ்சலி


கண்ணதாசன், வாலி தொடங்கி வைரமுத்து காலம் கடந்தும் புதிய தலைமுறை வரை பாடல்கள் எழுதியவர். எம்ஜிஆரின் குடியிருந்த கோயில் (1968) துவங்கி அவரது ஆஸ்தான கவிஞர். நான் யார் நீ யார் நாலும் தெரிந்தவர் யார் யார்..  பாடல் துவங்கி எஸ்பிபி தமிழில் பாடிய முதல் பாடலான ஆயிரம் நிலவே வா.. உட்பட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை எழுதிய கரங்களுக்குச் சொந்தக்காரர்.

நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற... பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கிறது... ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்... ஒன்றே குலமென்று பாடுவோம்... சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே... என எம்ஜிஆருக்கு கொள்கை பாடல்கள் மட்டுமல்ல...

பாடும்போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று... இந்த பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன்... என்ன சுகம் என்ன சுகம் உன்னிடம் நான் கண்ட சுகம்... என காதல் ரச பாடல்களையும் சேர்த்து காலத்தால் அழியாத காவிய பாடல்களை வடித்தவர். 

தமிழக அரசின் அரசவைக் கவிஞர் (இந்த பதவியை அலங்கரித்த மற்றொருவர் கண்ணதாசன்). அன்றைய தமிழக சட்ட மேலவையின் துணைத் தலைவர். அப்போது சட்ட மேலவை தலவராக இருந்தவர் தமிழக வட எல்லைக்காக போராடிய ம.பொ.சிவஞானம்.

எம்ஜிஆர் காலத்துக்கு பின்னும் பாக்யராஜ், கமல், ரஜினி, மம்முட்டி, பிரபு, விஜய், விக்ரம், வடிவேலு வரை பாடல்களை எழுதித் தள்ளியவர். 

உச்சி வகிடெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி... அழகிய விழிகளில் அறுபது கலைகள்.. அம்மாடி இதுதான் காதலா... ராத்திரியில் பூத்திருக்கும் தாமரையோ... கண்மணியே பேசு... அடி வான்மதி என் வான்மதி பாரு பாரு என்றால்... அதோ மேக ஊர்வலம் இதோ காதல் உற்சவம்... கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா... தென் பாண்டிச் சீமையில தேரோடும் வீதியில... உன்னால் முடியும் தம்பி... சாதி மல்லி பூச்சரமே தங்கத் தமிழ் பாச்சரமே...

இப்படியாக அடுத்த தலைமுறை சினிமா ரசிகர்களும் முணுமுணுக்கும் ஏராளமான பாடல்கள் இவருடையதுதான் என்றால் நம்புவது கடினம்.

வாலி எழுதிய பல பாடல்கள் கண்ணதாசன் எழுதிய பாடல்களோ என்ற தோற்ற மயக்கத்தை தரும். அதுபோலவே இவரது பாடலும் கூட வாலி பாடல்களோ என்ற மாயை தருபவை.

இவரது பாடல்களில் தமிழும் இலக்கியமும் உவமையும் கூடிக் குலவி கொஞ்சுவதை தரிசிக்கலாம். எம்ஜிஆரின் சினிமா அத்தியாயத்தின் இறுதி பகுதியில் அவரது அரசியல் என்ட்ரிக்கு ஏற்ற பாடல்களை எழுதிய இவர்தான், வடிவேலு நடித்த எலி (2015) வரை பாடல்களை எழுதியிருக்கிறார்.

அவர், கவிஞர் புலமை பித்தன். 

எம்ஜிஆரின் அன்பை பெற்றதால் சினிமா மட்டுமின்றி,  அதிமுக அவைத்தலைவர் வரை அரசியல் வாழ்விலும் உயர்ந்த இவர்தான், அந்த கட்சியின் ஆரம்ப கால மேடைகளில் முழங்கிய பல பாடல்களை எழுதியவர். செயற்கரிய செயல்களை செய்தும் ஒரு சிலர் மட்டுமே ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக வெளியில் தெரியாமல் இருப்பார்கள். 

அவர்களில் ஒருவர், கவிஞர் புலமை பித்தன்..

#நெல்லை_ரவீந்திரன்