Tuesday 21 June 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -35

சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார். ஆண் பிரபலங்களைக் கூட நாம் நினைத்து பார்த்திராத துறைகளிலும் களமிறங்கி வெற்றி கண்டவர். அநேகமாக இயக்குநரை கரம் பிடித்த முதல் கதாநாயகி அவராகத்தான் இருக்கும். எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களுடன் பல படங்களை பார்த்திருப்போம். ஆனால், அவர்களுக்கெல்லாம் சீனியர் நாயகி.



அவர் பானுமதி. அடிப்படையில், அவர் ஒரு தெலுங்கு நடிகை. 1939ஆம் ஆண்டு 13 வயதிலேயே தெலுங்கில் அறிமுகமாகி அடுத்த 5 ஆண்டுகளிலேயே இயக்குனர் ராமகிருஷ்ணாவை திருமணம் செய்தார். அத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட நினைத்தாலும் காலம் இடம் தரவில்லை. திருமணத்துக்கு பிறகே தெலுங்கு, தமிழ் திரையுலகில் பிரகாசித்தார்.



தெலுங்கில் இருந்து ஏழெட்டு ஆண்டுகள் கழித்து திருமணமான நாயகியாகத்தான் தமிழில் நுழைந்தார் பானுமதி. 



1940, 50களில் பிரபலமாக இருந்த தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, என்.எஸ்.கிருஷ்ணன், எம்.கே.ராதா, டி.ஆர்.மகாலிங்கம், சித்தூர் நாகையா தொடங்கி 1960, 1970களில் கோலோச்சிய அடுத்த தலைமுறை எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, என்டிஆர், நாகேஸ்வரராவ் என தென்னிந்திய ஜாம்பவான்களின் தேர்வாக இருந்தவர்.



நாகேஸ்வர ராவின் மகன் நாகார்ஜூனா போன்ற அடுத்த இளம் தலைமுறையினரின் படங்களிலும் நடித்த பெருமை உண்டு. இவரை பார்த்துதான் சினிமாவுக்கு வந்தவர் நடிகையர் திலகம் சாவித்திரி. பானுமதி அறிமுகமான காலத்தில் நடிப்பவரே சொந்த குரலில் வசனம் பேசுவதோடு பாடலும் பாட வேண்டும். அதனால் ஆரம்பத்தில் இருந்தே பாடவும் செய்தார். தான் நடித்த அனைத்து பாடல்களையும் தானே பாடிய கதாநாயகியும் இவர் மட்டுமே.



நடிகை, பாடகி, இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், ஸ்டுடியோ உரிமையாளர், சிறுகதை எழுத்தாளர் இப்படி 8 வித திறமைசாலி. 'அஷ்டவதானி' பட்டம் பெற்றவர். சினிமா ஸ்டுடியோ சொந்தமாக வைத்திருந்த ஒரே நடிகையும் இவர்தான். எப்போதுமே அவருக்குள் ஒரு துணிச்சல்தனம் உண்டு. அவரது நடிப்பிலேயே இதை ரசிகர்கள்  பார்க்கலாம். 



எம்ஜிஆரை திரை உலகில் ரொம்ப மரியாதையாக எல்லோரும் அழைத்த சமயத்தில் மிஸ்டர் ராமச்சந்திரன் என அழைத்த துணிச்சல்காரர். "நோ கட்டிப்பிடி ஸீன்,  நோ நெருக்கமான ஸீன்" என கட்டுப்பாடுகளை விதித்தும் கதாநாயகியாக நீண்ட நாள் கோலோச்சியவர்.



ஜெமினி நடித்த 'மிஸ்ஸியம்மா' படத்தில் இவர்தான் முதலில் நடிப்பதாக இருந்து தயாரிப்பாளர் சக்கரபாணியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் சாவித்திரி நடித்தார். அந்த தயாரிப்பாளரை கிண்டல் செய்யும் விதமாக 'சக்கரபாணி' என்ற பெயரிலேயே காமெடி படத்தை தயாரித்து இயக்கினார் பானுமதி. அவரது துணிச்சலுக்கு இதுவும் ஒரு உதாரணம். அந்த படம்  சூப்பர் ஹிட்டாகி இவரது இயக்குநர் திறமையையும் வெளிச்சம் போட்டு காட்டியது.



1945ல் சித்தூர் நாகையாவுடன் நடித்த 'ஸ்வர்க்க சீமா' தெலுங்கில் முதன் முதலில் இவரை அடையாளம் காண்பித்தது என்றால், தமிழில் அடையாளம் கொடுத்த படம் பி.யூ.சின்னப்பாவுடன் நடித்து 1949ல் வெளியான 'ரத்ன குமார்'. 1953லேயே இயக்குநராகவும் ஆகி விட்டார். 'சண்டிராணி' என்ற அந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியானது. படத்தின் ஹீரோ என்.டி.ராமாராவ்.  



முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த நடிகையும் இவரே. படம் எம்ஜிஆரின் 'கலையரசி'. (தமிழில் வெளியான  விண்வெளி கதையம்சம் கொண்ட முதல் படமும் இதுதான்) பத்ம விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகையும் பானுமதி தான். ஆண்டு 1966.


1939 தொடங்கி 1998 வரை சுமார் 60 ஆண்டு காலம் திரை வானில் ஜொலித்த பானுமதியின் பெயரைச் சொன்னால் எம்ஜிஆர், சிவாஜி நடித்த கருப்பு வெள்ளை படங்கள்தான் ரசிகர்கள் நினைவுக்கு வரும்.



மலைக்கள்ளன், மதுரை வீரன், அலிபாபாவும் 40 திருடர்களும், நாடோடி மன்னன், ராஜா தேசிங்கு, கலையரசி, தாய்க்குப்பின் தாரம், காஞ்சி தலைவன் என எம்ஜிஆருடன் நடித்த படங்களும்



மக்களைப் பெற்ற மகராசி, அம்பிகாபதி, அறிவாளி, கள்வனின் காதலி என சிவாஜியுடன் நடித்த படங்களும் மனதில் நீங்காத எவர்கிரீன் ரகங்கள். தமிழில் வெளியான முதலாவது வண்ணப் படத்தின் (அலிபாபாவும் 40 திருடர்களும்) நாயகி. ஆனால் தமிழில் வண்ணப்படங்களில் அதிகமாக நடிக்கவில்லை.


பின்னாளில் அம்மா, பாட்டி வேடங்களை போட்ட பானுமதிக்கு 1992ல் வெளியான பிரசாந்த், ரோஜா நடித்த 'செம்பருத்தி' படம் தான் தமிழில் கடைசி படம். சூட்டிங்கில் ஒரு சிங்கத்தை பார்ப்பது போல இருக்கும் என்பது நடிகை ரோஜா  கூறிய அனுபவம். அப்படியானால் இளம் வயது பானுமதியை கற்பனை செய்து பாருங்கள். 



தெலுங்கில் 1998 வரை நடித்திருக்கிறார். தமிழில் பாண்டியராஜன், ஊர்வசி, மனோரமா நடித்த 'பாட்டி சொல்லைத் தட்டாதே' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'பம்மா மாட்டா பங்காரு பாட்டா'வில் மனோரமா வேடத்தில் நடித்தவர் பானுமதி.


திரையுலகைத் தாண்டி பார்த்தால் விருது பெற்ற  சிறுகதை எழுத்தாளர், இசைப் பள்ளியின் முதல்வர், நடிப்புக் கல்லூரி பேராசிரியர் என பானுமதி பெற்ற அங்கீகாரம் ஏராளம். இவ்வளவு திறமைகளையும், பெருமைகளையும் கொண்ட ஒரு நடிகையை தமிழ், தெலுங்கு மட்டுமல்ல, எந்த திரையுலகிலும் பார்க்க முடியாது என்பதே உண்மை.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்


Thursday 9 June 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -34

தமிழ் சினிமாவில் இவரோட ஸ்டைலே தனி. பெயரை சொன்னாலே கண்ணை சிமிட்டி புருவத்தை அசைத்தபடி அழுத்தமாக பேசும் டயலாக் டெலிவரிதான் ரசிகர்களின் நினைவுக்கு சட்டென வரும்.

"ஆலம்பனாாா நான் உங்கள் அடிமய்ய்ய்"

"ஏண்டாாா எடுத்தேஏஏ எதுக்குடா எடுத்தேஏஏ"

இது மாதிரியான வசனங்களும் கூடவே நினைவிலாடுவதை தவிர்க்க முடியாது. அவர்தான் அசோகன்.



நம்பியார், எஸ்.வி.ரங்காராவ் இருவரும் கலந்த ஒரு கேரக்டரில் பொருந்துவது அசோகன்.

வில்லன்களில் நம்பியார் ஒரு ரகம் என்றால் இவர் வேறு ரகம். நம்பியார் படம் என்றால் நாலைந்து சண்டையாவது இருக்கும். ஆனால், இவரோ பெரும்பாலும் நேரடியாக மோதாத புத்திசாலி வில்லன். கிளைமாக்சில்தான் மூன்று அடி அடித்துவிட்டு அதன் பிறகு அடி வாங்குவார். நம்பியாருடன் சேர்ந்து இவரும் வில்லனாக மிரட்டினால் அந்த படம் பிளாக் பஸ்டருக்கு உத்தரவாதம். எம்ஜிஆரின் 'என் அண்ணன்' அதற்கு உதாரணம்.



வில்லன் தவிர்த்து அப்பா, மாமனார், பண்ணையார், ஊர் பெரியவர் என கேரக்டர் ரோல்களிலும் எஸ்.வி.ரங்காராவ் போலவே கலக்கியவர். நல்ல குணமான ஊர் பெரிய மனிதர், ஜமீன்தார் வேடங்களுக்கு ரங்காராவ் என்றால் அதே கேரக்டர்களின் கொடூரமான பிம்பத்தில் அதகளப்படுத்தியவர் அசோகன். இதற்கு 'ரிக்சாக்காரன்' படத்தை உதாரணம் காட்டலாம்

அசோகனின் திரையுலக வாழ்க்கை மொத்தம் 30 ஆண்டுகள். தனது  மொத்த வாழ்வையும் திரையிலேயே கழித்தவர். திருச்சியின் மிக பழமை வாய்ந்த பிரபலமான  செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்றதும் சினிமா ஆசையில் சென்னை வந்த அந்தோணியை அசோகன் ஆக்கியவர் அன்றைய பிரபல இயக்குனர் டிஆர் ராமண்ணா. 1953ல் வெளியான அன்றைய ஹிட் படமான கேபி சுந்தராம்பாள் நடித்த 'அவ்வையார்' தான் அறிமுகம். முதல் வேடமே மன்னன் வேடம் தான்.



அன்றைய கால கட்டத்தில் வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள், வறுமை போன்ற பல்வேறு சூழலால் படிப்பை பாதியில் விட்டவர்கள் தான் நாடகங்களில் வேஷம் கட்டிய கையோடு அப்படியே சினிமாவுக்குள் நுழைந்திருந்தனர். அதனால் பெரும்பாலும் பள்ளிப்படிப்பை தாண்டாதவர்களே சினிமாவில் நிறைந்திருந்தனர். அப்படி பார்த்தால் அசோகன்தான் தமிழ் சினிமாவின் முதல் பட்டதாரி என்றே கூறலாம். டைட்டில் கார்டிலேயே அசோகன் பி.ஏ என்று தான் போடுவார்கள்.

ஆரம்பத்தில் சின்ன சின்னதாக தலை காட்டிய அசோகனுக்கு பெரிய அளவில் தமிழ் சினிமா கைகொடுக்கவில்லை. ஆனால் 1960 தொடங்கி சுமார் பதினைந்து ஆண்டு காலம் அவர் காட்டில் அடைமழை பெய்தது. ஆண்டெின்றுக்கு தலா பத்து படங்களுக்கு மேல் எல்லாம் நடித்திருக்கிறார். எம்ஜிஆருடன் மட்டும் சுமார் 80  படங்கள். (இது எம்ஜிஆர் நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கையில் சரி பாதிக்கும் அதிகம்)



எம்ஜியார் பிக்சர்ஸ் தயாரித்த அடிமைப் பெண், உலகம் சுற்றும் வாலிபன் படங்களில் அசோகன்தான் மெயின் வில்லன். அதே நேரத்தில் 'அன்பே வா' படத்தில் கதாநாயகி சரோஜாதேவியின் முறைப் பையனாக விமான பைலட் கேரக்டரில் மிக அமைதியான ஜென்டில்மேனாகவும் அசோகன் கலக்கி இருப்பார்.



சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர் என அன்றைய ஹீரோக்கள் அனைவருடனும் இணைந்து நடித்திருக்கிறார். படிக்காத மேதை, பாதகாணிக்கை, களத்தூர் கண்ணம்மா, கர்ணன் இப்படி அசோகனின் தரமான நடிப்பை சொல்லும் படங்கள் ஏராளம்.

கூடவே, பாடியும் இருக்கிறார் அசோகன். ஜெய்சங்கரின் அறிமுக படமான 'இரவும் பகலும்' படத்தில் "இறந்தவன சுமந்தவனும் இறந்துட்டான். அத இருப்பவனும் எண்ணிப் பாக்க மறந்துடடான்...' என்ற பாடலை பாடியவர் சாட்சாத் அசோகனே தான்.

வில்லன், குணசித்திரம் என கலக்கியதோடு ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.  இது சத்தியம், தெய்வ திருமகள், காட்டு ராணி, கார்த்திகை தீபம், வல்லவனுக்கு வல்லவன்... இவை அசோகன் ஹீரோவாக நடித்த படங்களில் சில. 



நாயகன் என்றால் டூயட் பாடல்கள் இல்லாமலா..?

"மனம் என்னும் மேடை மேலே முகம் ஒன்று ஆடுது...", 

"ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்..." 

"காட்டு ராணி, உன் முகத்தை காட்டு ராணி..." 

இவை அவரது டூயட்டுகளில் சில.

'பாத காணிக்கை' படத்தில் ஊன்று கோலுடன் தோன்றி நடித்த "வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ..." பாடல் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ரகங்களில் ஒன்று.

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து சில திரைப்படங்களையும் அசோகன் தயாரித்திருக்கிறார். எம்ஜிஆர் நடித்த சூப்பர் ஹிட் படமான 'நேற்று இன்று நாளை' தயாரிப்பாளர் இவர்தான்.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி காலகட்டத்துக்கு பின், 1980களில் வெளியான 'ஆட்டுக்கார அலமேலு', 'தர்மயுத்தம்',  'தீ', 'பில்லா', 'முரட்டுக்காளை', 'சவால்', 'சங்கர்லால்', 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' போன்ற படங்களில் சிவகுமார், ரஜினி, கமல் என அடுத்த தலைமுறை நாயகர்களுடனும் அசோகன் நடித்திருக்கிறார். 

'ஆனந்த ஜோதி', 'களத்தூர் கண்ணம்மா' என குழந்தை கமலுடன் நடித்த அசோகன், 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' படத்தில் ஹீரோ கமலுடனும் நடித்திருக்கிறார்.  "ஆலம்பனாாா நான் உங்கள் அடிமய்ய்ய்..."னு தனக்கே உரித்தான குரலில் பூதம் வேடத்தில் கமலுடன் கலக்கி இருப்பார்.



1950களில் துவங்கி 1980கள் வரை நீடித்த அசோகனின் திரைப் பயணம் அவரது 51வயதிலேயே முடிந்து போனது. 50 வயதிலேயே மறைந்த  டி.எஸ்.பாலையா, ரங்காராவ், என்எஸ்கே போன்ற தமிழ் திரையுலக பிரபலங்களின் பட்டியலில் அசோகனும் இடம் பிடித்து விட்டார்.

பவளங்கள் ஜொலிக்கும்

#நெல்லை_ரவீந்திரன்

Sunday 5 June 2022

பாடும் நிலா பாலு



 தமிழை சுமந்தபடி தவழும் தென்றல் காற்றை கற்கண்டாக மாற்றிய ரசவாதி. தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஹீரோவுக்கு முதன் முதலில் குரல் தந்து அரை நூற்றாண்டாக குரலில் மாயவித்தை காட்டிய மந்திரவாதி. இசையை விரும்பும் ஒவ்வொருவரின் உணர்வுக்குள்ளும் நிறைந்திருக்கிறார், எஸ்பிபி.

நான் அறிந்தவரை எவ்வளவு சிக்கலான பாடலாக இருந்தாலும் வார்த்தைகளை வைரத்தால் அறுத்தது போல அவ்வளவு க்ளீயர் கட்டாக அச்சர சுத்தமாக பாடியது அவர் ஒருவர்தான். எவ்வளவு உச்சஸ்தாயி போனாலும் சிரிப்பு, சோகம் என பாடினாலும் அதில் மாற்றமில்லை. எப்படி பாடினாலும் கூடவே சிரிப்போ, சோகமோ, எள்ளலோ அசால்ட்டாக நொடியில் கொண்டு வந்து வரிகளையும் பாடும் திறமைசாலி. கும்பக்கரை தங்கையா படத்தில் "பூத்து பூத்து குலுங்குதடி வானம்..." பாட்டில் சிரித்தபடியே பாடுவதை குறிப்பிடலாம்.

1980, 1990களில் கமல் பாடல்களில் கமலின் குரலே ஒலிப்பது போலவே எனக்கு கேட்கும்.  'ஸ்வாதி முத்யம்' தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங்கான 'சிப்பிக்குள் முத்து' படத்தில் கமலுக்கு குரல் கொடுத்தவர் எஸ்பிபி. இந்திரன் சந்திரன் படத்திலும் ஒரு கமலுக்கு இவர்தான் குரல். தசாவதாரத்திலும் ஒரு சில கேரக்டர்களுக்கு எஸ்பிபி குரல்தான். 'சலங்கை ஒலி'யின் ஒவ்வொரு பாடலும் எஸ்பிபியையே எனக்கு முன்னிறுத்தும்.

'சிப்பிக்குள் முத்து' படத்தில் "துள்ளி துள்ளி நீ பாடம்மா..." பாடல் ஆரம்பத்தில் மூச்சு விடாமல் நீண்ட நேரம் ஹம்மிங் பாடுவதை வேறு யாரையும் கொண்டே நினைத்துப் பார்க்கவே முடியாது.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ரஜினி, கமல் தொடங்கி அஜித், விஜய் என பயணித்து இன்றைய தலைமுறை வரை குரல் கொடுத்த எஸ்பிபி,  உச்சம் தொட்டாலும் குழந்தை மனசுக்காரர். எனக்கு தெரிந்த வரையில் இவரும் எம்எஸ்வி இருவருமே புகழில் பேருருவானாலும் உள்ளத்தால் குழந்தைகளே.

சிகரம், ரட்சகன், காதலன், மின்சார கனவு இப்படி நிறைய படங்களில் நடிகராகவும், பல படங்களை தயாரித்தும், துடிக்கும் கரங்கள் (அந்த படத்தின் மேகம் முந்தானை ஆடுது தன்னாலே...  பாடல் ஒன்றே போதும் அவரது இசைக்கு) போன்ற படங்களின் இசையமைப்பாளராகவும் ஜெயித்த அவரால் இயக்குநராகவும் வெற்றி பெற்றிருக்க முடியும்.

ஆனால், செய்யவில்லை. அதற்கு எஸ்பிபி சொன்ன ஒரு காரணம்: என்னால் ஒருவரை கடினமாக திட்டி பேசத் தெரியாது. இயக்குநராக இருந்தால் அதை செய்ய நேரிடும். இதுதான் எஸ்பிபி

மக்கள் நாயகன் ராமராஜன்,  மைக் மோகன் இருவருமே திரை வானின் உச்சத்தில் ஜொலித்ததற்கு எஸ்பிபி பாடல்களும் முக்கிய காரணம் என்பதை மறுக்கவே முடியாது. இருவரின் பெரும்பாலான படங்கள் பாடல்களுக்காகவே ஹிட்டடித்தன.

இசையால் பாடல் வரிகள் உயிர் பெற்றாலும், எஸ்பிபி பாடியதாலேயே   அவை அமரத்துவம் பெற்று ஜீவித்து நிற்கின்றன. மகிழ்ச்சி, சோகம், காதல், பாசம், தோல்வி இப்படி ஒவ்வொருவரின் அந்தந்த சமயத்தின் எந்தெந்த உணர்வுக்கும் அவர் குரலே அருமருந்து. தூக்கம் இல்லா நீள் இரவுகளில் அவரது குரலே நல் விருந்து. நீண்ட தூர பயணங்களுக்கும் அதுவே வழித்துணை.

இன்று எஸ்பிபி பிறந்த தினம்

#நெல்லை_ரவீந்திரன்