Tuesday, January 2, 2018

ரஜினி… அரசியல்… அதிர்வு…

20 ஆண்டு கால யோசனைக்கு பிறகு முடிவை அறிவித்து விட்டார், ரஜினி. அவரது 5 நிமிட உரையின் அதிர்வலை அடங்குவதற்கு இன்னும் சில வாரம் பிடிக்கலாம். ரஜினியே கூறியது போல, அவரது 45வது வயதில் அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஜெயலலிதா மீதான வெறுப்பு, கலைஞர் மீதான அவநம்பிக்கையால் 1996 தேர்தலில் அந்த யோகம் அமைந்தது. அப்போது மூப்பனாருடன் ரஜினி கை கோர்த்திருந்தால் அண்ணாமலையின் சைக்கிள் ரெக்கை கட்டி பறந்திருக்கும். அந்த தேர்தலில் திமுக கூட்டணிக்காக ரஜினி ரசிகர்கள் பிரசாரம் செய்தது கூட, அடுத்து ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்பார்த்து தான்.
ரஜினியின் தயக்கத்தாலும், கலைஞரின் ராஜதந்திரத்தாலும் திமுக கழுத்தில் வெற்றிமாலை விழுந்தது. அதன்பிறகும் கூட, அரசியல் கடலில் குதிக்காமல் கரையில் அமர்ந்து ஆழத்தை அளந்து பார்த்தே காலம் உருண்டோடி விட்டது. இன்று ஒரு ரசிகர், பேரன், பேத்தி எடுத்து விட்டதாக கூறுகிறார். ஆனாலும் 1996ல் இருந்த ஆர்வத்தில் தான் இருக்கிறார். அரசியல் அறிவிப்பை முழுமையாக வெளியிடாவிட்டாலும் குற்ற உணர்வு உறுத்தும் என கூறி விட்டதால் நிச்சயமாக, 2019 நாடாளுமன்ற தேர்தலில் ரஜினியை எதிர்பார்க்கலாம். கூடவே, சட்டப்பேரவை தேர்தலும் நடந்தால்… நிச்சயம் 1996 திரும்பும் என ரசிகர்கள் நம்புவார்கள்.
அதற்கு முன்பாக சில விஷயங்களில் ரஜினி தயாராக வேண்டும். இதுவரை ரஜினியை ரசித்தவர்கள், புத்தாண்டில் இருந்து வேறுபாடு பார்க்கலாம். கவிஞர் வைரமுத்து கூறியது போல, கலைஞனுக்கும் தலைவனுக்கும் வேறுபாடு உண்டு. தலைவனாக மாறும்போது சிலவற்றை எதிர்கொள்வதை தவிர்க்க முடியாது. 15 ஆண்டுகளுக்கு முன் ரஜினிக்கு பாமக நிறுவனர் ராம்தாஸ் எழுப்பிய கேள்விகள் இன்னும் பதில் கிடைக்காமல் அப்படியே இருக்கின்றன.
அது ஒருபுறம் இருக்க… காவிரி, மீத்தேன் போன்ற பிரச்சினைகளில் ரஜினி குரல் கொடுத்தாரா என குரல்கள் எழும்பும். ரஜினியின் கொள்கை, கோட்பாடுகள் என்ன என மற்றொரு பக்கம் இருந்து குரல்கள் எழும்பும். தமிழகத்தில் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர். கலைஞர், ஜெயலலிதா என யாருக்கும் கொள்கைக்காக யாரும் ஓட்டு போடவில்லை என தெரிந்தும் இந்த கேள்வி கணைகள் வரும். மிக உறுதியான கொள்கைகளை வைத்திருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு வாக்கு வங்கி இல்லை என்பது தெரிந்தும் கூட, நாம் தமிழர் கட்சிக்காக அல்லாமல் சீமானுக்காக வாக்கு விழுகிறது என தெரிந்தும் கூட கேள்விகள் எழும்பும். அவற்றுக்கு சரியான பதில் ரஜினியிடம் இருக்க வேண்டும். எப்போதுமே நேர்முக தேர்வுகளில் செயல்களை விட பொருத்தமான பதில்கள் தான் வெற்றியை தேடி தரும். அது, அரசியல் நுழைவு தேர்வுக்கும் பொருந்தும்.75 நாட்களாக முதல்வரை கண்ணில் காட்டாமலேயே ஆட்சி நடத்திய அரசியல், கூவத்தூர் டிராமா, உடை அலங்காரத்தை மாற்றி அரியணையை நெருங்கியது, இடை தேர்தல் மூலமாக முதல்வர் நாற்காலிக்கு பிராக்கட் போட்டது என பல விதமான அரசியல் நிகழ்வுகளை தமிழக மக்கள் பார்த்து விட்டார்கள். அவற்றை வெறுமனே வேடிக்கை பார்த்ததோடு சில தருணங்களில் அவற்றுக்கு ஒத்துப்போன அரசியல் தலைவர்களையும் தமிழக மக்கள் பார்த்து விட்டார்கள். அந்த தலைவர்களுக்கும் சரியான பதில்கள் கைவசம் தேவை. பாஜக உடன் ரஜினியை தொடர்பு படுத்தி எழும் விமர்சனங்களுக்கும் மக்கள் ஏற்கும் வகையில் விளக்கம் தயாராக இருக்க வேண்டும்.
இனிமேல் தான் தனிபர் விமர்சனங்கள் தாறுமாறாக எகிற தொடங்கும். மலையாளி, அட்டைகத்தி வீரன், கோமாளி என எம்ஜிஆரும் பால்கனி பாவை, பாப்பாத்தி, செல்வி…? என ஜெயலலிதாவும் எதிர்கொண்ட விமர்சனங்களை ஒரு புத்தகமாகவே போடலாம். அதை தாண்டியே, புரட்சித் தலைவராகவும் அம்மாவாகவும் அவர்கள் உயர்ந்தார்கள். ரஜினிக்கு குடும்பம் இருப்பதால் மனைவி, மகள், மருமகனின் தவறுகளும் பூதக் கண்ணாடி போட்டு பார்க்கப்படும். இதற்கெல்லாம் ரஜினி தயாராக இருக்கிறாரா என்பது போகப் போகத்தான் தெரியும். எனினும், அவரது அரசியல் பிரவேசம் டூடூடூ லேட்..
ஆங்கிலத்தை தவிர பிற மொழிகளை மட்டும் மிக தீவிரமாக எதிர்க்கும் தமிழ் அமைப்புகளும், கன்னடத்தை உள்ளடக்கிய திராவிடத்தின் பெயரை கூறிக் கொண்டு ரஜினியை கன்னடர் என விமர்சிக்கும் திராவிட கட்சிகளும் இப்போதே தங்கள் எதிர்ப்பை தொடங்கி விட்டன.
இது ஜனநாயக நாடு. மக்களின் ஆதரவு என்னும் நூல் இருந்தால் புகழ், பதவி என்னும் பட்டம் எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் பறக்கும். ‘உங்களில் உத்தமர் ஒருவர், இந்த பெண்ணின் மீது கல் எறியுங்கள்‘ என இயேசு பிரான் கூறிய கருத்தை உள்வாங்கி வைத்திருப்பவர்கள், தமிழர்கள். எனவே, ரஜினியை விமர்சிப்பவர்களை எளிதில் தரம் பிரித்து பார்த்து விடுவார்கள். ஆனால், தமிழர்களின் ஏகோபித்த ஆதரவை அவ்வளவு எளிதில் பெற்று விட முடியாது. ரஜினியின் அடுத்தடுத்த நகர்வுகள் தான் அந்த ஆதரவை உறுதி செய்யும்.
= நெல்லை ரவீந்திரன்.

வழியெங்கும் பாம்பாட்டியின் குரல்

அய்யா பாருங்க... அம்மா பாருங்க
ஜோரா கை தட்டுங்க
இதுவர பாத்திருக்க மாட்டீங்க...
வளைஞ்சி நெளிஞ்சி ஆடுற
மைக்கேல் ஜாக்சன பாருங்க 
முறைச்சிகிட்டே இருக்கிற
ஜாக்சன் துரைய பாருங்க...
இப்ப மோதப் போறாங்கோ
கையில பையில இருக்கிறத
சாமியோவ் போட்டுட்டு பாருங்க
எங்கேயும் போயிடாதீங்க
ஜாக்சனும் ஜாக்சனும் மோதுறாங்க
வேடிக்கை பாருங்கோ...
பயந்தா அப்பால போங்கோ...
.
எங்கேயும் எப்போதும்
செல்லும் வழியெங்கும்
பாம்பாட்டியின் குரல்
சில நேரங்களில்
பாம்பாட்டியே கீரி அல்லது
பாம்பாக மாறுவதும் உண்டு...

Wednesday, December 20, 2017

ஆஹா ரசிகன்... நல்ல ரசிகன்...

ஆஹா ரசிகன்... நல்ல ரசிகன்...


எத்தனையோ பேர் வந்தாலும் திறமைகள் குவிந்திருப்பவரைத்தான் மக்கள் எப்போதுமே ஏற்றுக் கொள்வார்கள். அதுவும் இரண்டு மூன்று தலைமுறைகளை கட்டிப் போடும் திறமையும் அதிர்ஷடமும் சிலருக்கே வாய்க்கும். அதில் ரஜினிக்கும் இடமுண்டு.

40 ஆண்டுக்கு முன் 16 வயதினிலே தொடங்கி மூன்று முடிச்சு என வரிசையாக தொடர்ந்த ரஜினியின் வில்லத்தனமான நடிப்பு... சந்திரமுகி வேட்டையன்,  எந்திரன் சிட்டி வரை சூடு குறையாமல் இருப்பதை கண்டு வியக்கும் ரசிகன் நான்.

தம்பிக்கு எந்த ஊரு, தில்லுமுல்லு, ராஜாதி ராஜா, குரு சிஷ்யன் இப்படியாக சந்திரமுகி சரவணன் வரை ஆண்டுகளை கடந்தும் கலகலப்பூட்டும் ரஜினியின் நகைச்சுவைக்கு நிரந்தர ரசிகன் நான்.

ரஜினியின் சண்டை காட்சிளை 1980களின் குழந்தைகள் தொடங்கி 2010களின் குழந்தைகளும் ரசிப்பதை சாதாரணமாக பார்க்க முடியாது. எந்த ஒரு மனிதரையும் எல்லோருக்கும் பிடிக்கும் என கூற முடியாது. ஆனால், திரைப்படம் பார்ப்பவர்களில் பெரும்பாலானவர்களை கவரும் 68 வயது இளம் காந்தத்தை வியக்கிறேன்.

=நெல்லை ரவீந்திரன்

துயிலெழுப்பும் அதிகாலை...

துயிலெழுப்பும் அதிகாலை


இதழெனும் போர்வை மூடி
இதமூட்டும் நறுமண மலரின்
மகரந்த மெத்தையில்
மயங்கி கிடக்கும் வண்டினத்தை
பறவைகள் பூபாளம் இசைக்க
பனித் துளிகள் பன்னீர் தெளித்து
துயிலெழுப்பும் 
அதிகாலைப் பொழுது...


= நெல்லை ரவீந்திரன்


குறுநகை புரிகிறாள் எழுத்து காதலி...

குறுநகை புரிகிறாள் எழுத்து காதலி...


மழைக்கால ஈசல் போல
சுற்றி சுழலுகின்றன எழுத்துகள்
ரீங்காரமிடும் ஓசையில்
ஒவ்வொன்றாய் பிடித்துப் போடுகிறேன்
நெல்லிக்கனி எண்ணும் சிறுவனாய்

சிறு சிறு சரமாக கோர்க்கிறேன்
மாலை தொடுக்க முயற்சிக்கிறேன்
எழுத்து மலர்கள் சிதறுகின்றன
ஒன்றும் வகைப்படவில்லை
ஒழுங்கற்று சிதறுகின்றன
மணல் சிற்பமாய் சிதறுகிறது
அடுக்கி கோர்த்த எழுத்தோவியம்

கவிஞனா, எழுத்தாளனா
தகவல் கூறும் கட்டியக்காரனா
குழம்பும் மனம் பார்த்து
கேலி கும்மியடிக்கின்றன 
தன்னை உதிர்த்துக் கொண்ட எழுத்துகள்

கவிப்பாதையில் செல்லும் 
எழுத்து கோர்ப்பவனை பார்த்து 
பரிகசிக்கும் எழுத்துகள் 
அதை பார்த்து தவிக்கும் 
தகவல் கட்டியக்காரனின்
கனவில் குறுநகை புரிகிறாள்
என்னுடைய எழுத்து காதலி...

= நெல்லை ரவீந்திரன்Sunday, December 10, 2017

எம்.ஜி.ஆர் vs ரஜினிகாந்த்...


எம்.ஜி.ஆர் vs ரஜினிகாந்த்...
 

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி பேசும் பெரும்பாலானோரின் கருத்துகளில் தவறாமல் இடம் பெறும் பெயர் எம்.ஜி.ஆர்.  ரஜினியை ஆதரிப்பவர்களும் சரி. எதிர்ப்பவர்களும் சரி. எம்.ஜி.ஆரை உதாரணம் காட்ட தவறுவதே கிடையாது. ஆனால், 30 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் யாராலும் அசைக்க முடியாத உச்ச நடிகராக நீடித்ததை தவிர, எம்.ஜி.ஆருக்கும் ரஜினிக்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது என்பதை யோசிப்பதில்லை. அதுவே, அரசியலுக்கு தகுதி என்ற ரீதியில் பேசுகின்றனர். 1950ம் ஆண்டில் கருணாநிதியின் கதை, வசனத்தில் வெளியான மந்திரி குமாரி படத்தில் நடித்தபோதே திராவிட இயக்கத்துடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்து விட்டார், எம்.ஜி.ஆர்.  தென்குமரி தொடங்கி இமயமலை வரையிலும் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் கொடி கட்டி பறந்த காலத்திலேயே, அதற்கு நேர் மாறான நிலைப்பாட்டை எடுப்பதில் எந்த அளவுக்கு உறுதி வேண்டும். அதுவும் திரை உலகில் ஆரம்பகட்ட நடிகராக இருந்த ஒருவருக்கு... இந்த உறுதி ரஜினியிடம் இருக்கிறதா...? 

1951 முதல் 1967 வரை 17 ஆண்டு காலம், தமிழகத்திலும் மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி இருந்த நேரத்தில், அப்போதுதான் புதிதாக தொடங்கப்பட்ட தி.மு.க.வில் உறுப்பினராக சேர்ந்ததோடு, நடிக்கும் நேரம் தவிர மற்ற சமயங்களில் தி.மு.க மேடைகளில் பிரச்சாரம் செய்வதற்காக ஊர் ஊராக சென்றவர், எம்.ஜி.ஆர். அதுபோன்று ஆளும் தலைமையை  தொடர்ந்து எதிர்க்கும் துணிச்சல் ரஜினியிடம் துளி கூட கிடையாது. 

எம்.ஜி.ஆரின் பாடல்களில் கூட நேரடியாகவே கொள்கை பிரச்சார நெடியை பார்க்கலாம்.  அதன் தாக்கம் தாங்க முடியாமல் அப்போதைய காங்கிரஸ் அரசு கொடுத்த நெருக்கடி அதிகம். பெற்றால்தான் பிள்ளையா படத்தின் பாடலில், 'மேடையில் முழங்கு... அறிஞர் அண்ணா போல்...'  என்ற பாடல் மேடையில் முழங்கு திரு.வி.க. போல் என மாற்றப்பட்டதே அதற்கு சாட்சி. இப்போதும் இரண்டு விதமான வரிகளில் அந்த பாடல்களை கேட்கலாம்.

முழுக்க முழுக்க காங்கிரஸ்காரரான ஏ.வி.எம். தயாரித்த அன்பே வா படத்திலேயே, 'உதய சூரியனின் பார்வையிலே... உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே...' என்ற வரிகளை வைத்தவர், எம்.ஜி.ஆர். 'ஓடும் ரயிலை வழி மறித்து, அதன் பாதை தனிலே தலை வைத்து...' என்ற எங்கள் தங்கம் பாடல் தொடங்கி, 'கூந்தல் கருப்பு... குங்குமம் சிவப்பு...' என காதல் பாடல் வரை கட்சியை நினைவூட்டிக் கொண்டே இருந்தவர், எம்.ஜி.ஆர். 

இது மட்டுமல்ல, நல்லவன் வாழ்வான் போன்ற கருப்பு வெள்ளை படங்களில் வரும் வீடுகளின் ஜன்னல், கதவுகளில் உதய சூரியன் போன்ற வடிவமைப்பு இருப்பதை பார்க்கலாம். ஈஸ்ட்மெண்ட் கால படங்களில் எம்.ஜி.ஆரின் காஸ்ட்யூமே கருப்பு, சிவப்பு வண்ணத்தில் தான் இருக்கும். இவை எல்லாம், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 17 ஆண்டு காலத்தில் எம்.ஜி.ஆர். செய்த அட்ராசிட்டிகள். இதில் துளி அளவு துணிச்சலாவது ரஜினியிடம் இருந்ததா...? 

எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி செய்தபோது சிறிதளவு முணுமுணுப்பை கூட காட்டாத ரஜினி, இப்போது சிங்கம், புலி இல்லாத சமயத்தில் 'சிஸ்டம் சரியில்லை' என கூறிக் கொண்டு இருக்கிறார். இவ்வளவு தான் அவரது துணிச்சல். எம்.ஜி.ஆர். ஆட்சி செய்தபோதே, தி.மு.க தலைவர் கருணாநிதியின் கதை வசனத்தில் நடித்ததோடு, தி.மு.க. கரை வேட்டியையும் கட்டி நடித்துக் கொண்டு, மறைமுகமாக தி.மு.க. ஆதரவு நடிகர் போலவே வலம் வந்த விஜயகாந்திடம் இருந்த தைரியம் கூட ரஜினிக்கு கிடையாது. 

இது தவிர, அரசியல் அனுபவம் என்று பார்த்தால் கூட, எம்.ஜி.ஆருடன் ஏணி வைத்தால் கூட எட்டாது. எம்.ஜி.ஆர். தனது 45ஆவது வயதிலேயே (1962ம் ஆண்டு) எம்.எல்.சி.யாகி விட்டார். அதன்பிறகு, 1967 முதல் இறக்கும் வரை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். 1969ல் அண்ணா மறைந்ததும் ஏற்பட்ட கடுமையான சூழ்நிலையில், தி.மு.க.வில் பெரிய அளவில் சலசலப்பு ஏற்படாமல் கருணாநிதியை முதலமைச்சராக்கியதில் எம்.ஜி.ஆருக்கும் கணிசமான பங்கு உண்டு. பின்னர், கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவரது ஆட்சியின் நெருக்கடியையும் சந்தித்தவர் எம்.ஜி.ஆர். 

எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கி நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்துக்கு கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சி கொடுத்த தொல்லைகள் ரஜினிக்கு தெரியுமா...? அதை எல்லாம் எதிர் கொண்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வெற்றியே அதற்கு சாட்சி. ஆனால், பா.ம.க.வின் எதிர்ப்பை கூட 'பாபா'வால் சமாளிக்க முடியவில்லையே...?

1977ம் ஆண்டில் தமிழக முதலமைச்சராவதற்கு முன் 25 ஆண்டுகாலம் தமிழக அரசியலோடு பின்னிப் பிணைந்து இருந்தவர் எம்.ஜி.ஆர். நடிப்புடன் கூடவே, அவரது அரசியல் பயணம் நீடித்து இருந்தது. திடீரென கட்சி ஆரம்பித்து, அடுத்த சில ஆண்டுகளில் தமிழக ஆட்சியை எம்.ஜி.ஆர். பிடிக்கவில்லை. எம்.ஜி.ஆரின் அரசியலோடு ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஒப்பிடுபவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். 

ரஜினி நல்லவர்... வல்லவர்... பச்சை தமிழர்... அவர் ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடும்... இப்படி எதை வேண்டுமானாலும் அவரது ஆதரவாளர்கள் கூறிக் கொள்ளலாம். ஆனால், எம்.ஜி.ஆருடன் மட்டும் ரஜினியின் அரசியலை ஒப்பிட்டு பேச வேண்டாம்.

= நெல்லை ரவீந்திரன்

Tuesday, August 29, 2017

அடுத்த முதல்வர்... மக்கள் அங்கீகாரம் யாருக்கு...?

தமிழக அரசியலுக்கும் திரைத் துறைக்கும் நீண்ட நெடிய தொடர்பு உண்டு. அதனால் தான், ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத சூழ்லையில் மீண்டும் சினிமா பக்கம் தனது பார்வையை தமிழகம் திருப்ப, அங்கிருந்தும் சில சிக்னல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. ரஜினி, கமல், விஜய், விஷால் என தமிழ் ஹீரோக்களுக்கு அரசியல் ஆசை முளை விட்டு துளிர்த்து செடியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அது மரமாகும் முன் சிலவற்றை அலசிப் பார்ப்பது நல்லது.

திரையில் இருந்து அரசியலுக்கு வரும் அனைவருமே உதாரணமாக கூறும் பெயர் எம்.ஜி.ஆர். ஆனால், காங்கிரஸ்காரர், திமுகவில் 17 ஆண்டு நட்சத்திர பேச்சாளர், எம்.எல்.ஏ, சிறுசேமிப்பு தலைவர் (அமைச்சர் பதவிக்கு நிகரானது), தனிக்கட்சி, எதிர்க்கட்சி என 20 ஆண்டு போராட்டத்துக்கு பிறகே அவர் முதலமைச்சரானார். ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆர் போல திமுக அனுதாபியாக இருந்தவர். அரசியலுக்கு வந்து மாநிலங்களவை எம்.பி., தனிக்கட்சி, எதிர்க்கட்சி தலைவர் என 10 ஆண்டுகள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகே, 1991ல் அவரால் முதலமைச்சராக முடிந்தது.தற்போது, தமிழகத்தின் முக்கிய ஆளுமைகள் யாருமே இல்லாத நிலையில் ரஜினியின் அரசியல் ஆர்வம் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. பாட்ஷா படத்தின்போது அதன் தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பனுக்கு ஜெயலலிதாவுடன் முரண்பாடு இருந்தது. அந்த சூழ்நிலையில், பாட்ஷா பட விழாவில் பேசிய ரஜினி, தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து விட்டது என குரல் கொடுத்தது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. 40 பிளஸ் வயதில் ரஜினி இருந்த கால கட்டம்.


அப்போது, ஆட்சியில் இருந்த அ.தி.மு.க மீது மக்கள் அதிருப்தியில் இருந்த சமயம். அதே வேகத்தில் அரசியலில் ரஜினி தீவிர ஆர்வத்துடன் இருந்தார். அதனால் 1996 தேர்தலில் அவரது பங்கு முக்கியமாக இருந்தது. அந்த தேர்தலில் புதிதாக மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரசுடன் ரஜினி தனியாக கட்சி ஆரம்பித்து கூட்டணி சேர்ந்திருந்தால் அந்த கூட்டணி ஆட்சியை பிடித்திருக்கும். அந்த சமயத்தில் தான் நீல வண்ணத்தில் நட்சத்திரமிட்ட கொடியையும் ரஜினி ரசிகர்கள் பயன்படுத்த தொடங்கி இருந்தனர். ஆனால், கருணாநிதியின் ராஜதந்திரத்தின் முன்பு, ரஜினியின் அரசியல் அப்போது கருகிப்போனது.

20 ஆண்டுகளுக்கு பிறகு, அரசியல் வசனத்தை நிஜ மேடைகளில் ரஜினி பேசத் தொடங்கி இருக்கிறார். சிஸ்டம் சரியில்லை. போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்பது இன்றைய அவரது கருத்துகள். ஆனால், மன்றத்தை நடத்துவதற்கும் கட்சியை நடத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. விரைவில் அடுத்த ரசிகர்கள் சந்திப்பை நடத்தவும் ரஜினி முடிவு செய்திருக்கிறார். அதன் பிறகு, அரசியல் பற்றி அவர் முடிவு எடுக்கலாம் அல்லது ஏதேனும் கட்சியில் சேரவோ குரல் கொடுக்கவோ  அவருக்கு நிர்ப்பந்தங்கள் நேரிடலாம்.


ஒன்று நிச்சயம். ரஜினியை மென்மையாக அணுகுபவர்கள் கூட கன்னடர், அவரது மனைவியின் பள்ளி விவகாரம், திருமண மண்டபம் என ஏராளமான விமர்சனங்களை முன் வைப்பார்கள். அவற்றை எந்த அளவுக்கு அவர் எதிர்கொள்வார் என்பது அவரது அரசியலை பொறுத்து இருக்கிறது. ஆனால், போர் வரும்போது பார்க்கலாம் என்ற அவரது கருத்தைப் பார்த்தால், தேர்தல் சமயத்தில் யாருக்காவது வாய்ஸ் கொடுத்து விட்டு ஒதுங்கவும் செயயலாம்.


கமலை பொறுத்தவரை திரைப்படத்தை கடந்து பல ஆண்டுகளாகவே ஏதேனும் அரசியல் கருத்தை கூறி வருபவர். தீவிர நாத்திகவாதி, திராவிட இயக்க கொள்கை உடையவர் என்பது அனைவரும் அறிந்தது. ஜல்லிக்கட்டு பிரச்சினையில் இருந்து 8 மாதங்களாக மிகத் தீவிரமாக டுவிட்டரில் கருத்து கூறி வரும் கமலுக்கு திராவிட இயக்க தலைவர்களுடன் நெருங்கிய நட்பு உண்டு. ஆனால், நேரடியாக அரசியலுக்கு இவர் வருவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

இளைய தலைமுறை நடிகர்களில் விஜய் மனதில் அரசியல் ஆசை அதிகமாகவே உண்டு. மக்கள் இயக்கம் மூலமாக தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் அவர் மீது, மெர்சல் படத்தின் பாடல் வரிகளால் அரசியல் முத்திரை அழுத்தமாகவே விழுந்திருக்கிறது. அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஏ.ஆர்.ரகுமான் வரை அனைவருமே விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்பது போல பேசியது தான் இன்றைய பரபரப்பு பேச்சு. ஆனால் அதே மேடையில் பேசிய விஜய், சுற்றி இருப்பவர்கள் இக்கட்டில் தள்ள நினைப்பார்கள் என கூறி இருக்கிறார். இதுவும் கவனிக்கத்தக்கது.

ஆனால், தமிழக அரசியல் களம் அவ்வளவு எளிதானதல்ல. இந்த மூன்று பேருமே தமிழகத்தில் அரசியல் ஆளுமைகள் வலிமையாக இருந்தபோது எதிர்த்து குரல் கொடுக்க துணியாதவர்கள். இதையும் தமிழக மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். இந்த 3 பேருமே கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா போன்று எதிர்ப்பு அரசியல் அறியாதவர்கள். 1961 முதல் 25 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்ததோடு மேல்சபை எம்.பியாகவும் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அரசியல் வெற்றி எப்படி அமைந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை தொடங்கிய சிவாஜி, திருவையாறு தொகுதியில் 1989 தேர்தலில் வெறும் 10 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி ஆரம்பித்த பாக்யராஜ், லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் என அரசியலில்  அடி சறுக்கியவர்களின் எண்ணிக்கை ஏராளம். நடிக்கும் போது, தி.மு.க. சார்பு நடிகர்களுடன் நெருக்கமாக இருந்து 2005ல் தனிக்கட்சி தொடங்கிய விஜயகாந்த், அரசியலுக்கு வந்த பிறகு எதிர்கொண்ட விமர்சனங்கள் எத்தனை… எத்தனை…? அவரது கட்சியின் தற்போதைய நிலை…?

அனைவருக்குள்ளும் அரசியல் ஆசை துளிர் விட்டாலும், மக்களின் ஆதரவு என்னும் நூல் இருந்தால் தான் வெற்றி என்னும் பட்டம் அரசியல் வானில் வெற்றிகரமாக பறக்கும். தமிழகத்தில் பிரதான கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு இருக்கும் வாக்கு சதவீதம் அதிகம். ஜெயலலிதா மறைந்து விட்டதால் அ.தி.மு.க வாக்குகள் அவர்களுக்குள் சிதறுமே தவிர, மற்றவர்களுக்கு செல்லும் என எதிர்பார்க்க முடியாது. அதே நேரத்தில், ரஜினியின் கருத்துகள் ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க.வுக்கு எதிராகவே இருந்து வரும் நிலையில், அ,தி.மு.க. அனுதாபிகளின் வாக்கு அவருக்கு செல்லும் என்பது நிச்சயமில்லை.

ஒவ்வொரு தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கென கிடைக்கும் வாக்கு வங்கியில் எந்த அளவுக்கு சேதாரம் ஏற்படும் எனவும் உறுதி இல்லை. ஏனெனில், 1989 தேர்தலின்போது ஆட்சி அதிகாரம் இல்லாதபோதே, ஜெ., ஜா என இரு அணிகள் வாங்கிய மொத்த வாக்கு சதவீதமானது, தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வின் சதவீதத்தை விட கொஞ்சம் தான் குறைவாக இருந்தது. இப்போது, ஆட்சி அதிகாரம் இரண்டும் அதிமுக.விடம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான கருத்து கணிப்புகள் வரை ஓ.பன்னீர் செல்வத்துக்கு கணிசமான செல்வாக்கு இருப்பதை உறுதி செய்து வருகின்றன. அதாவது, அரசியல் களத்தில் பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தினகரன் என புதிய முகங்கள் அறிமுகமாகி மக்களிடம் பிரபலமாகி விட்டது.


இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், தமிழக மக்களிடம் ஒரு பிரபல முகத்தை முன்னிறுத்தி கட்சியை வளர்க்க நினைக்கும் பா.ஜ.க வின் முகமாக ரஜினி மாறலாம் என்பது பெரும்பாலானோரின் கருத்து. ஆனால், அவருக்கு சிவாஜி கணேசனின் நிலைமை மனதுக்குள் வந்து போகும். அதுபோலவே, அ.தி.மு.க.வுக்கும் 30 ஆண்டுக்கு முந்தைய அனுபவம் கண் முன்னே வந்து செல்வதால் தான் இந்த அளவுக்கு பிரிந்து, பிரிந்து… பின்… இணைகிறார்கள். ஆக, தமிழகத்தில் மிகப்பெரிய ஆளுமை இல்லை என்ற குறை மட்டுமே. அதே சமயத்தில், பலமாக இருக்கும் இரண்டு கட்சிகள் மற்றும் அதன் அனுபவஸ்தர்களை தாண்டி புதிதாக ஒருவர் வருவதும், தன்னை நிலை நிறுத்திக் கொள்வதும் எளிதானது அல்ல.

ஆனால், அரசியல் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒரு பரமபத விளையாட்டு. பிப்ரவரி 15க்கு முன், தினகரனையும் எடப்பாடி பழனிச்சாமியையும் தமிழக மக்களுக்கு தெரியுமா…? விதி போடும் முடிச்சு என்ன என்பதை காலம் மட்டுமே அறியும். எனினும், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். கருணாநிதி, ஜெயலலிதா என ஆதரித்து வந்த தமிழ் மக்கள், தகுதியான ஒரு ஆளுமையைத்தான் எதிர்காலத்தில் தேர்வு செய்வார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

Friday, February 17, 2017

வெற்றியை நோக்கி ... 22

   
வெற்றிக்கு முன்…
இந்த உலகில் பிறந்த  ஒவ்வொரு மனிதரிடமும், தங்களுக்குள் இருக்கும் ஆற்றலாக அவர்கள் நம்புவதை விட அதிகமான ஆற்றல் குடி கொண்டிருக்கிறது. அதை அவர்கள் அறிவதில்லை. ஒவ்வொருவரும் தன்னை சுய பரிசோதனை செய்து தன்னிடம் உள்ள திறமையை கண்டறிந்து வெற்றிப் பாதை நோக்கி செல்ல வழி காட்டுவதே தன்னம்பிக்கை அறிவுரைகள். அதற்கு பல்வேறு பெயர்களை சூட்டினாலும் அதன் பொருள் ஒன்றுதான். பல ஆயிரம் ஆண்டுகளாகவே மனிதர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த அறிவுரைகள் தொடர்ந்து போதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த அறிவுரைகள் மேலோட்டமாக புரிந்து கொள்ளப்படுகிறதே அன்றி, உள்ளுணர்வுடன் புரிந்து கொள்ளப்படுவதில்லை. உள்ளுணர்வுடன் புரிந்து கொண்டு நடக்கும்போது வெற்றியின் முதல் படிக்கட்டு புலப்படும். 

சாத்தியமே இல்லை என கருதும் ஒன்றை நோக்கி படிப்படியாக முன்னேறி செல்வதே வெற்றிக்கான வழிமுறைகள். மெதுவாகவும் படிப்படியாகவும் முன்னேறாமல் ஏதோ ஒரு மந்திரக் கோலால் ஒருவர் உயர்ந்தபட்ச அதிகாரத்தை அடைந்து விட்டார் என்றால் அவருக்கு மட்டுமல்லாமல் அவரால் அதிகாரம் செலுத்தப்படும் நபர்களுக்கும் அது அழிவையே தேடித் தரும். அதே வேளையில் தனக்குள் ஒளிந்து கிடக்கும் ஆற்றலை மிகச் சரியாக கண்டறிந்து வழி நடத்தாமல் போனாலும் அழிவு நிச்சயம். ஏனெனில், ஒருவரை வெற்றியின் சிகரத்துக்கு கொண்டு செல்வதற்கு அந்த ஆற்றலுக்கு எந்த அளவு வலிமை உண்டோ, அதே அளவுக்கு அவரை அழிக்கவும் அந்த ஆற்றலுக்கு வலிமை உண்டு. அதனால் தான், எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் என்று முன்னோர் கூறி வைத்து இருக்கின்றனர்.

இந்த பூமியில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒதுக்கப்பட்ட அதிகபட்ச நேரம் என்பது மிகவும் சொற்பமானது. தீபத்தை ஏற்றி வைத்து அணைப்பது போன்றது. எனவே, நடுக்காட்டிலோ ஆள் அரவமற்ற பாலைவனத்திலோ செல்லும் அச்சமற்ற பயணி போல எதிர்பார்ப்பு இல்லாமல் பயணிப்பது அவசியம்.  முன்னேற்றம் என்ற கீழ் வானத்தில் புத்திசாலித்தனம் என்னும் கதிரவன் உதித்தால் அறியாமை, சோம்பல், தோல்வி, ஏமாற்றம் என வெற்றிப் பாதைக்கு தடைக்கற்களாக இருக்கும் அனைத்தும் உதிரிகளாகி பொசுங்கி விடும். அதே நேரத்தில், வாழ்க்கையின் எந்தவொரு கணத்திலும் உண்மையான உழைப்பும் நேர்மையும் மட்டுமே வெற்றிப் பாதைக்கு வழி அமைத்து தரும்.
விடா முயற்சி, கற்பனை வளம், தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாடு, உற்சாகம், சகிப்பு தன்மை, ஆளுமை திறன் என வெற்றிப் பாதைக்கு ஏராளமான உந்து சக்தி இருக்கலாம். அதன் கூடவே, அன்பு என்னும் விதையை தூவிச் செல்லுங்கள். அதனால் விளையும் அறுவடை மகத்தானதாக இருக்கும். தோல்வி என்பது வெளியில் இருந்து வருவது அல்ல. உள்ளுக்குள்ளேயே இருந்து வெளிப்படுவதாகும். எனவே, ஒவ்வொரு மனிதரும் தனக்குள் உள்ள வெற்றிக்கான குணங்களில் பலவீனமானது எது என்பதை கண்டுபிடித்து அறிந்து சரி செய்து கொள்வது அவசியம். நம்முடைய பலவீனத்தை விட மிக மோசமான தடை எதுவும் கிடையாது, என்கிறார் ஆங்கில சிந்தனையாளர் எமர்சன்.
மனித மனங்களுக்கு எதிர்மறை உணர்ச்சிகள் அதிகம். பத்தில் ஒரு பங்கு மட்டுமே நேர்மறை எனப்படும் பாசிடிவ் எண்ணங்கள் உள்ளன. எதிர்மறை எண்ணங்களை எண்ணினால் பயம், வெறுப்பு, கோபம், எரிச்சல், பொறாமை, பதற்றம், விரக்தி, படபடப்பு, மன அழுத்தம், தாழ்மை உணர்வு, குற்றவுணர்ச்சி என ஏராளமாக பட்டியலிடலாம். நேர்மறை எண்ணம் என பட்டியலிட்டால் சந்தோஷம், வியப்பு, உற்சாகம் இப்படி மிக குறைவானதாகவே தேறும். இது, சமூகம் கட்டமைத்துள்ள மனித இயல்பு. அதனாலேயே எதிர்மறை எண்ணங்கள் குறித்த செய்திகளையே மனம் அதிகமாக விரும்புகிறது.

இத்தகைய நெருக்கடியில் இருந்து வெளியேறினால் மட்டுமே வெற்றியை நோக்கி செல்ல முடியும். எதிர்மறை எண்ணங்களை வேரறுக்க நேர்மறை எண்ணங்களை வளர்க்க வேண்டும். அதை மனதுக்குள் அடிக்கடி கூறி பார்த்துக் கொள்வதும் அவசியம். ‘ஆல் இஸ் வெல்’, ‘உன்னால் முடியும்’, ‘யெஸ்’ இது போன்ற வார்த்தைகளால் நம்மை நாமே ஊக்கமளித்துக் கொள்ள வேண்டும். இதை நம்முடைய தினசரி உணவு போல தொடருவது அவசியம்.  

மனித வாழ்க்கையில் வெற்றி என்ற சொல்லுக்கு அர்த்தமாக பார்க்கப்படுவது சொகுசான வாழ்க்கை, பணம், பதவி, அதிகாரம் மற்றும் அதற்கு நிகரானவை தான். உண்மையில், நல்ல குணாதிசயங்களே ஒவ்வொரு வெற்றிக்கும் அடிப்படையாக இருக்கிறது. நல்ல குணங்களையும் நேர்மறை எண்ணங்களையும் ஒருவர் வளர்த்துக் கொண்டு இருந்தால் அவரை பற்றிய மற்றவர்களின் கருத்துகள் ஒரு பொருட்டே அல்ல. ஏனெனில், இறுதி வெற்றி அவர்கள் பக்கமே இருக்கும்.

ஆன்மிக பூமியான இந்தியாவின் பழங்கால புராணங்களும் இதிகாசங்களும் அதைத்தான் வெவ்வேறு கதை வடிவங்களில் வலியுறுத்துகின்றன. மகாபாரதத்தில் பாண்டவர்&கவுரவர் மோதல், ராமாயணத்தில் ராம பிரான்&ராவணன் மோதல் என ஒவ்வொன்றும் நல்ல குணங்களை கொண்டவர்களுக்கே இறுதி வெற்றி என்பதை வலியுறுத்துபவையாகவே உள்ளன. அத்தகைய நல்ல குணங்களை அடிப்படையாக கொள்வதோடு வெற்றி பெற தேவையான அனைத்து தகுதிகளையும் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொண்டால் வெற்றி நிச்சயம். அந்த வெற்றியை நோக்கிய பாதையில் நடை போட்டு செல்ல அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

(முற்றும்)

வெற்றியை நோக்கி ... 21

ஆறு மனமே ஆறு    


ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வெற்றி பெறும் எண்ணம் மேலோங்கி இருக்கும். ஆனால், அந்த மனதுக்குள் ஆறு விதமான குணங்கள் நுழைந்து விட்டால் வெற்றி என்பது அதோகதியாகிவிடும். நம் அனைவரையுமே தனது கொடூர முகத்துடன் அந்த குணங்கள் துரத்திக் கொண்டே இருக்கின்றன. அந்த ஆறும் எவை தெரியுமா? சகிப்பு தன்மை இல்லாமை, பேராசை, பழிவாங்கும் உணர்ச்சி, தற்செருக்கு அல்லது தலைக்கனம், பிறர் மீது சந்தேகம், பொறாமை.

இவற்றில் சகிப்பு தன்மை இல்லாத குணமானது உறவுகளையும், நட்புகளையும் அழித்து விடும். வாழ்க்கையில் முன்னேறவும் வெற்றி பெறவும் உறவுகளும் நட்புகளும் தேவை அல்லவா? அப்படி இருக்கும்போது இதுபோன்று நிகழ்ந்தால் துயரம் தான் மிஞ்சும். இது மட்டுமல்ல சண்டை, சச்சரவுகளும் நீடிக்கும். மாறுபட்ட சிந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தால் மட்டுமே சகிப்பு தன்மை வளரும். அதற்கு மிக அதிகமான பயிற்சி தேவை.

பேராசை என்பது தனக்குள் வேலி அமைத்து மற்றவரை வெளியேற்றுவதில் இருந்து தொடங்குகிறது. ஆசையை மனதால் கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது பேராசை உருப்பெறுகிறது. செல்வம், சொத்து, பணம் என அனைத்தையும் பார்த்து அவற்றின் பின்னால் ஓடுவது பேராசையின் குணாதிசயங்கள். பேராசை அளவுக்கு மீறும்போது பழிவாங்கும் உணர்வும் ஆட்கொள்ளத் தொடங்கும்.

பழிவாங்கும் உணர்ச்சி மனதுக்குள் குடியேறத் தொடங்கினால் புகழையும், பெருமையையும் சீர் குலைக்கும். அவ்வளவு ஏன்? வாழ்க்கையையே புரட்டி போட்டு விடும். மிகப்பெரிய சாதனையாளர்களாக இருந்தாலும், வெற்றி பெற்ற மனிதராக இருந்தாலும் பழிவாங்கும் உணர்ச்சியானது அவரைக் குப்புறத் தள்ளி விடும். எனவே, அதை மனதுக்குள் நுழைய விடாமல் பாதுகாப்பது அவசியம். 

அடுத்தவர்களின் திறமை மீது நம்பிக்கை வைப்பதும் ஒரு வகையில் முன்னேற்றத்துக்கான வழியே. அடுத்தவர் மீது நம்பிக்கை இல்லாமல் போனால், உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை குறைந்து போகும். நம்பிக்கை இல்லாமல் எந்த ஒரு மனிதனும் வெற்றியை பெற முடியாது. அடுத்தவர் மீதான நம்பிக்கையின் வலிமையை, ‘கடுகு விதை அளவு விசுவாசம் இருந்தால் மலையை புரட்டலாம்’ என்று பைபிள் கூறுகிறது. நம்பிக்கை ஊட்டுவது என்பது தங்கத்தால் திரி செய்து ஒளியை ஏற்றுவது போன்றதாகும். எனவே, மற்றவர்களிடம் நம்பிக்கையை விதைத்து பலன் பெறுங்கள். 

அதே வேளையில், நம்பிக்கையின்மை என்பது நாளடைவில் சந்தேக குணமாக மாறி விடும். சந்தேகம் எழும்போது தானாகவே மனதுக்குள் செருக்கு தோன்றும். தற்செருக்கு என்ற தலைக்கனம் அதிகரிக்கும்போது, ‘நான்’ என்ற வார்த்தை மிக அதிக அளவில் தோன்றும். அதுபோன்ற நபர்கள், பேசுவதிலும் எழுதுவதிலும் அந்த வார்த்தையே அதிகமாக பயன்படுத்துவார்கள். உங்களை சுற்றிலும் உள்ளவர்களில் ‘நான்’ என்ற வார்த்தையை திரும்ப திரும்ப உச்சரிக்கும் நபர்களை ஆய்வு செய்தால் நிச்சயமாக சந்தேக குணம் உடையவராகவே இருப்பார்.

பயனுள்ள ஒரு வேலையைச் செய்யும் ஒருவன் தன்னைப் பற்றியும் தன்னலம் பற்றியும் முற்றிலுமாக மறந்து விட்டால் அவனை ஒருபோதும் சந்தேகம் நெருங்காது. சந்தேகம், தற்செருக்கு எனப்படும் தலைக்கனம் அல்லது தற்பெருமை உடையவர்களால் வெற்றி என்ற இலக்கை எட்டவே முடியாது. மற்றவர்களை விடுங்கள். நீங்கள் அதுபோன்று இருக்கிறீர்களா? என்பதை முதலில் சரி பார்த்துக் கொள்ளுங்கள். சந்தேகமும், தற்பெருமையும் உங்களை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள்.

சந்தேகத்துக்கு இளைய சகோதரன் பொறாமை. ஆண், பெண் என அனைத்து தரப்பினரிடமும் இந்த குணம் குடி கொண்டிருக்கும். பொறாமைக்கு பல்வேறு வடிவங்கள் உண்டு. அது, பல்வேறு வகைப்படும். வீட்டுக்குள் நுழைந்தால் குடும்பம் சிதறும். பொறாமை நுழைவதே தெரியாது. மனம் அல்லது மூளைக்குள் மெதுவாக பதுங்கி பதுங்கி நுழையும். சரியான சந்தர்ப்பம் கிடைக்கும் போது அது பூதாகரமாக வெளிப்படும். அது மட்டுமல்ல. குடும்ப உறவுகள் மற்றும் தொழில், முன்னேற்றம் என அனைத்தையும் அழித்து விடும்.

அதனால் தான்,
   ‘அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்று
   தீயுழி உய்த்து விடும்’
என்று திருவள்ளுவர் கூறி வைத்துள்ளார்.

அதாவது, பொறாமை என்னும் பாவி குணமானது செல்வத்தை அழித்து விடும். நரகம் என்னும் தீ குழிக்குள் தள்ளி விடும் என்று எச்சரிக்கிறார்.

பொறாமை என்ற குணமானது வளர்ந்து நம்முடைய கழுத்தை நெரிக்கும் முன் அதன் கழுத்தை மிதித்து விட வேண்டும்.

சரி. மேற்சொன்ன இந்த ஆறு வகையான குணங்களை மனதுக்குள் நெருங்க விடாமல் யாரேனும் இருக்கிறீர்களா? இதற்கு நிச்சயமாக ஆம் என்ற பதில் கிடைக்காது. ஆம். என்ற பதிலை நீங்கள் கூறினால் நீங்கள் ஆயிரத்தில் ஒருவர். வெற்றி தேவதை மாலையுடன் உங்களுக்காக காத்திருக்கிறாள் என்று உறுதியாக கூற முடியும்.         


(வெற்றி பயணம் தொடரும்…)

வெற்றியை நோக்கி ... 20

உற்சாக மனநிலை    

உங்கள் தினசரி வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நாளில் காலையில் இருந்தே ஏமாற்றமும் தோல்வியும் தொடர்ந்தால் உங்களுடைய மனநிலை எப்படி இருக்கும்? ‘காலங்காத்தால யாரு முகத்துல முழிச்சோமோ’ என்ற எண்ணம் மெதுவாக மனதுக்குள் துளிர் விடும். பிறர் மீது பழி போடுவதை விடுத்து உங்களுக்குள் உற்றுப் பாருங்கள். காலையில் எழுந்ததும் மனதுக்குள் சோம்பலும், உற்சாகமின்மையும் குடி கொண்டால் அந்த நாள் எப்படி அமையும்?

ஒரு நாளின் தொடக்கத்தில் உற்சாகமான மனநிலை அமைந்தால் தான் அந்த நாளில் வெற்றி முழுமையாகும். ஒரு மனிதனை வெற்றியாளராக மாற்றுவதில் உற்சாகமான மனநிலை முக்கிய பங்கு வகிக்கிறது. மனம் சோர்ந்திருக்கும் சமயத்தில் உற்சாகம் தரும் துள்ளல் இசையை கேட்டால் ஏற்படும் மாற்றத்தை உணர முடியும். எப்போதும் உற்சாகமான மனநிலையில் இருப்பவரையும் தன்னைச் சுற்றி இருப்பவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டு இருப்பவரையும் யாரும் எளிதில் மறக்க மாட்டார்கள்.

விளையாட்டு, வர்த்தகம், கல்வி, சமூகம், அரசியல், திரைப்படம், வர்த்தகம் என ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற்ற நம்பர் ஒன் சாதனையாளர்களை உற்று நோக்கினால் ஒரு ஒற்றுமை புலப்படும். அவர்கள் அனைவருமே சோர்வு என்பதே அறியாமல் தானும் உற்சாகமாக இருந்து தன்னைச் சார்ந்து இருப்பவர்களையும் உற்சாகப்படுத்தும் கலையில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். மிகச் சிறந்த என்டர்டெய்னர்களுக்குத்தான் எப்போதுமே மவுசு.

விற்பனைத் துறைகளில் வெற்றிகரமாக உள்ளவர்களிடம் இத்தகைய உற்சாகம் எந்நாளும், எந்த நேரமும் குடிகொண்டு இருப்பதை காண முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் அவர்களால் அந்த துறையில் ஜொலிக்க முடியாது. உற்சாகமான சூழ்நிலையை அவர்களாகவே ஏற்படுத்திக் கொள்வதையும் காணலாம்.

அதனாலேயே, சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஒவ்வொன்றிலும் இதுபோன்ற விற்பனை பிரதிநிதிகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறிய அளவிலான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். கூட்டத்தில் நிறுவனத்தின் உயர் அதிகாரி அல்லது வெளியில் இருந்து முக்கிய சொற்பொழிவாளர் யாரையாவது அழைத்து வந்து உற்சாகமூட்டும் கருத்துகளை பேசச் செய்வார்கள். மனதுக்குள் சிறிதளவு தொய்வு ஏற்பட்டாலும் வேலையிலும் அதன் விளைவாக நிறுவனத்தின் வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படும்.

வெற்றியை உருவாக்கிக் கொள்ள மிகுந்த செயல்திறன் தேவை. செயல்திறன் மிக்க மனிதனாக இருப்பதற்கு அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்வது மட்டுமே போதுமானதல்ல. அறிந்து கொள்வது, செயல் திறன் இரண்டுமே மிகவும் அவசியம். அறிந்து கொண்டதை செயலாக்கி காட்டுவதற்கு உற்சாகம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

மீனுக்கு தண்ணீர் எவ்வளவு அவசியமோ அதுபோல வெற்றிக்கு உற்சாகம் மிகவும் முக்கியம். மனதுக்குள் உற்சாகம் வடிந்து போவதற்கு முக்கிய காரணமாக இருப்பது எதிர்மறை எண்ணம். அந்த எண்ணம் தோன்றிய மறுகணமே உற்சாகம் காணாமல் போய்விடும். வாய்ப்புகளால் உருவாவது அல்ல. தானாகவே, புறத் தூண்டலால் ஏற்படுவதுதான் உற்சாகம்.

ஒரு பிரபலமான சோப் உற்பத்தி நிறுவனப் பொருட்களின் விற்பனையில் சில நாட்களாக மந்தமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து, மார்க்கெட்டிங் முதுநிலை மேலாளர்களின் கூட்டம் கூட்டப்பட்டது. அதில், பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த முக்கியமான விற்பனைப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் விற்பனை மந்தமானது குறித்து விவாதம் ஆரம்பித்தது. ஆளாளுக்கு ஒரு காரணம் கூறினார்கள். ‘மாற்று நிறுவனத்தின் போட்டி பலமாகி விட்டது’, ‘மக்களின் வாங்கும் திறன் குறைந்து விட்டது’, ‘நம்முடைய உற்பத்தி பொருளுக்கு இன்னும் அதிக விளம்பரம் தேவை’ - இப்படி பல்வேறு யோசனைகள் அந்த கூட்டத்தில் முன் வைக்கப்பட்டன.

உடனே, நிறுவனத்தின் முதலாளி எழுந்து அனைவரையும் அமைதியாக இருக்குமாறு கூறினார். பின்னர், நிறுவனத்தில் கேன்டீன் நடத்துபவரை அழைத்து வந்தார். கூட்டத்தில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கேண்டீன்காரருக்கு இந்த கூட்டத்தில் என்ன வேலை? என நினைத்தனர். ஏற்கெனவே, அந்த நிறுவனம் நட்டத்தில் செல்வதாக வதந்திகள் கிளம்பி இருந்ததால், நம்முடைய முதலாளிக்கு ஏதோ ஆகி விட்டது என்றே அவர்கள் கருதினர்.

சிறிது நேரம் மவுனம் நிலவியது. பின்னர், மெதுவாக முதலாளி பேசத் தொடங்கினார். ‘நம்முடைய நிறுவனத்தில் முன்பு இருந்த கேன்டீன் உரிமையாளர், தகுந்த லாபம் கிடைக்கவில்லை என்று கூறிச் சென்று விட்டார். தற்போது, புதிதாக கேன்டீன் உரிமையை இவர் எடுத்திருக்கிறார். இவருக்கு முந்தைய நபருக்கு வழங்கியது போல இவருக்கு நிறுவனத்தில் இருந்து மானியத் தொகை வழங்குவதில்லை. கேன்டீன் நடத்தும் இடத்துக்கு கூட வாடகை வசூலிக்க தொடங்கியுள்ளோம். ஆனாலும், இவருக்கு அதிக லாபம் கிடைக்கிறது. நகருக்குள்ளும் புதிதாக ஒரு கேன்டீன் திறந்திருக்கிறார். எப்படி? அதற்கு காரணம் என்ன? இப்படி கேள்விகளை எழுப்பிவிட்டு அவரே பதில் கூறத் தொடங்கினார்.

“பழைய கேன்டீன் உரிமையாளர், குறிப்பிட்ட நேர அளவில் மட்டும் தான் திறந்து வைத்திருந்தார். நமது நிறுவனத்தில் தினமும் 10 மணி நேரத்துக்கு மேல் உற்பத்தி நடைபெறுகிறது என்பதும் 16 மணி நேரம் வரை ஊழியர்கள் பணியாற்றுவதும் அனைவருக்கும் தெரியும். இதை சரியாக புரிந்து கொண்டு கேன்டீன் நேரத்தை அதிகப்படுத்தி இருக்கிறார், இந்த புதிய உரிமையாளர். மனதுக்குள் உற்சாகத்தை ஏற்படுத்திக் கொண்டு எந்த சமயத்தில் எந்த பொருள் தேவை என்பதை கணித்துக் கொண்டு செயல்படுகிறார்.

இப்போது, உங்களுடைய பிரச்சினைக்கு வருகிறேன். உங்களுடைய விற்பனைக் குறைவுக்கு நீங்கள் தெரிவித்த காரணங்கள் எதுவுமே பொருத்தமானவை அல்ல.  நமது நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாக பரவும் தகவல்களை நீங்கள் நம்பத் தொடங்கி விட்டீர்கள். அதனால், உங்களுக்குள் உற்சாகம் குன்றி விட்டது. அதுதான் விற்பனை சரிவுக்கு உண்மையான காரணம்.

அந்த எண்ணத்தை முற்றிலுமாக துடைத்து எறியுங்கள். இன்றில் இருந்து தினமும் குறைந்தது 5 ஆர்டர்களாவது பிடிக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் விடாப்பிடியாக இருந்து சாதித்தீர்கள் என்றால் விற்பனை அதிகரிக்கும். நிறுவனத்தின் லாபமும் தானாகவே ஏறு வரிசையில் அமைந்து விடும்”

இப்படி மிக நீளமான உரையை முதலாளி முடித்த மறுகணமே வந்திருந்தவர்களின் மனதுக்குள் உற்சாக ஊற்று சுரக்கத் தொடங்கியது. அதன்பிறகு, அந்த நிறுவனம் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது என்று சொல்லவும் வேண்டுமோ?

ஏற்கெனவே கூறியது போல, உற்சாகம் என்பது புறத்தூண்டல்களால் வருவது. அத்தகைய சூழ்நிலையை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மனதுக்கு பிடித்தமான வேலையில் சேர்ந்து பணியாற்றுவது, எப்போதுமே உற்சாகத்துடன் இருக்கும் மனிதர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது, மற்றவருக்கு உதவி செய்யும் ஆற்றலை வளர்த்துக் கொள்வது, நேர்த்தியான ஆடை அணிவது போன்றவை உற்சாகத்தை தானாகவே வரவழைக்கும் காரணிகளில் சில.

மனதுக்குள் உற்சாக வெள்ளம் கரை புரளத் தொடங்கினால் தானாகவே வெற்றியை நோக்கி அது நம்மை இழுத்துச் செல்லும்.

(வெற்றி பயணம் தொடரும்…)