Wednesday 6 May 2020

அரவான் என்றொரு எளியவன்

சந்தனு மகாராஜாவின் அடுத்தடுத்த தலைமுறைகளின் நீறுபூத்த பதவிப் போட்டி, நான்காம் தலைமுறையில் வெடித்தபோது விளைந்ததே குருசேத்திர யுத்தம். தர்மம், அதர்மம் இரண்டுக்கும் இடையிலான ஒரு குறியீடாக குருசேத்திரத்தை கூறினாலும், தர்மம் ஒருபோதும் அவ்வளவு எளிதாக வென்றதில்லை வெல்வதில்லை என்பதே அதன் மறை பொருள். 

இரணடு படைகளிலும் இருந்த பல முக்கிய கதா பாத்திரங்கள் பெரும்பாலும் தெரியும். அதில், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வைத்து மிகப் பெரிய வாழ்வியல் சூத்திரங்களையும் தர்ம, அதர்ம சிந்தனைகளையும் கூற முடியும். இந்து மத இதிகாசம் என்ற திரையை தவிர்த்து பார்த்தால் இதை உணரலாம். இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை, மகாபாரத பெருங்கதை அளித்த உபதேசமே.

இந்த பெருங்கதையில் கவுரவர் வெற்றிக்காக ஒரு புறமும் பாண்டவர் வெற்றிக்காக மறு புறமும் ஏராளமான சிறிய கதா பாத்திரங்கள் பாடுபட்டன. அவர்களில் ஒருவர், அரவான். பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனனுக்கும் வட கிழக்கு இந்தியாவைச் சேர்ந்த நாகப் பெண் உலுப்பிக்கும் பிறந்தவன்.

18 நாள் குருசேத்திர யுத்தத்துக்கு இரு புறமும் படைகள் ஆயத்தமாக நிற்கின்றன. தர்மம் நம் பக்கம் தான் ஜெயமும் நம் பக்கம் தான் என பாண்டவர்கள் நினைத்தாலும் வெற்றி சுலபம் அல்ல என்கிறார், கிருஷ்ணர்.

அதற்கு களப்பலி ஒன்று கொடுக்க வேண்டும் என்பதும் பாண்டவர் பக்கத்தில் இருந்து அனைத்து லட்சணங்களும் பொருந்திய ஒரு மனிதனை பலியிட வேண்டும் என்பதும் அவரது யோசனை. அதற்கு பொருத்தமாக இருப்பவர்கள் அர்ச்சுனன், கிருஷ்ணர், அரவான். 

முன்னவர்கள் முக்கியம் என்பதால், உலகத்தின் வழக்கமான நடைமுறையான எளியவனான அரவானையே பலியிட முடிவு செய்து அவனிடமே அதை கூறவும் செய்கிறார்கள். அவனும் ஒப்புக் கொள்கிறான். ஆனால், மூன்று நிபந்தனைகளை அவன் கூறுகிறான்.

மணமாகாத இளைஞனான எனக்கு மணமுடித்து வைக்க வேண்டும். குருசேத்திர போரை முழுமையாக கண்ணால் பார்க்க வேண்டும். உலகத்தார் என்னை கடவுளாக வணங்க வேண்டும். இதை ஏற்றார் மாய கிருஷ்ணன்.


ஆனால், நாளை உயிரிழக்கும் இளைஞனை யார் மணமுடிப்பார். அதனால் கிருஷ்ணனே மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணமுடித்தார். மறுநாள் களப்பலி கொடுத்ததும் அரவானின் கண்கள் மட்டும் உயிருடன் இருந்து குருேசேத்திர யுத்த களத்தை பார்த்தது. 



மூன்றாவது நிபந்தனைப்படி கூத்தாண்டவரானார், அரவான். தென்னாற்காடு பகுதியான விழுப்புரம், கடலூர், கள்ளக் குறிச்சி மாவட்டங்களில் கூத்தாண்டவர் விழா பிரபலம். தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் அரவான் ஒரு தெய்வமே.



ஆணாக இருந்து பெண் உருவம் எடுத்த கிருஷ்ணராக தங்களை கருதிக் கொண்டு, சித்திரை பவுர்ணமி நாளில் தாலி கட்டி மகிழ்ச்சியாக இருப்பது திருநங்கைகளின் வழக்கம். கூவாகம் கூத்தாண்டவர் விழாவின் பின்னணி இது என்றாலும் எளியவர்களின் நிலைமையை உலகுக்கு ஆண்டுதோறும் உணர்த்தும்  ஒரு குறியீடாகவே பார்க்கிறேன்.

அன்றும் இன்றும் என்றும் எளிய மனிதர்களே களப்பலிக்கு தேர்வாகின்றனர். அரவானின் கோரிக்கையை கேட்பதற்கு கிருஷ்ணர் இருந்தார். இப்போதோ மோகினிகளே தங்களின் ஓராண்டு துயரத்தை ஒரு நாள் அழுகையில் கரைக்ககும் முயற்சியே நடக்கிறது.

சபை தோறும் பாஞ்சாலி துகிலுரியப்பட்டுக் கொண்டே இருக்கிறாள். அரவான்களும் களப்பலிக்கு தயாராகிக் கொண்டே இருக்கிறார்கள். பாண்டவர்களும், கவுரவர்களும் அப்படியே இருக்கின்றனர். உருவங்கள் மாறினாலும் யுகங்கள் மாறினாலும் காட்சிகள் மட்டும் மாறுவதே இல்லை...

#நெல்லை_ரவீந்திரன்