Wednesday 29 April 2020

கேசட் டேப் ரெக்கார்டர்

செம்புலப் பெயல் நீர் காலத்திலேருந்து இப்ப வரைக்கும் மாறாதது காதல் தான். ரெண்டு மனசுல மொட்டு விரிஞ்சாலும், மொட்டுகள மலர வச்சி ஒண்ணு சேக்கிறது ஏதோ ஒண்ணு. அந்த ஒண்ணு ஒவ்வொருத்தருக்கும் ஒண்ணொண்ணு. சங்க காலத்தில தோழிங்க, கிளின்னு இருந்துச்சாம். எங்க காலத்துல முக்கியமா இடம் பிடிச்சது ஒண்ணு.

அப்பத்தான் அது புதுசா வந்திச்சி. ரேடியோவுக்கு அடுத்ததா நெறைய வீடுங்களுக்கு வந்து சேந்த அது... டேப் ரெக்கார்டர். அதுக்குள்ள போட்டு கேட்கிறதுக்கு பாட்டு கேசட். ஒரு சென்டி மீட்டர் அகலத்தில சிலிக்கான் நாடா மாதிரி இருக்கிற கேசட்ல இப்பிடி போட்டா 30 நிமிஷம். அந்த பக்கமா திருப்பி போட்டா 30 நிமிஷம்னு ஒரு மணி நேரம் பாடிட்டிருக்கும்.



சுப்பிரமணியபுரத்தில மாதிரி எல்லா ஊரிலயும் புரத்திலயும் சினிமா பாட்டுதான் காதலுக்கு சிக்னல் தூது எல்லாம். மனசுக்கு புடிச்ச பொண்ணு கிராஸ் பண்ணும்போது, கோடு வேர்டு மாதிரி சினிமா பட்டு ஒண்ணு ஓடும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு பாட்டு இருக்கும். 

"ராதா ஓ ராதா...", "பிரியா பிரியா என் பிரியா.." இப்பிடில்லாம் பாட்டு போட்டா கொஞ்சம்  துணிச்சலான லவ்வர்னு அர்த்தம். 

மத்தபடி, "தண்ணி கொடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது..." "இதயம் ஒரு கோயில்.. "மாதிரியான பாட்டெல்லாம் பொது ரகம்.

"மானே தேனே கட்டிப்பிடின்னு.." டேப் ரெக்கார்டுல பாட்ட அலற விடுறதெலலாம்  மாெரட்டு காதலா இருக்கும். எல்லா காலத்திலயும் எல்லா மாதிரியான காதலும் இருக்கிறது சகஜம் தான..



சிலருக்கு டேப் ரெக்கார்டு சத்தம் போதுமான்னு சந்தேகம் வந்திரும். அவங்களுக்காவ வந்தது தான் ஆம்ப்ளிபையரும் ஸ்பீக்கரும். கல்யாண வீடு மாதிரி சில மைனருங்க அலற விட்டுட்டே இருப்பாங்க. பக்கத்துல இருக்கிறவங்கதான் பாவம். தேவையான பாட்டுங்கள மட்டும் கேசட்ல ரெக்கார்ட் பண்ணி குடுக்கிறதுக்கு தனியா ரெக்கார்டிங் சென்டர்லாம் உண்டு. 

அடிக்கடி போடுற பாட்ட வச்சே லவ் மேட்டர மெதுவா ஊரு மோப்பம் பிடிக்கும். ஆனா, அதுக்குள்ள லவ்வு அடுத்தகட்டத்துக்கு போயிருக்கும். டேப் ரெக்கார்டில பதியம் போட்ட ரோஜா செடிய, தியேட்டர்ல தொட்டியில நட்டு வைப்பாங்க. ஒருத்தர ஒருத்தர் பாகத்துக்கிற மாதிரியான சீட்ட சேக்காளிங்க தயவுல பிடிச்சி வச்சி டி.ராஜேந்தர், மோகன் மாதிரிேயே லவ்வுவாங்க. ஸ்கிரீன்ல விட, இங்க ஒரு தரமான ரொமான்ஸ் ஸீன பாத்து ரசிக்கலாம்.

இந்த காதல் ரோஜா பூ பூக்கிற இடம் பெரும்பாலும், மலை மேலருக்கிற சொரிமுத்து அய்யன் கோயிலாத்தான் இருக்கும். ஆடி அமாவாசைக்காவ ரெண்டு வாரம் வரை தங்கி இருக்கப்ப எல்லாம் பேசி முடிச்சி ஃபைனல் ஸ்டேஜிக்கு வந்திரும். 

எல்லாம் நல்லா அமைஞ்சா, டேப் ரெக்கார்டுல ஆரம்பிச்ச காதல், மைக் செட் ஒலிக்க ஆவணியில சுபமா முடியும். இல்லன்னா, லவ்வருங்க ரெண்டு பேரும் ஓட்டம் தான்.

டெய்லர் கட, ஜவுளிக் கட, டுடோரியல், டைப் இன்ஸ்டிடியூட், கோயில் இப்பிடி ஊருக்குள்ள பல இடத்தில பல ஜோடிங்கள பாத்திருக்கேன். ஆழமான பாசம், நட்பு, ஊரே திரும்பிப் பார்க்குமேன்னு நெனைக்கிற தில்லு இப்பிடித்தான் டேப் ரெக்கார்டர் கால காதல்ல இருந்திச்சி.

தங்களோட வளமான வாழ்க்கைக்கான லாப நட்ட கணக்க போட்டு பாத்து துளிர் விட்ட காதல கண்டதே இல்ல... 

#நெல்லை_ரவீந்திரன்

Friday 24 April 2020

வெயிலோடு விளையாடி...

 


வெயில் சரம் சரமா பெய்ய தொடங்கி கூரை வீடுகளில் விழுந்து தரை மீது சிதறுகிறது. சிதறி விழும் இடத்தில் இருந்த எறும்பு கூட்டம் ஒன்று கூரை நிழலை நோக்கி ஓடுகின்றன. வனத்துக்குள் பனை மரமாய் வளர்ந்து நிற்கும் மாடி வீடுகளின் தலையில் விழுந்த வெயில் துளிகள், படிக்கட்டுகள் வழியாக வழிந்தோடுகின்றன, துவட்டி விடுவதற்கு ஆளின்றி.

சாலையை வாய்க்காலாக்கி ஓடும் வெயில், ஆங்காங்கே ஒழுகி, சாலையோர மரம் நோக்கி வருகிறது. கையில் சைக்கிள் டயரை பிடித்தபடி, நண்பர்களை எதிர் நோக்கி காத்திருக்கும் என் காலடியை தொடுகிறது. மழை காலம் போலவே குடை பிடித்து நிற்கிறது, வேப்ப மரம். டயர் வண்டி ஓட்டுவதற்கான வாகை மர குச்சியை கன்னத்தில் வைத்தபடியே மேல் நோக்கி பார்க்கிறேன்.

மரக் கிளையில் ஓய்வெடுக்கும் ஓணான் ஒன்று கண்களை மூடியபடி தியானத்தில் மூழ்கி கிடக்கிறது. தொண்டையின் மேல், கீழ் அசைவுகளை பார்த்தால் தாகத்தில் தவிப்பது போல தெரிகிறது. இது போல எத்தனை ஓணான்களை அடித்துக் கொன்றிருப்போம். நண்பர்கள் வரட்டும். ஆனால், இந்த ஓணான் மீது கொஞ்சம் பரிதாபம் வருகிறது. மர நிழல் தனிமையில் துணையாக இருப்பதால் வந்த பாசமாகவும் இருக்கலாம்.

ஒருத்தரையும் காணோமே. டயர் வண்டியை ஓட்டியபடி, ஊர் சுற்ற மனம் பரபரக்கிறது. வீட்டில் இருந்து கிளம்பும் போதே அம்மா தடுத்தது நினைவுக்கு வருகிறது. இது மாதிரியே, நண்பர்களும் வீட்டில் ஏதாவது சாக்கு போக்கு சொல்லிவிட்டு வர நேரமாகலாம். மனதை சமாதானப் படுத்திக் கொண்டே ஓணானை ரசிக்க தொடங்கினேன்.

அதற்கு தாகமெடுத்தால் என்ன செய்யும். வெயிலில் டயர் வண்டி ஓட்டிக் கொண்டு ஊர் சுற்றப்போகும் எங்களுக்கு கவலை கிடையாது. கொச வாத்தியார் வீட்டம்மா, ஆசாரிமார் வீட்டு ஆச்சி, கசாப்புக் கடை தேவர் வீடு, பால் வியாபாரம் பாக்கிற கோனார் வீடு, ஊரைத் தாண்டி போனா பள்ளக்குடியில ஏதாவது ஒரு அக்காள் வீடுன்னு தண்ணீரை வாங்கி நாங்க குடிச்சிப்போம்.

இப்பிடித்தான் பக்கத்து தெருவில் ஒரு வீட்டில் தண்ணீர் வாங்கி குடிச்சிட்டு அம்மாகிட்ட திட்டு வாங்கினது ஞாபகம் வருகிறது. ஆனால், மற்ற வீடுங்களுக்கு போனது பற்றி அம்மா ஏதுவும் சொன்னதில்ல. அவங்களும் ஒரு பானை நிறைய தண்ணீரை வாசல்லேயே வச்சிருப்பாங்க.

இந்த நினைப்பே தாகம் வர வைத்து விட்டது. மழை பெய்தால் கையில் பிடித்து குடிக்கலாம். வழிந்தோடும் வெயிலை கைகளில் எப்பிடி பிடிப்பது? சமையல் முடிந்த அடுப்பில் நிறைந்து கிடக்கு கங்குகள் அருகில் இருப்பது போலவே தோன்றுகிறது. வேப்ப மர நிழல் மட்டும் கொஞ்சம் ஆறுதல். வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்யும் அம்மாவும்  நினைவுக்கு வந்து போகிறார்.

வெயிலை ரசித்தபடியே ஏதேதோ நினைவுகள் சுழன்றது. தண்ணீருக்குள் குதித்தபடி வரும் குதிரைகள் போல, கானல் நீரை சிதறடித்து டயர்களை குச்சியால் தட்டியபடி ஓட்டி வரும் நண்பர்கள் தென்பட தொடங்கினார்கள். சைக்கிள் டயருக்கு பதில் ஏதாவது பைக்கின் டயரை ஓட்டி வந்தால் எங்களை பொருத்தவரை வசதியானவன்.

ஒரு வழியாக நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டோம். இனிமேல், ஊர் சுற்ற கிளம்ப வேண்டியது தான். மரத்தில் ஓணானை பார்த்தேன். பாவமாக இருந்தது. நண்பர்களிடம் ஓணானை காண்பிக்கவில்லை. சொன்னால் அதற்கு இறுதி மரியாதையை செய்த பிறகே புறப்படுவார்கள்.

எல்லோரும் அவரவர் டயர் வண்டிகளை ஓட்டியபடி, மெதுவாக ஓடத் தொடங்கினோம். வாய் உலர்ந்து, மேல் அன்னத்துடன் நாக்கு ஒட்டியது போல இருந்தது. முதலில் பக்கத்து தெருவில் இருக்கும்  வீட்டில் தண்ணீர் வாங்கி குடிக்க வேண்டும். அம்மா திட்டினாலும் பரவாயில்லை. அவர்களுக்குள் என்ன சச்சரவோ? தாகத்தில் அது கரைந்து போகட்டும்.

#நெல்லை_ரவீந்திரன்

Tuesday 21 April 2020

ரேடியோ பொட்டி

 வேலை இல்லாதவனின் பகல் போழுதும் நோயாளியின் ராப் பொழுதும் ரொம்பவே நீளமா இருக்கும். இன்னியோட சரியா ஒரு மாசமாச்சி... 99 சதவீதம் பேரு மொத நிலையிலத்தான் இருப்பாங்க. இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் ஒரே ஆறுதல் சினிமா இல்லன்னா மியூஸிக்..

மியூஸிக்னதும் எனக்கு மொதல்ல ஞாபகத்துக்கு வருவது ரேடியோ தான். பெரிய சைஸ் ஓனிடா டிவி மாதிரியே இருக்கிற ரேடியோதான் நான் பாத்த மொத ரேடியோ. அத வால்வு ரேடியோன்னும் சொல்லுவாங்க. மெட்ராஸ்ல போலீஸ் வேலை பாத்து ரிட்டையர்டாகி வந்த மெட்ராஸ் தாத்தா வீட்டில அந்த ரேடியோ இருந்திச்சி.

காலைல ஆறு மணிக்கு 40 செகண்டுக்கு ஓபன் மியூசிக் ஓடும். அப்புறமாத்தான் ஸ்டேஷன திறப்பாங்க. முதல்ல ஒரு நிமிஷத்துக்கு வந்தே மாதரம். அதுக்குப் பிறகு தான் நிகழ்ச்சி ஆரம்பிக்கும். சாயந்திர நேரம் விவசாய செய்திக்காக பாடுற சுழன்றும் ஏர் பின்னது உலகம் பாட்டு, கிராமியக் கலை நிகழ்ச்சில்லாம் திருநெல்வேலி ஸ்டேசன்ல தனி ரகம்.

செல்போனுக்கு கவர் மாட்டிருக்கிற மாதிரி ரேடியோவுக்கும் தோல் கவர் மாட்டி பத்திரமா வச்சிருப்பாஙக சில பேரு. மர்பி கம்பெனி ரேடியோ அப்ப ரொம்ப பேமஸ்.

இந்திரா காந்திய சுட்டுக் கொன்னப்ப ரெண்டு நாளைக்கு ஓடிட்டிருந்த மியூஸிக். இன்னும் நெனவில இருக்கு. சோகத்த கொஞ்சம் கொஞ்சமா கரைச்சி காது, மனசுன்னு ஆரம்பிச்சி ஒடம்பு பூரா பரவ விட்டிச்சி. ஊர் முழுசும் கடைங்க அடைச்சிக் கிடக்க, கொலைங்கிற செய்தியும் சேந்தப்ப அந்த சோகத்தோட கொஞ்சம் திகிலும் கலந்து கிடந்திச்சி.

அதிலருந்து ஒரு ஆறு மாசத்துக்குள்ள நாங்களும் ஒரு செகண்ட் ஹேண்ட் ரேடியோ வாங்கிட்டோம். ஒரு ஞாயிற்றுக் கிழம மத்தியானம் பெரிய கோயில் தெருவில ரேடியோவ வாங்கிட்டு அத கேட்டுக்கிட்டே வீட்டுக்கு ரொம்ப மெதுவாவே நடந்து போனேன். அதில கேட்ட மொத பாட்டு "திருவிழா, திருவிழா, இளமையின் தலைமையில் ஒருவிழா..." அடுத்த பாட்டு "காளிதாசன் கண்ண தாசன் கவிதை நீ... எழுத வா படிக்க வா". இது முடியும்போது தான் வீட்டுக்கு போய் சேர்ந்தேன். மூணு நிமிஷ தூரத்த பத்து நிமிஷம் நடந்தேன்.

தெரிஞ்ச டெயிலர்கிட்டருந்து வாங்கின அந்த ரேடியோ வித்தியாசமானது. அது பிலிப்ஸ் கம்பெனி ரேடியோ. அதில, பண்பலை, மத்திய அலை இத்தோட சிற்றலை 1, சிற்றலை 2, சிற்றலை 3ன்னு ஐந்து விதமா மாத்திக்கலாம்.

வெளிநாடுகள்ல தமிழ் ஒலிபரப்பு டைம் எல்லாம் நோட் போட்டு எழுதி வச்சி அந்தந்த ஸ்டேஷனை போட்டு பார்ப்போம். ரேடிேயோவோட கெப்பாசிட்டிய செக் பண்றதோட அவங்களோட தமிழ கேக்கும்போது கூடுதல் சந்தோஷம். வெரித்தாஸ், மணிலா, பிபிசி லண்டன் அவ்வளவு ஏன் பாகிஸ்தான்லருந்து கூட 20 நிமிஷம் தமிழ் நிகழ்ச்சி இருந்திச்சி.

இலங்கையில உச்சகட்ட பிரச்சினையா இருந்த நேரம் அது. புலிகள் செய்திக்கு பிபிசின்னா, பாட்டுக்கு அதே இலங்கை அரசோட ஸ்டேஷன்தான். இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் அப்படின்னு கொழும்பு ஸ்டேஷன் ஒலிபரப்புற பாட்டுக்கு தென் தமிழகமே அடிமைன்னு சொல்லலாம். இது போக கண்டி ஸ்டேனும் எங்க ரேடியோல வரும்.

முழு நேரமும் தமிழ் சினிமா பாட்டுக்களா போட்டாலும் அதையும் வித்தியாசமா செய்வாங்க கொழும்பு ஸ்டேஷன்ல. சிறுகதை ஒண்ண சொந்தமா ரெடி பண்ணி அதுக்கு ஏத்த மாதிரியான பாடல்களை நடுவில செருகி அரை மணி நேரம் போடுறது வேற லெவல். கதைய வாசிக்கிறவங்க குரல்லயே ஜாலம் காட்டுவாங்க. ஏதாவது ஒரு கேள்விய கேட்டு அடுத்து வரும் பாட்டுக்குள்ள பதில் இருக்குற மாதிரி போடுறதும் தனி ரகம்.



பிபிசி செய்தின்னா ஆனந்தி, ஆகாசவாணின்னா சரோஜ் நாராயண்சாமி. அதே மாதிரி கொழும்பு ஸ்டேஷன்னா ராஜேஸ்வரி சண்முகம். பெரும்பாலும் கதையோட சேர்ந்த பாடல் நிகழ்ச்சியில அவங்கதான் வருவாங்க. மூணு மணி நேர சினிமாவ ஒரு மணி நேரமா சுருக்கி போடுற ஒலிச் சித்திரம் நிகழ்ச்சிக்கு நெறைய ரசிகருங்க உண்டு.

ஊரு பக்கம் குடும்பம் குடும்பமா பீடி சுத்துற வேல பாத்ததால கொழும்பு ஸ்டேஷன் தான் பெரிய பொழுதுபோக்கு. அப்பப்ப விடுதலைப் புலிகள் ஸ்டேஷனும் வரும். இதோ புலி வருகுது திட்டத்தில், அராஜகம் ஒழியுது மொத்தத்தில் என்ற விக்ரம் பாடல்தான் அதில் ஃபேவரைட். அது மாதிரி பாட்டுகள் கொழும்பு ஸ்டேஷனில் கேட்க முடியாது.

இலங்கை ஸ்டேஷன் இந்த அளவுக்கு வாழ்க்கையோட இணைஞ்சிருந்தாலும் திருநெல்வேலி ரேடியோவோட மவுசும் தனிதான். சினிமா பாட்டு போடுற நேரம், யாரும் சொல்லாமலேயே எல்லா வீட்டு ரேடியோவும் கோரசா பாடிட்டிருக்கும். பலருக்கு சினிமா பாட்டு வசனம் எல்லாம் மனப்பாடமா இருக்கும்.

இசை மட்டும் இல்லைன்னா மனுச மனம் பேதலிச்சிப் போவும். அது ரேடியோ காலத்தில ஆரம்பிச்சி பல பாதைங்கள கடந்து இப்ப முழு நேர பண்பலை வரை வளந்து நிக்குது. ஆண்ட்ராய்டு ஆப்பில் கூட ரேடியோ ஸ்டேஷன் வரிச கட்டி வருது. 

பேட்டரி ரேடியோவ கொர கொர இரைச்சலோட தலை மாட்டில வச்சி தூங்கினதோட லேட்டஸ்ட் வெர்ஷன் தான் பண்பலை ரேடியோவ ஹெட்ஸெட் மாட்டி கேட்டுகிட்டே தூங்குறது.

எப்ப எங்க எந்த பாட்டு போடுவாங்கன்னு காத்திருந்த நிலைமை மாறி, எப்ப நம்மள இந்தாளு கேக்க ஆரம்பிப்பான்னு பாட்டுங்கல்லாம் ஏங்கிக் கிடக்கிற காலம் வந்திடுச்சி.

அதுக்காவ மியுசிக் மலிஞ்சி போச்சின்னு சொல்லிற முடியாது. அது, மனுஷ மனம் பேதலிக்காம தடுக்கிற ஹைட்ராக்ஸி குளோரோ குயின்... 

அதாங்க.. மனுஷனோட மூச்ச சீராக்கும் மருந்து.

சென்னைக்கு வந்த புதுசில ஆல் இண்டியா ரேடியோ பி அலைவரிசையில நாலைஞ்சி முறை இளைய பாரதம் நிகழ்ச்சில நானும் இந்த ஹைட்ராக்சி குளோரோ குயின குடுத்திருக்கேன்ல..

#நெல்லை_ரவீந்திரன்

Sunday 19 April 2020

டெண்ட் கொட்டாய்

 சீர்காழி கோவிந்த ராஜனோட கணீர் குரல், விநாயகனே வினை தீர்ப்பவனே... வேழ முகத்தோனே...ன்னு என காத்துல தவழ்ந்து வரும்போதே மனசுக்குள்ள உற்சாகம் ஊற்றெடுக்கும். பழைய ரெக்கார்டு தட்டு சுழல சுழல குழாய் செட் உச்சஸ்தாயில் கூப்பிடும். காலைலேயே வீட்டில பெர்மிசன் வாங்கிருந்தா இன்னும் கூடுதல் சந்தோசம்.

ஊரில இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலவுல இருந்தா கூட, புளிய மரங்கள்ல விளையாடிகிட்டிருக்க காத்து, பயித்தங் காடு வழியா பாட்ட சுமந்து கிட்டு வரும். அது பாட்டு மட்டுமில்ல. ஒரு சிக்னலும் கூட. அன்னிக்கு என்ன படம் ஓடுதோ அதுக்கு ஏத்த மாதிரி, எம்ஜி ஆர் பாட்டு, சிவாஜி பாட்டுன்னு போடுவாங்க.

திறந்தாச்சின்னா அதுக்கு ஒரு பாட்டு, டிக்கெட் குடுக்க ஆரம்பிச்சதும் ஒரு பாட்டு, படம் போடப் போறாங்கன்னா அதுக்கும் ஒரு பாட்டு இது தான் எங்க ஊரு டூரிங் டாக்கீசுக்கு பொது விதி. டிக்கெட் குடுக்க ஆரம்பிச்சதும் வீட்லருந்து கிளம்பினா போதும். படம் ஆரம்பிக்கவும் போயிரலாம்.

சாயந்தரம் ஆறே முக்காலுக்கு படம் போட்டுருவாங்க. தரை டிக்கெட், பெஞ்சு டிக்கெட்டுன்னு ரெண்டு விதம். பெஞ்சின்னா சிமெண்ட் சிலாப் போட்டு வச்சிருப்பாங்க. அப்பாடான்னு சாஞ்சோம்னா, பின்னாடி இருக்கவங்க மடியிலதான் போய் விழனும். அப்புறம் அவ்ளோதான்.

அதனால, தரை டிக்கெட் தான் நம்ம ஃபேவரைட். நல்ல ஆத்து மணல் போட்டு வச்சிருப்பாங்க. கொட்டகைக்கு வெளியில கூட மண்ண குமிச்சி வச்சி உக்காந்தும் படம் பார்க்கலாம், படுத்துக் கிட்டும் பாக்கலாம். கோடை வெயில் காலத்திலல்லாம், அப்பிடி படுத்துக்கிட்டு ஃபர்ஸ்ட் ஷோ பாக்கிறதே தனி சுகம். 

பிலிம் ஓட்டுற சத்தம், ஆபரேட்டர் ரூம்லேருந்து திரை வரைக்கும் நீளமா இருக்கிற புகை, அத்தோட, படம் பாத்துக்கிட்டிருக்கவங்க யாராவது இழுத்து விடுற புகை. இதுக்கு நடுவில பொம்பிளையாளுங்க தலையில வச்சிருக்கிற பூ வாசம். இப்பிடியான கதம்பமான டெண்ட் 

கொட்டாய் வாசன, இப்பவும் மூக்க சுத்திகிட்டே இருக்கு.


இன்டெர்வெல் நேரத்தில கை முருக்கு விப்பாங்க பாருங்க அந்த ருசிய இதுவரை எதுவுமே அடிச்சிக்கல. டூரிங் தியேட்டர்லல்லாம் நாலு பார்ட்டா படம் போடுவாங்க. அதனால மூணு இன்டர்வெல் வரும். 

அப்பல்லாம் ஆபரேட்டர் ரூமுக்கு வெளியில நின்னு ரீல் மாத்துறத வேடிக்க பாக்குறது தனி ஆச. பெரிய ஆளா ஆனதும் எப்பிடியாவது ஆபரேட்டராயிடனும்னு கூட நெனப்பு வந்து போகும். அத மனசில வச்சி.வீட்டில பிலிம் ஓட்டி பாத்தது தனி கதை.

அது ரஜினி, கமல் காலம்னாலும் எம்ஜிஆர் ஆட்சி காலம். அதனால சனி ஞாயிறுன்னா எம்ஜிஆர் படம் நிச்சயம். சிவாஜி படமும் சில வாரங்கள்ல போடுவாங்க. எம்ஜிஆரோட படங்கள்ல 80க்கும் மேல எனக்கு காமிச்சது டூரிங் தியேட்டர்தான். அப்பப்ப சிவாஜி படமும் பாக்கிறது உண்டு.

ரொம்பவும் அழுகாச்சியா படம் போச்சிதுன்னா பனை ஓலை சங்கீதமும், சிலு சிலுன்னு காட்டுக்குள்ளற வீசுற காத்தும் தானாவே கண்ணுல தூக்கத்த வரவழைச்சிரும். 

தியேட்டருக்கே கூட இது மாதிரி சோகம் வந்திருக்கு. அதான் வசந்தம்ங்கிற பேர்ல கொஞ்ச நாளும் குமரன்ங்கிற பேர்ல கொஞ்ச நாளும் டூரிங் தியேட்டர் ஓடிச்சி. வேற சில சிக்கல் வந்தா ரெண்டு முணு நாளு மூடிருவாங்க. அப்பிடித்தான் அந்த ஏழு நாள் படம் ஏழு நாள் ஓடிச்சி. அதாவது படம் ஓடுணுது முணு நாள் தான். மத்த நாள்ல தியேட்டர் மூடிக் கிடந்தது.

சனி, ஞாயிறு இல்லாம மத்த நாளுங்கள்ல ரஜினி, கமல், பாக்யராஜ், பாண்டியன் படங்கள போடுவாங்க. அந்த நாளுங்கள்ல வருத்தப்படாத வாலிபர்கள நெறைய பார்க்கலாம். அப்பல்லாம் கள், சாராய கடைங்க உண்டு. அதனால, சித்தப்பு, மாமான்னு சொந்தக்கார குடிமகன்களும் நிறைஞ்சிருப்பாங்க.

இதனாலேயே சனி, ஞாயிறு தான் ஊருக்காரங்க அதிகமா வருவாங்க. சனிக்கிழம பீடிக்கடை சம்பள நாள் வேற. இந்த நினைவுகளல்லாம் புகையா மனசெல்லாம் சுத்திட்டிருக்கு.

இப்ப தினசரியும் சன் லைப், முரசு, கே டிவி சேனல்கள்ல போடுற படங்கள் எல்லாம் அந்த புகை மேல வெளிச்சம் போடுறதால, பழைய நெனப்பெல்லாம், தனித்தனி படங்களா மனசுக்குள்ள டெண்ட் கொட்டாய் போட்டு ஓடிட்டிருக்கு.

#நெல்லை_ரவீந்திரன்

Tuesday 14 April 2020

கொரோனா கால தனிமை

 பிரபல மனநல மருத்துவர் திரு.ருத்ரன் பதிவிலிருந்து..



மூன்றாவது வாரத்தில் மனம் சோர்வடையும் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் எதிர்பார்த்ததைவிடவும் அதிகம் பேர் பாதிப்பின் ஆரம்பக் கட்டத்திற்கு வந்து விட்டார்கள்.

சாலைகளில் அசாதாரணமான ஒரு நிசப்தம், அவ்வப்போது பொறுப்பற்ற சில விடலைகளின் வாகன வேகத்தால் நாராசமாகிறது.


வீடுகளிலும் பேச்சு குறைந்து விட்டது. புத்தகங்கள் பாதியில் மூடப்பட்டு கிடக்கின்றன. டிவியில், கணினியில் படங்கள் ஓடவில்லை. எல்லா கண்களும் கைகளில் இருக்கும் செல்பேசியில் - விரல்களால் நீவி நீவி  செய்திகளையும் பொய்களையும் பார்த்துக் கொண்டு தேதி கிழமை தெரியாத மெத்தனத்தில் வாழ்க்கை நின்று விட்டது போல் தோன்றுகிறது. 


தொழில்நுட்பம் தெரியாத சிலர் தெரிந்தது போல் பேசுபவர் சொன்னதை நினைவில் வைத்துக் கொண்டு வெறுமையில் கிடக்கிறார்கள்.  நாம் மாறிவிட்டோமா? மீண்டும் பழைய நிலைக்குச் செல்வோமா? என்று யாருக்கும் புரியாத ஒரு மந்த நிலை. ஒரு நாளில் நாற்பது தடவை தொற்று எண்ணிக்கை, சாவு எண்ணிக்கை என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதை விட்டுவிட்டார்கள்.  


பல எழுத்தாளர்களின் பேனா முனைகள் உலர்ந்து கிடக்கின்றன, ஓவியத்திரைகள் வெள்ளையாகவே இருக்கின்றன. எல்லா நாட்களும் இரவின் தூக்கத்தை நோக்கியே நகர்கின்றன. 


வாழ்வை நடத்துவதே தினசரி போராட்டம் என்று பழகிய வறியவர்கள் கூட திகைத்து விட்டார்கள். தினமும் வேலை, வேலைக்கு ஊதியம், ஊதியத்தில் வாழ்க்கை எனும் இயல்பு பிரழ்ந்து விட்டது. வேலை இல்லை, வெளியே போகவும் முடியாது, பொருட்கள் வாங்கவும் பணம் இல்லை என்ற நிலையில் உதவிகள் எங்கிருந்து எப்போது வரும் எனும் ஏக்க எதிர்பார்ப்பில் அவர்களது நாட்கள் தேய்ந்தன. 


அவர்களிடம் வேலை வாங்கிப் பழகிவிட்ட நடுத்தர வர்க்கம் தன் வேலையைத் தானே செய்வதன் சிரமத்தை இயல்பாக லகுவில் ஏற்றுக் கொண்டது. ஆனாலும் பழகிய வசதிகள் இல்லாதது ஓர் இறுக்கத்தை அவர்களிடமும் ஏற்படுத்தி விட்டது. இன்னும் ஒரு வாரம், இரண்டு வாரம் எனும் கணக்குகளில் அவர்களுக்கு நம்பிக்கை போய்விட்டது.


வீட்டிலேயே அடைபட்டிருக்கும் குடும்பத்தில் நெருக்கத்துக்குப் பதிலாய் இறுக்கம் கூட ஆரம்பித்தது. சிறு தவறுகள் பெரிதாய்த் தெரிந்தன, பொழுது போவது பெரும் பாரமாகியது. வளமான வாழ்வை அமைத்துக் கொண்டவர்களுக்குப் பணி செய்ய இன்னமும் சிலர் இருந்தார்கள். அவர்களது இயல்பு எனும் கேளிக்கை, சமூக வலைவிரிப்புகள் மட்டுமே இல்லாமல் போயின. 


குடிப்பதற்கும் புகைப்பதற்கும் பழகியவர்களுக்கு அவை இல்லாமல் ஒருவித எரிச்சல் இருந்து கொண்டே வந்தது. அதன் வெளிப்பாடு வீட்டில் இருப்பவர்களின் மீது தேவையில்லாத கோபமாய் வந்து கொண்டிருந்தது. 


திடீரென்று அறிவிக்கப்பட்ட நாடடங்கில் திட்டமிடாமல் வந்த உறவினர்கள் சில வீடுகளில் பாரமாக உணரப்பட்டனர். அவர்களுக்குப் போக முடியாமல், இவர்களுக்கும் அனுப்ப முடியாமல், செலவுகளோடு உறவு சிக்கல்களையும் பல வீடுகள் சமாளிக்கத் திணறின. அத்தியாவசியத்திற்கே மிகுந்த பிரயத்தனம் தேவைப்படும்போது, இளைப்பாற எந்த செலவும் சாத்தியமில்லாமல் போனது.  


இதன் அடுத்த கட்டம்தான் மனநலம் பாதிக்கப்படும் நிலை. பதட்டத்தில் ஆரம்பித்து, வெறுப்பில், விரக்தியில் தொடர்ந்து, எரிச்சலாய் வெளிப்பட்டு முடிவில் மனச் சோர்வில் முடியும்.

இந்த வாரத்திற்குப்பின் மனச் சோர்வின் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். அதனை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்.


மனச் சோர்வின் ஆரம்ப அறிகுறிகள் உறக்கம் கெடுதல், உணவுப் பழக்கத்தில் மாறுதல், எதிலும் நாட்டமின்மை, கவனச் சிதறல், சோகமான மனநிலை, தனிமை நாடுதல், ஆர்வம் இருந்த காரியங்களிலும்  ஈடுபட முடியாத நிலை, பேசுவதும் பிறரிடம் தொடர்பு கொள்வதும் குறைதல். 


மெல்ல, மணிக்கொருமுறை செல்பேசியில் கணினியில் கொரோனா செய்தி தேடுவதும் குறைந்து விடும். வெளியிலிருந்து பார்ப்பவர்க்கு இது சோம்பல் போல் தெரியும். இவர்களை இதே மனச் சோர்வில் விட்டுவிட்டால் விளைவுகள் விபரீதமாகவும் முடியலாம். 


இப்படி யாராவது இருந்தால் அவர்களிடம் பேசுங்கள். வெட்டியாகவாவது பேசுங்கள். அறிவுரை ஆலோசனை என்றெல்லாம் ஆரம்பிக்காமல் அடுத்த வீட்டின் பூனை பற்றி கூட பேசுங்கள். அவர்கள் உங்கள் பேச்சை விரும்பாவிட்டாலும் பேசுங்கள். அந்நேரம் அவர்களது சோகம் எரிச்சலானாலும் அது அவர்களுக்கு உதவும். இது பற்றி நிறைய பேச வேண்டியிருக்கிறது. இதற்கான நேரம் வந்து விட்டது.