Thursday 31 December 2020

எனது பாசமிகு மாமாவுக்காக


நெல்லை மாவட்டம் (இப்போது தென்காசி) ஆலடிப்பட்டி கிராமத்தில் 1933ம் ஆண்டு பிறந்தவர், ஆலடி அருணா. ஆலடிப்பட்டியின் பிரபலமான வைத்தியலிங்க சுவாமி திருக்கோயிலில் பூஜை செய்யும் குடும்பத்திலேயே பிறந்த போதிலும் இறுதி வரை பகுத்தறிவு சுடராகவே வலம் வந்தார். ஆலடி அருணாவின் தந்தை பெயர் வைத்தியலிங்கம் என்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது. 


பள்ளி, கல்லூரி படிப்பின் போதே பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு நெல்லை முதல் சென்னை வரை மேடைகளை அதிரச் செய்தவர். பின்னாளில், வழக்கறிஞர் பட்டம் பெற்று, அண்ணா, பெரியார் மீது கொண்ட பற்றால் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்தவர்.  


அவரது அறிவையும் வாதத் திறமையையும் கண்டு வியந்து காங்கிரஸ் கட்சியில் சேருமாறும் அரசு வழக்கறிஞர் பணி தருவதாகவும் பெருந்தலைவர் காமராஜர் அழைத்தபோது, அதை மறுத்தவர். பகுத்தறிவு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சுயமரியாதை என திராவிட கொள்கைகளை விடாப்பிடியாக பின்பற்றிய வெகு சிலரில் ஆலடி அருணாவும் ஒருவர். பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் என தமிழகத்தின் மிக முக்கியமான ஆளுமைகளின் அன்புக்கு பாத்திரமாக இருந்தவர். 


திமுக முன்னணி மேடைப் பேச்சாளர்களில் ஒருவராக வலம் வந்த அவர் வகித்த பதவிகள் ஏராளம். நெல்லை மாவட்டம் ஆலங்குளம்  தொகுதியில் இருந்து தமிழக பேரவைக்கு 1967, 1972, 1996 என மூன்று முறை எம்எல்ஏவாக தேர்வானார். நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இருந்து 1977ம் ஆண்டு மக்களவைக்கும் அதிமுக சார்பாக 1984ம் ஆண்டு டெல்லி மாநிலங்களவை எம்பியாகவும் தேர்வானவர். 


அவர் எம்பியாக இருந்த காலத்தில் தான் போபர்ஸ் பீரங்கி ஊழல் விவகாரம் விசுவரூபம் எடுத்தது. தான் சார்ந்த அதிமுகவின் கூட்டணி கட்சியாக காங்கிரஸ் இருந்தபோதிலும், கூட்டணி கட்சியின் தலைவராக பிரதமர் ராஜிவ் இருந்தபோதிலும் பாராளுமன்றத்தில் ஆணித்தரமாக உண்மையை பேசியவர். மிகச் சிறந்த பாராளுமன்ற வாதிகளில் தானும் ஒருவர் என்பதை அந்த சமயத்தில் உலகுக்கு உணர்த்தினார். போபர்ஸ் ஊழல் குறித்த பாராளுமன்ற கூட்டுக் குழுவில் உறுப்பினராக இருந்ததால் உண்மைக்கு மாறான கூட்டுக் குழு அறிக்கையை கிழித்து எறிந்து ரூ.60 கோடி ஊழலை அம்பலப்படுத்தினார். 


எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு மீண்டும் திமுகவுக்கு திரும்பி 1996ம் ஆண்டில்  கருணாநிதி தலைமையிலான தமிழக அரசில் 5 ஆண்டு காலம் சட்ட அமைச்சராகவும் ஆலடி அருணா பணியாற்றினார். 

மேடைப்பேச்சு, பாராளுமன்ற விவாதத் திறன், அரசியல் தலைவர் என்ற வரிசையில் பத்திரிகையாளர், எழுத்தாளர் என்ற முகங்களும் ஆலடி அருணாவுக்கு உண்டு. 


பள்ளி பருவத்திலேயே கையெழுத்து பத்திரிகை நடத்திய அனுபவம் அவருக்கு உண்டு. 'எண்ணம்' என்ற வார பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் பல்வேறு புத்தகங்களை எழுதி உள்ளார். அவர் எழுதிய ஆங்கில புத்தகங்களில் ‘Unfederal Features of the Indian Constitution என்ற இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றிய புத்தகம் மிகவும் முக்கியமானது. 

இது தவிர,  இந்தி எதிர்ப்பு, ஆலடி அருணா சிறுகதைகள், இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும், காமராஜர் ஒரு வழிகாட்டி போன்ற புத்தகங்களும் குறிப்பிடத்தக்கவை. 

நெல்லையில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து மாநில அரசியல், தேசிய அரசியல், எழுத்துப்பணி என பேரும் புகழும் பெற்றிருந்தவரும் எனது பாசமிகு மாமாவுமான ஆலடி அருணாவின் நினைவு தினத்தில் (31/12/2004) அவரது நினைவை போற்றுகிறேன். 

நெல்லையில் இருந்து என்னை முதன் முதலில் சென்னைக்கு அழைத்து வந்து மறைந்த பெரிய அய்யா பா.ராமச்சந்திர ஆதித்தனாரிடம் அறிமுகம் செய்து ‘கதிரவன்’ வாயிலாக எனது பத்திரிகையாளர் வாழ்க்கைக்கு வழி காட்டியவர் அவரே. அவரது சொந்த அத்தையின் (அவரது தந்தையின் உடன் பிறந்த சகோதரி) மகன் வழி பேரன் என்பது எனது பேறு.

வீடு, கோட்டை, ஊரில் எங்கு எப்போது சந்தித்தாலும், 'என்னடே... மாப்பிள...' என நெல்லை தமிழில் அழைத்தது இன்னமும் செவிகளில் ஒலிக்கிறது...

#நெல்லை_ரவீந்திரன்

Tuesday 15 December 2020

எம்ஜிஆர் - 1977 Vs 2021

தமிழக அரசியலில் நடிகர்கள் நுழையும் போதெல்லாம் உதிர்க்கப்படும் வார்த்தை எம்ஜிஆர். ஆதரவோ, விமர்சனமோ... இதை எந்த தரப்பு உச்சரித்தாலும் அதன் அடி நாதத்தில் ஔிந்து கிடப்பது, அவர் ஒரு நடிகர் என்ற பார்வைதான். நடிகராக அவரைப்பற்றி பேசும் பலரும் அவரது அரசியல் பயணம் பற்றி அறியாதவர்கள் என்பதே உண்மை.

எம்ஜிஆரின் அரசில் பயணம் என்பது 1950களிலேயே துவங்குகிறது. எல்லா மனிதரைப் போலவே அனைத்து நடிகர்களுக்குள்ளும் அரசியல் சார்பு உண்டு. அதை எம்ஜிஆர் மறைக்கவில்லை. நடிப்பு தொழிலுடன்  திராவிட இயக்கங்களிலும் தனது முழு ஈடுபாட்டை காட்டினார். 1950களின் இறுதியில் திமுக ஆரம்பித்தபோது அதன் முழு நேர உறுப்பினர், எம்ஜிஆர்.



அவ்வளவு ஏன்? தனது படங்களிலும் திமுக கொள்கைகளையும் சின்னத்தையும் பிரபலப்படுத்துவதிலும் கவனம் செலுத்தினார். கருப்பு வெள்ளை படங்களில் இருந்து வண்ணப்படங்கள் வரை எம்ஜிஆர் பட காட்சி பின்னணிகளை நுணுக்கமாக பார்த்தால்  இதை அறியலாம். இது போன்ற துணிச்சல், அரசியல் ஆர்வம் கொண்ட நடிகர்கள் எவருக்காவது உண்டா என்றால் இல்லை என்பதே பதிலாகும். 1957ல் மிகுந்த பணக் கஷ்டத்தோடு நாடோடி மன்னன் படத்தை எம்ஜிஆர் தயாரித்தபோது, தனது எம்ஜிஆர்  பிக்சர்ஸின் லோகோவே திமுக கொடி தான்.

இத்தனைக்கும், அப்போது மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியின் ஏகபோக ஆட்சி. திமுக அப்போது தான் புதிதாக துளிர்விட்ட கட்சி. பொது சின்னம் கூட கிடையாது.

இதை, இன்றைய புதிய  நடிகர்கள் வரை தங்கள் புதுப்பட ரிலீசுக்காக மட்டுமே அரசியல் பேசுவதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். 

1967 வரை காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக (இது எம்ஜிஆரின் கதாநாயக பயணத்தில் 20 ஆண்டுகள்) திமுக பொதுக் கூட்டங்களில் பிரசாரம் செய்தவர் எம்ஜிஆர். காங்கிரஸ் சார்பு நிறுவனம் என்பதால் ஏவிஎம் பேனரில் கூட (அன்பே வா தவிர) அவர் நடித்ததில்லை. படப்பிடிப்பு தவிர்த்த மற்ற நேரங்களில் எல்லாம் திமுக கட்சிப் பணியாற்றியவர். இந்த துணிச்சல் இன்றைய பிரபல நாயக  நடிகர்களிடம் துளி கூட இல்லாத ஒன்று.

அதிமுக என்ற கட்சியை துவங்கும் முன், அவர் திமுக பிரமுகர், நிர்வாகி, அந்த கட்சியின் பொருளாளராக மூத்த தலைவர், அந்த கட்சியில் எம்எல்சி, எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவிக்கு நிகரான சிறு சேமிப்பு குழு தலைவர் என பதவிகளை வகித்தவர். அண்ணா மறைந்தபோது திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக கருணாநிதி தலைமையிலான ஆட்சி அமைவதிலும் பங்கெடுத்தவர். 1972ல் அண்ணா இல்லாத தேர்தலில் கூட்டாக நின்ற காமராஜரையும், ராஜாஜியையும் கருணாநிதியுடன் கைகோர்த்து தோற்கடித்து திமுகவை ஆட்சியில் அமர்த்தியவர். அந்த தேர்தலில் பெற்றதை போன்ற இடங்களை இதுவரை தமிழகத்தில் எந்த ஆளுங்கட்சியும் பெறவில்லை.

அதாவது, அதிமுக ஆரம்பிப்பதற்கு முன்,  எம்ஜிஆரின் முழு நேர அரசியல் அனுபவம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள். 

திமுக தலைவர் கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதிமுகவை துவக்கியபோது, எம்எல்ஏக்களில் பலர் தன்னுடன் வந்ததால் (அப்போது கட்சித்தாவல் தடை சட்டம் கிடையாது) எதிர்க்கட்சி தலைவராகவும் எம்ஜிஆர் இருந்தார். 

அந்த கால கட்டத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின் நெருக்கடிகளையும் எதிர் கொண்டவர், எம்ஜிஆர். அரசியல் ரீதியாகவும் (மதுரை மேயர் முத்து விவகாரம் ஒரு உதாரணம்) சினிமா ரீதியாகவும். எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கி நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' பட ரிலீஸ் பற்றி அந்தக் கால கட்சிக்காரர்களிடம் கேட்டால் கதை கதையாக சொல்வார்கள்.

இப்படியாக பல அரசியல் அனுபவங்களுடன் தான் அதிமுக என்ற புதிய கட்சியுடன் 1977ல் தனியாக களம் புகுந்தார் எம்ஜிஆர். அவருக்கு முதல் தேர்தலிலேயே வெற்றி. தொடர்ந்து அடுத்தடுத்த மூன்று தேர்தல்களில் வென்ற தமிழகத்தின் ஒரே ஹாட்ரிக் முதல்வர் அவர்தான்.



இந்த வெற்றிகளுக்கு எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கு ஒருபுறம் இருந்தாலும் அன்றைய அரசியல் சூழ்நிலைகளும் அவருக்கு சாதகமாக இருந்தது. அது என்ன சூழல்?

1977 சட்டப்பேரவை தேர்தலின் போது அண்ணா, காமராஜர், ராஜாஜி, பெரியார் இப்படி பெரிய தலைவர்கள் யாரும் கிடையாது. இந்திரா காங்கிரஸ் என்ற கட்சியே தமிழகத்தில் இல்லை. காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியினரும் காமராஜர் மறைவால் குழம்பிக் கிடந்த சமயம். ஆக... பெரிய தலைவர்கள் இல்லாத தேர்தல். கருணாநிதி, எம்ஜிஆர் இருவரின் வயதும் 50 பிளஸ்.

அன்றைய சூழலில் ஆளும் திமுக மட்டுமே ஏகபோக கட்சி. அதுவும் எம்ஜிஆருக்கு தொடர் நெருக்கடிகளை கொடுத்து தெரிந்தோ தெரியாமலோ ஸிம்பதி கலந்த ஆதரவை எம்ஜிஆருக்கு அதிகரித்துக் கொடுத்தது. இறுதியாக, களத்தில் ஏகபோகமாக இருந்த திமுகவுக்கு மாற்றாக எம்ஜிஆரால் எளிதில் வெற்றி பெற முடிந்தது. 

அதன் பிறகு, இரண்டு கழகங்களின் ஆதிக்கம் தான். இந்த இடத்தில் காங்கிரஸ் கட்சியின் ஏமாளித்தனத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும். அப்போது உஷாராக இருந்திருந்தால் மூன்றாவது அணி, தேசிய கட்சிக்கான வாய்ப்பு போன்றவை ஒருசில மாநிலங்களில் இருப்பதை போலவே தமிழகத்திலும் கருகிப் போகாமல் இருந்திருக்கும். 


 ஆனால், 1980ல் இருந்தே இரண்டு கழகங்களின் தோளில் சவாரி செய்து சுகம் காண தொடங்கியது, காங்கிரஸ் கட்சி (இன்றைய காங்கிரஸ் நிலைக்கு அதுவும் காரணம். அதைப்பற்றி தனியாகவே எழுதலாம்). இது இரண்டு கழகங்களுக்கும் சாதகமானது. எம்ஜிஆரின் வள்ளல், ஏழை பங்காளன் என்ற தோற்றம், அவரை இறுதி வரை ஆட்சிக் கட்டிலில் அழகு பார்க்கச் செய்தது. 



இதுதான் எம்ஜிஆரின் உண்மையான  அரசியல் வரலாறு. இதில் ஏதாவது ஒன்றாவது எம்ஜிஆர் பெயரை கூறும் நடிகர்களுக்கு ஒத்துப் போகிறதா? 

மற்றொன்று, அதிமுகவை துவக்கி எம்ஜிஆர் களம் புகுந்தபோது திமுக என்ற ஒரு கட்சிதான். இப்போது, இரண்டு கழகங்கள் வலுவாக இருக்கின்றன. மூன்றாவது வரும் கட்சி ஆட்சியமைக்கும் பலத்துடன் வெற்றி பெறுவது கஷ்டம். ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் மகாராஷ்டிரா போல வேண்டுமானால் நடக்கலாம். ஆனால், தமிழக மக்கள் ஒருபோதும் ஆளுநருக்கு வேலை வைத்ததே இல்லை.

#நெல்லை_ரவீந்திரன்

Wednesday 23 September 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 21

ரசிகர்களை மகிழ்விப்பதை கடந்து எதிர்காலத்தை சரியாக கணித்து சொல்வதோடு மக்களுக்கு தேவையான விஷயங்களையும் கூறும் கலைஞனே காலத்தை வென்று நிலைத்து நிற்பான். அதற்கு மிகச் சிறந்த ஒரே உதாரணம் இவர்தான்.  "நாட்டுக்கு சேவை செய்ய நாகரீக கோமாளி வந்தேனய்யா..." என தன்னைத் தானே கூறிக் கொண்டவர். அவர்தான், இறந்து அறுபது ஆண்டுகளை கடந்தும் நிலைத்து நிற்கும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். 


நாகர்கோவிலில் பிறந்த இவர், ஏழ்மையால் நாடக கொட்டகையில் தின்பண்டங்கள் விற்று வாழ்க்கையை தொடங்கி, பின்னாளில் சொந்தமாக நாடக கம்பெனியையே நடத்தும் அளவுக்கு உயர்ந்தார். வில்லுப் பாட்டுக்காரராகவும் சில காலம் காலம் தள்ளியவர், என்எஸ் கிருஷ்ணன். தமிழ் சினிமா பிரபலங்கள் பலருக்கும் முகவரி தந்த 'சதிலீலாவதி'தான் இவருக்கும் முதல் படம். ஆனால், முதலில் வெளியானது 'மேனகா' என்ற படம். 1935ம் ஆண்டு முதல் சுமார் 20 ஆண்டுக்குள் பாகவதர் காலம் தொடங்கி எம்ஜிஆர், சிவாஜி காலம் வரை 150 படங்களில் நடித்து விட்டார்.


1940களில் தமிழ் திரை உலகை உலுக்கிய லட்சுமி காந்தன் கொலை வழக்கில் சிக்கி இரண்டரை ஆண்டுகள் சிறையில் இருந்தபோதும் மனம் தளராதவர், என்எஸ்கே. அந்த வழக்கில் சிக்கிய அன்றைய சூப்பர் ஸ்டார் எம்கே தியாகராஜ பாகவதரே நிலை குலைந்து அதற்கு பின் படங்களில் பெரிதாக தலைகாட்ட வில்லை. ஆனால், என்எஸ்கே தளரவில்லை. அதுதான் அவரது எதையும் தாங்கும் குணம். சிறை மீண்ட பிறகு தான் அவருக்கு கலைவாணர் பட்டம் கொடுக்கப்பட்டது. கொடுத்தவர் நாடக தந்தை பம்மல் சம்பந்த முதலியார்.


என்எஸ்கே அவரது மனைவி டி.ஏ. மதுரம் இருவரும்  இணைந்து நடித்த அனைத்து காமெடி ஸீன்களுமே தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ரகங்கள் 1936ம் ஆண்டில் வெளியான 'வசந்த சேனா' படத்தில் ஜோடியாக அறிமுகமான மதுரம், பின்னர், நிஜத்திலும் என்எஸ் கிருஷ்ணன் ஜோடியாகி விட்டார்.



எதிர்ப்பவரின் மனம் புண்படாமல் படங்களில் பகுத்தறிவு புகட்டியவர். சமூக சீர்திருத்த கருத்துகளை நாசூக்காக சொன்னவர். பராசக்திக்கு முன்பே அண்ணா கதை வசனத்தில், இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய 'நல்ல தம்பி' (1949) படத்தின் தயாரிப்பாளர் என்எஸ் கிருஷ்ணன். 


இந்த படத்தில் இவர் பாடும் "விஞ்ஞானத்த வளக்க போறேண்டி..." பாடலை முழுமையாக கேட்டால் போதும் அவரது எதிர்கால தீர்க்க சிந்தனையை அறியலாம். கிரைண்டர், டெஸ்ட் டியூப் பேபி, அணு மின்சாரம் என ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு பிந்தைய விஞ்ஞான வளர்ச்சிகளை நான்கு நிமிட பாடலில் என்எஸ்கே பிட்டு பிட்டு வைத்திருப்பார். "மனுஷன மனுஷன் ஏய்ச்சி பிழைச்சது அந்தக் காலம்..." பாடல் இவரது முற்போக்கு சிந்தனையை சொல்லும். அந்த படத்திலேயே அவரது கிந்தனார் கதாகாலட்சேப பாடல், நையாண்டியுடன் கூடிய அக்மார்க் சமுதாய  விழிப்புணர்வு ரகம்.



இதுபோல, "சிரிப்பு... சிந்திக்க தெரிந்த மனித இனத்துக்கே சொந்தமான கையிருப்பு..." பாடலில் மனிதர்களின் சிரிப்பின் வெரைட்டிகளை என்எஸ்கே பாடியிருப்பார். அது யாருமே சிந்திக்காத விஷயம். 'முதல் தேதி' படத்தில் "ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்... இருபத்தொண்ணுல இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்..." பாடலில் மாத சம்பளக்காரனின் நிலையை அப்போதே தெளிவாக சொல்லியிருப்பார், என்எஸ் கிருஷ்ணன்.

'அம்பிகாபதி' படத்தில் "கண்ணே உன்னால நான் படும் கவலை கொஞ்சமா...." என டிஏ மதுரத்தை சீண்டியபடி, தங்கமே... தேனே... என வரிக்கு வரி நையாண்டியுடன் பாடும் பாடல் எவர்கிரீன் காதல் நகைச்சுவை ரகம். 


தமிழில் வழக்கொழிந்து போன லாவணி வகை பாடல் ஒன்றை 'சக்கரவர்த்தி திருமகள்' படத்தில் எம்ஜிஆருடன் பாடியிருப்பார் என்எஸ்கிருஷ்ணன். அதில் ஒரு வரி "உலகிலே மிக பயங்கரமான ஆயுதம் எது... கத்தி.. இல்ல... கோடாரி... இல்ல... மனிதனோட நாக்கு...". 



எம்ஜிஆரின் வளர்ப்பு தந்தையாக 'மதுரை வீரன்' படத்தில் நடித்திருப்பார், என்எஸ்கே. இவர் மீது எம்ஜிஆருக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஏழைகளுக்கு உதவும் குணம் எம்ஜிஆரிடம் குடியேறியதற்கு காரணமே என்எஸ்கே தான். அவரது வள்ளல் தன்மை தான் எம்ஜிஆரையும் தொற்றியது.

தயாரிப்பாளர், நடிகர், பாடகர் மட்டுமல்ல என்எஸ் கிருஷ்ணன் நல்ல வசனகர்த்தாவும் கூட. அவரது காமெடி டிராக்குகளை அந்தக்கால தயாரிப்பாளர்கள் விலை கொடுத்து வாங்கி பயன் படுத்தியுள்ளனர். இது மட்டுமல்ல, சிவாஜி நடித்த பணம் (1952) மற்றும் மணமகள் (1951) படங்களையும் இயக்கி இருக்கிறார், என்எஸ்கே. இரண்டுக்கும் கதை வசனம் கலைஞர் கருணாநிதி.


1937ம் ஆண்டு பாகவதரின் அம்பிகாபதி படத்திலும் 1957ல் வெளியான சிவாஜியின் அம்பிகாபதி படத்திலும் நடித்திருக்கிறார். இதுபோல 1939ல் வெளியான மதுரை வீரன் படத்திலும் 1956ம் ஆண்டு வெளியான எம்ஜிஆரின் மதுரை வீரன் படத்திலும் நடித்திருக்கிறார், கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன்.

தமிழ் சினிமாவின் முதல் திராவிட இயக்க ஆதரவாளர் என்எஸ்கே தான். திமுகவுக்காக பிரசாரமும் செய்திருக்கிறார். அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் என மூவருமே மிகுந்த மரியாதை வைத்திருந்த என்எஸ்கே 'பணம்' படத்தில் பாடிய பாடல் ஒன்று, "தீனா மூனா கானா...." என தொடங்கும்.

ஆனால், திராவிட ஆட்சி அமைவதற்கு பத்து ஆண்டுகளுக்கு  முன்பே கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் மறைந்து விட்டார். சிரிப்பு மருத்துவர், இந்தியாவின் சார்லி சாப்ளின் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1957ம் ஆண்டில் இறந்தபோது அவரது வயது 50ஐ கூட தொடவில்லை. வெறும் 48 தான்.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Thursday 10 September 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 20

இந்தியாவிலேயே முதன் முதலாக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்த முதல் திரை பிரபலம். தமிழகத்தின் முதல் பெண் எம்எல்சி. 1935லேயே ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர். இந்த பெருமைகளுக்கு சொந்தக்காரர், கேபி சுந்தராம்பாள். இசை ரசிகர்களின் நாவிலும் நினைவிலும் நிலைத்திருக்கும் பெயர். சிறு வயதில் இருந்தே கணீர் குரலுக்கு சொந்தக்காரரான சுந்தராம்பாளின் பாடலை கேட்க ஊரே கூடுவது வழக்கம். கோயில் விழாவில் பாடி வந்த அவர், சொந்த ஊரான கொடுமுடியில் இருந்து உறவினர் வீடு இருந்த  கரூருக்கு ரயிலில் செல்லும் போதும் பாடுவது வழக்கம். அப்படி ஒருமுறை ரயிலில் நாடக நடிகர் ஒருவரின் கவனத்தில் பட்டு நாடக துறைக்கு வந்தார்.


9 வயதிலேயே இலங்கை, தமிழ்நாடு என நாடக குழுக்களுடன் சுற்றி வந்த அவர், நாடக இடைவேளை சமயத்தில் என்டர்டெய்னராக பாட ஆரம்பித்து, பின்னாளில் வேடங்கள் போட  துவங்கினார். அவரது வள்ளி திருமணம், நல்ல தங்காள், கோவலன் போன்ற நாடகங்கள் எல்லாம் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றன. கூடவே, கேபி சுந்தராம்பாள் - கிட்டப்பா ஜோடியும் மக்கள் மனதில் இடம் பிடிக்க, 1927ம் ஆண்டில் நிஜத்திலும் தம்பதியானார்கள்.



இருவருமே மிக தீவிரமான சுதந்திர போராட்ட தியாகிகள். நாடகங்களின் நடுவே தேசபக்தி காட்சிகளை சேர்த்ததோடு சுதந்திர வேட்கையூட்டும் பாடல்களையும் தனியாக பாடி  வெளியிட்டனர். எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே, இசை ஆல்பம் போட்ட பெருமை இவர்களையே சேரும். சுந்தராம்பாளை போலவே, கிட்டப்பாவின் குரலும் எட்டுக்கட்டை சுருதியை கொண்டது. இருவரின் பாடல்களுக்கு மக்களிடம் அவ்வளவு மவுசு. 


யார் கண்பட்டதோ அற்ப ஆயுளிலேயே கிட்டப்பா காலமானார். 1933ம் ஆண்டில் அவர் இறந்தபோது வயது 28. கேபிஎஸ் வயது 25. அதன்பிறகு நடிப்பதை துறந்து வெள்ளை கதராடை, நெற்றி நிறைய விபூதி என தவ வாழ்க்கையில் புகுந்தார், கேபி சுந்தராம்பாள். இந்த சமயத்தில்தான், நந்தனார் பட வாய்ப்பு அவரை தேடி வந்தது. அவர் மறுக்க, தயாரிப்பாளரோ விடாப்பிடியாக நெருக்க, கடும் நிபந்தனைகளை சொல்லி தவிர்க்க பார்த்தார், கேபிஎஸ்.



எந்த ஆணுடனும் ஜோடி சேர மட்டேன். சம்பளமாக ஒரு லட்சம் வேண்டும். இது மாதிரியான நிபந்தனைகளையும் ஏற்றார் தயாரிப்பாளர். அந்த அளவுக்கு நாடகம், சுதந்திர போராட்டம் மூலமாக புகழ் பெற்றிருந்தார்,  கேபிஎஸ். நந்தனார் படத்துக்காக 1935லேயே ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினார், சுந்தராம்பாள். அப்போது தங்கம் விலை சவரனுக்கு 13 ரூபாய். 


நந்தனாரில் ஆண் வேடமிட்டு நடித்த கேபிஎஸ், தனது 30 ஆண்டு திரை வாழ்க்கையில் சொற்ப எண்ணிக்கையிலேயே படம் நடித்தாலும் வெண்கலக் குரலால் என்றென்றும் நிலைத்திருக்கிறார். தமிழ் மூதாட்டி அவ்வையார் என்றால் கேபி சுந்தராம்பாள் முகம்தான் அனைவருக்கும் நினைவில் வரும். அவ்வையார், மணிமேகலை, மகாகவி காளிதாஸ், திருவிளையாடல், கந்தன் கருணை, காரைக்கால் அம்மையார் என தான் நடித்த படங்களில் தனது பாடல்களால் ரசிகர்களை கட்டிப் போட்டவர்.



திருவிளையாடல் படத்தில் முருக கடவுளுடன் விவாதம் செய்து, "ஞானப் பழத்தை பிழிந்து..." என பக்தி ரசத்தை பாடலில் பிழிந்து தந்த கேபிஎஸ், அடிப்படையில் ஒரு முருக பக்தை. "பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா...!" பாடல் தொடங்கி மகாகவி காளிதாஸ் படத்தில் "சென்று வா மகனே செனறு வா, அறிவை வென்று வா மகனே வென்று வா...", "காலத்தில் அழியாத காவியப் பொருள் என்று...", காரைக்கால் அம்மையார் படத்தில் "தக தக தக தக தகவென ஆடவா... சிவ சக்தி சக்தி சக்தி என்று பாடவா.." என சிவ தாண்டவ பாடல், திருமலை தெய்வம் படத்தில் "ஏழுமலை இருக்க எமக்கென்ன மனக்கவலை..." என கேபிஎஸ் பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தால் அழழியாத காவிய கீதங்கள்.


கலைஞர் கருணாநிதி வசனத்தில் சிலப்பதிகார கதையை அடிப்படையாக கொண்டு தயாரித்த 'பூம்புகார்' படத்தில் சமண துறவி கவுந்தியடிகளாக நடித்திருப்பார். கோவலனுடன் படகு பயண காட்சியில், "வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம், மானிடரின் மனதினிலே மறக்கவொண்ணா வேதம்...", என்ற பாடலும் "தப்பித்து வந்தானம்மா, தனியாக நின்றானம்மா.." பாடலும் மனித வாழ்க்கையை சொல்பவை. 

தீவிர ஆன்மிகவாதியான இவர், பூம்புகார் படத்தில் "அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது..." என்ற வரிகளையே, விடாப்பிடியாக நின்று "நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது..." என கருணாநிதியை மாற்ற வைத்ததாக கூறுவது உண்டு.

பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் குருவான சத்திய மூர்த்தி தான் கேபி சுந்தராம்பாளுக்கும் அரசியல் குரு. இந்தியா சுதந்திரம் பெறும் முன்னும் சரி. பின்னும் சரி. காங்கிரஸ்  கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்தவர். இதனாலேயே, சுதந்திரம் கிடைத்ததும் சென்னை மாகாணத்தில் அமைந்த முதல் சட்டப்பேரவையில் உறுப்பினர் ஆனார். 



ஆம் 1951ல் சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினராக (எம்எல்சி) இருந்திருக்கிறார், கே.பி.சுந்தராம்பாள். தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்து பேரவைக்குள் நுழைந்த முதல் திரை பிரபலம் இவர்தான். தமிழகத்தின் முதல் பெண் எம்எல்ஏ என்ற பெருமைக்கும் இவரே சொந்தக்காரர். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என மூன்று முதல்வர்களால் மதிக்கப்பட்டவர்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

Monday 7 September 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 19

தமிழ் சினிமாவின் முதல் சமூக, குடும்ப கதைகளின் வெற்றி இயக்குநர், இன்றைய டிவி சீரியல்களின் சிக்கலான அழுகாச்சி கதைகளுக்கு முன்னோடி, இந்த கேள்விகளை எழுப்பினால் பதிலாக வந்து நிற்பவர் இயக்குநர் பீம்சிங். ஆந்திராவை பூர்வீகமாக கொண்டாலும் சென்னையில் படித்து வளர்ந்த இவர், சினிமாவில் அடியெடுத்து வைத்தது எடிட்டராகத்தான். அதாவது படத்தொகுப்பாளர். "பராசக்தி" படத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன், பஞ்சுவிடம் அசிஸ்டென்டாக சேர்ந்து உதவி இயக்குநராக உயர்ந்தவர்.


"பராசக்தி" படத்தில் கலைஞர் கருணாநிதியின் வசனங்களை உதவி இயக்குநராக சிவாஜி கணேசனுக்கு சொல்லிக் கொடுத்தவர், இவர்தான். இந்த பழக்கம் தான் பின்னாளில் இருவரும் இணைந்து தமிழ் சினிமாவின் கதைப் போக்கையே மாற்றிப் போட உதவியது. இயக்குநரானதும்  பீம்சிங் இயக்கிய "அம்மையப்பன்", "ராஜா ராணி" என முதல் இரண்டு படங்களுக்கும் கதை வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி. ஆனாலும் பீம்சிங்கை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது "பதி பக்தி" படம்தான். அதன் பிறகு, இவருக்கு ஏறுமுகம். மன்னர் கதைக்கள டைப் படங்களாகவே வெளியாகி வந்த தமிழ் சினிமாவை குடும்ப கதைகளின் பக்கம் திருப்பியதில் பீம்சிங்கின் பங்கு அதிகம்.

'ப'கர வரிசை டைட்டில்களில் பீம்சிங் கொடுத்த சுமார் 20 படங்களில்,  பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பாசமலர், பாலும் பழமும், பாவ மன்னிப்பு, பார் மகளே பார், பார்த்தால் பசி தீரும், பச்சை விளக்கு என ஹிட்டடித்த படங்கள் ஏராளம். 1960களில் பீம்சிங், சிவாஜி, கண்ணதாசன், எம்எஸ்வி ராமமூர்த்தி கூட்டணி வெற்றிக் கூட்டணியாகவே வலம் வந்தது. "தாழையாம் பூ முடித்து தடம் பார்த்து நடை நடந்து..."

"வந்த நாள் முதல் இந்த நாள் வரை...", "எல்லோரும் கொண்டாடுவோம்..." என எவர்கிரீன் பாடல்களை கொண்ட பாவ மன்னிப்பு படத்தின் கதையே வித்தியாசமானது. மத நல்லிணக்கத்தை சொல்லும் அந்த கதை, நடிகர் சந்திரபாபுவினுடையது. அதை மெருகேற்றியவர் பீம்சிங். இன்று வரை அண்ணன் தங்கை பாசத்துக்கு உதாரணம் காட்டப்படும் "பாசமலர்" வேறு மாதிரியான கதை. புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கும் டாக்டர், அவரிடம் பணிபுரியும் நர்ஸ் இடையிலான காதலை சொல்லும் "பாலும் பழமும்". இப்படி மூன்று வெவ்வேறு கதைகளைக் கொண்ட படங்களை ஒரே ஆண்டில் கொடுத்து மூன்றையும் வெற்றிப் படங்களாக்கியவர், பீம்சிங்.

இந்த படங்களின் "மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்...", "மலர்ந்தும் மலராத பாதி மலர் போலே...", "என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்...", "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...", "காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்..." உள்ளிட்ட அனைத்து பாடல்களுமே 60 ஆண்டுகளை கடந்து இன்றும் ரசிகர்களின் மனதை இனிமையாக்குபவை.



இவை தவிர, பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பார் மகளே பார் என சிவாஜி கணேசனின் நடிப்பு தாகத்துக்கு சரியான தீனி போட்டவர் பீம்சிங் என்றே சொல்லலாம். "ஒரு இயக்குநர் என்பவர் நல்ல எடிட்டராகவும் இருக்க வேண்டும்" என்பது பீம்சிங் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.



தனது வெற்றிப் படங்களை எல்லாம் இந்தி, தெலுங்கு என ரீமேக் செய்வது இவரது வழக்கம். அதன்படி, 25 ஆண்டு இயக்குநர் வாழ்க்கையில் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் படங்களை இயக்கி இருக்கிறார். "களத்தூர் கண்ணம்மா" படத்தின் இயக்குநரும் இவரே. இந்த படத்தின் மூலமாக உலக நாயகன் கமலஹாசனை முதன் முதலில் திரையில் அறிமுகம் செய்த பெருமை பீம்சிங்கையே சேரும். 



குடும்ப படங்கள் மட்டுமல்ல, கிரைம் கலந்த முழு நீள நகைச்சுவை படத்தையும் தன்னால் தர முடியும் என "சாது மிரண்டால்" படம் மூலம் நிரூபித்தவர். இந்த படத்தின் சுட்ட ஸீன்கள் தான், டாக்சியில் பிணத்தோடு வடிவேலு பயணம் செய்யும் நகைச்சுவை.

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்" கதையை படமாக்கி இருக்கிறார், பீம்சிங். இந்த படத்துக்காக நடிகை லட்சுமிக்கு ஊர்வசி விருது கிடைத்தது. கருணாநிதியின் கைவண்ணத்தில் தனது இயக்குநர் பாதையை தொடங்கிய பீம்சிங்கின் கடைசி படத்துக்கு கதை  ஜெயகாந்தன். அந்த படம், "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" (1978).

இதில் தனது மகன் பி.கண்ணனை ஔிப்பதிவாளராக, திரை வாரிசாக பீம்சிங் அறிமுகம் செய்து வைத்தார். இந்த கண்ணன் வேறு யாருமல்ல. "பாரதிராஜாவின் கண்கள்" என போற்றப்படும் பாரதிராஜா இயக்கிய படங்களின் ஆஸ்தான ஔிப்பதிவாளரே தான். 


படத் தொகுப்பாளர், கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகம் இருந்தாலும் படத் தொகுப்புக்கு முக்கியத்துவம் அளித்த பீம்சிங்கின் பெயரை அவரது மற்றொரு மகன் தமிழ் சினிமாவில் காப்பாற்றி விட்டார். அவர் படத் தொகுப்புக்காக விருதுகளை பெற்ற பிரபல எடிட்டர் பி.லெனின். 

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

Thursday 3 September 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்...18

சினிமாவில் அம்மா, அப்பா, அண்ணன் இப்படி சில வேடங்களை பேசும்போது ரசிகர்கள் மனதில் சிலரது பெயர்கள் மட்டுமே வந்து போகும். அந்த வகையில் அம்மா வேடம் என்றாலே தமிழ் ரசிகர்களினா நினைவுக்கு வருபவர் பண்டரிபாய். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் வரை அம்மாவாக நடித்தவர். ஆனால், அவரது சினிமா பின்னணியை புரட்டிப் பார்த்தால் ஏராளமான ஆச்சர்ய தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. 



அடிப்படையில் அவர் ஒரு கன்னட நடிகை. சிறு வயதிலேயே மராத்தியில் நீண்ட நேரம் கதாகாலட்சேபம் செய்யும் அளவுக்கு திறமைசாலி. அதனாலேயே 10 வயதில் கன்னட சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறார். தமிழில் அவரது அறிமுகம் 14 வயதில். படம், 3 ஆண்டுகள் ஓடி சாதனை படைத்த தியாகராஜ பாகவதரின் "ஹரிதாஸ்" (1944). அந்த படத்தில் சிறிய வேடம்தான். பெண் பித்தனாக ஹரிதாஸ் துரத்தும் பெண்களில் ஒருவராக நடித்திருந்தார்.


ஆரம்பத்தில் தமிழே தெரியாது. ஏவிஎம் ஏற்பாட்டில் தமிழ் கற்றுக் கொண்ட இவர், பின்னாளில் கலைஞர் கருணாநிதியின் வசனத்தை பேசும் அளவுக்கு தமிழை தெளிவாக கற்றுக் கொண்டார். அதனாலேயே தேன்மொழியாள் என்றும் அவரை அழைப்பதுண்டு. தமிழ், தெலுங்கு, மராத்தி, இந்தி, கன்னடம் என ஏழு மொழிகளில் 1500க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் அவரது தமிழ் படங்கள் நூறுக்குள் தான். ஆனால், அனைத்து மொழிகளிலுமே சொந்த குரலில்தான் பேசி, நடித்திருக்கிறார், பண்டரிபாய்.




1950களில் நாயகி அந்தஸ்துக்கு உயர்ந்த பண்டரிபாய், அன்றைய இரண்டாம் நாயகர்களான சித்தூர் நாகையா, பிரேம் நசீர், டிஆர் மகாலிங்கம்  போன்றவர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். சிவாஜி கணேசன் அறிமுகமான முதல் படமான "பராசக்தி" படத்தின் கதாநாயகி பண்டரிபாய் தான். அதன்பிறகு, சிவாஜி கணேசனின் அடுத்தடுத்த படங்களான "திரும்பிப்பார்", "அந்த நாள்" படங்களுக்கும் பண்டரி பாய்தான் ஹீரோயின். கன்னட ஸ்டார் ராஜ்குமாரின் முதல் படமான "பேடர கன்னப்பா" படத்தின் நாயகியும் இவரே. இருவரின் முதல் படங்களிலும் ஜோடியாக நடித்த பண்டரிபாய், இருவருக்குமே தாயாகவும் பின்னாளில் நடித்தார், அதுதான் சினிமா உலகம்.


1960களில் முழு நேர தாய் வேடத்துக்கு மாறிய பண்டரிபாய், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அம்மா ஆனார். தெய்வமகன், கவுரவம், பாவை விளக்கு, இரு துருவம், இரும்புத்திரை, ராஜா, டாக்டர் சிவா, வசந்த மாளிகை, அவன் ஒரு சரித்திரம் என அம்மாவாக நடித்த சிவாஜி படங்கள் ஏராளம். தெய்வ மகனில் அப்பா சிவாஜிக்கு ஜோடியாகவும் மகன்களான இரண்டு சிவாஜிக்கு தாயாகவும் 3  சிவாஜிகளுக்கு இணையாக சிறப்பாக நடித்திருப்பார். இதுபோல, "கவுரவம்" படத்தில் வக்கீல் ரஜினிகாந்த் சிவாஜிக்கும் மகன் கண்ணன் சிவாஜிக்கும் இடையே பண்டரிபாயின் நடிப்பு ஆஸம்.



எம்ஜிஆர் என்றாலே தாய்க்குலம், தாய்ப்பாசம் இப்படி தோன்றும் எண்ணத்துக்கு வலு சேர்த்தவர் பண்டரிபாய். தெய்வத்தாய், தாயின் மடியில், குடியிருந்த கோயில், அடிமைப் பெண், எங்க வீட்டுப் பிள்ளை, காவல்காரன், சந்திரோதயம், அன்னமிட்ட கை, இதயக்கனி என எம்ஜிஆருக்கு தாயாக நடித்த படங்களின் பட்டியல் மிக நீளம். பெரும்பாலான படங்களை பார்த்தால் டைட்டிலே தாயை பற்றியதாகத்தான் இருக்கும். "தாயின் மடியில் தலை வைததிருந்தால் துயரம் தெரிவதில்லை...", "தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை...", தெய்வத்தாய் படத்தில் சீர்காழி கோவிந்த ராஜன் பாடும் டைட்டில் ஸாங்.. என பண்டரி பாய் அம்மா வேடத்தில் நடித்த எம்ஜிஆர் படங்களில் தாயின் புகழ் பாடும் பாடல்களும் அதிகம். இத்தனைக்கும் எம்ஜிஆரை விட 11 வயது இளையவர், பண்டரிபாய்.



1970, 1980களில் கன்னட படங்களில் ராஜ்குமாருக்கு தாயாக நடித்த பண்டரிபாய், தமிழிலும் ரஜினிக்கு தாயாக நடித்திருக்கிறார். "அம்மா என்றழைக்காத உயிரில்லையே..." என்ற 'மன்னன்' பாடலின் அம்மா, பண்டரிபாய் தான். சினிமாவுக்கு பிறகு கன்னட சின்னத்திரையில் நுழைந்த பண்டரிபாய், 2000 வரையிலும் கன்னட சீரியல்களில் நடித்திருக்கிறார்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

Monday 31 August 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 17

நூறாண்டை நெருங்கும் தமிழ் சினிமாவில் முதல் தலைமுறை கதாநாயகிகள் பலர் இருந்தாலும் இவர்தான் உண்மையான கதாநாயகி. முதல் கனவு கன்னி, லேடி சூப்பர் ஸ்டார், கருப்பாக இருந்தாலும் கவர்ச்சி கட்டழகி என எல்லாவித பட்டங்களையும் 1940களிலே பெற்றவர். அவர்தான் டி.ஆர்.ராஜகுமாரி. ராஜாயியாக அறிமுகமாகி, ராஜலட்சுமியாகி, பின்னர் ராஜகுமாரியானவர். அந்த வகையில் சினிமாவில் நடிகைகளின் பெயர் மாற்றும் டிரெண்டை ஆரம்பித்தவரும் இவரே. 



1939ல் அறிமுகமான இவருக்கு பெயர் வாங்கித் தந்தது கச்ச தேவயானி (1941). தமிழ் சினிமாவின் முதல் தலைமுறை சூப்பர் ஸ்டார்களான தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, கே.ஆர்.ராமசாமி, எம்.கே.ராதா ஆகியோருடனும் அடுத்த தலைமுறையில் எம்ஜிஆர், சிவாஜியுடனும் ஜோடியாக நடித்தவர். இவரது பொருத்தமான ஜோடி பி.யூ.சின்னப்பா என்பது அன்றைய ரசிகர்களின் கணக்கு. நடிப்பு, நடனம், பாடகி, தயாரிப்பாளர் என பலமுகம் கொண்டவர், டி.ஆர்.ராஜகுமாரி.


பாகவதருடன் நடித்த  சிவகவி, ஹரிதாஸ், அமரகவி படங்கள் அக்கால சூப்பர் டூப்பர் ஹிட். ஹரிதாஸ் (1944) படத்தில் தாசிப் பெண் ரம்பா வேடத்தில் இவர் காட்டிய நளினமும் கவர்ச்சியும் (தமிழின் முதல் கவர்ச்சி நாயகி இவர்தான்) தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக்கியது. இன்றளவும் ரசிகர்கள் முணுமுணுக்கும் "மன்மத லீலையை வென்றார் உண்டோ...என் மேல் உனக்கு பாரா முகம் ஏனோ..." என்ற பாடலை இவரைப் பார்த்துதான் பாகவதர் பாடுவார். இந்த பாடலின் நடுவே இவர் தரும் ஃபிளையிங் கிஸ், அன்றைய காலகட்டத்தில்  பரபரப்பாக பேசப்பட்ட விஷயம்.



தமிழ் சினிமாவின் நிரந்தர புகழ்பெற்ற சினிமாக்களில் ஒன்றும் அக்காலத்திலேயே மிகப் பெரும் செலவில் எடுக்கப்பட்ட படமுமான ஆனந்த விகடன் முதலாளி எஸ்எஸ் வாசன் தயாரித்த சந்திரலேகா (1948) படத்தின் நாயகி இவர்தான். இதில் சர்க்கஸில் பார் விளையாடும் பெண்ணாக நடித்த டிஆர் ராஜகுமாரியின் ஜிப்ஸி நடனம் ரசிகர்களை கட்டிப் போட்டது. படத்தின் கிளைமாக்சில் பிரம்ண்ட முரசுகள் மீது ராஜகுமாரியும் நடன பெண்களும் ஆடும் நடனம், தமிழ் சினிமாவின் எவர்கிரீன் பிரமாண்டம்.



நாயகியாக எம்ஜிஆருக்கு இவர் சீனியர். ஆனால், எம்ஜிஆருடன் பணக்காரி படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார். குலேபகாவலி படத்தின் நாயகிகளில் ஒருவர். பகடை ஆட்டத்தில் ஏமாற்றி ஒவ்வொருவராக வீழ்த்தி அடிமையாக்கும் கேரக்டர். இதில், ராஜகுமாரி பாடும் "வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே பாடல்..." பிரபலமானது. பெண்களே ஆளும் அல்லி ராஜ்ஜியமான பகாவலி நாடு, குலேப் பூ என ரசிகர்களை கவர்ந்த சூப்பர் ஹிட் படம் இது. இந்த படத்தின் "மயக்கும் மாலை பொழுதே நீ போ போ... இனிக்கும் இன்ப இரவே நீ வா வா..." பாடல் இன்றும் சுண்டி இழுக்கும் ரகம்.



அந்தக் கால நயன்தாரா என்றே சொல்லும் அளவுக்கு நாயகியாக கலக்கிய ராஜகுமாரி, வில்லி வேடத்தையும் விட்டு வைக்கவில்லை. கலைஞர் கருணாநிதி கதை வசனத்தில் வெளியான மனோகரா படத்தில் "வசந்த சேனை... வட்டமிடும் கழுகு... வாய் பிளந்து நிற்கும் ஓநாய்..." என சிவாஜி கணேசன் கனல் கக்கும் வசனங்களை பேசுவது இவரைத்தான். ஆம். மனோகரா படத்தின் வசந்த சேனை, டிஆர் ராஜகுமாரியே.


தனது தம்பியும் இயக்குநருமான டிஆர் ராமண்ணாவுடன் சேர்ந்து படங்களையும் தயாரித்திருக்கிறார், ராஜகுமாரி. சிவாஜி கணேசனும் எம்ஜிஆரும் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக் கிளி, இவர்களது தயாரிப்புதான். 


பாசம், குலேபகாவலி, பணம் படைத்தவன், பறக்கும் பாவை, பெரிய இடத்துப் பெண் என பல படங்களை தம்பியுடன் சேர்ந்து தயாரித்த இவர், குணச் சித்திர வேடங்களுக்கும் மாறினார். எம்ஜிஆருக்கு தாயாக (பாசம்), அக்காளாக (1963ல் வெளியான பெரிய இடத்துப் பெண்) நடித்த ராஜகுமாரி தனது 43 வயதில் நடிப்பை நிறுத்திக் கொண்டார். 1963ல் வெளியான அவரது கடைசி படமான 'வானம்பாடி'யில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார், கமல்ஹாசன்.


ராஜகுமாரி நடித்த சுமார் 35 படங்களில் 25 ஹீரோயின். 100க்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடி இருக்கிறார், டிஆர் ராஜகுமாரி. புதுமைப்பித்தன் படத்தில் டிஎஸ் பாலையாவுடன் "மோகனா, மன மோகனா..." என 1955 வரை 15 ஆண்டு காலம் கனவு கன்னியாக ஜொலித்தவர். 


முதன் முதலில் சொந்தமாக தியேட்டர் கட்டிய நடிகையும் இவர்தான். சென்னை பாண்டி பஜாரில் இவர் கட்டிய 'ராஜகுமாரி தியேட்டர்'தான், முதலாவது ஏசி தியேட்டர். சென்னையில் முக்கிய லேண்ட் மார்க்காக, 20 வருஷத்துக்கு முன்பு வரையிலும் கூட இருந்த அந்த தியேட்டர், வணிக வளாகமாகி விட்டது.

தனது தம்பிகளின்  குடும்பத்துக்காகவே திருமணம் முடிக்காமல் கடைசி வரை வாழ்ந்த டிஆர் ராஜகுமாரியை பற்றி கண்ணதாசன் சொன்ன வார்த்தைகள்: மறு பிறவி என இருந்தால் டிஆர் ராஜகுமாரியின் தம்பியாக பிறக்கணும்...

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

Friday 28 August 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 16

தமிழ் சினிமாவில் சின்னவர் என்றால் எம்ஜிஆர் ஒருவரைத்தான் குறிக்கும். அதற்கு காரணம் இவர் தான். இவரை பெரியவர் என அழைத்ததாலேயே தானாகவே எம்ஜிஆர் சின்னவர் ஆனார். அவர்தான் எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி. நாடகங்கள் நடித்த காலத்தில் இருந்து இறக்கும் வரை தம்பிக்கு சினிமாவிலும் அரசியலிலும்  பக்கபலமாக இருந்தவர். அதனாலேயே தனது வாய்ப்புகளை சுருக்கிக் கொண்டாலும் சிறந்த நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். 



எம்ஜிஆரின் இரண்டாவது படமான "இரு சகோதரர்கள்" (1937) இவரது அறிமுகம். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக குழுவில் இருந்து நடிக்க வந்த சக்கரபாணியின் ஒரிஜினல் பெயர் நீலகண்டன். அடுத்தடுத்த படங்களில் வில்லனாக மிரட்டியவர், சக்கரபாணி. மாயா மச்சிந்திரா, மகமாயா, தாய் மகளுக்கு கட்டிய தாலி, அபிமன்யூ, ஸ்ரீமுருகன்,  பொன்முடி, திகம்பர சாமியார், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, மருதநாட்டு இளவரசி, ஜெனோவா, இதயகீதம், குடும்ப விளக்கு, பிரேமபாசம் என வில்லன் மற்றும் குண சித்திர நடிப்பில் ஜொலித்தவர். மகமாயா படத்தில் காமுக அரசனின் நெருங்கிய மந்திரியாக இவர் பேசும் வசனங்கள் தான், தமிழ் சினிமாவின் முதல் நக்கல் வசனங்கள். 



தம்பி எம்ஜிஆருடனும் பல படங்களில் நடித்திருக்கும் சக்கரபாணி, கணீர் குரலுக்கு சொந்தக்காரர். மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், என் தங்கை, என் மகள், மன்னாதி மன்னன், நாடோடி மன்னன், நாளை நமதே, நேற்று இன்று நாளை, இதய வீணை வரை நடித்திருக்கிறார். அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் பேராசை பிடித்த காசிம்கானாக நடித்திருந்தார். குகைக்குள் சென்று பொக்கிஷத்தை அள்ளி விட்டு, சந்தோஷத்தால் மந்திரத்தை மறந்து "கதவே திறந்திடு, சக்கரமே திறந்திடு" என கூறி கடைசியில் 40 திருடர்களிடம் சிக்கி கொலையாகி உயிரிழக்கும் கேரக்டர் இவர்தான்.



மன்னாதி மன்னன் படத்தில் கரிகால் மன்னனாக எம்ஜிஆரின் மாமனாராக நடித்திருப்பார். தம்பி தயாரித்து இயக்கிய தமிழின் முதலாவது பரீட்சார்த்த முறை வண்ணப்படமான நாடோடி மன்னனில் வில்லன் குழுவில் முக்கிய நபர் சக்கரபாணி. வழுக்கை தலையை தடவியபடி மற்றொரு கையில் கம்பு ஊன்றி வீரப்பா மற்றும் நம்பியாருடன் சேர்ந்து மன்னனுக்கு எதிராக சதி வலை பின்னும் கார்மேகம் கதாபாத்திரத்தை இன்றும் ரசிக்கலாம்.



60 ஆண்டுகளுக்கு பின்னும் காலத்தை கடந்து பேசப்படும் இந்த படத்தை 'எம்ஜியார் பிக்சர்ஸ்' என்ற பெயரில் தயாரித்தபோது, தம்பிக்கு முழு பலமாக இருந்தவர் சக்கரபாணி. பணம் முழுவதையும் இந்த படத்தில் போட்டு விட்டு நின்றதை பார்த்து இவர் கேட்ட கேள்விக்கு  எம்ஜிஆர் சொன்ன பதில். "இந்த படம் ஓடினால் மன்னன். இல்லாவிட்டால் நாடோடி". ஆனால், படம் பெரு வெற்றி.

அதன்பிறகு, சினிமாவிலும் அரசியலிலும் எம்ஜிஆரின் வேகமான வளர்ச்சியால் அவருக்கு உதவுவதற்காக, தனது பட வாய்ப்புகளை குறைத்துக் கொண்டு  மேனேஜர் போலவே மாறிக் கொண்டார். ஆனாலும் அவ்வப்போது எம்ஜிஆர் சம்பந்தப்பட்ட சினிமாக்களில்  தலை காட்டியதோடு பட தயாரிப்பிலும் ஈடுபட்டார்.



ஜெயலலிதாவும் சரோஜாதேவியும் சேர்ந்து நடித்த ஒரே படமான "அரச கட்டளை"யின் இயக்குநர் எம்.ஜி.சக்கரபாணி தான். படத்தை தயாரித்தவரும் இவரே. நாடோடி மன்னனில் தம்பியின் இயக்கத்தில் நடித்தவர், இதில் தம்பியை இயக்கினார்.

நாடக வாழ்க்கையில் இருந்தே தம்பிக்கு முழு பலமாக இருந்த சக்கரபாணி, சினிமாவிலும் ஜாம்பவான் தான். ஆனால் தம்பிக்காக வாய்ப்புகளை துறந்த அவர், முதல்வரான பிறகும் கூட தம்பியிடம் எந்தவித ஆதாயமும் பார்க்காதவர். எம்ஜிஆர் மறைவுக்கு முந்தைய ஆண்டுதான் (1986) சக்கரபாணி மறைந்தார். எம்ஜிஆருக்கு 1980களில் சிறுநீரக தானம் செய்தது, இவரது மகள் லீலாவதி தான். 

பொதுவாக, 'தம்பி உடையான் படைக்கு அஞ்சான்' என சொல்வார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் சகோதரர்கள் விஷயத்தில் "அண்ணன் உடையான்..." என்றே சொல்லலாம்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

Sunday 23 August 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 15

எந்த வித ஒலியுமில்லா ஊமைப்படமாக தொடங்கி, ஒரே படத்தில் இரண்டு மூன்று மொழிகள் பேசுவதாக ஆரம்பித்து தூய தமிழ் வசனங்களாக தமிழ் சினிமா தொடங்கிய காலத்தில் சினிமா காரர்களுக்கு சமூகத்தில் அவ்வளவாக மரியாதை கிடையாது. நாடக கலைஞர்களே சினிமாவில் நுழைந்த கால கட்டத்தில் கூத்தாடிகள் என்றே விமர்சிக்கப்பட்டனர். மக்களிடம் சினிமா மோகம் இருந்தாலும் இதுதான் நிலைமை.

ஆனால், சினிமா என்பது அனைத்தையும் மாற்ற வல்லது. நொந்து கிடக்கும் மனித உள்ளங்களை கிளர்ச்சியுற செய்வது. அது ஒரு பணம் காய்ச்சி மரம். இது மாதிரியான ரகசியங்களை அறிந்தவர்கள் சிலரே. அதுபோன்ற ஒரு சூழ்நிலையில் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்து பத்துக்கும் அதிகமான ஹிட் படங்களை அமெரிக்கர் ஒருவர் கொடுத்திருக்கிறார். அவர் தான் எல்லிஸ் ஆர்.டங்கன். முந்தைய பதிவில் டிஎஸ் பாலையா பற்றி எழுதியதும் சிலர் இவரைப்பற்றி கேட்டதால், இவரையும் அறிமுகம் செய்யலாமே என்ற எண்ணம் எழுந்தது.



அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை கழகத்தில் சினிமாத் துறையில்  படிப்பை முடித்து தனது நண்பர்கள் மைக்கேல், மாணிக் லால் தாண்டனுடன் சினிமா கனவுகளுடன் 1935ல் இந்தியாவுக்கு வந்தவர் எல்லிஸ் ஆர்.டங்கன். தாண்டன் இயக்கிய 'நந்தனார்' படத்தில்தான் முதலில் பணியாற்றி இருக்கிறார். தமிழ் சினிமாவின் அரிய பொக்கிஷ படங்கள் சிலவற்றுக்கு, அதன் டைட்டிலைத் தவிர ஆதார ஆவணமாக எந்த வகை பிரிண்டும் தற்போது கிடையாது. அதில், நந்தனார் படமும் ஒன்று.

கேபி சுந்தராம்பாள் நடித்த அந்த படத்தில் முழு வேலையையும் இழுத்துப் போட்டு செய்த டங்கனை நம்பி தயாரிப்பாளர் மருதாசலம் செட்டியார் கொடுத்த படம் தான் "சதிலீலாவதி". இந்த படத்தின் மூலமாக, ஒரு டிரெண்ட் செட்டர் இயக்குநர் என்பதை நிரூபித்தார் எல்லிஸ் ஆர்.டங்கன். 1940களில் பிரபல ஹீரோவாக உயர்ந்த எம்கே ராதா. 1950 தொடங்கி, 1960, 1970கள் வரை கோலோச்சிய எம்ஜிஆர், நகைச்சுவை மன்னர்கள் என்எஸ்கே, தங்கவேலு, டிஎஸ் பாலையா என அனைவருக்குமே இந்த படத்தில் அறிமுகம் தந்தவர்.



அதன் பிறகு, எம்கே தியாகராஜ பாகவதர் நடித்த  அம்பிகாபதி (அந்த காலத்திலேயே ஒரு ஆண்டு காலம் தியேட்டர்களில் ஓடி சாதனை படைத்த படம்)

எம்எஸ் சுப்புலட்சுமி (பிரபல கர்நாடக இசை மேதை எம்எஸ் சுப்புலட்சுமி, நடிப்பவரே பாட வேண்டிய, பின்னணி குரல் அறிமுகமாகாத 1940களில் பிரபல நாயகியாக இருந்தார்) நடித்த மீரா மற்றும் சகுந்தலை,



இரு சகோதரர்கள் (இது எம்.ஜி.ஆரின் இரண்டாவது படம்), காளமேகம்,  பொன்முடி, மந்திரி குமாரி என 1950 வரை இயக்கி இருக்கிறார், எல்லிஸ் ஆர். டங்கன்.

தமிழ் சினிமாவில் மேக் அப்பில் மாற்றத்தை கொண்டு வந்தவர். படப்பிடிப்பில் நகரும் கேமராக்களை பயன் படுத்தும் தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்தவர். அன்றைய கால சினிமாவில் இருந்து மாறுபட்டு நெருக்கமான காதல் காட்சிகளை படமாக்கியவர். இன்றைய 'மேக்கிங் ஆப் பிலிம்' என்ற டிரெண்டை 1936லேயே தனது முதல் படமான 'சதிலீலாவதி'யில் ஆரம்பித்து வைத்தவர். இப்படி இயக்குநர் எல்லிஸ் ஆர் டங்கனை பற்றி ஏராளமாக சொல்லலாம்.



1950ல் மீண்டும் சொந்த நாடு திரும்பும் முன் எல்லிஸ் ஆர் டங்கன் கொடுத்த சூப்பர் ஹிட் படம் 'மந்திரி குமாரி'. கருணாநிதி கதை வசனத்தில் எம்ஜிஆர் ஹீரோவாக நடித்த  இந்த படமும் டிரண்ட் செட்டர் தான். நம்பியார் ராஜகுரு வேடத்தில் வில்லனாக கலக்கிய இந்த படத்தில் தான் "அன்னம் இட்ட வீட்டிலே, கன்னக்கோல் வைத்தே..." பாடல் வாயிலாக பின்னணி பாடகராக வெளிச்சத்துக்கு வந்தார், டிஎம் சவுந்தர ராஜன்.

1950க்கு பின் டிவி சீரியல்கள், ஹாலிவுட் சினிமா என அமெரிக்காவில் திரை வாழ்க்கையை தொடர்ந்த எல்லீஸ் ஆர் டங்கன் தான், முதன் முதலில் டார்ஜான் வகை படத்தை எடுத்தவர். தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதினால் அதில், முதலாவது வெற்றிகரமான இயக்குநராக இருப்பவர், எல்லிஸ் ஆர் டங்கன் என்ற இந்த அமெரிக்கர்தான்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

Saturday 22 August 2020

வெல்கம் விநாயகா...




அன்னையின் அங்கத்தில் 

அவதரித்த அழுக்குப் பிள்ளை

சாணமும் சந்தனமும் 

சமமென கருதும்

சமத்துப் பிள்ளை

எருக்கமும் அருகமும்

அருமையெனும் அன்பு பிள்ளை


எண்ணம்போல வளைந்து

எண்ணியதை நிறைவேற்றும்

எல்லோரின் வீட்டுப்பிள்ளை

நீரில் கரைத்தாலும்

தடியால் அடித்தாலும்

கோபமே கொள்ளாத

அசராத பிள்ளை 


கைப்பிடி உருண்டையோ

கடல் போல உருவமோ

மூஞ்சுறு வேடமோ

மாமன்னன் வேடமோ

மனம் கோணாமல் மகிழ்ந்து

மகிழ்வுடன் குடியேறும்

மகிழ்ச்சி பிள்ளை


நினைத்தவர் நினைத்தபடி

இழுத்தவர் இழுத்தபடி

கண்டவர் கண்டபடி

எந்தபடி எப்படியானாலும்

படிப்படியாய் உயர்த்தும்

படித்துறைப் பிள்ளை


இந்த பிள்ளை யார்

இந்த பிள்ளை யார்

என கேட்கத் தூண்டும்

எங்கள் பிள்ளையார்


#நெல்லை_ரவீந்திரன்

Thursday 20 August 2020

எஸ்பிபி...

ஆறுதலை தந்த குரலோனுக்கு தேறுதலை தா இறைவா....

.

.

.

ஒட்டு மொத்த தமிழகமே பிரார்த்திக்கிறது. 1984ல் இதுபோல ஒரு கூட்டு பிரார்த்தனை. பாட்டுக் கச்சேரிகளில் எல்லாம் முதலில் பக்தி பாடல்களை பாட மாட்டார்கள். "ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்..." பாடல்தான் முதலில். அந்த வேண்டுதல் பலித்தது. அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்து ஹாட்ரிக் சாதனையுடன் மீண்டும் முதல்வரானார், எம்ஜிஆர்.

சினிமாவில் தனது முதல் குரலை அவருக்காக கொடுத்த எஸ்பிபி-க்கும் 35 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் வேண்டுகிறது, கூட்டுப் பிரார்த்தனையுடன். இசையை விரும்பும் ஒவ்வொருவரின் உணர்வுக்குள்ளும் இருக்கிறார், எஸ்பிபி.



நான் அறிந்தவரை தமிழ் வார்த்தைகளை வைரத்தால் அறுத்தது போல அவ்வளவு க்ளீயர் கட்டாக அச்சர சுத்தமாக பாடும் பாடகர் அவர் தான். எவ்வளவு உச்சஸ்தாயி, சிரிப்பு, சோகம் என பாடினாலும் அதில் மாற்றமில்லை. கும்பக்கரை தங்கையா படத்தில் "பூத்து பூத்து குலுங்குதடி வானம்..." பாட்டில் சிரித்தபடியே பாடுவதில் அதை கேட்கலாம்.

1980, 1990களில் கமல் பாடல்களில் கமலின் குரலே ஒலிப்பது போலவே எனக்கு கேட்கும். ஆச்சரியமாக, 'ஸ்வாதி முத்யம்' தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங் 'சிப்பிக்குள் முத்து'வில் கமலுக்கு குரல் கொடுத்தவர் எஸ்பிபி. 'சலங்கை ஒலி'யின் ஒவ்வொர் பாடல்களும் எஸ்பிபியையே எனக்கு நினைவூட்டும்.

'சிப்பிக்குள் முத்து' படத்தில் "துள்ளி துள்ளி நீ பாடம்மா..." பாடலின் ஆரம்பத்தில் மூச்சு விடாமல் நீண்ட நேரம் ஹம்மிங் பாடியவர், இப்போது பிராணனுக்காக தவிப்பது மனதை பிசைகிறது.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ரஜினி, கமல் தொடங்கி இன்றைய தலைமுறை வரை குரல் கொடுத்த எஸ்பிபி உச்சம் தொட்டாலும் குழந்தை மனசுக்காரர். எனக்கு தெரிந்த வரையில் இவரும் எம்எஸ்வியும் புகழில் பேருருவானாலும் உள்ளத்தால் குழந்தைகளே. அதற்கு ஒரு உதாரணம்.

பின்னணி பாடல், நடிகர், இசையமைப்பாளர் (துடிக்கும் கரங்கள் படத்தின் மேகம் முந்தானை... என்ற பாடலே போதுமே) என ஜெயித்த அவரால் இயக்கத்திலும் வெல்ல முடியும். ஆனால் செய்யவில்லை. அதற்கு எஸ்பிபி சொன்ன காரணம்: 

என்னால் ஒருவரை கடினமாக திட்டி பேசத் தெரியாது. 

இவ்வளவு குழந்தை மனதோடு அரை நூற்றாண்டுக்கு மேலாக, தமிழ் ரசிகர்களின் மனங்களுக்கு ஒவ்வொரு சூழலிலும் ஆறுதலை தந்த அன்னமையாவுக்கு தேறுதலை தா இறைவா...

#நெல்லை_ரவீந்திரன்

Wednesday 19 August 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 14

 வில்லனாக அறிமுகமாகி கதாநாயகனாக ஒரு சில படங்களில் நடித்து நகைச்சுவை கலந்த குணசித்திரத்தால் நிலைத்திருக்கும் டிஎஸ் பாலையா, பொக்கிஷத்தில் மின்னும் இன்றைய பவளம்.


நடிப்பின் மீதான ஆசையால் கந்தசாமி முதலியார் நாடக குழுவில் சேர்ந்து அவர் மூலமாகவே சினிமாவில் நுழைந்தவர் டிஎஸ் பாலையா. அவரது முதல் படம் சதி லீலாவதி (1936). அந்த படத்தின் கதாசிரியர் கந்தசாமி முதலியாரின் மகனான படத்தின் நாயகன் எம்.கே.ராதா தொடங்கி என்.எஸ். கிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., தங்கவேலு என பின்னாளைய பிரபலங்கள் அனைவருக்குமே அந்த படம் தான் முகவரி.


முதல் படத்திலேயே வில்லனாக தோன்றிய டி.எஸ்.பாலையா, தியாகராஜ பாகவதரின் அம்பிகாபதி (1937), பி.யூ. சின்னப்பா நடித்த ஆர்யமாலா (1941) என அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வில்லன் நடிகரானார். இடையே, மாடர்ன் தியேட்டர்ஸின் 'சித்ரா' மற்றும் எம்ஜிஆரும் ஜானகியம்மாளும் நடித்த மோகினி (1948) படத்தில் அன்றைய பிரபல ஹீரோயின் மாதுரி தேவியுடனும் 'ப்ரசன்னம்' என்ற மலையாள படத்தில் அறிமுக நாயகியான நாட்டிய பேரொளி பத்மினியுடனும் ஹீரோவாக நடித்திருக்கிறார் பாலையா. 


ஆனாலும் வில்லன் நடிப்பில் ஜொலித்தார். வேலைக்காரி, அந்தமான் காதலி, ராஜகுமாரி, மதுரை வீரன், தாய்க்குப்பின் தாரம், தாரம், ஹலோ மிஸ்டர் ஜமீன்தார், தூக்குத் தூக்கி என அவர் வில்லனாக மிரட்டிய படங்கள் ஏராளம். 'வேலைக்காரி'யில் அண்ணா வசனத்தில் பகுத்தறிவு பேசுவதோடு குடியை கெடுக்கும் நான்கு வித தந்திரங்களை அவர் விவரிக்கும் விதம் அபாரம்.



எம்ஜிஆரின் 'அந்தமான் காதலி'யில் காமுக வில்லனுக்கு தூபமிடும் வஞ்சகனாகவும் மதுரை வீரனில் வெட்டிப் பந்தாவுடன் உதார் விடும் தளபதியாகவும், சிவாஜியின் தூக்குத் தூக்கி படத்தில் வட இந்திய சேட் போலவும் டிஎஸ் பாலையா நடித்த கதாபாத்திரங்கள் எல்லாம் சின்ன சின்ன உதாரணங்கள் தான். மதுரை வீரனில் பொம்மியை ஆற்றில்  காப்பாற்றியது போல ஆடையில் தண்ணீரை பிழிந்து ஏமாற்றுவதும் சண்டை வரும்போது வெள்ளிக்கிழமை கத்தியை கையால் தொட மாட்டேன் என பேசுவதும் அவரது நகைச்சுவை கலந்த வில்லத்தனத்துக்கு சான்று.


புதுமைப்பித்தன் (1957) படத்தில் நய வஞ்சக வில்லன் வேடம். அதற்கு பொருத்தமாக "வஞ்சகத்தின் மொத்த உருவமே நடந்து வருகிறது பாருங்கள்" என்ற வசனத்தை அந்த படத்தில் எம்.ஜி.ஆர் பேசுவார். 'மணமகள்' படத்தில் பாலையாவின் நடிப்பை பார்த்து அந்த காலத்திலேயே கார் பரிசாக கொடுத்திருக்கிறார் கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன். சினிமா உலகில் கார் பரிசளிக்கும் வழக்கம் பாலையாவால் தான் ஆரம்பித்திருக்கிறது.



உச்சத்தில் இருந்தபோதே, சினிமாவும் வாழ்க்கையும் போரடித்து தலைமறைவான டிஎஸ் பாலையாைவை புதுச்சேரியில் அடையாளம் கண்டு மீண்டும் அழைத்து வந்து நடிக்க வைத்தவர், மாடர்ன் தியேட்டர்ஸ் பட நிறுவன அதிபர் சுந்தரம். உடனடியாக அவர் எடுத்த 'பர்மா ராணி' படத்திலும் உளவாளியாக வில்லத்தனத்தை நிரூபித்திருப்பார் பாலையா. இவை எல்லாம் டிஎஸ் பாலையா பற்றி ரசிகர்கள் அதிகம் அறிந்திராத பக்கங்கள்.


அதன் பிறகு குணச்சித்திர நடிப்பில் தந்தையாக,  குடும்பத் தலைவராக பெரிய மனிதராக நடிப்பில் புதிய பரிமாணத்தை காட்டினார், பாலையா. கவலை இல்லா மனிதன், காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம், பாகப் பிரிவினை, பாலும் பழமும், ஊட்டி வரை உறவு, தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல் என டிஎஸ் பாலையா என்றதுமே நினைவில் வரும் படங்களின் பட்டியல் ஏராளம்.


எம்ஜிஆருடன் பணம் படைத்தவன், பெற்றால்தான் பிள்ளையா, சிவாஜியுடன் பாகப் பிரிவினை, பாலும் பழமும் மாதிரியான படங்கள் எல்லாம் உருக்கமான உணர்ச்சி வசமாகும் தந்தை என்றால் காதலிக்க நேரமில்லை, சிவாஜியின் தந்தையாக ஊட்டி வரை உறவு, பாமா விஜயம் வகையறா எல்லாம் நகைச்சுவை மிகுந்த உற்சாக தந்தை.


அதுவும் காதலிக்க நேரமில்லை படம் என்றாலே நாகேஷை விட பாலையாதான் முதலில் நினைவுக்கு வருவார். அவரிடம் நாகேஷ் கதை சொல்லும் காட்சியில் 'என்னது ஒரு பொண்ணு உள்ள கண்ணா.. கேட்கவே பயங்கரமா இருக்கே..' என கூறுவதும் பணக்கார பையன் கப்பல் அதிபர் என கூறியதும் 'ஏனுங்க அசோகரு உங்க மகருங்களா...?' என அதிகபட்ச மரியாதையுடன் பேசுவதும் பாலையாவின்  நகைச்சுவை நடிப்பின் உச்சம். படங்களில் அவரது வசன உச்சரிப்பு, முக பாவம், உடல் மொழி அனைத்தும் ஆஸம் ரகம்.



சிவாஜியுடன் 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் தவில் வித்வானாக அவர் அடிக்கும் லூட்டி, தலைமுறைகளை கடந்தும் கொண்டாடப் படுகிறது. நாகேஷ், மனோரமா இருந்தும் கூட 'தில்லானா மோகனம்பாள்' என்றாலே பாலையாதான். "இவங்கல்லாம் ஸீன்ல இருந்தா உஷாரா இருக்கணும் இல்லைன்னா நம்மள பின்னுக்கு தள்ளிருவாங்க" இப்படி சிவாஜி கணேசன் சொன்ன மூன்று பேரில் ஒருவர் பாலையா. மற்ற இருவர் எம்ஆர் ராதா, ரங்காராவ்.


அதனால் தான் இயக்குநர் ஏபி நாகராஜனின் ஆஸ்தான நடிகராக பாலையா இருந்தார். 'திருவிளையாடல்' படத்தில் இசை கர்வம் கொண்ட, பாண்டிய நாட்டையே அடிமையாக்க துடிக்கும் ஹேமநாத பாகவதராகவே வாழ்ந்திருப்பார், பாலையா. அதில், பாலையாவுக்காக "ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா..." பாடலை பாடிய பாலமுரளி கிருஷ்ணாவே அந்த வேஷத்தில் நடிக்க விரும்பியபோது, "நீங்கள் இசையில் மேதை, ஆனால் நடிப்பில் பாலையாதான் மேதை" என கூறி விட்டாராம் இயக்குநர் ஏபி நாகராஜன். அதன் பிறகு குரலாகவும் உருவமாகவும் ஹேமநாத பாகவதர் கேரக்டருக்கு  பாலமுரளியும் பாலையாவும் உயிர் கொடுத்திருக்கின்றனர்.



ஏபி நாகராஜனின் 'அகத்தியர்' (1972) படம்தான் பாலையாவின் கடைசி படம். 35 ஆண்டு கால சினிமா பயணத்தில் பெரும்பாலான படங்களில் நடுத்தர, முதிய வயது வேடங்களில் நடித்த இவரும் ரங்காராவ் போலவே முதுமையை காணாமலேயே இறந்து விட்டார். நெல்லை மண்ணில் பிறந்த டிஎஸ் பாலையா மறையும் போது 57 வயதுதான்.

பாலையாவை அறிமுகப்படுத்திய இயக்குநர் எல்லீஸ் ஆர் டங்கன், அவரைப் பற்றி 1940களிலேயே  கூறிய வார்த்தைகள் "பாலையாவை மிஞ்ச யாராலும் முடியாது. எந்த ரோல் குடுத்தாலும் அசத்துறான்". இதை 1972 வரை நிரூபித்தவர் டிஎஸ் பாலையா.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

Sunday 16 August 2020

வாஜ்பாய்... பத்து..

 1) ஏவுகணை விஞ்ஞானி அப்துல் கலாமை, மக்களின் ஜனாதிபதியாக இந்திய மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.

2) கலாமுடன் இவர் இணைந்து நடத்திய ஆட்சியே சுதந்திர இந்தியாவின் மிகச்சிறந்த பொற்காலம். இந்தியாவை நான்கு கரங்களாக இணைக்கும் தங்க நாற்கர சாலை திட்டம் சிறு உதாரணம். 

3) ‘பஞ்ச ஜைன்யா’, ‘வீர் அர்ஜீன்’, ‘ராஷ்டிர தர்மா’ பத்திரிகைகளின் ஆசிரியர். சிறந்த கவிஞர். அருமையான பேச்சாளர், நகைச்சுவை உணர்வு மிக்கவர், போராட்ட குணம் உடையவர்.

4) 1957 முதல் 10 முறை மக்களவைக்கும், 2 முறை மாநிலங்களவைக்கும் எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். இவரது பாராளுமன்ற நடவடிக்கைகளை பார்த்து ‘எதிர் காலத்தில் மிகப்பெரிய தலைவராவார்’ என்ற நேருவின் கணிப்பு 40 ஆண்டுகள் கழித்து நிஜமானது. 

5) 1980ம் ஆண்டில் வெறும் 2 எம்பிக்களை மட்டுமே கொண்டிருந்த தனது கட்சியை அடுத்த 16 ஆண்டுகளில் ஆட்சிக் கட்டிலில் ஏறும் அளவுக்கு வளர்த்ததில் பெரும்பங்கு ஆற்றியவர். 

6) சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத ஒரு அரசை 5 ஆண்டு முழுமையான பதவிக் காலத்துக்கு திறம்பட நடத்தியவர். தொடர்ந்து 7 ஆண்டுகளாக பதவி வகித்த காங்கிரஸ் அல்லாத பிரதமர். 

7) கார்கில் போரில் பாகிஸ்தானுடன் வீரம் காட்டியதோடு, பேருந்து பயணத்தை தொடங்கி வைத்து அன்பு பூக்களையும் மலர வைத்து உலகை வியக்கச் செய்தவர். 

 8) பொக்ரானில் அணுகுண்டு வெடித்து உலகை அதிரச் செய்ததோடு, அமெரிக்கா விதித்த பொருளாதார தடையை எதிர் கொண்டு இந்தியாவை வழி நடத்திய தேசிய தலைவர். வல்லரசு பாதையமைத்த தலைவர்.

9) 60 ஆண்டுகளாக வலதுசாரி கொள்கைகளின் தீவிர பற்றாளராக இருந்தபோதிலும், இடது சாரி உள்ளிட்ட மாற்றுக் கொள்கை உடைய தலைவர்களின் கருத்துகளையும் கேட்ட பண்பாளர்.

10) அன்னிய நாடுகளின் நிர்பந்தங்களை, அசையா உறுதியுடன் எதிர்த்து நின்றது, உமது ஆட்சி. ஏழாண்டு

ஆட்சியில் எழுந்தது பாரதம்

ஏழு ஜென்மத்துக்கும்

மறக்குமோ பாரதம் அதை..



Saturday 15 August 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 13

தமிழ் சினிமாவை முதன் முதலாக ஆஸ்கார் விருதுக்கு அனுப்பிய பெருமைக்கு சொந்தக்காரர். வழக்கமான எம்ஜிஆர் பார்முலா எதுவுமே இல்லாமல் படம் எடுத்து காலம் கடந்தும் பேச வைத்தவர். அவர்தான் இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர்.


ஆறடிக்கும் அதிகமான ஆஜானுபாக தோற்றம் கொண்டவர். கேவி மகாதேவன் எம்ஜிஆர் காம்பினேஷனில் வெளியான குமரி (1952) படம்தான் உதவி இயக்குநராக இவரது என்ட்ரி. சினிமாவில் அவர் நுழைந்தது எதிர்பாராதது. டிகிரி முடித்து ஐஏஎஸ் முயற்சி செய்தபோது நண்பர் வீட்டுக்கு சென்ற அவரின் எழுத்து ஆர்வத்தை பார்த்த நண்பரின் தந்தை சினிமாவுக்கு அழைத்து வந்தார். அந்த தந்தை அன்றைய பிரபல இயக்குநர் கம் தயாரிப்பாளர் பத்மநாப அய்யர். அப்போது, குமரி படத்தை எடுத்துக் கொண்டிருந்தவர் அதிலேயே உதவி இயக்குநராக திருலோகச்சந்தரை சேர்த்துக் கொண்டார். 


ஜூபிடர் பிக்சர்ஸ் போன்ற தயாரிப்பு நிறுவனங்களிலும் அன்றைய பிரபல இயக்குநர்களிடமும் பணி புரிந்த திருலோகச்சந்தருக்கு 'விஜயபுரி வீரன்' (1960) படத்தில் கதாசிரியர் வாய்ப்பும் வழங்கியவர், இயக்குநர் ஜோசப் தளியத். அன்றைய சூப்பர் ஹிட் படமான விஜயபுரி வீரனின் கதாநாயகன் ஆனந்தன், 1980, 1990களில் கலக்கிய டிஸ்கோ சாந்தியின் தந்தை. ஏ.சி.திருலோகச்சந்தர் முதன் முதலில் இயக்கிய வீர திருமகன் (1962) படத்தின் கதாநாயகனும் ஆனந்தன் தான். 



அந்த படத்தின் நாயகி சச்சு. 'ரோஜா மலரே ராஜகுமாரி ஆசை கிளியே  அழகிய ராணி….' 'பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் பேசாத கதைகளை பேச வந்தாள்...' போன்ற காலத்தை வென்ற ஹிட் பாடல்கள், இந்த படத்தில்தான். முதல் படமே ஹிட்டடிக்க ஏவிஎம்மின் ஆஸ்தான இயக்குநரானார் திருலோகச்சந்தர். தனது நெருங்கிய நண்பரான திருலோகச்சந்தரை ஏவிஎம்மில் அறிமுகம் செய்து வைத்தவர் நடிகர் அசோகன். இருவரும் அந்தக் காலத்து பட்டதாரிகள், மனம் விட்டு பேசும் அளவுக்கு நெருக்கமானவர்கள். 


தமிழ், இந்தி இரு மொழிகளில் ஏவிஎம் தயாரித்த சூப்பர் ஹிட் படமான கருப்பு நிற பெண் எதிர் கொள்ளும் அவலங்களை பேசும் 'நானும் ஒரு பெண்' படத்தின் இயக்குநர் இவரே. அந்த படத்தின் 'கண்ணா கருமை நிற கண்ணா உன்னை காணாத கண் இல்லையே...' பாடல், ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்.



ஏவிஎம் பேனரில் எம்ஜிஆர் நடித்த ஒரே படம். சண்டைக் காட்சிகளும் வில்லனும் இல்லாமல் வித்தியாசமாக எம்ஜிஆர் நடித்த படம். ஏவிஎம்மின் முதல் கலர் படம். அதன் 50வது தயாரிப்பு என பல பெருமையை கொண்ட  'அன்பே வா' இயக்குநரும் ஏ.சி.திருலோகச்சந்தர்தான். 50 ஆண்டுகளை கடந்து இன்றைய தலமைுறையும்  ரசிக்கக் கூடிய அந்த படமே திருலோகச்சந்தரின் திறமையை கூறும்.


இதுபோல, அவன்தான் மனிதன், பாபு, எங்க மாமா, எங்கிருந்தோ வந்தாள், இருமலர்கள், பைலட் பிரேம்நாத், டாக்டர் சிவா, லாரி டிரைவர் ராஜாகண்ணு, குடும்பம் ஒரு கோயில் விஸ்வரூபம் என 1980கள் வரை சிவாஜியை அவர் இயக்கிய படங்களின் பட்டியல் மிக நீளம்.



தந்தை மகன்கள் என சிவாஜி கணேசன் மூன்று வேடங்ளில் கலக்கும் 'தெய்வமகன்' (1969) படத்தை இயக்கியதும் ஏ.சி.திருலோகச்சந்தர்தான். முகத்தில் வடுவுடன் கோரமாக தந்தை, மூத்த மகன். அழகான தோற்றத்தில் இளைய மகன் என சிவாஜி அதில் வாழ்ந்திருப்பார். தமிழ் சினிமாவின் மைல் கல் அந்தப்படம்.  ஆஸ்கார்  விருதுக்காக அனுப்பப்பட்ட முதல் தமிழ் படமும் அதுவே. அந்த பெருமை இயக்குநர்  திருலோகச்சந்தரையே சேரும். அந்த படத்தின் 'கேட்டதும் கொடுப்பவனே, கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே...' பாடல் எவர்கிரீன் ரகம்.


1967ல் 'இருமலர்கள்' வெளியானபோது 'ஊட்டி வரை உறவு'. 1970ல் 'எங்கிருந்தோ வந்தாள்'படம் வந்தபோது 'சொர்க்கம்'. 1974ல் 'டாக்டர் சிவா' பட ரிலீசின் போது 'வைர நெஞ்சம்' என ஒரே நாளில் சிவாஜி படமே சிவாஜி படத்துக்கு போட்டியாக வெளியானபோது வெற்றியை தனதாக்கியவர் இயக்குநர் திருலோகச்சந்தர். சிவாஜியை இவர் இயக்கிய சுமார் 25 படங்களில் பெரும்பாலானவை ஹிட் ரகங்களே.

இயக்கத்தின் கூடவே அவர் கதை, திரைக்கதை எழுதிய படம் "பார்த்தால் பசி தீரும் (1962)". ஜெமினி, சிவாஜி இணைந்து நடித்த இந்த படத்தி் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார், கமல்ஹாசன். அதுவும் இரட்டை வேடங்களில். ரவிச்சந்திரனை வைத்து திருலோகச்சந்தர் இயக்கிய 'அதே கண்கள்' இன்று வரை பேசப்படும் திரில்லர் திரைப்படம்.

நடிகர் சிவகுமாரை தமிழுக்கு அறிமுகப் படுத்தியவரும் இவர்தான். அந்த படம் 'காக்கும் கரங்கள் (1966)'. அதே சிவகுமாரை வைத்து பத்தாண்டுகள் கழித்து  இயக்கிய வெற்றிப் படம் 'பத்ரகாளி'. இன்றை டிவி சீரியல்களின் இவருக்கு பதில் இவர் என்ற கலாசாரத்தை அன்றே சினிமாவில் அறிமுகம் செய்தவர் திருலோகச்சந்தர். பத்ரகாளி படத்தின் ஹீரோயின் ராணி சந்திரா, படப்பிடிப்பு முடியும் முன்பே விமான விபத்தில் இறந்து விட்டதால், கிளைமாக்ஸ் காட்சிகளை குரூப் டான்சராக இருந்த புஷ்பா என்ற பெண்ணை வைத்து படமாக்கினார் திருலோகச்சந்தர்.

'வணக்கத்துக்குரிய காதலியே' படத்தின் மூலமாக ரஜினி, ஸ்ரீதேவியையும் இயக்கி இருக்கிறார். நதியாவுக்கு அப்பாவாக சிவாஜி கணேசன் நடித்து 1987ல் வெளியான அன்புள்ள அப்பா படத்தின் இயக்குநரும் ஏ.சி.திருலோகச்சந்தர் தான்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

Wednesday 12 August 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 12

சினிமா பாடல்கள் என்ற உடனேயே எல்லோரின்  நினைவிலும் உடனடியாக வருவது,  எம்எஸ் விஸ்வநாதன், இளையராஜா என்ற பெயர்கள் தான். ஆனால், ஜனரஞ்சக தமிழ் சினிமா பாடல்களில் இவர்களின் முன்னோடி கே.வி. மகாதேவன் என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். தமிழ் சினிமாவில் கர்நாடக இசையும் தியாகராஜ பாகவதர், கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், எம்எஸ் சுப்புலட்சுமி போன்ற பாடக, பாடகி கம் நடிக, நடிகைகளுக்கே இடமுண்டு என இருந்த 1940களில் அறிமுகமானவர், கே.வி.மகாதேவன். 


இன்றைய நாகர்கோவில் தான் அவரது சொந்த ஊர். இவரது தந்தை, அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான ஆஸ்தான நாதஸ்வர கலைஞர். 1942ல் வெளியான மனோண்மணி படத்தில் துவங்கிய இவரது திரை இசை, அரை நூற்றாண்டு காலம் தமிழ், தெலுங்கு என தமிழ், தெலுங்கு மொழிகளில் இவர் இசையமைத்த படங்களின் எண்ணிக்கை 600க்கும் அதிகம்.


எம்ஜிஆர் நடிப்பில் 1952ல் வெளியான குமாரி படம்தான் அவருக்கு பெயர் வாங்கி தந்தது. 1960 மற்றும் 1970களில் தமிழ் சினிமா பாடல்களில் இவரது ஆதிக்கமானது,  விஸ்வநாதன், ராமமூர்த்தி இரட்டையர்களுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல.

சுவாமி... மன்னா... இப்படியான புராண கால டயலாக்குகள்,  கர்நாடக இசை ராகங்களுன்  வெளியான படங்களுக்கு இசையமைத்த இதே கேவி மகாதேவன், ‘காட்டுக்குள்ளே திருவிழா கன்னி பெண்ணின் மணவிழா...‘ ‘கட்டித் தங்கம் வெட்டி எடுத்து காதல் எனும் சாறு பிழிந்து...‘ 'ஒரு வருஷம் ஒரு வருஷம் காத்திருந்தா கையிலொரு பாப்பா..' என எம்ஜிஆருக்கும்


‘நலம் தானா, நலம் தானா.. உடலும் உள்ளமும் நலம் தானா...‘ 'யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை' என சிவாஜிக்கும் ஜனரஞ்சக பாடல்களில் காதல் மாளிகை கட்டிக் கொடுத்திருக்கிறார், கேவி மகாதேவன்.


எம்ஜிஆரை வைத்து சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்த 16 படங்களுக்கும் இவர் தான் இசையமைப்பாளர். ‘மனுஷனை மனுஷன் சாப்பிடுறான்டா, தம்பி பயலே….‘ ‘உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்…‘, ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்..‘ ‘கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி‘, 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா...' என எம்ஜிஆரின் தத்துவ பாடல்களுக்கு மட்டுமல்ல, எம்ஜிஆரின் சொந்த தயாரிப்பான அடிமைப்பெண் படத்துக்கும் இசையமைத்தது கேவி.மகாதேவன் தான்.



ராஜராஜன், மாட்டுக்கார வேலன், என் அணணன், பல்லாண்டு வாழ்க, பட்டிக்காட்டு பொன்னையா என எம்ஜிஆர் நடித்த சுமார் 40 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார், கேவி மகாதேவன். எம்எஸ்வி பாடலோ என நினைக்கும் 1960களின் பல பாடல்கள் இவருடையதாக இருப்பதையும் அறிய முடிகிறது.


‘பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே...‘ ‘ மணமகளே, மருமகளே வா வா..‘ உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை...‘ ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே நில்லு கொஞ்சம் நானும் வாரேன்...‘, 'அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலேயே எனக்கு...', 'போறவளே போறவளே பொன்னுரங்கம் என்ன புரிஞ்சிக்காம போறியே என் கண்ணு ரங்கம்...' என காலத்தால் அழியாத கீதங்களை தந்தவரும் அவரே. 



இயக்குநர், கதாசிரியர், நடிகர் என பல அவதாரம் எடுத்த ஏ.பி.நாகராஜனின் பேவரைட் இவர்தான்.  ஏ.பி.நாகராஜன் இயக்கிய, சூப்பர் ஹிட் பாடல்கள் இடம் பெற்ற திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட் செல்வர், தில்லானா மோகனாம்பாள் படங்களின் இசையமைப்பாளர் கேவி மகாதேவன்.   

வசந்த மாளிகை, படிக்காத மேதை, எங்கள் தங்க ராஜா, நவராத்திரி, மக்களை பெற்ற மகராசி என சிவாஜி கணேசனுக்கும் ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவரின் கைவண்ணங்கள் தான், ‘சித்தாடை கட்டிக்கிட்டு, சிங்காரம் பண்ணிக்கிட்டு...‘ ‘தைப்பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்..' போன்ற காலம் கடந்து நிலைத்து நிற்கும் பாடல்கள். ரசிகனுக்கு பிடித்தமான இசையை கர்நாடக இசையுடன் கலந்து ஊட்டுவது கேவி மகாதேவனின் ஸ்டைல்.  1950களின் இறுதியில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்ததோடு தமிழில் இருந்து இந்திக்கு சென்ற முதல் படமான சம்பூர்ண ராமாயணத்துக்கும் இவர்தான் இசை. 

'இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்..' என காற்றினில் கீதம் இசைத்த இவரது இசை ஆட்டம் 1970களிலும் ஓயவில்லை. சிவகுமார் நடித்த ஏணிப்படிகள் படத்தின் இசையும் இவரே. அந்த படத்தின் ‘பூந்தேனில் கலந்து, பொன் வண்டு எழுந்து...‘ ‘ஏனுங்க மாப்பிள்ளை என்ன நினைப்பு, இங்க என்னாத்த கண்டிங்க இந்த சிரிப்பு..‘ பாடல்களை கேட்காத 1980ஸ் கிட்ஸ் எவருமே இருக்க முடியாது.

அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை, மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி என 1980களின் பிற்பகுதி வரை தமிழில் இசையமைத்த அவர், தெலுங்கில் 1994 வரை பாடல்களை தந்திருக்கிறார். அரை நூற்றாண்டுக்கு மேலாக திரை இசையில் திலகமாக இருந்த கேவி மகாதேவன், 1980ல் தெலுங்கில் வெளியாகி, இசைக்காகவே ஹிட்டடித்து இன்றளவும் பேசப்படும் சங்கராபரணம் படத்தின் மூலம் கர்நாடக இசையில் தான் எப்பவுமே தான் ஒரு மேதை என்பதை சினிமா உலகுக்கு காட்டினார். அதில் இருந்து பத்தாண்டுகள் கழித்து இவர் இசையமைத்த ‘ஸ்வாதிகிரணம்' தெலுங்கு படம் இசைக்காகவே விருதுகளை அள்ளி குவித்தது.

எம்எஸ் விஸ்வநாதனுக்கே வாய்ப்பு வழங்கியவர்.  ஜெயலலிதாவை ‘அடிமைப்பெண்‘ படத்தின் மூலம் (அம்மா என்றால் அன்பு...) பாடகியாக்கியவர்.  அதே படத்தில், 'ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலேவே வா...' பாடல் வழியாக எஸ்பி. பாலசுப்பிரமணியம் என்ற காலத்தை வென்ற பாடகரை தமிழ் ரசிகர்களுக்கு தந்தவர் என ஏராளமான பெருமைகளுக்கு சொந்தக்காரர், திரை இசை திலகம் கேவி மகாதேவன்

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

Tuesday 11 August 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 11

தமிழ் சினிமாவில் நீண்ட காலம் இருந்து முத்திரை பதித்தவர்கள் ஒரு பக்கம் இருக்க ஒரிரு படங்களை மட்டுமே கொடுத்து ஜொலிக்கும் பவளங்களும் உண்டு. அவர்களில் ஒருவர் தாதா மிராசி. மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். சினிமா கதாசிரியர், இயக்குநர். நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அண்ணாவின் ஆசை, பூவும் பொட்டும், மூன்று தெய்வங்கள், ரத்த திலகம் இப்படி ஒரு சில படங்கள் மட்டுமே அவர் இயக்கி இருக்கிறார். 



ஆரம்பத்தில் ஜனரஞ்சகமாக செல்லும் திரைக்கதை திடீரென கிரைம் எல்லைக்குள் போவது தாதா மிராசியின் ஸ்டைல். இவரது பிரதான கதாபாத்திரங்கள் பெரும்பாலும் குற்ற உணர்வை மறைத்து மருளுபவையாகவே இருக்கும். மேற்சொன்ன படங்களில் கூட அப்படித்தான்.

ஜெயிலில் இருந்து தப்பித்து திருட வந்த வீட்டிலேயே அளிக்கும் உபசரிப்பை பார்த்து மருளும் மூன்று திருடர்கள தான் மூன்று தெய்வங்கள் கதை. அண்ணாவின் ஆசையும் படமும் அப்படித்தான். ஆனால், போரடிக்காமல் படத்தை கொண்டு செல்வது தாதாமிராசியின் ஸ்டைல். அதில் புதிய பறவை தனி முத்திரை.

இன்று வரை சினிமா ரசிகர்களால் உச்சரிக்கப்படும் ஒரு வசனம். சரோஜாதேவியின் "கோப்பால்... கோப்பால்..." என்பதை மறுக்க முடியாது.  இந்த வசனம் இடம் பெற்ற படம் "புதிய பறவை". சிவாஜி கணேசனின் சொந்த தயாரிப்பான இந்த படத்துக்கு அவரது எவர்கிரீன் ஹிட் வரிசையில் முக்கிய இடம் உண்டு. அவரது ரசிகர்களாக இல்லாதவர்களும் கொண்டாடும் படம், புதிய பறவை. இது வங்காளி திரைப்படம் ஒன்றின் ரீ மேக்.



மனைவியை கொலை செய்து விட்டு, மற்றொரு பெண் மீது காதல் ஏற்பட, மனதுக்குள் கொலையையும் காதலையும் கலந்து தவிக்கும் ஆன்ட்டி ஹீரோ வேடம், அந்த படத்தில் சிவாஜிக்கு.

மிகப்பெரிய மல்டி மில்லியனரான சிவாஜி, இரவு நேர கிளப்பில் பாடல்களை பாடும் சவுகார் ஜானகியை காதலித்து மணமுடித்து விட்டு, நடத்தையால் கோபமடைந்து அவரை கொன்று ரயில் தண்டவாளத்தில் வீசி விடுவார். இது சிங்கப்பூரில் நடக்கும்  சம்பவம். அதன்பிறகு, எதுவுமே தெரியாதது போல ஊட்டி பங்களாவுக்காக வரும் சிவாஜியை கப்பலில் கூடவே பின்தொடர்ந்து வரும் ரகசிய போலீஸ் அதிகாரிகளாக எம்ஆர் ராதா, சரோஜாதேவி.

படத்தின் ஆரம்பமே கப்பல் பயண காட்சிதான். இரவு நேர கிளப் டான்ஸ், பாடல், மது விருந்து, மேலை நாட்டு நடனம் என வித்தியாசமான தளத்தில் செல்லும் கதை, இடைவேளைக்கு பிறகு திகில் பிளஸ் கிரைம் பாதையில் செல்லும் போது தாதா மிராசியின் திறமை பளிச்சிடும். எம்எஸ்வி, ராமமூர்த்தி இரட்டையர்களின் இசையும் பாடல்களும் சேர்ந்து ரசிகர்களுக்கு புல் மீல்ஸ் விருந்து என்றே சொல்லலாம்.

"லதா, அத்தனையும் நடிப்பா... என்கிட்ட உண்மையை வரவழைக்க காதல் தானா உனக்கு கிடைத்தது..." என சிவாஜி பேசும் கிளைமாக்ஸ் வசனம், எவர்கிரீன்.

காதலையும் கிரைமையும் கலந்து கொடுத்த தாதா மிராசி, இந்த படத்தில் நடித்தும் இருக்கிறார். பிளாஸ்பேக்கில் சிவாஜியின் தந்தையாக வந்து சவுகார் ஜானகியால் குடும்ப மானம் பறிபோவதை கண்டு பொறுக்காமல் உயிரிழக்கும் கோடீஸ்வரர், தாதா மிராசி தான்



சிவாஜியின் நண்பரான இவர், சித்ராலயா கோபுவிடம் சினிமா கதை ஒன்றை சொன்ன விதம் தான், "காதலிக்க நேரமில்லை" படத்தில் டிஎஸ் பாலையாவுக்கு நாகேஷ் கதை சொல்லும் காட்சிக்கான இம்ப்ரஷன் என்பது கூடுதல் தகவல்

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

Saturday 8 August 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 10

எந்த வேஷம் கொடுத்தாலும் ஸ்கோர் பண்ணுபவரே சிறந்த நடிகர் என்றால் இவரே மகா நடிகர். தமிழை விட தெலுங்கில் இரு மடங்கு படங்களில் நடித்திருந்தாலும் தமிழுக்கு இவர் தந்த 50 பிளஸ் படங்கள் ஒவ்வொன்றும் தரமான நடிப்புக்கு கட்டியம் கூறுபவை. அவர்தான் எஸ்வி ரங்காராவ். ஆறடி உயரம், முன் வழுக்கை, கவுரவ தொப்பை என ஒரு நடுத்தர குடும்ப தலைவருக்கே உரித்தான தோற்றம். அதனால் தான் இவரது சினிமாவை பார்த்து முடித்ததும் ரங்காராவ் என்ற தந்தை கண்ணுக்குள்ளேயே நிறைந்திருப்பார்.



படிக்கும் போதும், அரசு பணியில் இருந்த போதும் நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த இவர், முதலில் தெலுங்கில் அறிமுகமாகி பின்னர் தமிழில் என்ட்ரி ஆனவர். இவரை முழுமையாக முதலில் அடையாளம் காட்டிய படம் "பாதாள பைரவி". நேபாள மந்திரவாதி வேடத்தில் வந்து பலே பிம்பலக்கா என அடிக்கடி கூறும் வசனம் ஹீரோவை தாண்டி இவர் மீது கவனத்தை திருப்பியது. இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் நாகிரெட்டி, சக்கரபாணி இருவருக்கும் இவர் மீது கரிசனம் உண்டு.


34 வயதிலேயே சாவித்திரியின் தந்தையாக வேஷம் போட ஆரம்பித்த ரங்கா ராவ், பணக்கார தந்தை, பாசமிகு தந்தை, ஏழைத் தந்தை, கவுரவமான பணக்கார தந்தை என பெரிய அளவில் அரிதாரத்தை மாற்றாமலேயே தனது நடிப்பால் பல விதமான தந்தை கேரக்டர்களை கண் முன்னே உலவ விட்டவர். மிஸ்ஸியம்மா படத்தில் கவுரவமான ஜமீன்தார், எங்க வீட்டு பிள்ளை, சபாஷ் மீனாவில் நகைச்சுவையுடன் கூடிய ஜமீன் தந்தை, கற்பகம் படத்தில் ஜெமினியின் பாசமான மாமனார், கருப்பு நிறத்துடன் அவலங்களை எதிர் நோக்கும் விஜயகுமாரிக்கு பாசமிகு மாமனாராக நானும் ஒரு பெண் படம் என ரங்காராவை தவிர வேறு எவரையும் தந்தையாக தமிழ் சினிமாவில் நினைத்துப் பார்க்கவே முடியாது.  கேரக்டர்களில் அப்படியே வாழ்ந்திருப்பார் மனுஷன்.



அலட்டல் இல்லாத ஜமீன்தாராகவும், செல்வந்தராகவும் தோன்றிய அவர், பெரும் பணக்காரர்கள் இரவு நேரத்தில் வீட்டில் அணியும் ஹவுஸ் கோட் என்ற ஆடைக்கே அடையாளம் தந்தவர். சிவாஜி கணேசனுடன் படிக்காத மேதை படத்தில் மிகப்பெரும் தனவந்தராக தோன்றி பெர்க்லே சிகரெட்டை புகைக்கும் ஸ்டைலே தனி. (அந்த கால விலை உயர்ந்த சிகரெட் அது. ரங்காராவுக்கு பிடித்தமானது. அதன் விளம்பர நடிகராகவும் இருநதிருக்கிறார்) அந்த படத்திலேயே அனைத்தையும் இழந்து துயரத்தின் விளிம்பில் நிற்கும் தந்தையாக நடித்திருப்பாரே, இரண்டும் வேறு விதம். "எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான், இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்..." என்ற பாடலில் சிவாஜிக்கும் ரங்காராவுக்கும் இடையே நடிப்பில் பெரிய போட்டியையே பார்க்க முடியும்.


தந்தை வேடத்துக்கு மட்டுமே ஆனவர் அல்ல அவர். புராண கால கதாபாத்திரங்கள் பலவற்றுக்கு உயிர் கொடுத்தவரும் அவரே. கம்சன், இரணியன், ராவணன் (சோபன்பாபு நடித்த ராமாயணம்) கடோத்கஜன், யமன், கீசகன், நரகாசுரன், துரியோதன், அரிச்சந்திரன், அக்பர் (அனார்கலி படம்), மகேந்திர வர்ம பல்லவர் (பார்த்திபன் கனவு) இப்படி ஏராளமான  கதாபாத்திரங்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என நினைக்க வைத்தவர். பிளாக் மேஜிக் மந்திரவாதிகளுக்கான பிம்பத்தை காண்பித்தவரும் ரங்கா ராவ் தான்.



இன்றளவும் சினிமா ரசிகர்கள் முணுமுணுக்கும் "கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம், அந்த கவுரவர் பிரசாதம், இதுவே எனக்கு போதும்... " என்ற பாடலில் பீமனின் ராட்சத புதல்வன் கடோத்கஜனாக தோன்றி கல்யாண விருந்தை ஒற்றை ஆளாக சாப்பிட்டு அதகளம் பண்ணும் ரங்காராவின் நடிப்பு மறக்க முடியாதது. அந்த படத்தில் தர்மர், அர்சுனன், சகுனி, துரியோதனன், அபிமன்யு வேடங்களில் என்டிஆர், நாகேஸ்வர ராவ், நம்பியார், ஜெமினி, சாவித்திரி, தங்கவேலு என பெரிய பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்திருந்தாலும் மாயாபஜார் என்றால் ரங்காராவ் தான்.


எந்தவொரு வேடத்தையும் அநாயாசமாக தூக்கிப்போட்டு செல்லும் ரங்காராவின் கம்பீரமான வசன உச்சரிப்பிலேயே ஒரு மரியாதை ரசிகர்களுக்குள் தோன்றுவதை தவிர்க்க முடியாது. ஒரே விதமான வேடமாகவே இருந்தாலும் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டுவதில் வல்லவர் அவர். தேவதாஸ் படத்தில் மகனின் காதலை பிரிக்கும் ஜமீன்தாராகவும், பக்த பிரகலாதாவில் இரண்ய கசிபுவாகவும் எம்ஜிஆரின் நம்நாடு படத்தில் கொடூரமான அரசியல்வாதியாகவும், சிவாஜியின் ராஜா படத்தில் போதையில் நாயகியின் ஆடையை அவிழ்க்கும் காம வெறியனாகவும் வில்லன் நடிப்பிலும் வெரைட்டி காட்டியவர், ரங்காராவ்.


கண்கண்ட தெய்வம், அன்பு சகோதரர்கள் படங்களில் அண்ணன் தம்பி பாசத்துக்கு உதாரணமாக வாழ்ந்தவர். அடிப்படையில் தெலுங்கு நடிகர் என்பதால் அவரது வேட்டி கட்டும் பாங்கும் அப்படியே இருக்கும். அதையே சினிமாவில் தந்தைக்கான அடையாளமாக மாற்றியவர், எஸ்.வி.ரங்காராவ்.



நடிப்பு சலிக்கும்போது ஓய்வெடுக்க செல்லும் நடிகர்களுக்கு இவரே முன்னோடி. ஆந்திராவில் தனது வீட்டின் அடியில் பாதாள அறை ஒன்றை கட்டியிருந்த அவர், அதில் ஆறு மாதம் வரையிலும் கூட ஓய்வெடுத்தது உண்டாம். 



அண்ணன், தம்பி பாசம் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வரும் "முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக, அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக..." பாடல் இடம் பெற்ற அன்பு சகோதரர்கள் (1974) தான் தமிழில் அவரது கடைசி படம். 

கல்லூரி முடித்த காலங்களில், காக்கிநாடா நாடக குழுவில் சேர்ந்து சீஸர், ஷைலாக் வேடங்களில் எல்லாம் நடித்து விட்டு கடைசி வரை ஷேக்ஸ்பியராக  நடிக்காமல் போனது அவரது நிறைவேறாத ஆசை. 20 வயதிலேயே நாடகங்களில் 60 வயது முதியவர் வேடங்களில் நடித்திருக்கிறார்.



கால் நூற்றாண்டு கால தனது சினிமா வாழ்க்கையில் தந்தை, ஜமீன்தார், மிகப் பெரிய மனிதர் என நடித்த ரங்காராவ், அந்த வேடங்களில் மட்டும் தான் முதுமையில் வாழ்ந்திருக்கிறார். நிஜ வாழ்வில் முதுமையை அடையும் முன் 55 வயதிலேயே இறந்து விட்டார்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்