Sunday 29 January 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -42

எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர், இலக்கியவாதி, முதல் தமிழ்தேசியவாதி இப்படி ஏராளமான முகம் கொண்டவர். காலத்தால் அழியாத திரைப்பாடல்களை படைத்ததில் கண்ணதாசனின் முன்னோடியான கவிஞர் கா.மு.ஷெரீப், தமிழ் திரையுலகின் பவளம்.

'முதலாளி' படத்தில் "ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே..."

'அன்னையின் ஆணை' படத்தில் "அன்னையை போல் ஒரு தெய்வமில்லை அவள் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை..."

'பணம் பந்தியிலே'  படத்தில் "பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே, இதை பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே, பிழைக்கும் மனிதனில்லே..." 

'டவுண் பஸ்' படத்தில் "சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா என்னை விட்டுப் பிரிஞ்சி போன கணவன்.."

"வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா..."

"ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப் போகுமா..."

"வானில் முழு மதியை கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்.."


இப்படி 1950களின் இறுதி துவங்கி 1960களின் துவக்கம் வரை சுமார் நானூறு பாடல்களை எழுதிய கா.மு.ஷெரீப்பின் சொந்த ஊர் தஞ்சை. பள்ளிக்கூடம் பக்கமே  போகாத இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர். 'ஔி', 'சாட்டை', 'தமிழ் முழக்கம்' என பத்திரிகைகளை நடத்திய பத்திரிகை ஆசிரியர்.


நாடகம், கவிதை, அரசியல், கட்டுரைகள், இலக்கியம், இஸ்லாமியம் என பல வகைகளில் சுமார் 50 புத்தகங்களை எழுதி இருக்கிறார். சீறாப்புராண சொற்பொழிவுகள் பற்றி புத்தகம் எழுதி இருக்கிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி 'கருணாநிதி 63' என்ற புத்தகம் எழுதி இருக்கிறார். பல கவிதை தொகுப்புகளையும் எழுதி இருக்கிறார். 'ஆயிஷா நாச்சியார் பிள்ளைத் தமிழ்', 'கண்ணகி', 'விபீஷணன் வெளியேற்றம்', 'நபியே எங்கள் நபியே' என பல புத்தகங்ளை எழுதிய இவர் சீதக்காதி பதிப்பகம் மூலம் பதிப்பாளராகவும் இருந்தவர்.



இவரது முதல் கவிதை 1933ல் குடியரசு பத்திரிகையில் வெளியானது. காங்கிரஸில் இருந்த இவர் 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். அதே நேரத்தில் தீவிரமான தமிழ் பற்றாளர். தமிழ் தேசியம் பேசுபவர்களின் முன்னோடி. தமிழ்நாட்டுக்கு திருத்தணி என்ற வட எல்லையை மீட்டுத் தந்த ம.பொ.சி.யின் தமிழரசு கழகத்தில் பின்னாளில் இருந்தார். திராவிட இயக்க தலைவர்களுடனும் நல்ல நட்பு உண்டு.



1950களில் திரையுலகில் மிகப் பிரபலமாக இருந்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் சுந்தரம், பாடலாசிரியர் மருதகாசி போன்றவர்களுடன் நல்ல பரிச்சயமானவர். கா.மு.ஷெரீப்பின் முதல் பாடல் இடம் பெற்ற படம் 'பொன்முடி'. அந்த படம் 1950ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியானது. அதன் இயக்குநர் பிரபல ஆங்கிலேயரான எல்லீஸ் ஆர்.டங்கன். 


கலைஞர் கருணாநிதியை திரையுலகுக்கு அறிமுகம் செய்தவரும் இவர்தான். அந்த காலத்தில் எல்லாம் கதாசிரியர்  மாதிரியானவர்களை எல்லாம் மாத சம்பளத்தில் வேலைக்கு வைத்துக் கொள்வது தயாரிப்பு நிறுவனங்களின் வழக்கம். அது நாடக கம்பெனிகளின் அடுத்தகட்ட வளர்ச்சியின் முதல் படியாகவும் சொல்லலாம். அப்படி ஐநூறு ரூபாய் மாத சம்பளத்தில் கருணாநிதியை சேலம் மாடர்ன் தியேட்டர்சில் கா.மு.ஷெரீப் தான் சேர்த்து விட்டார். நெஞ்சுக்கு நீதியில் கருணாநிதியே இதை குறிப்பிட்டிருக்கிறார்.

எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த இரண்டாவது படமான கருணாநிதி கதை வசனத்தில் வெளியான 'மந்திரி குமாரி' படத்தில் "உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிது போவது போல்..." என்ற பாடலை எழுதியவர் கா.மு.ஷெரீப்.


எம்ஜிஆரின் 'சர்வாதிகாரி', எம்ஜிஆர், சிவாஜி இணைந்து நடித்த 'கூண்டுக் கிளி' சிவாஜியின் 'மக்களை பெற்ற மகராசி', வில்லன் நடிகர் நம்பியார் நாயகனாக நடித்த 'திகம்பர சாமியார்', தியாகராஜ பாகவதரின் 'அமரகவி' இப்படி அன்றைய முன்னணி ஹீரோக்கள் அனைவருக்குமே பாடல்களை எழுதியவர் கவிஞர் கா.மு.ஷெரீப். 

இவரது பாடல்களை தியாகராஜ பாகவதர், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சவுந்தரராஜன், ஏ.எம்.ராஜா, ஜிக்கி, லீலா என அன்றைய முன்னணி பாடகர்கள் அனைவரும் பாடி இருக்கிறார்கள்.

இதுபோலவே ஜி.ராமநாதன், டி.ஆர்.பாப்பா, கே.வி.மகாதேவன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு என 1950களின் பிரபல இசையமைப்பாளர்கள் பலரும் இவரது பாடலுக்கு இசையமைத்திருக்கின்றனர். 

கவிஞர் கா.மு.ஷெரீப் என்றதும் எஸ்.எஸ்.ஆர்., தேவிகா நடித்த 'முதலாளி' படத்தில் வரும் "ஏரிக் கரையின் மேலே போறவளே பொன் மயிலே..." பாடலைத்தான் எல்லாரும் சொல்வார்கள். அந்த பாடல் பற்றி ஒரு கூடுதல் தகவல்.

அப்போதெல்லாம் ஆறேழு நிமிடம் வரை  மிக நீளமான பாடல்கள் வெளிவருவதுண்டு. சினிமா பாடல்களை  வட்ட வடிவமான ரிக்கார்டு முலமாகவே கேட்க வேண்டும். சின்ன பாடல் ஒரு பக்கத்தில் முடிந்து விடும். நீளமான பாடலாக இருந்தால் ஒரு பக்கம் முடிந்ததும் ரிக்கார்டு எனப்படும் இசைத்தட்டை மாற்றி போட்டு மீதி பாட்டை கேட்க வேண்டும். அது போன்ற இரண்டு பக்க பாடல்தான் ஏரிக்கரை மேலே பாடல்...

தமிழ் திரையுலகில் கண்ணதாசனுக்கு மூத்தவர் கா.மு.ஷெரீப். அவர் கவியரசர் என்றால் இவரை கவிஞர் என்றே அழைப்பார்கள். பாடல் வாய்ப்புக்காக இவர் யாரையும் தேடிச் சென்றதும் கிடையாது. பாடலுக்கு இவ்வளவு சம்பளம் என கறாராக பேசியதும் கிடையாது.

இஸ்லாமியராக பிறந்தாலும் வாழ்நாள் முழுக்க சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டவர், கா.மு.ஷெரீப். சினிமாவை தாண்டி சிறந்த எழுத்தாளராகவும்  இலக்கியவாதியாகவும் சிந்தனையாளராகவும் மனித நேயராகவும் வாழ்ந்தவர் கவிஞர் கா.மு.ஷெரீப். 

எழுத்தாளர்களை வந்து சேரும் வறுமை வாட்டியபோதும் மனம் தளராதவர். கருணாநிதி,  எம்ஜிஆருடன் நல்ல நட்பு இருந்தாலும் அவர்கள் பதவியில் இருந்தபோது, எந்தவித உதவிக்கும் அவர்களிடம் செல்லாத மனிதர். 1960களிலேயே திரைப்பாடல்களின் வரிகள் தாறுமாறாக மாறியதும் சினிமாபாடல்கள் எழுதுவதையே நிறுத்திக் கொண்டவர்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

Sunday 22 January 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -41



தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுக்கு சவால் விடும் வகையில் நாயகர்கள் யாராவது அவ்வப்போது வருவது உண்டு. அவர்களில் ஒருவர்தான் இவர். 1960களில் காதல் நாயகன். 1980களில் மிரட்டல் வில்லன். அவர்தான் ரவிச்சந்திரன்.

மலேசியாவில் பிறந்தவர். இவரது தந்தை மலேசியாவில் 'தமிழ் நேசன்' பத்திரிகையின் ஆசிரியர். கல்லூரி படிப்புக்காக திருச்சிக்கு வந்தவருக்கு மருத்துவம் படிக்க ஆசை. சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்து மருத்துவராக இருந்த அவரை சினிமாவுக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் ஸ்ரீதர் (கடந்த பதிவில் பார்த்தோமே தலைமுறை கடந்த இயக்குநர் அவர்தான்...)

1963ல் வெளியான 'காதலிக்க நேரமில்லை' படம் தான் ரவிச்சந்திரன் அறிமுகம். படம் சூப்பர் டூப்பர் ஹிட். முத்துராமன், காஞ்சனா, ராஜஸ்ரீ, நாகேஷ், டி.எஸ்.பாலையா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த அந்த படத்தில் டி.எஸ். பாலையாவுக்கு நாகேஷ் கதை சொல்லும் சீன் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காமெடி ரகம்.

முதல் படத்திலேயே கனவு நாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்த ரவிச்சந்திரன் நடித்த அடுத்தடுத்த படங்கள் எல்லாம் அமோக வரவேற்பை பெற்றவை. ஜெயலலிதாவுடன் நடித்த 'நான்', திரில்லர் படமான 'அதே கண்கள்' (கமலின் 'விக்ரம் 2' படத்தின் raw version), 'இதய கமலம்',  'உத்தரவின்றி உள்ளே வா',  'கவுரி கல்யாணம்', 'வாலிப விருந்து'...  இப்படி 100 நாட்களை கடந்த படங்கள்   ஏராளம். 

எம்ஜிஆர் போலவே படங்களை கொடுத்ததால் 'சின்ன எம்ஜிஆர்' 'ரொமான்ஸ் ஹீரோ'... இப்பிடி நிறைய பட்டங்களை கொடுத்து 1960களின் சினிமா ரசிகர்கள் இவரை கொண்டாடி தீர்த்தனர். பத்து ஆண்டுகள் தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி வசூல் நாயகனாக ரவிச்சந்திரன் வலம் வந்தார்.

அதன் பிறகு நீண்ட இடைவெளி விட்ட அவர், 1980களில் வில்லனாக சினிமாவுக்குள் மீண்டும் வந்தார். 1986ல் வெளியான 'ஊமை விழிகள்' படத்தில் மிரட்டியிருப்பார். 80ஸ் கிட்ஸ்களை தூக்கத்தில் கூட திகிலூட்டிய அந்த படத்தில் அடுத்தடுத்து கொலைகளை செய்யும் மர்ம மனிதனாக அதகளம் செய்திருப்பார் ரவிச்சந்திரன்.



அதே ஆண்டில் விஜயகாந்தின் 'அம்மன் கோயில் கிழக்காலே', படத்தில் நாயகி ராதாவின் தந்தையாக வில்லனாக நடித்தார்.



கொஞ்ச காலம் வில்லனாக இருந்தவர் அப்புறமாக தந்தை, தாத்தா என குணச்சித்திர நடிகராக மாறினார். ரஜினியுடன் 'குரு சிஷ்யன்', 'ராஜா சின்ன ரோஜா', 'அருணாச்சலம்' கமலுடன் 'பம்மல் கே சம்பந்தம்' என நடித்த ரவிச்சந்திரன் 'கண்டேன் காதலை' படத்தில் தமன்னாவின் தாத்தாவாக சந்தானத்துடனும்  காமெடி பண்ணியிருக்கிறார்.



ரவிச்சந்திரனின் மொத்த குடும்பமும் சினிமா குடும்பம் தான். அவருக்கு இரண்டு மனைவிகள். சூப்பர் ஹிட் மலையாள படமான 'செம்மீன்' நாயகி ஷீலா இவரது இரண்டாவது மனைவி ('சந்திரமுகி' படத்தில் நாசர் வீட்டின் ஆளுமையாக அகிலாண்டேஸ்வரி வேடத்தில் வருவாரே அவர்தான்...)



ரவிச்சந்திரன் தனது 100வது படத்தை தானே இயக்கி இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். 2005ல் வெளியான 'மந்திரன்' என்ற அந்த படத்தின் ஹீரோ அவரது  மகன் ஹம்ஸ வர்தன். ரவிச்சந்திரன் 7 படங்கள் வரை இயக்கி இருக்கிறார். அவரது மகன் ஹம்ஸவர்தனும் 10க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்.



ரவிச்சந்திரனின் மற்றொரு மகன் ஜார்ஜ் விஷ்ணுவும் நடிகர் தான். துணை நடிகராக ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். 'நகரம்' படத்தில் வடிவேலு போகும் இடமெல்லாம் சுந்தர்.சி செல்லும் காமெடியில் சுந்தர் சியுடன் ஆட்டோ ஓட்டுநராக வருபவர் இவர்தான்.


நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும் இன்றைய பிரபல சினிமா நட்சத்திரம் தான். சசிகுமாருடன் 'பலே வெள்ளையத் தேவா', உதயநிதி ஸ்டாலினுடன் 'நெஞ்சுக்கு நீதி', விஜய் சேதுபதியின் 'கருப்பன்' படங்களின் ஹீராயின் தான்யா ரவிச்சந்திரன் தான் அவர்...

#நெல்லை_ரவீந்திரன்

Saturday 7 January 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -40

தமிழ் சினிமாவில் சத்தமில்லாமல் சாதித்தவர்கள் பலர் உண்டு. இவர் 40 ஆண்டு காலம், இரண்டு தலைமுறை ரசிகர்களின் நாடி துடிப்பை அறிந்து இன்றளவும் பேசப்படும் பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர். கூடவே திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், பல பிரபலங்களுக்கு அறிமுகம் கொடுத்தவர். அவர்தான் இயக்குநர் ஸ்ரீதர்.



பள்ளியில் படிக்கும் போதே நாடகம், கதை என சுற்றியவர் 18 வயதிலேயே வந்து சேர்ந்த இடம் ஏவிஎம். ஆனால், 1951ல் சினிமாவுக்குள் வந்த அவரை மெருகேற்றியது அன்றைய பிரபலமான டிகேஎஸ் பிரதர்ஸ் குரூப்பின் அவ்வை டி.கே.சண்முகம். நிறைய நாடகம், வாய்ப்புகளை தந்து ஸ்ரீதரின் எழுத்துப் பசிக்கு தீனி போட்டார், டி.கே.எஸ். 1950களின் ஹிட் படங்களான ரத்த பாசம், எதிர் பாராதது, புனர்ஜென்மம், அமரதீபம்... இவரது எழுத்துகளே. வடிவேலு நடித்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி'யின் ஒரிஜினல் வெர்சனான சிவாஜி கணேசன் இரட்டை வேடத்தில் நடித்த 'உத்தம புத்திரன்' படமும் இவரது திரைக்கதைதான்.



அந்த சமயத்தில் பிரபலமாக இருந்த வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் இவருடையதுதான், நண்பர்களுடன் சேர்ந்து படங்களை தயாரித்தார். கூடவே மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், வி.சந்தானம் போன்ற அன்றைய பிரபல இயக்குநர்களுடனும் நல்ல பழக்கமாகி இயக்குநர் அவதாரம் எடுத்தார், ஸ்ரீதர். அப்படி அவர் இயக்குநரான முதல் படம் ஜெமினி கணேசன் நடித்த 'கல்யாண பரிசு'. 1959ல் வெளியான அந்த படம், இன்று வரை தமிழில் பேசப்படும் படங்களில் ஒன்று.


காஷ்மீரில் முதன் முதலில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட தமிழ் படமான 'தேனிலவு' இவரது இயக்கம். மீண்ட சொர்க்கம், ஊட்டி வரை உறவு, நெஞ்சில் ஆலயம், போலீஸ்காரன் மகள், கலாட்டா கல்யாணம்... இப்படி நிறைய படங்களை 1960களிர் ஸ்ரீதர் இயக்கி இருக்கிறார். 

இதில் 1962ல் வெளியான முத்துராமன், தேவிகா, கல்யாண் குமார் நடித்த 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படம் எல்லாம் ஒரு மருத்துவமனைக்கு உள்ளேயே மொத்த படத்தையும் ஸ்ரீதர் எடுத்திருப்பார். அதுவும் ஒரே வாரத்துக்குள் படப்பிடிப்பு முடிந்ததாக சொல்வார்கள். முக்கோண காதல் கதை கொண்ட இந்த படம் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் வசூலை வாரி குவித்தது.



தமிழின் முதல் ஈஸ்ட்மெண்ட் கலர் படமான 'சிவந்த மண்', நிறைய பிரபலங்களை அடையாளம் காட்டிய 'வெண்ணிற ஆடை',  நாகேஷ் என்றாலே இன்று வரை நினைவுக்கு வரும் கதை சொல்லும் சீன் இடம் பெற்ற 'காதலிக்க நேரமில்லை'... எல்லாமே ஸ்ரீதர் இயக்கம் தான்.



ஹீரோவாக இருந்த டி.ஆர். ராமச்சந்திரனுக்கு காமெடி பாதை, தங்கவேலுவுக்கு 'கல்யாண பரிசு'... நாகேஷுக்கு 'காதலிக்க நேரமில்லை'... 'வெண்ணிற ஆடை' படம் மூலம் ஜெயலலிதா, நிர்மலா, ஸ்ரீகாந்த், மூர்த்தி... இதுபோல ரவிச்சந்திரன், முத்து ராமன், காஞ்சனா என பலருக்கும் அடையாளம் கொடுத்தவர், இயக்குநர் ஸ்ரீதர். 1970களில் துவங்கி 1980ஸ் வரை பெயர் பெற்ற சித்ராலயா பட நிறுவனத்தை சித்ராலயா கோபுவுடன் இணைந்து துவக்கியதும் இவர் தான். 



ஸ்ரீதர் பாணி படங்கள் எல்லாம் எம்ஜிஆருக்கு ஒத்து வராதவை. அதனால் அவரை அதிகம் இயக்கவில்லை.  ஆனால் 1970களின் ஆரம்பத்தில் பொருளாதார ரீதியாக கொஞ்சம் சிக்கலில் இருந்த ஸ்ரீதருக்கு எம்ஜிஆர் கைகொடுத்தார்.  'உரிமைக் குரல்' படத்தை இயக்கியவர் ஸ்ரீதர் தான். அடுத்து 'மீனவ நண்பன்', 'அண்ணா நீ என் தெய்வம்' என எம்ஜிஆர் படங்களை இயக்கினார். 1977ல் எம்ஜிஆர் முதல்வரானதால் படம் நடிப்பதை நிறுத்தியதால் 'அண்ணா நீ என் தெய்வம்' பாதியில் நின்று போனது. அந்த படத்துக்காக ஸ்ரீதர் எடுத்த காட்சிகள் தான் சுமார் பத்து ஆண்டுகள் கழித்து பாக்யராஜ் இயக்கி 2 வேடங்களில் நடித்த 'அவசர போலீஸ் 100' படத்தில் சேர்க்கப்பட்டன. 

இப்படி எம்ஜிஆர், ஜெயலலிதா, சிவாஜி, ஜெமினி, ரவிச்சந்திரன், முத்துராமன் இயக்கிய ஸ்ரீதர், அடுத்த தலைமுறை நட்சத்திரங்களையும் 1980களில் இயக்கினார். அதுதான் இயக்குநர் ஸ்ரீதர்.



ரஜினி, கமல் இணைந்து நடித்த  'இளமை ஊஞ்சலாடுகிறது', கமலின் 'நானும் ஒரு தொழிலாளி', ரஜினியின் 'துடிக்கும் கரங்கள்', முத்துராமனின் மகன் கார்த்திக்கும் ஜெமினி மகள் ஜீஜியும் இணைந்து நடித்த 'நினைவெல்லாம் நித்யா', 80ஸ் கனவு நாயகன் மோகன் நடித்த 'தென்றலே என்னைத் தொடு'... அப்புறம் யாரோ எழுதிய கவிதை, ஒரு ஓடை நதியாகிறது, அழகே உன்னை ஆராதிக்கிறேன்... என 80ஸ் வரை ஸ்ரீதர் இயக்கிய படங்கள் ஏராளம். சீயான் விக்ரமை நடிகராக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்திய 1991ல் வெளியான 'தந்து விட்டேன் உன்னை' படமும் ஸ்ரீதர் இயக்கம் தான்.



1950, 60களில் தமிழுடன் ஏராளமான இந்தி படங்களையும் இயக்கியவர், ஸ்ரீதர். இந்தியில் 1956ல் கிஷோர் குமார் துவங்கி 1980களில் சத்ருகன் சின்ஹா வரை இயக்கி இருக்கிறார்.

ஸ்ரீதர் படம் என்றாலே பாடல்கள் நிச்சயம் ஹிட் என்றே சொல்லலாம். மேலே சொன்ன படங்களின் பாடல்களே அதை உறுதி செய்யும். பாடகர் கம் இசையமைப்பாளர்களான ஏ.எம்.ராஜா துவங்கி எஸ்பிபி வரையிலும் அவர் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்கள். இது போலவே எம்எஸ்வி தொடங்கி இளையராஜா வரை இசையமைத்திருக்கிறார்கள். கண்ணதாசன், வாலி பாடல்களுக்கு உயிரூட்டியவர்.



40 ஆண்டு கால நாயகர்கள் அல்லது நீண்ட காலம் நடித்த நடிகர்களை பார்த்திருப்போம். ஆனால் 40 ஆண்டுகளாக திரைக்கதை, இயக்கம் என கோலோச்சி தமிழிலும் இந்தி ரீ மேக்கிலும் ஹிட் படங்கள் கொடுத்த ஒரே இயக்குநர் ஸ்ரீதர் மட்டுமே.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Wednesday 4 January 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -39

தமிழ் சினிமா உலகில் திடீரென உச்சம் சென்று ரசிகர்களை கவர்ந்த வெகு சிலரில் ஒருவர் இவர். தான் நடித்த படத்தின் பெயரையே அடையாளமாக சொல்லும் நடிகர்களில் ஒருவர். 'ரமணா' வில்லன் என்றால் இன்றைய தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் தெரியும். அவர்தான் 'உதிரிப் பூக்கள்' விஜயன். ஹீரோ, வில்லன், குணச்சித்திரம்... எப்படி பார்த்தாலும் அவர் ஒரு லெஜண்ட்.

கேரளாவில் பிறந்த இவர், அந்த மாநிலத்தில் நீண்ட நாள் பதவி வகித்த முதல்வரும் பிரபல மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான ஈ.கே.நாயனாரின் சொந்தக்காரர். மலையாள சினிமாவுக்குள் முதன் முதலில் கதாசிரியராக அறிமுகமான விஜயனின் கைவண்ணத்தில் உருவான 'சங்கு புஷ்பம்' படம் வசனத்துக்காகவே மலையாளத்தில் ஹிட். அப்படியே நடிப்பு, இயக்கம் என வளர்ந்த விஜயனை தமிழுக்கு அழைத்து வந்தவர், பாரதிராஜா. பாரதிராஜாவின் பெரும்பாலான படங்களில் விஜயனை பார்க்கலாம்.


1978ல் வெளியான 'கிழக்கே போகும் ரயில்', விஜயனை கேரள கரையில் இருந்து கோலிவுட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தது. அடுத்த ஆண்டே 'முள்ளும் மலரும்' இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் 'உதிரி பூக்கள்'. இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அந்த படம் அதிரி புதிரி ஹிட். படத்தின் ஹீரோ விஜயன். அதாவது ஆன்ட்டி ஹீரோ. 2 குழந்தைகளுக்கு தந்தையான பின்னும் மனைவியை கொன்று விட்டு கொழுந்தியாளை அடைய துடிக்கும் வேடம், விஜயனுக்கு... (அஜித்தின் 'ஆசை' படத்தோட raw versionன்னு சொல்லலாம்) அந்த படத்தில் பின்னி எடுத்திருப்பார், விஜயன். அவரது உடல்வாகு, வில்லத் தனமான பார்வை அமைதியான தோற்றம் எல்லாம் அவரது கேரக்டரை ஹிட்டாக்கின. அதன் பிறகு, மலையாளம் கூடவே தமிழிலும் ஏராளமான படங்களில் விஜயன் நடித்தார். 


பாரதிராஜா, பாக்யராஜ், மகேந்திரன் என முன்னணி இயக்குர்களிடம் நடித்த இவர், 1980 ஒரே ஆண்டில் மட்டும் தமிழில் 11 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பல லாபம் ஈட்டிய படங்கள். சின்ன பட்ஜெட்டில் நல்ல  லாபம் என்றால் இவரும் சுதாகரும் தான் அன்றைய தயாரிப்பாளர்களின் சாய்ஸ். 1980களுக்கு பிறகுதான் ரஜினி, கமல் ஆதிக்கம் துவங்கியது. அதற்கு முந்தைய கால கட்டத்தில் இவருக்கும் அன்றைய நாளின் மற்றொரு ஹீரோவான சுதாகருக்கும் தனி ரசிகர் கூட்டமே உண்டு. ஆரம்ப கால விஜயனிடம் கொஞ்சம் மம்முட்டி சாயலை பார்க்க முடியும்.


கதாநாயகன் வேடத்துக்கு பிறகு, 1992 வரை நிறைய கேரக்டர் ரோல்களிலும் விஜயன் நடித்தார். 'மண் வாசனை', 'நிறம் மாறாத பூக்கள்', 'பொண்ணு ஊருக்கு புதுசு', 'பசி', 'ஒரு கைதியின் டைரி', 'கொடி பறக்குது', 'அன்புக்கு நான் அடிமை' (ரஜினியின் அண்ணன்), 'நாயகன்' (மும்பை குடிசை வாழ் மக்கள் இடத்தை வாங்கி தரும் புரோக்கர் துரை)... இப்படி அவரது படங்களின் பட்டியல் மிக நீளம்.

இதற்கிடையே, 'புதிய ஸ்வரங்கள்'  மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். அப்போதெல்லாம் பிலிம் ரோல் காலம். 'புதிய ஸ்வரங்கள்' படம் பணிகள் முடிந்து லேபில் இருந்த பிலிம் சுருள் தீ விபத்தில் கருகியதால் அவரது இயக்குநர் கனவும் கருகிப் போனது. புதிய ஸ்வரங்கள், அபஸ்வரங்களாகிப் போனது. இப்படி, விஜயனின் வாழ்வில் துன்பியல் அதிகம். 


1992க்கு பின் 2002 வரை பத்து ஆண்டுகள் விஜயனின் திரை பயணத்தில் பிரேக்... இந்த கால கட்டத்தில் மது, புகைப் பழக்கம் என சொந்த வாழ்க்கையில் நிறைய சோகங்களை சந்தித்தார், விஜயன். முன்னணி இயக்குநர்கள் படத்திலும் ரஜினி, கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடனும் நடத்தது மட்டுமல்ல... 1980களில் மிகப் பிரபலமாகவும் வலம் வந்த ஒரு நடிகர், யாருமே கண்டு கொள்ளாத நிலைமையில் இருந்தார்.


அவரை மறுபடியும் 90ஸ் மற்றும் 2கே கிட்ஸ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த படம் 'ரமணா'. 2002ல் வெளியான அந்த படத்தில் விஜயகாந்துக்கு மெயின் வில்லனாக அதகளம் பண்ணியிருப்பார். அதே ஆண்டு மாதவன் நடித்த 'ரன்' படத்திலும் வில்லன் அதுல் குல்கர்னியின் வலதுகரமாக விஜயன்  நடித்தார். இதுபோல, '7ஜி ரெயின்போ காலனி' படத்தில் நாயகனின் தந்தையாக, குண சித்திர நடிகராகவும் நிரூபித்திருப்பார்.

'உதிரிப்பூக்கள்' விஜயன், 'ரமணா' விஜயனாக இரண்டாவது சுற்று வலம் வர தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில் அவரது வாழ்க்கையே முடிந்து போனது. 'ஆயுதம் செய்வோம்'  படப்பிடிப்பில் மாரடைப்பால்  மரணமடைந்தார். மறைந்தாலும் தமிழ் திரையுலக வரலாற்றில் 'உதிரிப் பூக்கள்' விஜயனுக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்