Thursday 31 December 2015

ஜெய்ப்பூரின் ஹவா மகால்



பள்ளிக் கூடங்களில் சரித்திர பக்கங்களை புரட்டும்போது பிருதிவிராஜ் ஜெயச்சந்திரன் என அறிமுகமான ராஜபுதன அரசர்கள் ஒவ்வொருவரும் நினைவில் நிழலாடிக் கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. வீரத்தை குருதியாக கொண்டு போர் குணத்தை தோலாக போர்த்தி திரிந்த ராஜபுத்திரர்களின் ராஜ்ஜியங்கள் சிதறிக் கிடந்தாலும் அவற்றின் கலவையாக ஜொலிக்கிறது இன்றைய ராஜஸ்தான் மாநிலம்.

கரிசல் காட்டில் தொடங்கி ஒவ்வொரு பகுதியும் ஏதாவது ஒரு அடையாளத்தை தாங்கி நிற்கிறது. அதுபோல ராஜபுத்திரர்களின் வீர பூமியான ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூரின் அடையாளம் இளஞ்சிவப்பு நிறம். முன்கூட்டியே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரங்கள் இந்தியாவில் பல உண்டு. அவற்றில் தலை சிறந்த நகரங்களில் ஜெய்ப்பூருக்கு தனி இடம் உண்டு.




ஜெய்ப்பூரின் சிறப்புக்கான முழு பெருமையும் மகாராஜா சவாய் ஜெய் சிங்கையே சேரும். ராஜஸ்தானின் கச்வாகா கிளான் என்ற பகுதியை 17ம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர் சவாய் ஜெய்சிங். கி.பி.1727ம் ஆண்டில் ஜெய்ப்பூரை  திட்டமிட்டு உருவாக்கியவர் அவரே. வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் விசித்திரமானவை என்பதில் அபார நம்பிக்கை கொண்டவர். கலை உணர்வு மிகுந்தவர். ஒவ்வொரு நொடியையும் சித்திரமாக வடித்து வைக்க முடியாது. ஆனால், காலப்பேழையில் வாழ்க்கைச் சுவடுகளை பதித்து வைக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தார்.

அதனாலேயே ஜெய்ப்பூரை வடித்த கையோடு காலத்தால் அழியாத மாளிகை ஒன்றையும் கட்ட விரும்பினார். அதன் விளைவாக உதயமானது தான் ஜெய்ப்பூர் ஜோகிரி பஜார் பகுதியில் விண்ணுயர எழுந்து நிற்கும் ஹவா மகால். ஆனால் திட்டம் மட்டுமே அவருடையது. அந்த மாகாலை கட்டும் பணிகள் தொடங்கும் முன் இந்த மண்ணை விட்டு அவர் மறைந்து விட்டார்.

அடுத்ததாக பட்டத்துக்கு வந்த அவரது மகன் சவாய் பிரதாப் சிங் கனவு மாளிகையை தொடர்ந்தார். எனினும் ஹவா மகால் பணியை முழுமையாக நிறைவேற்றியது ஜெய்சிங்கின் பேரன் சவாய் மதோசிங். இவருடைய ஆட்சிக் காலத்தில் தான் 1799ம் ஆண்டு ஹவா மகால் முழு உருவம் பெற்றது. மதோசிங்குக்கு உறுதுணையாக இருந்த கட்டிடக் கலைஞர் பெயர் லால் சந்த் உஸ்தாத். ராஜபுதன கட்டிடக் கலையும் முகலாய கட்டிடக் கலையும் ஒன்று சேர்ந்த கலவையாக எழுந்தது இந்த ஹவா மகால்.



 கிருஷ்ணர் மீது மதோசிங்குக்கு மிகுந்த பக்தி. அதனாலேயே ஹவா மகாலின் முகப்பு பகுதியை கிருஷ்ணர் தலையில் அணிந்திருக்கும் கிரீடம் போலவே வடிவமைத்தார்.
 
ராஜஸ்தானுக்கே உரித்தான சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற மணல் கற்களால் இந்த 5 அடுக்கு மாளிகை கட்டப்பட்டது. இந்த அழகு மாளிகையில் வசித்தவர்களும் அழகிகளே. ஆம். ராஜபுத்திர  அரசிகளும் இளவரசிகளும் இந்த மாளிகையில் தான் இருந்தனர். அன்னிய ஆண்களுக்கு முன்னால் பெண்கள் வருவதை ராஜபுத்திரர்கள் அனுமதிப்பது இல்லை. ஆனாலும், நகரின் அன்றாட நிகழ்வுகளை வேடிக்கை பார்ப்பது விழாக் காலங்களில் நகர மக்களை ரசிப்பது என சின்ன சின்ன ஆசைகள் அந்த பெண்களுக்கும் இருக்கத்தானே செய்யும்.  

அதற்காகவே, ஹவா மகாலின் 5 தளங்களிலும் சிறிது சிறிதாக 953 ஜன்னல்கள் அமைக்கப்பட்டன. இன்றும் கூட ஹவா மகால் முகப்பில் அவற்றை காண முடிகிறது. இவற்றில் சில மர ஜன்னல்கள். அந்த ஜன்னல்களில் பிரத்தியேகமான திரைச் சீலைகள் பொருத்தப்பட்டு அதன் வழியாக ஜெய்ப்பூர் நகரத்தையும் நகர மக்களையும் ராஜபுத்திர இளவரசிகள் பார்த்துள்ளனர். ராஜஸ்தான் கடுமையான வெப்ப பூமி. 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை தாறுமாறாக எகிறும். அதனால், உப்பரிகையில் இருந்த அரச குல பெண்களுக்கு வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் அந்த திரைச் சீலைகள் இருந்தன. இன்றைய காலங்களில் கார்களில் கருப்பு கண்ணாடி ஒட்டுவதை போன்ற தொழில்நுட்பம், அது என்றும் கூறலாம். 




சிவப்பு நிற கிரில்கள், ஜன்னலுக்கு உள்ளே குவிந்த மண்டபம், ஸ்தூபி என விரிந்து நிற்கும் இந்த மகாலுக்கு மற்றுமொரு சிறப்பு என்னவெனில், பொன் மற்றும் வெள்ளி கலந்த கல் வேலைப்பாடு அலங்கார வளைவு. இது, முகலாய கட்டிடக் கலையை பிரதிபலிக்கிறது. வளைந்த மேற்கூரை தூண்கள் மற்றும் பூங்கா போன்றவை ராஜபுத்திரர்களின் கட்டிடக் கலையை பறைசாற்றி நிற்கின்றன.

ஹவா மகால் போலவே, பதேபுர் சிக்ரி நகரில் அமைந்துள்ள பஞ்ச் மகால் அமைந்துள்ளது. ஹவா மகால், பஞ்ச் மகால் இரண்டுமே பேலஸ் ஆப் விண்ட்ஸ் (காற்றின் அரண்மனை) என அழைக்கப்படுகின்றன. ஹவா மகாலின் பிரமிடு போன்ற கோபுரமானது முன்பகுதி என்றாலும் அதன் வழியாக உள்ளே செல்ல முடியாது. பக்கவாட்டு பாதை வழியாக நுழைந்து ராயல் சிட்டி பேலஸ் வழியாகத்தான் அதனுள் செல்ல முடியும்.

ராயல் சிட்டி பேலஸுக்கும் தனி வரலாறு உண்டு. ராயல் சிட்டி பேலஸ் என்ற அந்த அரண்மனையை கட்டியவர், ராஜா ஜெய்சிங். ஓய்வெடுக்க அவர் மிகவும் விரும்பிச் செல்லும் இடங்களில் இந்த அரண்மனைக்கு முதல் இடம் உண்டு. பிங்க் சிட்டிக்கு 2 நூற்றாண்டுகளாக அழகூட்டி வரும் ஹவா மகால், நகரின் முக்கிய பகுதியான படி சவுபத் சந்திப்பில் அமைந்திருக்கிறது. 

= வை.ரவீந்திரன்

ஆயிரமாண்டு அதிசய கோட்டை








ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து ஏறக்குறைய 600 கி.மீட்டர் தொலைவில் அமைதியாக ஓய்வு எடுக்கும் ஜெய்சல்மீர் நகரம் பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றும் வியப்பில் ஆழ்த்துகின்றன. பாகிஸ்தான் எல்லையை ஒட்டி தார் பாலைவனம் அருகே அமைந்துள்ள இந்த நகரம், ஒரு காலத்தில் இந்தியாவின் நுழைவு வாயிலாக இருந்துள்ளது.

பல நூற்றாண்டுகளுக்கு முன் குதிரை மீதேறி உலகை வலம் வந்த மாவீரர்களில் பலரும் இந்தியாவுக்குள் நுழைந்தது, இதன் வழியாகத்தான். அதனாலேயே ஆப்கானிஸ்தான், எகிப்து, ஆப்பிரிக்கா, பெர்சியா, அரேபியா போன்ற மேற்கு திசை நாடுகளை இந்தியாவுடன் இணைத்து வைக்கும் பாசச் சங்கிலியாகவும் மாறியது. இந்திய பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது வெளிநாடுகளில் இருந்து பொருட்களை தருவிப்பது என மிக முக்கிய வணிக கேந்திரமாக 5 நூற்றாண்டுக்கு முன் மிக பிசியாக செயல்பட்டிருக்கிறது, இந்த நகரம்.

இந்த பெருமை எல்லாம் உலக அளவில் கடல் வழி பயணங்கள் அதிகரிக்கும் வரை மட்டுமே. ஆங்கிலேயரின் கடல் வழி பயணத்துக்கு பிறகு, 15ம் நூற்றாண்டு முதல் ஜெய்சல்மீரின் பெருமையை இன்றைய மும்பை தட்டிப் பறித்துக் கொண்டது. 
 
ஜெய்சல்மீர் என்ற நகருக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர், 11ம் நூற்றாண்டை சேர்ந்த ராஜபுத்திர அரசர்களில் பட்டி வம்ச அரசரான ராவ் ஜெய்சல். அவர் தான், 1156ம் ஆண்டில் ஜெய்சல்மீர் கோட்டையை கட்டி எழுப்பினார். ஆரம்பகாலத்தில் அந்த கோட்டை மட்டுமே ஜெய்சல்மீர் கோட்டை என அவர் பெயரால் அழைக்கப்பட்டது. நாளடைவில் கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளும் சேர்ந்து ஜெய்சல்மீர் நகராகி விட்டது. இன்றும் கூட, நகரின் கம்பீரமே இந்த கோட்டை தான்.

தார் பாலைவனத்தின் திரிகுடா மலை மீது மஞ்சள் மணல் கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த கோட்டை, கருங்கல்லாலான வெளிப்புற சுவரை கொண்டது. அதற்கு அடுத்து வளைந்து நெளிந்த செல்லும் 2 மற்றும் 3ம் அடுக்கு சுவர்கள் உள்ளன. இந்த பகுதியில் தான் கொதிக்கும் எண்ணெய், தண்ணீர் ஆகியவற்றை கொண்டு ராஜபுத்திரர்கள் அகழி அமைத்துள்ளனர். மகாராஜா ஜெய்சல் காலத்தில் 10க்கும் உட்பட்ட கொத்தளங்கள் மட்டுமே கோட்டையில் இருந்தன. தற்போதைய, 99 கொத்தளங்களில் பெரும்பாலானவை பின்னாளில் கட்டப்பட்டவை.



காலை நேர ஒளியில் தங்க நிறத்தில் ஜொலிப்பதாலேயே அது தங்கக் கோட்டை எனப்படுகிறது. தங்க நிற கோட்டையும் தங்க நிற மணலாலும் சூழப்பட்டிருப்பதால் தங்க நகரம் என்று ஜெய்சல்மீர் அழைக்கப்படுகிறது. பாலைவனத்தின் அருகே மலை உச்சியில் அமைந்திருக்கும் இந்த கோட்டை, இந்தியாவின் நுழைவு வாயிலாக இருந்ததாலோ என்னவோ இதன் சரித்திரமும் போர்களாலும் மனித உயிர் பலிகளாலும் பின்னி பிணைந்திருக்கிறது. ஜோத்பூர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட பிற ராஜபுத்திர அரசர்கள் முதல் முகலாயர், ஆங்கிலேயர் என நீடித்து இன்றைய பாகிஸ்தான் வரை பல்வேறு போர்களை இந்த நகரம் சந்தித்துள்ளது.

ஜெய்சல்மீரின் யுத்த சரித்திரத்தை முதலில் எழுதியவர் அலாவுதீன் கில்ஜி. 13ம் நூற்றாண்டில் கோட்டையை கைப்பற்றிய அவர் வசம், 9 ஆண்டுகள் இந்த கோட்டை இருந்தது. அவருடைய முற்றுகையின்போது கோட்டைக்குள் இருந்த ராஜபுத்திர பெண்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர் என்பது நெஞ்சை உருக்கும் சரித்திர தகவல். அதன்பிறகு, 1541ம் ஆண்டில் நடந்த உக்கிரமான போரில் ஜெய்சல்மீர் கோட்டையை முகலாய பேரரசர் ஹுமாயுன் கைப்பற்றினார்.

இந்த யுத்த சப்தம், நூற்றாண்டுகளை கடந்து இன்னமும் ஜெய்சல்மீரில் எதிரொலித்து வருகிறது. கடந்த 1965 மற்றும் 1971ம் ஆண்டுகளில் இந்தியா & பாகிஸ்தான் இடையிலான போரில் முக்கிய போர்த்தலமாக இருந்தது, ஜெய்சல்மீர் தான். 

அடிக்கடி போர் மூளும் பூமி என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மன்னர் ஜெய்சல் அறிந்திருந்தாரோ என்னவோ? அதனால்தான், கோட்டைக்குள்ளேயே மக்களையும் தங்க வைத்திருந்தார், ஜெய்சல். இன்றளவும் அது தொடருகிறது. ஆம். சுற்றுலா தலமாகி விட்டதால் ஜெய்சல்மீர் நகரம் விரிந்து பரந்தாலும் ஜெய்சல்மீர் கோட்டைக்குள் இன்றும் 4 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். நாளுக்கு நாள் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. இவர்கள் எல்லாம், ஜெய்சல் காலம் தொட்டு கோட்டையில் சேவகம் செய்த வம்சாவளியினர். 




பாலைவன வெயிலுடன் அழுக்கேறிய மஞ்சள் நிறத்தில் பழமையை பூசியபடி தகதகவென ஜொலிக்கும் இந்த கோட்டையினுள் உள்ள மக்கள் தொகையை போலவே, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. தற்போதையை ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை 5 லட்சம்.

கோட்டையின் கம்பீரத்தையும் ஆயிரம் ஆண்டுகளை கடந்த பழமையையும் ரசித்து பார்த்து திரும்பினால் அதி நவீன டிஜிடல் கேமராவில் ஒருவர், கோட்டையை படமாக்கிக் கொண்டிருந்தார். இணைக்க முடியாத வெவ்வேறு இரு காலகட்டங்களை இணைக்கும் புள்ளியாக ஜெய்சல்மீர் இருப்பதை உணர முடிகிறது.

= வை.ரவீந்திரன் 

பாலைவன அதிசயம்



சுற்றுலா செல்ல கண்ணை கவரும் பல்வேறு இடங்கள் இருந்தாலும் பாலைவனம் என்பது வித்தியாசமான அனுபவத்தை தரும் பகுதி. அந்த பெயரை உச்சரிக்கும்போதே உதடுகளுடன் ஒட்டி வருவது, ஒட்டகம். கண்ணுக்கெட்டும் தூரம் வரை நீரால் சூழ்ந்துள்ள கடலில் பயணம் செய்ய கப்பல், எந்த அளவுக்கு அவசியமோ. அதுபோலவே, கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல் துகள்களால் நிறைந்து கிடக்கும் பாலைவனத்தில் பயணிக்க ஒட்டகம் அவசியம். அதனாலேயே, பாலைவன கப்பல் என்ற பெயர், அவற்றுக்கு உண்டு.



ஆடுகளையும் மாடுகளையும் மட்டும் பார்த்து பழகிய நமக்கு ஒட்டகம் என்பது விசித்திரமானதாகவும் விந்தையானதாகவும் தெரிகிறது. ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தின் வடமேற்கு பிராந்தியத்தில் கூட்டம் கூட்டமாக ஒட்டகங்கள் சுற்றித் திரிகின்றன. ஜெய்சல்மீரில் இருந்து 50 கி.மீட்டர் தொலைவில் உள்ள தார் பாலைவனத்தை சுற்றிக் காட்டும் சுற்றுலா வாகனமாகவே ஏராளமான ஒட்டகங்கள் உள்ளன. பாலைவன மணல் பரப்புக்குள் மெதுவாக சுமந்து செல்வது, வண்டியில் சொகுசாக அமர வைத்து இழுத்துச் செல்வது என விதம் விதமாக சுற்றுலாப் பயணிகளை குஷிப்படுத்துகின்றன.

பனி, மழை, கோடை என பருவநிலை மாற்றங்களின்போது 5 முதல் 10 டிகிரி வரையிலான வெப்ப மாறுபாட்டையே நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. ஆனால், 30 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை மாறுபாட்டை தாங்கும் சக்தி படைத்த அதிசய விலங்கினம் ஒட்டகம். முன், பின் கால்களை மடக்கிக் கொண்டு பாலைவன மணலில் ஓய்வெடுக்கும்போது அதுவும் ஒரு மணல் குன்றாகவே தோற்றமளிக்கிறது. மணல் என்னும் தோழியுடன் கைகோர்த்து அலைந்து திரியும் பாலைவனக் காற்றினால் உருவாகும் புழுதியால் பாதிப்படையாத சுவாச அமைப்புடன் உலவும் ஒட்டகத்தின் மீது சவாரி செய்வது புதிய அனுபவம். 



ஒட்டகத்தின் முதுகில் நாம் ஏறியதும் மடக்கி வைத்திருக்கும் முன் கால்கள், பின் கால்களை ஒவ்வொன்றாக அது விரித்து எழுந்திருக்க தொடங்குகிறது. அப்போது, தலை குப்புற முன்னோக்கி விழுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதே வேகத்தில் பின்னோக்கியும் செல்லத் தொடங்குவதால், ஒட்டகம் முழுமையாக எழுந்து நிற்பதற்குள் நம்முடைய அடிவயிற்றில் இருந்து அச்சப் பந்து உருண்டு தொண்டைக் குழியில் வந்து நிற்கிறது. அதன் பின், அசைந்தபடியே நடக்கத் தொடங்கியதும் வியர்க்கத் தொடங்கி விடுகிறது. ஆனாலும், அந்த திரில் அனுபவத்துக்காகவே ஒட்டகத்தில் சவாரி செய்யலாம்.

வறண்ட பூமியில் வண்ணமயமான வாழ்க்கையை சுவிகரித்த ராஜஸ்தான் மக்களுக்கே உரித்தான அடர் சிவப்பு நிற துணிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒட்டகம், பாலைவனத்தின் அடையாளம். வண்ணமயமான அலங்காரத்தில் இருந்தாலும் முகத்தில் உணர்ச்சியற்று துக்கத்தை தேக்கியபடியே தோற்றம் அளிக்கின்றன. இயற்கையாகவே அசைவ உணவு வகைகளை பெரும்பாலான ராஜஸ்தான் மக்கள் தொடுவதில்லை. அதனால், ஒட்டகம் பிரியாணிக்கு இடமில்லை. மாறாக, ஒட்டகத்தை குடும்ப உறுப்பினராக பாவித்து கொண்டாடுகின்றனர், பாலைவன பூமியின் விவசாயிகள்.
பாலைவன பகுதியில் பயிரிடும் வித்தையை அரசு கற்றுக் கொடுத்தாலும் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு அச்சாணியாக இருப்பது ஒட்டகங்களே. 




ஜெய்சல்மீரில் இருந்து 300 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஜோத்பூருக்கு சாலை வழி பயணம் மேற்கொண்டால் வழி நெடுகிலும் ஒட்டகங்களை கூட்டமாக காணலாம். ஆடு, மாடுகள் போல சாலைகளின் குறுக்கே மேய்ச்சலுக்காக உலாவுகின்றன.

பொக்ரானில் இருந்து ஜோத்பூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள அகாலே என்ற கிராமத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் 40 நாட்களுக்கு ஒட்டகச் சந்தை நடைபெறுகிறது. குதிரைச் சந்தை, மாட்டுச் சந்தை, ஆட்டுச் சந்தை போல மிகப்பெரிய அளவிலான இந்த சந்தையில் லட்சக்கணக்கில் ஒட்டக வியாபாரம் களை கட்டுகிறது. வயது, பல்லின் உறுதி ஆகியவற்றை பொறுத்து ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரம் வரை ஒட்டகங்கள் விலை போகின்றன. 

மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போடுவது போலவே ஒட்டகங்களுக்கும் மூக்கணாங்கயிறு போட்டு வண்டிகளில் பூட்டுகின்றனர். சந்தைக்கு அழைத்து வரும் ஒட்டகங்களை வால், முதுகு என ஒவ்வொரு அங்கமாக அலங்கரித்து, முடியை தினுசு தினுசாக கத்தரித்து பார்வைக்கு வைத்துள்ளனர். ஓராயிரம் பாலைவன அதிசயத்தை அகோலே கிராமத்தில் ஒரு சேர பார்க்க முடிகிறது. 



மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா ஆகியவையே ஒட்டகத்தின் பிறப்பிடம். இரட்டை திமில் கொண்ட ஒட்டகங்களும் உண்டு. இந்தியாவில் காணப்படும் ஒற்றைத் திமில் ஒட்டகங்கள், டிரோமடரி அல்லது அரேபியன் ஒட்டகம் வகையை சேர்ந்தவை. இவை 300 கிலோ முதல் ஆயிரம் கிலோ எடை வரை வளரும். 7 அடி ஒரு அங்குலம் உயரம் வரை வளரும். மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை. 49 டிகிரி செல்சியஸ் (120 டிகிரி) வெப்பத்தில் கூட அவற்றுக்கு வியர்க்காது. மூக்கு மற்றும் வாய்ப்பகுதிகள் தடிமனானவை. எளிதாக மணல் உட்புகாது. அதனாலேயே, பாலைவனத்தில் தாக்குப்பிடிக்கின்றன. 

பாகிஸ்தான், எகிப்து, துபாய், அரபு நாடுகளில் வீட்டு மிருகமாக ஒட்டகங்கள் வளர்க்கப்படுகின்றன. எனினும், ஆப்பிரிக்காவில் தான் அதிக எண்ணிக்கையில் ஒட்டகங்கள் உள்ளன. வேலை செய்வதற்காக மட்டுமல்லாமல் பால், இறைச்சி மற்றும் துணி, பைகள் தைப்பதற்கான முடிகளுக்காகவும் ஒட்டகம் வளர்க்கப்படுகிறது. ஒட்டகம், பாலைவனம் தவிர ஜெய்சல்மீர் நகரில் ஆயிரமாண்டு கால சரித்திர புகழ்பெற்ற ஒரு இடமும் உள்ளது. அது குறித்து அடுத்த பதிவில்...

= வை.ரவீந்திரன் 

Saturday 26 December 2015

நினைவிலாடும் திருவாதிரை

பள்ளி நாட்களில் மார்கழி மாதத்தின் அதிகாலை பனித் தூறலில் நனைந்தபடியே, ஊருக்கு அருகில் உள்ள வயல்வெளி கிணற்றில் குளிக்கச் செல்வோம். குளித்து முடித்து வீடு திரும்பி நல்ல உடை அணிந்து, எங்கள் ஊரின் பெரிய கோயிலுக்கு செல்வது வழக்கம்.



மார்கழி மாதம் முழுவதும் கோயிலின் மூன்று பிரகாரங்களை (தேரோடும் வீதி, சப்பரங்கள் வலம் வரும் வீதி, கோயிலின் உள் பிரகாரம்) சுற்றி வந்து தேவார திரட்டில் இருந்து பஜனை பாடல்களை பாடிச் செல்வோம். அப்படித்தான், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் எல்லாம் தேவார பாடல்கள் மூலமாக எனக்கு அறிமுகம் ஆனார்கள். 6 மணிக்கு தொடங்கும் பஜனை ஊர்வலம், 8 மணி வரை நீடிக்கும். அதன்பிறகு, வீடு திரும்பி, பள்ளி பயணம் ஆரம்பமாகும்.

திருவாதிரை திருநாளுக்கு 10 நாட்களுக்கு முன்பாக பஜனை பாடல்கள் மாறும். தேவாரம் பாடல்களுக்கு பதிலாக திருவெம்பாவை பாடல்களை பாடுவோம். ஆருத்திரா தரிசனம் எனப்படும் திருவாதிரை திருநாளுக்கு முந்தைய 9வது நாள் தொடங்கி திருவெம்பாவை நோன்பு காலம் என்பதெல்லாம் பின்னாளில் அறிந்து கொண்ட தகவல்.

10வது நாளில் ஆருத்திரா தரிசனம் விழா களை கட்டும். அன்றைய தினம், இன்னும் அதிகாலையில் எழுந்து கிணறுகளில் உள்ள மோட்டார் பம்பு செட்டில் குளித்து விட்டு 5 மணிக்கெல்லாம் கோயிலில் ஆஜராகி விடுவோம். ஆருத்திரா தரிசன தினத்தன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் (4.30 மணி முதல் 6 மணி) அனைத்து தேவர்களும் சிவ பெருமானை தரிசனம் செய்ய வருவார்கள் என்பது ஐதீகம்.

அது மட்டுமல்ல, சிவபெருமானை பிடிக்காத சில முனிவர்கள் ஒன்று சேர்ந்து அவர் மீது மதம் பிடித்த யானை, முயலகன் என்ற அரக்கன், உடுக்கை, தீப் பிழம்பு போன்றவற்றை ஏவி விட்டதாகவும் அவற்றை சிவபெருமான் லாவகமாக பிடித்ததோடு முயலகனை தனது வலது காலின் கீழ் போட்டு மிதித்துக் கொண்டு உடுக்கை ஏந்தி, தீப்பிழம்பாக தனது செஞ்சடையை விரித்து இடது காலை தூக்கிக் கொண்டு, அந்த முனிவர்கள் முன் நடனமாடிய தினமே ஆருத்திரா தரிசனம் என்றும் கூறுவது உண்டு.

இந்த தகவல்களை எல்லாம் செவி வழியாக அரைகுறையாக கேட்டிருந்த நாட்கள் அவை. அதிகாலை 5 மணி முதல் பெரிய கோயிலின் கொடி மரம் அருகில் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் ஆரம்பமாகும். பல்வேறு விதமான அடுக்கு விளக்குகளில் தீபாராதனைகள் (ஆரத்தி, மகா ஆரத்தி) முடிந்து திருவெம்பாவையின் 21 பாடல்களும் பாடப்படும். மார்கழி மாத பனியில், அதிகாலை வேளையில் விழித்தெழுந்து பிரம்ம முகூர்த்த வேளையில் கோயிலில் தரிசனம் காண்பது என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரனுபவம்.

திருவாதிரை விழா எனப்படும் ஆருத்திரா தரிசனத்தின் கூடுதல் விசேஷம் களி. கண்டங்களி என்றும் அதை கூறுவோம். சரியாக சொல்வது என்றால் சர்க்கரை பொங்கலின் சற்று மாறுபட்ட வடிவமாக அந்த பிரசாதம் இருக்கும்.
ஆருத்திரா தரிசன நாளில் சேந்தனார் என்ற தொழிலாளியிடம் சிவபெருமான் களி வாங்கி சாப்பிட்டதாகவும் அதை நினைவு கூறும் விதத்தில், ஆருத்திரா தரிசன நாளில் இறைவனுக்கு களி படைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பள்ளிப் பருவம் முடிந்த பிறகு, மார்கழி பஜனைக்கு செல்வது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இன்றைய நாட்களில், அந்த தரிசனத்தை முற்றிலுமாக நான் தவற விடுவதாகவே கருதுகிறேன். மார்கழி மாத அதிகாலை 4 மணியானது நள்ளிரவு நேரமாகவே தெரிகிறது.




(26/12/2015 = ஆருத்திரா தரிசன விழா)

= வை.ரவீந்திரன் 

Tuesday 1 December 2015

வழக்கங்களை கைவிட்டு முன்னேறிய சமூகத்தின் கதை




மாற்றம்... முன்னேற்றம்... 


பாரம்பரியத்தை மாற்றிக் கொண்ட ஒரு சமூகத்தின் கதை


 1960ம் ஆண்டுகளில் சாதி ரீதியாக மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய நாவல் ‘சம்ஸ்கரா’. எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதிய இந்த நாவலின் கதையை அடிப்படையாக கொண்டு இதே பெயரில் கன்னட மொழியில் 1970ம் ஆண்டு திரைப்படமும் வெளியானது. பிராமண சமுதாய வாழ்வியல் நெறிமுறைகளை மீறி வாழும் நரனப்பா என்ற பிராமண சமுதாயத்தில் பிறந்த ஒரு மனிதன் இறந்ததும் இறுதிச் சடங்கில் எழும் சர்ச்சையும் அதைத் தொடர்ந்து எழும்பும், யார் உண்மையான பிராமணன்? என்ற கேள்வியும் சமூகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய தருணம் அது





தமிழ் பிராமண்ஸ் - ஒரு மத்திய நடுத்தர வர்க்கத்தின் உருவாக்கம்என்ற புத்தகம் அதற்கு பதிலளிக்கிறது.  கிராமங்களில் இருந்து நகரங்களில் குடியேறிய தமிழ் பிராமண சமூகத்தினர் பற்றி சி.ஜே. புல்லர் மற்றும் ஹரிபிரியா நரசிம்மன் ஆகியோர் எழுதிய  இந்த புத்தகத்தை ‘தி யுனிவர்சிட்டி ஆப் சிகாகோ’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழ் பிராமண சமுதாயத்தின் இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய கட்டமைப்பு தொடங்கி சுதந்திரத்துக்கு பிறகு அதன் மாற்றம் வரை ஒரு நூற்றாண்டு கால அடுத்தடுத்த பரிணாம வளர்ச்சியையும் சமூக சூழலுக்கு ஏற்ப தங்களை அந்த சமூகத்தினர் மாற்றிக் கொண்ட விதத்தையும் புத்தகம் விவரிக்கிறது.

நவீன யுகத்துக்கு ஏற்ற வகையிலான மாற்றத்தை சுவீகரிப்பதோடு தனது பாரம்பரிய முறையையும் கைவிடாமல் இருப்பது என்ற இறுக்கமான சூழலுடன் அந்த சமூகம் பயணிக்கிறது. அதே வேளையில், தமிழகத்தில் மொத்தம் 10.4 லட்சம் பேரை மட்டும் மக்கள் தொகையாக கொண்ட அந்த சமூகம், தனது அடையாளத்தை மட்டுமன்றி கலாச்சாரம், அரசியல், சமூக அளவிலும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிராமணர் என்றால் கோயில்களில் பூசை செய்யும் சமூகம் என்றே பொதுவாக கருதுகின்றனர். ஆனால், அந்த சமூகத்தின் மிகவும் அடித்தட்டு மக்களில் சிலரே அந்த தொழிலை செய்கின்றனர். நிலச்சுவான்தாரர்களாகத்தான் பலரும் இருந்தனர். ஏராளமான நிலங்களை அவர்கள் வைத்திருந்தாலும் உடல் வளைத்து வயல்களில் வேலை செய்தது இல்லை. கைகளில் அழுக்கு படிவதை அவர்கள் விரும்பவில்லை. ஒயிட் காலர் ஜாப் எனப்படும் ஆடையில் அழுக்குப்படாத வேலைகளிலேயே அவர்களின் ஆர்வம் இருந்தது. அதனால் தான், 19ம் நூற்றாண்டின் மத்தியில் கிராம பகுதிகளில் இருந்து நகர பகுதிகளை நோக்கி அவர்களின் இடப்பெயர்ச்சி தொடங்கியது.

சாதி ரீதியிலான தங்களின் ஆண்டாண்டு கால மேலாதிக்க உரிமையை அவர்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. அதனாலேயே, சட்டம், கல்வி மற்றும் அரசு நிர்வாகம் ஆகியவற்றில் அவர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. தமிழகத்தில் சுயமரியாதை இயக்கம் வேரூன்ற தொடங்கும் வரை இந்த போக்கே நீடித்தது. பெரியார் தலைமையில் சுயமரியாதை இயக்கம் வேகமாக வளரத் தொடங்கியதுமே, தமிழ் பிராமணர்கள் உடனடியாக தங்களை மாற்றிக் கொள்ளத் தொடங்கி விட்டனர்.

தங்கள் சமூகத்தின் பாரம்பரிய ஆடையான பஞ்சகட்சத்தை ஆண்கள் துறந்து நீள கால்சட்டையான பேண்ட் அணிய தொடங்கினர். பூணூலை மறைக்கும் விதத்தில் சட்டையையும் அணிந்தனர். பெண்களும் கூட 16 முழ மடிசார் புடவையை துறந்து 8 முழ புடவை அணியத் தொடங்கினர். இன்றைய இளம் தலைமுறை பெண்கள் சல்வார் கமீஸ் அணிகின்றனர்.  நகரங்களுக்கு குடியேறிய பின்னர் தாராளமயமாக்கலுக்கு பிறகு நடுத்தர வகுப்பினரின் வாழ்க்கை முறையையும், நவநாகரீகத்தையும் தமிழ் பிராமணர்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர்.

வேலையில் கூட பணிப் பாதுகாப்பு, அதிகபட்ச மரியாதையுடன் கூடிய அதிகாரிகள் பணி போன்றவற்றை நோக்கிய பயணத்தை அந்த சமூகத்தின் இன்றைய தலைமுறையினர் விட்டு விட்டனர்.  அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, அரசியல் போன்றவை கலந்த பிறகு அதிக சம்பளம், விரைவில் பதவி உயர்வு போன்றவற்றை தரும் தனியார் வேலையின் மீது இளம் தலைமுறை பிராமணர்களின் பார்வை திரும்பி உள்ளது. அதுவும் .டி. துறையின் வளர்ச்சிக்கு பிறகு, அந்த போக்கு அதிகமாகி விட்டது. தமிழகத்தில் இட ஒதுக்கீட்டின் தாக்கம் அதிகமாக தொடங்கியதும் பெரும்பாலானோர் வெளிநாட்டு படிப்பு மற்றும் வெளிநாட்டு வேலையில் ஆர்வமாகி விட்டனர்.  

வழக்கமான பாணியிலேயே செல்வதை தவிர்த்து, சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு அதற்கேற்ற வகையில் தங்களின் முயற்சிகளையும் திசை திருப்பி பிராமணர்கள் வெற்றி பெற்று வருவதை திரும்ப திரும்ப நூல் ஆசிரியர்கள் தெளிவுபடுத்துகின்றனர். அதுபோல கல்வியறிவு பெற்ற மத்திய நடுத்தர குடும்பத்தில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதையும் கல்வியுடன் சேர்ந்து வயலின், கர்நாடக இசை, பரதம் என கலைகளுக்கு அவர்கள் இடமளிப்பதையும் புத்தகத்தில் சுட்டிக் காட்டி உள்ளனர்.

சமூதாயத்தின் மிகவும் சிறிய அளவிலான, அதே நேரத்தில் அதிகாரம் செலுத்திய ஒரு சமூதாயம் எவ்வாறு பாரம்பரியத்தில் இருந்து படிப்படியாக மாற்றம் பெற்றது என்பதை விளக்கும் மிக முக்கியமான புத்தகம், ‘தமிழ் பிராமண்ஸ்’. அடிக்கடி குறுக்கிடும் அரசியல், சமூக இயக்கங்களை எதிர்கொண்டு ஒவ்வொரு கட்டத்திலும் அந்த சமுதாயம் தங்கள் முன்னேற்றத்தை எப்படி தக்கவைத்துக் கொண்டு வருகிறது என்பதை விளக்குகிறது. தமிழ் பிராமணர்களின் பொருளாதார நிலைமை, சமூக அந்தஸ்து போன்றவற்றோடு தீர்மானிக்கும் சக்தியாக அவர்கள் தொடர்வது எங்ஙனம்? என்பதையும் இந்த புத்தகம் விரிவாக கூறுகிறது.


பிராமணர்களை பற்றி எழுதும் பெரும்பாலான நூலாசிரியர்களின் புத்தகங்களில் இருந்து இந்த புத்தகம் முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது. தமிழ்நாட்டில் அரசியலும் சாதியும் இணைந்து இருப்பது மற்றும் பிராமணர்களுக்கு எதிரான சுயமரியாதை இயக்கம் போன்றவை பற்றியே பேசப்படும் சூழ்நிலையில், அந்த இயக்கத்தை மீறி, தங்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டு தமிழ் பிராமணர்கள் எவ்வாறு வெற்றிகளை தொடருகின்றனர் என்பதை விளக்கமாகவே இந்த புத்தகம் கூறுகிறது.

நூலாசிரியர்களில் ஒருவரான ஹரிபிரியா நரசிம்மன், சென்னையில் மத்திய நடுத்தர வகுப்பு பெண்ணாக வளர்ந்த தனது சொந்த அனுபவத்தையே ஆதாரமாக கூறுகிறார். சில பிராமணர்கள், தங்கள் குடும்பத்தினர் அனுமதிக்காத போதிலும் வெளியில் அசைவ உணவு சாப்பிடுகின்றனர். ‘புனிதம்’ என்ற பெயரில் சைவ உணவு மட்டுமே சாப்பிட்ட சமூகத்தில் இது மிகப்பெரிய மாற்றம். இதுபோல, வீட்டில் முட்டை சாப்பிடாத போதிலும் வெளியில் முட்டை கலந்த கேக் சாப்பிடுகின்றனர். பாரம்பரிய ‘கொலு’ பண்டிகை கொண்டாட்டத்தில் இடம்பெறும் பொம்மைகள் மாற்றம் பெற்று விட்டன. மது அருந்துவதும் கூட சமூகத்தின் மாற்றங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த புத்தகத்தின் ஒவ்வொரு வரியையும் மிக கவனமாக எழுதியுள்ளனர். அதே நேரத்தில், ஒரு சமூகத்தினர் எப்படி தங்களுடைய பாரம்பரிய கொள்கைகளில் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டு தங்களின் சரியான இலக்கை எட்டுகின்றனர் என்பதை ‘தமிழ் பிராமண்ஸ்’ புத்தகம் நிச்சயமாக தெளிவு படுத்துகிறது என கருதலாம். தமிழ் பிராமணர்களின் மாற்றத்தை சுட்டிக்காட்டும் இந்த புத்தகத்தை படிக்கும்போது, கடந்த 1960களில் அதிர்வலைகளை எழுப்பிய ‘யார் உண்மையான பிராமணன்?’ என்ற கேள்வி வெகு சாதாரணமாகி விட்டது.


(தி இந்து / ஆங்கிலத்தில் 22.11.2015 அன்று வெளியானது)


 தமிழில் வை.ரவீந்திரன்.

Monday 30 November 2015

அகநானூறு கூறும் தமிழ் மங்கையர் காதல்



ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கவிதைகளை செய்யுளாக அறிமுகம் செய்த மொழி தமிழ். ஆண் புலவர்கள் மட்டுமன்றி பெண் புலவர்களும் ஏராளமான செய்யுளை வடித்துள்ளனர். தமிழரின் அகவியல் வாழ்க்கையை கூறும் அகநானூறு உள்ளிட்ட இலக்கியங்களும் இதில் குறை வைக்கவே இல்லை. ஆணின் காதல் ஏக்கத்துக்கு இணையாக காதல் வயப்பட்ட பெண்ணின் கொஞ்சு மொழிகளையும் செய்யுளாக வடித்து வைத்திருக்கிறது.
அடுத்த நாட்டில் இருந்து கானகம் வழியே வரும் ஆணழகன் மீது காதல் வயப்படுகிறாள் அந்த பெண். தனது வயல்வெளியில் விளைந்து நிற்கும் தினைகளுக்கு காவலாக தோழியுடன் சென்ற இடத்தில் தினையுடன் சேர்த்து இவர்களின் காதலும் வளருகிறது. ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் தாயாருக்கு அந்த காதல் குறித்து தெரிய வருகிறது. உடனே, தனது மகளை தினைப்புன காவலுக்கு செல்ல விடாமல் தடுக்கிறாள். இதை அறிந்த அந்த பெண், தனது தோழியிடம் காதல் பிரிவின் வெம்மை தாங்காமல் புலம்புகிறாள்.
சிலம்பில் போகிய செம்முக வாழை

அலங்கல் அம்தோடு,அசைவளி உறுதோறும்

பள்ளியானைப் பரூஉப் புறம் தைவரும்

நல்வரை நாடனோடு அருவி ஆடியும்

பல்இதழ் நீலம் படுசுனைக் குற்றறும்

நறுவீ வேங்கை இன வண்டு ஆர்க்கும்

வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும்

அரியபோலும்  காதல் அம் தோழி


 தோழியே! மலையில் செழித்து வளர்ந்து நிற்கும் செவ்வாழை இலைகள் அனைத்தும் காற்றில் அசையும் போது, அங்கே உறங்கிக் கொண்டு இருக்கும் யானையின் பருத்த உடலை தழுவும். இத்தகைய வளம் மிகுந்த மலை நாட்டைச் சேர்ந்த எனது காதலனுடன் அருவியில் நீராட முடியாதோ? சுனையில் நீலப் பூக்களை பறித்து மகிழ்ந்திருக்க முடியாதோ? வாசனை மிகுந்த மலர்களை கொண்ட வேங்கை மரத்தில் வண்டுகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் சோலையில் அவருடன் விளையாட முடியாதோ? இவை அனைத்தும் இனிமேல் அரிதாகி விடும் போல தெரிகிறதே? என்று புலம்புகிறாள். அதன்பிறகும் அவள் கூறுகிறாள் பாருங்கள்…

இருங்கல் அடுக்கத்து என்னையர் உழுத

கரும்பு எனக் கவினிய பெருங்குரல் ஏனல்

கிளிபட விளைந்தமை அறிந்தும் செல்க என

நம் அவண் விடுநள் போலாள் கை மிகச்

சில சுணங்கு அணிந்த செறிந்து வீங்கு இளமுலை

மெல்இயல் ஒலிவரும் கதுப்போடு

பல்கால் நோக்கும் அறன் இல்யாயே

அருகில் இருக்கும் பெரிய கற்களை கொண்ட மலையின் அடிவாரத்தில் எனது குடும்பத்தினர் விளைவித்த தினைப்பயிரானது கரும்பு போல அழகுடன் திரண்டு வளர்ந்து நிற்கிறது. இந்த நிலைமையில், அதை கிளிகள் வந்து கொத்தும் என அறிந்தும் என்னை காவலுக்கு அனுப்பாமல் எனது தாய் இருக்கிறாள். அவள் எனது திரண்டு வளர்ந்து நிற்கும் கொங்கைகளையும் மென்மையாக தழைந்து கிடக்கும் எனது கூந்தலையும் அடிக்கடி பார்த்து செல்கிறாள். அதனால், இனிமேல் எனது காதலரை காண முடியாதோ? என தோழியிடம் ஏங்கித் தவிக்கிறாள். 




அப்படியும் அவளது நெஞ்சம் ஆறவில்லை. இளங்குளிரை மேனியெங்கும் வீசிச் செல்லும் வாடைக் காற்றை அழைத்து அதனிடம் தனது நிலைமையை கூறி வேதனையை வெளிப்படுத்துகிறாள். எப்படி?
விண்அதிர்பு தலைஇய, விரவு மலர் குழையத்

தண்மழை பொழிந்த தாழ்பெற் கடைநாள்

எமியம் ஆகத் துனி உளம் கூரச்

சான்றோர் உள்ளிச் சில் வளை நெகிழப்

 பெருநசை உள்ளமொடு வருநசை நோக்கி

விளியும் எவ்வமோடு, அளியள் என்னாது

களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை

முளரி கசியும் முன்பனிப் பானாள்

குன்று நெகிழ்பு அன்ன குளிர்கொள் வாடை

எனக்கே வந்தனை போற்றி புனற்கால்

அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிக்

கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது

இனையை ஆகிச் செல்மதி

வினை விதுப்புனர் உள்ளலும் உண்டே

வானத்தில் முழங்கி கூடிய குளிர்ந்த மேகம், தனது குறைவான பொழிதலைக் கொண்ட கூதிர் காலத்தின் இறுதி நாள். இப்போது, பல்வேறு வகையான மலர்களும் குழைந்து கிடக்கின்றன. இப்போது உள்ளத்தில் வெறுப்பு மிகுந்து என்னை பிரிந்து சென்ற காதலரை நினைத்து எனது கை வளையல்கள் கழன்று விழுகின்றன. அதிக ஆர்வத்துடன் அவர் வரும் பாதையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இறப்புக்கு காரணமான துன்பம் என்னை சூழ்ந்திருக்கிறது. இப்படிப்பட்ட என் மீது உனக்கு இரக்கம் இல்லையா? தண்ணீரை யானை குடித்து விட்டு பெருமூச்சு விடும்போது சிதறும் நீர்த்துளிகளால் கண் பார்வை மறைப்பது போல பனித் துளிகளால் தாமரை மலர் மறைக்கப்படுகிறது.  இத்தகைய பனிப் பருவத்தில் மலைகளையும் நடுங்கச் செய்யும் குளிர்காற்றே என்னை வருத்துவதற்காக வந்திருக்கிறாய்.
வாய்க்காலில் நீர் ஓடும்போது மணல் மேடு கரைவது போல உனது நெஞ்சம் இளகாதா? அப்படி இளகினால் கொடியவரான எனது காதலர் சென்ற திசை நோக்கி செல். அவர் எனது நிலைமை அறிந்து என்னிடம் திரும்பி வந்தாலும் வருவார். 



இப்படி தோழியிடமும் வாடைக் காற்றிடமும் தனது காதலை அடக்க மாட்டாமல் பிதற்றிக் கொண்டிருக்கும் பெண்ணின் காதல் கைகூடி விடுகிறது. தோழி உதவியுடன் வீட்டாரை உதறி விட்டு காதலனை கரம் பிடிக்கிறாள். இனிமையாக செல்லும் இல்லறத்தில் சிறிது விரிசல் விழுகிறது. தலைவனின் உள்ளத்தில் பரத்தைக்கு சிறிது இடம் கிடைக்கிறது. விரைவிலேயே பரத்தையின் வசிப்பிடத்தில் தலைவனுக்கும் இடம் ஒதுக்கப்படுகிறது. அதை அறிந்த அந்த பெண் மனம் கொதிக்கிறாள். பரத்தை வீட்டில் இருந்து திரும்பி வரும் தனது காதலனை அதாவது கணவரை பார்த்து கூறுகிறாள்.
இது நற்றிணையில் வரும் பாடல்…
வெண்ணெய் அரிநர் தண்ணுமை வெரீஇ

பழனப் பல் புள்இரிய, கழனி

வாங்குசினை மருதத் தூங்குதுணர் உதிரும்

தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என்

தொல் கவின் தொலையினும் தொலைக! சார

விடேஎன் விடுக்குவென் ஆயின், கடைஇக்

கவவுக் கை தாங்கும் மதுகைய, குவவு முலை

சாடிய சாந்தினை; வாடிய கோதையை;

ஆசு உடை கலம் தழீஇயற்று

வாரல்; வாழிய, கவைஇ நின்றாளோ!  

நீண்டு கிடக்கும் நெல் வயலில் கதிரை அறுக்கும்போது பறவைகள் வந்து கொத்திச் செல்வதை தடுப்பதற்காக தண்ணுமை என்ற மேளத்தை முழங்குவார்கள். அந்த முழக்கத்தை கேட்டதும் பறவைகள் அஞ்சி, வயலில் தாழ்ந்து நிற்கும் கிளைகளை கொண்ட மருத மரத்தின் மீது சென்று அமரும். அதன் சுமை தாங்காது மரத்தில் இருந்த பூக்கள் எல்லாம் வயலில் உதிரும். அத்தகைய செழிப்பான ஊர் இருப்பையூர். அதுபோன்ற செழிப்பான எனது இயற்கை அழகு கெட்டுப் போனாலும் பரவாயில்லை.
எனது கணவா! உன்னை எனது அருகில் நெருங்க விட மாட்டேன். அப்படி நீ வந்தாலும் எனது கைகள் உன்னை தடுக்கும் வலிமை கொண்டது. நீ பரத்தையரின் சந்தனம் பூசிய மார்பகத்தை தழுவியவன். வாடிய மாலையை சூடியவன். உன்னை தொடுவது குறைகளுடைய கலங்களை தொடுவது போன்றது. ஆதலால், நீ வர வேண்டாம். நீயும் உன்னை தழுவிய பரத்தையும் நெடுங்காலம் வாழ்வீர்களாக…! என்கிறாள்.
இப்படியாக காதல், காதல் சார்ந்த வாழ்வும் வாழ்ந்த பழங்கால பெண்டிரை பற்றி அகநானூறும், நற்றிணையும் அக இலக்கியங்களும் அவர்கள் மொழியிலேயே பேசுகின்றன. சங்ககால பெண்களின் காதல் வாழ்வை பதிவு செய்து வைத்துள்ளன. தமிழில் கவிதை வடிவம் என்பது பரிணாம வளர்ச்சி பெற்று வளர்ந்து விட்டது. பழங்கால இலக்கியங்களை ஒப்பிடும்போது காதல் வயப்பட்ட பெண் கூறுவது போன்ற காதல் கவிதைகள் இன்றைய நிலையில் சற்று குறைந்து விட்டதாகவே தெரிகிறது.
= வை.ரவீந்திரன்