Friday 21 August 2015

புத்தபிரான்



 
நீண்டு வளர்ந்த காதுகள்
பாம்படம் அணிந்து அழகு பார்க்க
காது வளர்க்கும் கபடமற்ற
கிராமத்து மூதாட்டிகளை நினைவூட்டும்

உதடுகளில் கோடாய் விரியும்
மென்மையான சிரிப்பு
வெட்கத்தை வதனத்தில் தாங்கி
பூரித்து நிற்கும் பக்கத்து வீட்டு
அக்காளை நினைவூட்டும்

உயர்ந்து நிற்கும் குடுமியும்
தியானத்தில் ஆழ்ந்திருக்கும்
சாந்தமான முகமும்
ஊர் கோயிலில் இருக்கும்
ஜடாமுடீசுவரரை நினைவூட்டும்

நிலம் நோக்கி மூடிக் கிடக்கும்
கண்களை காணும்போதெல்லாம்
ஏரி, கண்மாயில் ஒற்றையாய்
தவமிருக்கும் கொக்குகளே
கண்முன்னே வந்து செல்லும்

பள்ளிக் கூட பருவத்தில்
இப்படித்தான் மனதினுள்
புதைந்து கிடந்தது
புத்தபிரானின் உருவம்...

= வை.ரவீந்திரன் 

Friday 14 August 2015

விடியல் பொழுதில்...






இளங்காற்று கையணைக்க
இளஞ்சூரியன் கதகதப்பு ஊட்ட
மேகப்பஞ்சு எடுத்து மனம் வருடுகிறது
ஒரு நாளின் அதிகாலை விடியல் பொழுதில்...

தவழ்ந்து அன்னநடை பயின்று
உலக வாழ்வை உணர்ந்து
தனக்கெனதொரு பரம்பரையை
ஈன்று செல்லும் மனித இனம்
இளந்தளிர் கைகள் அசைத்து
இளம் புன்னகை வீசி
பிஞ்சுக் கால்களால் நெஞ்சம் உதைக்கிறது
வாழ்க்கையின் விடியல் பொழுதில்...

துளிர் விட்டு தளிராக வளர்ந்து
மொட்டவிழ்ந்து மலராய் மலர்ந்து
உலகுக்கு உபயோகமாய் கனிகளை
சுரந்து செல்லும் தாவர இனம்
மண்ணை மெல்ல கிழித்து
விண்ணை தலை குனிந்து நோக்கி
இளம் குருத்து முகிழ முளை விடுகிறது
தனக்கானதொரு நல்ல விடியல் பொழுதில்...

ஜனனம் தொடங்கி மரணம் வரை
உலக உயிரினங்களின் வாழ்க்கை ஒன்றே...!
விடியல் மட்டும் விதிவிலக்காகி விடுமா...?


= வை.ரவீந்திரன்