Wednesday, March 30, 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 23


= வை.ரவீந்திரன்
 
தமிழகத்தில் 1980 சட்டப்பேரவை தேர்தலில் எம்ஜிஆர் பெற்ற வெற்றிக்கு பிறகு, அவரது செல்வாக்கைக் கண்டு இந்திரா காந்தி மனம் மாறத் தொடங்கியது. மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் மாநில வளர்ச்சி என்பது கானல் நீராகும் என்பதை எம்ஜிஆரும் அறிந்திருந்தார். அதனால், சில மாதங்களிலேயே அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் நெருக்கமாகின. கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் விரும்பவில்லை என்பதால் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் (3-ல் 2 பங்கு), சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கி கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இது எம்ஜிஆர் பார்முலா.தமிழகத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை எதிரொலிக்க தொடங்கிய கால கட்டமும் அதுதான். இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அதிபராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனே ஆட்சி செய்த தருணம் அது. இனக்கலவரம் உச்சத்தில் இருந்தது. எல்டிடிஈ. ஈபிஆர்எல்எப், டெலோ என பல்வேறு போராளி குழுக்களும் தமிழர்களின் உரிமைகளுக்காக ஆயுதமேந்தி போராடினர். இந்த சூழ்நிலையில், 1983ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மறக்க முடியா நிகழ்வு அரங்கேறியது.

இலங்கை அரசுக்கு எதிராக போராடிய தமிழ் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகளை அடைத்து வைத்திருந்த வெலிக்கடை சிறையில் மாபெரும் கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. ஜூலை 25 மற்றும் 27 என இரண்டு நாட்களில் நடந்த அந்த கொடூர தாக்குதலில் முதல் நாளில் 35 பேர், இரண்டாவது நாளில் 18 பேர் என மொத்தம் 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.அது, தமிழக அரசியல் களத்திலும் பேரதிர்வை ஏற்படுத்தியது. இலங்கை தமிழர்கள் படுகொலையை கண்டித்து சென்னையில் மிகப்பெரிய பேரணியை திமுக நடத்தியது. தனது எம்எல்ஏ பதவியை ஆகஸ்ட் 10ம் தேதி கருணாநிதி ராஜினாமா செய்தார். மறுபுறம், இலங்கை பிரச்சினையில் தலையிடுமாறு பிரதமர் இந்திரா காந்தியை முதல்வர் எம்ஜிஆர் வலியுறுத்தி வந்தார். தமிழகத்துக்கு பிரபாகரன் வந்து எம்ஜிஆரை சந்தித்தது, இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுத பயிற்சி அளித்தது என்பதெல்லாம் இந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகள் தான். இப்படியாக, தமிழக அரசியல் களத்தை 30 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கை தமிழர் விவகாரம் ஆக்கிரமிக்க தொடங்கி விட்டது. இதற்கிடையே, 1984ம் ஆண்டு அக்டோபரில் எம்ஜிஆருக்கு சிறுநீரக பாதிப்பு, மாரடைப்பு என உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்காக, அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் டவுண் ஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது, தமிழகத்தின் இடைக்கால முதல்வராக நெடுஞ்செழியன் பொறுப்பு வகித்தார். மத்தியிலும் இதேபோன்ற இக்கட்டான நிலைமை உருவானது. காலிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாட பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியதால், 1984 அக்டோபர் 31 அன்று சீக்கியர்களான தனது மெய்க்காப்பாளர்கள் இருவராலேயே பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால், மத்தியிலும் குழப்பமான சூழ்நிலை உருவாகி, இந்திரா காந்தியின் மகன் ராஜிவ்காந்தி, உடனடியாக பிரதமராக்கப்பட்டார். இதுபோன்ற சிக்கல்களுக்கு இடையே, 1984 தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியது.

(நினைவுகள் சுழலும்...)

Monday, March 28, 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 22


= வை.ரவீந்திரன்

தமிழகத்தில் 1980ம் ஆண்டு பிப்ரவரியில் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்ட மூன்றே மாதங்களில் மே 28, 31 என இரண்டு கட்டங்களாக 7-வது சட்டப் பேரவை பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல்வரான மூன்றே ஆண்டுகளில் ஆட்சி கலைக்கப்பட்டதோடு மத்தியில் திமுக செல்வாக்கு ஓங்கி இருந்ததால் எம்ஜிஆருக்கும், தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றாக அதிமுக வளர்ந்ததோடு, ஜனதா தலைவர்களின் உதவியுடன் அதிமுகவை இணைக்க எடுத்த முயற்சியும் தோல்வியை தழுவியதால் கருணாநிதிக்கும், அந்த தேர்தல் ‘வாழ்வா, சாவா’ போராட்டமாகவே அமைந்தது.


 அதனாலேயே, 14 கட்சிகளை கொண்ட மெகா கூட்டணியை அமைக்க எம்ஜிஆர் முயன்றார். மத்தியில் ஆட்சியை இழந்த நிலையில் இருந்த ஜனதா கட்சி 60 தொகுதிகளை கேட்டது. அதை எம்ஜிஆர் ஏற்காததால் தனியாகவே ஜனதா களமிறங்கியது. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், குமரி அனந்தன் தலைமையிலான காகாதேகா (காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ்), பார்வர்டு பிளாக், பழ.நெடுமாறன் தலைமையிலான கட்சி உள்ளிட்ட சில கட்சிகளை அதிமுக அணியில் சேர்த்துக் கொண்டு தேர்தலை சந்தித்தார், எம்ஜிஆர். கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியது போக, 177 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது.  

மறுபுறம் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் அதுவரை இல்லாத முறையில் தொகுதி ஒதுக்கீடு அமைந்தது. ‘இந்தியா என்றால் இந்திரா’ என்ற கோஷம் வலுப்பெற்றிருந்த காலம் என்பதாலும் வீராணம் ஊழல் மற்றும் சர்க்காரியா கமிஷன் போன்ற சிக்கல்களில் கருணாநிதி இருந்ததாலும் சமயம் பார்த்து திமுகவை நிர்பந்தம் செய்தது காங்கிரஸ். கூட்டணியில் சரி பாதி தொகுதி வழங்குமாறு வலியுறுத்தியது. அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜி.கே.மூப்பனார்.இறுதியாக திமுக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் தலா 114 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவானது. 6 இடங்களை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கினர். இரண்டு கட்சிகளுமே சரி பாதி இடங்களில் நிற்பதால், ‘அந்த கூட்டணி வெற்றி பெற்றால் யார் முதல்வர்?’ என்ற கேள்வி எழுந்தது. தேர்தல் பிரசாரத்திலும் இந்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘கூட்டணி வெற்றி பெற்றால் கருணாநிதியே முதல்வர் ஆவார்’ என இந்திரா காந்தி முற்றுப்புள்ளி வைத்தார். இந்த தேர்தலில், பாஜக களமிறங்கியது என்பதும் 10 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியதும் கூடுதல் தகவல். 

https://www.youtube.com/watch?v=uRqJ5ZDdKxs

தேர்தல் களத்தில் எம்ஜிஆரின் பிரதான பிரச்சாரம், ‘நான் என்ன குற்றம் செய்தேன்? என்னை ஏன் பதவியில் இருந்து இறக்கினார்கள்? நீங்கள் தேர்ந்தெடுத்த இந்த ஆட்சிக்கு இன்னும் இரண்டு ஆண்டு காலம் பதவி உள்ள நிலையில் இப்போது என்னை இறக்கியது ஏன்?’ என்பதே. முடிவில் அதிமுக கூட்டணி 162 இடங்களை கைப்பற்றியது. அதிமுக மட்டும் 129 தொகுதிகளில் வென்றது. 1980ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி இரண்டாவது முறையாக தமிழக முதல்வரானார் எம்ஜிஆர்.திமுக 37 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும் வெற்றி பெற்றன. சென்னை அண்ணாநகரில் நூலிழை வித்தியாசத்தில் (699 வாக்குகள்) அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டேயை வென்றார் கருணாநிதி. மதுரை மேற்கு தொகுதியில் 21 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் எம்ஜிஆர் வென்றார். பாராளுமன்ற தேர்தலில் வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்ற அதிமுக, அடுத்த ஐந்தே மாதங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 162 இடங்களில் வென்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

(நினைவுகள் சுழலும்...)  

Saturday, March 26, 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 21= வை.ரவீந்திரன். 

தேர்தல் நேர கூட்டணிகளில் கொள்கை என்பது இரண்டாம்பட்சமே என்ற பார்முலா அறிமுகமான காலகட்டம் அது. 1977 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பிறகு, மத்தியில் ஜனதா அரசு அமைந்ததும் அதற்கு அதிமுக ஆதரவு அளித்தது. பின்னர், பிரதமர் சரண்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இரண்டு அமைச்சர் பதவிகளையும் அதிமுக பெற்றது.

இது ஒருபுறம் இருக்க, எமர்ஜென்சியை தீவிரமாக எதிர்த்து, மிசா கால சிறைக் கொடுமைகளை அனுபவித்து, 1976ல் ஆட்சியை பறிகொடுத்து, மதுரையில் இந்திரா காந்தியை தாக்கிய திமுகவின் நிலைப்பாட்டில் இரண்டே ஆண்டில் மிகப்பெரிய மாற்றம். எந்த இந்திரா காந்தியை கடுமையாக எதிர்த்தாரோ அவருடனேயே கூட்டணி அமைத்தார் கருணாநிதி.


மத்தியில் ஆண்ட ஜனதா கட்சி பிளவுபட்டு மத்திய அரசு கவிழ்ந்ததால் 1980 ஜனவரியில் நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் இந்திரா காங்கிரஸ் கட்சியும் திமுகவும் கூட்டணி அமைத்து 37 எம்பி தொகுதிகளை கைப்பற்றின. அப்போது, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த எம்ஜிஆரின் அதிமுக அணிக்கு (அதிமுக, இரண்டு கம்யூனிஸ்டுகள், ஜனதா) 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன. சிவகாசி, கோபிசெட்டிப் பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.

நாடு முழுவதும் அமோக வெற்றி பெற்று மிருகபலத்துடன் மீண்டும் பிரதமரானார் இந்திரா. பாராளுமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் கிடைத்த அபரிமிதமான வெற்றியால், எம்ஜிஆர் ஆட்சியை உடனடியாக கலைக்குமாறு இந்திராவுக்கு திமுக நெருக்கடி கொடுத்தது. ஏற்கனவே, ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்த மாநில அரசுகளை கலைக்கும் முடிவில் இருந்த இந்திரா காந்தி, திமுக விடுத்த இந்த கோரிக்கையையும் ஏற்றார்.  

1980ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி, தமிழகத்தில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு கலைக்கப்பட்டது. அதிமுக அரசு மட்டுமல்லாமல், ஒரே நாளில் 9 மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சிகளை கலைத்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.அப்போதெல்லாம், நினைத்த மாத்திரத்தில் மாநில அரசுகளை அரசியல் அமைப்பு சட்டம் 356-வது பிரிவை பயன்படுத்தி மத்திய அரசு எளிதாக கலைத்து விடுவது வழக்கம். 1988ம் ஆண்டு கர்நாடக முதல்வர் எஸ்.ஆர். பொம்மை ஆட்சி கலைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த 9 நீதிபதிகளை கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், 1994ம் ஆண்டு  மிகக் கடுமையான தீர்ப்பை வழங்கியது. 


அதில், உள்நோக்கத்துடன் மாநில அரசை கலைத்தால் அதை மீண்டும் பதவியில் அமர்த்த சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் உண்டு என்றது. அதன்பிறகு தான், ஆட்சி கலைப்பு சம்பவங்கள் கட்டுக்குள் வந்தன. அந்த தீர்ப்பு வரும் வரையிலும் (1994 வரை) ஆட்சி கலைப்பு வைபவங்கள் இந்தியாவில் ஏகபோகமாக அரங்கேறின என்பது குறிப்பிடத்தக்கது.  

நினைவுகள் சுழலும்)

Thursday, March 24, 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 20= வை.ரவீந்திரன். 


நாடு முழுவதும் எமர்ஜென்சியை அமல்படுத்திய இந்திரா காந்திக்கு அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் மட்டுமன்றி காமராஜரின் மறைவுக்கு பிறகு ஸ்தாபன காங்கிரசும் கூட ஆதரவளித்தது. காமராஜர் மறைவுக்கு பிறகு அந்த கட்சியை வழி நடத்திய ஜி.கே.மூப்பனார், 1976ம் ஆண்டில் இந்திரா காங்கிரசுடன் கட்சியை இணைத்து விட்டார். கைமாறாக இந்திரா காங்கிரசின் தமிழக தலைவராக அவரை இந்திரா நியமித்தார். அந்த இணைப்பு பிடிக்காத சில தலைவர்கள், ஜனதா கட்சியில் இணைந்தனர். எமர்ஜென்சி விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு, முதல் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 1977ம் ஆண்டு நடந்தது. இந்த தேர்தலில் திமுக தனித்து போட்டி, அதிமுக தலைமையில் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) ஒரு அணி, இந்திரா காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றொரு அணி என மூன்று அணிகளோடு  எமர்ஜென்சியை தொடர்ந்து மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய ஜனதா கட்சி தனி அணி என மொத்தம் 4 முனை போட்டி நிலவியது.

 
இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் சட்டப்பேரவை தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன் (1977 மார்ச்) நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக, இந்திரா காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி 34 எம்பி தொகுதிகளை வென்றிருந்தன. அதிமுக மட்டும் 17 எம்பிக்களை கைப்பற்றி இருந்தது. அதுபோல திமுக, ஜனதா, லோக்தளம் அணி 5 இடங்களில் வென்றது. ஆனால், மூன்றே மாதங்களில் இந்த கூட்டணிகளில் பெரிய மாற்றம்.

பெரிய அளவில் வெற்றியை பெற்றதாலும் மத்தியில் இந்திரா பதவியை இழந்து இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமராக மொரார்ஜி தேசாய் பதவியேற்றதாலும் காங்கிரஸை எம்ஜிஆர் ஒதுக்கி விட்டு தனித்து களமிறங்கினார். இந்த தேர்தலையொட்டிய தருணத்தில் தான் மதுரைக்கு வந்திருந்த இந்திரா காந்திக்கு எதிராக திமுக நடத்திய கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தின்போது இந்திரா மீது தாக்குதல் நடந்தது. மற்றொரு புறம், தோல்வி காரணமாக திமுக அணியில் இருந்து ஜனதா கட்சி விலகி தனியாக போட்டியிட்டது. இப்படியான அணி மாற்றங்களுடன் 1977 ஜூன் 10ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதிமுகவுக்கு அதுவே முதல் சட்டப்பேரவை பொதுத் தேர்தல். நான்கு முனை போட்டியில் 142 இடங்களை அதிமுக கூட்டணி (அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட்) கைப்பற்றியது. அதிமுக மட்டும் தனியாக 130 இடங்களில் வென்று தமிழக முதல்வராக 1977 ஜூன் 30ல் எம்ஜிஆர் பொறுப்பேற்றார்.முந்தைய தேர்தலில் முறியடிக்க முடியா சாதனையாக 184 இடங்களை பெற்ற திமுகவுக்கு 48 இடங்கள் மட்டுமே இந்த தேர்தலில் கிடைத்தன. சென்னை அண்ணாநகர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி வென்று தமிழக எதிர்க்கட்சி தலைவரானார். இந்திரா காங்கிரஸ் 27, ஜனதா 10 இடங்களில் வென்றன. மாபெரும் வெற்றி பெற்று தமிழக அரியணையில் அமர்ந்த எம்ஜிஆரின் ஆட்சி, அடுத்த 3 ஆண்டுகளிலேயே கலைக்கப்பட்டது.
  
(நினைவுகள் சுழலும்)

Monday, March 21, 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 19= வை.ரவீந்திரன்.

1971 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சிக்குள் எந்த அளவுக்கு மாற்றங்கள் நிகழ்ந்ததோ, அதற்கு சற்றும் குறைவில்லாத அளவுக்கு 1971 தேர்தலுக்கு பிறகு திமுகவுக்குள் அதிரடி மாற்றங்களும் திருப்பங்களும் அரங்கேறின. அண்ணா மறைந்ததுமே, திமுகவுக்குள் பிரளயம் தொடங்கி விட்டது. ‘அழைக்கின்றார் அண்ணா’ என்பன போன்ற பாடல்கள் குறைந்து ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ என பிரச்சார பாடல்கள் அதிக அளவில் திமுக பொதுக்கூட்டங்களில் ஒலிக்க தொடங்கின.


விளைவாக, மூத்த தலைவர்களான சத்தியவாணி முத்து, நெடுஞ்செழியன், க.ராசாராம் போன்றோர் கட்சியில் இருந்து வெளியேறினர். எனினும், 1972 அக்டோபர் 10ம் தேதி திமுக பொருளாளர் எம்ஜிஆர் வெளியேற்றப்பட்ட நிகழ்வு தான் திமுகவில் பேரதிர்வை ஏற்படுத்தியது. எம்ஜிஆர் பின்னால் அணிவகுத்த லட்சக்கணக்கான தொண்டர்களால் அக்.17ம் தேதி அதிமுக தோன்றியது. இரண்டு துண்டாக திமுக பிளவுபட்டது.  
சட்டப்பேரவையில் சபாநாயகர் மதியழகன், துணை சபாநாயகர் சீனிவாசன் இருவரும் ஒரே நேரத்தில் சபையை நடத்தியது, கருணாநிதி ஆட்சி மீது எம்ஜிஆர் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் (1973) அதிமுக வெற்றி, எம்ஜிஆரின் அரசியல் எழுச்சி, தமிழக சட்டப்பேரவைக்குள் எம்ஜிஆருக்கு மைக் இணைப்பு கொடுக்காமல் அவமதித்தது என பல்வேறு சம்பவங்கள் அடுக்கடுக்காக தொடர்ந்தன. அப்போது, ‘இரண்டு கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என காமராஜர் கூறினார். இதற்கிடையே, 1975ம் ஆண்டு ஜூன் மாதம் நாடு முழுதும் நெருக்கடி நிலையை இந்திரா அமல்படுத்தினார். தமிழகத்தில் பெரிய அளவுக்கு எதிர்ப்பு இல்லை. ஏனென்றால், எமர்ஜென்சியின் தீவிர எதிர்ப்பாளரான ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஊழல் புகாரில் சிக்கிய திமுகவுடன் நெருக்கம் காட்டினார். அதனால், திமுகவுடன் இணைந்து எமர்ஜென்சியை எதிர்ப்பதில் காமராஜர் தயக்கம் காட்டினார். மேலும், எமர்ஜென்சி அறிவித்த 4 மாதங்களிலேயே அவர் மறைந்து விட்டார். 
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், எமர்ஜென்சிக்கு எதிராக திமுக தீவிர பிரச்சாரம் செய்தது. எனினும், இந்திரா காந்திக்கு அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்தன. ஊழல் குற்றச்சாட்டில் 1976ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் முதன் முதலாக ஆட்சி கலைப்பு வைபவம் அரங்கேறியது.

பின்னாளில், கருணாநிதி மீது அதிமுக அளித்த புகார்களின் அடிப்படையில் வீராணம் ஊழல் உள்ளிட்ட ஊழல்கள் பற்றி விசாரிக்க நீதிபதி சர்க்காரியா தலைமையில் கமிஷன் அமைத்ததும், எமர்ஜென்சி கொடுமைகளும், மதுரையில் 1977ம் ஆண்டு இந்திரா காந்தி தாக்கப்பட்டதும் தாக்குதலை பழ.நெடுமாறன் தடுத்ததும் தனிக்கதை.

(நினைவுகள் சுழலும்)

Friday, March 18, 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 18= வை.ரவீந்திரன்.

சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் என்ற நடைமுறையில் தமிழகத்தை பொறுத்தவரையிலும் 1971 வரை எந்த இடையூறும் நிகழவில்லை. தமிழ்நாடு சட்டப்பேரவையின் 5வது பொதுத் தேர்தல் 1972ம் ஆண்டு தான் நடந்திருக்க வேண்டும். ஆனால், மூத்த தலைவர்களின் அதிருப்தியால் காங்கிரஸ் பிளவுபட்டு இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என இரண்டாகி நின்றது. எனவே, பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்தி தனது பலத்தை நிரூபிக்க பிரதமர் இந்திரா விரும்பினார்.இதையடுத்து, இந்திய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அண்ணா மறைவையடுத்து முதல்வரான கருணாநிதி, தமிழக சட்டப்பேரவை தேர்தலையும் அத்துடன் சேர்த்து நடத்த முன் வந்தார். அதனால், தமிழ்நாடு சட்டப்பேரவை மற்றும் இந்திய பாராளுமன்றம் என இரண்டுக்கும் 1971ம் ஆண்டிலேயே தேர்தல் நடைபெற்றது. எம்ஜிஆர், கருணாநிதி இருவரும் இணைந்திருந்த இந்த தேர்தலில் திமுக அணியில் இந்திரா காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், பிரஜா சோசலிஸ்ட், பார்வர்டு பிளாக், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றன.மூத்த தலைவர்கள் வெளியேறியதால் மத்திய ஆட்சியை தக்க வைக்க வேண்டிய சூழ்நிலையில் இந்திரா காந்தி இருந்தார். எனவே, தமிழக சட்டப்பேரவைக்கு தொகுதி பங்கீட்டை அவர் எதிர்பார்க்கவில்லை. தமிழகத்தில் 9 பாராளுமன்ற தொகுதிகளை மட்டும் திமுக அணியில் அவர் பெற்றார். இதுதான், திராவிட கட்சிகளின் தோளில் காங்கிரஸ் கட்சி சவாரி செய்வதற்கு போடப்பட்ட முதல் பிள்ளையார் சுழி.

முந்தைய தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக இருந்த ராஜாஜி, இந்த தேர்தலில் திமுகவுக்கு எதிராக நின்றார். காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ், ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சி இணைந்து தேர்தல் களத்தில் இறங்கின. இந்த தேர்தலில் தான் பெருந்தலைவர் காமராஜரை மிகக் கடுமையாக திமுகவினர் விமர்சிக்க தொடங்கினர். தேர்தல் களத்தில் தனி நபர் தாக்குதல் ஆரம்பமானது, இந்த தேர்தலில் தான் என்று கூறலாம்.  


1971ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த இந்த தேர்தலில் திமுக கூட்டணி 205 இடங்களை கைப்பற்றியது. திமுக மட்டும் தனியாக 184 தொகுதிகளை வென்றது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் அதற்கு முன்னும் சரி. அதற்கு பிறகும் சரி. இந்த அளவு எண்ணிக்கையில் தனியொரு கட்சி இதுவரை வெற்றி பெற்றதில்லை. அந்த வகையில் இது ஒரு வரலாற்று வெற்றி. தமிழக முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார் கருணாநிதி. நெடுஞ்செழியன், அன்பழகன், சி.பா.ஆதித்தனார், அன்பில் தர்மலிங்கம் உட்பட 12 பேர் அமைச்சர்களாகினர்.

காமராஜரின் ஸ்தாபன காங்கிரசுக்கு 21 இடங்கள் மட்டுமே கிடைத்தன. நாகர்கோவில் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு காமராஜர் தேர்வானார். சென்னை சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் கருணாநிதி வெற்றி பெற்றிருந்தார். அருகில் பரங்கிமலை தொகுதியில் எம்ஜிஆர் வென்றிருந்தார். இந்த மகத்தான வெற்றிக்கு பிறகுதான், இரு சகாப்தங்களுக்கு இடையே பிரிவு நேரிட்டது.

(நினைவுகள் சுழலும் ...)

Wednesday, March 16, 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 17= வை.ரவீந்திரன்.

1967ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பிறகு, தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் ஆதிக்கம் மேலோங்கியது. தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த அண்ணா, 1969ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி சென்னை மாகாணத்தின் பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றம் செய்தார். அரசு கெஜட்டின் படி, சென்னை மாகாணத்தின் கடைசி முதல்வர், தமிழ்நாட்டின் முதலாவது முதல்வர் என்ற பெருமைகள் அண்ணாவையே சேரும்.தமிழ்நாடாக மாற்றம் பெற்ற பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் பொதுத்தேர்தல் 1971ம் ஆண்டு நடைபெற்றது. அதற்கு முன்பாக மாநில அரசியலிலும், மத்திய அரசியலிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. தமிழ்நாடு பெயர் மாற்றம் செய்யப்பட்ட 20 நாளிலேயே அண்ணா மறைந்தார். அதைத் தொடர்ந்து, முதல்வர் பதவிக்கு திமுகவுக்குள் எழுந்த கடும் போட்டிக்கு இடையே கருணாநிதி தேர்வானார். அவருக்கு எம்ஜிஆர் முழு ஆதரவு அளித்தார். திமுக தலைவராக கருணாநிதி, பொருளாளராக எம்ஜிஆர் பொறுப்பேற்றனர்.மத்தியில் பிரதமர் இந்திரா காந்தியின் சர்வாதிகார போக்கால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முகம் சுழித்தனர். விளைவாக, காங்கிரஸ் பிளவானது. மூத்த தலைவர்கள் ஒன்று திரண்டிருந்த காங்கிரஸ் கட்சியை அகில இந்திய காங்கிரஸ் (ஆர்கைனைஸ்டு), சுருக்கமாக ஸ்தாபன காங்கிரஸ் என அழைத்தனர். இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, இந்திரா காங்கிரஸ் என அழைக்கப்பட்டது. 
தமிழ்நாட்டில் காமராஜர் இருந்ததால் ஸ்தாபன காங்கிரஸ் கட்சி தான் வலிமையுடன் விளங்கியது. இப்படி ஒரு சூழ்நிலையில், 1971 தேர்தலில் அதிசயங்கள் நிகழ்ந்தன. துவரை எதிரும் புதிருமாக இருந்த ராஜாஜியும், காமராஜரும் இந்த தேர்தலில் கைகோர்த்தனர். பின்னாளில் எதிரும் புதிருமாக இருந்த எம்ஜிஆரும், கருணாநிதியும் இணைந்து சந்தித்த ஒரே தேர்தலும் இதுதான்.

திமுக தலைவராக கருணாநிதி சந்தித்த முதல் பொதுத் தேர்தல் இது. அதுவரை திராவிட இயக்கத்துக்கு எதிராக இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைமை, அந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தது.

(நினைவுகள் சுழலும்)

Monday, March 14, 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 16

= வை.ரவீந்திரன்.

தேர்தலின்போது, அரசியல் கட்சிகள் என்றதும் சின்னங்கள் தான் முதலில் நினைவுக்கு வரும். 1971 தேர்தலின் போது, அகில இந்திய காங்கிரஸ் பிளவு பட்டு இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என பிரிந்து, சின்னமும் மாறியது. எனவே, 1971 தேர்தலுக்கு முன் அதை பார்ப்பது பொருத்தமாக இருக்கும். 1952ம் ஆண்டு ஜனவரியில் 9 நாட்கள் நடந்த சட்டப் பேரவை தேர்தலில், கட்சிகளுக்கு சின்னம் கிடையாது. வண்ண பெட்டிகள் தான். காங்கிரஸ் கட்சிக்கு மஞ்சள் பெட்டி, நீதிக்கட்சிக்கு சிவப்புப் பெட்டி.  1957ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தான் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கி தரப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சின்னம் இரட்டை காளை. ராஜாஜியின் சுதந்திரா கட்சிக்கு நட்சத்திரம் சின்னம். 1957ல் முதன் முதலில் தேர்தல் களத்தில் இறங்கிய திமுகவினருக்கு, சேவல் மற்றும் உதயசூரியன் என சுயேச்சை சின்னங்கள் தான் கிடைத்தன. அந்த தேர்தல் வெற்றிக்கு பிறகு, 1958ம் ஆண்டில் மாநில கட்சியாக திமுக அங்கீகரிக்கப்பட்டு உதய சூரியன் சின்னம் நிரந்தரமானது. இந்தியாவில் 60 ஆண்டுகளாக ஒரே சின்னத்தை தொடர்ந்து வைத்திருக்கும் கட்சி திமுக மட்டுமே. அடுத்ததாக, கம்யூனிஸ்ட் கட்சிகளை கூறலாம்.1969ம் ஆண்டில் இந்திரா அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவு பட்டதும் இரட்டை காளை சின்னம் முடக்கப்பட்டது.
இந்திரா கட்சிக்கு ‘பசுவும் கன்றும்’ சின்னமும், அவரை எதிர்த்த காமராஜர் போன்ற மூத்த தலைவர்களின் ஸ்தாபன காங்கிரஸ் கட்சிக்கு ‘கை ராட்டை சுற்றும் பெண்’ சின்னமும் ஒதுக்கப்பட்டன. 1977ல் மீண்டும் காங்கிரஸ் பிளவு பட்டபோது, இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் (இந்திரா) கட்சிக்கு கை சின்னம் கிடைத்தது. அதுவே, 40 ஆண்டுகளாக நீடித்து இருக்கிறது. தமிழக காங்கிரசில் இருந்து சில தலைவர்கள் வெளியேறி கட்சி தொடங்கிய நிகழ்வுகளும் அரங்கேறின. 1980ல் குமரி அனந்தன் தொடங்கிய காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் (காகாதேகா) கட்சிக்கு ரோஜாப்பூ, 1996ம் ஆண்டு மூப்பனார் தலைமையில் தோன்றிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள், வாழப்பாடி ராமமூர்த்தி தொடங்கிய கட்சியின் ‘மண்டியிட்டு மலர் தூவும் பெண்’ சின்னம், நெடுஞ்செழியன் கட்சியின் (அதிமுகவில் இருந்து பிரிந்த நால்வர் அணி) தென்னை மரம், மதிமுக (குடை, பம்பரம்), பாமக (யானை, மாம்பழம்), தேமுதிக (முரசு) என என தமிழக தேர்தல் களங்களில் சின்னங்களுக்கு கணக்கில்லை. 

 எம்ஜிஆரால் 1972ல் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்துள்ள இன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவின் இரட்டை இலை சின்னம், தேர்தல் ஆணையத்தால் சில ஆண்டு முடக்கி வைக்கப்பட்டு இருந்த தகவல், இன்றைய புதிய தலைமுறையினருக்கு ஆச்சரியமூட்டும். 1989ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் களத்தில் இரட்டை இலை சின்னம் இல்லை. அதிமுக (ஜெயலலிதா) அணி, அதிமுக (ஜானகி) அணி என பிளவு பட்டிருந்ததால் சேவல் சின்னத்தில் ஜெ. அணியும், இரட்டை புறா சின்னத்தில் ஜானகி அணியும் களமிறங்கின. தேர்தலுக்கு பிறகு, இரண்டு அணிகளும் இணைந்ததால் இரட்டை இலை மீண்டும் துளிர்த்தது. 

(நினைவுகள் சுழலும்) 

Friday, March 11, 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 15

=வை.ரவீந்திரன்.

 தமிழகத்தில் 1967ம் ஆண்டு தேர்தலில்தான் கார் மற்றும் பிரச்சார வேன்களை அதிகமாக பயன்படுத்தும் வழக்கம் தொடங்கியது. திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்வது எம்ஜிஆர் பாணி. அப்போதெல்லாம், ஒரே நாளில் தேர்தல் நடத்துவது இல்லை. 1952ம் ஆண்டு முதலாவது பொதுத் தேர்தல் ஜனவரி மாதத்தில் 9 நாட்கள் (9 கட்டமாக) நடந்தது. பின், அது படிப்படியாக குறைந்து 1967 தேர்தல் மூன்று கட்டமாக பிப்ரவரியில் நடந்தது. 
இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியது போக 174 தொகுதிகளில் திமுக நின்றது. தேர்தலுக்கு சரியாக ஒரு மாதம் முன்பு ஜனவரி 12ம் தேதி எம்ஆர் ராதாவால் எம்ஜிஆர் சுடப்பட்டார். தேர்தலில் இந்த விவகாரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல்வேறு  பிரச்சினைகளுடன் எம்ஜிஆர் சுடப்பட்டதால் எழுந்த அனுதாப அலையும் சேர்ந்து காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்தில் சுருட்டி எறிந்தது.   தேர்தல் முடிவில், 179 தொகுதிகள், திமுக கூட்டணி வசமானது. திமுக மட்டும் தனியாக 137 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸுக்கு 51 இடங்கள் மட்டுமே கிடைத்தன. அப்போது, இந்தியா முழுவதும் 9 மாநிலங்களில் ஆட்சியை எதிர்க்கட்சிகளிடம் காங்கிரஸ் பறிகொடுத்தது. அதில், தமிழகத்தில் மட்டும் தான் அறுதி பெரும்பான்மையுடன் எதிர்க்கட்சி ஆட்சி அமைந்தது. முன்னதாக, 1957ல் முதன் முதலில் கேரளாவில் காங்கிரஸ் அல்லாத கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது. 1967 தோல்விக்கு பிறகு, தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்பது இன்னமும் கனவாகவே நீடிக்கிறது.  

விருதுநகர் தொகுதியில் 1200 வாக்குகளில் காமராஜரும், தமிழக முதல்வராக இருந்த பக்தவத்சலம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் தோல்வியடைந்தனர். பக்தவத்சலம் அமைச்சரவையில் பூவராகவனை தவிர அனைத்து அமைச்சர்களுமே தோல்வியை தழுவினர். மருத்துவமனையில் படுத்துக்கொண்டே சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் தொகுதியில் எம்ஜிஆர் வெற்றி பெற்றார். அதே நேரத்தில், தென்சென்னை தொகுதியில் இருந்து எம்பியாக அண்ணா வெற்றி பெற்றிருந்தார். தனிப் பெரும்பான்மையுடன் திமுக வென்றதை தொடர்ந்து, எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அண்ணா. பிறகு, தமிழக சட்ட மேலவை உறுப்பினராகி (எம்எல்சி) 1967ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி அன்று தமிழக முதல்வராக பதவியேற்றார். தமிழகத்தில் திராவிட கட்சிகளின் அசைக்க முடியாத ஆதிக்கம் ஆரம்பமானது. 


அண்ணா தலைமையிலான தமிழகத்தின் காங்கிரஸ் அல்லாத முதல் அமைச்சரவையில் நெடுஞ்செழியன், கருணாநிதி, மதியழகன் உட்பட 9 பேர் அமைச்சராகினர். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இருந்து தேர்வான நாம் தமிழர் கட்சி தலைவர் சி.பா. ஆதித்தனார், சபாநாயகரானார்.

(நினைவுகள் சுழலும்...)

Wednesday, March 9, 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 14

= வை.ரவீந்திரன். 

1962ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு காமராஜரின் ராஜினாமாவை தொடர்ந்து தமிழக முதல்வரான பக்தவத்சலம் ஆட்சியின் மோசமான நிர்வாகம், விலைவாசி உயர்வு, கடுமையான அரிசி பஞ்சம், மத்திய அரசின் இந்தி திணிப்பு, நேரு (1964), லால் பகதூர் சாஸ்திரி (1966) என இரண்டு பிரதமர்களின் அடுத்தடுத்த மறைவு, இந்திரா காந்தி பதவியேற்பு, காங்கிரஸ் ஆட்சி மீது கடும் அதிருப்தி என பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் நடைபெற்ற 1967ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல், தமிழக தேர்தல் வரலாற்றில் மிகவும் முக்கியமானது.காமராஜர், பெரியார், பக்தவத்சலம், ராஜாஜி, சி.பா.ஆதித்தனார், ம.பொ.சி., அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் என என்றென்றும் தமிழகத்தின் முகங்களாக திகழும் அனைத்து முக்கிய தலைவர்களும் பங்கெடுத்த தேர்தல் அது. சென்னை மாகாணம் என்ற பெயரில் நடைபெற்ற கடைசி சட்டப்பேரவை தேர்தலும் இதுதான். தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் கம்யூனிஸ்ட் கட்சி பிளவு பட்டிருந்ததால் இரண்டு கட்சிகளாக கம்யூனிஸ்ட் களமிறங்கிய முதல் தேர்தல் இது. 


ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சி, சி.பா. ஆதித்தனார் நாம் தமிழர் கட்சி, ம.பொ.சி.தலைமையிலான தமிழ் அரசு கழகம் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்றவை திமுக கூட்டணியில் இடம் பெற்றன. அரிசி பஞ்சம் தலைவிரித்தாடிய அந்த காலத்தில், ‘ரூபாய்க்கு மூன்று படி லட்சியம். ஒரு படி நிச்சயம்’ என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டது. ஒரு படி என்பது சுமார் ஒன்றரை கிலோ.

எம்ஜிஆர், இந்த தேர்தலில் சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் (பரங்கிமலை) தொகுதியில் போட்டியிட்டார். திமுகவுக்கு தேர்தல் நிதி திரட்டுவதிலும் கட்சி வேட்பாளர்களுக்கு தொகுதி வாரியாக நிதி திரட்டவும் மிகவும் உதவியாக எம்ஜிஆர் இருந்தார். ‘தம்பி... ராமச்சந்திரா.  உன் முகத்தை காட்டு ஒரு லட்சம் ஓட்டுகள் விழும்’ என பேரறிஞர் அண்ணா கூறிய வார்த்தைகளும் ‘வேட்டைக்காரன் வருவாண்ணேன். உங்கள வேட்டையாடிட்டு போயிருவாண்ணேன்...’ என்று பெருந்தலைவர் காமராஜர் கூறிய வார்த்தைகளுமே இதற்கு ஆதாரம்.  கல்லக்குடி ரயில் மறியல் போராட்டம், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம், சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றவது என போராட்ட களங்களில் கலைஞர் முன்னின்றார். ராஜாஜி, சி.பா.ஆதித்தனார், சிலம்பு செல்வர் மபொசி போன்ற தலைவர்களின் ஆதரவும் திமுகவுக்கு பக்கபலமாக இருந்தது. திமுகவுக்கு எதிராக சிவாஜி கணேசன், பத்மினி இருவரையும் பிரச்சார களத்தில் காங்கிரஸ் இறக்கியது.

திமுகவின் கைக்கெட்டும் தொலைவில் தமிழக அரியணை இருந்த நேரத்தில், திமுக தலைவரான அண்ணா சட்டப்பேரவைக்கு போட்டியிடாமல் தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் இருந்து எம்பி பதவிக்கு போட்டியிட்டார்.

(நினைவுகள் சுழலும்)

Monday, March 7, 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 13

= வை.ரவீந்திரன். 


தமிழகத்தில் சட்டப்பேரவைக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே 1861ம் ஆண்டு தொடங்கப்பட்ட சட்ட மேலவைக்கு 1986ம் ஆண்டில் ஆயுள் காலம் சுருங்க தொடங்கியது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்களை பரவலாக கூறுவது உண்டு.

அப்போது, மேலவை நியமன உறுப்பினர் பதவிக்கு நடிகை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா பெயரை அதிமுக அரசு பரிந்துரைத்தது. தனது கடனுக்காக, ஏற்கனவே அவர் மஞ்சள் நோட்டீஸ் (இன்சால்வென்சி) அளித்தவர் என்பதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உடனே, நிர்மலாவின் கடனை அதிமுக நிதியில் இருந்து செட்டில் செய்ததோடு, ‘இன்சால்வென்சி’ நோட்டீஸை முதல் அமைச்சர் எம்ஜிஆர் திரும்ப பெற வைத்து நீதிமன்ற அனுமதியையும் பெற்றுத் தந்தார். ஆனால், சர்ச்சை கிளம்பியதால் எம்எல்சியாக நிர்மலா விரும்பவில்லை. 

இதற்கிடையே, வேட்பாளரை பற்றி சரியாக ஆராயாமல் பரிந்துரைத்தது குறித்து எம்ஜிஆரிடம் அப்போதைய ஆளுநர் குரானா கேட்டதால் சட்ட மேலவையை கலைத்து விட எம்ஜிஆர் தீர்மானித்தார் என்பது ஒரு காரணமாக கூறப்படுகிறது. மற்றொரு காரணம் என்ன தெரியுமா?

1957ம் ஆண்டு முதல் தோல்வியே இல்லாமல் எம்எல்ஏவாக வெற்றி பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி, 1984 சட்டப்பேரவை தேர்தலில் எந்த தொகுதியிலும் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்தார் என்பது பலரும் அறியாத தகவல். முன்னதாக இலங்கை பிரச்சினைக்காக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த கருணாநிதி, பின்னர் எம்எல்சி-யாகி இருந்தார். 

இந்த சூழ்நிலையில், தேர்தலின்போது அமெரிக்காவில் எம்ஜிஆர் சிகிச்சை பெற்று கொண்டிருந்தார். தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன் இந்திரா காந்தி கொல்லப்பட்டார். இதனால், 1984 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக + காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, இலங்கை பிரச்சினையில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு வேறு வழியாக எம்எல்சியாக சட்டப்பேரவைக்குள் கருணாநிதி நுழைந்த கருணாநிதியின் பதவியை காலி செய்யவே சட்ட மேலவையை எம்ஜிஆர் கலைத்தார் என்ற மற்றொரு காரணத்தையும் அன்றைய அரசியல் அறிந்தவர்கள் கூறுவது உண்டு. 

“நான் இல்லாவிட்டால் இந்த மேலவை கலைக்கப்படாமல் நீடிக்கும் என்றால் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன். கருணாநிதி ஒழிந்தான். இனி கவலையில்லை. அவன் இல்லாத மேலவை தொடர்ந்து நீடிக்கட்டும் என்ற முடிவை முதலமைச்சர் எடுக்க முன்வரட்டும்" 

= மேலவை கலைப்பு தீர்மானத்தின் மீது மேலவையில் கருணாநிதி ஆற்றிய உரை இது.

ஆனால், சட்ட மேலவையால் அரசுக்கு தேவையில்லாமல் கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் அதை தவிர்க்கவே மேலவை கலைக்கப்படுவதாகவும் அரசு தரப்பில் காரணம் கூறப்பட்டது. மேலவை கலைப்புக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தாலும் 1986ம் ஆண்டு மே 14ம் தேதி அன்று மேலவையை கலைக்கும் தீர்மானத்தை சட்டப்பேரவை மற்றும் மேலவை என இரண்டு அவைகளும் நிறைவேற்றின. மேலவை கலைக்கப்பட்டபோது அதன் தலைவராக இருந்தவர் சிலம்பு செல்வர் ம.பொ.சி.

அதற்கு, ஆகஸ்ட் 30ம் தேதி பாராளுமன்றம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து நவம்பர் 1ம் தேதி, அதிகாரப்பூர்வமாக மேலவை கலைக்கப்பட்டது. பின்னர் 2006, 2010 என திமுக ஆட்சிக்கு வரும் சமயங்களில் மேலவையை உயிர்ப்பிக்க நடைபெறும் முயற்சிகள் அடுத்தடுத்த அதிமுக ஆட்சியால் தடைபடுகின்றன. தற்போது, உத்தரபிரதேசம், பீகார், கர்நாடகம், ஆந்திரா (தெலுங்கானா, ஆந்திரா), மகாராஷ்டிரா, காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் மட்டுமே சட்ட மேலவை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

(நினைவுகள் சுழலும்)

Saturday, March 5, 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 12

= வை.ரவீந்திரன். 

குடியரசு நாடாக 1950ம் ஆண்டில் இந்தியா மாறியதும் சட்ட மேலவையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை என்றாலும் சட்ட மேலவை என்பது நிரந்தர அமைப்பு, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் 3 ஆண்டுக்கு ஒருமுறை மாற வேண்டும், சட்டப்பேரவை இரு அவைகள், ஆளுநர், பாராளுமன்றம் என அனுமதி பெற்றால் மட்டுமே மேலவையை கலைக்க முடியும் என்பது போன்ற முக்கிய அம்சங்கள் அமலாகின.

1952ம் ஆண்டில் சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினர் எண்ணிக்கை 72. ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்கள் பிரிந்த பிறகு தமிழக பகுதிகளை மட்டும் கொண்ட சென்னை மாகாணத்தில் சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) எண்ணிக்கை 63 ஆக குறைந்தது. 1957 முதல் 1986ம் ஆண்டில் தமிழக சட்ட மேலவையின் இறுதி காலம் வரை இதுவே நீடித்தது.

இந்த 63 பேரில் 21 பேரை எம்எல்ஏக்களும் 21 பேரை உள்ளாட்சி பிரதிநிதிகளும், 6 பேரை பட்டதாரி ஆசிரியர்களும், 6 பேரை பட்டதாரிகளும் தேர்வு செய்வார்கள். 9 பேர் நியமன உறுப்பினர்கள். பாராளுமன்றத்தில் உள்ள மாநிலங்களவை போன்ற அமைப்பு என்பதால் இதில் உறுப்பினராக (எம்எல்சி) இருந்தாலே ஒருவர் அமைச்சர் ஆகலாம். அவ்வளவு ஏன்...? முதல்வராகவும் முடியும்.
1952ம் ஆண்டில் ராஜாஜியும், 1967ம் ஆண்டில் அண்ணாவும் அதுபோன்று முதல் அமைச்சர் ஆனவர்கள் தான். 1962ம் ஆண்டில் இந்த அவையின் உறுப்பினராக புரட்சி தலைவர் எம்ஜிஆர் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அவையில் தான் 1951ல் எம்எல்சி ஆனார், கே.பி.சுந்தராம்பாள். அதன் மூலம் இந்தியாவில் முதன் முதலில் மக்கள் பிரதிநிதி பதவியை பெற்ற திரை நட்சத்திரம் என்ற பெயர் அவருக்கு கிடைத்தது.    
மூதறிஞர் ராஜாஜி, சிலம்பு செல்வர் ம.பொ.சி., திராவிட இயக்க தலைவர் சி.பி.சிற்றரசு போன்ற பெரிய தலைவர்கள், சென்னை சட்ட மேலவை தலைவர்களில் முக்கியமானவர்கள். இந்த சபையின் இறுதிக் காலம் 1986ம் ஆண்டு நெருங்கியது.

(நினைவுகள் சுழலும்)

Thursday, March 3, 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 11

= வை.ரவீந்திரன். 


தமிழக சட்டப்பேரவை தேர்தல் களத்தில் 1967ம் ஆண்டு தேர்தல் திருவிழாவை காணும் முன் தமிழக சட்ட மேலவை பற்றிய நினைவுகளை அசை போடுவது பொருத்தமாக இருக்கும்.

தமிழக சட்ட மேலவை ஆரம்ப காலம் என்பது 1861ம் ஆண்டில் தொடங்குகிறது. காலனி ஆதிக்கத்தில், ஆங்கிலேய ஆட்சி நிர்வாகத்துக்கு ஆலோசனை கூறும் சபையாகத்தான் மேலவை தொடங்கப்பட்டது. அதுவும் ஆண்டுக்கு 2 முதல் 10 முறை மட்டுமே கூடியது. ஜமீன்தார், பெரிய நிலச்சுவான்தார் என 21 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். 

1919ம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்திய ஆட்சி நிர்வாகத்தின் சுய நிர்ணய சபை தொடர்பான ‘எட்வின் சாமுவேல் மாண்டேகு -  செம்ஸ்போர்டு பிரபு’ ஆகியோரின் (மாண்டேகு செம்ஸ்போர்ட்) சீர்திருத்தம் அமலுக்கு வந்ததும் உறுப்பினர் எண்ணிக்கை 127 ஆக உயர்த்தப்பட்டு 1920ம் ஆண்டு முதன் முறையாக பொதுத்தேர்தல் நடந்தது. 98 பேர் வாக்காளர்களால் தேர்வு செய்யப்பட்டனர். சொத்து வைத்திருப்பவர்கள், பட்டதாரிகள் என ஒரு சிலருக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கப்பட்டது. 4 கோடி மக்கள் தொகையில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


1920ம் ஆண்டு சட்டமேலவை தேர்தலை காங்கிரஸ் புறக்கணித்தது. தியாகராய செட்டி தலைமையிலான நீதிக்கட்சி 63 இடங்களில் வென்றது. சுப்பராயலு ரெட்டியார் முதல்வரானார். பின்னர், 3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல்களும் நடைபெற்றன. பனகல் ராஜா (1921-1926), பி.சுப்பராயன் (1930 வரை), முனுசாமி நாயுடு, பொப்பிலி ராஜா என அடுத்தடுத்து சென்னை மாகாண முதல்வராக தேர்வு பெற்றனர். 

1937 வரை இந்த நடைமுறையே நீடித்தது. 1937ம் ஆண்டில், 215 உறுப்பினர் (எம்எல்ஏ) கொண்ட சட்டப்பேரவை உருவானதும் மேலவை உறுப்பினர் (எம்எல்சி) எண்ணிக்கை 54 ஆக குறைக்கப்பட்டு சட்டப் பேரவையின் துணை அமைப்பாக மேலவை மாறியது. அதில், 46 பேரை எம்எல்ஏக்கள், பட்டதாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுத்தனர். மீதியுள்ளோரை ஆளுநர் நியமித்தார். சுதந்திரம் பெற்று குடியரசு நாடாக இந்தியா மாறும் வரை இது நீடித்தது.

(நினைவுகள் சுழலும்)