Sunday 31 December 2023

அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே...

 "அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே...

பனி துளியைப் போல குணம் படைச்ச தென்னவனே..."

...




சாதி மதம் இனம் அரசியல் அனைத்ததையும் கடந்து தமிழகமே துடிக்குது, இந்த மனிதனின் இறப்பை கேட்டு...

எனக்கு தெரிந்தவரை ஒரு பெரிய நெடுஞ்சாலை முழுக்க 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் வெள்ளம் நிறைந்து கிடக்க, ஒரு மனிதனின் இறுதி ஊர்வலம் நடந்தது ஈதுவே முதன் முறை.

தமிழகத்தின் மிகப் பெரிய ஆளுமைகளுக்கு கூட இப்படி பார்க்கவில்லை...!





மதுரையில் ரைஸ் மில் ஓனர் மகனாக இருந்தபோதே ஆரம்பித்த உதவும் குணம், கடைசி வரை தொடர்ந்தது. 

80, 90களில் நடிகர்கள் ஆட்டோகிராப் போட்டு படங்களை ரசிகர்களுக்கு அனுப்புவது வழக்கம். இவரோ ஒரு படி மேல்...  படிப்பு போன்று ஏதாவது உதவி கேட்டால் மணி ஆர்டரும் சேர்த்து அனுப்புவார். (9ம் வகுப்பில் நண்பன் ஒருவன் மூலம் தெரிந்தது)

சக நடிகர்களுக்கு படப்பிடிப்பு முதற் கொண்டு சொந்த வாழ்க்கை வரை உதவிக்கரம் நீட்டுவது பற்றி பலரும் கூறுவதை கேட்டிருக்கலாம். கடந்த வாரம் நடிகர் போண்டா மணி மரணத்தின் போது கூட இவரிடம் இருந்து ஒரு லட்ச ரூபாய் போனது.

1980களில் மிக உச்சத்தில் இருந்தபோது கூட 'பூந்தோட்ட காவல் காரன்', 'ஊமை விழிகள்' மாதிரி வயசான கேரக்டர்களிலும் 'வைதேகி காத்திருந்தாள்' மாதிரியான மனப்பிறழ்வு வேடத்திலும் இமேஜ் பார்க்காமல் நடித்தவர்.

வெற்றிப்பட இயக்குநர்களையே திரும்ப திரும்ப தேடி ஓடாமல் புதியவர்களை கைதூக்கி விட்டவர். 150  படங்கள் நடித்திருக்கிறார். அதில் 50க்கும் மேற்பட்டவை புதிய இயக்குநர்களின் படங்கள். ஆர்.கே.செல்வமணி உட்பட பலரை சொல்லலாம். பூந்தோட்ட காவல்காரனில் லிவிங்ஸ்டன், புலன் விசாரணையில் சரத்குமார், கேப்டன் பிரபாகரனில் மன்சூர் அலிகான், செந்தூரப்பூவே ராம்கி என  துவங்கி ஏராளமான திரை பிரபலங்கள் அவரால் திரையில் முகம் காட்ட துவங்கியவர்கள் தான். 

ஆரம்ப காலத்தில் விஜய் பெரிதாக சோபிக்காமல் இருந்தபோது அவரது தந்தை எஸ்ஏசி மீதான பாசத்தால் 'செந்தூரப் பாண்டி' மாதிரியான படங்களில் கூடவே நடிக்க வைத்தவர்.

இப்படி திரையுலகினருக்கு மட்டுமல்ல. நடிகர் சங்கத்துக்கே இவரால் தான் விடிவு காலம் பிறந்தது. எம்ஜிஆர் சிவாஜி என ஜாம்பவான்கள் கோலோச்சிய நடிகர் சங்கம் கடன் சுமையில் தள்ளாடியபோது இவர்தான் தலைமை ஏற்று நடிகர் சங்க கடனை முழுமையாக அடைத்து உபரி நிதியை சேர்த்தவர்.

இதற்காக நடிகர் நடிகைகளை ஒருங்கிணைத்து கலை நிகழ்ச்சிகளை நடத்தினார். அந்த ஒருங்கிணைப்பு வேலை எல்லாம் அவ்வளவு லேசானதல்ல. இப்போதும் அவர் தலைவராக இருந்திருந்தால் சங்க கட்டிடம் கட்டப்பட்டிருக்கும்.

ஏனென்றால் அவர் தகுதியான கேப்டன். மற்ற எந்த நடிகரையும் போல இல்லாமல் தனது நூறாவது படத்தை கூட மாபெரும் வெற்றிப் படமாக கொடுத்த கேப்டன்.

எம்ஜிஆருக்கு பிறகு தனது சொந்த செல்வாக்கை மட்டுமே மூலதனமாகக் கொண்டு கட்சி ஆரம்பித்து தனியாகவே எம்எல்ஏவாக வென்றவர். 2006 முதல் தொடர்ந்து பத்து ஆண்டுகள் எம்எல்ஏ. 

தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் திமுக அதிமுக அல்லாத ஒரே எதிர்க்கட்சி தலைவர் இவர்தான். எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது மூத்த காபினெட் அமைச்சர் பதவிக்கு நிகரானது. ஜெயலலிதா உடன் கூட்டணியால் கிடைத்தது.

2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி. தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். அந்த தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை இந்த கூட்டணிதான்  பெற்றது. திமுக அணிக்கு மூன்றாவது இடம்தான். இவரது கட்சி ஒரு எம்பி கூட பெறாதபோதும் டெல்லி சென்றபோது  பிரதமர் மோடி ஓடோடி வந்து கட்டித் தழுவி வரவேற்றார்.


இப்படி கிடைத்த நல்ல அரசியல் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்த தவறியது, விதிப்பயன்றி வேறென்ன...?

நல்ல மனிதர். மனதில் பட்டதை பேச்சிலும் செயலிலும் காட்டும் குணம் படைத்தவர். புனித மாதமான மார்கழியில் இறைவனிடம் சென்றிருக்கிறார்...

எந்த ஒரு உயர்ந்த பதவியிலும் இருந்தவர் இல்லை... 

ஆனாலும் குவிந்து கிடக்குது லட்சக்கணக்கான ஜனம்...

இந்த மனுசப்பயலுக குணமே இதுதான்...

இருக்கும்போது கண்டுக்காம கல்லறையில் வந்து பூ வைப்பாங்க...

...







இந்த வீடு நமக்கு சொந்தமில்லை...

அதனால நமக்கு துன்பமில்லை...

உள்ளவங்க எத்தனையோ

வந்து வந்து போனாங்க...

சந்தையில வெள்ளாட்டு

மந்தையைப் போல் ஆனாங்க...


எந்நாளும் நல்லவர்களுக்கு

ஏழைகளின் மனம்தான்

பொன்னான வீடாகும்...

ஊராரின் வாழ்த்துகள் தான்

நிலைத்திருக்கும் பொருளாகும்...


உன் பெயரை சரித்திரத்தில்

மனிதன் என்று பொறித்திடு...

இங்கு வெல்லுறவன் யாரு...

மண்ணில் வாழும் மக்கள் நெஞ்சில்

நிற்கும் உந்தன் பேரு...


#நெல்லை_ரவீந்திரன்