Monday 19 January 2015

ஹேப்பி பொங்கல்...!

கழனிகளை திருத்தி
காலனிகளாக்கி விட்டோம்
விளை நிலங்கள் அனைத்தும்
விலை நிலங்களாகி விட்டன
சாலையோர வயல்களை அழித்து
நெடுஞ்சாலை என தார் ஊற்றி
நடுவில் மலர்க்கொத்து நட்டாகி விட்டது


ஊருக்கு சோறிட்ட உழவனின் வயிறு
உள்வாங்கி பரிதாபமாக நிற்கிறான்
உழவனின் உபகாரியான
காளைகளும் காணாமல் போய்விட்டன
தமிழன், தமிழ், வேட்டி, தமிழர் திருநாள்
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே
உச்சரிக்கும் சம்பிரதாய சொற்களாகி விட்டன

அதிகாலை எழுந்து வாசலில்
சாணம் தெளித்து கோலமிட்டு
புதுப்பானையில் புத்தரிசி பொங்கலிட்டு
மாடுகளை அலங்கரித்து
மஞ்சள், கரும்பு, மாவிலை தோரணத்துடன்
கதிரவனை வணங்கி வரவேற்று கொண்டாடிய
தமிழனின் பொங்கல் போய் விட்டது

அடுக்குமாடி குடியிருப்பில்
அடுத்தவருக்கு தெரியாமல்
எரிவாயு அடுப்பில் பொங்குகிறது
தமிழனின் தமிழ் பொங்கல்
அதனாலென்ன...!
நாமும் சொல்வோம்...!
ஹேப்பி பொங்கல்...!

= வை.ரவீந்திரன்  
 


Tuesday 6 January 2015

வெள்ளைக் கொடியில் படிந்த ரத்த துளிகள்

வௌ்ளைக் கொடி ஏந்தி வந்த
வீரா்கள் வீழ்த்தப்பட்டனர்
கொடியில் படிந்த ரத்தத் துளிகளும்
உறைந்து நாளாகி விட்டன
நெஞ்சம் நிமிர்த்தி நின்ற
வேங்கைகளும் வதைக்கப்பட்டன
ஏதுமற்ற ஏதிலிகளாய்
எல்லோரும் துரத்தப்பட்டனர்

பச்சிளம் பாலகனின் பசியாற்றி
புல்லட்டுகள் இரை எடுத்துக் கொண்டன
 நந்திக்கடலும் குருதி பூசி
செந்நிறமாகிக் கிடக்கிறது
யுத்தம் முடிந்து விட்டதாக
அறிவித்த பேரொலிகள் அடங்கி விட்டன
வேதனை முனகலும் வலிகளின்
கதறலும் காற்றில் கரைந்து விட்டன
காய்ந்து போன கண்ணீரில்
சமாதிகளும் மவுனித்து விட்டன   

சம்பிரதாய போர் செய்திகளும்
உருவம் மறைத்து அருவமாகி விட்டன
சோலைவனமாக பூத்துக் குலுங்கி
பாலைவனமாகி விட்ட பூமியில்
புதிதாக சில கூக்குரல்கள்
பூபாளம் இசைத்து வலம்வருகின்றன

சொந்த மண்ணில் சொந்தம்
இழந்து நிற்கும் ஏதிலிகளிடம்
பசப்பு வார்த்தைகள்
பல்லிளித்து வட்டமிடுகின்றன
வெந்து தணிந்த கரங்களில்
வைக்கப்பட்ட வாக்கு ஆயுதம்
என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிடும்?
கேள்விகள் தொக்கி நிற்கிறது
வழியற்றவா்களின் விழிகளில்.....

= வை.ரவீந்திரன்  



வளமாக்கும் சிக்கனம்

வரலாறுகளில்
தகராறுகள் உருவாவது
சொல் சிக்கனம்
சிதைந்த தருணங்களில்

குடும்பங்களில்
மன பேதங்கள் உருவாவது
பொருள் சிக்கனம்
சிதைந்த தருணங்களில்

வயல்கள் எல்லாம்
மனைகளாக உருவாவது
நீர் சிக்கனம்
சிதைந்த தருணங்களில்

சிதையாத சிக்கனம்
வாழ்வை வளமாக்கும்
இலக்கணம்

= வை.ரவீந்திரன்