Friday 30 June 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -55

 "எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்... அது எதற்கோ..."

"மேகமே... மேகமே..." என காற்றில் கலந்த கலைவாணி...


19 மொழிகளில் பத்தாயிரம் பாடல்கள். ஆயிரத்துக்கும் அதிகமான தனி ஆல்பம் பாடல்கள். குஜராத் (1975), ஒடிஷா (1984), ஆந்திரா (1979), தமிழ்நாடு (1979) என நான்கு மாநிலங்களில் அரசு விருது. பத்மபூஷண். இப்படி சாதனைகளுக்கு சொந்தக்காரரான கலைவாணி என்கிற வாணி ஜெயராம், வேலூரில் சாஸ்த்ரீய இசை குடும்பத்தில் பிறந்து சென்னையில் படித்து மும்பையில் பாடகி ஆனவர்.



கல்லூரி முடித்து பாரத ஸ்டேட் வங்கி பணியில் சேர்ந்து மணமாகி ஐதராபாத்தில் இருந்தபோது அவரது இசை ஆர்வத்தை அறிந்த கணவர் ஜெயராம், மும்பைக்கு குடி பெயர்ந்து  இந்துஸ்தானி படிக்க வைத்து இசை பயணத்துக்கு வழி காட்டினார். தனது கணவரின் பெயரையும் சேர்த்து கலைவாணி,  வாணி ஜெயராம் ஆனார்.



1969ல் இசைக் கச்சேரியில் பாடியபோது இசையமைப்பாளர் வசந்த் தேசாய் அவரை கவனித்து தனது மராத்தி மொழி பாடல் ஆல்பத்தில் பாட வைத்தார். அப்படியே இந்தி படத்திலும் பின்னணி பாடகியாக்கினார். 1971ல் வெளியான அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் நடித்த 'GUDDY' தான் அவரது முதல் படம். வாணி ஜெயராம் பாடிய முதல் திரைப்பாடலே ("போலே ரே பாபிஹரா...") அந்த ஆண்டின் சிறந்த பாடல். இந்தியில் ஆர்.டி.பர்மன் பண்டிட் ரவி சங்கர் போன்ற பிரபலங்களின் இசையில் பாடியவர் அப்படியே தெலுங்கில் அடியெடுத்து வைத்தார்.

தெலுங்கில் 1973ல் வெளியான 'அபிமான வந்துலு' படத்தில் முதல் பாடல். தெலுங்கில் இயக்குநர் கே.விஸ்வநாத் மற்றும் திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் கூட்டணியில் இவரது பாடல்கள் ஹிட் ரகம். அதற்கு 'சங்கராபரணம்' படத்தின் எவர் கிரீன் பாடலான "மானஸ ஸங்கரரே..." உதாரணம்.



அதன்பிறகு, தமிழில் என்ட்ரி கொடுத்த வாணி ஜெயராமின் முதல் பாடல் கண்ணதாசன் எழுதி சங்கர் கணேஷ் இசையமைத்த 'வீட்டுக்கு வந்த மருமகள்' படத்தின் "ஓரிடம் உன்னிடம்... என் தேவையை கேட்பது யாரிடம்..." பாடல். 

ஆனால், தமிழ் ரசிகர்களுக்கு அவரை அறிமுகம் செய்தது,  1974ல் வெளியான 'தீர்க்க சுமங்கலி' படத்தின் "மல்லிகை  என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா..." பாடல் தான். அந்த ஆண்டு 'எங்கம்மா சபதம்' படத்தில் பாடியதை தொடர்ந்து அதன் இசையமைப்பாளர் விஜய பாஸ்கர் கன்னடத்திலும் வாணி ஜெயராமை அறிமுகம் செய்தார்.

1970களின் மத்தியில் துவக்கி 1980களின் பிற்பகுதி வரை தமிழில் சுசீலா, ஜானகி குரல்களுக்கு நிகராக  இவர் குரலும் ஒலித்தது. பலரும் இவர் பாடிய பாடல்களை ஜானகி என்றே  நினைத்திருப்பார்கள். வாணியை பெண் எஸ்பிபி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு குரலில் லாவகம், உச்சரிப்பு, சுத்தம் இருக்கும். 80களின் வானொலி ரசிகர்களால் இவரது பாடல்களை மறக்கவே முடியாது.


"எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது எந்த தேவதையின் குரலோ..."

"நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நெய் மணக்கும் கத்தரிக்கா...", 

"நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்..."

"இன்று சொர்கத்தின் திறப்பு விழா.. புது சோலைக்கு வசந்த விழா..."

""பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா..."

"மேகமே மேகமே பால் நிலா தேயுதே தேகமே தேயினும்...", 

"நான் ஒன்ன நெனைச்சேன் நீ என்ன நெனைச்சேன் தன்னாலே ரெண்டு ஒண்ணாச்சி...",  

"மழைக்கால மேகம் ஒன்று.."

"ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது..." 

"அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே..."

"மூங்கில் இலை காடுகளே முத்து மணி மேகங்களே பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்.."

"சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்கார பூங்குயிலே..."


எம்ஜிஆர், ஜெயலலிதா, சிவாஜி, கமல், ரஜினி, பாக்யராஜ், ராம்கி படங்கள் வரை பாடியிருக்கும் அவரது பாடல்களை பட்டி(யலு)க்குள் அடைக்க முடியாது. 

1990களின் துவக்கத்திலேயே பாடுவதை குறைத்தாலும் முருகன், அம்மன், கண்ணன் பக்தி பாடல்கள் பஜனைகள், கீதா கோவிந்தம், இசை ஆல்பங்கள் அதிகம் பாடி இருக்கிறார். 

1980களில்  ஈழ போர் உச்சத்தில் இருந்தபோது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக பாடியவர்.

மராத்தி, இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், குஜராத்தி, மார்வாரி, பெங்காளி, ஒரியா, போஜ்புரி, ராஜஸ்தானி, உருது, பஞ்சாபி, துளு, படகா, சமஸ்கிருதம், ஹர்யான்வி, ஆங்கிலம் என பாடியவர். 

"எல்லா மொழிகளிலும் அதன் த்வனி தவறாமல் உச்சரிக்கும் வாணி ஒரு ஆயுள் கால பாடகி..." இது வாணி ஜெயராம் பற்றி கவியரசர் கண்ணதாசன் சொன்ன வார்த்தைகள். 

"முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன்..." என பாடியவர் உயரிய பத்ம பூஷண் விருது அறிவிப்பை கேட்டும் அதை கைகளில் பெறாமலேயே தைப்பூச நாளில் முருகனிடம் சென்று விட்டார்.

#நெல்லை_ரவீந்திரன்

Sunday 25 June 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -54

 தமிழ் படங்களை தாண்டி பிற மொழி படங்களை பார்க்கும் ஆர்வம் சாதாரணமாக வராது. அந்தந்த மொழிகளில் யாரேனும் ஒருவர் அல்லது ஒரு சிலர் நம்மை கவர்ந்தால்தான் ஆர்வம் வரும். அப்படி மலையாளத்தில் என்னை கவர்ந்தவர் மம்முட்டி. வழக்கறிஞர் முகமது குட்டி, மம்முட்டியாக திரையுலகில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகள் கடந்து விட்டது.



1971ல் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நுழைந்த மம்முட்டி, அடுத்த பத்து ஆண்டுகளில் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார். 1980களில் தொடங்கிய திரை ஆட்டம், அவரது மகன் துல்கர் சல்மான் வருகைக்கு பின்னும் தொடர்கிறது.


துப்பறியும் கேரக்டர் மம்முட்டியின் ஸ்பெஷால். அடிதடி, ஆக்ரோஷம், அனல் பறக்கும் சண்டை எதுவுமே இல்லாமல் உண்மையை வரவழைக்கும் கேரக்டர். சுருக்கமாக சொன்னால் சிபிஐ அதிகாரி. அவரை அடையாளப்படுத்தியதும் அதுதான் (ஒரு சிபிஐ டைரி). அதற்காக ஒரு வட்டத்துக்குள் அடக்கி விட முடியாது. அம்பேத்கர் வேடமெல்லாம் அவரது வாழ்நாள் சாதனை.



மலையாளம் தாண்டி தமிழ் உட்பட பல படங்களில் அதகளம் செய்திருக்கிறார். தமிழில் 1990களில் அறிமுகமான மம்முட்டியின் முதல் படம் 'மவுனம் சம்மதம்'. அமலா ஜோடி. வில்லனாக நாகேஷ். நடிகர் சரத்குமார் அதில் ஜூனியர். கொலை வழக்கில் வக்கீலாக ஆஜராகி துப்பறியும் வேடத்தில் பின்னி இருப்பார். அந்த படத்தில் எதுகை மோனையோடு ஜதி லயம் கூட்டும் 'கல்யாண தேன் நிலா, காய்ச்சாத பால் நிலா...' பாடல் இப்போதும் அனைவரையும் முணுமுணுக்க வைக்கும்.


அடுத்து பாலசந்தரின் 'அழகன்'. அதிக படிப்பறிவு இல்லாத சாதாரண ஓட்டல் ஓனர்.  வீட்டில் ஏராளமான குழந்தைகளை வளர்க்கும் மனைவியை இழந்த நபர். பானுப்ரியா, மதுபாலா என பல நாயகிகள்  கொண்ட இந்த படத்தில் மம்முட்டியை தவிர வேறு யாரையும் பொருத்தி பார்க்க முடியாது. மலையாளம் கலந்து பேசும் தமிழ், அலட்டாமல் சிரமப்படாமல் வெகு இயல்பான நடிப்பு இதெல்லாம் அவரது பலம். விடிய விடிய காதலியுடன் தொலைபேசியில் பேசும் "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா, இன்னும் இருக்கா..." பாடல் எவர் கிரீன் காதலர் கீதம். அதில் வரும் "ஜாதி மல்லி பூச்சரமே..." பாடலும் அப்படித்தான்.


மணிரத்னம் இயக்கத்தில் ரஜினியுடன் மம்முட்டி இணைந்த 'தளபதி', இன்றளவும் நட்புக்காக கொண்டாடப்படும் படம். தாதா வேடத்தில் மம்முட்டி. தேவா, சூர்யா கேரக்டர்கள் சாகா வரம் பெற்றதற்கு காரணம் மம்முட்டி. 



மக்களாட்சி, மறுமலர்ச்சி, கிளிப்பேச்சு கேட்க வா, புதையல், எதிரும் புதிரும், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ஆனந்தம், விஸ்வ துளசி இப்படி மம்முட்டியின் நேரடி படங்கள் பட்டியல் ரொம்ப குறைச்சல். அவரது தமிழ் டப்பிங் படங்களும் அப்படித்தான். ஆனால் மம்முட்டியை தெரியாத தமிழ் ரசிகர்கள் இல்லை என்பதே நிஜம்.




விஜயகாந்துக்கு சின்ன கவுண்டர், ரஜினிக்கு எஜமான் மாதிரி மம்முட்டிக்கு மறுமலர்ச்சி. ஊர் பெரிய மனிதராக வாழ்ந்திருப்பார். 'நன்றி சொல்ல உனக்கு.. வார்த்தை இல்லை எனக்கு..' பாடல் ஹிட் வரிசை ரகம். கிளிப்பேச்சு கேட்க வா படத்தின் கனகாவுடன் பாடும்  'சிவகாமி மனசில...' டூயட் பாடலும் அப்படித்தான்.


கன்டெய்னர் லாரியில் பணத்தை அள்ளிச் சென்ற தமிழக அரசியலை பேசிய படம் 'மக்கள் ஆட்சி'. ஆர்கே செல்வமணி இயக்கிய இந்த படத்தில் மிக லோ கிளாஸாக இருந்து முதல்வராவார் மம்முட்டி.  ஜோடி ரோஜா. 'இருவர்' படத்துக்கு முன்னோடி இந்தப்படம். ரோஜா, ஆர்.சுந்தர்ராஜன் இருவருடனும் சேர்ந்து படம் முழுவதும் பின்னி இருப்பார் மம்முட்டி.


நான்கு அண்ணன் தம்பிகளில் மூத்த அண்ணனாக கூட்டு குடும்ப தலைவனாக 'ஆனந்தம்', ராணுவத்தில் கால் இழந்து ஒருதலைக் காதலராக 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்'. மெல்லிய குடும்ப கதைக்கு 'விஸ்வ துளசி'. இப்படி மம்முட்டியின் ஒவ்வொரு படமும் மனம் கவர்ந்தவை. அரை நூற்றாண்டை கடந்து விட்டது, அவரது திரைப் பயணம்.



தமிழில் ரஜினி, அஜித், முரளி, நாகேஷ், நெப்போலியன், சரத்குமார், அரவிந்த்சாமி, மணிவண்ணன், டெல்லி கணேஷ், அமலா, பானுப்ரியா, ரோஜா, கனகா, தேவ்யானி, ஐஸ்வர்யா ராய், ஸ்ரீவித்யா என பிரபல நட்சத்திரங்களுடனும் பாலசந்தர், மணிரத்னம் போன்ற பெரிய இயக்குநர்களிடமும் இணைந்து நினைவில் நிற்கும் படங்களை தந்தவர் மம்முட்டி...

#நெல்லை_ரவீந்திரன்

அரசியல் ஆசை நடிகர்களுக்காக...

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி பேசும் பெரும்பாலானோரின் கருத்துகளில் தவறாமல் இடம் பெறும் பெயர் எம்.ஜி.ஆர்.  ரஜினியை ஆதரிப்பவர்களும் சரி. எதிர்ப்பவர்களும் சரி. எம்.ஜி.ஆரை உதாரணம் காட்ட தவறுவதே கிடையாது. ஆனால், 30 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் யாராலும் அசைக்க முடியாத உச்ச நடிகராக நீடித்ததை தவிர, எம்.ஜி.ஆருக்கும் ரஜினிக்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது என்பதை யோசிப்பதில்லை. அதுவே, அரசியலுக்கு தகுதி என்ற ரீதியில் பேசுகின்றனர். 



1950ம் ஆண்டில் கருணாநிதியின் கதை, வசனத்தில் வெளியான மந்திரி குமாரி படத்தில் நடித்தபோதே திராவிட இயக்கத்துடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்து விட்டார், எம்.ஜி.ஆர்.  தென்குமரி தொடங்கி இமயமலை வரையிலும் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் கொடி கட்டி பறந்த காலத்திலேயே, அதற்கு நேர் மாறான நிலைப்பாட்டை எடுப்பதில் எந்த அளவுக்கு உறுதி வேண்டும். அதுவும் திரை உலகில் ஆரம்பகட்ட நடிகராக இருந்த ஒருவருக்கு... இந்த உறுதி ரஜினியிடம் இருக்கிறதா...? 

1951 முதல் 1967 வரை 17 ஆண்டு காலம், தமிழகத்திலும் மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி இருந்த நேரத்தில், அப்போதுதான் புதிதாக தொடங்கப்பட்ட தி.மு.க.வில் உறுப்பினராக சேர்ந்ததோடு, நடிக்கும் நேரம் தவிர மற்ற சமயங்களில் தி.மு.க மேடைகளில் பிரச்சாரம் செய்வதற்காக ஊர் ஊராக சென்றவர், எம்.ஜி.ஆர். அதுபோன்று ஆளும் தலைமையை  தொடர்ந்து எதிர்க்கும் துணிச்சல் ரஜினியிடம் துளி கூட கிடையாது. 

எம்.ஜி.ஆரின் பாடல்களில் கூட நேரடியாகவே கொள்கை பிரச்சார நெடியை பார்க்கலாம்.  அதன் தாக்கம் தாங்க முடியாமல் அப்போதைய காங்கிரஸ் அரசு கொடுத்த நெருக்கடி அதிகம். பெற்றால்தான் பிள்ளையா படத்தின் பாடலில், 'மேடையில் முழங்கு... அறிஞர் அண்ணா போல்...'  என்ற பாடல் மேடையில் முழங்கு திரு.வி.க. போல் என மாற்றப்பட்டதே அதற்கு சாட்சி. இப்போதும் இரண்டு விதமான வரிகளில் அந்த பாடல்களை கேட்கலாம்.

முழுக்க முழுக்க காங்கிரஸ்காரரான ஏ.வி.எம். தயாரித்த அன்பே வா படத்திலேயே, 'உதய சூரியனின் பார்வையிலே... உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே...' என்ற வரிகளை வைத்தவர், எம்.ஜி.ஆர். அந்த வரிகள் கூட, 'புதிய சூரியனின் பார்வையிலே' என மாறியது. அவ்வளவு சென்சார் கெடுபிடி. ஆனாலும் கூட,  'ஓடும் ரயிலை வழி மறித்து, அதன் பாதை தனிலே தலை வைத்து...' என்ற எங்கள் தங்கம் பாடல் தொடங்கி, 'கூந்தல் கருப்பு... குங்குமம் சிவப்பு...' என காதல் பாடல் வரை தான் சார்ந்த திமுகவை எதிர்க் கட்சியாக இருந்தபோதும் நினைவூட்டிக் கொண்டே இருந்தவர், எம்.ஜி.ஆர். 



இது மட்டுமல்ல, நல்லவன் வாழ்வான் போன்ற கருப்பு வெள்ளை படங்களில் வரும் வீடுகளின் ஜன்னல், கதவுகளில் உதய சூரியன் போன்ற வடிவமைப்பு இருப்பதை பார்க்கலாம். ஈஸ்ட்மெண்ட் கால படங்களில் எம்.ஜி.ஆரின் காஸ்ட்யூமே கருப்பு, சிவப்பு வண்ணத்தில் தான் இருக்கும். இவை எல்லாம், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 17 ஆண்டு காலத்தில் எம்.ஜி.ஆர். செய்த அட்ராசிட்டிகள். இதில் துளி அளவு துணிச்சலாவது ரஜினியிடம் இருந்ததா...? 

எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி செய்தபோது சிறிதளவு முணுமுணுப்பை கூட காட்டாத ரஜினி, இப்போது சிங்கம், புலி இல்லாத சமயத்தில் 'சிஸ்டம் சரியில்லை' என கூறிக் கொண்டு இருக்கிறார். இவ்வளவு தான் அவரது துணிச்சல். எம்.ஜி.ஆர். ஆட்சி செய்தபோதே, தி.மு.க தலைவர் கருணாநிதியின் கதை வசனத்தில் நடித்ததோடு, தி.மு.க. கரை வேட்டியையும்  கட்டியபடி படத்தில் நடித்து, மறைமுகமாக தி.மு.க. ஆதரவு நடிகர் போலவே வலம் வந்த விஜயகாந்திடம் இருந்த தைரியம் கூட ரஜினிக்கு கிடையாது. 

இது தவிர, அரசியல் அனுபவம் என்று பார்த்தால் கூட, எம்.ஜி.ஆருடன் ஏணி வைத்தால் கூட எட்டாது. எம்.ஜி.ஆர். தனது 45ஆவது வயதிலேயே (1962ம் ஆண்டு) எம்.எல்.சி.யாகி விட்டார். அதன்பிறகு, 1967 முதல் அவரது இறுதிநாள் வரை தமிழக சட்டப்பேரவைக்கு தொடர்ந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். 1969ல் அண்ணா மறைந்ததும் ஏற்பட்ட கடுமையான சூழ்நிலையில், தி.மு.க.வில் பெரிய அளவில் சலசலப்பு ஏற்படாமல் கருணாநிதியை முதலமைச்சராக்கியதில் எம்.ஜி.ஆருக்கும் கணிசமான பங்கு உண்டு. பின்னர், கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவரது ஆட்சியின் நெருக்கடியையும் சந்தித்தவர் எம்.ஜி.ஆர். 

எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கி நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்துக்கு கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சி கொடுத்த தொல்லைகள் ரஜினிக்கு தெரியுமா...? போஸ்டர் கூட ஒட்ட விடாமல் தடுக்கப்பட்டது. படச்சுருள் பெட்டிகளுக்கும் பாதுகாப்பில்லை. அதை எல்லாம் எதிர் கொண்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். அவரது சொந்த தயாரிப்பு மற்றும் இயக்கமான 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தின் வெற்றியே அதற்கு சாட்சி. ஆனால், பா.ம.க.வின் எதிர்ப்பை கூட 'பாபா'வால் சமாளிக்க முடியவில்லையே...?

1977ம் ஆண்டில் தமிழக முதலமைச்சராவதற்கு முன் 25 ஆண்டு காலம் தமிழக அரசியலோடு பின்னிப் பிணைந்து இருந்தவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராகும் முன் 15 ஆண்டு சட்டப்பேரவை அனுபவமும் உண்டு. நடிப்புடன் கூடவே, அவரது அரசியல் பயணம் நீடித்தது. திடீரென கட்சி ஆரம்பித்து, அடுத்த சில ஆண்டுகளில் தமிழக ஆட்சியை எம்.ஜி.ஆர். பிடிக்கவில்லை. எம்.ஜி.ஆரின் அரசியலோடு ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஒப்பிடுபவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். 

ரஜினி நல்லவர்... வல்லவர்... பச்சை தமிழர்... அவர் ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடும்... இப்படி எதை வேண்டுமானாலும் கூறிக் கொள்ளலாம். ஆனால், எம்.ஜி.ஆருடன் மட்டும் ரஜினியின் அரசியலை ஒப்பிட வேண்டாம்.


அவர் அவர்தான்... 

ஒரே ஒரு சந்திரன் தான் உலகுக்கெல்லாம்...

= #நெல்லை_ரவீந்திரன்

Tuesday 20 June 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -53

 சினிமாவில் மிக உச்சம் பெற்றவர் கிடையாது. முழுக்க முழுக்க நாயகியும் இல்லை. ஆனால் 35 ஆண்டுகளுக்கு மேல் இரண்டு தலைமுறை ரசிகர்களுக்கு பரிச்சயமானவர், ரம்யா கிருஷ்ணன்.  

மலையாளம்,  தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி இப்படி ஐந்து மொழிகளில் நடித்திருக்கும் அவருக்கு தமிழில் முதல் படம் 'வெள்ளை மனசு'. 1986ல் வந்த அந்த படத்தின் ஹீரோ ஒய்.ஜி.மகேந்திரன்.! இதே போல கவுண்டமணி ஹீரோவாக நடித்த படங்களில் ஒன்றான 'ராஜா எங்க ராஜா' படத்தின் ஹீரோயினும் இவர்தான். ஆரம்ப கால சத்யராஜின் 'முதல் வசந்தம்' படத்திலும் நாயகி. இப்படி நாயகியாக நடித்தாலும்  முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் துணை நாயகிதான்.


'படிக்காதவன்' படத்தில் ரஜினியின் தம்பி மனைவி, 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தில் கமலுக்கு தங்கை, விஜயகாந்தின் 100வது படமான 'கேப்டன் பிரபாகரனில்'  சரத்குமாரின் காதலி இப்படியாகவே சென்ற ரம்யா கிருஷ்ணன் நடிப்புக்கு தீனி போட்டது 'படையப்பா' நீலாம்பரி கேரக்டர். 

அதுவே திருப்பு முனையாக அமைய, பத்து ஆண்டுகளுக்கு பின் தமிழில் மீண்டும் பிசியானார். பிரபுவுடன் 'பட்ஜெட் பத்மநாபன்', சரத்குமாருடன் 'பாட்டாளி'. கமலுடன் 'பஞ்ச தந்திரம்' என சிக்ஸரடித்தார். பஞ்ச தந்திரம்  மேகி அலைஸ் மரகதவல்லிக்கு கிட்டத்தட்ட 40 வயசு!

கூடவே, 1990களின் இறுதியில் தமிழ் திரையுலகில் அம்மன் படங்கள் என்றால் கூப்பிடு ரம்யாவை என்ற நிலைமைதான். 'ராஜகாளி அம்மன்', 'பொட்டு அம்மன்', 'அன்னை காளிகாம்பாள்', ' ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி',  இப்படி பலவிதமான அம்மன் அவதாரத்தில் தூள் கிளப்பினார்.


அப்புறம் கொஞ்சம் ஓய்வெடுத்து படங்களை குறைத்துக் கொண்டாலும் பிற மொழிகளில் ஆதிக்கம் செலுத்திய இந்த 80ஸ் நாயகியை 2கே கிட்ஸ்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தது 'பாகுபலி'. உலக அளவில் சினிமா ரசிகர்களிடம்  ராஜமாதா சிவகாமியாக ரம்யாவை கொண்டு சேர்த்தது 'பாகுபலி'. 

"இதுவே என் கட்டளை... என் கட்டளையே சாசனம்..." இந்த வசனம் அவரால்தான் உயிர் பெற்றது. கம்பீரம், அசால்ட்டான பார்வை, அலட்சியமான வசன உச்சரிப்பு இதுதான் ரம்யாவின் அடையாளம். இதுதான் 'குயின்' என ஜெயலலிதா வேடத்தில் அவரை நடிக்க வைத்தது.

சூர்யாவுடன் 'தானா சேந்த கூட்டம்', சிம்புவுடன்  'வந்தா ராஜாவாத்தான் வருவேன்' என இன்றைய தலைமுறை வரை நடித்து விட்டார். 

1980களில் வெளியான படங்களின் ரம்யாவையும் இன்றைய ரம்யாவையும் பாருங்கள். மொத்தமாகவே மாறி இருப்பார். இன்று வரை பெரிய திரை சின்னத்திரை என கலக்கும் ரம்யாவின் அழகில் மயங்காதோர் யார்...?


"வயசானாலும் ஒன் அழகும் ஸ்டைலும் இன்னும் கொறையல..."

இந்த டயலாக் படையப்பாவுக்கு மட்டுமல்ல, நீலாம்பரிக்கும்தான்...

#நெல்லை_ரவீந்திரன்

Friday 16 June 2023

கரகாட்டக்காரன்... நினைவுகள்...

 தமிழ் சினிமாவில் என்றென்றும் நினைவில் இருக்கும் படங்களில் ஒன்று 'கரகாட்டக்காரன்', வெளியாகி 35 ஆண்டுகளாகி விட்டது. எவ்வளவு வேகமான கால ஓட்டம். ஏழெட்டு ஆண்டுக்கு முன் வந்த 'ரஜினி முருகன்' படத்தில் கூட 'கரகாட்டக்காரன்' வாழைப்பழ காமெடி வசனம் வரும். அதுதான் அந்தப் படத்தின் காலத்தை வென்ற வெற்றி.



இன்றைய டிஜிடல் யுகம் மாதிரி, 1990களில் ஒரே நேரத்தில் எல்லா தியேட்டர்களிலும் புதிய படங்கள் வெளியாகாது. முதலில் பெரிய நகரங்கள், சிறிய நகரங்கள் என படிப்படியாக ரிலீசாகி டூரிங் டாக்கீஸ் வரை வந்து சேர ஒரு வருடம் வரை பிடிக்கும். ஆனால் இந்த படம்  பஞ்சாயத்து அளவிலேயே இருந்த எங்கள் ஊரிலும் கூட முதன் முறையாக நேரடியாக ரிலீசானது. அதுவும் இரண்டு தியேட்டர்களில். ஒன்றில் முப்பது நாட்களும் மற்றொன்றில் பதினைந்து நாட்களும் ஓடியது. மொத்தம் 45 நாட்கள்.

கியூப் டிஜிடல் தொழில்நுட்பம் எல்லாம் கிடையாது. பிலிம் சுருள் பெட்டிதான். ரெண்டு தியேட்டருக்கும் ஒரே ஓனர் என்பதால் ஒரே பிலிம் சுருள் ரெண்டு தியேட்டருக்கும் மாறி மாறி பயணம் செய்யும். அது ஒரு வித்தியாசமான சினிமா காலம். படம் பார்க்க செல்வதே திருவிழா மாதிரி தான். என்னுடைய பள்ளித் தோழன் ஒருத்தனுக்கு திருக்குறளோ, தமிழ் செய்யுளோ கூட மனப்பாடமாக தெரியாது. ஆனால் முழு படத்தின் வசனங்களையும் சீன் பை சீனாக மனப்பாடமாக சொல்லுவான். அந்தளவுக்கு 'கரகாட்டக்காரன்' மயக்கம் பட்டி தொட்டியெங்கும் பரவி கிடந்தது.

சிவாஜி கணேசன், பத்மினி நடித்த 'தில்லானா மோகனாம்பாள்' படத்தை எம்ஜிஆருக்கு ஏற்ற வகையில், திரைக்கதை அமைத்து அதை 1990ஸ் தமிழ் சினிமாவுக்கு ஏற்ற மாதிரி வெற்றி பார்முலா படமாக உருவாக்கினால்...

அதுதான் 'கரகாட்டக்காரன்'...

கதைப்படி பார்த்தால் சாதாரண மசாலா படம் தான். பெரிதாக ஒன்றும் இல்லை தான். ஆனால் ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்பட்ட படம். அந்த அளவுக்கு சரி விகிதமாக சமைத்து சுவையும் ருசியுமாக பரிமாறப்பட்ட புல் மீல்ஸ்.

தமிழ் சினிமாவின் பல்துறை வித்தகர் கங்கை அமரனின் இயக்கத்துக்கும் பாடல்களுக்கும் இந்த படம் ஒன்றே மிகப் பெரும் சாட்சி. 1980, 90களில் மோகன், ராமராஜன் என பல ஹீரோக்களை தனது பாடல்களாலேயே ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த இளையராஜா, இதில் தனி ஆவர்த்தனமே பண்ணி இருப்பார். 


'வைதேகி காத்திருந்தாள்' படத்தின் ஆல் இன் ஆல் அழகுராஜாவோட "பெட்ரோ மாக்ஸ் லைட்" காமெடிக்கு பிறகு கவுண்டமணி, செந்தில் ஜோடியை இன்று வரை நினைவு படுத்தும் 'வாழைப்பழ காமெடி'. 2கே கிட்ஸ் வரையிலும் உச்சரிக்கும் "சொப்பன சுந்தரி" என்ற பெயர். பீலா விடுபவர்களுக்காகவே சொல்லப்படும் கவுண்டமணியின் "என்னடா கலர் கலரா ரீலா விடுற..." இது மாதிரியான காலம் கடந்தும் பேசப்படும் ஸ்பெஷல் அயிட்டங்கள் கரகாட்டக்காரனில் ஏராளம்.

கிராமத்து கலைஞர்களுக்கே உரித்தான குசும்புகளுடன் கவுண்டமணி, செந்தில் மற்றும் கரகாட்ட கோஷ்டிகள் காமெடியில் பின்ன, அவர்களுக்கு இணையாக கோவை சரளாவும் கலக்க, முதன் முறையாக இயக்குநர் சந்தான பாரதி வில்லனாக மிரட்ட, ராமராஜன்- கனகா காதலுடன் காந்தமாக கவர்ந்து இழுத்தது 'கரகாட்டக்காரன்'. திரும்ப திரும்ப தியேட்டருக்கு போய் படத்தை பார்த்தவர்களும் உண்டு.


வரைந்து வைத்தது போன்ற உதடுகளும் உருண்ட விழிகளுமாக மயக்கிய கிராமத்து குமரியான கரகாட்டக்காரி கனகா, இன்னமும் மனதுக்குள் ஜில்லென பனி மழை பொழிகிறார். 

கூடவே, 

"சாமத்தில வாரேன், யம்மா சாமந்திப் பூ தாரேன். கோபப்பட்டு பார்த்தா, யம்மா வந்த வழி போறேன்..."

"மானே, மயிலே, மரகத குயிலே... தேனே நான் பாடும் தெம்மாங்கே... பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே..."

என்ற வரிகளும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது, ஆண்டுகளைக் கடந்தும்...

இன்று கரகாட்டக்காரன் வெளியான நாள் ஜூன் 16, 1989

#நெல்லை_ரவீந்திரன்

Thursday 15 June 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -52

 'அமைதிப்படை' அமாவாசைன்னா இன்னைக்கு வரை சத்யராஜ் பெயர்தான் எல்லோர் நினைவுக்கும் வரும். ஆனா, அதுக்கு பின்னால முன்னால பக்கத்திலன்னு எல்லா பக்கமும் இருந்த ஒரே ஆளு மணிவண்ணன் தான்.  ரெண்டு பேருமே ஆரம்ப கால நண்பர்கள்.



 1979ல் பாரதிராஜாகிட்ட கதாசிரியரா, அசிஸ்டண்ட் இயக்குநரா உதவியாளரா சேர்ந்து 'அலைகள் ஓய்வதில்லை' மாதிரி சில படங்கள் எல்லாம் பண்ணிட்டு முதன் முதலா 1982ல் மணி வண்ணன்  இயக்கிய படம் 'கோபுரங்கள் சாய்வதில்லை'. மோகன், சுகாசினி, ராதா நடிச்ச அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

அதுக்கு அப்புறம் இளமை காலங்கள் 'நூறாவது நாள்', '24 மணி நேரம்', 'விடிஞ்சா கல்யாணம்', 'சின்னத் தம்பி பெரிய தம்பி', 'முதல் வசந்தம்', 'பாலைவன ரோஜாக்கள்', 'ஜல்லிக்கட்டு', 'கனம் கோர்ட்டார் அவர்களே', 'முதல் வசந்தம்', 'புது மனிதன்,' 'தெற்கு தெரு மச்சான்'-ன்னு மணிவண்ணன் இயக்குன படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட். 

மொத்தம் 50 படங்கள் இயக்கம். அதில் சரி பாதி அவரது நண்பர் சத்யராஜ் நடிச்சது. 1982ல் ஆரம்பிச்சி 'அமைதிப் படை', 'நாகராஜ சோழன் எம்.ஏ. வரை 2013 வரை முப்பது வருஷத்துக்கு மேல படங்களை இயக்கியவர் மணிவண்ணன். சிவாஜி கணேசனையும் இயக்கி இருக்கிறார்.

ஆரம்பத்திலருந்தே 'கல்லுக்குள் ஈரம்', 'நிழல்கள்' மாதிரி சில படங்கள்ல குட்டி குட்டி வேஷத்தில நடிச்சிருக்காரு. ஆனா முழு நீள வில்லனா பெரிய கேரக்டரில அவர் நடிச்ச படம் 'கொடி பறக்குது'. அதில் ரஜினிக்கு வில்லன். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அந்த படத்தில மணிவண்ணனுக்கு டப்பிங் குடுத்தவர், பாரதிராஜா.



அதுக்கு அப்புறம் இயக்கத்தோட கூடவே நிறைய படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சாரு மணிவண்ணன். அப்பிடி அவர் நடிச்ச படத்தோட மொத்த எண்ணிக்கை 400ஐ தொடும்.

சிவாஜி, ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, அர்ஜுன், பார்த்திபன், விஜய், அஜித் என எல்லா நடிகர்களுடனும் நடிச்ச பெருமை மணிவண்ணனுக்கு உண்டு. 

அப்பா, வில்லன், துணை கதாபாத்திரம்னு எல்லாவற்றிலும் கலந்து கட்டி துவம்சம் பண்ணியவர், மணிவண்ணன்.  20 ஆண்டு கால தீவிர நடிப்பு வாழ்க்கையில் ஒரு படத்தில் கூட அவரது நடிப்பு சோடை போனது கிடையாது. அரசியல் நக்கல் நையாண்டி வசனங்களை பேசிய துணிச்சல்காரர். 

அதே நேரத்தில், 'உள்ளத்தை அள்ளித்தா', 'சூரிய வம்சம்', அவ்வை சண்முகி, 'முறைமாமன்' மாதிரி பல படங்களை பார்த்தால் முழு நேர காமெடியன்களுக்கே டஃப் கொடுத்திருப்பார். ரெண்டு முறை தமிழக அரசின் சிறந்த காமெடியன் விருதையும் வாங்கி இருக்கிறார், மணிவண்ணன்.



'கோகுலத்தில் சீதை' போன்ற பல படங்களில்  தந்தை வேடத்துக்கு மிக பொருத்தமானவரா பார்க்கலாம். 'கொடி பறக்குது' மாதிரியே பல படங்கள்ல கொடூரமான வில்லனாவும் மணிவண்ணனை பார்க்கலாம். சத்யராஜ், கவுண்டமணியோடு இவரும் சேர்ந்து விட்டால் அன்லிமிட் லூட்டிக்கு 100 சதவீதம் கேரண்டி.



கதாசிரியர், டைரக்டர், அப்புறம் நடிகரா பார்த்தால் காமெடியன், வில்லன், குணச்சித்திரம்னு எல்லா விதத்திலயும் தமிழ் சினிமாவ கலக்கின மணிவண்ணனுக்கு பல பாடல்கள்ல நடிக்கிற வாய்ப்பும் உண்டு. அப்பிடி மணிவண்ணன் பாடுற எல்லா பாடல்களிலயும் இசையமைப்பாளர் தேவாவோட குரல் மிக பொருத்தமா இருக்கும் மணிவண்ணனே பாடுற மாதிரி இருக்கும்.



தமிழ் சினிமா மிக சீக்கிரமா இழந்த ஜாம்பவான்கள்ல மணிவண்ணனும் ஒருத்தர். 30 வருஷத்துக்கு மேல சினிமாவில இருந்த அவர் 50 பிளஸ் வயசிலேயே மறைந்தது தமிழ் திரைக்கு பெரிய இழப்பு.

#நெல்லை_ரவீந்திரன்

Saturday 10 June 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -51

 ஒரே ஒரு சூரியன்தான் பகலுக்கெல்லாம்... 

ஒரே ஒரு சந்திரன்தான் இரவுக்கெல்லாம்...

ஒரே ஒரு பாட்ஷாதான் ஊருக்கெல்லாம்...

எத்தனையோ பேர் வந்தாலும் சென்றாலும் மக்களின் மனம் எப்போதும் திறமையின் பக்கம்தான். அதுவும் இரண்டு மூன்று தலைமுறையினரை கட்டிப் போடும் திறமையும் அதிர்ஷ்டமும் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கும். ஆண்டவனின் அருளை முழுமையாக பெற்ற கோடிகளில் ஒருவருக்கே அது கை கூடும். அவர்களில் ரஜினியும் ஒருவர்.

1975ல் தொடங்கிய சினிமா இன்னிங்ஸ், 'அண்ணாத்த' கடந்தும் விறுவிறுப்பு குறையாமல் போகிறது. ஒரு தனி மனிதனை நம்பி 600 கோடி ரூபாயை முதலீடு செய்வது (2.0) எல்லாம் எளிதாக கடந்து செல்லக் கூடிய சாதாரண விஷயமல்ல.

கிட்டத்தட்ட நான் பிறந்த ஆண்டில்தான் ரஜினியின் சினிமா அறிமுகமும். 'கெட்ட பய சார் இந்த காளி'ன்னு தொடங்கியதில் இருந்து

 '16 வயதினிலே' 'மூன்று முடிச்சு' 'அவள் அப்படித்தான்' என 1980களில் பல படங்களில் வரிசையாக தொடர்ந்த ரஜினியின் வில்லத்தனமான நடிப்பு... சந்திரமுகி வேட்டையன்,  எந்திரன் சிட்டி ('ம்மே...') வரை சூடு குறையாமல் இருப்பதை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. 'பாட்ஷா' மாணிக்கத்தின் உக்கிர பார்வை வீச்சு முழு நேர வில்லன் நடிகர்களிடம் கூட எதிர்பார்க்க முடியாதது. இன்றளவும் ரஜினியின் அலட்டல் இல்லாத வில்லன் நடிப்புக்கு நிரந்தர ரசிகன் நான். 

அது ஒரு புறம் இருக்க தம்பிக்கு எந்த ஊரு, தில்லு முல்லு, ராஜாதி ராஜா, குரு சிஷ்யன் இப்படியாக சந்திரமுகி சரவணன் வரை பல தசம ஆண்டுகளை கடந்தும் கலகலப்பூட்டும் ரஜினியின் நகைச்சுவைக்கு ஈடு இல்லை.

ஆதர்ச நாயகனுக்கு சாமான்ய ரசிகன் தொடங்கி  வெறித்தனமான ரசிகர்கள் வரை இருப்பது வழக்கம். ஆனால், ரஜினியை 1980களின் குழந்தைகள் தொடங்கி 2010களின் குழந்தைகளும் கூட ரசிப்பதை அவ்வளவு எளிதாக கடந்து போய் விட முடியாது. 

எந்த ஒரு மனிதரையும் எல்லோருக்கும் பிடிக்கும் என்பது சர்வ நிச்சயம் கிடையாது. ஆனால்,  பெரும்பாலான திரைப்பட ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது இந்த 70 வயது காந்தம்.

இன்று வரை அவரை ஆராதிக்கும் ஆரம்ப கால ரஜினி ரசிகர்களை, பேரன் பேத்தி எடுத்தவர்கள் என போகிற போக்கில் விமர்சிப்பவர்கள், அரை நூற்றாண்டை எட்டியும்,  அவரது 'கிரேஸ்' குறையவில்லை என்பதை கவனிக்க தவறியவர்கள். 

எஸ்பி முத்துராமன், மகேந்திரன், கலைஞானம் போன்ற இயக்குனர்களிடம் நடித்தவர்... சங்கர், முருகதாஸ், கார்த்திக் சுப்புராஜூக்கும் நடிக்கிறார். விஜயகுமார், சிவகுமார்,  முத்துராமன், நம்பியார் போன்றவர்களுடன் நடித்தவர்... விஜய் சேதுபதியுடனும் நடிக்கிறார்.

கருப்பு வெள்ளை, ஈஸ்ட்மென்ட், வண்ணப்படம், 35 எம்எம், 70 எம்எம் சினிமாஸ்கோப், 3டி முப்பரிமாணம், அனிமேஷன் என சினிமாவின் அனைத்து தொழில் நுட்பத்திலும் நடித்துள்ள ஒரே நடிகர் ரஜினியாகத்தான் இருக்கும்.



அரசியலில் ரஜினி வருகை எப்படி இருக்கிறதோ? ஆனால், 1994, 1996, 2017, 2020 ஆண்டு எதுவாக இருந்தாலும் சினிமா வசனங்களை தவிர்த்து பொது வெளியில் ரஜினி உதிர்க்கும்  வெறும் நாலு வார்த்தைகள் கூட, (அவருக்கு ஆதரவோ, விமர்சனமோ எதுவாயினும்) நான்கு நாளைக்கு வைரலாகி கிடக்கிறது.

ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது தொடங்கி... 

சிஸ்டம் சரியில்ல... நகர்ப்புற நக்சலைட்...  ஒரு நிமிஷம் தலை சுத்திப் போச்சி... 

இதெல்லாம் அதற்கு உதாரணம். அதுதான் ரஜினி என்ற காந்தத்தின் மார்கண்டேய மந்திரம்.

#நெல்லை_ரவீந்திரன்

Monday 5 June 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -50

 பெயர்...

இந்த மூன்று எழுத்துக்குள் எவ்வளவோ புதைந்து கிடக்கிறது. நம்பர்கள் கூட, சில வேளைகளில் அடையாள பெயர்களாகி விடும்.  பூனை என்ற பெயரை சொன்னால் யானையின் உருவம் கண் முன்னே  வருவதில்லை. ஆனால், அந்த இரண்டுக்குமே அதுதான் தங்கள் பெயர் என தெரியுமா? 

அதே நேரத்தில் பெயர் என்றால்  இவ்வளவுதான் என்றும் ஒதுக்கி விட முடியாது. 

சில பெயர்கள் மரியாதை தரும். சில பயத்தை தரும். இன்னும் சில சில என்னவெல்லாமோ மனதுக்குள் தரும். சிலருக்கு தங்களுக்கு சூட்டிய பெயரே பெருமையாக இருக்கும். எனக்கும் அப்படித்தான். ஏனென்றால் இந்த பெயர் மிகவும் பெக்குலியரானது. 

இந்த முகநூலை எடுத்துக் கொண்டாலே, தசம ஆண்டுக்கும் மேலான அனுபவத்தில், இந்த பெயரை தசம எண்ணிக்கை அளவு கூட பார்த்ததில்லை. நேரிலும் கூட, என் பெயரையே கொண்ட பத்துக்கும் குறைவானவர்களையே பார்த்திருக்கிறேன்.


இப்படியான பெயரிலேயே ஒரு நடிகர் இருக்கிறார். 1980ஸ் சினிமா ரசிகர்களுக்கு அவரை நன்றாகவே தெரியும். அன்றைய நாளின் ஹீரோக்களுக்கு நிகராக படங்களில் நடித்தவர், ரவீந்தர் என்ற ரவீந்திரன். 

சென்னை மற்றும் புனேயில் சினிமா படிப்பு முடித்து முழு வாழ்க்கையையும் இன்று வரை சினிமா மற்றும் மீடியாவுக்கே அர்ப்பணித்தவர். சுமார் 150க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். அதில், பாதிக்கு மேல் மலையாளம், அடுத்ததாக தமிழ். தமிழில் முதன் முதலில் ரவீந்திரன் அறிமுகமான படம் டி.ராஜேந்தரின் 'ஒரு தலை ராகம்'. படம் முழுவதும் ஹீரோவோடு கல்லூரி மாணவராக டிஸ்கோ டான்சராக வருவார். டிஸ்கோ ரவீந்தர் என்ற பெயரும் அவருக்கு உண்டு.


ஆமாம். அவர் அருமையான டான்சர். 1980களில் டிஸ்கோ டான்ஸ் உச்சத்தில் இருந்தபோது அதன் அடையாளம் ரவீந்திரன். அதாவது அன்றைய பிரபுதேவா. அப்போதெல்லாம் படங்களின் வெற்றிக்கு பாடல்கள் தான் பெரிய பக்கபலம். கேசட்டாக ஆடியோ வடிவிலும், திரைப்படத்தில் விஷுவலாகவும் இருக்கும். அதனால் படங்களில் நிச்சயம் கிளப் டான்சுடன்  பாடல் இருக்கும். அதனாலேயே ரவீந்திரனுக்கும் ஹீரோ போலவே படங்களில் பாடல் இருக்கும்.



'ஒருதலை ராகம்' படத்தில் "அட மன்மதன் ரட்சிக்கனும் இளம் மங்கையர் பாவைகளே.."

'வாழ்க்கை' படத்தில் "மெல்ல மெல்ல என்னைத் தொட்டு..."

'ரங்கா' படத்தில் "அழகான பட்டுப் பூச்சி ஆடை கொண்டது..."

'ராம் லட்சுமணன்' படத்தில் "வாலிபமே வா வா, தேன் சுவையே தா தா..."

'தங்க மகன்' படத்தில் "வா வா பக்கம் வா பக்கம் வர வெக்கமா..."

இப்படி ரவீந்திரனின் டான்ஸ் பாடல்களை நிறைய சொல்லலாம்.  


சிவாஜி கணேசனுடன் 'வாழ்க்கை' படத்தில் அவரது மகனாக, நம்பியாரின் மருமகனாக, சில்க் ஸ்மிதா ஜோடியாக நடித்திருப்பார். இது போலவே, ரஜினியுடன் 'ரங்கா', 'போக்கிரி ராஜா', 'தங்க மகன்', 'அடுத்த வாரிசு', கமலுடன் 'சகலகலா வல்லவன்', 'பேர் சொல்லும் பிள்ளை', 'ராம் லட்சுமண்' சத்யராஜுடன் 'விடிஞ்சா கல்யாணம்' என முன்னணி நாயகர்களுடன் நடித்திருக்கிறார். பெரும்பாலும் நெகடிவ் ரோல்கள். 

ஹீரோவாகவும் ஒன்றிரண்டு படங்களில் ரவீந்திரன் நடித்திருக்கிறார். டி.ராஜேந்தரின் 'வசந்த அழைப்புகள்' படத்திலும் இவர்தான். அதில் டி.ராஜேந்தரின் மனைவி உஷா ராஜேந்தருக்கு ஜோடி.


1980களின் துவக்கத்தில் ஏராளமான படங்களில் உஷா நடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல். அந்த படத்தில், 

"அட நீல சேல பறக்கையில, மால வேள மயக்கயில மச்சான் இங்க வாடி புள்ள..."

"கிட்ட வாடி ஆச புள்ள எட்டு நாளா தூக்கமில்ல...முத்து முத்து ஜாதி முல்ல..."

பாடல்களில் உஷாவோடு செம டான்ஸ் போட்டிருப்பார் ரவீந்திரன்.

சுமார் பத்து ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருந்த ரவீந்திரன், சமீபத்திய சிவகார்த்திகேயனின் 'காக்கிச்சட்டை', சத்யராஜின் 6'2" என ரீ என்ட்ரி கொடுத்தார்.

மலையாளத்தில் இப்பவும் மீடியா அண்ட் ஈவன்ட் மேனேஜ்மன்ட், டி.வி. சேனல்களில் சினிமா நிகழ்ச்சிகளுக்கு ஆங்கரிங், சினிமா சம்பந்தமான வகுப்பு, கருத்தரங்கம் என பிசியாகவே இருக்கிறார். பெரிய அளவிலான சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொடுக்கிறார், ரவீந்திரன்.

பெயராலும் டான்சாலும் என்னை கவர்ந்த நடிகர்.

#நெல்லை_ரவீந்திரன்

Thursday 1 June 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -49

 டைரக்டர் டச்...

டைரக்டர் டச்னு சொல்லுவாங்க அது இவருக்காகவே வந்த வார்த்த. 

மொதல்ல அசிஸ்டன்ட் டைரக்டர், கதாசிரியர்னு அறிமுகமாகி அப்பிடியே  சில நிமிஷம் ஸ்கிரீன்லயும் தலய காட்டினாரு. '16 வயதினிலே' படத்தில நாட்டு வைத்தியராவும், 'சிவப்பு ரோஜாக்கள்'ல ஓட்டல் சர்வராவும் தல காட்டினவரு அடுத்த அஞ்சாறு வருஷத்தில கமல், ரஜினிக்கு ஈக்குவலா டஃப் குடுத்தாருன்னா தெறமைய தவிர வேறென்ன..?


கிராமத்து டைரக்டர் பாரதிராஜாவோட 'டிக் டிக் டிக்', 'சிவப்பு ரோஜாக்கள்' மாதிரியான கிரைம் திரில்லருக்கு இவருதான் அஸ்திவாரம். 'கன்னிப் பருவத்திலே', 'விடியும் வரை காத்திரு' மாதிரி படங்கள்ல இவரோட வில்லன் வேஷத்த சினிமா ரசிகருங்களால மறக்க முடியுமா?

ஆரம்ப காலத்தில இவருக்கு டப்பிங் குரல்தான். 'புதிய வார்ப்புகள்', 'சுவரில்லாத சித்திரங்கள்', 'பாமா ருக்மணி' வர இவருக்கு இரவல் குரல்தான். 'ஒரு கை ஓசை' படத்தில வாய் பேச முடியாதவராவே நடிச்சிருப்பாரு. 'மவுன கீதங்கள்'தான் இவரோட மொத சொந்த குரல் படம். அதுக்குள்ள பெஸ்ட் வசனகர்த்தா, பெஸ்ட் நடிகர்னு விருதுகள வாங்கிக் குவிச்சிட்டாரு...

அதுக்குப் பிறவு அவரோட காலம் தமிழ் சினிமாவோட வசந்த காலம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு கூடவே இசை இப்படி ஒருத்தரே பல அவதாரம் எடுத்தது எல்லாம் சினிமாவுல அந்த காலகட்டம்தான். 



1980களில் கண்ணாடி போட்டுக்கிட்டு ஒருத்தரு ஹீரோவா பேமசாவுறது எல்லாம் நெனச்சிப் பார்க்க முடியுமா? அவரால மட்டுந்தான் முடியும். சினிமா ஹீரோவுக்கே தேவையான டான்சும் வராது...

இவரு ஒரு ரூட்டுன்னா, டி.ஆர். இன்னொரு ரூட்டு. ரெண்டு பேரோட அதகளத்தில கமல், ரஜினி படங்களே தயங்கின காலம். அவங்களுக்கு ஈக்குவலா இவங்களுக்கும் ரசிகர்கள் உண்டு. 

'இன்று போய் நாளை வா', 'முந்தானை முடிச்சி', 'சின்ன வீடு', 'அந்த ஏழு நாட்கள்', 'இது நம்ம ஆளு', 'எங்க சின்ன ராசா', 'தாவணிக் கனவுகள்', 'சுந்தர காண்டம்' 'வீட்ல விசேஷங்க'... இப்பிடி இவரோட சூப்பர் டூப்பர் ஹிட் ஏராளம். தமிழ் சினிமாவில மொத மொத ஒரு கோடிக்கு யாவாரம் ஆன படம் தாவணிக் கனவுகள்னு சொல்லுவாங்க...

ரஜினியோட நடிச்ச 'நான் சிவப்பு மனிதன்' ரிலீஸ் ஆனப்ப ரெண்டு ரசிகருங்க பிரச்னையால தியேட்டர்காரங்க தலைய பிடிச்சிக்கிட்டது தனிக்கத.

இருபது பிளஸ் வயசிலருந்த கோவை சரளாவுக்கு அம்மா வேஷம் கட்டி பார்த்தவர். எல்லோரும் கவர்ச்சியாகவே பார்த்த சில்க் ஸ்மிதாவுக்கு புடவைய கட்டி தனக்கு ஜோடியா ஹீரோயினாக்கி அழகு பாத்தவர்.

நாலு லைன் கதய, சுவாரஸ்யமா திரைக்கதயா மாத்தி, சுவையான காட்சிங்களோட ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் குடுக்கிற சிறந்த திரைக்கதையாசிரியர் இந்தியாவிலயே  இவரு ஒருத்தரு தான். 

அதுக்கு நல்ல உதாரணம் எது தெரியுமா? எம்ஜிஆர் நடிச்சி பாதியில விட்ட 'அண்ணா நீ என் தெய்வம்' படத்தோட ஸீன்கள மட்டும் வச்சிக்கிட்டு அப்பிடியே தன் பாணிக்கு மாத்தி சூப்பர் ஹிட் படமா குடுத்த 'அவசர போலீஸ் 100' படம்.

ஆர்.பாண்டிய ராஜன், பார்த்திபன் இவரோட சிஷ்யங்கன்னா பாத்துக்கோங்க.. படத்தில சூப்பரா ரசிகர்கள கவருத மாதிரி ஸீன்ல 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'னு கார்டு போடுறது இவரோட ஸ்டைல். இவரோட திரைக்கதையை பார்த்து அமிதாப் பச்சனே கூப்பிட்டு குடுத்த இந்தி படம் 'ஆக்ரி ரஸ்தா...'

இவரு ஒரு இசையமைப்பாளரும் கூட. 'இது நம்ம ஆளு' படத்துக்கு இசை இவர்தான்...! அந்த படத்தில "பச்ச மலை சாமி ஒண்ணு உச்சி மல ஏறுதுன்னு..." பாட்டு இவர் பாடுனதுதான்...!

தமிழ் சினிமா வரலாற எழுதினா, இவருக்கு பெரிய தனி அத்தியாயம் உண்டு. முருங்கைக்காய், சின்ன வீடு மாதிரி   நெறைய விஷயங்கள ஒரே வார்த்தையில புரிய வச்ச ரச வாத வித்தைக்கு சொந்தக்காரர். 

எம்ஜிஆர் தன்னோட வாயால, தன்னோட வாரிசுன்னு சொன்ன ஒரே ஆளு இவர் மட்டுந்தான். 

எம்ஜிஆர மாதிரியே இவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னோட பள்ளிப்பருவ ஹீரோ இவரு. என்னையே 'சின்ராசு'ன்னு கூப்பிட்ட நண்பர்களும் உண்டு..

இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், திரைக்கதையாசிரியர், பத்திரிகையாசிரியர் பாக்யராஜ் அவர்களுக்கு பிறந்த நாள் (ஜனவரி 7) வாழ்த்துகள்...

#நெல்லை_ரவீந்திரன்