Thursday 25 June 2015

இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு தினம்


இன்றைக்கு 40 ஆண்டுகளுக்கு முன்.... இதே நாளில்... 1975 ஜூன் 25... சுதந்திர இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு தினம்.


அன்றைய தினம் தான் தனது தேர்தல் வெற்றிக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்ற ஒரே காரணத்துக்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 352 வது பிரிவை அமல் படுத்தி நாடு முழுவதும் நெருக்கடி நிலைமையை அறிவித்தார், இந்திரா காந்தி. அவருடைய கருத்தை ஏற்று எமர்ஜென்சி எனப்படும் நெருக்கடி நிலை உத்தரவை பிறப்பித்தவர் அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி முகமது.

அதற்கு முன் 1962ம் ஆண்டு சீனாவுடன் யுத்தம் நடந்தபோதும், 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் யுத்தம் நடந்தபோதும் இரண்டு முறை நெருக்கடி நிலைமை இந்தியாவில் அமல் படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், 1975 நிலைமை முற்றிலும் வேறானது.

பல ஆண்டுகளாக அதிகாரத்தில் தொடர்ந்து நீடித்து வந்த ஒரு தனி நபரால்... பாகிஸ்தான் போரில் கிடைத்த வெற்றி மற்றும் வங்காளதேசம் பிரிவினையால் இரும்பு பெண்மணியாக பார்க்கப்பட்ட இந்திரா காந்தியால்... உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஜீரணிக்க முடியவில்லை. தெய்வத்துக்கு மனிதன் தண்டனை தருவதா...? என்ற எண்ணம்...!

இந்திராவுக்கு பின்னணியில் இருந்தவர்கள், அவரது இளைய மகன் சஞ்சய் காந்தி, அவரது தனி உதவியாளர் ஆர்.கே.தவான், அப்போதைய மேற்கு வங்காள முதல் மந்திரி சித்தார்த்த சங்கர் ரே. இவர்களுடன் அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி முகமது.



இந்த நால்வர் அணியின் ஆலோசனையால் விளைந்த நெருக்கடி நிலையால் ஒரே நாள் இரவில் தேசிய அளவில் ஜெயப்பிரகாஷ் நாராயண் (ஜேபி), மொரார்ஜி தேசாய், வாஜ்பாயி, அத்வானி ஆகியோர் ஒட்டு மொத்தமாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் ஆச்சார்யா கிருபளாணி, சரண் சிங் என இந்திராவை எதிர்த்த தலைவர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக கைதாகினர்.

தலைவர்கள் எப்படி கைது செய்யப்பட்டனர் என்பதற்கு அன்றைய இளம் தலைவர்களில் ஒருவரான ஜார்ஜ் பெர்ணாண்டஸ் (பின்னாளில் கார்கில் யுத்தத்தின் போது வாஜ்பாயி ஆட்சியில் ராணுவ மந்திரியாக இருந்தவர்) இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட படமே சாட்சி.
அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், அரசை எதிர்க்கும் மக்கள் என எதிர்ப்படுவோரை கைது செய்ய உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் (மிசா) பயன் படுத்தப்பட்டது.


மாநில அளவிலும் கொடுமைகள் அரங்கேறின. இன்றைய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களும் சிறைச்சாலையில் ‘மிசா’ கொடுமைகளுக்கு ஆளானவர்களே. தமிழகத்தில் ‘மிசா’ கொடுமையை முழுமையாக அனுபவித்த கட்சி திமுக மட்டும் தான்.

அதே நேரத்தில், இந்திரா காந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தமிழகத்தில் ஸ்தாபன காங்கிரஸ் என தனியாக கட்சி நடத்தி வந்த பெருந்தலைவர் காமராஜரும் மனம் நொந்து இருந்தார். 1975 அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்த நாளில் எமர்ஜென்சி முடிவுக்கு வரும் என எதிர்பார்த்து இருந்த அவரது காதுக்கு ஆச்சார்யா கிருபளானி கைதான செய்தி தான் எட்டியது. அந்த அதிர்ச்சியிலேயே காமராஜர் உயிர் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசில் எந்த பதவியிலும் இல்லாத சஞ்சய் காந்தியே நெருக்கடி நிலை காலத்தல் அதிகார மையமாக இருந்தார் என்றால் அந்த நிலைமையை ஒருவாறு யூகித்துக் கொள்ளலாம். நெருக்கடி நிலை பிறப்பிக்கக்கட்ட அடுத்த நிமிடமே நாட்டில் உள்ள முக்கியமான பத்திரிகை அலுவலகங்களுக்கு மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டது. கருத்து சுதந்திரம் மற்றும் சாதாரண குடிமகனுக்கு அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள ஆறு அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.


பத்திரிகைகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிகாரிகளின் தணிக்கைக்கு பிறகே பத்திரிகைகள் வெளியாக முடியும். அரசுக்கு எதிரான சர்ச்சையான செய்திகள் இருந்தால் அதை நீக்கி விட்டு வேறு செய்தியை சேர்க்க வேண்டும். துக்ளக், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகள் அதற்கு உடன் படாமல் அந்த செய்திகள் இருந்த இடத்தை மட்டும் வெற்றிடமாகவே வைத்து பத்திரிகைகளை வெளியிட்டன.


1975 ஜூன் முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என்ற வீதத்தில் நெருக்கடி நிலை நீடிக்கப்பட்டு 19 மாதங்கள் வரை நீடித்தது. இந்த கால கட்டத்தில் காரணம் எதுவும் கூறப்படாமலேயே ஒன்றரை லட்சம் பேர் (சர்வதேச கணக்குப்படி) கைது செய்யப்பட்டனர். ஜுமா மசூதி அருகே குடிசைகளில் வசித்த இரண்டரை லட்சம் முஸ்லிம்கள் துரத்தப்பட்டனர். நாடு முழுவதும் 2 கோடி ஆண்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டது.



ஹிட்லர், முசோலினி, இடி அமீன் போன்றவர்களை நினைவூட்டிய ‘மிசா’ கொடுமைகள் அரங்கேறி 40 ஆண்டுகள் முடிந்து விட்டன. கறுப்பு நாட்களாக கடந்து போன அந்த 19 மாதங்களும் இந்திய ஜனநாயகத்தில் எப்படி ஒரு கசப்பான வரலாறோ? அதுபோலவே, இதுபோன்ற காட்டு தர்பாரை நடத்தியதற்காக காங்கிரஸ் கட்சியோ நேரு குடும்பத்தினரோ இதுவரை குறைந்தபட்சம் நாட்டு மக்களிடம் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்பதும் வரலாறு.

= வை.ரவீந்திரன் 

Wednesday 24 June 2015

ஒரு நாயகன் உதயமாகிறார்....





 உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று இந்தியாவை பெருமையாக கூறினாலும் இந்திய மக்களின் மனநிலையானது இன்னமும் மன்னராட்சி காலத்தில் இருந்து விடுபடவில்லை என்பதே உண்மை. அது, தனி நபர் ஆராதனை. தமிழகம், பீகார், உத்தரபிரதேசம், ஆந்திரா, மகராஷ்டிரா, ஒரிசா, பஞ்சாப், காஷ்மீர், மேற்கு வங்காளம் இப்படி ஒவ்வொரு மாநிலமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அரசியல் கட்சி தலைவர் என்னும் தனி நபரை சார்ந்தே தேர்தலில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

தேசிய அளவிலும் இதுவே பிரதிபலிக்கிறது. அதனாலேயே, நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல், பிரியங்கா என மிக சாதுர்யமாக நாடறிந்த குடும்பத்தை காங்கிரஸ் கட்சியினர் காலம் காலமாக முன்னிறுத்தி வருகின்றனர். தலைவரை மட்டுமே பார்த்து மக்கள் வாக்களிக்கின்றனர் என்ற சூட்சும வித்தையை அறியாததால் காங்கிரஸ் தாண்டி வேறு கட்சிகள் மத்திய ஆட்சியில் நிலைக்க முடிவதில்லை. காங்கிரஸ் கட்சி மீது மக்களின் வெறுப்பு அதிகமாகும்போது வேறு தலைவர் யாரும் கிடைக்காமல் பல கட்சிகள் இணைந்த ஒரு அரசை அரியணையில் மக்கள் அமர்த்தினால் எண்ணற்ற பிரதமர்கள் உருவாகி விடுகின்றனர்.

மொரார்ஜி மற்றும் சரண்சிங் (1978-80) தொடங்கி வி.பி.சிங் மற்றும் சந்திரசேகர் (1989-91) என தொடர்ந்து குஜ்ரால் மற்றும் தேவகவுடா (1996-98) வரை அதுதான் நிகழ்ந்தது. அதை பார்த்து வெறுத்துப்போன மக்கள் வேறு வழியின்றி காங்கிரஸையே அரியணையில் அமர்த்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். வேறு கட்சிகளால் ஆட்சியில் நிலைக்க முடிவதில்லை என்பதே இதுவரை நீடிக்கும் உண்மை.

அதில், வாஜ்பாய் விதிவிலக்கு. பா.ஜனதா கட்சியில் அசைக்க முடியாத தலைவராக அவர் இருந்ததாலேயே அவரால் 7 ஆண்டு காலம் தொடர்ந்து ஆட்சி செய்ய முடிந்தது. இந்த கணக்கீடுகளை மிகச் சரியாக உள்வாங்கி இருக்கிறார், நரேந்திர மோடி. தேசிய அரசியலுக்கு அடியெடுத்து வைத்ததில் இருந்து அவரது நடவடிக்கைகளும் இதையே உணர்த்துகின்றன. 272+ என்ற கோஷத்தை முன்வைத்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கினார். பின்னர்,உத்தரபிரதேசம், பீகார் போன்ற பா.ஜனதாவுக்கு முக்கியத்துவம் இல்லாத மாநிலங்களில் கூட 90 சதவீதம் வரை பாஜக வெற்றி பெற்றதில் இருந்து தேசிய அரசியலில் தனது நிரந்தர கணக்கை தொடங்கி விட்டார்.

பா,ஜனதா தலைவர் பதவிக்கு தனது நம்பிக்கைக்குரிய தளபதி அமித் ஷாவை கொண்டு வந்தார். பிரதமராக பதவி ஏற்றபோது அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற வாஜ்பாய் காலத்து சீனியர்களை மத்திய மந்திரி சபையில் இருந்து ஓரங்கட்டினார். ஜெட்லி, சுஷ்மா, ராஜ்நாத் சிங் போன்ற சிலரை வேறு வழியின்றி மந்திரி சபையில் சேர்த்துக் கொண்டாலும் வேறு வகையில் அவர்களை கட்டம் கட்டும் நடவடிக்கை அமோகமாக தொடங்கி விட்டது.

அத்வானியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் டெல்லி முதல்வருமான சுஷ்மா மீது லலித் மோடி விவகாரம் பூதாகரமாக திருப்பி விடப்பட்டுள்ளது. அதே லலித் மோடியின் சமீபத்திய அறிக்கை ஏவுகணையோ ஜெட்லி மீது திரும்பி இருக்கிறது. இப்படி சீனியர் தலைகளை குறி வைத்து அம்பு விடும் அரசியல் சர்ச்சையில் மோடி மவுனம் சாதித்து வருகிறார். மேல்சபை எம்பியாக இருக்கும் அருண் ஜெட்லி, விரைவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் இருந்து வென்றால் மட்டுமே மந்திரி பதவியில் தொடர முடியும் என்பதும் கவனிக்கத்தக்கது.

கட்சிக்குள் தன்னை விட சீனியராக உள்ள ஒவ்வொருவரையும் ஏதேனும் ஒரு வகையில் மட்டம் தட்டி அமுக்கி வைக்கும் பணி ஜரூராக நடைபெறுகிறது. அதே நேரத்தில், பா.ஜனதாவின் ஆதார சக்தியான ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்துவா தலைவர்களிடம் இது போன்று செயல்படாமல் அவர்களை பக்குவமாக கையாள்கிறார். இதை உணர்ந்ததாலேயே, ஜனாதிபதி பதவி கனவில் இருந்து வரும் அத்வானி கடும்  அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்.

ஜனாதிபதி பதவிக்கு கலாம் வருவதை விரும்பாமல் பிரதீபா என்ற தன்னுடைய தீவிரமான விசுவாசியை சோனியா எப்படி கொண்டு வந்தாரோ அதேபோல மோடியும் செய்வார் என அத்வானி கருதியதாலேயே ‘அவசர நிலை காலம்’, ‘நெருக்கடி நிலை’ என ஏதேதோ கூறி விட்டு கடைசியில் வடிவேலு பாணியில் ‘நான் என்னை சொன்னேன்’ என்று கூறுகிறார். சுருங்க கூறினால் காங்கிரஸ் என்றால் நேரு குடும்பம் நினைவுக்கு வருவது போல பாஜக என்றால் மோடி என்ற நினைவு வர வேண்டும் என்பது மோடியின் இந்த காய் நகர்த்தல்களுக்கு அர்த்தம்.

இது ஒருபுறம் இருக்க ஆட்சி நிர்வாகத்திலும் இதுவரை எந்த குற்றச்சாட்டுகளையும் மோடி மீது சுமத்த முடியவில்லை. செல்பி எடுக்கிறார், வெளிநாடு செல்கிறார் என்பதைத் தாண்டி வேறு எதையும் கூற முடிவதில்லை. நிலம் கையகப்படுத்தும் சட்டம் போன்ற சில சறுக்கல்களை கூட எதிர்க்கட்சிகளால் பெரிய அளவுக்கு பிரச்சினையாக்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தியோ மாநகராட்சி கவுன்சிலர் போல டெல்லி துப்புரவு தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்துகிறார்.

இடதுசாரிகளோ மேற்கு வங்காளம், கேரளா, திரிபுரா என மாநில அளவில் முடங்கி விட்டனர். கேரளத்தில் பாஜக வளர்ந்து விடுமோ என்ற கவலை அவர்களுக்கு. அவ்வப்போது, 3வது அணி என்ற பெயரில் கோடைகால மேகம் போல திரண்டு வந்து காங்கிரஸ் கட்சி மனம் குளிரும் வகையில் மழையாக பொழிந்து விட்டு கலைந்து செல்லும் மாநில கட்சிகளும் இன்னும் மாறவில்லை. அவற்றின் தலைவர்களும் தங்களை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் கூட ஈடுபடவில்லை. முலாயம், லாலு, நிதீஷ் உள்ளிட்ட ஜனதா பிராண்ட் தலைவர்களின் சமீபத்திய ‘ஜனதா பரிவார்’ முயற்சியே மிகச் சிறந்த உதாரணம்.

இப்படி கட்சி, ஆட்சி, அரசியல் என அனைத்திலும் எதிர்ப்பே இல்லாமல் தான் நினைத்தபடியே ராஜபாட்டையில் முன்னேறிக் கொண்டு இருக்கிறார், மோடி. அவர், 2014 மே மாதம் பிரதமராக பதவியேற்றபோது குறைந்தது 10 ஆண்டு காலம் பிரதமர் பதவியில் தொடர்ந்து இருப்பதாக சூளுரைத்துக் கொண்டார். அதற்கான இலகுவான பாதையை அவர் அமைத்து வருகிறார். சூழ்நிலைகளும் அவருக்கு சாதகமாக இருக்கிறது. இது சரியா அல்லது தவறா என்பது இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தை பொறுத்தது.

ஆனால், இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் ஏகபோகமாக (monopoly) ஒரே ஒரு கட்சி மட்டும் வலிமையுடன் இருப்பது நல்லது அல்ல. மக்களுக்கு சாய்ஸ் வழங்குவது போல குறைந்தபட்சம் இரண்டு பெரிய கட்சிகள் வலுவாக இருப்பதே நல்லது. கூட்டணி ஆட்சி, மத்திய அரசில் மாநில கட்சிகளின் ஆதிக்கம் என்பதெல்லாம் சர்வதேச அளவில் இந்தியாவின் அரசியல் ஸ்திரத்தன்மையையே கேலிக் கூத்தாக்கும் செயலாகவே முடியும். இதுதான், 1977, 1989, 1996 ஆண்டுகளில் இந்தியா கற்றுக் கொண்ட பாடம்.

அந்த வகையில் பார்க்கும்போது தேசிய அளவில் மாற்று சக்தியாக மோடி உருவாவது வரவேற்கத்தக்கது. ஆனால்... அது, அவரது வளர்ச்சியாக மட்டுமெ இருந்து விடக் கூடாது. காங்கிரஸ் என்ற கட்சிக்கு சரியான மாற்றாக பாஜக என்ற கட்சியையும் வளர்ப்பதே எதிர்கால ஐனநாயக இந்தியாவுக்கு நல்லது. 

= வை.ரவீந்திரன் 

Tuesday 23 June 2015

ருசிக்கிறது .... காக்கா முட்டை





 
இரண்டு மணி நேரம் ஓடும் ஒரு திரைப்படத்தில் இரண்டு சிறுவர்கள், தாய், பாட்டி, ஒரு ரயில்வே கலாசி இப்படி உயிருள்ள 5 கேரக்டர்களும் பீட்ஸா, நிலக்கரி என உயிரற்ற இரண்டு கேரக்டர்களும் மட்டுமே பிரதானமாக இருந்தால் எப்படி இருக்கும்? தமிழில் இப்படியொரு படம் வெளியானால் நிச்சயமாக ரசிகர்களின் பொறுமையை சோதித்து விடுவார்கள். அதில் வேறுபட்டு நிற்கிறது ‘காக்கா முட்டை’.

இந்தியாவின் 4 பெருநகரங்களில் ஒன்றான சென்னையின் மைய பகுதியில் கூவம் கரையோரம் தகர கொட்டகை குடிசைகளின் நிழலில் வசிக்கும் ஒரு சமூகத்தின் வாழ்க்கையை கண்முன்னே விவரிக்கிறது, ‘காக்கா முட்டை’. சென்னை மாநகருக்குள்ளேயே இது போன்ற மக்களும் இருக்கிறார்கள் என்பதை சென்னையிலேயே உள்ள உயர் வகுப்பினர் கண்டிப்பாக அறிந்திருக்க மாட்டார்கள்.

‘கோழி முட்ட விக்கிற வெலைக்கு அத ஒன்னால அவங்களுக்கு வாங்கி குடுக்க முடியுமா?’
‘இல்லாதபட்டவங்க வூட்டு பக்கத்துல இம்மாம் பெரிய கடய தொறந்து வச்சிருக்கான் பாருங்க.. அந்த கட மொதலாளிய ஒதைக்கணும்’
இப்படி படம் நெடுகிலும் ‘சுருக்’ ‘நறுக்’ வசனங்கள்.

ஒருமுறையாவது பீட்ஸாவை (விலை ரூ.299) ருசி பார்க்க ஆலாய் பறக்கும் சிறுவர்களின் முயற்சிகள் ஒவ்வொன்றும் குறும்புத்தனம் மிகுந்தவை.
பீட்ஸா டெலிவரி எடுத்து வருபவரை வழி மறித்து பீட்ஸாவை திறந்து பார்த்து வாசத்தை நுகர்ந்து அனுபவிப்பது... 45 பி பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து உலகையே வென்றது போல ஆனந்தத்தில் மிதப்பது... பணக்கார சிறுவன் தரும் மீதி பீட்ஸாவை சப்புக் கொட்டியபடி கண்ணில் பரவசம் நிறைந்து பார்ப்பது... என வறுமைக்கு வாக்கப்பட்ட 10 வயது சிறுவனை தனது கண்களிலேயே கொண்டு வந்து நிறுத்துகிறான், சின்ன காக்கா முட்டை.

சரக்கு ரயிலில் இருந்து விழும் நிலக்கரியை எடுத்து விற்பதால் மட்டும் ரூ.300 சேர்க்க முடியாது என்பதால் டாஸ்மாக் கடையில் விழுந்து கிடப்பவரை காசு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு கொண்டு விடுவது... சிக்னல்களில் பிட் நோட்டீஸ் போடுவது... சாதாரண நாயை கொண்டு போய் ரூ.25 ஆயிரத்துக்கு விலை பேசுவது... என சின்ன காக்கா முட்டையுடன் சேர்ந்து பெரிய காக்கா முட்டையின் அலப்பறைகள் தொடருகின்றன.

பீட்ஸா கடைக்குள் நுழைய புது டிரஸ் அணிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்ட பிறகு, அதை பெற சிட்டி சென்டர் போவது... ஷாப்பிங் மால் எதிரில் மிரண்டு போய் நிற்பது... வாசலில் தந்தையுடன் பானி பூரிக்கு சண்டை போடும் சிறுவர்களிடம் தங்கள் கையில் இருக்கும் பணத்தை கொடுத்து டிரஸ்சை வாங்கி வருவது... அதை நகர பேருந்திலேயே அணிவது.. என இரண்டு காக்கா முட்டைகளின் அலப்பறைகள் அன்லிமிட்.

‘அப்போ பீட்ஸா சாப்பிட்டே தீரணுமுன்னு முடிவு பண்ணிட்டீங்க...’ என்று கேட்டபடியே அவர்களுக்கு வழி காட்டும் ரயில்வே கலாசி பழரசம். சிறுவர்களின் பீட்ஸா ஆசையை அறிந்து தோசை மாவில் தக்காளி, கொட மிளகா தூவி பீட்ஸா போல செய்து தரும் ஆயா. இருவரும் அந்த சிறுவர்களுக்கு நல்ல துணை. நடிப்பில் அந்த சிறுவர்களுக்கு இணை.

‘பசங்கள அடிக்கக் கூடாதுன்னு ஒரு பாலிசியாவே வச்சிருக்கேன்... வெறுப்பேத்தாத...’ என கூறும் தாய், தனது மகனை யாரோ ஒருவர் அடிப்பதை டிவியில் பார்த்து கண்ணில் வழியும் நீரை துடைத்தபடியே டிவியை அணைப்பது சோக கவிதை.

ஒருவழியாக புது டிரஸ் அணிந்து கையில் 300 ரூபாயும் வைத்துக் கொண்டு பீட்ஸா சாப்பிட சென்றால் காவலாளியும் கண்காணிப்பாளரும் அடித்து விரட்டுவதால் கண்ணீருடன் வீடு திரும்புகின்றனர், சிறுவர்கள். பாட்டி இறந்து கிடக்கிறார். இறுதி சடங்குக்கு சிறுவர்கள் சேர்த்து வைத்த ரூ.300 உபயோகமாகிறது. பாட்டிக்கு தலைமுழுகும்போது புது டிரஸ், பீட்ஸா மீதான ஆசை இரண்டையும் தலை முழுகுகின்றனர்.

இதற்கிடையே, பீட்ஸா கடையில் சிறுவர்களை அடிக்கும் காட்சி வைரலாகி டிவி, இணையம் என பரவி கடைக்கு நெருக்கடி ஏற்படுவதும் பிரச்சினை பெரிதாகுமோ என கடை முதலாளி அச்சமடைவதும் அதே நேரத்தில் இது எதையுமே அறியாமல் கூவம் ஆற்றில் பழரசத்துடன் தவளை பிடிக்கும் சிறுவர்கள்.

இவர்களை வைத்து டிவிக்களில் நடைபெறும் சூடான (?) விவாதங்கள், கூவம் கரையில் நின்றபடி தொகுப்பாளினியின் நேரடி ரிப்போர்ட் என சமூகத்தின் அனைத்து எல்லைகளையும் போட்டு தாக்குகிறார், இயக்குநர். சிறுவர்களைப் பற்றி தொகுப்பாளினி லைவ் ரிப்போர்ட் தரும்போது அவரை அந்த சிறுவர்கள் கடந்து செல்வதை கூட கவனிக்காமல் உச்சஸ்தாயில் பேசிக் கொண்டு இருப்பதும்... அந்த சிறுவர்களும் அதை பார்த்தபடியே செல்வதும்.... யதார்த்தம்.

மீடியாக்களின் பரபரப்பால் பீட்ஸா உரிமையாளரே அந்த சிறுவர்களை அழைத்து பீட்ஸா ஊட்டி ‘சமூக சேவகராக..(?)’ மாறுவதோடு எல்லாம் முடிகிறது.

ஆனால், அந்த சிறுவர்களின் வாழ்க்கை...? மீண்டும் நிலக்கரி பொறுக்குவது.. சிறையில் தந்தை, பாத்திரம் பாலீஸ் போடும் வேலைக்கு செல்லும் தாய் என இயல்பு வாழ்க்கை தொடருகிறது.

உலகமயமாக்கல், நுகர்வோர் கலாச்சாரத்தால் நடுத்தர, மத்திய தர பிரிவினரே அல்லாடும் இன்றைய சூழலில், அதைப்பற்றி மட்டுமே அனைவரும் விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அன்றாடம் காய்ச்சிகளின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை சமூகத்தின் கவனத்துக்கு ‘காக்கா முட்டை’ சுட்டிக்காட்டி இருக்கிறது.

சோகத்தை பிழிந்து கண்ணீரில் சாறு வடித்து வழங்காமல் அவர்களின் வாழ்வியலில் கூடவே பயணித்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கூறுவது, ‘காக்கா முட்டை’யின் சிறப்பு.

= வை.ரவீந்திரன் 

Thursday 4 June 2015

தமிழ் காப்பியங்களில் திருக்குறள்







முக்காலமும் பொருந்தும் கருத்துகளை கூறும் கதை இலக்கியங்களை காப்பியம் என்று தமிழில் கூறுவது உண்டு. தமிழ் இலக்கியம் வழங்கியுள்ள ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகியற்றில் கூறப்பட்டுள்ள கருத்துகளும் கூட முக்காலமும் பொருத்தமானவையே.

ஐம்பெருங் காப்பியங்களில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள். இந்த காப்பியங்களும் போற்றி மகிழ்ந்த இணையில்லா இலக்கியமாக பொய்யா மொழியாம் திருக்குறள் இருக்கிறது. அரசியல், நிர்வாகம், பணி, சமுகம், வாழ்க்கை, இல்லறம், துறவறம் என அனைத்திலும் எக்காலத்துக்கும் பொருந்தும் அறிவுரைகளை 7 வார்த்தைகளுக்குள் ஈரடியாக வழங்கிய பொய்யாமொழி புலவர் வள்ளுவரின் கருத்துகள் ஒவ்வொன்றும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் மனித வாழ்வுடன் பொருந்திச் செல்வது வியப்பிற்குரியது.  

அதனால் தான், காலங்களை வென்று தேசங்களை கடந்து வள்ளுவரின் புகழ் வானோங்கி நிற்கிறது. பெஸ்கி என்ற இத்தாலிய கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் வள்ளுவர் மீது கொண்ட பற்றால் தனது பெயரை வீரமா முனிவர் என்று மாற்றிக் கொண்ட அதிசயமும் அதனால் நிகழ்ந்ததே. அது மட்டுமல்ல அவரே, லத்தீன் மொழியில் திருக்குறளை மொழி பெயர்க்கவும் செய்தார். அதன் தொடர்ச்சியாக, உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாக திருக்குறளின் பெருமை உயர்ந்துள்ளது. இப்படி உலகத்தோரை தன் பால் ஈர்த்த திருக்குறளுக்கு தமிழின் தொன்மை புலவர்களையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் இருந்திருக்கிறது.

பண்டைக்காலத்தில் வாழ்ந்த பல்வேறு தமிழ் புலவர்களும் திருக்குறளை அப்படியே தங்களுடைய இலக்கியங்களில் பயன்படுத்தியுள்ளனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சில சோறு மட்டும் இங்கு நாம் பதம் பார்க்கலாம். அறம், பொருள், இன்பம் என வாழ்க்கையை பகுத்து கூறிய வள்ளுவரின் திருக்குறள்களில் ஒன்று, பத்தினிப் பெண்ணின் வியத்தகு ஆற்றலை வியந்து கூறுகிறது.

“தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை”

அதாவது தெய்வத்தைக் கூட வணங்காமல், தனது கணவனை மட்டுமே காலையில் வணங்கி எழும் பெண், ‘பெய்’ என்று வானத்தை நோக்கி கட்டளையிட்டால் அந்த மழையும் கூட விண்ணை கிழித்துக் கொண்டு உடனே பெய்து விடும் என்பது இந்த குறள் மூலமாக வள்ளுவர் கூறும் கருத்து.  

இந்த குறளை, அப்படியே தன்னுடைய சிலப்பதிகார காப்பியத்தில் எடுத்து பயன் படுத்துகிறார், இளங்கோவடிகள்.



“தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத்

தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்”



என்ற சிலப்பதிகார வரிகளின் மூலமாக கணவனை தெய்வமாக வணங்கும் பத்தினிப் பெண்ணை, அந்த தெய்வமே வணங்கி கை தொழும் சிறப்புடையவள் என்று வள்ளுவர் வழி நின்று தெரிவிக்கிறார், இளங்கோவடிகள்.

இதே திருக்குறளை மணிமேகலை காப்பியமும் வேறு வழியில் எடுத்துக் கூறுகிறது. அந்த காப்பியத்தை எழுதிய சீத்தலைச் சாத்தனார்,



“தெய்வந் தொழாஅள் கொழுநற்றொழு தெழுவாள்

பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப்

பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்”  



என்று திருக்குறளையும் வள்ளுவரையும் ஒருங்கே பாராட்டி மகிழ்கிறார்.

சிலப்பதிகாரம், மணிமேகலை என நின்று விடாமல் கம்பர் எழுதிய ராமாயண காவியத்திலும் மிகப் பொருத்தமான இடங்களில் ஆங்காங்கே திருவள்ளுவரின் திருக்குறள் கருத்துகள் பயணம் செய்கின்றன.  

தான் நடத்த உள்ள வேள்விக்கு பாதுகாப்பு பணிக்காக ராமர், லட்சுமணரை கானகம் நோக்கி விசுவாமித்திர முனிவர் அழைத்துச் செல்கிறார். அப்போது, பயணச் சோர்வு தெரியாத வண்ணம் பல்வேறு கதைகளை ராம, லட்சுமணருக்கு முனிவர் கூறுகிறார். அவர்கள் சென்ற வழியில், ஒரு யாகசாலை தென்படுகிறது. உடனே, அது பற்றி ராம சகோதரர்கள் இருவருக்கும் விசுவாமித்திரர் விளக்கி கூறுகிறார். அதை,

“தங்கள்நா யகரின்தெய்வம் தவம்பிறி திலவென் றெண்ணும்

மங்கைமார் சிந்தை போலத் தூயது மற்றுங் கேளாய்

எங்கள்நான் மறைக்குந்த தேவர் அறிவிற்கும் பிறர்க்கு மெட்டாச்

செங்கண்மா லிருந்து மேனாள் செய்தவஞ் செய்த தன்றே”  



என்று கம்ப ராமாயணம் கூறுகிறது.

அதாவது, ‘கணவனே தெய்வம், அவருக்கு செய்யும் தொண்டே தவம் என கருதி வாழும் கற்புடைய பெண்களின் (தெய்வம் தொழாஅள் கொழுற்றொழு தெழுவாள்) சிந்தனையைப் போல மிகவும் தூய்மையானது இந்த யாக சாலை. இத்தகைய தூய்மையான யாக சாலையில் முன்னொரு காலத்தில் திருமால் அமர்ந்து தவம் செய்திருக்கிறார்’ என்று ராம, லக்குவரிடம் விசுவாமித்திரர் கூறுவதாக கம்பர் எழுதி வைத்துள்ளார்.

இது மட்டுமல்ல, மேலும் பல திருக்குறள் கருத்துகளையும் மிக அழகாக ராமாயணத்தில் ஆங்காங்கே கையாண்டிருக்கிறார், கம்பர்.
அதில் ஒன்று.

“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்”  =  என்ற திருக்குறளின் கருத்து.


தாய்க்கு பதிலாக ராமரின் தந்தை தசரத சக்கரவர்த்தி வாயிலாக இந்த திருக்குறள் வெளிப்படுகிறது. எப்படி? முதுமை பருவம் எட்டிப் பார்த்ததால் தனது மூத்த மகன் ராமனுக்கு மகுடம் சூட்ட அயோத்தி மன்னன் தசரதன் முடிவு செய்கிறான். இது குறித்து அரசவையில் சூழ்ந்துள்ள அறிஞர்கள், முனிவர்கள், மூத்தோர்களிடம் அறிவுரை மற்றும் ஆலோசனை கேட்கிறான்.

அதற்கு அவர்கள், “இந்த மண்ணில் பிறந்த ஆண்மகன்களில் மிகச் சிறந்தவன், நல்லவன், ஆற்றல் மிக்கவன் ராமன். அவன் கரம் பிடித்த ஜானகியோ பெண்களில் சிறந்தவள். குடிமக்களுக்கு நெல்லோ, நீரோ உயிர் அல்ல. அவர்களை ஆளும் மன்னனே உயிர். அந்த அனைவருக்கும் அமிர்தமாய் ராமன் இருப்பான். அவனே மணிமுடி தரிக்க சிறந்தவன்” என்று கூறுகின்றனர்.

அதைக் கேட்ட தசரதன் மனம் எந்த அளவுக்கு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறது, என்பதை கம்பர் விளக்குகிறார் பாருங்கள்,



“மற்றவன் சொன்ன வாசகங் கேட்டலும், மகனைப்

பெற்ற அன்றினும், விஞ்ஞகன் பிடித்த அப்பெருவில்

இற்ற அன்றினும், எறிமழு வாளவன் இழுக்கம்

உற்ற அன்றினும் பெரியதோர் உவகைய னானான்‘’

தன் மகனைப் பற்றிய ஆன்றோர் கூறிய வார்த்தைகளைக் கேட்டு அதற்கு முன்பு  பெற்றிருந்த அனைத்து வகையான இன்பங்களை விட மிகப்பெரிய இன்பத்தை தசரதன் அடைகிறானாம். அதற்கு முன்பு அவன் பெற்ற இன்பங்கள் எவை? நீண்ட காலமாக குழந்தைப்பேறு இல்லாமல் இருந்த தசரதனுக்கு ராமன் உள்ளிட்ட 4 குழந்தைகள் பிறந்ததும் பெருமகிழ்ச்சி உண்டானது. அதன்பிறகு, விசுவாமித்திரரின் யாக சாலையை காப்பாற்றியதோடு, மிதிலை நகரில் சிவ தனுசு என்னும் மாபெரும் வில்லை உடைத்த ராமன் வீரம் கேட்டு அடுத்த மகிழ்ச்சி தோன்றியது. இந்த மகிழ்ச்சிகளை விடவும் மிகப்பெரிய அளவிலான மகிழ்ச்சியை ஆன்றோர் கூறிய வார்த்தைகளை கேட்டதும் தசரதன் பெற்றதாக அந்த பாடல் கூறுகிறது.

அதாவது, ஈன்ற பொழுதை விட ஒரு தாய் எவ்வளவு அதிகமாக மகிழ்ச்சி அடைவாளோ அதுபோலவே தந்தையும் மிகப்பெரும் மகிழ்ச்சி அடைவார் என திருக்குறள் வழி நின்று எடுத்துரைக்கிறார், கம்பர். பல தலைமுறைகளை கடந்தும் கூட தலைமுறை இடைவெளி இல்லாமல் இனி வரும் சந்ததிக்கும் தேவையான அறிவுரைகளை போதித்து அவற்றை ஈரடியில் பொதிந்து வைத்துள்ள வள்ளுவரின் கருத்துகளை மாபெரும் கவிஞர்களான கம்பரும், இளங்கோவடிகளும், சீத்தலை சாத்தனாரும் அப்படியே கையாண்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால், அந்த சிறப்பை தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்வது அவசியம்.

= வை.ரவீந்திரன்