Monday, April 20, 2015

ரகசிய பெட்டகங்கள் 
 நீங்காத நறுமணங்கள்
நிறைந்த நந்தவனம்
இந்த உலகம்
ஓட்டை பானையில்
ஒழுகும் நீர் போன்ற
ஆயுள் கொண்ட மனிதன்
பாதம் பதிந்த பகுதிகளில் மட்டும்
பெயர்களின் வாசம்


காலம் நம் கரம் பற்றி
இழுத்து செல்லும் வழியில்
கரடு முரடான மலைகளும்
வளைந்த முகடுகளும்
வருத்தங்களை தரலாம்
வருத்தம் நீங்கி தடைகளை கடந்தால்
குளிர்தரும் நீரோடைகளும்
நறுமண சோலைகளும் வரவேற்கலாம்


ரகசியங்களின் குவியல்
ஆழ்கடலுக்கு மட்டுமேயானதல்ல
உயிர்தாங்கி உலவும்
உடல்கள் ஒவ்வொன்றும்
உடல்களை தாங்கும்
பூமியின் ஒவ்வொரு அங்குலமும்
சாவி இல்லா ரகசிய பெட்டகங்களே


= வை.ரவீந்திரன் 

Friday, April 17, 2015

எங்கே செல்லும் இந்த பாதை...?

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது கல்வியில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார். இந்த உண்மையை எவராலும் மறுக்க முடியாது. இடையில் மட்டுமே ஆடை அணிய வேண்டும் என்று அறிவுறுத்திய மேலாதிக்க சிந்தனையை உடைத்தவர் அவரே. கடவுளின் பெயரால் கருத்துக் குருடர்களாக இருந்தவர்களின் கண்களை திறந்தவரும் அவரே. ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த இனத்தவரின் குழந்தைகளும் இன்று பள்ளிகளில் பலகைகளில் அமர்ந்து கல்வி பெறுகிறார்கள் என்றால் தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்த போராட்டத்தால் விளைந்த பலன்களில் ஒன்று.

இவை எல்லாம் சாதனைகளா என்று யாரேனும் மனதுக்குள் நினைத்தால், இப்போதும் பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகளாக அன்றாடச் செய்திகளில் வருபவற்றை சற்றே அசைபோட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

கைம்பெண் மறுமணம், விவாகரத்து பெற்ற பெண்ணுக்கு திருமணம் என பெரிய மாற்றங்கள் எல்லாம் தமிழகத்தில் சர்வ சாதாரணமாக நிகழ்கிறது என்றால் தந்தை பெரியார் ஒருவர் மட்டுமே அதற்கு காரணம். ஆனால், பெரியாரின் முற்போக்கு சமூக சீர்திருத்தக் கொள்கைகளை அவருக்குப் பின்னால் வந்த அவரது சீடர்கள் சரியாக எடுத்துச் செல்கிறார்களா...?  

கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகத்தில் இன்னமும் கவுரவ கொலைகள் நடைபெறுவதற்கு பெரியார் தோற்றுவித்த இயக்கத்தில் இப்போது இருப்பவர்கள் கூறும் பதில் என்ன...? இது ஒருபுறம் இருக்க... மூட நம்பிக்கைகளையும் கண்மூடித்தனமான மத நம்பிக்கைகளையும் (அது எந்த மதமாக இருந்தாலும் சரி)  எந்த மண்ணில் பெரியார் தீவிரமாக எதிர்த்து வந்தாரோ அதே மண்ணில் மீண்டும் மதச்சார்பு கொள்கைகளும் மூட நம்பிக்கைகளும் வேகமாக வேர் பிடித்து வருவதற்கு காரணம் என்ன? பெரியாரின் கொள்கைகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் முறையாக கொண்டு செல்லும் பணிகளை சரியாகச் செய்யாதது தான்.

சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் மூட பழக்க வழக்கங்களை ஒழிப்பதும் சமூக சீர்திருத்தப் பணிகளும் மட்டுமே தனது தலையாய பணி என்று கூறியதோடு தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தவர், தந்தை பெரியார். அரசியல் பிரவேச ஆசையினாலேயே அவரது திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து திமுக உருவானது என்பதும் அண்ணா உள்ளிட்டோரை ‘கண்ணீர் துளிகள்’ என்று பெரியார் வருணித்ததும் வரலாற்று உண்மை.

ஆனால், பெரியாருடைய திராவிடர் கழகத்தின் இன்றைய நிலை என்ன? பெரியார் தெரிவித்த சமூக சீர்திருத்த கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு பதிலாக ஏதோ ஒருவகையில் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு தேர்தல் அரசியலுக்கு வக்காலத்து வாங்கும் வேலைகள் மட்டுமே செவ்வனே நடைபெறுகின்றன. அதில் ஒன்று தாலி அறுப்பு போராட்டம்.
எத்தனை சுயமரியாதை திருமணங்களில் பொன்னணி என்ற பெயரில் தாலி கட்டுகின்றனர் என்ற உண்மை போராட்டம் நடத்தியவர்களுக்குத் தெரியாதா...? பிறகு, என்ன தாலி அறுப்பு போராட்டம்? ஏப்ரல் 14 அன்று நடைபெற்ற அந்த போராட்டத்துக்கு வந்த 21 தம்பதியினரில் பெரும்பாலானோர் (தங்களின் தங்கத் தாலியை (பொன்னணி) பத்திரப்படுத்திவிட்டு) புது மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கிழங்கு அணிந்து வந்தனர், என்பது பத்திரிகைகள் கூறும் தகவல்.

தந்தை பெரியாரின் கொள்கை என்ற பெயரில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் பின்னால் மிகப்பெரிய சூழ்ச்சி இருப்பதாகவே தோன்றுகிறது. தமிழகத்தில் இந்து மத அமைப்புகளை கோபமூட்டும் வகையில் இப்படி ஒரு போராட்டத்தை நடத்தினால் அவர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பும். அதன்பிறகு, இந்து அமைப்புகளுக்கு எதிராக தமிழ் அமைப்புகளும் (திராவிடர் கழகம் அல்லாத), பெரியாரிஸ அமைப்புகளும் ஒன்று திரண்டு எதிர்வினையாற்றுவார்கள்.

அந்த சமயத்தில் அவர்களை ஓரணியில் மெதுவாக திரட்டுவதோடு, அதிமுக தலைமை மற்றும் ஜெயலலிதா உள்ளிட்டோரை வழக்கமான பாணியில் வசை பாடிவிட்டு அப்படியே அந்த அணியை திமுக ஆதரவு அணியாக இழுத்து வருவது தான் வீரமணியின் தாலி அறுப்பு அஜண்டா வின் பின்னணி. பெரியாரிசத்தை பரப்புவது தான் முதன்மையான நோக்கமெனில் தமிகத்தின் வட மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் தலைவிரித்தாடும் சாதி மோதல்களுக்கு எதிராக சாதி மறுப்பு பிரச்சாரத்தில் அல்லவா, பெரியாரின் இயக்கம் களம் இறங்கி இருக்க வேண்டும்?

இலங்கை இனப் படுகொலைக்கு பிறகு தமிழ் அமைப்புகளும் பெரியார் கொள்கைகளை (கி.வீரமணி போல அல்லாமல்) முன்னெடுத்துச் செல்லும் பிற இயக்கத்தினரும் திமுக மற்றும் காங்கிரஸ் மீது மிகவும் கொந்தளிப்பில் இருந்து வருவதும் இலங்கை இன பிரச்சினையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்டோரின் எந்த சால்ஜாப்புகளையும் ஏற்கும் மன நிலையில் தமிழக மக்கள் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.  

பெரியாருடைய சமூக சீர்திருத்தக் கொள்கைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அக்கறை இருந்தால் பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிஸ அமைப்புகள் வலியுறுத்துவது போல, பெரியாரின் பகுத்தறிவு மற்றும் சமூக சீர்திருத்த புத்தகங்களை நாட்டுடைமையாக்க முன் வந்தால் போதும். பெரியார் தெரிவித்த கருத்துகளை திருக்குறள் போன்று பல்வேறு தமிழ் பதிப்பகங்களும் புத்தகங்களாக வெளியிடும்போது பெரியாரைப் பற்றி சாமான்ய மக்களும் தாமாகவே படித்து அறிந்து தெளிந்து கொள்வார்கள். பெரியார் கூறிச் சென்ற சமூக சீர்திருத்த, பகுத்தறிவு கொள்கைகளுக்கு இடைத்தரகர்கள் தேவை இல்லை.

பெரியாரின் பெயரில் இந்து அமைப்புகளுக்கு எதிராக கொம்பு சீவும் வேலைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால், பெரியார் என்பவர் இந்து மதத்துக்கு எதிரானவர் என்ற பிம்பம் மட்டுமே எதிர்கால சந்ததியினரின் மனதில் படிந்து விடும். அவரது சமூக நீதி போராட்டங்களும், பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான கருத்துகளும், சாதி மறுப்பு கொள்கைகளும் சுயமரியாதைச் சிந்தனைகளும் மறக்கடிக்கப்பட்டு விடும். இதுதான், அவருக்கு செலுத்தும் மரியாதையா...?

= வை.ரவீந்திரன் 

Thursday, April 16, 2015

திரு அணங்கையர்

அரி அரன் அரவான்
அடுக்கடுக்காய் கடவுள்
நாமங்களைக் கூறினாலும்
கடவுளுக்கே தாலி கட்டியபோதும்
சமூகத்தின் ஜனத் திரளுக்குள்
தொலைந்து விட்ட மனித இனம்.


குரோமாசோம்களின்
குளறுபடியான குறும்பில்
குழந்தையாய் விளைந்த
மலர முடியாத அரும்புகள்
வண்டுகள் நாடா மலர்கள்

ஒரு பாதி ஆணாய்
ஒரு பாதி பெண்ணாய்
அர்த்தநாரீஸ்வரராய் இருந்தும்
அங்கீகாரத்துக்காக போராடும்
அங்கீகாரமற்ற ஆண் தேவதைகள்...?

இயற்கையின் முரண்பாட்டால்
விளைந்த மூன்றாம் பாலினம்
மனித(?) சமுதாயத்தின் தவறால்
தவறே இழைக்காமல்
தண்டனை அனுபவிக்கும் சிற்றினம்

சீழ்க்கை ஒலிகளும்
சகிக்க முடியா கேலிகளும்
புல்லினமாக கூட மதிக்க முன் வரா
சமூகத்தின் கழுகுப் பார்வைக்குள்
பாதுகாப்பை தேடும் பறவைக் குஞ்சுகள்

(ஏப்ரல் = 15  திருநங்கையர் தினம்)

= வை.ரவீந்திரன் 

Thursday, April 9, 2015

கூலித் தொழிலாளியின் கையறு நிலை

உன் இருட்டு தொழிலுக்குள்
எங்களை இழுத்துச் செல்கிறாய்...!
எங்கள் வறுமை நெருப்பின் மீது
கரன்சி நோட்டுகளை வீசிறி
மயக்கம் ஏற்படுத்துகிறாய்...!

வனத்தின் மூச்சு திணறும் வரை...
எங்களையும் சேர்த்து இழுக்கிறது
உனது அடங்கா பண வெறி...!
உன் பசிக்கு எங்களை தின்னுகிறாய்!
எங்களை முன்னிறுத்தி நடக்கிறது உனது ஆட்டம்

கரன்சி, காக்கி, கடத்தல், கவர்மென்ட்
வலிமையான ஆரவாரங்களுக்குள்
எங்களின் அவலக்குரல் அமுங்கி விட்டது...
சத்தமின்றி வனத்தில் தொடங்கிய பயணம்
பேரொலியோடு புறப்பட்ட புல்லட்டுகளின்
சத்தத்தில் சத்தமின்றி அடங்கி விட்டது...
மரக்கட்டைகளுடன் எங்கள் உடல் கட்டைகள்

எங்களின் மிச்ச சொச்சங்களை
கொஞ்சம் கொஞ்சமாய் அழித்துவிட்டு
மீண்டும் தேடுகிறாய் எங்களைப் போல
மற்றொரு எங்களை...
பணமே பிரதானமாகிவிட்ட மண்ணில்
இந்த இரவு மட்டுமல்ல
நாளைய விடியலும் கூட
உனக்காக மட்டுமே...! = வை.ரவீந்திரன்.