Thursday 30 December 2021

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -25

 திராவிட இயக்கங்களின் முதல் நடிகர், இந்தியாவிலேயே முதன் முதலில் சட்டப் பேரவைக்குள் நுழைந்த முதலாவது நடிகரும் இவர்தான். இவர் எஸ்எஸ்ஆர் எனப்படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன். மதுரை அருகே சேடப்பட்டி தான் இவரது சொந்த ஊர். இவரது தந்தையும் பசும்பொன் முத்து ராமலிங்க தேவரும் நண்பர்கள். எஸ்எஸ்ஆருக்கு  ராஜேந்திரன் என்ற பெயரை வைத்தவரே தேவர்தான். 



சிவாஜி கணேசனை திரையுலகுக்கு தந்த பராசக்தி படம்தான்,  இவரையும் சினிமாவுக்கு அறிமுகம் செய்தது. அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் எம்ஜிஆர் ஹீரோவாக நடித்த 'பைத்தியக்காரன்' படத்தில் சிறிது தலை காட்டினாலும் வாய்ப்பின்றி இருந்தவருக்கு 'பராசக்தி' படத்தில் சிவாஜியின் சகோதரர்களில் ஒருவராக குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் வருவார். பர்மா குண்டு வீச்சில் ஒரு காலை இழந்தவராக எஸ்எஸ்ஆர் நடித்திருப்பார். இன்றளவும் பேசப்படும் எம்ஆர் ராதா நடித்த எவர்கிரீன் மூவி ரத்தக் கண்ணீர் படத்தில் அவரது நண்பராக படம் முழுவதும் வருபவர் எஸ்எஸ்ஆர். திராவிட இயக்கத்தில் எம்ஜிஆருக்கும் சீனியர். 


ஆரம்பத்தில் டிகேஎஸ் சகோதரர்கள் நாடக கம்பெனியில் நடிப்பு தொழிலை ஆரம்பித்த எஸ்எஸ் ஆருக்கு அப்பவே பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் நல்ல அறிமுகம் உண்டு. 



1951 முதல் 2001 வரை 50 ஆண்டு கால சினிமா வாழ்க்கைக்கு சொந்தக் காரரான இவர் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடிக்க படாதபாடு பட்டார். பின்னணி பாடகராக விரும்பி ஆண்டாள் என்ற படத்தில் 'இன்ப உலகில் மன்மத பூக்கள்...' என்ற ஒரு பாடலோடு முடிந்தது. அல்லி என்ற ஒரு படத்தையும் இயக்கினார். ஆனால், திரையுலகில் தத்தளித்த போதிலும் புராண கதைகளை கொண்ட படங்களில் எஸ்எஸ்ஆர் நடித்ததில்லை. 


ராமாயண கதையை முழுமையாக கூறும் என்டி ராமாராவ் ராமராக நடித்த சம்பூர்ண ராமாயணம் படத்தில் பரதன் வேடத்தில் நடிக்க கேட்டு இவர் மறுத்ததால் அதில் சிவாஜி கணேசன்  நடித்தார். அண்ணா, கருணாநிதி, கண்ணதாசன் போன்றவர்கள் எழுதிய வசனங்களையும் மிக தெளிவாக பேசுபவர். தூய தமிழ் வசன உச்சரிப்புக்கு சொந்தக்காரர். அதனாலேயே லட்சிய நடிகர் என்ற பட்டம் இவருக்கு உண்டு. 


இவர் நாயகனாக நடித்த படங்களில் முதலாளி, குமுதம், சிவகங்கை சீமை, பூம்புகார், தை பிறந்தால் வழி பிறக்கும் போன்றவை சூப்பர் ஹிட் ரகங்கள். முதலாளி படம் தான் எஸ்எஸ்ஆருக்கு ஹீரோ அந்தஸ்து அளித்தது. அந்த படத்தில்தான் நடிகை தேவிகா (நடிகை கனகாவின் தாயார்) அறிமுகம். 



முதலாளி படத்தில் 'ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே..., பாடல், குமுதம் படத்தில் மாமல்லபுரத்தின் பெருமை சொல்லும் 'கல்லிலே கலை வண்ணம் கண்டார்...' பாடல், தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில் டைட்டில் வரிகளிலே அமைந்த பாடல் எல்லாம் தமிழின் எவர்கிரீன் வரிசை பாடல்கள்.


சிலப்பதிகாரத்தை அடிப்படையாக கொண்டு கருணாநிதி கதை வசனம் எழுதிய பூம்புகார் படத்தில் இவர்தான் கோவலன். இதுபோல மருது சகோதரர்களின் சுதந்திர போராட்ட வரலாறை அடிப்படையாக கொண்ட சிவகங்கை சீமை படமும் எஸ்எஸ்ஆர் நடிப்புக்கு உதாரணம்.



கதாநாயகனாக படங்களில் நடித்தாலும் சிவாஜியுடன் மனோகரா, பராசக்தி ஆலயமணி, பச்சை விளக்கு உட்பட பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். அதுபோலவே எம்ஜிஆருடன் ராஜா தேசிங்கு, காஞ்சி தலைவன் போன்ற படங்களில் இணைந்து நடித்திருக்கிறார் எஸ்எஸ்ஆர். ஆனாலும் முக்கிய கதாபாத்திரம் இவருக்கு உண்டு. ஆலயமணி படத்தில் சரோஜாதேவியுடன் 'கண்ணான கண்ணனுக்கு அவசரமா..', என்ற ஒரு பாடலே இவருக்கு உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்ததோடு எஸ்எஸ்ஆர் நாடக மன்றத்தையும் நடத்தி அதன் மூலம் தனியாக நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறார். அந்த வகையில்  மனோரமாவை நடிப்புக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமையும் எஸ்எஸ்ஆரையே சேரும். 


கருப்பு வெள்ளை காலத்துக்கு பின் நடிப்புக்கு  இடைவெளி விட்ட எஸ்எஸ்ஆர், அதன்பிறகு 1990களில் தர்மா, சரத்குமாரின் ரிஷி, சிம்பு நடித்த தம், வடிவேலு நடித்த தீக்குச்சி திரைப்படங்களிலும் எஸ்எஸ்ஆர் நடித்திருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் அவர் ஒரு தீவிர அரசியல்வாதி.

அவரது அரசியல் பயணத்தையும் பார்க்கலாம். ஆரம்பம் முதலே தீவிர திராவிட இயக்க பற்றாளர். அண்ணாவின் மிக தீவிர ஆதரவாளர். எஸ்எஸ்ஆர் வீட்டின் கிரக பிரவேச விழாவில் தான் புதுமனை புகுவிழா என்ற வார்த்தையை அண்ணா அறிமுகம் செய்ததாகவும் சொல்வார்கள்.

முதன் முதலில் 1957 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கட்சி களம் இறங்கியபோது இவருக்கும் சீட் வழங்கினார்கள். ஆனால், தோல்வியடைந்தார். அதன் பிறகு 1962ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார் எஸ்எஸ்ஆர். அதன்படி இந்தியாவிலேயே சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்த முதலாவது நடிகர் என்ற பெருமையையும் பெற்றார். முதலாவது நடிகை என்றால் கே.பி.சுந்தராம்பாள்.


 நாடாளுமன்ற மாநிலங்களவை எம்பியாகவும் திமுக சார்பாக பதவி வகித்திருக்கிறார் எஸ்எஸ்ஆர். அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பித்தபோது அதில் இணைந்து 1980 சட்டப்பேரவை தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அந்த தேர்தலில் தமிழகத்திலேயே மிக அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர் எஸ்எஸ்ஆர் தான். இதே தொகுதியில் தான் அடுத்த தேர்தலில் 1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் போட்டியிட்டு அமெரிக்காவில் இருந்தபடியே வெற்றி பெற்றார். 



திராவிட இயக்க அரசியல்வாதி, எம்எல்ஏ, எம்பி, நடிகர் மட்டுமல்ல  தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும் எஸ்எஸ்ஆர் இருந்திருக்கிறார். இவருக்கு மூன்று மனைவிகள். பழம்பெரும் நடிகை விஜயகுமாரி இவரது மனைவிகளில் ஒருவர். சென்னையில் எஸ்எஸ்ஆர் பங்கஜம் என்ற தியேட்டர் அவரது மற்றொரு மனைவி பெயரில் அமைந்தது தான்.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Friday 24 December 2021

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -24

எம்ஜிஆரை தோல்வியே காணாத ஹாட்ரிக் முதல்வராக வெற்றிகரமான கட்சித் தலைவராக திரையுலக வசூல் சக்கரவர்த்தியாக பலருக்கும் தெரியும். ஆனால், அவர் ஒரு வெற்றிகரமான வசூலை வாரிக் குவித்த திரைப்பட இயக்குநர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?  மூன்று ஹிட் படங்களை அவர் இயக்கி இருக்கிறார். அதுவும் மிக நீண்ட இடைவெளிகளில்...

ஒரு திரைப்படத்தின் ஒட்டு மொத்த சுமையையும் சுமப்பவர் இயக்குநர் தான். ஆனால், நடிகர்கள் அளவுக்கு இயக்குநர்களை ரசிகர்கள் அறிவதில்லை. பல இயக்குநர்கள் வந்த வேகத்தில் காணாமல் போனதும் உண்டு. பிரபலம் ஆனாலும் பத்து ஆண்டுகளுக்கு பின்னும் ஹிட் தரும் இயக்குநர்கள் அபூர்வம். நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கி வெற்றி பெறுவது சாதாரணம் அல்ல. அந்த திறமை எம்ஜிஆரிடம் இருந்தது. 



நடிக்க வந்து இருபது ஆண்டுகள் கழித்து, நாயகனாகி 10 ஆண்டுக்கு பின் முதல் படத்தை இயக்கினார். அதையும் பிறர் பணத்தில் சோதித்து பார்க்க விரும்பாமல் தானே தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். அதுதான் எம்ஜிஆர். எம்ஜியார் பிக்சர்ஸ் என்ற பெயரில் அவர் தயாரித்து இயக்கிய முதல் படம் நாடோடி மன்னன். 1958லியே அதன் தயாரிப்பு செலவு 18 லட்ச ரூபாய். 


மூன்றரை மணி நேரத்துக்கு மேலாக நீளமான படம். கருப்பு வெள்ளை கோலோச்சிய காலத்தில் முதன் முதலாக கலர் தொழில் நுட்பம் அறிமுகம். இரட்டை வேட தொழில் நுட்பம். காங்கிரஸ் பெரும் செல்வாக்குடன் ஆட்சியில் இருந்த சமயத்தில் படத்தின் டைட்டில் லோகோவே திமுக கொடி. இந்த துணிச்சல் தான் எம்ஜிஆர். கண்ணதாசன் வசனம், பட்டுக் கோட்டையாரின் எவர்கிரீன் பாடல்கள் என படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி அறிமுகமானதும் இந்த படத்தில் தான். படத்தின் பிற்பகுதியில் சுமார் ஒரு மணி நேர கன்னித் தீவு காட்சிகள் எல்லாம் அன்றைய காலத்தில் மிக பிரமாண்டமானவை. கலர் புல்லானவை. பி.எஸ்.வீரப்பா, நம்பியார், எம்ஜி சக்கரபாணி என மூன்று வில்லன்கள். காமெடிக்கு சந்திரபாபு. இவர்கள் தவிர என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், பானுமதி, எம்.என்.ராஜம் என பிரபலங்களும் உண்டு. 



மிகப் பெரிய செலவில் படத்தை தயாரித்தபோது எம்ஜிஆர் சொன்ன வார்த்தைகள்.  "இந்த படம் வென்றால் நான் மன்னன். தோற்றால் நாடோடி". ஆனால், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது, இந்த படம். அதற்கு முன் ஒரு கோடி வசூலித்த படம் மதுரை வீரன். இலங்கையில் கூட, 17 தியேட்டர்களில் ஓடி வசூலை வாரி குவித்தது, நாடோடி மன்னன். நாடோடி மன்னனில் இயக்குநராக முத்திரை பதித்தார் எம்ஜிஆர். பெரிய பெரிய ஜாம்பவான்கள் நாடோடி மன்னனில் இருந்தாலும் எம்ஜிஆரை மட்டுமே நினைவில் கொண்டு வரும் படம் அது. 



மொத்தம் 10 பாடல்கள். செந்தமிழே வணக்கம்..., தூங்காதே தம்பி தூங்காதே... மாதிரியான பாடல்கள் எல்லாம் எவர்கிரீன். 60 ஆண்டுகள் கழித்து 2018ம் ஆண்டு மறு வெளியீட்டிலும் 25 நாட்களை கடந்து ஓடிய படம் நாடோடி மன்னன்.

(நாடோடி மன்னன் படத்தை 2018ல் மறுபடியும் திரையரங்கில் பார்த்து எழுதிய பதிவை இந்த லிங்கில் வாசிக்கலாம்)


http://thileeban81.blogspot.com/2018/04/blog-post.html?m=1  


நாடோடி மன்னன் வெளியாகி பதினைந்து ஆண்டுகளுக்கு பின் (1973) இயக்கிய படத்தையும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கி தான் ஒரு வெற்றிகரமான இயக்குனர் என்பதை பதிவு செய்திருக்கிறார் எம்ஜிஆர். அந்த படம் உலகம் சுற்றும் வாலிபன். 1973ல் வெளியான இந்த படமும் மிகப் பெரிய செலவில் உருவானதுதான். இதன் தயாரிப்பாளரும் எம்ஜிஆரே. இதுவும் இரட்டை வேடம். முதல் படத்தை மன்னர் கால கதையாக எடுத்து ஹிட் கொடுத்த எம்ஜிஆர், இந்த படத்தை ஜனரஞ்சக துப்பறியும் கிரைம் கதையாக ஹிட் அடித்தார். 



தமிழ் திரையுலகில் முதன் முதலாக வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட படமும் இதுவே. ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளில் படமாக்கப்பட்ட படம். லதா மஞ்சுளா என 2 நாயகிகளுடன் தாய்லாந்து நாயகியையும் அறிமுகம் செய்தார் எம்ஜிஆர். இந்த படத்தின் 11 பாடல்களுமே மறக்க முடியாத எவர்கிரீன் ரகங்கள் தான்.


சிரித்து வாழ வேண்டும்..., நிலவு ஒரு பெண்ணாகி..., தங்கத் தோணியிலே..., பச்சைக்கிளி முத்துச்சரம்..., லில்லி மலருக்கு கொண்டாட்டம்... - இந்த பாடல்கள் எல்லாம் இன்றும் கூட கேட்பவர்களை முணுமுணுக்க வைப்பவை. படத்தின் டைட்டில் ஸாங்கான நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..., எம்ஜிஆர் போலவே சாகா வரம் பெற்றது. 



படத்தில் அரசியல் பேசுவதை பார்த்திருப்போம். ஒரு படமே அரசியலாக்கப்பட்டு தடைகளை எதிர் கொண்டது முதன்முறையாக இந்த படம்தான். அப்போது தான் திமுகவில் இருந்து வெளியேறி அதிமுக ஆரம்பித்த தருணம். பட வெளியீட்டுக்கு அன்றைய ஆளும் திமுக அரசிடம் இருந்து ஏராளமான குடைச்சல்கள். போஸ்டர் ஒட்டுவதற்கு  தடை, தட்டி பேனர் வைக்க அனுமதி மறுப்பு. இதனால் படத்துக்கு ஸ்டிக்கர் பாணியிலான விளம்பரங்களை முதன் முதலில் அறிமுகம் செய்தார் எம்ஜிஆர். அதற்கு உதவியவர் நடிகர் பாண்டு. 


இது ஒருபுறம் இருக்க, ரிலீசுக்கு பின்னும் தியேட்டர்களுக்கு படப் பெட்டிகளை கொண்டு செல்வது தடுப்பு, அப்படியே சென்றாலும் தியேட்டர்களில் மின் வெட்டு, திமுகவினரின் மிரட்டல் இப்படி பல இடையூறுகள். அது பற்றியே தனியாக எழுதலாம். இவற்றை எல்லாம் தகர்த்து தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத ஹிட் வரிசையில் சேர்ந்தது உலகம் சுற்றும் வாலிபன். 15 ஆண்டுகள் கழித்தும் தனது இயக்குநர் திறமையை நிரூபித்தார் எம்ஜிஆர். 



இதுபோல அவர் முதல்வரான ஆண்டில் வெளியான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படமும் அவரது இயக்கமே. எம்ஜிஆர் ரசிகர்களாலும் அதிமுகவின் ஆரம்ப கால விசுவாசிகளாலும் இந்த படத்தையும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. ரஜினி, கமல் என அடுத்த தலைமுறை தலையெடுத்த நேரத்திலும் இயக்குநராக முத்திரை பதித்தார் எம்ஜிஆர்.


அவருக்குள் இருந்த இயக்குநர் திறமை தான், அவரது பிற படங்களிலும் பளிச்சிட்டது. மற்ற நடிகர்களின் படங்களை விட எம்ஜிஆர் படத்தின் பாடல், காட்சி, வசனம், ஔிப்பதிவு, ஸ்டண்ட் போன்றவை வித்தியாசம் தெரியும்.  அதற்கு அவரும் காரணம்.




இந்த மூன்று படங்கள் மட்டுமில்லாமல் 1969ல் வெளியான அடிமைப்பெண் படமும் எம்ஜிஆரின் தயாரிப்பு தான். ஆனால் இயக்குநர் வேறு. இதிலும் எம்ஜிஆர் இரட்டை வேடம். நாயகி ஜெயலிதாவும் இரட்டை வேடம். தமிழ் திரைக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியனை இந்த படத்தில்தான் ஆயிரம் நிலவே வா பாடல் மூலம் அறிமுகம் செய்தார். ஜெயலலிதா முதன் முதலில் பாடல் பாடிய படமும் அடிமைப்பெண் தான். ராஜஸ்தான் பாலைவனத்தில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. எம்ஜிஆர் சொந்தமாக வளர்த்த சிங்கம் ஒன்றும் இந்த படத்தின் சண்டைக் காட்சியில் நடித்திருக்கும். எம்ஜிஆர் தயாரித்த இந்த திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் படம் தான்.

ஆக.. 

நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் தமிழ் திரையுலகில் வெற்றிக் கொடியை நாட்டியவர், எம்ஜிஆர். 

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Monday 20 December 2021

ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனமன்று எங்கள் ஊரில் உள்ள கோயில் விசேஷ நிகழ்வு படங்களை ஊர் வாட்ஸ்அப் குரூப்பில் பார்த்ததும் நினைவுகளுக்குள் மூழ்கிப் போனேன்...

பள்ளி நாட்களில் மார்கழி மாத அதிகாலை பனித் தூறலில் நனைந்தபடியே, ஊருக்கு அருகில் உள்ள வயல்வெளி கிணற்றில் குளிக்கச் செல்வோம். குளித்து முடித்து வீடு திரும்பி நல்ல உடை அணிந்து, எங்கள் ஊரின் பெரிய கோயிலுக்கு செல்வது வழக்கம்.  



மார்கழி மாதம் முழுவதும் கோயிலின் மூன்று பிரகாரங்களை (தேரோடும் வீதி, சப்பரங்கள் வலம் வரும் வீதி, கோயிலின் உள் பிரகாரம்) சுற்றி வந்து தேவார திரட்டில் இருந்து பஜனை பாடல்களை பாடிச் செல்வோம். அப்படித்தான், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் எல்லாம் எனக்கு அறிமுகம் ஆனார்கள். 6 மணிக்கு தொடங்கும் பஜனை ஊர்வலம், 8 மணி வரை நீடிக்கும். அதன்பிறகு, வீடு திரும்பி, பள்ளி பயணம் ஆரம்பமாகும்.


மார்கழி திருவாதிரை திருநாளுக்கு 10 நாட்களுக்கு முன்பாக பஜனை பாடல்கள் மாறும். தேவார பாடல்களுக்கு பதிலாக திருவெம்பாவை பாடல்களை பாடுவோம். ஆருத்திரா தரிசனம் எனப்படும் திருவாதிரை திருநாளுக்கு முந்தைய 9வது நாள் தொடங்கி திருவெம்பாவை நோன்பு காலம் என்பதெல்லாம் பின்னாளில் அறிந்து கொண்ட தகவல். 



10வது நாளில் எங்கள் ஊர் வைத்தியலிங்க சுவாமி கோயிலில் ஆருத்திரா தரிசனம் விழா களை கட்டும். அன்றைய தினம்,  அதிகாலை எழுந்து கிணறுகளில் உள்ள மோட்டார் பம்பு செட்டில் குளித்து விட்டு 4 மணிக்கெல்லாம் கோயிலில் ஆஜராகி விடுவோம். ஆருத்திரா தரிசன தினத்தன்று பிரம்ம முகூர்த்த வேளையில் (4.30 மணி முதல் 6 மணி) அனைத்து தேவர்களும் சிவனை தரிசனம் செய்ய வருவார்கள் என்பது ஐதீகம். 



சிவபெருமானை பிடிக்காத சிலர் ஒன்று சேர்ந்து அவர் மீது மதம் பிடித்த யானை, முயலகன் என்ற அரக்கன், உடுக்கை, தீப் பிழம்பு போன்றவற்றை ஏவி விட்டதாகவும் அவற்றை சிவன் லாவகமாக பிடித்ததோடு முயலகனை தனது வலது காலின் கீழ் போட்டு மிதித்துக் கொண்டு உடுக்கை ஏந்தி, தீப்பிழம்பாக தனது செஞ்சடையை விரித்து இடது காலை தூக்கியபடி, அந்த முனிவர்கள் முன் நடனமாடிய தினமே ஆருத்திரா தரிசன நாள்  என்றும் கூறுவது உண்டு. 



அதிகாலை 5 மணி முதல் பெரிய கோயிலின் கொடி மரம் அருகில் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் ஆரம்பமாகும். பல்வேறு விதமான அடுக்கு விளக்குகளில் தீபாராதனை (ஆரத்தி, மகா ஆரத்தி) முடிந்து திருவெம்பாவையின் 21 பாடல்களும் பாடப்படும். அதன்பிறகு நடராஜர் அலங்கரித்த சப்பரத்தில் நகர்வலம் வவருவார். மார்கழி மாத பனியில், அதிகாலை வேளையில் விழித்தெழுந்து பிரம்ம முகூர்த்த வேளையில் கோயிலில் தரிசனம் காண்பது என்பது வார்த்தைகளால் எளிதில் விவரிக்க முடியாத பேரனுபவம். 

திருவாதிரை விழா எனப்படும் ஆருத்திரா தரிசனத்தின் கூடுதல் விசேஷம் களி. கண்டங்களி என்றும் அதை கூறுவோம். சரியாக சொல்வது என்றால் சர்க்கரை பொங்கலின் மாறுபட்ட வடிவமாக அந்த பிரசாதம் இருக்கும். 

ஆருத்திரா தரிசன நாளில் சேந்தனார் என்ற தொழிலாளியிடம் சிவ பெருமான் களி வாங்கி சாப்பிட்டதாகவும் அதை நினைவு கூறும் விதத்தில், ஆருத்திரா தரிசன நாளில் இறைவனுக்கு களி படைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

பள்ளிப் பருவம் முடிந்த பிறகு, மார்கழி பஜனைக்கு செல்வது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இப்போதெல்லாம் அந்த தரிசனத்தை முற்றிலுமாக தவற விடுவதாகவே கருதுகிறேன். மார்கழி மாத அதிகாலை 4 மணியானது நள்ளிரவு நேரமாகவே தெரிகிறது. 

வேலை அப்படி என்று மனதுக்குள் சொல்லி சமாளித்தாலும் எல்லாம் சிவன் செயல்...  அவன் அருளாலே அவன் தாள் பணிய முடியும்...



#நெல்லை_ரவீந்திரன்

Thursday 9 December 2021

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்...-23

தமிழ் சினிமாவின் ஆரம்ப கால நாயகர்கள் பலர், பின்னாளில் குணசித்திரம் காமெடி என களம் இறங்க தயங்கியதில்லை. அவர்களில் ஒருவர் டி.ஆர். ராமச்சந்திரன். நாயகிகளுக்கே உரித்தான முட்டை கண்கள், அப்பாவியான தோற்றம், பார்வை எல்லாம் நாயகனான இவருக்கு பிளஸ்.



திருச்சியை பூர்வீகமாக கொண்ட  டி.ஆர். ராமச்சந்திரன், படிப்பில் நாட்டம் இல்லாததால் சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆண்டு 1937. முதல் படம் நந்த குமார். அதன் பிறகு 30 ஆண்டுகளில் 150 படங்களில் நடித்திருக்கிறார்.


ஆரம்பத்தில் கதாநாயகனாக சினிமா வாழ்வை துவக்கிய இவர் வைஜயந்திமாலா, சாவித்திரி, அஞ்சலி தேவி என அன்றைய முன்னணி நாயகிகளுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். நகைச்சுவை நடிகர்களுக்கு ஏற்றவாறு கதையை எழுதி கதாநாயகனாக்கும் டிரெண்ட் இவர் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் ஆரம்பித்தது. தமிழ் சினிமாவின் முதல் காமெடி கதாநாயகன் இவரே. இவர் நடிப்பில் 1942ல் வெளியான 'சபாபதி' படம் அதற்கு சிறந்த உதாரணம். 1967ல் வெளியான சாது மிரண்டால் படமும் அப்படித்தான்.



ஏவி மெய்யப்ப செட்டியார் தயாரித்து இயக்கிய படம் சபாபதி. அன்றைய நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினத்துடன் 

(எனது 3வது பதிவு இவர் பற்றியது தான்...

http://thileeban81.blogspot.com/2020/07/3.html) 

சேர்ந்து இந்த படத்தில் டிஆர் ராமச்சந்திரன் அடிக்கும் காமெடி கலாட்டாவை இன்றும் கூட ரசிக்கலாம். இரண்டாம் உலகப் போரால் மன இறுக்கத்தில் இருந்த மக்களுக்காகவே ஏவிஎம் கொடுத்த முழு நீள நகைச்சுவைப் படம். அது மட்டுமல்ல,  டிஆர் ராமச்சந்திரனுக்கு நல்ல புகழ் வெளிச்சத்தையும் தந்தது.



அதன் பிறகு நாம் இருவர், திவான் பகதூர், ஸ்ரீவள்ளி, வாழ்க்கை உட்பட 25 படங்களில் கதாநாயகனாக டி.ஆர். ராமச்சந்திரன் நடித்திருக்கிறார். இதில் நாம் இருவர், ஸ்ரீவள்ளி படங்கள் எல்லாம் ஏவிஎம் இயக்கியவை. 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' என்ற படத்தில் சிவாஜி கணேசனே இவருக்கு அடுத்த செகண்ட் ஹீரோ என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். புனர் ஜென்மம், மீண்ட சொர்க்கம், இருவர் உள்ளம், வண்ணக் கிளி என இவர் நடித்த ஏராளமான ஹிட் படங்களை பட்டியலிடலாம்.

பொன்வயல், (இந்த படத்தில் தான் பாடகராக சீர்காழி கோவிந்தராஜன் அறிமுகமானார்) கோமதியின் காதலன் என ஒரு சில படங்களை தயாரித்தும் இருக்கிறார், டிஆர் ராமச்சந்திரன். நடிப்பு, தயாரிப்பு மட்டுமல்ல... சுமார் 50 பாடல்களையும் பாடி இருக்கிறார். அன்றைய நாளில் இருந்த தொழில் நுட்பத்தில் நடிகர்களே பாடவும் வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளலாம்.

வாழ்க்கை படத்தில் 'செந்தமிழும் சுவையும் போலவே நம் காதலால் சுகம் பலவே பெற வாழ்வோம்...', என எம்எஸ் ராஜேஸ்வரியுடன் பாடல்..

பொன்வயல் படத்தில் 'நம்ம கல்யாணம் ரொம்ப நல்லா நடக்கோணும்...' என்ற பாடல் என அவர் பாடிய பாடல்கள் ஏராளம். 

நாயகன், தயாரிப்பாளர், பாடகர் என இருந்தாலும் ஈகோ பார்க்காமல் குணச்சித்திரம், நகைச்சுவை என தனது திரைப் பாதையை திருப்பிக் கொண்டார். அடுத்த வீட்டுப் பெண் படத்தில் தங்கவேலுவுடன் சேர்ந்து 'கண்ணாலே பேசி பேசி கொல்லாதே..., பாடலில் அடிக்கும் லூட்டி இன்றளவும் ரசிக்கத் தக்கது.பெரிய கண்களை உருட்டிக் கொண்டு அப்பாவியாக இவர் செய்யும் கோமாளி சேட்டைகளை மறக்கவே முடியாது. 

எம்ஜிஆருடன் பாக்தாத் திருடன் படத்தில் நண்பராக நகைச்சுவை வேடத்தில் நடித்ததோடு 15 ஆண்டுகள் கழித்து எம்ஜிஆரின் அன்பே வா படத்தில் நாயகியின் தந்தையாகவும் கலக்கி இருப்பார். சிவாஜியுடன் தில்லானா மோகனாம்பாள், படிக்காத மேதை, ஆலயமணி, தங்கமலை ரகசியம் என ஏராளமான படங்களில் குணசித்திரம் பிளஸ் காமடியனாக டிஆர் ராமச்சந்திரன் நடித்திருக்கிறார். 


ஏவிஎம் பேனரில் எம்ஜிஆர் நடித்த ஒரே படமான அன்பே வா படத்தில் சரோஜாதேவியின் தந்தையாக நடித்திருக்கும் டிஆர் ராமச்சந்திரன், புண்ணாக்கு புண்ணியக்கோடி கேரக்டரில் நாகேஷுடன் அடிக்கும் லூட்டி கலகலப்பின் உச்சம் சபாபதியில் இருந்த அதே காமெடி நடிப்பு 25 ஆண்டுகளுக்கு பின்னும் அவருக்குள் இருந்தது. அதே காலகட்டத்தில் 1966ம் ஆண்டு வெளியான சாது மிரண்டால் படத்தில் நாகேஷூடன் சேர்ந்து கலக்கி இருப்பார். 

சபாபதி (1942) படத்தையும் அன்பே வா, சாது மிரண்டால், (1966) இந்த இரண்டு படங்களையும் இப்போதும் யூ டியுப்பில் பார்த்தால் கால் நூற்றாண்டு கடந்தும் அவரது குறையாத காமெடி நடிப்பை வியந்து ரசிக்கலாம். 


1970களுக்கு பின் சினிமாவில் இருந்து ஒதுங்கிய டிஆர் ராமச்சந்திரன், அமெரிக்காவில் தனது மகள்களுடன் செட்டிலான நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலேயே இறந்து விட்டார். 



நாகேஷ், தங்கவேலுவுக்கு முந்தைய தலைமுறை காமெடி நாயகனான டிஆர் ராமச்சந்திரன்தான் தமிழ் சினிமாவின் முதல் காமெடி கதாநாயகன். அந்த வகையில், தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்கள் வரிசையில் டிஆர் ராமச்சந்திரனுக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு

(பவளங்கள் ஜொலிக்கும்)

# நெல்லை ரவீந்திரன்

Sunday 5 December 2021

ஜெ ஜெயலலிதா எனும் நான்...


சாதனைகளின் உச்சத்தையும் சறுக்கல்களின் மிச்சத்தையும் கூட விட்டு வைக்காமல் பார்த்த தைரியசாலி. 

நாயகியாக நடித்த முதல் படத்திலேயே 3000 ரூபாய் சம்பளம் (இன்றைய தேதியில் ஒன்றே கால் லட்சம்) வாங்கியவர். பதினைந்தே ஆண்டுகளில் 125 படங்களில் கதைநாயகி. அதில் 95% சூப்பர் ஹிட். ஒரே ஆண்டில் பத்து சூப்பர் டூப்பர் ஹிட். எம்ஜிஆர், என்டிஆர், சிவாஜி தொடங்கி அத்தனை முன்னணி நாயகர்களுடனும் நடித்தவர்.

ராஜ்யசபாவில் அண்ணா அமர்ந்த இருக்கை. ஜெயலலிதாவின் முதலாவது தேர்தல் சின்னமும் (சேவல்) அண்ணாவின் முதலாவது தேர்தல் சின்னமும் ஒன்றுதான். தமிழகத்தின் ஒரே பெண் எதிர்க்கட்சி தலைவர்.  தமிழகத்தின் மிக இளம் வயது முதல்வரும் இவரே.

தமிழகத்தின் முதலாவது மிக வலிமையான எதிர்க்கட்சி என்ற  பெருமையை தனது கட்சிக்கு பெற்று தந்தவர். மக்களவையில் மிகப் பெரிய எண்ணிக்கையுடன் அமர்ந்த முதலாவது மாநிலக் கட்சி என்ற சாதனையும் அவரது உழைப்பின் பலனே.

2011, 2014, 2016 என ஹாட்ரிக் தேர்தல் வெற்றி பெற்றவர். 22 ஆண்டுகளுக்கு பின் ஆளுங்கட்சியே தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய சாதனைக்கு சொந்தக்காரர். 234 சட்டப்பேரவை தொகுதி, 39 நாடாளுமன்ற தொகுதி என அனைத்திலும் தனது சின்னத்தையே நிறுத்தி, வெற்றியை கண்ட தைரியசாலி.

ஏமாற்றங்கள் நிறைந்த தனிப்பட்ட வாழ்க்கை. மிக க(கொ)டுமையான தனி நபர் விமர்சனம். அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள்.  எம்எல்ஏ கூட ஆக முடியாத அளவுக்கு தேர்தல் தோல்வியை கண்ட  ஒரே தமிழக முதல்வரும் அவரே. முதலமைச்சராகவே சிறை சென்ற ஒரே முதல்வரும் அவரே. வழக்குகளால் மூன்று முறை பதவி இழப்பு. 

இப்படி வெற்றி என்றால் சிகரத்தின் முகட்டையும் தோல்வி என்றால் பாதாள உலகையும் பார்த்த போதிலும் கூட தன்னம்பிக்கை,  துணிச்சலை சிறிதும் கைவிடாத தைரிய லட்சுமி. 

அரசியல் மட்டுமல்ல, எந்த துறை சார்ந்த பெண்களாக இருந்தாலும் சரி.  அவர்களுக்கு  இந்த இரும்பு தாரகையின் இறுதி நொடி வரையிலான ஒவ்வொரு  அத்தியாயங்களும்  நல்லதொரு பாடங்களே...

கலைச் செல்வி, சிந்தனை செல்வி, புரட்சி செல்வி, புரட்சி தலைவி, அம்மா...

எதிரிகளையும் வியக்கச் செய்யும் இந்த வளர்ச்சியை அவ்வளவு  சாதாரணமாக கருதி கடந்து விட முடியாது.

மிஸ் யூ அம்மா...


மீள்..

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 22

ஒன்றே கால் ஆண்டு இடைவேளைக்கு பின், மீண்டும் தமிழ் சினிமா பொக்கிஷத்தில் பவளங்களை தேடுவோம். அதை மங்களகரமாக துவக்கலாமா? 

திருமணம் போன்ற விசேஷ வீடுகள் என்றாலும் கோயில் விழாக்கள் என்றாலும் மைக் செட் கட்டியதும் முதலில் ஒலிப்பது இவரது குரல்தான். 'விநாயகனே வினை தீர்ப்பவனே...' தொடங்கி இவரது ஏராளமான பக்திப் பாடல்களை பெரும்பாலானோர் கேட்டிருப்போம். அவர்தான் சீர்காழி கோவிந்த ராஜன். பெயரை கேட்டதுமே அவரது கணீர் குரல் காதில் ஒலிப்பதை தவிர்க்க முடியாது. கூடவே அவரது ஆன்மீக பிம்பமும் மட்டுமே. 


இசைக் கல்லூரியில் படித்து கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றிருந்த சீர்காழி கோவிந்த ராஜனுக்கு சென்னை பல்கலை கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்திருக்கிறது. பார்வதி தேவியிடம் ஞானப்பால் அருந்திய திருஞான சம்பந்தர் அவதரித்த சீர்காழியில் பிறந்த கோவிந்த ராஜனை பக்தி பாடல்கள் பாடுபவர்கள் வரிசையிலேயே அனைவரும் நினைத்திருப்போம். ஆனால் தமிழ் சினிமாவில் 30 ஆண்டு காலம் பின்னணி பாடகர், நடிகர் என உலா வந்தவர். 

அவரது சினிமா வாழ்க்கைப் பயணத்தை பார்க்கலாம். தனது 19வது வயதில் பாட ஆரம்பித்த அவர், தமிழ் திரையுலகில் அறிமுகமான ஆண்டு 1954. படம் "பொன் வயல்". கல்கி கதையை அடிப்படையாக கொண்டு அன்றைய பிரபல நடிகர் டிஆர் ராமச்சந்திரன் தயாரித்த இந்த படத்தில் மூன்று பாடல்களை பாடினார் சீர்காழி.

1950-களில் ஆரம்பித்து 1980-கள் வரை 35 ஆண்டுகள் வரை தமிழ் சினிமாவில் கோலோச்சியவர் சீர்காழி கோவிந்த ராஜன். இவரது கணீர் குரல் பல நடிகர்களுக்கு ஒத்துப் போகாத நிலையிலும் கூட எம்ஜிஆர், சிவாஜி, என்டிஆர், ஜெமினி, எஸ்எஸ்ஆர் என முன்னணி நடிகர்கள் துவங்கி நாகேஷ் போன்றவர்கள் வரை குரல் கொடுத்திருக்கிறார்.


எம்ஜிஆருக்காக டிஎம்எஸ் குரல் நிரந்தரமாகும் வரை, சீர்காழி கோவிந்தராஜன் தான் நிறைய படங்களில் அவருக்கு குரல் கொடுத்திருக்கிறார். நல்லவன் வாழ்வான் படத்தில்  'குற்றால அருவியில குளிச்சது போல் இருக்குதா..',  'சிரிக்கின்றாள் அவள் சிரிக்கின்றாள்...', நாடோடி மன்னன் படத்தில் உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல்..., சக்கரவர்த்தி திருமகள் படத்தில் மனிதன் பிறக்கும் போது பிறந்த குணம் போகப் போக மாறுது.. 

அதே படத்தில் என்எஸ் கிருஷ்ணனுடன் சேர்ந்து லாவணி வகையிலான டைப்பில் பாடிய 'உலகத்திலே மிக பயங்கரமான ஆயுதம் எது..' மாதிரியான பாடல்கள் எவர்கிரீன்.

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..., நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற... என்பது போன்ற எம்ஜிஆர் பாடல்களை கேட்கும்போது டிஎம்எஸ் குரல் போலவே எம்ஜிஆருக்கு அரசியல் அடித்தளம் அமைத்துத் தந்தது இவரது குரலும் தான் என்றே தோன்றும். 

எஸ்எஸ்ஆருக்காக பாடிய 'கல்லிலே கலை வண்ணம் கண்டான்...' மாதிரியான பாடல்கள் காதல் கீதங்களில் சாகா வரம் பெற்றவை. ரம்பையின் காதல் படத்தில் பாடிய, 'சமரசம் உலாவும் இடமே..' நீர்க்குமிழி படத்தில் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா ...' போன்ற  பாடல்கள் மனித வாழ்க்கை பற்றிய வரிசையில் அழியாத இடம் பிடித்ததாகும். 

டிஎம்எஸ், ஸ்ரீனிவாஸ், திருச்சி லோகநாதன், டிஆர் மகாலிங்கம், லீலா, ஜிக்கி, சுசீலா, எல்ஆர் ஈஸ்வரி, பானுமதி, மனோரமா என இவர் இணைந்து பாடிய பாடகர் பாடகிகள் ஏராளம். 

சந்திரோதயம் படத்தில் நாகேஷுக்காக பாடிய 'காசிக்கு போகும் சன்னியாசி...', 'ஒம் மேல கொண்ட ஆச உத்தமியே நித்தம் உண்டு...', 'ஏபிசிடி படிக்கிறேன் ஈஎப்ஜிஎச் எழுதுறேன்..., இப்படியாக காதல் காமெடி சோகம் என தமிழ் சினிமாவில் சீர்காழி கோவிந்த ராஜன்  பாடிய பாடல்கள் ஏராளம். 

பிரபல பின்னணி பாடகர்களுக்கு சற்றும் குறைந்தது இல்லை, இவரது சினிமா கிராஃபும். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கும் சீர்காழி கோவிந்த ராஜன், நடிகரும் கூட...


அவரை நடிகராக அறிமுகம் செய்தவர் ஆன்மிக இயக்குநர் ஏபி நாகராஜன் (திருவிளையாடல் படத்தில் நக்கீரராக வருவாரே அவரே தான்). அந்த படம் 1967ல் வெளியான கந்தன் கருணை. அந்த படத்தில் சீர்காழி கோவிந்த ராஜனுக்கு நக்கீரர் வேடம். அதில் அவர் பாடி நடித்த 'அறுபடை வீடு கொண்ட திரு முருகா...' பாடலை இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாது. 

அதன் பிறகு சிவாஜி கணேசனுடன் ராஜராஜ சோழன், திருமலை தென்குமரி, தசாவதாரம் என பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் சீர்காழி கோவிந்தராஜன்.


1972ல் வெளியான அகத்தியர் படத்தில் கதையின் நாயகன் அகத்தியர் அவரே தான். குறு முனி வேடத்தில் அவர் நடித்து பாடிய, உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்... பாடல் அமரத்துவம் பெற்றது. 

பத்மஸ்ரீ, டாக்டர், இசைமாமணி என 35 ஆண்டுகளில் நிறைவான புகழை வென்ற சீர்காழி கோவிந்த ராஜனால் எமனை வெல்ல முடியவில்லை. அவரது 55 வயதிலேயே காலம் அவரை அழைத்துச் சென்று விட்டது. 

ரங்காராவ், டிஎஸ் பாலையா, என்எஸ் கிருஷ்ணன் வரிசையில், புகழ் உச்சத்தில் இருந்தபோது ஐம்பதுகளிலேயே விண்ணுலகம் சென்று விட்டார், சீர்காழி கோவிந்த ராஜன்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்