Monday 29 April 2019

நாடாளுமன்ற தேர்தல் -20

காங்கிரஸ் மூத்த தலைவர்களை வெற்றி பெற்றதில் தொடங்கி, பங்களாதேஷ் நாட்டை உருவாக்கியது, பாகிஸ்தான் போர் வெற்றி, இரண்டாண்டு எமர்ஜென்சி, பிரதமராகவே தோல்வியடைந்த ஒரே நபர் என்ற போதிலும் மீண்டும் வென்று ஆட்சியை கைப்பற்றிய மன உறுதி என வளர்ந்து காலிஸ்தான் தீவிரவாதிகளை பொற்கோயிலுக்குள்ளேயே சென்று துவம்சம் செய்தது வரை பார்த்த இந்திய மக்கள், இந்திராவை வியப்புடன் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கிடந்தனர். ஆனால் இந்த காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான துணிச்சல்தான் அவருக்கு முடிவுரையை எழுதியது. 



புளூ ஸ்டார் ஆபரேஷன் முடிந்த நான்கே மாதத்தில் 1984 அக்டோபர் 31ம் தேதியன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார் இந்திராகாந்தி. இரும்பு பெண்மணியின் சரித்திரம் அவரது சொந்த மெய்க் காவலர்களான சீக்கிய இனத்தை சேர்ந்த சத்வந்த் சிங், பியாந்த் சிங் என்ற இருவரால் சரிந்தது. இதன் தொடர்ச்சியாக, சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் மூண்டதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இன்னமும் நீடிக்கும் அந்த கலவர வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட காங்கிரஸ் தலைவர்களில் தற்போதைய மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தும் ஒருவர். இது தனியொரு அத்தியாயம்.

இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டதும் புதிய பிரதமரை தேர்வு செய்யும் படலம் காங்கிரஸ கட்சியில் தொடங்கியது. அதில் முன்னணியில் இருந்தவர்களில் பிரணாப் முகர்ஜியும் ஒருவர். ஆனால், சஞ்சய் காந்தி மறைவால் அரசியலுக்கு வந்து அமேதி எம்பி யான ராஜீவ் காந்திக்கு அந்த பதவி வந்து சேர்ந்தது. கட்சியின் ஒற்றுமை என்ற காரணத்தால் அரசியலில் நுழைந்த மூன்றே ஆண்டில் பிரதமர் பதவி தேடிவந்தது ராஜீவ் காந்தி வசம். பிரதமரான சில வாரங்களிலேயே நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாரானார், ராஜீவ்.

இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் காங்கிரசின் கூட்டணி தலைவரான எம்ஜிஆர், 1984ம் ஆண்டு இறுதியில் கடுமையாக நோய் வாய்ப்பட்டார். சென்னை அப்பலோவில் இருந்து அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படட எம்ஜிஆருக்கு இந்திரா காந்தியின் மறைவு செய்தி கூட சொல்லப்படவில்லை. ஆம். இந்திராவின் இறுதிச் சடங்கின்போது அமெரிக்காவில் இருந்தார் எம்ஜிஆர்.



இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க ராஜீவ் காந்தி தயாரானதால், தமிழக சட்டப்பேரவை தேர்தலையும் ஆறு மாதங்களுக்கு முன்பே எதிர்கொள்ள தீர்மானித்தது, அதிமுக அரசு. 1985 ஜூன் மாதம் வரை ஆட்சியின் பதவிக்காலம் இருந்தது. அப்போதைய இடைக்கால முதல்வர் நெடுஞ்செழியன், மூத்த அமைச்சர் ஆர்எம் வீரப்பன் போன்ற முக்கிய தலைவர்களின் ஆலோசனையை தொடர்ந்து இரண்டு தேர்தலையும் சேர்த்து எதிர்கொள்ள தமிழகம் தயாரானது. 

1984ம் ஆண்டின் இறுதி நாட்களில் நடந்த அந்த தேர்தல்களின் போது, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், நேரடியாக தேர்தல் களத்தில் இல்லை. 

இரும்பு மனுஷி இந்திரா காந்தியோ இந்த உலகிலேயே இல்லை. ஆனால், இருவரும் தான் அந்த தேர்தலின் பிரதானமாக இருந்தனர். இப்படியொரு சூழ்நிலையில் 1984ம் ஆண்டு தேர்தலை காங்கிரசும் அதிமுகவும் சந்தித்தன. 

(நினைவுகள் சுழலும்)

- வை.ரவீந்திரன்

Saturday 27 April 2019

நாடாளுமன்ற தேர்தல் -19

1980 தேர்தலுக்கு பிந்தைய அரசியல் சூழல்கள், அதிமுக காங்கிரஸ் இடையிலான பந்தத்தை உறுதி செய்தன. 'மத்தியில் காங்கிரஸ், மாநிலத்தில் அதிமுக' என்பதே அந்த பந்தத்தின் பிரதான அம்சம். நாடாளுமன்ற தேர்தலாக இருந்தால் மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகள் காங்கிரசுக்கும் சட்டப்பேரவையாக இருந்தால் மூன்றில் இரண்டு பங்கு அதிமுகவுக்கும் ஒதுக்கப்படும் என்பதே அந்த ஒப்பந்தம். இவ்வாறாக, கூட்டணி நீடிக்க இந்திரா காந்தியும் எம்ஜிஆரும் செல்வாக்கு மிகுந்த தலைவர்களாக உயர்ந்தனர்.

இவ்வாறாக, அடுத்த தேர்தலை நோக்கி சென்றது. அந்த தேர்தலுக்கு முன்னால் ஒரு பயங்கர சம்பவம் நடந்தது. அதற்கு 'காலிஸ்தான்' என்ற இயக்கம் பற்றி சில வரிகள் தெரிந்து கொள்வது நல்லது. பஞ்சாப், அரியானா உட்பட சீக்கியர்களின் பூமியை தனி நாடாக அறிவிக்க கோரி 1970களில் உருவானது தான் 'காலிஸ்தான்' இயக்கம். வெளிநாடுவாழ் சீக்கியர்கள் துணையோடு உருவான இந்த இயக்கத்தை பாகிஸ்தானும் ஊக்குவித்ததாக கூறுவது உண்டு. 



இப்போது காஷ்மீர் போல, அப்போது பஞ்சாபும் இந்தியாவின் தலைவலி. நாடாளுமன்ற தேர்தல் கூட தனியாகவே நடக்கும் அல்லது பல மாதங்கள் நடக்காமலே கூட இருந்தது உண்டு.  காலிஸ்தான் தீவிரவாதிகளின் வன்முறைக்கு அளவில்லை என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்த சூழ்நிலையில் தான், அதன் தளபதி பிந்தரன் வாலே, சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலுக்குள் இருந்தபடி வன்முறையை அரங்கேற்ற தொடங்கினார்.



இதனால், காலிஸ்தான் தலைமை பீடமாக பொற்கோவில் மாறி வருவதை தடுப்பதற்கான நடவடிக்கையை தொடங்கினார், பிரதமர் இந்திரா காந்தி. 'ஆபரேசன் புளு ஸ்டார்' என்ற பெயரில் பொற்கோவில் முன் ராணுவத்தை நிறுத்தினார். கோவிலுக்குள் இருந்த தீவிரவாதிகளை சரணடைய சொன்ன ராணுவததின் எச்சரிக்கை பலனளிக்கவில்லை. இந்திரா உத்தரவின் பேரில், பொற்கோவிலுக்குள் நுழைந்தது ராணுவம்.



1984 ஜூன் முதல் தேதியில் இருந்து எட்டு நாட்கள் கோவிலுக்குள் முகாமிட்டு, உள்ளிருந்த தீவிரவாதிகளை துவம்சம் செய்தது இந்திய ராணுவம். புனிதமான பொற்கோவிலுக்குள் ரத்த ஆறா...? என கொதித்தது சீக்கியர்களின் உள்ளம். இதனால் விளைந்தது, இந்தியா அதுவரை காணாத ஒரு அதிர்ச்சிகரமான துயரம். அது...?

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

Thursday 25 April 2019

நாடாளுமன்ற தேர்தல் -18

1980ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி பிரமாண்டமான வெற்றியை பெற, அப்போதைய பிரதமர் சரண்சிங்கின் ஜனதா கட்சி 41 இடங்களையும் சந்திரசேகரின் ஜனதா கட்சி 31 இடங்களையும் மட்டுமே பெற்றன. இது தவிர மார்க்சிஸ்ட் 37 இடங்களை வென்றிருந்தது. தமிழகத்தில் காங்கிரஸ் அணியில் இருந்த திமுக 16 இடங்களை கைபபற்றியது. ஆளுங்கட்சியான எம்ஜிஆரின் அதிமுக சிவகாசி, கோபி என இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்றது.

இந்த வெற்றியின் களிப்பால், இந்திரா கந்தி பாரதமரான உடனேயே ஆட்சி கலைப்பு அரங்கேறியது. கருணாநிதியின் நெருக்கடியால் எம்ஜிஆர் ஆட்சியை கலைத்தார் இந்திராகாந்தி. அப்போதெல்லாம் 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைப்பது சாதாரணமான நிகழ்வுகளாக இருந்து. இதனால், தமிழக மக்கள் மறுபடியும் ஒரு தேர்தலை சந்தித்தனர்.

1980 ஜனவரியில்  நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் மே மாதம் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தலா 114 என தொகுதிப் பங்கீட்டோடு களமிறங்கின, திமுக காங்கிரஸ் அணி. அதில் முஸ்லிம் லீக்குக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதிமுக அணியில் மார்க்சிஸ்ட், குமரி அனந்தனின் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சிகள் இருந்தன.

ஆனால், திமுகவின் கணக்கு பொய்யானது. ஜனவரி நாடாளுமன்ற தேர்தலில், இந்திராவை ஆதரித்த தமிழக மக்கள் மே மாத சட்டப்பேரவை தேர்தலில் அம்ஜிஆரையே மீண்டும் தேர்வு செய்தனர். இந்த தேர்தல் முடிவில் அதிமுக கூட்டணி 162 இடங்களை பிடித்தது. அதிமுக மட்டும் 129 இடங்களுடன் தனிப் பெரும்பான்மை பெற்றது. தலா 114ல் களமிறங்கிய  திமுகவுக்கு 37 காங்கிரசுக்கு 31 என வெற்றி கிடைத்தது.



மூன்றே மாதங்களில் நிகழ்ந்த இந்த மாற்றத்தை பார்த்து ஆச்சரியமடைந்த இந்திரா காந்தி, அதன்பிறகு எம்ஜிஆருடன் நட்பு பாராட்டினார். மத்திய அரசின் உதவி தேவை என்பதால் முதல்வர் எம்ஜிஆரும் நட்புக்கரம் நீட்டினார். இந்த நட்பானது அடுத்த 16 ஆண்டு காலத்துக்கு அதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமானது.

இந்த காலகட்டத்தில் தான், 1980ல் அமேதி தொகுதியில் வென்ற இந்திராவின் இளைய மகன் சஞ்சய் காந்தி அகால மரணம் அடைந்தார். அந்த தொகுதிக்கு 1981ல் நடந்த இடைத்தேர்தல் மூலமாக அரசியலில் காலடி எடுத்து வைத்தார் விமானியாக இருந்த இந்திராவின் மூத்த மகன் ராஜீவ் காந்தி. 



இப்படியாக அரசியல்களம் பல மாற்றங்களை சந்தித்த நிலையில், எம்ஜிஆரும் இந்திராவும் அசைக்க முடியாத தலைவர்களாக மாறிக் கொண்டு இருந்தனர். அவர்கள் தான், 1984 நாடாளுமன்ற தேர்தலின் மையமாக இருநதனர்.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

Monday 22 April 2019

நாடாளுமன்ற தேர்தல் 17

 கருத்து வேறுபாடு, அதிகார போட்டிகளால் இந்தியாவின் முதலாவது கூட்டணி அரசு, முழுமையாக கரை சேராமல் பாதியிலேயே கவிழ்ந்தது. 1977ல் பதவிக்கு வந்த ஜனதா அரசு கவிழ்ந்ததால் மூன்றே ஆண்டுகளில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வந்தது. 1980 ஜனவரியில் நடந்த அந்த தேர்தலின்போது, 1977ல் பிரதமராக இருந்தபோதே  ரேபரேலி தொகுதியில் தோல்வியடைந்த அனுபவத்தை இந்திரா காந்தி மறக்கவில்லை. அதனால்,  தென்னிந்தியாவையே தனது பாதுகாப்பு பிரதேசமாக பார்த்தார்.

1978 இடைத்தேர்தல் மூலமாக கர்நாடகாவின் சிக்மகளூருவில் வென்ற அவர், 1980ல் ஆந்திர மாநிலம் மேடக் தொகுதியை தேர்வு செய்தார். முந்தைய தேர்தலில் பலமாக இருந்த எதிர்க்கட்சிகள் இந்த முறை சிதறிக் கிடந்தன. 85 வயதை எட்டிய மொரார்ஜி தேசாயும் களத்தில் இல்லை. ஆனாலும் சரண்சிங், சந்திரசேகர் என 1980 தேர்தல் களம் சூடாகவே தகித்தது.



தமிழகத்தில் 1977 தேர்தலில் ஜனதாவுடன் இருந்து இந்திராவை மிகக்கடுமையாக விமர்சித்த திமுக 1980ல் இந்திரா காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது. அதுவும் காங்கிரசுக்கு 22 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. எம்ஜிஆரின் செல்வாக்கு வளர்ந்ததே இதற்கு காரணம். அதே நேரத்தில் நெருக்கடி நிலையின்போதே இந்திராவுடன் கூட்டணி அமைத்திருந்த எம்ஜிஆர், இந்த தேர்தலில் சரண்சிங்கின் ஜனதா அணியில் சேர்ந்திருந்தார்.

மிகவும் பரபரப்பான இந்த தேர்தலில் இந்திராகாந்தி எதிர்பார்த்தபடியே தென் மாநிலங்கள் அவரை கைவிடவில்லை. எதிர்க்கட்சி தலைவர்களின் அதிகார போட்டியை பார்த்து வெறுத்துப் போயிருந்த இந்திய மக்களுக்கு இரும்பு பெண்மணியாக  இந்திரா காந்தி தெரிந்தார். அவரது நெருக்கடி நிலை கால அனுபவங்களை மூன்றே ஆண்டுகளில் மறந்து அவரையே மீண்டும் கொண்டாடினார்கள். ஏகபோக வெற்றியை ருசித்தது காங்கிரஸ். அகில இந்திய அளவில் 374 இடங்களை காங்கிரஸ் வென்று மீண்டும் பிரதமரானார் இந்திராகாந்தி. தமிழகத்தில் காங்கிரஸ் திமுக கூட்டணி 37 இடங்களை பெற்றது. இதன் விளைவு அடுத்தடுத்த நாட்களில் தமிழக அரசியலில் வெப்பம் கூட்டியது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

Monday 15 April 2019

இது '94

உணவின் சூட்டை உள்வாங்கி கிறங்கி கிடக்கும் வாழை இலை போல மனதுக்குள் உறங்கி கிடக்கிறது நினைவுகள் தாலாட்டும் மூன்றாண்டு பிஎஸ்சி கணிதம். பதின்ம வயதுக்கே உரித்தான குறும்புகள், சேட்டைகள் எல்லாம் கரைந்த பின்னும் அடிநாக்கில் இனித்துக் கிடக்கும்  கற்கண்டாய் 

இன்றளவும் சுவை கூட்டுகிறது.

கால சக்கரத்தின் கோரப்பிடியில் சிக்கி சுழன்றாலும் மேலும் மேலும் சுவை கூட்டும் பண்டங்களில் மனிதனின் பழைய நினைவுகளும் ஒன்று. 

கல்லூரியின் முதல் நாள் வகுப்பு தொடங்கி நிறைவு நாளில் ஆட்டோகிராப், சினிமா, பிரியாணி என சுழன்ற 1994 நினைவுகளை மூளை நரம்புகள் பசுவாய் மாறி அசை போடுகின்றன. அந்த பொக்கிஷ நினைவுகளோடு இன்றைய நனவுகளும் சேர்ந்தது.


தமிழ் புத்தாண்டின் முதல் நாளிலேயே எனது 1991-1994 பிஎஸ்சி கணிதம் நண்பர்களின் சந்திப்பு ஈடேறியது. இன்றே தீர்த்தவாரியில் எழுந்தருளும் சுவாமிகளைப் போல எங்கள் பேராசிரியர்கள் பதின்மரை சந்திக்கும் வரம் பெற்ற பாக்கியசாலிகளானோம். அவர்களில் இருவர் எங்கள் கல்லூரியின் முன்னாள், இன்னாள் முதல்வர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

தமிழ்த்தாய் வாழ்த்து தந்த மனோன்மணியம் சுந்தரனார் தான் எங்கள் கல்லூரியின் முதல் முதல்வர். புதுமைபித்தன்,  பாரதி தொடங்கி சாகித்ய அகாடமி பெற்ற அறுவரை தந்த கல்லூரியும் எங்களதே. நெல்லை மண்ணுக்கே உரித்தான ஏலேய், மக்கா, மாப்ளே என விளித்த வார்த்தைகளை 45 பிளஸில் கேட்டபோது, சந்திப்பின் நோக்கம் கூடுதல் அர்த்தம் பெற்றது.

- நெல்லை ரவீந்திரன்

.


நெல்லை மதுரை திரவியம் தாயுமானவர் கல்லூரியின் 1991-1994 கணிதர்களின் சில்வர் ஜூப்ளி சந்திப்பு.

Wednesday 10 April 2019

நாடாளுமன்ற தேர்தல் -16


1977 பொதுத்தேர்தலுக்கு பிறகு முதன் முறையாக காங்கிரஸ் கட்சி அல்லாத பிரதமராக மொரார்ஜி தேசாய் பதவியேற்றார். 1977 மார்ச்சில் அவருடன் சரண்சிங், ஜெகஜீவன் ராம் இருவரும் துணை பிரதமரானார்கள். தலித் சமுதாயத்தை சேர்ந்த பிரபல தலைவரான ஜெகஜீவன் ராம், கடைசி நேரத்தில் இந்திராவிடம் இருந்து ஜனதா கட்சிக்கு வந்திருந்தார். அவர், கடந்த ஆட்சியில் காங்கிரஸ் ஆட்சியில் மக்களவை சபாநாயகராக இருந்த மீராகுமாரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. 


மொரார்ஜி தேசாய் ஆட்சியின்போது, அப்போது புழக்கத்தில் இருந்து வந்த அந்தக்கால 1000, 5000 மற்றும் 10000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும்  செல்லாததாக அறிவிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த மறு ஆண்டில் 1978 ஜனவரியில் இந்த அறிவிப்பு வெளியானது பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முன்னோடி மொரார்ஜி தேசாய் தான்.



ஆட்சியமைத்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே ஜனதா தலைவர்களுக்குள் கருத்து மோதல் வெடித்தது. இதற்கிடையே 1978ல் கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் தொகுதி இடைத்தேர்தலில் வென்று எம்பியாகி இருந்தார் இந்திரா காந்தி. அதே நேரத்தில் ஜனதா தலைவர்களின் மோதலால் ஆட்சி கலகலக்க தொடங்கியது. இடதுசாரி சிந்தனை தலைவர்களுக்கும் வலதுசாரி சிந்தனை தலைவர்களுக்கும் இடையே தொடங்கிய கருத்து வேறுபாடானது வெவ்வேறு வடிவங்கள் எடுத்தது.


தலைவர்களுக்குள் எழுந்த அதிகார போட்டியின் விளைவாக 64 எம்பிக்களுடன் கட்சியை உடைத்தார் சரண்சிங். இதனால் 1979 ஜூலை 19ம் தேதி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மொரார்ஜி தேசாய். ஜூலை 28ல் புதிய பிரதமரானார் சரண்சிங். ஒவ்வொரு கட்சிகளிடமும் ஆதரவு கேட்டு நின்ற அவருக்கு அதிமுக போன்ற கட்சிகள் ஆதரவளித்தன. எனினும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.


கடைசியில், எந்த இந்திராவுக்கு எதிராக ஒன்று திரண்டு ஜனதா கட்சி உருவாக்கப்பட்டதோ அந்த இந்திராவிடமே சென்று காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கேட்டார் சரண்சிங். ஆனால்,  இந்திராகாந்தி ஆதரவு தர மறுத்ததால் ஐந்தரை மாதத்திலேயே சரண்சிங் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 1980 ஜனவரியில் இந்தியாவின் 8வது பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.



இதற்கிடையே, பதவி விலகிய மொரார்ஜி தேசாய் அரசியலுக்கு முழுக்கு போட்டு ஓய்வெடுக்க சென்று விட்டார். ஜனதா கட்சியை நிறுவிய ஜேபி என்ற ஜெயபிரகாஷ் நாராயணன் உடல்நலக் குறைவால் ஓதுங்கி விட்டார். ஜனதா கட்சியின் தலைவர்களுக்கிடையிலான மோதலால், சுதந்திரமடைந்த நாளில் இருந்தே ஏகபோகமாக ஆட்சி செய்து வந்த காங்கிரசுக்கு எதிரான மாற்று அரசியல் மூன்றே ஆண்டுகளில் கருகிப் போனது.


ஜனதா கட்சிக்குள் ஐக்கியமான பலவேறு கட்சிகள் வெளியேற தொடங்கின. சில கட்சிகள் பெயர்களை மாற்றி புது அவதாரம் எடுத்தன. அதில் ஒன்றுதான் பாஜக. 1977 தேர்தலுக்கு முன் ஜனதாவில் ஜனசங்கமாக நுழைந்த அந்த கட்சி 1980ல் பாஜகவாக மாறியது. இதற்கிடையே சரண்சிங் தலைமையில் ஒரு ஜனதா கட்சி, சந்திரசேகர் (பின்னாளில் இந்திய பிரதமராக இருந்தவர்) தலைமையில் மதசார்பற்ற ஜனதா கட்சி என இரண்டாக பிரிந்தது ஜனதா. 



இப்படியான அரசியல் சூழலுடன் 1980 பொதுத்தேர்தல் நெருங்கியது. தமிழகத்தை பொருத்தவரை  சரண்சிங் தலைமையிலான ஜனதா கட்சியுடன் எம்ஜிஆரின் அதிமுக கூட்டணி அமைத்தது. எதிரணியில் இந்திராவையும் அவரது எமர்ஜென்சி கால கொடுமையையும் மிகக் கடுமையாக எதிர்த்து வந்த கருணாநிதி தலைமையிலான திமுக, இந்திராவின் காங்கிரஸ் கட்சியுடனேயே கூட்டணி அமைத்தது. தேசிய அளவில் இந்திராவுக்கு எதிரான கட்சிகள் எல்லாம் பிளவுபட்ட நிலையிலேயே சந்தித்த 1980 பொதுத் தேர்தலில் மக்களின் முடிவானது ஒரு தகவலை சொல்லியது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

Friday 5 April 2019

நாடாளுமன்ற தேர்தல் -15

இந்திரா கொண்டு வந்த எமர்ஜென்சியால் வழக்கத்தை விட ஓராண்டு தள்ளி நடைபெற்ற இந்தியாவின் 6வது பொதுத் தேர்தலில் எதிர்பாராத பல அதிர்ச்சிகரமான, அரசியல் வரலாற்று திருப்ப முடிவுகளை மக்கள் தந்தனர். தேர்தல் அறிவிப்புக்கு பிறகு உருவான ஜனதா கட்சி 298 இடங்களைப் பெற்றது. திமுக, மார்க்சிஸ்ட், அகாலிதளம் போன்ற கூட்டணியுடன் அதன் பலம் 345. ஜனதா கட்சி சார்பாக பிரதமர் பதவியை ஏற்றார் மொரார்ஜி தேசாய். இந்தியா சுதந்திரம் பெற்று 30 ஆண்டுகள் கழித்து முதன் முதலாக காங்கிரஸ் கட்சி அல்லாத ஒருவர் இந்திய பிரதமரானார்.


அதே நேரத்தில், ஆளும் இந்திரா காங்கிரஸ் கட்சி வெறும் 153 இடங்களில் மட்டுமே வென்றது. உ.பி. மாநிலம்  ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தியே 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அவரை தோற்கடித்தவர் ராஜ்நாராயணன்.இவர்,  முந்தைய தேர்தலில் இந்திராவின் எம்பி பதவி பறிபோக காரணமாக இருந்தவர். பதவியில் இருக்கும் பிரதமரே தோல்வியடைந்த வரலாறை இந்திய ஜனநாயகம் பதிவு செய்து கொண்டது.



இதுமட்டுமல்ல, எமர்ஜென்சியில் இந்திராவுக்கு வலதுகரமாக இருந்த அவரது இளையமகன் சஞ்சய்காந்தி, அமேதி தொகுதியில் 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்  தோல்வியடைந்தார். சஞ்சய் காந்தியை தோற்கடித்தவர் ரவீந்திரன் பிரதாப்.

உ.பி., மேற்கு வங்கம், டெல்லி, பீகார் என வட மாநிலங்கள் எல்லாம் காங்கிரசை மிகக் கடுமையாக விரட்டியடித்த நிலையில், தமிழகம், கேரளா, ஆந்திரம், கர்நாடகம் என தென் மாநிலங்கள் மட்டும் இந்திரா பின்னால் நின்றன. அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் கூட்டணி 189 இடங்களை பெற்றிருந்தது. இதில்,  கட்சி ஆரம்பித்து முதலாவது தேர்தலை சந்தித்த அதிமுக மட்டும் 19 இடங்களில் வென்றிருந்தது.

ஆனால், தேர்தலுக்கு பிறகு மொரார்ஜி தேசாய் அரசுக்கு ஆதரவளித்து மத்திய அமைச்சரவையிலும் பங்கெடுத்தது அதிமுக. பலாப்பழனூரார், சத்தியவாணி முத்து என இருவர் அதிமுக மந்திரிகளாகினர். இதன் மூலம் முதன் முறையாக காங்கிரஸ் அல்லாதவர்களை, தமிழகத்தில் இருந்து மத்திய மந்திரிகளாக்கும் வழக்கத்தை தொடங்கி வைத்தார் எம்ஜிஆர். மொரார்ஜி தேசாயின் இந்த மத்திய அமைச்சரவையில் வெளியுறவு துறை மந்திரியாக வாஜ்பாயும் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மந்திரியாக அத்வானியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த மூன்றே மாதங்களில், இந்திரா காந்தியால் கலைக்கப்பட்ட தமிழகம் உள்ளிட்ட பத்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களை மொரார்ஜி அரசு நடத்தியது. தமிழகத்தில் 1977 ஜூன் 10ம் தேதி நடந்த இந்த சட்டப்பேரவை தேர்தலில் 4 முனைப் போட்டிக்கு இடையே ஆட்சியை கைப்பற்றியது, எம்ஜிஆரின் அதிமுக. 144 இடங்களை அதிமுக கூட்டணி வென்றது. தனித்து போட்டியிட்ட இந்திரா  காங்கிரஸ் 32 இடங்களையும் 9 ஆண்டு ஆட்சியில் இருந்த கருணாநிதி தலைமையிலான திமுக 48 இடங்களையும் பெற்றன.

இதற்கிடையே, கூட்டுக்கலவையான மத்திய ஜனதா அரசுக்குள் தலைவர்களிடையே எழுந்த கருத்து வேறுபாடு, மற்றொரு அரசியல் குழப்பத்தை நோக்கி இந்தியாவை இழுத்துச் சென்றது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

Wednesday 3 April 2019

நாடாளுமன்ற தேர்தல் -14

 நாட்டில் நெருக்கடி நிலையை விலக்காமலேயே 1977 ஜனவரி 18ல் பொதுத் தேர்தலை அறிவித்தார் இந்திரா காந்தி. சிறையில் அடைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சி தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். "இந்திய ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கை இந்த தேர்தல்" என்றார் மொரார்ஜி தேசாய். ஜெயபிரகாஷ் நாராயணன் போன்ற தலைவர்கள் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணி தொடங்கினார்கள். 



தேர்தல் அறிவித்த ஐந்தே நாளில் ஜனதா என்ற புதிய கட்சியை தொடங்கினார் ஜெயபிரகாஷ் நாராயணன். ஸ்தாபன காங்கிரஸ் (காமராஜர் போன்ற இந்திரா எதிர்ப்பு தலைவர்களின் சிண்டிகேட் காங்கிரஸ்), ஜனசங்கம் (பழைய பாஜக), லோக்தளம், சுதந்திரா கட்சி, சோசலிஸ்ட் கட்சி என 10க்கும் மேற்பட்ட கட்சிகள் கலைக்கப்பட்டு ஜனதாவுக்குள் ஐக்கியமாகின. கட்சியின் சின்னம் ஏர் உழவன்.

ஜனதா கட்சியின் தலைவரானார் மொரார்ஜி தேசாய். பொதுச் செயலாளராக ராமகிருஷ்ண ஹெக்டே, செய்தி தொடர்பாளராக அத்வானி தேர்வாகினர். வாஜ்பாய், பிஜு பட்நாயக், ராஜ் நாராயண், கிவத்ராம் கிருபளானி, ஜெகஜீவன்ராம்  போன்றவர்கள் எல்லாம் ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள். இப்படி, பல்வேறு கொள்கைகள் கொண்ட தலைவர்கள் இணைந்து உருவான கட்சி ஜனதா. கலவையான சாப்பாட்டை 'ஜனதா சாப்பாடு' என அழைத்தது இப்படித்தான். 40 பிளஸ் வயதில் இருப்பவர்களுக்கு இது தெரியும்.



இந்திராவை வீழ்த்தும் ஒற்றை நோக்கோடு 10 கட்சிகள் சேர்ந்து உருவான ஜனதா கட்சியுடன் திமுக, மார்க்சிஸ்ட், அகாலிதளம் போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்தன. 1977 பிப்ரவரி 10ம் தேதியன்று ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியானது. "சுதந்திரமா...? அடிமைத்தனமா...?" இதுதான் ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையின் பிரதான கோஷமாக இருந்தது.

இந்திராவுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்திய கட்சிகளும் தலைவர்களும் திரண்ட போதிலும் இந்திராவின் இண்டிகேட் காங்கிரசுடனும் சில கட்சிகள் கைகோர்த்தன. அதில், அதிமுக,  இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், பார்வர்டு பிளாக் போன்ற கட்சிகள் முக்கியமானவை. அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பித்த பிறகு சந்தித்த முதல் பொதுத் தேர்தலும் இதுதான்...

தமிழகத்தில் ஜனதா, திமுக ஒரு அணியாகவும் இந்திரா காங்கிரஸ் அதிமுக ஒரு அணியாகவும் களமிறங்கிய 1977 நாடாளுமன்ற தேர்தல், அதிர்ச்சி, மாற்றம், திருப்பம் என விதம் விதமான முடிவுகளை தந்தது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்.