Sunday 13 June 2010

யார் கவுரவர்?

யார் கவுரவர்?
யார் பாண்டவர்?
விடை அளிப்பதற்கு
இது கடினமான கேள்வி.

தர்மத்தின் ஆட்சி
போய் விட்டது!
சூதாட்டம் பெருகி விட்டது

பாஞ்சாலி -ஒவ்வொரு
பஞ்சாயத்திலும்
அவமானப் படுகிறாள்

மகாபாரத போர்
இப்போதும் நடைபெறுகிறது! - ஆனால்
கிருஷ்ண பரமாத்மா
மட்டும் இல்லை

யார் ஆட்சி நடத்தினாலும்
ஏழைகள் என்னவோ
வறுமையில் தான் உள்ளனர்

= வை.ரவீந்திரன் 

யானைக்கும் மதம் பிடிக்கும்

வேந்தர்களோடு போயிற்று
வேழத்தின் காலம்
பட்டத்து யானைகள்
தட்டழிகின்றன - பட்டணக் கரைகளில்!

காட்டுவாசியிடம்
கேட்டுத் தெரிந்து கொள்
கூட்டத்திலிருந்து பிரிந்த
ஒற்றை யானையின் துயரம்!

வனத்தில் பார்க்க வேண்டும்
அச்சமற்று திரியும் அந்த
கருப்பு கம்பீரங்களை
உயிர் வதை புரியாது
ஒரு பாவமும் அறியாது!

காற்றுக்கு அசையும்
மூங்கில் புதர் போல
காட்டுக்குள் அலையும்
சைவப்புதிர் இது!

நகரத்தில் யானைகள்
குற்றமிளைக்காத
ஆயுள் தண்டனை கைதிகள்

பிரியமானவர்களின் முகங்களை
சிறை கம்பிகளுக்கு பின்னோ
மருத்துவமனை படுக்கையிலோ
பார்க்க நேருவதை போன்ற
துயரத்துக்கு நிகரானது
நகரத் தெருக்களில் யாசிக்கும்
யானைகளை பார்ப்பது!

இருந்தாலும் ஆயிரம் பொன்
இறந்தாலும் ஆயிரம் பொன்
யானை நடக்கிறது
தன பலம் அறியாமல்

ஆசைகளுக்கு தந்தங்களையும்
அதிர்ஷ்டங்களுக்கு வால் மயிரையும்
பறிகொடுத்து நிற்கும் யானைக்கும்
மதம் பிடிக்கும் ஒரு நாள்!


= வை.ரவீந்திரன்