Tuesday 28 October 2014

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே...! நண்பனே...!


‘பசுமை நிறைந்த நினைவுகளே.... பாடித் திரிந்த பறவைகளே....’, ‘மீண்டும் பள்ளிக்கு போகலாம்..... நம்மை நாம் அங்கே தேடலாம்...’ இந்த பாடல்களை கேட்கும் போதெல்லாம் பள்ளிப் பருவ பால்ய கால நினைவுகள் அலை மோதுவதை தவிர்க்க முடியாது.

பாடப் புத்தகத்தின் பக்கங்களுக்கு இடையே மயில் இறகை மறைத்து வைத்து, அதை இருட்டு அறைக்குள் எடுத்துச் சென்று அது குட்டி போட்டுள்ளதா என்று அவ்வப்போது ரகசியமாக எடுத்து பார்த்திருப்போம். அதுபோலவே, பள்ளிக்கூட நினைவுகளையும் நினைவு பொக்கிஷத்தில் பதுக்கி வைத்திருந்து ஓய்வு நேரங்களில் அதை ரகசியமாக எடுத்து எடுத்து பார்ப்பது என்ற அனுபவம் அனைவருக்குமே இருக்கும்.

அதுவும் பதின்மப் பருவமான டீன் ஏஜ் வயது பள்ளிக் கூட அனுபவங்களை பற்றி விவரிக்க தேவையில்லை. ஒட்டுமொத்த நினைவுகளை சுட்டுப் பொசுக்கினால் கூட அந்த நினைவுகளின் உயிர் கருகும் வாசம் சுழன்று கொண்டே இருக்கும். எனக்கும் கூட.....? அந்த நினைவுகள் அவ்வப்போது எழுந்து எட்டிப் பார்த்து விட்டு செல்வது உண்டு. அதுவும், 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நான் படித்த பள்ளி வழியாக செல்லும் ஒவ்வொரு சமயத்திலும் அதன் தாக்கம் சற்று கூடுதலாகவே இருக்கும். பிறந்த வீட்டில் சகோதர, சகோதரிகளுடன் வாழ்ந்த நினைவுகளை அசைபோடும் இல்லத்தரசிகளை அப்போது நினைத்துக் கொள்வேன்.

இதுபோன்ற பள்ளிப் பருவ நினைவுகளை மீட்டுப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால்...? அதுவும் அந்த பள்ளியிலேயே...? நினைத்தாலே இனிக்கும் அத்தகைய நிகழ்வை, பள்ளித் தோழர்களுடன் ருசித்துப் பார்த்தேன்(தோம்). 24-10-2014 அன்று அந்த கிடைத்தற்கரிய சந்தர்ப்பம் வாய்த்தது. கதைகளிலும், திரைப்படங்களிலும் மட்டுமே பார்த்து ரசித்து ஏக்கப் பெருமூச்சு விட்ட அந்த தருணங்கள் அனைத்தும் நனவில், நிஜத்தில் ஈடேறியது.

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே நல்லூரில் உள்ள மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் 1989-1991 ஆண்டுகளில் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் கணிதப்பிரிவில் படித்த மாணவ, மாணவிகள் அனைவரும் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடினோம். கால் நூற்றாண்டு காலத்துக்கு பிறகு பள்ளிக்குள் நுழையும்போதே உடலில் எடை என்னும் பாரம் குறைந்து மனம் மட்டும் அந்தரத்தில் இறகாக மிதந்து சென்று நினைவுகளை பள்ளியின் வான் வெளியில் கவிதை வரைந்து செல்வது பான்ற உணர்வு. உடன் படித்த மாணவர்கள் அனைவரையும் அவர்களுடைய குடும்பத்தினருடன் சந்தித்தபோது அந்த பரவச உணர்வு பன்மடங்காகி ஜிலீரிட்டது.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல, 25 ஆண்டுகளுக்கு முன் எங்களுக்கு பாடம் எடுத்து தற்போது ஓய்வு பெற்று 70 வயதை தாண்டி நிற்கும் ஆசிரியர்கள் அனைவரையுமே நேரில் பார்த்தபோது.... அதை மகிழ்ச்சி, சந்தோஷம் என்பது போன்ற வார்த்தைகளுக்குள் அடைத்து விட முடியாது. இந்த உலகில் ஒவ்வொரு விநாடியும் ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் ஒளித்து வைத்திருக்கிறது என்ற வார்த்தைகள் அடிக்கடி எனக்குள் தோன்றுபவை. அந்த வார்த்தைகளின் நிஜ வடிவத்தை அந்த நொடியில் உணர்ந்தேன்.

11 மற்றும் 12ம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் பாடங்கள் எடுத்த ஆசிரியர்களும் உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் அன்றைய தலைமை ஆசிரியர் (அவருக்கு இப்போது வயது 82) என அனைவருமே எங்களைப்போல குழந்தை மன குதூகலத்துடன் வந்திருந்ததை காணும்போது ஆசிரியர், மாணவர் மற்றும் அவர் தம் குடும்பத்தினர் திரிவேணி சங்கமம் அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆசிரியர்கள் அனைவருமே 70 வயதை கடந்த போதிலும் எங்களை காண்பதற்காகவே சிரமம் கருதாது பள்ளிக் கூடம் வந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று. அதுவும் சென்னையில் குடியேறிவிட்ட இயற்பியல் ஆசிரியர் திரு.சுகிர்தராஜ், இதற்காகவே வந்திருந்தார். இந்த சந்திப்பானது மன நிறைவைத் தருகிறது என்று மகிழ்ச்சியில் திளைத்தார் எங்களுடைய உயிரியல் ஆசிரியர் திரு. அந்தோணி ஆரோக்கியசாமி.

அன்றைய மாணவர்களாகிய நாங்கள் அனைவருமே தற்போது 40 வயதை எட்டிப் பிடிப்பவர்கள். குடு குடு கிழவனாக இருந்தால் கூட, அவரது தாயாருக்கு அவர் என்றுமே குழந்தை தான். எங்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ எவ்வளவு வயது கடந்திருந்தாலும் அவர்களுக்கு நாங்கள் மாணவர்கள் தானே. அதனால், 40 வயதை கடந்து விட்ட நீங்கள் அனைவரும் உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்று உடற்பயிற்சி ஆசிரியரும் ஒவ்வொருவரும் அவரவர் துறைகளில் சாதனையாளராக மாற வேண்டும் என்று இயற்பியல் ஆசிரியரும், ஒவ்வொருவரும் ஏதாவது தலைமை பொறுப்பிலோ நிர்வாக பொறுப்பிலோ இருக்கலாம் என்பதால் தினந்தோறும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தெய்வத்தின் துணை கொண்டு வெல்லுங்கள் என்று தலைமை ஆசிரியர் திரு. தெய்வ நாயகம் அவர்களும் கூறிய அறிவுரைகள் அர்த்தமுள்ளவை.

‘37 ஆண்டுகளாக ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியராக பணியில் இருந்திருக்கிறேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளை பத்திரிகை மற்றும் வெவ்வேறு வழிகளில் கேள்விப்படும்போது மனதுக்குள் லேசாக ஆசை துளிர் விடும். நம்முடைய மாணவர்கள் யாரேனும் இப்படி அழைக்கமாட்டார்களா என்று கருதுவேன். இப்போது, எனது ஆசை நிறைவேறிவிட்டது’ என்று வேதியியல் ஆசிரியர் திரு.கிறிஸ்டோபர் ஜெபசிங் அவர்கள் கூறியபோது எங்களுடைய மனமும் திருப்தியும் பெருமிதமும் கலந்த உணர்வில் ஆழ்ந்தது என்பது கற்பனை கலவாத நிஜம்.

தமிழ் வழிக் கல்வியை பலரும் குறை கூறும் இந்த காலத்தில் தமிழ் வழியில் கல்வி கற்ற நாங்கள் அனைவரும் நல்ல நிலையில் இருப்பதையும் தனது குழந்தைகள் இருவர் ஜெர்மனி, இங்கிலாந்தில் இருப்பதையும் நினைவு கூர்ந்தார், தமிழ் ஆசிரியர் திரு.ஜெயப்பிரகாஷ். அவருடைய குழந்தைகள் மூவரும் எங்கள் பள்ளியில் தான் படித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சூழ்நிலையை கலகலப்பாக்கி வகுப்பறையாக மாற்றிய பெருமையை எடுத்துக் கொண்டார், தாவரவியல் ஆசிரியை திருமதி.ஜெயசீலி அவர்கள். அவர் நடத்திய தாவரவியல் வினாடி வினா போட்டியில் பங்கேற்று பதிலளித்த எங்களுக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் பரிசுகளை அள்ளித் தந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

25 ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வமாக கூடியுள்ள இந்த நிகழ்வானது கூடினோம்.... கலைந்தோம்... என்று இருக்காமல் இந்த பள்ளியில் தற்போது படித்து முடிக்கும் ஏழை மாணவர்களின் மேல் படிப்புக்கு உதவும் விதத்தில் ஒரு அமைப்பாக (அலுமினி அசோசியேஷன்) மாறுவதற்கான தொடக்கப்புள்ளியாக இருந்தால் நல்லது என்பது எங்களுடைய 12ம் வகுப்பு காலங்களில் பணியில் சேர்ந்து இன்றும் ஆசிரியர் பணியில் தொடரும் வேதியியல் ஆசிரியர் வெங்கட சுப்பிரமணியன், நெல்லையப்பன், வில்லியம், பாஸ்கர் ஆகியோரின் அன்பு வேண்டுகோளாக அமைந்தது. அடுத்தடுத்த நிகழ்வுகளில் அந்த பாதை நோக்கி இந்த பயணம் செல்லும் என்று நாங்களும் நம்புகிறோம்.

= வை.ரவீந்திரன் 

Saturday 18 October 2014

அன்புள்ள ரஜினிகாந்த்....

அன்புள்ள ரஜினிகாந்த்....
இந்த திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்த போதிலும் இன்னமும் தமிழக மக்களின் அன்புக்குரியவராகவே இருக்கிறார், ரஜினி. ‘16 வயதினிலே’ படத்தில் பரட்டை கதாபாத்திரத்தில் அவரது வில்லத்தனம் கண்டு மிரண்ட தமிழ் ரசிகர்கள், பின்னாளில் அவரை சூப்பர் ஸ்டாராக கொண்டாட தொடங்கியது காலம் அவருக்கு அளித்த பரிசு. ‘புவனா ஒரு கேள்விக் குறி’, ‘மூன்று முடிச்சு’, ‘நினைத்தாலே இனிக்கும்’ என இரண்டு ஹீரோக்களில் ஒருவராகவே தலை காட்டிய ரஜினியின் கலைப்பயணம் சாதாரணமானது அல்ல. நடந்தவை அனைத்துமே வியத்தகு வளர்ச்சி. ஒவ்வொரு படத்தையும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கியதோடு அவரை திரையுலகின் ராஜாதி ராஜாவாக்கினர், தமிழக மக்கள்.

20 ஆண்டுகளுக்கு முன் ‘பாட்ஷா’ திரைப்படம் வெளியானபோது, தமிழகமே சுறுசுறுப்பானதே. அந்த படத்தை இப்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் கூட எனது 10 வயது மகன் ரசித்து பார்க்கிறான். கார்ட்டூன் சேனல் பார்க்கும்போது கூட விளம்பர இடைவேளை சமயத்தில் ரிமோட்டை தேடும் அவன், ‘பாட்ஷா’ படத்தை விளம்பரங்களுடன் பார்த்ததை கண்டு வியந்தேன். இத்தனைக்கும், அவன் ஏற்கனவே சில முறை அந்த படத்தை பார்த்திருக்கிறான். அந்த படம் வெளியாகி 10 ஆண்டுக்கு பிறந்த சிறுவனை கூட கவர்ந்திழுக்கும் அந்த திரைபடத்தின் வெற்றி விழா சமயத்தில் ரஜினிகாந்த் உதிர்த்த வார்த்தைகள் தமிழக அரசியலையே புரட்டி போட்டன. ‘இப்போதைய ஆட்சி மீண்டும் திரும்பினால்.... இந்த தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என்பதே அந்த வார்த்தைகள். அதன்பிறகு, ‘ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என்று பட்டி தொட்டி எங்கும் பரவிய வாசகங்களும், அமெரிக்காவில் இருந்தபடியே ரஜினி அளித்த தொலைக்காட்சி பேட்டியும் தமிழகத்தில் அரசியல் பிரளயத்தையே ஏற்படுத்தின.

அதன்பிறகு, அவ்வப்போது அரசியலுக்கு ரஜினி வருவதாக தகவல்கள் வெளியாவதும் அந்த சமயங்களில் அவரது ஏதாவது ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்ற உடனேயே அந்த செய்திகள் அடங்குவதும் வாடிக்கையாகி விட்டன. இப்போது கூட, அவரை சுற்றி ஒரு அரசியல் வட்டம் பிரகாசிக்க தொடங்கி இருக்கிறது. வயதும் அறுபதை கடந்து விட்டதால், இனி அரசியலுக்கு நிச்சயம் வருவார் என்று ஒரு கூட்டம் எதிர்பார்ப்பது உண்மை. ஆனால், அதற்கு முன் சில உண்மைகளை அவர் புரிந்து கொள்வது அவசியம். 1999ம் ஆண்டு படையப்பா வெளியான பிறகு, கடந்த 15 ஆண்டுகளில் அவர் நடித்து வெளியான படங்களின் எண்ணிக்கை 4 மட்டுமே (குசேலனை தவிர). அதிலும் பாபா பிளாப். இந்த நிலையில் கூட, ரஜினி என்ற மூன்றெழுத்துக்கு தமிழகமே கட்டுண்டு கிடக்கிறது. இதை அவருக்கான ஏகபோக ஆதரவு என்று கருதினால், அதை விட இமாலயத் தவறு எதுவும் இருக்காது.

ஏனெனில், திரையுலகம் வேறு. அரசியல் களம் வேறு. குடும்பங்கள் தொடங்கி பணி புரியும் இடங்கள் வரை எங்கெங்கும் அரசியல் நிலவும் இன்றைய காலகட்டத்தில் அரசியல் துறையில் எந்த அளவுக்கு அரசியல் இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். திரையுலகில் இருந்து அரசியலுக்குள் பிரவேசித்தவர்கள் பற்றிய தகவல்களையும் ரஜினி ஆராய்ந்து பார்ப்பது நல்லது. தந்தை பெரியாரால் பட்டம் சூட்டப்பட்ட நடிகவேள் எம்ஆர் ராதா, லட்சிய நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன் ஆகியோர் அரசியலில் தீவிர நாட்டம் கொண்டவர்கள். அவர்கள், ஆட்சியிலோ  அதிகாரப் பதவியிலோ அமர்ந்ததில்லை. தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகப் பட்டாளத்தை வைத்திருந்த (இன்றும் வைத்திருக்கும்) சிவாஜி கணேசனால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. அவர் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியை கூட தமிழக அரியணையில் அவரால் ஏற்ற முடியவில்லையே? அது மட்டுமல்ல. தமிழக முன்னேற்ற முன்னணி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி அதிமுக (ஜா) அணியுடன் 1989ம் ஆண்டு சட்டசபை தேர்தலை அவர் சந்தித்தபோது, அந்த அணிக்கு 4வது இடமே கிடைத்தது. அவரே  தொகுதியில் 3ம் இடத்தை பிடித்து தோல்வியை தழுவினார். எம்ஜிஆரால் கலை உலக வாரிசு என அடையாளம் காட்டப்பட்ட பாக்கியராஜ் மற்றும டி.ராஜேந்தர் ஆகியோரின் அரசியல் பயணமும் இந்த வழியில் தான் முடிந்தது.

தியாகு, வாகை சந்திரசேகர், நெப்போலியன், ராதாரவி, ராமராஜன், குமரி முத்து, தீபா, சிம்ரன், விந்தியா என திரையுலக அரசியல் பிரபலங்கள் ஏராளம். வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும் அனைவருக்கும் ஒரு பொது ஒற்றுமை உண்டு. அதாவது, தேர்தல் சமயங்களில் மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கு மட்டுமே அரசியல் கட்சிகளால் அவர்கள் உபயோகப்படுத்தப்படுகின்றனர். இந்த வரிசையில் இல்லாமல் வித்தியாசமான முறையில் அரசியலில் குதித்தவர், விஜயகாந்த். தனித்து நின்றபோது தனியாளாக மட்டுமே அவரால் வெற்றி பெற முடிந்தது. இன்றைய அரசியல் அரங்கில் அவரது நிலைமையும் நிலைப்பாடும் என்ன என்பதை ரஜினிக்கு யாரும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. கனவு தொழிற்சாலை என்னும் திரையுலகம் வேறு. மக்களின் கனவுகளை தொழிற்சாலையாக்கி லாபம் பார்க்கும் அரசியல் உலகம் வேறு.

இந்த அரசியல் சூழலில் நீந்தி கரை சேர்ந்ததோடு அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர், எம்ஜிஆர் மட்டுமே. மேலெழுந்தவாரியாக பார்த்தால் கட்சி ஆரம்பித்து 3 ஆண்டுகளுக்குள் ஆட்சியை எம்ஜிஆர் கைப்பற்றியது போல தோன்றும். உண்மையில், 1950ல் தொடங்கி 27 ஆண்டு கால அரசியல் பயணத்துக்கு பிறகே அவருக்கு அந்த வெற்றி சாத்தியமானது. முதன் முதலில் அவர் கதை நாயகனாக நடித்த ராஜகுமாரி, மந்திரி குமாரி (கருணாநிதி வசனம் எழுதிய திரைப்படம்) படங்கள் வெளியான சமயத்திலேயே திராவிட இயக்கத்துடன் அவர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். தனது படங்களில் காட்சிகள், நடிகர்களின் உடை, பாடல்கள் என சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் திமுக கொள்கையை, கட்சிக் கொடியை, சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் அக்கறை காட்டினார்.

திரையுலகம் மட்டுமல்ல நேரடி அரசியலிலும் முழு ஈடுபாட்டுடன் அவர் பங்காற்றினார். திமுக முன்னணி பேச்சாளர்களுக்கு இணையாக ஊர் ஊராக சென்று பொதுக் கூட்டங்களில் பங்கேற்றார். ‘தம்பி... ராமச்சந்திரா.  உன் முகத்தை காட்டு ஓரு லட்சம் ஓட்டுகள் விழும்’ என்று பேரறிஞர் அண்ணா கூறிய வார்த்தைகளும் ‘வேட்டைக்காரன் வருவாண்ணேன்.. வேட்டையாடிட்டு போயிருவாண்ணேன்...’ என்று பெருந்தலைவர் காமராஜர் கூறிய வார்த்தைகளும் இதை உறுதிப்படுத்துபவை. 1967ம் ஆண்டு முதலில் எம்எல்ஏ ஆனார். பின்னர், 1972லும் எம்எல்ஏ. அதன்பிறகே 1977ல் தமிழக முதல்வராக முடிந்தது. எம்ஜிஆரின் இந்த 27 ஆண்டு கால அரசியல் அனுபவம், மக்கள் செல்வாக்கு ஆகியவை கவசங்களாக இருந்ததால் தான் அரசியல் களத்தில் ஜெயலலிதாவால் வெற்றி பெற முடிந்தது.

எனவே, எம்ஜிஆர் வழியில் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று ரஜினிகாந்த் கருதினால் அது அவரது அறியாமையின் வெளிப்பாடாகவே அமையும். மேலும், அரசியல் என்பது சாதாரணமானது அல்ல. நெருங்கிய நண்பர்கள் கூட ஜென்ம விரோதிகளாக மாறும் ஆச்சரியங்கள் நடைபெறும். கூரிய வாளாக விமர்சனங்கள் பாய்ந்து வந்து இருதயத்தை அறுத்தெடுக்கும். ‘மலையாளி, அட்டைக்கத்தி வீரர்’ என்பதெல்லாம் எம்ஜிஆர் எதிர்கொண்ட விமர்சனங்களில் சில. காமராஜர் பற்றிய விமர்சனங்களை அச்சில் ஏற்ற முடியாது. பேரறிஞர் அண்ணாவை கூட தெலுங்கு நடிகை ஒருவருடன் இணைத்து பேசியது உண்டு. இதுபோன்ற விமர்சன பானங்களால் ஜெயலலிதாவும் துளைத்து எடுக்கப்பட்டார். நேற்று அரசியலுக்கு வந்த குஷ்பு வரை இந்த தனிநபர் விமர்சனங்கள் தொடருகின்றன. தமிழகத்தின் இன்றைய எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் பற்றிய விமர்சனமும் தமிழக மக்களிடையே அவரைப் பற்றி உருவாக்கப்பட்டு இருக்கும் ஒருவித பிம்பமும் ரஜினி அறியாதது அல்ல.

இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் ரஜினி காந்தின் செல்வாக்கை பயன்படுத்தி ஓட்டு அறுவடை செய்வதை மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளன என்பதே உண்மை. ஒருவேளை ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் அவர் இணைந்தால், மாற்று அணிகளில் இருந்து கிளம்பும் சரம் சரமான விமர்சன கணைகளை எப்படி எதிர்கொள்வார். 1999ம் ஆண்டில் பாமகவுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்தபோது ரஜினியை நோக்கி ராமதாஸ் எழுப்பிய 10 கேள்விகள் இன்னமும் விடை கிடைக்காமல் அப்படியே இருக்கின்றன. இதுபோல, ரசிகர்களுக்கு விருந்து அளிப்பதாக ரஜினி அளித்த வாக்குறுதியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அரசியலில் புகுந்தால் இவை எல்லாம் விசுவரூப விமர்சனங்களாக மாறலாம். தமிழகத்துக்கு அவர் செய்தது என்ன? என்பதில் தொடங்கி அவரது கர்நாடக பூர்வீகம் வரை அலசப்படும். நதி நீர் இணைப்பு திட்டத்துக்காக ஒரு கோடி ரூபாய் அளிப்பதாக சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்தார். அதுவும் இப்போது தூசி தட்டி எடுக்கப்படும். இதற்கெல்லாம், அரசியல் ரீதியாக என்ன பதில் வைத்திருக்கிறார், ரஜினி.

எந்த வித தொந்தரவும் இல்லாமல் நடிப்பு, ஓய்வு, ஆன்மிகம், அமைதி என்று செல்லும் ரஜினியின் வாழ்க்கை ஓட்டத்துக்கு எந்த அளவுக்கு அரசியல் கை கொடுக்கும்?  என்பது தெரியவில்லை. அதே நேரத்தில், விமர்சனத்தை எதிர் கொள்ளும் சக்தியும் தோல்வியை கண்டு துவளாத மனப் பக்குவமும் இருந்தால் அரசியலுக்கு ரஜினி வரலாம். ஏனெனில், இது ஜனநாயக நாடு. சாதாரண மனிதனும் அரியணை ஏறலாம், ஆட்சி பரிபாலனம் செய்யலாம்.... மக்கள் ஆதரவு இருந்தால்....!

இந்த ஆதரவை பெற முடியாமல் தோல்வியை நோக்கி ரஜினியின் அரசியல் பயணம் சென்றால்.....? வனத்தில் கம்பீரமாக உலவும் சிங்கமானது, சர்க்கஸ் கூண்டிலோ உயிர்க்காட்சி சாலையின் செயற்கை வனத்திலோ உலவ நேரிடலாம். ஆனால், சிங்கம் என்பது சிங்கமாகவே இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

= வை.ரவீந்திரன் 

Monday 13 October 2014

அரசியல் சதுரங்கத்தில் ஜெயலலிதாவின் பரம பத ஆட்டம்...



எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தின்போது அமைச்சராக இருந்த தற்போதைய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் அப்போது கூறிய வார்த்தைகள் பத்திரிகைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. அது, ‘எம்ஜிஆர் தான் நம்பர் 1. நாங்கள் அனைவருமே  பூஜ்ஜியங்கள்’ என்ற வார்த்தைகள் 1ம் எண் இல்லாவிட்டால் வெறும் பூஜ்ஜியங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது அவரது கருத்து. அவருடைய அந்த கருத்து இன்றும் கூட அதிமுகவுக்கு பொருத்தமானதாகவே இருக்கிறது. ஒரு சின்ன வித்தியாசம். 1ம் எண் மட்டும் மாறி இருக்கிறது. அப்போது எம்ஜிஆர். இப்போது ஜெயலலிதா.

முதன் முதலில் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பு வகித்த காலத்தில் நடைபெற்ற குற்றத்துக்காக தற்போது, அவரும் சிறை சென்று விட்டார். இனி, அதிமுக நிலைமை என்னவாகும்? ஜெயலலிதாவின் எதிர்காலம் என்னும் பாதை எந்த திசை நோக்கி செல்லும்? தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்படுமா? இப்படி விடை காண முடியாத அல்லது விடையை தேடிக் கொண்டிருக்கும் கேள்விகள் சுழன்று கொண்டு இருக்கின்றன. இந்த தருணத்தில் ஜெயலலிதாவின் 30 ஆண்டு கால அரசியல் பயணத்தை திரும்பி பார்க்கலாம்.

கடந்த 25 ஆண்டுகளாக அதிமுக நிரந்தர பொதுச் செயலாளராக இருந்து வரும் ஜெயலலிதாவின் அரசியல் பாதை முழுவதும் வித்தியாசமானது. சத்துணவு திட்டத்தை எம்ஜிஆர் தொடங்கியபோது அது தொடர்பான பணிகளுக்காக வந்த ஜெயலலிதாவை அவரது விருப்பத்தை அறியாமலேயே அரசியல் இழுத்துக் கொண்டது. 1982ம் ஆண்டில் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர், அதிமுக கொள்கை பரப்பு செயலாளர், மேல்சபை எம்பி என பதவிகளும் வரிசை கட்டி வந்தது. ஜெயலலிதாவின் அரசியல் பாதை ஏறுமுகமாக சென்றபோது 1987 டிசம்பரில் எம்ஜிஆர் மறைந்தார்.

அதன்பிறகு, அதிமுக மூத்த தலைவர்களுக்குள்ளேயே நடைபெற்ற தகராறுகள் அனைத்தும் அதிமுக வரலாற்றில் மட்டுமல்ல தமிழக அரசியல் சரித்திரத்திலும் கருப்பு பக்கங்கள். ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உடலை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்ய எடுத்துச் சென்றபோது எம்ஜிஆர் உடல் இருந்த வண்டியின் மேல் இருந்து ஜெயலலிதா கீழே தள்ளி விடப்பட்டார். அவமானப்படுத்தப்பட்டார். துக்க வீடுகளில் சொந்த பகையை தீர்த்து வைக்கும் வழக்கம், அங்கும் அரங்கேறியது.

பின்னர், ஜானகி அணி, ஜெயலலிதா அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. இரட்டை இலை சின்னமும் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1989ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழகம் அதுவரை கண்டிராத அளவுக்கு திமுக, காங்கிரஸ், ஜெ அணி, ஜா அணி என 4 முனை போட்டி நிலவியது. தேர்தல் முடிவில் அதிமுகவின் இரண்டு அணிகளுக்குமே ஏமாற்றம் மிஞ்சியது. தமிழகத்தின் அரியணையை 12 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கைப்பற்றியது. அதே நேரத்தில், அதிமுக தொண்டர்களும், அபிமானிகளும், எம்ஜிஆர் விசுவாசிகளும் ஜெயலலிதா பக்கம் பெரும்பான்மையாக நிற்பது நிரூபணமானது. அறிமுகமே இல்லாத சேவல் சின்னத்தில் தேர்தல் களமிறங்கி 29 தொகுதிகளை கைப்பற்றினார், ஜெயலலிதா. போடி நாயக்கனூர் தொகுதியில் வெற்றி பெற்று முதன் முறையாக தமிழக சட்டப்பேரவைக்குள் அடி எடுத்து வைத்தார். சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரானார்.

ஆனால், எம்ஜிஆரின் மனைவி ஜானகி தலைமையிலான அணியில் சேரன்மாதேவி தொகுதியில் இருந்து பி.எச்.பாண்டியன் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்ட ஜானகி தோல்வி அடைந்தார். அவர் அணியில் இடம் பெற்றிருந்த தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியின் தலைவரான நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் தோல்வியை ருசித்தார். அந்த தேர்தலுக்கு பிறகு, இரண்டு அணிகளும் ஒன்றாகின. அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதி பட்ஜெட் தாக்கல் செய்தபோது, எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா எழுப்பிய பிரச்சினையை தொடர்ந்து பேரவையில் கலவரம் மூண்டது. அந்த கலவரத்தில், ஆளுங்கட்சி எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டு தலைவிரி கோலமாக சட்டசபையில் இருந்து வெளியேறினார், ஜெயலலிதா.

அப்போது, அவர் எடுத்த சபதம், ‘இனிமேல் இந்த அவைக்குள் முதல்வராகத்தான் நுழைவேன்’. ஏற்கெனவே, 1977ம் ஆண்டில் இதே போன்ற சூழ்நிலையில் சபையில் இருந்து வெளியேறியபோது, எம்ஜிஆரும் இந்த வார்த்தைகளையே கூறி இருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது. 

அதன்பிறகு, 1991ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதல்வரானார். அப்போது அவரது வயது 43. அரசியலுக்குள் நுழைந்து 10 ஆண்டுகளுக்குள் இவ்வளவு பெரிய பதவி அவரை தேடி வந்தது. இடைப்பட்ட காலங்களில் அவருக்கு மிகவும் பக்கபலமாக இருந்து வழி நடத்தி வந்தவர்கள், நெடுஞ்செழியன் திருநாவுக்கரசு, சாத்தூர் ராமச்சந்திரன், எஸ்டி சோமசுந்தரம் போன்ற அதிமுக தலைவர்கள். ஆனால், இளம் வயதிலேயே மிகப்பெரிய பொறுப்பு கிடைத்ததும் கூடா நட்பு, அதிகார போதை, பக்குவமின்மை போன்றவற்றால் ஏற்றி விட்டவர்களை கழட்டி விட்டார். அதன் விளைவு தான், 20 ஆண்டுகளை கடந்து இன்றும் காலை சுற்றிய பாம்பாக மாறி கடித்திருக்கிறது. எனினும், ஜெயலலிதாவின் இந்த போக்குக்கு 1996ம் ஆண்டிலேயே தமிழக மக்கள் மிகச் சரியான தண்டனையை வழங்கினர். அப்போது நடைபெற்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை தழுவியது. தர்மபுரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் சுகவனம் என்ற முன்பின் அறிமுகமில்லாத திமுக வேட்பாளரிடம் ஜெயலலிதா பரிதாபகரமாக தோற்றார். ‘யானையின் காதில் புகுந்த சிற்றெறும்பு’ என சுகவீனத்தை பார்த்து கருணாநிதி கூறிய வார்த்தைகளும் அப்போது பிரபலமானது. விமர்சனமும் செய்யப்பட்டது.  

இந்த காலகட்டத்தில் தான், ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கு தொடர அப்போதைய கவர்னர் சென்னாரெட்டியிடம் சுப்பிரமணியசாமி அனுமதி பெற்றிருந்தார். 1996ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, பல்வேறு ஊழல் வழக்குகளை ஜெயலலிதா மீது பாய்ச்சினார். சென்னை மத்திய சிறைச்சாலையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். நாள்தோறும் அவருக்கு என்ன உணவு வழங்கப்படுகிறது என்பதை அப்போதைய சட்ட அமைச்சர் ஆலடி அருணா பட்டியலிட்டது தனிக்கதை. இப்போது, ஜெயலலிதாவுக்கு தண்டனை பெற்று தந்துள்ள வழக்கும் அந்த சமயத்தில் தான் தீவிரமானது.  
ஆனால், வழக்கை தொடர்ந்த சுப்பிரமணிய சாமியே 1998ம் ஆண்டு ஜெயலலிதாவுடன் கூட்டணியாக இருந்தார் என்பதும் மதுரை பாராளுமன்ற தொகுதியில் நின்று எம்பியாக வெற்றி பெற்றார் என்பதும் இப்போதைய சூழ்நிலையை உற்று கவனிப்பவர்களால் நம்ப முடியாத உண்மை. அதுமட்டுமல்ல. இரண்டு மாத சிறைவாசத்துக்கு பிறகு வெளியே வந்ததும் மதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து 1998ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா களமிறங்கினார். இப்போது, ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சிக்கும் பாமகவும், வழக்கின் ஆரம்பகட்டத்தில் அவருடன் கூட்டணியில் இருந்தது என்பதும் ஆச்சரியமான தகவல். அந்த தேர்தலில் 4 எம்பிக்களை வென்றதோடு மத்தியிலும் வாஜ்பாய் அரசில் மந்திரி பதவிகளை பெற்றது, பாமக.

1996 தோல்வி, இரண்டு மாத காலம் சென்னை மத்திய சிறையில் வாசம் என அஸ்தமனம் நோக்கி சென்ற ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் 1998ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி தெம்பை கொடுத்தது. அப்போது, அதிமுக மட்டும் 18 தொகுதிகளை கைப்பற்றியது. ஆனாலும், அவரது அடிப்படை குணம் மாறவில்லை. மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த போதிலும் கடிதத்தை ஜனாதிபதியிடம் அளிப்பதில் காலதாமதம் செய்தார். கடைசியில் 13 மாதங்களில் அந்த ஆட்சியை கவிழ்க்கவும் செய்தார். அந்த ஆட்சி கவிழ்ப்பு செயலில் அப்போது ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்தவர் இதே சுப்பிரமணிய சாமி. 

ஜெயலலிதாவின் இத்தகைய தான் தோன்றித்தனத்தை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார், கருணாநிதி. அதனால், மத்தியில் வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்து 1999ம் ஆண்டு மீண்டும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது பாஜக கூட்டணிக்குள் திமுக புகுந்தது. அதிமுக வெளியேறியது. அப்போது, மத்தியில் கால் தடம் பதித்த திமுக, சுமார் 15 ஆண்டு காலம் இடைவிடாமல் மத்திய அரசில் அங்கம் வகித்தது என்பது ஊரறிந்த உண்மை. திமுகவின் இந்த ஏற்றத்துக்கு ஜெயலலிதாவே ஒருவகையில் மறைமுக காரணம். வாஜ்பாய் ஆட்சியின்போது பாஜகவுடன் அவர் இணக்கமாக இருந்திருந்தால் இந்த வாய்ப்பு திமுகவுக்கு கிட்டி இருக்காது. 

மத்தியில் கிடைத்த செல்வாக்கை தவற விட்டாலும், 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மூப்பனாரின் தமாகா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக மாபெரும் வெற்றியை பெற்றது. அப்போது, டான்சி ஊழல் வழக்கு காரணமாக அவரால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. எனினும், அதிமுக வெற்றி பெற்றதும் முதல்வராக பொறுப்பேற்றார். பின்னர், சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இதே ஓ.பி.எஸ்சிடம் முதல்வர் பதவியை ஒப்படைத்து விட்டு 7 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் முதல்வரானார்.

டான்சி வழக்கில் ஜெயலலிதா தப்பியதால், 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பு வழக்கில் திமுக தீவிர கவனம் செலுத்த தொடங்கியது. சதுரங்க ஆட்டத்தில் ராஜாவுக்கு செக் வைப்பது போல, ஜெயலலிதாவுக்கு மிகச் சரியாக செக் வைப்பதில் தீவிர கவனம் செலுத்தியது. வழக்கு விசாரணையை கர்நாடக மாநிலத்துக்கு மாற்ற உறுதுணையாக இருந்தது. இந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடன் மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்தது.
ஆனாலும், 1996ம் ஆண்டு தேர்தல் தோல்வியை தவிர்த்து பார்த்தால் தமிழகத்தில் அவரது செல்வாக்குக்கு எந்த பங்கமும் நிகழவில்லை. எனினும், வெற்றி, தோல்வி என்ற பரமபத விளையாட்டாகவே அவரது அரசியல் பயணம் தொடர்ந்தது. 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கூட ஆளும் அதிமுக தோல்வி அடைந்தாலும் 70 தொகுதிகளை கைப்பற்றியது. அப்போது, காங்கிரஸ் தயவில் ஆட்சியில் அமர்ந்த திமுகவுக்கும் அதிமுகவுக்கும் 25 இடங்கள் தான் வித்தியாசம். அதனாலேயே, ‘மைனாரிட்டி திமுக அரசு’ என்பதை கூறி வந்தார், ஜெயலலிதா. அப்போதைய திமுக ஆட்சியின்போது, ஒருமுறை அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் கூண்டோடு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டிருந்தார். அன்றைய தினம் ஜெயலலிதா சபையில் இல்லை. அதனால், அவருக்கு அந்த உத்தரவு பொருந்தவில்லை. எனவே, தனியாளாக மறுநாள் சபைக்கு சென்று திமுக மூத்த அமைச்சர்கள் அனைவரும் திணறும் அளவுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி திணற வைத்தார். ஜெயலலிதா. அப்போது, அவருடைய அரசியல் மற்றும் ஆட்சி அனுபவ அறிவு வெளிப்பட்டது.


அதன்பிறகு, 2011ம் ஆண்டு சட்டப்பேரவை  தேர்தலை தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து சந்தித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார். வழக்கம்போல, அவருடைய குணம் வெளிப்பட்டது. கம்யூனிஸ்ட், தேமுதிக கட்சிகளுடன் பகைமை ஏற்பட்டது. 2014 தேர்தலிலும் யாருடனும் கூட்டணி இல்லை என்று தனியாக புறப்பட்டார். வென்றார். ஆனால், அந்த வெற்றியால் கிடைத்த பலன் என்ன? தற்போது, தமிழக அரசியலில் இன்று தனியாகவே அதிமுக இருக்கிறது. தற்போது, ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் ஜெயலலிதா இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அதிமுகவுக்கு எதிராக ஒன்று சேர வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அதிமுகவின் நிலைமை என்னவாகும்......? ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் எப்படி போகும்.......?  

வெயிட் அண்ட் ஸீ....

= வை.ரவீந்திரன்.