Monday 28 February 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -33

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத வசனங்கள் பல உண்டு. அவற்றை பட்டியலிட்டால் டாப் 10 ரகங்களுக்குள் இந்த வசனங்கள் நிச்சயமாக வரும். 

"சபாஷ்... சரியான போட்டி...", "அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி...", "அண்டாக்கா கஸம் அபுக்கா குஸூம் திறந்திடு சீஸே..." இந்த வசனங்களுக்கு எல்லாம் சொந்தக்காரர், வில்லன் நடிகர் பி.எஸ்.வீரப்பா. நம்பியார் காலத்துக்கு முந்தைய அரசர் கால கதை களங்களில் அதகளம் செய்தவர்.



கம்பீரமான உருவம், அசால்ட்டான பார்வை, கணீர் குரலில் மிக அலட்சியமான வசன உச்சரிப்பு, அட்டகாசமான வில்லத்தன சிரிப்பு. இப்படி வில்லனுக்கே உரித்தான இலக்கணத்தை வகுத்தவர் இவரே. இவரது ஹஹா ஹஹா ஹஹா.. என்ற வெடிச் சிரிப்பே பயங்கரமானது. கேட்டாலே அச்சமூட்டும் ரகம்.



படத்தில் எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போடும்போது யார் ஜெயிப்பார் என்ற பரபரப்பை கூட்டும் விதமாகவே இருக்கும். இணையான வில்லன் ஒருவர் இருந்தால் தான் ஒரு ஹீரோவுக்கு சிறப்பு. அது போன்ற ஒரு வில்லன் பி.எஸ்.வீரப்பா.



கொங்கு மண்டலத்தில் காளைகளுக்கு பெயர் பெற்ற காங்கேயத்தில் பிறந்து பொள்ளாச்சியில் தாத்தா வீட்டில் வளர்ந்த பி.எஸ்.வீரப்பா, சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி ஒரு நாடகத்தை பார்க்க வந்த கே.பி.சுந்தராம்பாள், இவரது நடிப்பை பாராட்ட, அவரிடமே சிபாரிசு கடிதம் பெற்று சென்னை வந்து சினிமாவில் அறிமுகமானார் பி.எஸ்.வீரப்பா. இவரை அறிமுகம் செய்தவர் அன்றைய பிரபல இயக்குநரான வெள்ளைக்காரர் எல்லீஸ் ஆர்.டங்கன்.


(எல்லீஸ் ஆர்.டங்கன் பற்றி அறிய...  http://thileeban81.blogspot.com/2020/08/15.html?m=1)


வீரப்பாவின் முதல் படம் 1939ல் வெளியான 'மணிமேகலை'.


இதே காலகட்டத்தில் குட்டி குட்டி வேடங்களில் தலைகாட்டிய எம்ஜிஆருடன் அறிமுகம் ஏற்பட்டு அது மிக நீண்ட கால நட்புறவாக மாறியது. நாயகனாக எம்ஜிஆர் நடிக்க துவங்கிய பின் அவருடன் ஏராளமான படங்களில் பி.எஸ்.வீரப்பா நடித்திருக்கிறார்.


தமிழின் முதல் முழு நீள கலர் படமான 'அலிபாபாவும் 40 திருடர்களும்', எம்ஜியாரின் சொந்த தயாரிப்பான 'நாடோடி மன்னன்', எம்ஜியாரின் அண்ணன் எம்.ஜி. சக்கரபாணி தயாரித்து இயக்கிய 'அரச கட்டளை', 'சக்கரவர்த்தி திருமகள்', 'மகாதேவி', 'மருதநாட்டு இளவரசி', 'கலையரசி', 'மன்னாதி மன்னன்', 'விக்கிரமாதித்தன்' என எம்ஜிஆருடனான பி.எஸ்.வீரப்பாவின் பட பட்டியல் மிக நீளம். 



நாடோடி மன்னனில் எல்லாம் இவர் மிரட்டியிருப்பார். "மார்த்தாண்டனாம் மன்னனாம்...", "சொன்னாலும் புரியாதடா மண்ணாளும் வித்தை...", "நாடாம் நாடு... இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்..."


இந்த வசனங்களை எல்லாம் இவரது உச்சரிப்பில் கேட்பதே மிரட்டல் ரகம். இதுபோல 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தில் முகத்தில் முழு நீள வெட்டுத் தழும்புடன் மிக கொடூரமான திருடனாகவே வாழ்ந்திருப்பார்.



சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். ஆகியோரின் படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார், பி.எஸ்.வீரப்பா. ஜெமினியுடன் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் மிரட்டியிருப்பார். இந்த படத்தில் பத்மினி, வைஜயந்திமாலா இருவரின் போட்டி நடனத்தின் நடுவே இவர் பேசும் வசனம் தான் தமிழ் சினிமா உலகில் சாகா வரம் பெற்ற "சபாஷ் சரியான போட்டி..." 


1960களுக்கு பின், குடும்ப கதை படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். 'ஆலயமணி', 'இரு துருவம்', 'ஆனந்த ஜோதி', 'மீனவ நண்பன்', 'பல்லாண்டு வாழ்க' எல்லாம் அந்த ரகங்கள் தான். அந்தந்த கால கட்டங்களில் அடுத்தடுத்த தலைமுறை நாயகர்களுடனும் திரைப் பயணம் செய்தவர். ஆனாலும் அரசர் கதை படங்கள் தான் பி.எஸ்.வீரப்பாவின் பெயரை கூறுபவை.



எம்ஜிஆர், சிவாஜி மட்டுமல்ல ரஜினி, கமலுடன் 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' (1979) விஜயகாந்துடன் 'கரிமேடு கருவாயன்' (1986) என நடித்திருக்கிறார். அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், வி.என்.ஜானகி, ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் என ஆறு முதல்வர்களுடன் நல்ல அறிமுகம் உடையவர்.



நடிப்புடன், பி.எஸ்.வி. பிக்சர்ஸ் என்ற பெயரில் ஏராளமான தமிழ், இந்தி படங்களையும் தயாரித்திருக்கிறார். 1960களில் தமிழில் பிரபலமாக இருந்த இயக்குநர் கே.சங்கருக்கு முதன் முதலில் அடையாளம் பெற்றுத் தந்த படம் 'ஆலயமணி'. சிவாஜி கணேசன் நடித்த அந்த படத்தை தயாரித்தவர், இவர்தான். இந்த படத்தை இந்தியிலும் தயாரித்தார்.



தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக இருந்த ராமராஜன் இவரது அறிமுகம் தான். ஐந்தாறு ஆண்டுகளுக்கு மேல் துணை இயக்குநராக திரையுலகில் போராடிக் கொண்டிருந்த ராமராஜனை இயக்குநராக உயர்த்தியவர் பி.எஸ்.வீரப்பா. முதன் முறையாக ராமராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய 'மண்ணுக்கேத்த பொண்ணு' (1985) திரைப்படம் இவரது தயாரிப்புதான். பிரபல நடிகராகும் முன் பல வெற்றி படங்களை ராமராஜன் இயக்கி இருக்கிறார் என்பதும் இந்த இடத்தில் கூடுதல் தகவல்.

1958 முதல் 1991 வரை ஏராளமான தமிழ், இந்தி படங்களை பி.எஸ்.வீரப்பா தயாரித்திருக்கிறார். அன்றைய பிரபல இந்தி நடிகர் திலீப்குமார் இவரது நெருங்கிய நண்பர். இவரது வில்லன் சிரிப்புக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நிரந்தர ரசிகர். தமிழ் திரையுலகில் ஏராளமான வில்லன் நடிகர்கள் இருந்தாலும் பி.எஸ்.வீரப்பாவின் "சபாஷ்... சரியான போட்டிக்கு..." முன் யாருமே போட்டி இல்லை என்பதே உண்மை.

(பவளங்கள் ஜொலிக்கும்)

Wednesday 16 February 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -32

தமிழ் திரையுலகில் மிக நீண்ட காலம் கலைப்பயணம் மேற்கொண்டவர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. 1917ல் நாடக நடிகராக நடிப்புலகில் நுழைந்து, 1937ல் சினிமாவில் அடி எடுத்து வைத்தவர். அன்றைய காலத்தில் எல்லாம் பெயருடன் ஊர் பெயரை சேர்த்துக் கொள்வது திரை பிரபலங்களின் வழக்கம். விருதுநகர் கே ராமசாமி, சிதம்பரம் எஸ் ஜெயராமன், திருச்சி லோகநாதன் மாதிரியான வரிசையில் சென்னைக்கு பெருமை சேர்த்தவர். ஆம் இவரது ஒரிஜினல் பெயர், மெட்ராஸ் ஆர். ராதாகிருஷ்ணன். 



எம்.ஆர்.ராதா என்ற பெயரை சொன்னதுமே ஒரு பிம்பம் நம்முடைய  மனதுக்குள் வருமே? அது, இவரது 50  பிளஸ் வயது தோற்றம் தான். சின்ன வயதிலேயே நடிக்க வந்தாலும் 50 பிளஸ் வயதில்தான் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தார். காரணம், மேடை நாடகங்களுக்காகவே தன்னை ஒப்படைத்திருந்தார்.



அரசியல், கடவுள் மறுப்பு கொள்கை, துணிச்சல், சர்ச்சை, நாடகம் இப்படி பல வகைகளில் இவர் பற்றி ஏராளமாக எழுதலாம். மிகச் சிறந்த நடிகர், ஆனால் நிஜத்தில் நடிக்கத் தெரியாதவர். ராணுவத்தில் இருந்த இவரது தந்தை ரஷ்யாவில் உயிரிழந்த நிலையில், பத்து வயதிலேயே நடிக்க வந்து விட்டார்.

வீட்டில் கோபித்துக் கொண்டு, வெளியேறி  சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுமை தூக்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுவனை நடிக்க வைத்தது, ஆலந்தூர் பாய்ஸ் நாடக கம்பெனி. பிரபல நடிகர்கள் பலருக்கும் நாடகம் அடிப்படையாக இருந்தாலும் சினிமாவுக்கு வந்த பின் அங்கு திரும்பிச் சென்றதில்லை. ஆனால், இவர் அந்த ரகம் இல்லை.

1917ல் துவங்கிய 20 ஆண்டு கால நாடக வாழ்க்கைக்கு பின் தனது 30ஆவது வயதில் முதன் முதலில் சினிமாவுக்கு வந்தார், எம்.ஆர்.ராதா. 1937ல் அறிமுகமாகி 'ராஜசேகரன் ஏமாந்த சோனகிரி', 'பம்பாய் மெயில்', 'சந்தன தேவன்', 'சத்யவாணி' என சில படங்களில் நடித்து விட்டு மீண்டும் நாடக உலகுக்கே திரும்பி விட்டார். முழுக்க முழுக்க ஊர் ஊராகச் சென்று மேடை நாடகம் போடுவதிலேயே ஆர்வம் காட்டினார். இவரது நாடகங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ரகங்கள். அதில் ஒன்று தான் 'ரத்தக் கண்ணீர்'. அதை சினிமாவாக்க விரும்பினார். 



இதற்காக, கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து, தனது 45ஆவது வயதில் தமிழ் சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்தார், எம்.ஆர்.ராதா. ஆனால், அந்த படம் பலராலும்  பாராட்டி பேசப்பட்ட அளவுக்கு கமர்ஷியலாக பெரிய லாபம் ஈட்டவில்லை. இதனாலேயே, மேடை நாடகங்களில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார், எம்.ஆர்.ராதா. 


ஆனால், 1950களில் ரசிகர்களிடம் சினிமாத் துறை பெரிய வரவேற்பை பெற்றிருந்ததால், மேடை நாடக கலை தடுமாற்றத்தில் இருந்தது. இதனால் சினிமா உலகுக்கே மீண்டும் திரும்பினார்.  அவருக்கு கை கொடுத்தவர்கள் வி.கே.ராமசாமி, ஏ.பி.நாகராஜன். இப்படியாக 51ஆவது வயதில், தமிழ் சினிமாவில் 3ஆவது இன்னிங்சை துவக்கினார், எம்.ஆர்.ராதா. 



புதிய வளமான துவக்கத்தை ஆரம்பித்து வைத்த படம் 'நல்ல இடத்து சம்பந்தம்'. ஹீரோவான இவர் ஹீரோயின் சவுகார் ஜானகியை டார்ச்சர் செய்யும் வித்தியாசமான கேரக்டர். இந்த படத்தை தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு எம்.ஆர்.ராதா காட்டில் அடைமழை கொட்ட தொடங்கியது. எம்.ஆர்.ராதா மொத்தம் நடித்துள்ள 125 படங்களில் 90% படங்கள், இந்த காலகட்டத்தில் நடித்தவை தான்.



வில்லனாக மிரட்டுவதாகட்டும், காமெடியாகட்டும், காமெடி கலந்த வில்லனாகட்டும் எம்.ஆர். ராதாவுக்கு நிகர் அவர் மட்டும்தான். திரைப்படங்களில் பாடல்களிலும் கூட நடித்திருக்கிறார். 'இருவர் உள்ளம்' (1963) படத்தில் 'புத்தி சிகாமணி பெத்த பிள்ளை...' பாடல் இவர் நடிப்புதான். எம்ஜிஆர், சிவாஜியின் கருப்பு வெள்ளை கால படங்களை எல்லாம் இவர் இல்லாமல் நினைத்து பார்க்கவே முடியாது.



சிவாஜியுடன் 'ஆலயமணி', 'பாகப்பிரிவினை', 'பாலும் பழமும்' என ஏராளம். 1962ல் வெளியான 'பலே பாண்டியா' படத்தில் சிவாஜியுடன் பாடி லூட்டி அடிக்கும் "மாமா  மாப்ளே..." பாடலை இன்றும் பார்த்து ரசிக்கலாம். எம்ஜிஆருடன் 'பெற்றால்தான் பிள்ளையா', 'குடும்பத் தலைவன்', 'பாசம்', 'நீதிக்கு பின் பாசம்' என பெரிய லிஸ்ட் உண்டு.



இந்த இடை விடாத திரை ஓட்டம், 1967ம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதியன்று வாய் தகராறு ஒன்றில் எம்ஜிஆரை துப்பாக்கியால் சுடும் வரை தொடர்ந்தது. அந்த சம்பவத்துக்கு பின், பெரிய அளவில் எம்.ஆர்.ராதாவுக்கு படங்கள் இல்லை.  எல்லாம் முடிந்து 1974ல் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து நடித்த 'சமையல்காரன்' மூலம் ரீ என்ட்ரி கொடுத்தாலும் சொற்ப எண்ணிக்கையிலான படங்களே வாய்த்தன. 



எம்.ஆர்.ராதா இயற்கையிலேயே கோபம் மற்றும் துணிச்சல் அதிகம் உடையவர், வித்தியாசமானவர். ஊர் ஊராக மக்களிடமே நேரடியாக சென்று 5000 நாடகங்களுக்கு மேல் போட்டிருக்கிறார். மேடை நாடக உலகின் சூப்பர் ஸ்டார் இவர் ஒருவரே. ராமாயணத்தை கிண்டல் செய்து 'கீமாயணம்' என்ற பெயரில் இவர் போட்ட நாடகம் சர்ச்சையாகி தமிழக சட்டப் பேரவையில் நாடக தடை மசோதா போடும் வரை போனது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கடைசி வரிசை ரசிகர் வரை வசனம் கேட்கும் வகையில் மிக சப்தமாக வசனம் பேசுவாராம். அதற்காக வெங்காயம், பழைய சோறு என அதிகமாக சாப்பிடுவாராம். அதே நேரத்தில் தனது நாடக கம்பெனி ஆட்களுக்கு நான் வெஜ் கொடுப்பதில் நல்லவர். சமையலிலும் வல்லவர். நாடக மேடையிலேயே பைக் ஓட்டுவது, ரசிகர்களுக்கு முதுகை காட்டியபடியே 15 நிமிடம் வரை இடைவிடாமல், ரசிகர்களுக்கு சலிப்பு தட்டாத வகையில் வசனம் பேசுவது என கலக்கியவர்.

முதலிலேயே சொன்னது போல் இவர் பற்றி ஒவ்வொரு வகையிலும் ஏராளமாக எழுதலாம். இறப்பதற்கு முன்பு கூட, சிங்கப்பூர் மலேசியா என நாடகம் போட்டு விட்டுத்தான் திரும்பி இருந்தார்.



திராவிட இயக்கம், குறிப்பாக பெரியாரின் கடவுள் மறுப்பு நாத்திக கொள்கையில் சமரசம் இல்லாமல் கடைசி வரையிலும் மிகுந்த பிடிப்போடு இருந்தவர் எம்.ஆர்.ராதா. குழந்தைகளுக்கு பழனி, சிதம்பரம், திருப்பதி என வைப்பது போல் தனது மகளுக்கு ரஷ்யா என பெயர் வைத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எம்.ஆர்.ராதா மறைந்தது கூட பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ம் தேதியில்தான் (1979ம் ஆண்டு).

நடிகர்கள் எம்.ஆர்.ஆர். வாசு, ராதாரவி, வாசு விக்ரம், நடிகைகள் ராதிகா, நிரோஷா... இவர்கள் அனைவரும் எம்.ஆர்.ராதாவின் கலையுலக வாரிசுள்

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

Sunday 6 February 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -31

நூற்றாண்டை நெருங்கும் தமிழ் சினிமாவில் 55 ஆண்டு காலம் சத்தமே இல்லாமல் ரசிகர்களை கவர்ந்த ஒருவர் தான் இன்றைய நமது பவளம். பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நிற்கும் அவரை நகைச்சுவை நடிகராகத்தான் பலரும் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் அவரது கலையுலக பின்னணி ஆச்சரியங்களின் குவியல். 

விருதுநகரை பூர்வீகமாக கொண்ட வி.கே.ராமசாமிக்கு சின்ன வயது முதலே நடிப்பில் ஆர்வம். ஆனால், அவரது குடும்பம் வியாபார குடும்பம் என்பதால் அதை கவனிக்கச் சொல்ல, வீட்டை விட்டு பலமுறை வெளியேறி நாடக குழுக்களில் வேஷம் கட்டி இருக்கிறார். தந்தையும் உறவினர்களும் மேற்கொண்ட முயற்சிகளும் அவருக்கு அணை போட முடியவில்லை. தனது சொந்த அண்ணனின் நாடக கம்பெனி தொடங்கி அன்றைய பிரபல நாடக குழுவான பாய்ஸ் கம்பெனி வரை பலவற்றில் நடித்திருக்கிறார், வி.கே.ராமசாமி.

ஒரு முறை, நாடகத்தில் கள்ளச் சந்தை வியாபாரி (1940, 1950களில் பெரு வியாபாரிகள், பண்ணையார்கள், செல்வந்தர்கள் எல்லாம் உணவு தானியங்களை பதுக்கி விற்பது போன்ற கதைகள் தான் அதிகமாக நாடகங்கள், சினிமாக்களாவது சகஜம்) வேடத்தில் 60 வயது பெரியவராக நடித்திருந்தார். அந்த நாடகத்தை பார்த்து இம்ப்ரஸாகிப் போன தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார், அந்த நாடகத்தை சினிமாவாக்க விரும்பி பேச்சு நடத்தியபோது, யாரோ ஒரு பெரியவர் தான் அந்த வேடத்தில் நடித்திருக்கிறார் என்றே நினைத்திருக்கிறார். கடைசியில் மிக சிறு வயது பையன் என்பதை அறிந்து ஆச்சரியமாகிப் போயிருக்கிறார், ஏ.வி.எம். அந்த பையன் வி.கே.ராமசாமி.



அப்படியே 'நாம் இருவர்' என்ற பெயரில் அந்த நாடகத்தை படமாக தயாரித்தபோது பிளாக் மார்க்கெட் சண்முகம் என்ற அந்த 60 வயது வேடத்துக்கு வி.கே.ராமசாமியையே நடிக்க வைத்தார் ஏவிஎம். இதுதான் வி.கே.ராமசாமியின் முதல் திரைப்பட அறிமுகம். அன்றைய ஹீரோ டி.ஆர்.மகாலிங்கம் நாயகனாக நடித்த அந்த படம் வெளியான ஆண்டு 1947. தனது முதல் அறிமுக படத்திலேயே 60 வயது கேரக்டரில் நடித்த வி.கே.ராமசாமிக்கு அப்போது வயது வெறும் 21 தான். 


அதன் பிறகு 55 ஆண்டுகள் தொய்வில்லாமல் தொடர்ந்தது, அவரது திரைப் பயணம். ஆனால், சின்ன வயதுக்கேற்ற தோற்றத்தில் அவர் நடித்ததே இல்லை. தமிழ் திரையுலகில் டி.எஸ்.பாலையா, ரங்காராவ் இவர்கள் இருவரைப் போலவே வி.கே.ராமசாமியும் பருவ வயதிலேயே முதுமை வேடங்களை ஏற்று அதையே தொடர்ந்தவர்.



'நாம் இருவர்' படத்தை தொடர்ந்து எம்.என்.நம்பியார் ஹீரோவாக நடித்த 'திகம்பர சாமியார்'. சிவாஜியின் முதல் படமான 'பராசக்தி' என தொடர்ந்து வயதான பண்ணையார், கள்ளச்சந்தை வியாபாரி மாதிரியான வேடங்களே அவரை பின் தொடர்ந்து வந்தன. ஆனாலும் சலிக்கவில்லை. பண்ணையார், கள்ளச் சந்தை என்றால் வில்லத்தனம் வேண்டாமா? அப்படித்தான் அன்றைய கொடூர வில்லனாகவும் வி.கே.ராமசாமி நடித்தார்.



1960களுக்கு பின் நகைச்சுவை பிளஸ் குணச்சித்திரத்துக்கு மாறினார். அந்த வி.கே.ராமசாமி என்ற பிம்பம்தான் இப்போது வரை அனைவரின் மனதிலும் இருக்கிறது. குணச்சித்திர வேடத்துக்கு மாறிய பின் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், ஜெயலலிதா என 1960களின் திரை பிரபலங்களுக்கு தந்தை அல்லது மாமனாராக வெளுத்து வாங்கி இருப்பார். சிலவற்றில் நகைச்சுவை, சிலவற்றில் சோகம், அவ்வப்போது வில்லன் கோஷ்டி என பலவித கேரக்டர் ரோலில் கலந்து கட்டி அடித்திருப்பார்.



நாகேஷ், மனோரமா, சோ மாதிரியான நகைச்சுவை நடிகர்களுக்கு மட்டுமல்ல கவுண்டமணி, செந்தில் காலத்திலும் காமெடியில் ஈடு கொடுத்திருப்பார். அடுத்த தலைமுறை நாயகர்களான கமல், ரஜினி, பிரபு, கார்த்திக், பாண்டிய ராஜன் என 1980, 1990களிலும் மாதவன், சிம்பு என 2000த்திலும் தொடர்ந்து நின்று விளையாடியவர். 1947ல் அன்றைய ஹீரோ டி.ஆர்.மகாலிங்கத்துக்கு தந்தையாக நடித்தவர், 2000ம் ஆண்டுகளில் குஷ்பூவுக்கு தந்தை, ஜோதிகாவுக்கு தாத்தா என நடித்திருக்கிறார் என்றால் பாருங்கள்.



பட்டிக்காடா பட்டணமா, வீரபாண்டிய கட்டபொம்மன், மாட்டுக்கார வேலன்,  தர்மத்தின் தலைவன், கல்யாண ராமன், வருஷம் 16, அக்னி நட்சத்திரம், அரங்கேற்ற வேளை, டும் டும் டும் என வி.கே.ஆரின் 55 ஆண்டு கால படங்களின் லிஸ்ட் மிக நீளம்.


'மாட்டுக்கார வேலன்' படத்தில் "ஊருக்குள்ள நான் எவ்ளோ பெரிய வக்கீல். நான் செத்துப் போயிட்டேன்னு எவ்ளோ சின்ன செய்தியா போட்டிருக்கான்னு..."  அவர் பேசுற ஸ்டைலே தனி. வசனங்களும் கூட, சில ஸீனுக்கு ஏற்றவாறு அவரே சேர்த்துக் கொள்வதும் உண்டாம்.



1960களில் அடித்த அதே லூட்டியை 1980, 1990களில்  'ஆண்பாவம்' படத்தில் பாண்டியராஜனின் அப்பா வேடத்திலும் 'அக்னி நட்சத்திரம்' படத்தில் ஜனகராஜுடன் சேர்ந்து பலான படத்தை வீட்டில் ஸ்கிரீன் போட்டு பார்க்கும் பெரிய மனுஷன் கேரக்டரிலும்  'அரங்கேற்ற வேளை'யில் பிரபு -ரேவதியுடன் சேர்ந்து கலக்கும் நாடக கம்பெனி ஓனர் வேடத்திலும் அப்படியே பார்த்து ரசிக்கலாம். அதுதான் வி.கே.ராமசாமி. 'அருணாச்சலம்' படத்தில் ரஜினியின் வில்லன்களில் ஒருவர்..! 'வேலைக்காரன்' படத்தில் ரஜினிக்கு தாத்தா...!



ஆரம்ப கால நாடக நடிகர் என்பதால் அவரது குரல் மிகவும் தனித்தன்மையாக இருக்கும். அதோடு அவரது டயலாக் டெலிவரி முறையும் தனித்துவமானது. அதுதான் அவரது ஸ்பெஷல். நடிகர் மட்டுமல்ல, கதாசிரியர் தயாரிப்பாளர் என்ற வேறு பல முகங்களும் வி.கே.ராமசாமிக்கு உண்டு.

பிற்கால பிரபலங்கள் பலருடன் அவர்களது ஆரம்ப காலத்திலேயே அறிமுகமும் நட்பும் இருந்தது. அதில் சூப்பர் ஹிட் புராண படங்களின் இயக்குநர் ஏ.பி.நாகராஜனும் ஒருவர். அவருடன் இணைந்து 1958ல் 'நல்ல இடத்து சம்பந்தம்' என்ற படத்தை தயாரித்திருக்கிறார். அந்த படத்துக்கு கதாசிரியரும் வி.கே.ராமசாமி தான். அப்படியே, பின்னாளில் தனியாகவும் 15 படங்களை தயாரித்திருக்கிறார்.

ஒரு தயாரிப்பாளராக, நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தவர்,  வி.கே. ராமசாமி. அதற்கு முன் இரண்டு முறை திரையில் நுழைந்து சோர்ந்து போன எம்.ஆர்.ராதா நாடகங்களுக்கே திரும்பிய நிலையில், 1950களில் நாடகங்கள் நொடிந்து போக தொடங்கின. அவரது 'ரத்தக் கண்ணீர்' படமும் கமர்சியலாக சரியாக போகவில்லை. இந்த சமயத்தில் தான் 'நல்ல இடத்து சம்பந்தம்' மூலம் எம்.ஆர்.ராதாவுக்கு புது பாதையை வி.கே.ராமசாமி. அந்த படத்தின் கேரக்டர்தான் எம்.ஆர். ராதாவின் அக்மார்க்காகி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு பிசியான நடிகராக இருந்தார். இப்படியாக  வி.கே.ராமசாமி மூலம்  மூன்றாவது இன்னிங்சை எம்.ஆர்.ராதா தொடங்கியபோது அவரது வயது 51. ஆனால் வி.கே.ஆர். வயது 32.

சிவாஜி-பிரபு, முத்துராமன்- கார்த்திக், சிவகுமார்- சூர்யா என அடுத்தடுத்த தலைமுறைகளை பார்த்து 55 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த அவரை, "சினிமாவில் பிழைக்கத் தெரியாத மனிதர்..." என அவரிடமே சிவாஜி சொல்வாராம். உண்மையும் அது தான். 1960களின் பிற்பகுதியில் தான் ஓரளவுக்காவது வி.கே.ராமசாமி பிழைக்கத் துவங்கினார் என்பதே நிஜம்.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்