Friday 23 September 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -37

 சிவப்பு தோல் தான் நடிகைகளுக்கு சக்ஸஸ் என நினைத்த சினிமா அகராதியை தவிடு பொடியாக்கிய பெண். போதையூட்டும் விழிகளால் இரண்டு தசாப்த ரசிகர்களை கட்டிப் போட்ட கறுப்பு நிறத்தழகி. ஒற்றை  வார்த்தைக்கே 80ஸ், 90ஸ்  ரசிகர்கள்  தூக்கம் தொலைத்து கிறங்கிக் கிடந்தனர்.  அந்த வார்த்தை சில்க். தெலுங்கு விஜயலட்சுமியை மலையாளம்  ஸ்மிதாவாக்கியது. அவரை பட்டுப் போல வாரி அணைத்து சில்க் ஸ்மிதா ஆக்கிக் கொண்டது, தமிழ்.


வறுமையும் சின்ன வயதிலேயே திருமண வாழ்வில் தள்ளப்பட்டு குடும்ப பிரச்சினையும் துரத்தியதால் பிழைப்பு தேடி வந்த சில்க்கின் மொத்த பிழைப்புமே சோகம்தான். அவருக்கு காட் ஃபாதராக நடிகர் வினு சக்கரவர்த்தி இருந்த காலம் தான் கொஞ்சம் நிம்மதியாக சில்க் இருந்திருப்பார். 


தமிழ் சினிமாவில் டச்அப் கேர்ளாக இருந்த ஸ்மிதாவை 'வண்டிச் சக்கரம்' படத்தில் அறிமுகம் செய்தவர் அவரே. நாட்டுப்புறமாக தெலுங்கு மட்டும் பேசிய விஜயலட்சுமிக்கு தமிழும் ஆங்கிலமும் நடனமும் கற்றுக் கொடுத்து நடிகையாக்கியதில் வினு சக்கரவர்த்தி மற்றும் அவரது மனைவிக்கு பெரும் பங்கு உண்டு.

'வண்டிச்சக்கரம்' படத்தில் ஸ்மிதாவின் வேடம் சாராயம் விற்கும் பெண்.  படத்தில் அவரது பெயர் சில்க்.  "வா மச்சான் வா வண்ணாரப் பேட்ட..." பட்டி தொட்டி எல்லாம் சக்கை போடு போட்ட பாடலால் பிரபலம் ஆனார். முதல் படத்திலேயே விழி மொழியாலும் உடல் மொழியாலும் ரசிகர்களை கட்டிப் போட்டார். சில்க்கும் ஸ்மிதாவும் சேர்ந்து சில்க் ஸ்மிதா ஆனார். அப்புறம் என்ன..? ஆடியன்ஸோட ரிப்பீட்டு... ரிப்பீட்டு....


17 வருஷத்தில் ஐந்து மொழிகளில் சில்க் நடித்த படங்கள் எண்ணிக்கை 400ஐ தாண்டும். ஆண்டுக்கு சராசரியாக 20 படங்கள்..! 1980களில் துவங்கி 1990களின் இறுதி வரை அவரது ஆட்டம்தான். அந்த சமயத்தில் வந்த படங்களில் எல்லாம் ஹீரோ, ஹீரோயின் மெயின் கதைன்னு ஒரு பக்கம் போகும். காமெடி தனி டிராக்கா இருக்கும்.  மொத்த படத்துக்கும் சுவை கூட்டி கல்லா கட்ட வைக்கும் அஜின மோட்டா தான் கவர்ச்சி நடனம். ரம்பா மேனகை திலோத்தமை போல சில்க், அனுராதா, ஜெயமாலினி என முக்க(ன்)னிகள் தான் அன்றைய திரை விருந்தின் உச்சம்.

1980ஸ் என்பது திரையுலகில் ரஜினி, கமல் முன்னேறத் துவங்கிய காலம். அன்றைய அவர்களின் படங்கள் எல்லாம் வசூலை வாரிக் குவித்ததில் சில்க் ஸ்மிதாவின் பங்கு மிகவும் முக்கியம். அவர்களுடன் சில்க் ஸ்மிதாவின் டூயட் ஒன்று நிச்சயம்.

 பாயும்புலி, மூன்று முகம், தனிக்காட்டு ராஜா, தாய்வீடு, தங்க மகன், மூன்றாம் பிறை, சகலகலா வல்லவன் இப்படி பல படங்களை சொல்லலாம். அவர்களோடு சில்க் ஸ்மிதா ஆட்டம் போட்ட "ஆடி மாசம் காத்தடிக்க...", "நேத்து ராத்திரி யம்மா...", "பொன்மேனி உருகுதே..." இன்றளவும் சுண்டி இழுக்கும் பாடல்கள்.


கதாநாயகிகளுக்கு இணையாக இருந்ததால் தான், மூன்று வேடங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவரை தேடி வந்தது. படத்தின் பெயரும் அவர் பெயர் தான், 'சில்க் சில்க் சில்க்'. 1983 ஒரு ஆண்டில் மட்டும் 45 படங்களில் நடித்து புதிய சாதனையையே படைத்தார் சில்க். அதே நேரத்தில் கவர்ச்சிக்குள் மட்டும் அவரை கட்டம் கட்டி விட முடியாது.


தியாகராஜன் ஜோடியாக பாரதிராஜா இயக்கிய 'அலைகள் ஓய்வதில்லை', 'நீங்கள் கேட்டவை' (அடியேய் மனம் நில்லுனானா நிக்காதடி...), பிரபு ஜோடியாக 'கோழி கூவுது' படங்களில் எல்லாம் இணை நாயகியாகவே படம் முழுவதும் அருமையாக நடித்திருப்பார். பின்னாளில் கதாநாயகிகளே கவர்ச்சி நடனங்களையும் கையில் எடுத்ததால் வாய்ப்புகள் குறைந்தாலும் சில்க்கின் கிரேஸ் ஒருபோதும் ரசிகர்களிடம் குறைந்ததில்லை.

1990களுக்கு பிறகும் அவரது கொடி பறந்தது. அவரது நடிப்பு திறமையை தெரிந்த பாக்யராஜ் தனக்கு ஜோடியா நடிக்க வைத்தார். 'அவசர போலீஸ் 100' என்ற அந்த படத்தால் எம்ஜிஆர் படத்தில் இடம் பெறும் வாய்ப்பும் சில்க் ஸ்மிதாவுக்கு வாய்த்தது.

 அப்புறம் பாண்டியராஜனின் 'பாட்டி சொல்லை தட்டாதே', பிரபுவின் 'பாண்டித்துரை' போன்ற படங்கள் எல்லாம் சேலை கெட்டப்பிலும் ரசிகர்களை கவர முடியும் என நிரூபித்தவை. சில்க் என்று சொன்னால் அந்த கிறக்கமான போதையூட்டும் கண்கள் போதாதா?


80, 90களில் இன்றைய பானை உடைத்தல் போட்டி போல, கிராமங்களில் பொங்கல்  விழாக்களில் 'மங்கைக்கு திலகமிடல்' என போட்டி வைப்பார்கள். சுவரில் ஒரு நடிகையின் படத்தை ஒட்டி வைத்து இளைஞர்களின் கண்களை கட்டி விட்டு சரியாக நெற்றியில் பொட்டு வைக்க சொல்வார்கள். அந்த போட்டிகளில் எல்லாம் தவறாமல் போஸ்டர் படங்களில் இடம் பிடிக்கும் நடிகை சில்க் ஸ்மிதா தான். அதில் அன்றைய இளசுகளுக்கு ஒரு கிக்..!

வாழ்க்கை வரலாறை மூன்று மொழிகளில் படமாக  (டர்ட்டி பிக்சர்) எடுக்கும் அளவுக்கு எவராலும் மறக்க முடியாத உச்சம் தொட்டவர் சில்க்.

1980, 90களின் முன்னணி நாயகர்கள் அனைவர் படங்களிலும் நடித்து ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும் கட்டிப்போட்ட சில்க்கின் சொந்த வாழ்க்கை மிகவும் சோக மயமானது. இணையைத் தேடி என்ற மலையாள படம் மூலமாகத்தின் முதன் முதலில் திரை வாழ்க்கைக்கு சில்க் வந்தார். அவரால் நிஜ வாழ்க்கையில் இணையையும் தேட முடியவில்லை. நிம்மதியையும் தேட முடியவில்லை.

உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டே வெளியில் ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்திய சில்க் ஸ்மிதா, 35வது வயதில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தது சோகம்தான். அதுவே அவரது பிரச்சினைகளுக்கு இறைவன் அளித்த விடுதலையாக இருக்கலாம். 

இறந்த நாளன்று கூட சக நடிகை ஒருவருக்கு போன் போட்டு புலம்பியிருக்கிறார். தவிர, ரசிகர்களின் மனதில் எப்போதுமே அந்த இளம் சில்க் உருவம் மட்டும்தான் நிரந்தரமாக இருக்க வேண்டும் என  இறைவன் நினைத்திருக்கலாம். 

மறைந்து 25 ஆண்டுகளை கடந்தாலும் சினிமா ரசிகர்களால் மறக்காத முடியாத மூன்றெழுத்து மந்திரம் 'சில்க்'.

#நெல்லை_ரவீந்திரன்