Wednesday 23 September 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 21

ரசிகர்களை மகிழ்விப்பதை கடந்து எதிர்காலத்தை சரியாக கணித்து சொல்வதோடு மக்களுக்கு தேவையான விஷயங்களையும் கூறும் கலைஞனே காலத்தை வென்று நிலைத்து நிற்பான். அதற்கு மிகச் சிறந்த ஒரே உதாரணம் இவர்தான்.  "நாட்டுக்கு சேவை செய்ய நாகரீக கோமாளி வந்தேனய்யா..." என தன்னைத் தானே கூறிக் கொண்டவர். அவர்தான், இறந்து அறுபது ஆண்டுகளை கடந்தும் நிலைத்து நிற்கும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். 


நாகர்கோவிலில் பிறந்த இவர், ஏழ்மையால் நாடக கொட்டகையில் தின்பண்டங்கள் விற்று வாழ்க்கையை தொடங்கி, பின்னாளில் சொந்தமாக நாடக கம்பெனியையே நடத்தும் அளவுக்கு உயர்ந்தார். வில்லுப் பாட்டுக்காரராகவும் சில காலம் காலம் தள்ளியவர், என்எஸ் கிருஷ்ணன். தமிழ் சினிமா பிரபலங்கள் பலருக்கும் முகவரி தந்த 'சதிலீலாவதி'தான் இவருக்கும் முதல் படம். ஆனால், முதலில் வெளியானது 'மேனகா' என்ற படம். 1935ம் ஆண்டு முதல் சுமார் 20 ஆண்டுக்குள் பாகவதர் காலம் தொடங்கி எம்ஜிஆர், சிவாஜி காலம் வரை 150 படங்களில் நடித்து விட்டார்.


1940களில் தமிழ் திரை உலகை உலுக்கிய லட்சுமி காந்தன் கொலை வழக்கில் சிக்கி இரண்டரை ஆண்டுகள் சிறையில் இருந்தபோதும் மனம் தளராதவர், என்எஸ்கே. அந்த வழக்கில் சிக்கிய அன்றைய சூப்பர் ஸ்டார் எம்கே தியாகராஜ பாகவதரே நிலை குலைந்து அதற்கு பின் படங்களில் பெரிதாக தலைகாட்ட வில்லை. ஆனால், என்எஸ்கே தளரவில்லை. அதுதான் அவரது எதையும் தாங்கும் குணம். சிறை மீண்ட பிறகு தான் அவருக்கு கலைவாணர் பட்டம் கொடுக்கப்பட்டது. கொடுத்தவர் நாடக தந்தை பம்மல் சம்பந்த முதலியார்.


என்எஸ்கே அவரது மனைவி டி.ஏ. மதுரம் இருவரும்  இணைந்து நடித்த அனைத்து காமெடி ஸீன்களுமே தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ரகங்கள் 1936ம் ஆண்டில் வெளியான 'வசந்த சேனா' படத்தில் ஜோடியாக அறிமுகமான மதுரம், பின்னர், நிஜத்திலும் என்எஸ் கிருஷ்ணன் ஜோடியாகி விட்டார்.



எதிர்ப்பவரின் மனம் புண்படாமல் படங்களில் பகுத்தறிவு புகட்டியவர். சமூக சீர்திருத்த கருத்துகளை நாசூக்காக சொன்னவர். பராசக்திக்கு முன்பே அண்ணா கதை வசனத்தில், இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய 'நல்ல தம்பி' (1949) படத்தின் தயாரிப்பாளர் என்எஸ் கிருஷ்ணன். 


இந்த படத்தில் இவர் பாடும் "விஞ்ஞானத்த வளக்க போறேண்டி..." பாடலை முழுமையாக கேட்டால் போதும் அவரது எதிர்கால தீர்க்க சிந்தனையை அறியலாம். கிரைண்டர், டெஸ்ட் டியூப் பேபி, அணு மின்சாரம் என ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு பிந்தைய விஞ்ஞான வளர்ச்சிகளை நான்கு நிமிட பாடலில் என்எஸ்கே பிட்டு பிட்டு வைத்திருப்பார். "மனுஷன மனுஷன் ஏய்ச்சி பிழைச்சது அந்தக் காலம்..." பாடல் இவரது முற்போக்கு சிந்தனையை சொல்லும். அந்த படத்திலேயே அவரது கிந்தனார் கதாகாலட்சேப பாடல், நையாண்டியுடன் கூடிய அக்மார்க் சமுதாய  விழிப்புணர்வு ரகம்.



இதுபோல, "சிரிப்பு... சிந்திக்க தெரிந்த மனித இனத்துக்கே சொந்தமான கையிருப்பு..." பாடலில் மனிதர்களின் சிரிப்பின் வெரைட்டிகளை என்எஸ்கே பாடியிருப்பார். அது யாருமே சிந்திக்காத விஷயம். 'முதல் தேதி' படத்தில் "ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்... இருபத்தொண்ணுல இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்..." பாடலில் மாத சம்பளக்காரனின் நிலையை அப்போதே தெளிவாக சொல்லியிருப்பார், என்எஸ் கிருஷ்ணன்.

'அம்பிகாபதி' படத்தில் "கண்ணே உன்னால நான் படும் கவலை கொஞ்சமா...." என டிஏ மதுரத்தை சீண்டியபடி, தங்கமே... தேனே... என வரிக்கு வரி நையாண்டியுடன் பாடும் பாடல் எவர்கிரீன் காதல் நகைச்சுவை ரகம். 


தமிழில் வழக்கொழிந்து போன லாவணி வகை பாடல் ஒன்றை 'சக்கரவர்த்தி திருமகள்' படத்தில் எம்ஜிஆருடன் பாடியிருப்பார் என்எஸ்கிருஷ்ணன். அதில் ஒரு வரி "உலகிலே மிக பயங்கரமான ஆயுதம் எது... கத்தி.. இல்ல... கோடாரி... இல்ல... மனிதனோட நாக்கு...". 



எம்ஜிஆரின் வளர்ப்பு தந்தையாக 'மதுரை வீரன்' படத்தில் நடித்திருப்பார், என்எஸ்கே. இவர் மீது எம்ஜிஆருக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஏழைகளுக்கு உதவும் குணம் எம்ஜிஆரிடம் குடியேறியதற்கு காரணமே என்எஸ்கே தான். அவரது வள்ளல் தன்மை தான் எம்ஜிஆரையும் தொற்றியது.

தயாரிப்பாளர், நடிகர், பாடகர் மட்டுமல்ல என்எஸ் கிருஷ்ணன் நல்ல வசனகர்த்தாவும் கூட. அவரது காமெடி டிராக்குகளை அந்தக்கால தயாரிப்பாளர்கள் விலை கொடுத்து வாங்கி பயன் படுத்தியுள்ளனர். இது மட்டுமல்ல, சிவாஜி நடித்த பணம் (1952) மற்றும் மணமகள் (1951) படங்களையும் இயக்கி இருக்கிறார், என்எஸ்கே. இரண்டுக்கும் கதை வசனம் கலைஞர் கருணாநிதி.


1937ம் ஆண்டு பாகவதரின் அம்பிகாபதி படத்திலும் 1957ல் வெளியான சிவாஜியின் அம்பிகாபதி படத்திலும் நடித்திருக்கிறார். இதுபோல 1939ல் வெளியான மதுரை வீரன் படத்திலும் 1956ம் ஆண்டு வெளியான எம்ஜிஆரின் மதுரை வீரன் படத்திலும் நடித்திருக்கிறார், கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன்.

தமிழ் சினிமாவின் முதல் திராவிட இயக்க ஆதரவாளர் என்எஸ்கே தான். திமுகவுக்காக பிரசாரமும் செய்திருக்கிறார். அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் என மூவருமே மிகுந்த மரியாதை வைத்திருந்த என்எஸ்கே 'பணம்' படத்தில் பாடிய பாடல் ஒன்று, "தீனா மூனா கானா...." என தொடங்கும்.

ஆனால், திராவிட ஆட்சி அமைவதற்கு பத்து ஆண்டுகளுக்கு  முன்பே கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் மறைந்து விட்டார். சிரிப்பு மருத்துவர், இந்தியாவின் சார்லி சாப்ளின் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1957ம் ஆண்டில் இறந்தபோது அவரது வயது 50ஐ கூட தொடவில்லை. வெறும் 48 தான்.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Thursday 10 September 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 20

இந்தியாவிலேயே முதன் முதலாக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்த முதல் திரை பிரபலம். தமிழகத்தின் முதல் பெண் எம்எல்சி. 1935லேயே ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர். இந்த பெருமைகளுக்கு சொந்தக்காரர், கேபி சுந்தராம்பாள். இசை ரசிகர்களின் நாவிலும் நினைவிலும் நிலைத்திருக்கும் பெயர். சிறு வயதில் இருந்தே கணீர் குரலுக்கு சொந்தக்காரரான சுந்தராம்பாளின் பாடலை கேட்க ஊரே கூடுவது வழக்கம். கோயில் விழாவில் பாடி வந்த அவர், சொந்த ஊரான கொடுமுடியில் இருந்து உறவினர் வீடு இருந்த  கரூருக்கு ரயிலில் செல்லும் போதும் பாடுவது வழக்கம். அப்படி ஒருமுறை ரயிலில் நாடக நடிகர் ஒருவரின் கவனத்தில் பட்டு நாடக துறைக்கு வந்தார்.


9 வயதிலேயே இலங்கை, தமிழ்நாடு என நாடக குழுக்களுடன் சுற்றி வந்த அவர், நாடக இடைவேளை சமயத்தில் என்டர்டெய்னராக பாட ஆரம்பித்து, பின்னாளில் வேடங்கள் போட  துவங்கினார். அவரது வள்ளி திருமணம், நல்ல தங்காள், கோவலன் போன்ற நாடகங்கள் எல்லாம் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றன. கூடவே, கேபி சுந்தராம்பாள் - கிட்டப்பா ஜோடியும் மக்கள் மனதில் இடம் பிடிக்க, 1927ம் ஆண்டில் நிஜத்திலும் தம்பதியானார்கள்.



இருவருமே மிக தீவிரமான சுதந்திர போராட்ட தியாகிகள். நாடகங்களின் நடுவே தேசபக்தி காட்சிகளை சேர்த்ததோடு சுதந்திர வேட்கையூட்டும் பாடல்களையும் தனியாக பாடி  வெளியிட்டனர். எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே, இசை ஆல்பம் போட்ட பெருமை இவர்களையே சேரும். சுந்தராம்பாளை போலவே, கிட்டப்பாவின் குரலும் எட்டுக்கட்டை சுருதியை கொண்டது. இருவரின் பாடல்களுக்கு மக்களிடம் அவ்வளவு மவுசு. 


யார் கண்பட்டதோ அற்ப ஆயுளிலேயே கிட்டப்பா காலமானார். 1933ம் ஆண்டில் அவர் இறந்தபோது வயது 28. கேபிஎஸ் வயது 25. அதன்பிறகு நடிப்பதை துறந்து வெள்ளை கதராடை, நெற்றி நிறைய விபூதி என தவ வாழ்க்கையில் புகுந்தார், கேபி சுந்தராம்பாள். இந்த சமயத்தில்தான், நந்தனார் பட வாய்ப்பு அவரை தேடி வந்தது. அவர் மறுக்க, தயாரிப்பாளரோ விடாப்பிடியாக நெருக்க, கடும் நிபந்தனைகளை சொல்லி தவிர்க்க பார்த்தார், கேபிஎஸ்.



எந்த ஆணுடனும் ஜோடி சேர மட்டேன். சம்பளமாக ஒரு லட்சம் வேண்டும். இது மாதிரியான நிபந்தனைகளையும் ஏற்றார் தயாரிப்பாளர். அந்த அளவுக்கு நாடகம், சுதந்திர போராட்டம் மூலமாக புகழ் பெற்றிருந்தார்,  கேபிஎஸ். நந்தனார் படத்துக்காக 1935லேயே ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினார், சுந்தராம்பாள். அப்போது தங்கம் விலை சவரனுக்கு 13 ரூபாய். 


நந்தனாரில் ஆண் வேடமிட்டு நடித்த கேபிஎஸ், தனது 30 ஆண்டு திரை வாழ்க்கையில் சொற்ப எண்ணிக்கையிலேயே படம் நடித்தாலும் வெண்கலக் குரலால் என்றென்றும் நிலைத்திருக்கிறார். தமிழ் மூதாட்டி அவ்வையார் என்றால் கேபி சுந்தராம்பாள் முகம்தான் அனைவருக்கும் நினைவில் வரும். அவ்வையார், மணிமேகலை, மகாகவி காளிதாஸ், திருவிளையாடல், கந்தன் கருணை, காரைக்கால் அம்மையார் என தான் நடித்த படங்களில் தனது பாடல்களால் ரசிகர்களை கட்டிப் போட்டவர்.



திருவிளையாடல் படத்தில் முருக கடவுளுடன் விவாதம் செய்து, "ஞானப் பழத்தை பிழிந்து..." என பக்தி ரசத்தை பாடலில் பிழிந்து தந்த கேபிஎஸ், அடிப்படையில் ஒரு முருக பக்தை. "பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா...!" பாடல் தொடங்கி மகாகவி காளிதாஸ் படத்தில் "சென்று வா மகனே செனறு வா, அறிவை வென்று வா மகனே வென்று வா...", "காலத்தில் அழியாத காவியப் பொருள் என்று...", காரைக்கால் அம்மையார் படத்தில் "தக தக தக தக தகவென ஆடவா... சிவ சக்தி சக்தி சக்தி என்று பாடவா.." என சிவ தாண்டவ பாடல், திருமலை தெய்வம் படத்தில் "ஏழுமலை இருக்க எமக்கென்ன மனக்கவலை..." என கேபிஎஸ் பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தால் அழழியாத காவிய கீதங்கள்.


கலைஞர் கருணாநிதி வசனத்தில் சிலப்பதிகார கதையை அடிப்படையாக கொண்டு தயாரித்த 'பூம்புகார்' படத்தில் சமண துறவி கவுந்தியடிகளாக நடித்திருப்பார். கோவலனுடன் படகு பயண காட்சியில், "வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம், மானிடரின் மனதினிலே மறக்கவொண்ணா வேதம்...", என்ற பாடலும் "தப்பித்து வந்தானம்மா, தனியாக நின்றானம்மா.." பாடலும் மனித வாழ்க்கையை சொல்பவை. 

தீவிர ஆன்மிகவாதியான இவர், பூம்புகார் படத்தில் "அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது..." என்ற வரிகளையே, விடாப்பிடியாக நின்று "நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது..." என கருணாநிதியை மாற்ற வைத்ததாக கூறுவது உண்டு.

பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் குருவான சத்திய மூர்த்தி தான் கேபி சுந்தராம்பாளுக்கும் அரசியல் குரு. இந்தியா சுதந்திரம் பெறும் முன்னும் சரி. பின்னும் சரி. காங்கிரஸ்  கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்தவர். இதனாலேயே, சுதந்திரம் கிடைத்ததும் சென்னை மாகாணத்தில் அமைந்த முதல் சட்டப்பேரவையில் உறுப்பினர் ஆனார். 



ஆம் 1951ல் சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினராக (எம்எல்சி) இருந்திருக்கிறார், கே.பி.சுந்தராம்பாள். தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்து பேரவைக்குள் நுழைந்த முதல் திரை பிரபலம் இவர்தான். தமிழகத்தின் முதல் பெண் எம்எல்ஏ என்ற பெருமைக்கும் இவரே சொந்தக்காரர். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என மூன்று முதல்வர்களால் மதிக்கப்பட்டவர்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

Monday 7 September 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 19

தமிழ் சினிமாவின் முதல் சமூக, குடும்ப கதைகளின் வெற்றி இயக்குநர், இன்றைய டிவி சீரியல்களின் சிக்கலான அழுகாச்சி கதைகளுக்கு முன்னோடி, இந்த கேள்விகளை எழுப்பினால் பதிலாக வந்து நிற்பவர் இயக்குநர் பீம்சிங். ஆந்திராவை பூர்வீகமாக கொண்டாலும் சென்னையில் படித்து வளர்ந்த இவர், சினிமாவில் அடியெடுத்து வைத்தது எடிட்டராகத்தான். அதாவது படத்தொகுப்பாளர். "பராசக்தி" படத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன், பஞ்சுவிடம் அசிஸ்டென்டாக சேர்ந்து உதவி இயக்குநராக உயர்ந்தவர்.


"பராசக்தி" படத்தில் கலைஞர் கருணாநிதியின் வசனங்களை உதவி இயக்குநராக சிவாஜி கணேசனுக்கு சொல்லிக் கொடுத்தவர், இவர்தான். இந்த பழக்கம் தான் பின்னாளில் இருவரும் இணைந்து தமிழ் சினிமாவின் கதைப் போக்கையே மாற்றிப் போட உதவியது. இயக்குநரானதும்  பீம்சிங் இயக்கிய "அம்மையப்பன்", "ராஜா ராணி" என முதல் இரண்டு படங்களுக்கும் கதை வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி. ஆனாலும் பீம்சிங்கை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது "பதி பக்தி" படம்தான். அதன் பிறகு, இவருக்கு ஏறுமுகம். மன்னர் கதைக்கள டைப் படங்களாகவே வெளியாகி வந்த தமிழ் சினிமாவை குடும்ப கதைகளின் பக்கம் திருப்பியதில் பீம்சிங்கின் பங்கு அதிகம்.

'ப'கர வரிசை டைட்டில்களில் பீம்சிங் கொடுத்த சுமார் 20 படங்களில்,  பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பாசமலர், பாலும் பழமும், பாவ மன்னிப்பு, பார் மகளே பார், பார்த்தால் பசி தீரும், பச்சை விளக்கு என ஹிட்டடித்த படங்கள் ஏராளம். 1960களில் பீம்சிங், சிவாஜி, கண்ணதாசன், எம்எஸ்வி ராமமூர்த்தி கூட்டணி வெற்றிக் கூட்டணியாகவே வலம் வந்தது. "தாழையாம் பூ முடித்து தடம் பார்த்து நடை நடந்து..."

"வந்த நாள் முதல் இந்த நாள் வரை...", "எல்லோரும் கொண்டாடுவோம்..." என எவர்கிரீன் பாடல்களை கொண்ட பாவ மன்னிப்பு படத்தின் கதையே வித்தியாசமானது. மத நல்லிணக்கத்தை சொல்லும் அந்த கதை, நடிகர் சந்திரபாபுவினுடையது. அதை மெருகேற்றியவர் பீம்சிங். இன்று வரை அண்ணன் தங்கை பாசத்துக்கு உதாரணம் காட்டப்படும் "பாசமலர்" வேறு மாதிரியான கதை. புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கும் டாக்டர், அவரிடம் பணிபுரியும் நர்ஸ் இடையிலான காதலை சொல்லும் "பாலும் பழமும்". இப்படி மூன்று வெவ்வேறு கதைகளைக் கொண்ட படங்களை ஒரே ஆண்டில் கொடுத்து மூன்றையும் வெற்றிப் படங்களாக்கியவர், பீம்சிங்.

இந்த படங்களின் "மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்...", "மலர்ந்தும் மலராத பாதி மலர் போலே...", "என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்...", "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...", "காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்..." உள்ளிட்ட அனைத்து பாடல்களுமே 60 ஆண்டுகளை கடந்து இன்றும் ரசிகர்களின் மனதை இனிமையாக்குபவை.



இவை தவிர, பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பார் மகளே பார் என சிவாஜி கணேசனின் நடிப்பு தாகத்துக்கு சரியான தீனி போட்டவர் பீம்சிங் என்றே சொல்லலாம். "ஒரு இயக்குநர் என்பவர் நல்ல எடிட்டராகவும் இருக்க வேண்டும்" என்பது பீம்சிங் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.



தனது வெற்றிப் படங்களை எல்லாம் இந்தி, தெலுங்கு என ரீமேக் செய்வது இவரது வழக்கம். அதன்படி, 25 ஆண்டு இயக்குநர் வாழ்க்கையில் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் படங்களை இயக்கி இருக்கிறார். "களத்தூர் கண்ணம்மா" படத்தின் இயக்குநரும் இவரே. இந்த படத்தின் மூலமாக உலக நாயகன் கமலஹாசனை முதன் முதலில் திரையில் அறிமுகம் செய்த பெருமை பீம்சிங்கையே சேரும். 



குடும்ப படங்கள் மட்டுமல்ல, கிரைம் கலந்த முழு நீள நகைச்சுவை படத்தையும் தன்னால் தர முடியும் என "சாது மிரண்டால்" படம் மூலம் நிரூபித்தவர். இந்த படத்தின் சுட்ட ஸீன்கள் தான், டாக்சியில் பிணத்தோடு வடிவேலு பயணம் செய்யும் நகைச்சுவை.

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்" கதையை படமாக்கி இருக்கிறார், பீம்சிங். இந்த படத்துக்காக நடிகை லட்சுமிக்கு ஊர்வசி விருது கிடைத்தது. கருணாநிதியின் கைவண்ணத்தில் தனது இயக்குநர் பாதையை தொடங்கிய பீம்சிங்கின் கடைசி படத்துக்கு கதை  ஜெயகாந்தன். அந்த படம், "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" (1978).

இதில் தனது மகன் பி.கண்ணனை ஔிப்பதிவாளராக, திரை வாரிசாக பீம்சிங் அறிமுகம் செய்து வைத்தார். இந்த கண்ணன் வேறு யாருமல்ல. "பாரதிராஜாவின் கண்கள்" என போற்றப்படும் பாரதிராஜா இயக்கிய படங்களின் ஆஸ்தான ஔிப்பதிவாளரே தான். 


படத் தொகுப்பாளர், கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகம் இருந்தாலும் படத் தொகுப்புக்கு முக்கியத்துவம் அளித்த பீம்சிங்கின் பெயரை அவரது மற்றொரு மகன் தமிழ் சினிமாவில் காப்பாற்றி விட்டார். அவர் படத் தொகுப்புக்காக விருதுகளை பெற்ற பிரபல எடிட்டர் பி.லெனின். 

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

Thursday 3 September 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்...18

சினிமாவில் அம்மா, அப்பா, அண்ணன் இப்படி சில வேடங்களை பேசும்போது ரசிகர்கள் மனதில் சிலரது பெயர்கள் மட்டுமே வந்து போகும். அந்த வகையில் அம்மா வேடம் என்றாலே தமிழ் ரசிகர்களினா நினைவுக்கு வருபவர் பண்டரிபாய். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் வரை அம்மாவாக நடித்தவர். ஆனால், அவரது சினிமா பின்னணியை புரட்டிப் பார்த்தால் ஏராளமான ஆச்சர்ய தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. 



அடிப்படையில் அவர் ஒரு கன்னட நடிகை. சிறு வயதிலேயே மராத்தியில் நீண்ட நேரம் கதாகாலட்சேபம் செய்யும் அளவுக்கு திறமைசாலி. அதனாலேயே 10 வயதில் கன்னட சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறார். தமிழில் அவரது அறிமுகம் 14 வயதில். படம், 3 ஆண்டுகள் ஓடி சாதனை படைத்த தியாகராஜ பாகவதரின் "ஹரிதாஸ்" (1944). அந்த படத்தில் சிறிய வேடம்தான். பெண் பித்தனாக ஹரிதாஸ் துரத்தும் பெண்களில் ஒருவராக நடித்திருந்தார்.


ஆரம்பத்தில் தமிழே தெரியாது. ஏவிஎம் ஏற்பாட்டில் தமிழ் கற்றுக் கொண்ட இவர், பின்னாளில் கலைஞர் கருணாநிதியின் வசனத்தை பேசும் அளவுக்கு தமிழை தெளிவாக கற்றுக் கொண்டார். அதனாலேயே தேன்மொழியாள் என்றும் அவரை அழைப்பதுண்டு. தமிழ், தெலுங்கு, மராத்தி, இந்தி, கன்னடம் என ஏழு மொழிகளில் 1500க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் அவரது தமிழ் படங்கள் நூறுக்குள் தான். ஆனால், அனைத்து மொழிகளிலுமே சொந்த குரலில்தான் பேசி, நடித்திருக்கிறார், பண்டரிபாய்.




1950களில் நாயகி அந்தஸ்துக்கு உயர்ந்த பண்டரிபாய், அன்றைய இரண்டாம் நாயகர்களான சித்தூர் நாகையா, பிரேம் நசீர், டிஆர் மகாலிங்கம்  போன்றவர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். சிவாஜி கணேசன் அறிமுகமான முதல் படமான "பராசக்தி" படத்தின் கதாநாயகி பண்டரிபாய் தான். அதன்பிறகு, சிவாஜி கணேசனின் அடுத்தடுத்த படங்களான "திரும்பிப்பார்", "அந்த நாள்" படங்களுக்கும் பண்டரி பாய்தான் ஹீரோயின். கன்னட ஸ்டார் ராஜ்குமாரின் முதல் படமான "பேடர கன்னப்பா" படத்தின் நாயகியும் இவரே. இருவரின் முதல் படங்களிலும் ஜோடியாக நடித்த பண்டரிபாய், இருவருக்குமே தாயாகவும் பின்னாளில் நடித்தார், அதுதான் சினிமா உலகம்.


1960களில் முழு நேர தாய் வேடத்துக்கு மாறிய பண்டரிபாய், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அம்மா ஆனார். தெய்வமகன், கவுரவம், பாவை விளக்கு, இரு துருவம், இரும்புத்திரை, ராஜா, டாக்டர் சிவா, வசந்த மாளிகை, அவன் ஒரு சரித்திரம் என அம்மாவாக நடித்த சிவாஜி படங்கள் ஏராளம். தெய்வ மகனில் அப்பா சிவாஜிக்கு ஜோடியாகவும் மகன்களான இரண்டு சிவாஜிக்கு தாயாகவும் 3  சிவாஜிகளுக்கு இணையாக சிறப்பாக நடித்திருப்பார். இதுபோல, "கவுரவம்" படத்தில் வக்கீல் ரஜினிகாந்த் சிவாஜிக்கும் மகன் கண்ணன் சிவாஜிக்கும் இடையே பண்டரிபாயின் நடிப்பு ஆஸம்.



எம்ஜிஆர் என்றாலே தாய்க்குலம், தாய்ப்பாசம் இப்படி தோன்றும் எண்ணத்துக்கு வலு சேர்த்தவர் பண்டரிபாய். தெய்வத்தாய், தாயின் மடியில், குடியிருந்த கோயில், அடிமைப் பெண், எங்க வீட்டுப் பிள்ளை, காவல்காரன், சந்திரோதயம், அன்னமிட்ட கை, இதயக்கனி என எம்ஜிஆருக்கு தாயாக நடித்த படங்களின் பட்டியல் மிக நீளம். பெரும்பாலான படங்களை பார்த்தால் டைட்டிலே தாயை பற்றியதாகத்தான் இருக்கும். "தாயின் மடியில் தலை வைததிருந்தால் துயரம் தெரிவதில்லை...", "தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை...", தெய்வத்தாய் படத்தில் சீர்காழி கோவிந்த ராஜன் பாடும் டைட்டில் ஸாங்.. என பண்டரி பாய் அம்மா வேடத்தில் நடித்த எம்ஜிஆர் படங்களில் தாயின் புகழ் பாடும் பாடல்களும் அதிகம். இத்தனைக்கும் எம்ஜிஆரை விட 11 வயது இளையவர், பண்டரிபாய்.



1970, 1980களில் கன்னட படங்களில் ராஜ்குமாருக்கு தாயாக நடித்த பண்டரிபாய், தமிழிலும் ரஜினிக்கு தாயாக நடித்திருக்கிறார். "அம்மா என்றழைக்காத உயிரில்லையே..." என்ற 'மன்னன்' பாடலின் அம்மா, பண்டரிபாய் தான். சினிமாவுக்கு பிறகு கன்னட சின்னத்திரையில் நுழைந்த பண்டரிபாய், 2000 வரையிலும் கன்னட சீரியல்களில் நடித்திருக்கிறார்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்