Saturday, October 22, 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 8

மண்ணின் மைந்தர் என்ற உணர்வு, புதுச்சேரி மக்களின் மனதில் மிக ஆழமாகவே புதைந்து கிடக்கிறது. வெளிமாநிலங்களில் (தமிழக மக்களும் தான்…) இருந்து குடியேறும் மக்களால் தங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் வாய்ப்புகள் தட்டிப் போவதாகவும் கருதுகின்றனர். அரசு கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற ஒருவரே இதுபோன்ற கருத்தை முகநூலில் எழுதினார் என்றால் சாதாரண மக்களின் மன ஓட்டம் எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம். காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்தியத்தை கூடவேறுபாட்டுடனேயே புதுச்சேரி மக்கள் பார்ப்பதை காண முடிகிறது. இனப்பற்றும் கூட, பரவலாக இருக்கிறது.

புதுச்சேரியில், எளிதில் ரேஷன் அட்டை பெற முடிவதில்லை என்பது எனது அனுபவத்தில் கண்ட உண்மை. தமிழகத்தில் டெலிட் செய்த சான்றிதழ், கேஸ் இணைப்பு, வாடகை வீட்டு ஒப்பந்த பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களோடு விண்ணப்பித்தும் கூட 10 மாதங்கள் கழித்தே ரேஷன் அட்டை கிடைத்தது. ஜூனில் விண்ணப்பித்த எனக்கு மறு ஆண்டு மார்ச்சில்தான் ரேஷன் கார்டு வந்தது. சிவில் சப்ளைஸ் இணை இயக்குநரை நேரில் பார்த்து முறையிட்டும் இந்த நிலைமை. ஆனால், தமிழகம் திரும்பிய போது காலையில் சரண்டர் செய்த கார்டுக்கு மாலையிலேயே சான்றிதழ் தந்து விட்டனர். அவ்வளவு வேகம்…

சென்னையில் ஜூன் இறுதியில் விண்ணப்பித்து செப்டம்பர் முதல் வாரத்தில் ரேஷன் அட்டையை பெற்றதோடு அக்டோபர் முதல் பொருட்களை வாங்க தொடங்கி விட்டேன் என்பதையும் இங்கு நினைவு கூறுகிறேன். இவ்வளவுக்கும் புதுச்சேரி ரேஷன் கடைகளில் சர்க்கரை விநியோகம் இல்லை. மாதந்தோறும் 10 கிலோ இலவச அரிசி, கோதுமை மட்டும் உண்டு. அதுவும் முறையாக வழங்குவது கிடையாது. ஜனவரி மாதத்துக்கான அரிசி என கூறிக் கொண்டு ஜூலை மாதம் விநியோகிப்பார்கள்.

அங்குள்ள மக்களின் உச்சபட்ச லட்சியம், பிரான்ஸ் குடியுரிமை பெறுவதே. 58 வயதுக்கு பிறகு பிரான்ஸ் அரசிடம் இருந்து சில ஆயிரம் பிராங்கோ (இந்திய மதிப்பில் ஒரு பிராங்கோ சுமார் 60 ரூபாய்) பென்சன் கிடைக்கும். இப்போதெல்லாம், குடியுரிமைக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால், பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மணமகன், மணமகளுக்கு கடும் கிராக்கி. பிறக்க போகும் குழந்தைக்கு தானாகவே பிரெஞ்சு குடியுரிமை கிடைத்து விடும். புதுச்சேரி அரசே கூட, 55 வயதை தாண்டிய அனைவருக்கும் முதியோர் பென்சனாக 5 ஆயிரம் வரை வழங்குகிறது.

(அனுபவம் இனிக்கும்…)

என்னை கவர்ந்த புதுச்சேரி - 7

புதுச்சேரியில் ஒரு நாடாளுமன்ற தேர்தலையும் ஒரு சட்டமன்ற தேர்தலையும் நேரில் பார்க்கும் அனுபவமும் எனக்கு வாய்ந்தது. தேர்தல் என்றாலே புதுச்சேரி மக்களிடம் கூடுதல் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. என்னவென்று பார்த்தபோது, உண்மை முகத்தில் அறைந்தது. வேட்பாளர்கள் வாரி வழங்கும் பரிசு பொருட்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

ஒரு வேனில் வந்து, தெரு முனைகளில் நின்றபடி வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு ஓட்டுக்கு ஒரு டோக்கன் வீதம் விநியோகித்தனர். அந்த டோக்கனை பெற ரேஷன் கார்டுடன் நீண்ட வரிசையில் மக்கள் காத்து கிடந்தனர். ரேஷன் கார்டு எதற்கு என குழப்பத்தில் இருந்தபோது, அவர்களிடம் டோக்கன் வழங்கியதை ரேஷன் கார்டிலும் பதிவு செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அரசு ஆவணமான ரேஷன் அட்டையில் அரசியல் கட்சி வேட்பாளரின் பிரதிநிதி முத்திரை குத்துகிறார். பல்வேறு தேர்தல்களிலும் வெவ்வேறு முறைகேடுகளை பார்த்த எனக்கு இது புது மாதிரியாக இருந்தது. நீங்கள் டோக்கன் வாங்கவில்லையா என பக்கத்து வீட்டு பெண்மணி கேட்டபோது கூடுதல் அதிர்ச்சி.

ஏம்மா… இது ஓட்டுக்காக அவர்கள் தரும் லஞ்சம், அதை நாம் வாங்கலாமா..? என அறிவுரை கூறும் எண்ணத்தோடு ஆரம்பித்தால், அப்போ, இலவச மிக்சி, கிரைண்டர் மட்டும் வாங்கலாமா என எதிர்க்கேள்வி கேட்டார். அது, ரேஷன் கடை மூலமாக அரசாங்கமே இலவசமாக தரும் பொருள், இது, நம்மிடம் ஓட்டு வாங்குவதற்காக வேட்பாளர் தனது சொந்த பணத்தில் தரும் பொருள் என விளக்கினால், அதுவும் ரேஷன் கார்டுல தான் தர்றாங்க…? என கேட்டார். எவ்வளவோ பேசிப்பார்த்தும் கடைசி வரை அவருக்கு இரண்டுக்கும் வேறுபாடு புரியவில்லை. அந்த அளவுக்கு மக்களை அரசியல்வாதிகள் கெடுத்து வைத்திருக்கின்றனர்.

பின்னர், அந்த டோக்கனை காண்பித்து குக்கர், கடாய், கேஸ் ஸ்டவ், ஹாட் பாக்ஸ் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருளாக வாங்கி வந்தார். காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் கொடுத்த பொருட்களை பாஜக நிர்வாகி ஒருவரின் வீட்டிலேயே வாங்கினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்த தொகுதியில் வேறு விதமான பொருட்கள். பெரும் பண முதலைகள் போட்டியிடும் தொகுதி மக்கள் அந்த வகையில் அதிர்ஷ்டசாலிகள். மற்ற தொகுதி மக்கள், அது பற்றி பொறாமையுடன் பேசிக் கொள்வார்கள்.

நெல்லித்தோப்பு, காலாப்பட்டு, லாஸ்பேட்டை, இந்திரா நகர் போன்ற நகரில் உள்ள சில தொகுதிகளும் புறநகரில் உள்ள சில தொகுதிகளும் கொடுத்த வைத்த தொகுதிகள். இவர்களை இன்னொரு விதமாகவும் அரசியல்வாதிகள் கெடுத்து வைத்திருக்கின்றனர்….

(அனுபவம் இனிக்கும்…)

என்னை கவர்ந்த புதுச்சேரி ... 6

மதுபானத்துக்கு பெயர் பெற்ற புதுச்சேரியில் உயர் தர தனியார் மதுக்கடைகள், பார்கள், கள், சாராயக்கடைகள் ஏராளம். இரண்டு முதல் 5 லட்சம் வரையிலான மது பாட்டில் கூட கிடைக்கும். ஆனால், அங்குள்ளவர்களிடம் அந்த பழக்கம் அளவோடு இருக்கிறது. தண்ணி சாப்பிடுறாங்க… என்பது பரவலாக கேட்கும் வார்த்தை.

குடித்து விட்டு நடைபெறும் கலாட்டாக்களும் கொலைகளும் பார் மற்றும் கள், சாராயக் கடைகளிலேயே முடிந்துவிடும். அதே நேரத்தில் தெருக்களில் விழுந்து கிடப்பவரை பார்க்க முடியாது. பெருங்குடியுடன் தெருவில் ஒருவர் வீழ்ந்து கிடக்கிறார் என்றால் தமிழகத்திலிருந்து தண்ணி தொட்டி தேடி வந்த ஒரு கன்னு குட்டியாகத்தான் இருக்கும்.

வார இறுதி நாட்களில் பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் இருந்து திருவிழா கூட்டம் போல வருவது வழக்கம். விடுதிகள் நிரம்பி விடும். வெள்ளி இரவு தொடங்கி திங்கள் காலை வரை உற்சாகமான ஊர். இதை கோவா போன்றதொரு சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றாமல் இருப்பது அரசியல்வாதிகளின் தவறு.

லெட்டர் பேடு அமைப்புகள் சார்பாக போராட்டம், பந்த் அறிவித்தால் கூட நகரமே வெறிச்சோடி விடும். கடைகளின் மீது கல் எறிந்தால் என்னாவது என்ற அச்சமா? அல்லது எப்போது விடுப்பு கிடைக்கும் என்ற மக்களின் மனோபாவமா என்பது எனக்கு கடைசி வரை பிடிபடவே இல்லை. தனியார் பள்ளிக்கூடங்கள் விடுமுறை விடப்படும். அரசு பள்ளி இயங்கும் என கூறினாலும் மாணவர், ஆசிரியர் யாரும் இருக்க மாட்டார்கள். 90 சதவீதம் தனியார் பேருந்து சேவை என்பதால் பேருந்தே இருக்காது.

அரசியல் பிரமுகர் ஒருவரின் கொலைக்காக தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியே மாநிலம் தழுவிய ‘பந்த்’ நடத்திய அவலத்தையும் அங்கு நான் இருந்த கால கட்டத்தில் காண நேரிட்டது. ஜெ. தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருந்தபோது கூட, புதுச்சேரியிலும் மூன்று நாட்கள் பந்த் நடந்தது. இவ்வளவுக்கும் புதுச்சேரியில் மூன்று அல்லது நான்காவது இடத்தில் தான் அ.தி.மு.க. இருக்கிறது.

இதுபோன்ற, காரணமே இல்லாத முழு அடைப்புகளை ஆண்டுக்கு 5 முதல் 10 முறையாவது பார்க்கலாம். ஆனால், வெறிச்சோடி கிடக்கும் நகரின் காட்சி, மாலை 6 மணிக்கு மேல் தலைகீழாக மாறி விடும். சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் அளவுக்கு டெரர் பாய்சாக புதுச்சேரி போலீசார் இல்லை என கூறுவது சங்கடமாகத்தான் இருக்கிறது. மக்களும் அதை எல்லாம் பெரிய விஷயமாக கருதுவதில்லை.

(அனுபவம் இனிக்கும்…)

Sunday, October 16, 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 5

புதுச்சேரி மக்களின் வாழ்வியல் மற்றும் கொண்டாட்டம் நிறைந்த வாழ்க்கை பற்றி கூற ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. தமிழகத்தின் சிறு நகரங்களில் வாழும் மக்களை போலவே மிகவும் அன்பானவர்கள். ஒரு குடியிருப்பு பகுதியை எடுத்துக் கொண்டால் அங்குள்ள அனைவரை பற்றிய தகவல்களையும் பெரும்பாலானோர் விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள். புதிதாக வந்தவர்களை கூட….. சிலருக்கு பெரும்பாலான நகரவாசிகளைப் பற்றிய தகவல்கள் அத்துப்படி… அந்த விஷயத்தில் கிராமம் போன்ற நகரம் அது.

வீதியில் ஏதாவது பிரச்சினை என்றால் கை கொடுப்பது, விபத்து என்றால் வேடிக்கை பார்க்காமல் ஓடி வந்து உதவுவது என ஒவ்வான்றிலும் உதவும் எண்ணம் கொண்ட நல்ல மனசுக்காரர்கள். கொண்டாட்டத்திலும் குறைவு கிடையாது. சனி, ஞாயிறு நிச்சயம் ஓய்வு. பெரும்பாலான வார இறுதிகளில் கடற்கரையில் ஏதேனும் ஒரு விழா களை கட்டும். சில தினங்களில் காவல்துறையின் பாண்டு வாத்திய குழுவினரே கடற்கரையில் பாடல்களை இசைத்து மக்களை மகிழ்விப்பதுண்டு.

பொங்கல், தீபாவளி நாட்களில் ஒரு வார கொண்டாட்டம். குறைந்தது நான்கு நாட்களாவது எந்த கடைகளுமே இருக்காது. தீபாவளி முன் தினம் நள்ளிரவிலேயே மட்டன் கடைகள் களை கட்டும். அதிகாலையில் வெறிச்சோடி விடும்.

ஞாயிறுகளில் ஜொலிக்கும் சண்டே பஜார். விழா மற்றும் பள்ளி திறப்பு போன்ற காலங்களில் திண்டிவனம், கடலூர் வரையிலான பகுதிகளை சேர்ந்த ஏழை, நடுத்தர மக்களின் அட்சய பாத்திரம், இந்த சந்தை. மிகவும் அரிதான பழைய புத்தகங்கள் கூட சண்டே பஜாரில் கிடைக்கும்.

வலிந்து வேலை பார்ப்பதோ, வேலையை திணித்துக் கொள்வதோ கிடையாது என்பதால் ரிலாக்ஸ் மனதுக்கு சொந்தக்காரர்கள். காது குத்தில் தொடங்கி, திருமணம், இறுதி அஞ்சலி வரை டிஜிடல் பேனர்களுக்கு பஞ்சமில்லை. அரசியல் நிகழ்வு என்றால் கேட்கவே வேண்டாம். ஆகஸ்ட்டில் ரங்கசாமி பிறந்த நாளில் நகரமே பேனர்களால் களை கட்டும். ராம்போ சில்வஸ்டர் ஸ்டாலன் தொடங்கி பாகுபலி பிரபாஸ் வரை விதம் விதமான கெட்டப்களில் ரங்கசாமி சிரிப்பது கண்கொள்ளா காட்சி. புதுச்சேரி நகரை சுற்றி வந்தால் நல்ல பொழுதுபோக்கு. ரங்கசாமியே அதிகாலை வேளையில் பைக்கில் வலம் வந்து அவற்றை ரசிப்பார் என்பது கொசுறு தகவல்.சுவாசமே, இதயமே, உயிரே இப்படியாக ஒற்றைச் சொல்லிலேயே பேனர்களில் கதறடிப்பார்கள். இது, அனைத்து கட்சியினருக்குமே பொதுவான விதி. உள்ளூர் கேபிள் சேனல்களும் அப்படித்தான். கிட்டத்தட்ட 100 சேனல்களை எட்டும். சினிமா பாடல்கள் ஒலிக்க பிறந்தநாள், திருமண நாள் விளம்பரங்கள் களை கட்டும். ஒரு வயது குழந்தை பிறந்த நாளுக்கு ‘யாரென்று தெரிகிறதா…இவன் வீரனென்று புரிகிறதா’ என்ற பாடல் ஒலிக்கும். இந்த அட்ராசிட்டிகளை வேடிக்கை பார்ப்பதே ரசனையான அனுபவம். வீட்டில் அதற்காகவே, டிஷ் கூட பொருத்தாமல் கேபிள் இணைப்பு வைத்திருந்தேன்.

அந்த சேனல்களில் பெரும்பாலானவற்றில் செய்திகளும் ஒளிபரப்பாகும். புதுச்சேரியை தாண்டிய வேறு செய்திகளில் மக்களுக்கு அதிக அளவு ஆர்வம் இல்லை என்பதால் அந்த சேனல்களுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகம்.

(அனுபவங்கள் இனிக்கும்)

Monday, October 10, 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 4

புதுச்சேரிக்குள் ஏராளமான சித்தர் சமாதிகள் இருக்கின்றன. அதில் முதலாவது சித்தர் மணக்குள விநாயகர் கோயிலுக்குள் உள்ள தொள்ளைக் காது சித்தர். பிரெஞ்சியரின் மத குரோதத்தை எதிர்கொண்டவர். 300 ஆண்டுகளுக்கு முன் அவருக்கு மணக்குள விநாயகர் துணையாக இருந்து சில சித்து வேலைகளை பிரெஞ்சியருக்கு காட்டியதாக வரலாறு. கடலுக்குள் கட்டி வீசப்பட்ட மணக்குள விநாயகர் மீண்டும் எழுந்தருளி ஆச்சரியம் ஏற்படுத்தியதாக கூறுகிறார்கள்.
தட்டாஞ்சாவடியில், கம்பளி சாமியார் சமாதி மற்றும் கோயில் இருக்கிறது. தினகரன், தினமலர் பத்திரிகை அலுவலகங்கள் அருகிலேயே இருக்கும் இந்த கோயிலின் நுழைவு வாயிலில் பதஞ்சலி முனிவரின் பிரமாண்டமான சிலை அனைவரையும் கவரும். சித்தர் சமாதியின் மீதுள்ள சிவலிங்கமும் சித்தர் அமர்ந்ததாக கருதப்படும் இருக்கையும் தெய்வீக அனுபவத்தை தருபவை.
விழுப்புரம் செல்லும் நெடுஞ்சாலையில் வில்லியனூர் ரயில்வே கேட் அருகில் உள்ள சித்தரின் சமாதி, அக்கா சாமி மடம். இப்படி புதுச்சேரி முழுவதுமே சித்தர்களின் சமாதிகளும் ஆலயங்களும் இருப்பதால் இயற்கையாகவே அந்த மண்ணில் ஒரு சாந்தமும், அறிவுச் சுடரும் புதைந்து கிடக்கிறதோ என்னவோ? முதல்வராக இருந்த ரங்கசாமி, தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு தனது வீட்டு அருகிலேயே (ஜிப்மர் எதிர் பகுதியில்) கோயில் கட்டி இருக்கிறார்.


சென்னையில் இருந்து ஈசிஆர் வழியாக சென்றால் புதுச்சேரியின் நுழைவு வாயிலிலேயே கருவடிக் குப்பத்தில் சுவாமி சித்தானந்தர் என்ற சித்தரின் சமாதி உள்ளது. குரு ஸ்தலமாக கருதப்படும் இங்கு வியாழக்கிழமைகளில் புதுச்சேரி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகளை பார்க்க முடியும். சித்தரின் சமாதி மீதுள்ள சிவனுக்கு சிவராத்திரி நாளில் சலங்கை பூஜையுடன் விழா நடைபெறும். இந்த சித்தர் கோவிலிலும் சுற்றியிருந்த குயில் தோப்பிலும் தான் மகாகவி பாரதியார் அமர்ந்திருந்து ஏராளமான கவிதைகளை எழுதி இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.


கருவடிகுப்பம் சித்தானந்தர் கோயில் அருகிலேயே ஒரு மயானம் இருக்கிறது. மின் மயானமாக மாற்றப்பட்ட இங்கு தான், நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் சமாதி உள்ளது. ஆண்டுதோறும் நாடக, திரைப்பட கலைஞர்கள் ஊர்வலமாக சென்று இங்கு மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த மயானத்தில் தான் எனது தந்தையின் இறுதி சடங்குகளும் நடைபெற்றது. மண்ணுலகில் 73 ஆண்டுகள் வாழ்ந்த அவரது ஜீவன், இந்த சித்தர்களின் பூமியில் தான் முக்தி பெற்றது.

(அனுபவங்கள் இனிக்கும்)

என்னை கவர்ந்த புதுச்சேரி - 3

புதுச்சேரி என்றாலே மருத்துவம், கல்வி இரண்டுக்கும் பிரசித்தம் என்று கூறுவது உண்டு. அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். மிகச் சிறிய மைதானம், வகுப்பு அறையிலேயே மதிய உணவு என சென்ற சென்னை பள்ளி வாழ்க்கையில் இருந்து புதுச்சேரியில் நான்கு ஆண்டு பள்ளி அனுபவம் வித்தியாசமாகவே அமைந்தது எனது செல்வங்(ன்)களுக்கு.
பரந்து விரிந்த மைதானம், மைதானத்தில் நண்பர்களுடன் மதிய உணவு, ஆண்டுக்கு ஒருமுறை கல்வி சுற்றுலா, ஆசிரியர் தினம் முதற்கொண்டு ஒவ்வொன்றுக்கும் விழா, கெட் டுகதர் போல முதல்வராக இருக்கும் ரெவ்.பாதரே மாணவர்களுடன் உரையாடி திரைப் பாடல்களை பாடி மகிழ்வது (விழா தினத்தில் மட்டும்) … என அந்த கொண்டாட்டங்கள் வேறுபட்ட அனுபவம்... கொண்டாட்டங்களுக்கான பூமி புதுச்சேரி என்பதை டான்பாஸ்கோ பள்ளியிலும் உணர முடிந்தது.
எந்தவொரு இடத்திலும் மகிழ்ச்சியான சூழ்நிலை அமைந்தாலே போதும், நம்முடைய பணிகளும் முன்னேற்றமும் தானாகவே விரிந்து உயரும். அங்கு பள்ளிக் கல்வியும் அப்படித்தான். தமிழகத்தை ஒப்பிட்டால் பள்ளிக் கல்வியில் புதுச்சேரி ஒரு படி மேல் என்பது எனது எண்ணம்.
நகருக்குள் மட்டும் மூன்று அரசு மருத்துவமனைகள், அரசு மகப்பேறு மருத்துவமனை, சுற்றிலும் ஏழு மருத்துவ கல்லூரிகள் புறநகர் பகுதிகளில் ஏராளமான ஆரம்ப சுகாதார நிலையங்கள் என சுகாதார வசதியில் புதுச்சேரி கொஞ்சம் உயர்வாகவே உள்ளது. அதனால், சிறந்த மருத்துவ சிகிச்சைக்கு சந்தேகம் இல்லை. சொந்த ஊரில் முடக்குவாதத்தால் முடங்கிய என்னுடைய தந்தைக்கு சிறப்பான சிகிச்சை அளித்த ஜிப்மர் மருத்துவமனையையும் மறக்க முடியாது. அங்கு உள் நோயாளியாக சேர்ப்பதற்கு பெரிதும் உதவிய நண்பர் ஆதி கேசவன், மருத்துவமனை டீன் (பொறுப்பு) பாலச்சந்திரன் ஆகியோரின் உதவிகளை நன்றி என்ற மூன்று எழுத்துகளில் அடக்க முடியாது.


புதுச்சேரியை சுற்றிலும் உள்ள விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டம் வரையிலான தமிழக மக்களுக்கும் ஜிப்மர் மருத்துவமனை தான் ஆபத்பாந்தவன் என்பது மிகையான வார்த்தை கிடையாது. எனினும், ஓபன் ஹார்ட் சர்ஜரி போன்ற சில மிகவும் சிக்கலான சிகிச்சைக்கு புதுச்சேரி இன்னமும் பக்குவப்படவில்லை. அதுபோன்ற சிகிச்சைக்கு சென்னை வர வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. இதில், ஆட்சியாளர்கள் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவதிக்குள்ளான என்னுடன் பணியாற்றிய மூத்த ஊழியர் மோகன்ராஜ் சாரின் அனுபவமே அதற்கு சான்று.


அதற்காக அரசு மருத்துவமனையில் மற்ற செயல்பாடுகளை குறைத்து கூற முடியாது. எக்ஸ் ரே எடுப்பதில் தொடங்கி ஒவ்வொரு சிகிச்சை முறைகளையும் பார்க்கும்போது, தமிழகத்தின் பெரிய அரசு மருத்துவமனைகளை விட கொஞ்சம் நல்ல மாதிரியாகவே அணுகுமுறைகள் உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட சிகிச்சை சரியில்லை என்றால் உடனடியாக போராட்டமும், முதல்வர் கவனத்துக்கு நேரடியாக கொண்டு செல்வதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வு.
(அனுபவங்கள் இனிக்கும்….)

என்னை கவர்ந்த புதுச்சேரி... 2

முதன் முதலில் புதுச்சேரி சென்றதும் என்னை வரவேற்று அழைத்துச் சென்று, வீடு கிடைக்கும் வரை தனது அறையில் தங்க வைத்தது நண்பர் வேல்முருகன், அந்த ஊரில் எனது முதல் அறிமுகம். புதுச்சேரி நகரை முழுவதும் சுற்றிக் காண்பித்ததில் நண்பர் சிவகுமாருக்கு முக்கிய பங்கு உண்டு. முதல் நாளிலேயே புதுச்சேரி தினகரன் செய்தி ஆசிரியராகவும் பொறுப்பேற்றுக் கொண்டேன். அங்கு என்னுடைய குறுகிய அனுபவமே எனக்கு மிக நெடிய அனுபவம், வாழ்க்கையிலும் பணியிலும்…
கல்லூரி, எம்பிளாய்மென்ட் ஆபீஸ், தாலுகா ஆபீஸ் இப்படி சின்ன தேவைகளுக்கு கூட 30, 40 கிலோ மீட்டர் வரை சென்ற எனக்கு ஓரிரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் தலைமை செயலகம், சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகை போன்றவற்றை பார்த்தபோது சற்றே பிரமிப்பு. 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் 3 பெரிய அரசு மருத்துவமனைகள். 10 நிமிட தொலைவில் அழகிய கடற்கரை (பல திரைப்படங்களில் அதை பின்னாளில் பார்த்தபோது கொஞ்சம் கர்வம்.. நிறைய ஆச்சரியம்) இப்படி புதுச்சேரியில் என்னை வியப்பில் ஆழ்த்திய விஷயங்கள் பலப்பல…
சிக்னலில் டூ வீலரில் காத்து நிற்கும் முன்னாள் அமைச்சர்கள், நெரிசலில் டூ வீலர் ஓட்டி செல்லும் எம்.எல்.ஏக்கள், வாரிய தலைவர்கள், சைரன் எதுவும் இல்லாமல் கடந்து செல்லும் முதலமைச்சர், மத்திய அமைச்சரும் (இப்போதைய முதல்வர்) கூட அப்படித்தான்… இன்றைய முதல்வரின் மனைவி டூ வீலரில் சென்றபோது லாரி மோதி விபத்து ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தில் பஞ்சாயத்து கவுன்சிலர்களே பந்தாவாக அலைவதை பார்த்தபோது எனக்கு சற்று மிரட்சியாகவே இருந்தது. அதுவும், முதல்வர் அலுவலகத்துக்கே சென்று அவரிடம் உரிமையோடு நேரடியாக வாக்குவாதம் செய்த தொகுதியின் சாதாரண வாக்காளரையும் பார்த்திருக்கிறேன். வேறு எந்த மாநிலத்திலாவது இது சாத்தியமாகுமா…?


உண்மையில், புதுச்சேரி வித்தியாசமான பிரதேசம் என்பதை புரிந்து கொண்டேன். அதன் பிறகு ஊரைப் பற்றிய எனது தேடுதல் தொடர்ந்தது. அந்த தேடுதலில் விளைந்தது தான், ‘புதுவையின் பழமை’ தொடர்… நண்பர் குரூஸ் தனம் மற்றும் புதுச்சேரி தினகரன் நிருபர்கள் உள்ளிட்ட நல்ல நெஞ்சங்களின் ஒத்துழைப்பால் தினகரனில் 50 வாரங்களுக்கு பரந்து விரிந்த அந்த தொடர், பிறகு அதே பெயரில் சூரியன் பதிப்பக வெளியீடாக புத்தகமாகவும் மலர்ந்தது…
(அனுபவங்கள் இனிக்கும்…)

தேவகுமாரன் வருவான்...?

ஆயிரம் ஏக்கருக்குள்
லட்சம் மக்களை
அடைத்தபோது கூட
நம்பிக்கை கண்ணி அறுபடவில்லை
நண்பர்களென நம்பியோர்
கட்டியணைத்து முதுகில்
கத்தி செருகியபோது
கண்ணியில் தொய்வு நேரிட்டது
எல்லாம் முடிந்ததென
எக்காள குரல் எழும்பியபோது
நந்திக் கடலின் சிவப்பினுள்
கண்ணியின் ஒரு இழை அறுந்தது
முள்ளி வாய்க்காலில்
முற்றுப்புள்ளியிட்ட தருணத்தில்
கண்ணியின் மற்றொரு
இழை தொடர்பும் அறுந்தது
சர்வதேசம் பார்த்து
நம்பிக்கை கண்ணிகளின்
மிச்ச இணைப்புகள்
எதிர் நோக்கி காத்திருந்தன
பேயின் சதிராட்டத்துக்கு
பிசாசு, குட்டிச்சாத்தான்களிடம்
நீதி, நியாயம் கேட்டு
நம்பிக்கை கொள்ளலாமா?
ஆனாலும், தனித்தனியாக அறுந்து விட்ட
நம்பிக்கை கண்ணிகள்
ஒவ்வொன்றும் நம்புகின்றன
இன்னும் ஒரு தேவகுமாரன்
நீதி வழங்க வருவானென.

Tuesday, October 4, 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி… 1

இங்கிலாந்தில் ஐ.சி.எஸ். பட்டம் பெற்று இந்தியா திரும்பி, ஆங்கிலேயருக்கு எதிராக வெடிகுண்டு போராட்டம் நடத்திய அரவிந்த் கோஷ் என்ற இளைஞரை பண்படுத்தி ஆன்மிக நாட்டத்தில் திருப்பியது, புதுச்சேரி மண். மறைவுக்கு பிறகும் ஸ்ரீ அரவிந்தர் என இந்த உலகத்தை திரும்பி பார்க்கச் செய்ததும் புதுச்சேரியே.கொலை பாதகம் அறியாதவராக வளர்ந்த வாஞ்சிநாதனை, மணம் முடிந்து சில வாரங்களேயான அந்த இளைஞரை, சுதந்திர கனல் ஊட்டி, நெல்லை மாவட்ட ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரையை கொல்லும் அளவுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்ததும் புதுச்சேரியே….

எழுத்து வெடிகுண்டு வீசியதால் ஆங்கிலேயரின் கோபத்துக்கு ஆளாகி, தன்னை நாடி வந்த சுப்பிரமணியை, மகாகவி பாரதியாக்கி அழகு பார்த்ததும் புதுச்சேரி மண் தான். தன்னுள் வந்த ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான அனுபவத்தை அளித்த புதுச்சேரி மண்ணில் எனக்கும் ஓர் ஐந்தாண்டு அனுபவம்…அதன் ஈராயிரம் ஆண்டு பழமையை பற்றி ஒரு புத்தகம் எழுதியது…, பத்திரிகை பணியில் உயர்ந்த ஒரு இடம்…, சித்தர்களின் பூமியான புதுவையில், எனது தந்தையின் இறுதி மூச்சு அடங்கியது…., என மறக்க முடியா பல்வேறு அனுபவங்கள் நிறைந்தது, அந்த ஐந்தாண்டுகள்…

பல நூற்றாண்டு பழமை பற்றிய ஆய்வின்போது அகக்கண்ணால் நான் பார்த்த புதுச்சேரி, நிகழ் காலத்தில் புறக்கண்ணால் நான் கண்ட புதுச்சேரி… இரண்டுமே கண்ணில் நிழலாடுகிறது. அதை சுருக்கமாக பதிவு செய்வதில் மகிழ்கிறேன். அது, ஒரு குடியரசு நன்னாள்… அந்த நாளில் தான் முதன் முதலாக அந்த மண்ணில் அடியெடுத்து வைக்கும் பாக்கியம் எனக்கு வாய்த்தது….

(அனுபவம் இனிக்கும்…)

Sunday, October 2, 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 0

மனித வாழ்க்கையில் பயணம் தவிர்க்க முடியாதது. உள்ளங் கைக்குள் உலகை சுருக்கும் முன்பே யாதும் ஊரே என உலகுக்கு உரத்த குரலில் உரைத்தவன் தமிழன். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடல் கடந்து பயணம் செய்து அந்த அனுபவங்களை பதிவு செய்த வரலாறும் உண்டு.
ஒவ்வொருவரின் அனுபவமும் வெவ்வேறு. ஓரிரு நாட்களின் பயண அனுபவமே பல நூறு கதைகளை நமக்கு சொல்லும். ஐந்தாண்டு வாழ்க்கை அனுபவம் என்றால்...?

நீரில் போடும் கோலம் போன்றது மனித வாழ்க்கை என்பது ராமாயணத்தில் கும்பகர்ணன் வழியாக கம்பர் கூறும் வார்த்தைகள். அதுபோன்ற இந்த நாடோடி வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பரவச அனுபவம் புதுச்சேரி வாழ்க்கை. 

மனதில் தோன்றுவதை எழுதிச் செல்லும் இந்த வழிப்போக்கன் மனதுக்குள் புதுச்சேரி அனுபவங்களையும் எழுதும் எண்ணம் துளிர் விடுகிறது. ஈராயிரம் ஆண்டு பழமையான புதுச்சேரி பற்றி எழுதிய கரங்களால் சமகால புதுவை குறித்து குறிப்புகளை எழுத விழைகிறேன்.அனந்த ரங்க பிள்ளையின் நாட்குறிப்பாக இல்லாவிட்டாலும் எனக்குள் ஆனந்தம் தருவதாக இருக்கும் என நம்புகிறேன். உங்களுக்கும் கூட....

(அனுபவம் இனிக்கும்...)