Saturday 30 March 2019

நாடாளுமன்ற தேர்தல் -13

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை நெருக்கடி நிலைநோக்கி இழுத்துச் சேன்ற தேர்தல், 1971ம் ஆண்டு தேர்தல். ஏராளமான தேரதல் முறைகேடு புகார்களை எதிர்க்கட்சியினர் கூறி வந்த நிலையில் உபி மாநிலம் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி பெற்ற வெற்றிக்கு எதிராக அவரை எதிர்த்து நின்ற ராஜ் நாராயண் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த அலகாபாத் உயர்நீதி மன்றம் (நீதிபதி ஜக்மோகன்லால் சின்கா) இந்திராகாந்தியின் எம்பி வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது.

இதன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் (நீதிபதி கிருஷ்ண அய்யர்) அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை 1975ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி உறுதி செய்தது. ஏற்கனவே, அலகாபாத் தீர்ப்பு வெளியானதுமே இந்திராவை பதவி விலகச் சொல்லி ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் போன்றவர்கள் நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரப் படுத்திக் கொண்டிருந்தனர். 

இந்த சூழ்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான அன்று நள்ளிரவிலேயே அரசியல் சட்டத்தின் 352வது பிரிவை பயன்படுத்தி நெருக்கடி நிலையை கொண்டு வந்தார், இந்திரா காந்தி. அதற்கு இந்திரா கூறிய காரணம், இந்தியாவில் உள்நாட்டு குழப்பம் அதிகரித்து விட்டது என்பதாகும். நெருக்கடி நிலை உத்தரவில் கையெழுத்திட்டார், இந்திராவால் ஜனாதிபதி பதவிக்கு வந்திருந்த அன்றைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது.



இந்தியாவின் ஆறாவது பொதுத் தேர்தலுக்கு சரியாக பத்து மாதங்களுக்கு முன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. தமிழகம் உட்பட பல மாநில ஆட்சிகளும் கலைக்கப்பட்டன. பதவி பறிக்கப்பட்டதும் நாடாளுமன்றத்தை கலைத்து முன் கூட்டியே தேர்தலை இந்திரா நடத்தி இருக்கலாம். அப்படி செய்யாமல், சர்வாதிகாரியாக மாறினார். 

1975 மார்ச் ஜூன் 25ல் அமலான நெருக்கடி நிலை அல்லது எமர்ஜென்சி அல்லது மிசா எனப்படும் இருண்ட காலம், இரண்டு ஆண்டுகள் நீடித்தது.  ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எமர்ஜென்சி நீட்டிக்கப்பட்டது. எமர்ஜென்சி காலம் என்பது மிக நீளமான, சோகமான கருப்பு சரித்திரங்கள் நிரம்பியது. மிசா கொடுமைகள் தாண்டவமாடிய அந்த வரலாறு தனிக்கதை.



அந்த இரண்டு ஆண்டுகளும் இந்திராவும் அவரது இளைய மகன் சஞ்சய் காந்தியும் மட்டுமே இந்தியாவின் ஏகபோக முதலாளிகள் போல செயல்பட்டனர். நெருக்கடி நிலை அமலானதும் முதல் கைது, இந்திராவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட ராஜ் நாராயணன்தான். அதன்பிறகு,  மொரார்ஜி தேசாய், ஜேபி என்ற ஜெயபிரகாஷ் நாராயணன், சரண்சிங், வாஜ்பாய், அத்வானி, அருண் ஜெட்லி என தேச தலைவர்கள் தொடங்கி மாநில அரசியல் தலைவர்கள் வரை பல ஆயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைகளும் கூட சென்சார் செய்தே வெளியிடப்பட்டன. இந்திரா அரசுக்கு எதிரான செய்திகளுக்கு தடை விதிக்கப்பட்டது.



கட்டாய கருத்தடையை கொண்டு வந்தார் சஞ்சய் காந்தி. மக்கள் தொகையை காரணம் கூறி ஒரே ஆண்டில் 83 லட்சம் பேருக்கு கருத்தடை செய்யப்பட்டது. இந்திய ஜனநாயகமும் கருத்தடை செய்யப்பட்டு கிடந்த நிலையில் ஒரு வழியாக, நெருக்கடி நிலையை விலக்காமலேயே 1977ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதியன்று இந்தியாவின் ஆறாவது பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியானது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

Monday 25 March 2019

நாடாளுமன்ற தேர்தல் -12

 

இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்ட நிலையில், இந்திரா தலைமையிலான காங்கிரஸ் ஒருபுறம் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தலைமையிலான மற்றொரு காங்கிரஸ் மறுபுறம் என களை கட்டியது 1971ல் நடைபெற்ற ஐந்தாவது பொதுத் தேர்தல். இது தவிர, 1967க்கு பிறகு மாநில கட்சிகளின் ஆதிக்கமும் அதிகரித்திருந்தது. எனவே எதிர் பார்ப்பு எகிறத் தொடங்கியது.



தேர்தல் முடிவில் 352 இடங்களுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது இந்திராவின் காங்கிரஸ். நாடு முழுவதும் மக்களிடம் செல்வாக்கு பெற்ற தலைவராக உயர்ந்தார். அதே சமயத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்களின் ஸ்தாபன காங்கிரஸ் 51 இடங்களில் மட்டுமே வென்றது. 

இது தவிர, ஜனசங்கம் 22, இந்திய கம்யூனிஸ்ட் 23, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் 25 என வெற்றி பெற்றன. இந்த தேர்தல் வெற்றிக்கு பிறகுதான் இரும்பு பெண்மணியாக மாறத் தொடங்கினார் இந்திரா காந்தி. தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே இந்தியா - பாகிஸ்தான் போர் மூண்டது. 1971ம் ஆண்டு டிசம்பர் 3ல் தொடங்கிய போர் சுமார் இரண்டு வாரங்கள் நீடித்தது.

இந்தியாவுக்கு மேற்கு பக்கம், கிழக்கு பக்கம் என இரண்டு பக்கமும் இருந்த பாகிஸ்தானால் இந்தியாவுக்கு தொல்லை அதிகமாக இருந்தது. இதற்கிடையே, மேற்கு பாகிஸ்தான் (இன்றைய பாகிஸ்தான்) நிர்வாகம் தங்களை இரண்டாம்தரமாக நடத்துவதாக கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) பகுதி மக்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள்.

பாகிஸ்தானின் இந்த உள்நாட்டு குழப்பத்தை சாதகமாக்கி களத்தில் இறங்கியது. இந்திராவின் தலைமையிலான இந்தியா. கிழக்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்திய ராணுவம் களமிறங்க இந்தியா பாகிஸ்தான் யுத்தம் வெடித்தது. இறுதியில் இந்திய ராணுவத்துக்கு வெற்றி. அதன் விளைவாக, இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டது, பாகிஸ்தான். 



ஆங்கிலேயரால் பிரிக்கப்பட்ட பாகிஸ்தான், இந்திராவால் இப்படி இரண்டாக பிரிந்தது. இந்தியாவின் உதவியோடு, 1971 டிசம்பர் 16ம் தேதி கிடைத்த உள்நாட்டு கிளர்ச்சியின் வெற்றியை தொடர்ந்து 1972 மார்ச்சில் வங்கதேசம் என்ற தனி நாடாக கிழக்கு பாகிஸ்தான் மாறியது. இதனால், இந்திய மக்களின் மத்தியில் இந்திராகாந்தி என்ற பெயரே பிரமிப்பை ஏற்படுத்தியது. அது, இந்திராகாந்தியை சர்வாதிகார பாதையை நோக்கி பயணம் செய்ய வைத்தது.

ஏற்கனவே கட்சிக்குள் மூத்த தலைவர்களை ஓரங்கட்டி தேர்தலில் வென்ற இந்திராவை,  மக்கள் தந்த வெற்றியும் போருக்கு பிந்தைய செல்வாக்கும் வேறு பரிமாணம் நோக்கி அழைத்துச் சென்றது. கூடவே, அவரது இளைய மகன் சஞ்சய் காந்தி. விளைவு, இந்திய ஜனநாயகமானது பேராபத்தை நோக்கி பயணம் செய்யத் தொடங்கியது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

Wednesday 20 March 2019

நாடாளுமன்ற தேர்தல் -11

மூத்த தலைவர்களுடனான கருத்து மோதல்களுடனே 1967 தேர்தலை சந்தித்த இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ், பல மாநிலங்களில் சரிவை சந்தித்திருந்தது. தேர்தலுக்கு பிறகு துணை பிரதமராக மொரார்ஜி தேசாய் பதவியேற்ற போதும் இந்திராவின் போக்கில் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். விளைவு. 1969 நவம்பரில் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார் இந்திரா. பிளவை நோக்கி காங்கிரஸ் பயணம் செய்தது.

காமராஜர், மொரார்ஜி, சஞ்சீவ ரெட்டி, நிஜலிங்கப்பா போன்ற மூத்த தலைவர்களின் காங்கிரஸ் 'ஸ்தாபன காங்கிரஸ்' அல்லது சிண்டிகேட் என அழைக்கப்பட்டது. இந்திரா தலைமையிலான காங்கிரஸ் இண்டிகேட் அல்லது காங்கிரஸ் (ஆர்)என அழைக்கப்பட்டது. கட்சியின் உயர்மட்ட கமிட்டியில் இருந்த 705 உறுப்பினர்களில் 446 பேர் இந்திராவுக்கு ஆதரவளித்தனர்.



இதுபோல எம்பிக்களும் அதிக அளவில் இந்திராவின் பக்கம் இருந்தனர். அதே நேரத்தில் பீகார், கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் ஸ்தாபன காங்கிரசுக்கு அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. அதனால், அந்த மாநிலங்களில் எல்லாம் சிண்டிகேட் ஆட்சி அமைந்தது. அந்த சமயத்தில் கட்சி தாவல் தடை சட்டம், தகுதி இழப்பு எல்லாம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

காமராஜர், மொரார்ஜி ஆகியோரின் காங்கிரஸ் பழைய காங்கிரசாகவே நீடிக்க, பிரிந்து வந்த இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் புதிய கட்சியானது. அதற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது. இந்திராவின் இண்டிகேட் காங்கிரசுக்கு  பசுவும் கன்றும் சின்னம் ஒதுக்கப்பட்டது.



இது போன்ற ஆளுங்கட்சியின் அரசியல் குழப்பம், மாற்றங்களுக்கிடையே இந்தியாவின் ஐந்தாவது பொதுத் தேர்தல் நெருங்கியது. 1971 மார்ச் மாதம் நடந்த அந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி முன்வைத்த தேர்தல் கோஷம் 'வறுமை ஒழிப்பு'. 

1971 தேர்தலில் இந்திராவின் காங்கிரசோடு திமுக, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்தன. மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா, காமராஜரின் ஸ்தாபன காங்கிரசுடன் சோசலிஸ்ட் கட்சி, ஜனசங்கம் (பாஜக தாய் கட்சி) போன்ற கட்சிகள் கூட்டு சேர்ந்தன. இரண்டுபட்ட காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக மோதிக் கொண்ட 1971ன் தேர்தலில் இந்திராவின்  ஆளுங் காங்கிரஸ் ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன். மிக மூத்த பழைய காங்கிரஸ் தலைவர்களின் இத்தகைய குற்றச்சாட்டுகளோடு இந்தியாவின் ஐந்தாவது தேர்தல் பத்தே நாட்களில் நடந்து முடிந்தது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

Friday 15 March 2019

நாடாளுமன்ற தேர்தல் -10


1967 தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டதோடு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் மாநில மற்றும் தேசிய அளவிலான மாற்று கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்தது. எமர்ஜென்சியை இந்திரா கொண்டு வந்ததும் 1977ல் பல கட்சிகள் இணைந்த ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்ததும் இதன் நீட்சியே. இந்த தருணத்தில் தற்போதைய இந்தியாவின் பிரதான கட்சியான பாஜக வளர்ச்சி பற்றி பார்க்கலாம்.



பாஜகவின் தாய்க் கட்சியின் பெயர் அகில பாரத ஜனசங்கம். இதன் முதல் தலைவரான ஷ்யாம் பிரசாத் முகர்ஜி, 1947ல் சுதந்திரம் பெற்றதும் அமைக்கப்பட்ட தேசிய அரசின் தொழில்துறை அமைச்சர். நான் ஏற்கனவே கூறியபடி, இந்தியா குடியரசு நாடாக மாறி, 1951ல் முதலாவது தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கியதும், தனிக்கட்சிகளை ஆரம்பித்த அம்பேத்கர் போன்ற தலைவர்களில் இவரும் ஒருவர்.

1951 தேர்தலில் 3 சதவீத ஓட்டுகளுடன் 3 இடங்களை ஜனசங்கம் பிடித்தது. அதன்பிறகு 1957ல் 4, 1962ல் 14, 1967ல் 35 என வளர்ச்சியடைந்த ஜனசங்கத்தின் வாக்கு வங்கியும் 1967 தேர்தலில் 10 சதவீதமாக அதிகரித்தது. அந்த தேர்தலில் உ.பி, ம.பி, அரியானா மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை ஜனசங்கம் பதிவு செய்தது. அப்போது ஜனசங்கத்தின் சின்னம் பூஜை விளக்கு.


பின்னர், 1971 தேர்தலில் 22 இடங்களை பிடித்திருந்த ஜனசங்கம் கட்சியின் தலைவர்கள் இந்திராவின் எமர்ஜென்சி கொடுமைகளையும் அனுபவித்தனர். இதன் விளைவாக இந்திராவுக்கு எதிராக பல கட்சிகளின் கூட்டு அமைப்பாக ஜனதா கட்சி உருவானது. அதில் காமராஜர், நிஜலிங்கப்பா போன்ற மூத்த தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபன காங்கிரஸ், சோசலிஸ்ட் கட்சி, லோக்தளம் போன்றவை ஐக்கியமாகின. அவை போலவே,  ஜனசங்கமும் கலைக்கப்பட்டு ஜனதாவோடு இணைந்தது.

முக்கியமான இந்த காலகட்டங்களில் ஜனசங்கம் கட்சியின் தலைவர்களாக இருந்தவர்கள் வாஜ்பாய் (1968 - 1972) மற்றும் அத்வானி (1973 - 1977). 1977 தேர்தலில் ஜனசங்கம் ஸ்தாபன காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்த கூட்டு அமைப்பான ஜனதா கட்சி 298 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. பிரதமராக மொரார்ஜி தேசாய் பதவியேற்க அவரது அமைச்சரவையில் மத்திய வெளியுறவு அமைச்சராக வாஜ்பாயும், மத்திய செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சராக அத்வானியும் பொறுப்பேற்றனர்.

அதன்பிறகு, சரண்சிங்கால் ஜனதா கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு, 1980ல் நடந்த தேர்தலில் மீண்டும் இந்திராவின் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து கூட்டு கலவையான ஜனதா கட்சி உடைந்தது. அதில் இருந்த பழைய ஜனசங்கம் கட்சியின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கியது தான் இன்றைய பாஜக. 

1980 தேர்தலுக்கு பிறகு உருவான இந்த கட்சி, 1984ல் இந்திரா கொலையான 2 மாதத்தில் நடந்த தேர்தலில் 2 இடங்களை பாஜக பிடித்தது. வாக்கு சதவீதம் 8. பின்னர், 1989 தேர்தலில் 85 இடங்களை பிடித்த பாஜக, அப்போதைய விபி சிங் அரசை வெளியில் இருந்து ஆதரித்தது. மண்டல் கமிஷன் பிரச்சினையில் பாஜக தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் அந்த ஆட்சி கவிழ்ந்தது. 



1991 தேர்தல் சமயத்தில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோதும் கூட 20% வாக்குகளுடன் 120 இடங்களை பிடித்து எதிர்க்கட்சியாக வளர்ந்தது பாஜக. பின்னர், 1996ல் 161 இடங்களுடன் 13 நாட்கள் ஆட்சியில் அமர்ந்தது. அதன் பிறகு 1998ல் 182, 1999ல் 182 என வெற்றி பெற்று ஏழு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது பாஜக. அப்போது அதன் வாக்கு சதவீதம் 25%.

2004 மற்றும் 2009 தேர்தல்களில் முறையே 138, 116 இடங்களுடன் 20% அளவுக்கு வாக்குவங்கி குறைந்த நிலையில் மோடியின் வருகைக்கு பின், 2014 தேர்தலில் 32% வாக்குகளுடன் 282 இடங்களை பிடித்து 1984க்கு பிறகு முதன் முறையாக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. 

காங்கிரஸ் மட்டுமே கோலோச்சிய இந்தியாவில் மிகப்பெரிய மாற்றுக் கட்சியாக ஜனசங்கம் டூ பாஜக வளர்ந்து நிற்கிறது. இதன் அடுத்த பரிமாணம் என்ன...? 

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

Sunday 10 March 2019

நாடாளுமன்ற தேர்தல் -9

இந்திய அரசியலில் 1967ம் ஆண்டு தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற தேர்தலுடன் பல மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கும் நடந்த தேர்தலில், அதுவரை 30 ஆண்டுகளாக மோனாபோலியாக ஆதிக்கம் செலுத்திய காங்கிரசின் கோட்டைகளில் ஓட்டைகள் விழுந்தன. 

அதுவரை 300க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி வந்த காங்கிரஸ் கட்சி, இந்த தேர்தலில் அறுதி பெரும்பான்மைக்கு சற்று அதிகமாக 283 இடங்களில் மட்டும் வென்றது. ராஜாஜியின் சுதந்திரா கட்சி 44, பாஜகவின் ஆதிக்கட்சியான ஜனசங்கம் 35 என பெற்றன. அன்றைய சென்னை மாகாணமான தமிழகத்தில் இருந்து 25 தொகுதிகளை வென்று 4வது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் வளர்ந்திருந்தது திமுக.

தமிழகத்தின் 39 தொகுதிகளில் 36ஐ திமுக ராஜாஜி கட்சி கம்யூனிஸ்ட் கூட்டணி வென்றது. நாகை, தென்காசி, நாகர்கோவில் என 3 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. அதுமட்டுமல்லாமல் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிடம் ஆட்சியையும் பறி கொடுத்தது. அதன்பிறகு, 50 ஆண்டுகளை கடந்தும் காங்கிரசால் தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியவில்லை.



அந்த தேர்தலின்போது முதல்வராக இருந்த பக்தவச்சலம் 9000 ஓட்டில் தோற்றுப்போனார். காங்கிரஸ் அமைச்சர்கள் பலரம் தோற்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியில் காமராஜர் வெற்றியை இழந்ததும் அப்போதுதான். அதே நேரத்தில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் அண்ணா எம்பியாக வென்றிருந்தார். ஆனால், ஆட்சியை பிடித்ததால் அவர் எம்பி பதவியை ஏற்கவில்லை. எம்எல்சியாகி தமிழகத்தின் காங்கிரஸ் அல்லாத முதல் முதலமைச்சரானார்.

தமிழகத்தில் திராவிட சரித்திரம் தொடங்கிய வேளையில், 1967 தேர்தலில் முதன்முறையாக நாடு முழுவதும் கேரளா, பீகார், ராஜஸ்தான், பஞ்சாப், உ.பி உட்பட 8 மாநிலங்களில் ஆட்சியை பறி கொடுத்தது, காங்கிரஸ். எனினும், மூத்த தலைவர்களின் அதிருப்தியால் மத்தியில் சரிவுடன் தத்தளித்து ஆட்சியை பிடித்த இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். துணை பிரதமரானார், மொரார்ஜி தேசாய்.



இந்த தேர்தலுக்கு பிறகு பிளவை நோக்கி பயணித்தது, காங்கிரஸ்.  நாடும் மற்றொரு யுத்தம் நோக்கி பயணமானது.

(நினைவுகள் சுழலும்)

நெல்லை ரவீந்திரன்

Friday 8 March 2019

நாடாளுமன்ற தேர்தல் - 8

இந்திய பிரதமராக 1966ல் பதவியேற்ற சில மாதங்களிலேயே காங்கிரஸ் மூத்த தலைவர்களின் அதிருப்தியை இந்திரா ஏராளமாக சம்பாதிக்கத் தொடங்கினார். ஏற்கனவே நேருவின் போக்கால் பத்து ஆண்டுகளுக்கு முன் தனிக்கட்சியை ராஜாஜி தொடங்கியது போலவே, இந்திராவுக்கு எதிரான மனநிலைக்கு மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா போன்ற மூத்த தலைவர்கள் வந்திருந்தனர்.

கம்யூனிஸ்டை போலவே இந்தியாவின் முதல் பெரிய கட்சியும் பிளவை நோக்கிய பாதையில் பயணம் செய்தது. இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவின் 4வது பொதுத்தேர்தல் நெருங்கியது. இதற்குள் பாண்டிச்சேரி போன்ற மாநிலங்கள் இந்திய குடியரசுக்குள் முழுமையாக வந்திருந்தன. 1967ம் ஆண்டு நடந்த அந்த தேர்தலில், லோக்சபா இடங்களின் எண்ணிக்கை 26 அதிகரித்து 520 ஆக உயர்ந்திருந்தது.

இரண்டு நாடுகளுடன் நடந்த போர்கள். காங்கிரஸ் கட்சியின் இரண்டு பிரதமர்களின் மறைவு. நேருவின் வாரிசு இந்திரா அறிமுகம் என பல சாதகங்களுடன் தேர்தலை சந்தித்தாலும் 1967 தேர்தல் காஙகிரசுக்கு இனிமையானதாக இல்லை என்றே கூறலாம்.



காங்கிரஸ் கட்சி மீதான இந்திய மக்களின் மயக்கமும் இந்த தேர்தலில் மெதுவாக தெளியத் தொடங்கியது. இருபது ஆண்டுகளாக ஏகபோகமாக இருந்த காங்கிரசின் ஆதிக்கம் சரிய தொடங்கியது.

நாடாளுமன்றத்தோடு மாநில சட்டப்பேரவைகளுக்கும் சேர்த்து மொத்தமாக தேர்தல் நடைபெற்றது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியையும் காமராஜருக்கு பேரதிர்ச்சியையும் தந்தது 1967ம் ஆண்டு தேர்தல்.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

நாடாளுமன்ற தேர்தல் - 7


1962 தேர்தல் முடிந்து 1967 தேர்தலுக்குள் 5 ஆண்டுகளில் கட்சிகளில், ஆட்சியில் ஏராளமான மாற்றங்கள். எல்லாவற்றுக்கும் மேல் இரண்டு போர்களை இந்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா பார்த்தது. பதினைந்து ஆண்டுகளாக ஒரே பிரதமர் இருந்த நாட்டில் ஐந்து ஆண்டுகளில் 4 பிரதமர்கள் ஆட்சி செய்தார்கள். கிங் மேக்கராக காமராஜர் உயர்ந்ததும் இந்த 5 ஆண்டில் தான்.

1962 பிப்ரவரியில் தேர்தல் முடிந்த சில மாதங்களில் சீனாவுடன் போர் மேகம் சூழ்ந்தது. அக்டோபரில் அது போராக வெடித்தது. சுமார் 35 நாட்களுக்கு இந்தியா - சீனா போர் நடைபெற்றது. இந்த போர் முடிந்த இரண்டு ஆண்டுகளிலேயே அதன் நீட்சியாக மற்றொரு போர் மேகம் இந்தியாவை சூழ்ந்தது. 1965ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒரு யுத்தம் தொடங்கியது.

இது ஒருபுறம் இருக்க, அதுவரையிலும் இந்தியாவின் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது. 1964ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது.

1964ம் ஆண்டில் நேரு மறைந்ததும் காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்து பிரச்னைகள் உருவாகின. முன்னதாக, கட்சிக்குள் ஒருவருக்கு ஒரு பதவி என 'கே' பிளானை அறிமுகப்படுத்தியதோடு, தமிழக முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார், காமராஜர். தேசிய அரசியலுக்குள் காமராஜர் நுழைந்ததும் தமிழகத்தில் காங்கிரஸ் சரிவை நோக்கி பயணித்தது.



நேரு மறைவுக்கு பிறகு, இடைக்கால பிரதமராக குல்சாரிலால் நந்தா பதவியேற்றார். இரண்டு வாரங்களில் காமராஜர் தலையீட்டால் லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார். அவரும் பாகிஸ்தான் போர் முடிந்த சில வாரங்களில் 1966ல் மறைந்தார். மீண்டும் இடைக்கால பிரதமராக குல்சாரிலால் நந்தா பதவியேற்க அடுத்த பிரதமர் தேடுதல் தொடங்கியது.



கட்சிக்குள் மூத்த தலைவர்கள் பலருக்குள் கடும் போட்டி. இறுதியாக, காமராஜரின் முயற்சியால் நேருவின் மகள் இந்திராகாந்தி பிரதமரானார். மொரார்ஜி தேசாய் துணை பிரதமராக பதவியேற்றார். இதுபோன்ற ஏராளமான சிக்கல்களுக்கிடையே 1967 தேர்தல் நெருங்கியது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

நாடாளுமன்ற தேர்தல் - 6

சுதந்திர இந்தியாவின் 3வது பொதுத் தேர்தலுக்கு முன்னும் பின்னும் பெரிய அரசியல் நிகழ்வுகள் அரங்கேறின. ஆளுங்கட்சியான காங்கிரசில் நேருவின் ஆதிக்கம் மிக அதிகமாக இருப்பதாக கூறி, தேர்தலுக்கு முன்னதாக 1959ல் தனிக்கட்சியை தொடங்கினார் ராஜாஜி. அதுதான் சுதந்திரா கட்சி. காமராஜரின் கை ஓங்கியதும் கூட ராஜாஜியின் முடிவுக்கு காரணம். 1954ல் சென்னை மாகாண முதல்வரான காமராஜரின் செல்வாக்கு தேசிய அளவில் அதிகரிக்கத் தொடங்கியது.



இதுபோல, தேர்தலுக்கு பின், இந்தியாவின் இரண்டாவது பெரிய கட்சியான இந்திய கம்யூனிஸ்டில் பிளவு ஏற்பட்டு 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோன்றியது.
அதுவரையிலும் இருந்த இரட்டை உறுப்பினர்கள் தொகுதி முறை ஒழிக்கப்பட்டு முதன்முறையாக தொகுதிக்கு ஒரு எம்பி என 1962 தேர்தலில் தேர்வு செய்யப்பட்டனர். மொத்தம் 494 இடங்களுக்கு எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், 361 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வானார், நேரு.

இந்திய கம்யூனிஸ்ட் 29, ராஜாஜியின் சுதந்திரா கட்சி 18, ஜனசங்கம் 14, சுயேச்சைகள் 20 என டபுள் டிஜிட் வெற்றிகள் ஏராளம். முதன் முறையாக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக பாராளுமன்றத்துக்குள் நுழைந்தது, திமுக. அந்த கட்சியில் 7 பேர் எம்பிக்களாக வெற்றி பெற்றனர்.

சென்னை மாகாணத்தில் மொத்தம் இருந்த 41 தொகுதிகளில் 31 தொகுதிகளை காமராஜர் தலைமையில் காங்கிரஸ் கட்சி அள்ளியது. திமுக 7 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் 2 இடத்திலும் பார்வர்டு பிளாக் ஒரு தொகுதியிலும் வென்றன. காங்கிசுக்கு மாற்றாக இந்திய கம்யூனிஸ்டுக்கு பதில் திமுக தலையெடுத்தது.

1962 பாராளுமன்ற தேர்தலுடன் சென்னை மாகாண சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இதில், திமுக 50 இடங்களை வென்றும் காஞ்சிபுரத்தில் அண்ணா தோல்வியடைந்தார். இதனால், முதன்முறையாக மாநிலங்களவை மூலமாக நாடாளுமன்றத்துக்கு அடி எடுத்து வைத்தார், அண்ணா.

அதே நேரத்தில், நேருவுக்கு எதிராக ராஜாஜி உள்ளிட்ட சில மூத்த தலைவர்கள் களமிறங்கியபோதும் 1962 பொதுத் தேர்தலில் நேருவே வென்று பிரதமரானார். ஆனால், அடுத்த பொதுத் தேர்தலுக்குள் 4 பிரதமர்களை இந்தியா பார்த்தது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

நாடாளுமன்ற தேர்தல் - 5

முதல் தேர்தலில் கட்சிகளுக்கு சின்னம் கிடையாது. ஒவ்வொரு கட்சிக்கு ஒவ்வொரு நிறத்தில் பெட்டி இருக்கும். எந்த கட்சிக்கு வாக்களிக்க விருப்பமோ அதற்கான நிற பெட்டியில் வாக்குச் சீட்டை போட வேண்டும். ஆனால், 1957 தேர்தலில் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் அப்போதைய சின்னம் இரட்டை காளை மாடு. இந்திய கம்யூனிஸ்டுக்கு (அப்போது ஒரே கம்யூனிஸ்ட்) நெல்கதிர் அரிவாள் சின்னம். சுயேச்சைகளுக்கும் தனியாக சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.


வாக்குச்சீட்டுகளை பெட்டியில் போடும் முறை என்பதால், பெட்டிகளை அப்படியே தூக்கிக் கொண்டு ஓடுவது, பெட்டிக்குள் மையை ஊற்றுவது, வாக்குச் சாவடியையே கைப்பற்றி முறைகேடு செய்வது போன்றவை எல்லாம் பின்னாளில் நடைபெற்ற தேர்தல் சம்பவங்கள். அதுபோன்று சம்பவத்தை முதலில் அறிமுகம் செய்தது 1957 தேர்தல் தான். அறிமுகம் செய்தவர்கள் பீகார்காரர்கள். அந்த மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தில் மதிஹானி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ரட்சியாகி கிராமத்தில் தான் சுதந்திர இந்தியாவின் முதலாவது தேர்தல் சம்பவத்தை அரங்கேற்றினார்கள். வாக்குச்சாவடியை கைப்பற்றி முறைகேடு நடந்தது.


ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைமுறை ஜரூராக நடந்ததால் 1957ல் அநேக மாநில சட்டப்பேரவை தேர்தல்களும் ஒன்றாக நடைபெற்றன. அதுபோல தமிழகத்திலும் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில்தான் முதன் முறையாக தேர்தலை சநதித்தது, திமுக. அங்கீகாரம் பெறவில்ல என்பதால் சுயேச்சை சின்னங்களிலேயே பலர் களமிறங்கினார்கள். சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட கருணாநிதி உட்பட பலருக்கு உதயசூரியன் கிடைத்தது. காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் அண்ணாவுக்கு சேவல் சின்னம்தான் கிடைத்தது.



இந்த தேர்தலில் சென்னை மாகாணத்தின் 34 எம்பிக்களில் 24 பேர் காங்கிரசில் இருந்து வெற்றி பெற்றனர். திமுக, கம்யூனிஸ்டுக்கு தலா 2 பேர். சுயேச்சைகள் 6 பேர். 1957ம் ஆண்டு நடந்த இந்த தேர்தல் மூலம் முதன்முறையாக திமுக சார்பாக நாடாளுமன்றத்துக்கு எம்பிக்கள் சென்றனர்.


அகில இந்திய அளவில் 403 தொகுதிகளில் இருந்து தேர்வான 494 எம்பிக்களில் 371 பேர் காங்கிரஸ்காரர்கள். 27 பேர் கம்யூனிஸ்ட் கட்சியினர். இதுபோல, ஜெயபிரகாஷ் நாராயணின் பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் 19 பேர் தேர்வாகினர். ஜனசங்கம் கட்சியில் இருந்து 4 பேர் வெற்றி பெற்றிருந்தனர். இந்த தேர்தலில்தான் மிக அதிக அளவிலான 42 சுயேச்சை எம்பிக்கள் வெற்றி பெற்றனர். இந்த சாதனை இதுவரை நடந்த எந்த ஒரு நாடாளுமன்ற தேர்தலிலும் முறியடிக்கப்படவே இல்லை. இப்படியான பல ருசிகரங்களை 1957 தேர்தல் பதிவு செய்தது.
(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்