Thursday 27 July 2023

அம்மா...

ஜூலை 27. 

இதே நாளின் இரவில் தான் இடியாய் வந்தது அந்த செய்தி. தொலைபேசி மட்டுமே இருந்த காலம் அது. ஊரில் இருந்து அண்ணாசாலையில் இருக்கும் அலுவலகம் சென்று அங்கிருந்து அறையில் இருந்த என்னை வந்து சேர்ந்தது, செய்தி.

ஆறு மாதத்துக்கு முன்பு தான், ஒற்றை பையுடன், வெறுங்கையுடன் சென்னைக்கு வந்து சேர்ந்திருந்தேன். அடிக்கடி ஊருக்கு செல்ல முடியாத நிலை. ஆனாலும் கூட, 40 நாட்களுக்கு முன் தான் புற்று நோயுடன் போராடியவரை கலங்கிய விழிகளுடன் ஊருக்கு சென்று பார்த்து விட்டு வந்திருந்தேன். செவியில் அந்த செய்தி விழுந்ததுமே தரை நழுவிச் சென்றது போன்ற உணர்வு.

ஒருவாறாக சமாளித்து, அடுத்து என்ன செய்வது? ஊருக்கு உடனே செல்ல வேண்டுமே. பணம்...? இரவு ஏழு மணிக்கு அலுவலகத்தில் பணம் கடனாக கேட்க முடியுமா? நண்பர்களும் என்னைப்போலவே... ஆனாலும் முயற்சித்தார்கள்.

அந்த சமயத்தில் அலுவலக சர்குலேஷன் கலெக்சன் பணத்தை அறை நண்பர் ஒருவர் வைத்திருந்தார். இரவு வேளையில் மேனேஜரிடம் அனுமதி பெற்று அந்த பணத்தை வாங்கிக் கொண்டு ஊருக்கு கிளம்பியபோது நள்ளிரவை நெருங்கி விட்டது.

பாரீசில் திருவள்ளுவரை பிடித்து, பிறர் அறியாமல் மனதுக்குள்ளேயே அழுது, புலம்பி உறங்காத விழிகளுடன் ஊர் சென்றபோது மறுநாள் மதியத்தை கடந்து விட்டது. அங்கே எல்லாம் முடிந்து விட்டது. 

ஊரில் அண்ணன் இருந்ததால் அவனை வைத்தே எல்லா காரியமும் முடிந்து விட்டது. ஆறு மாதமாக புற்று நோயுடன்  போராடித் தோற்றுப்போன உடல் தாங்காது என்றார்கள். எப்படியோ, எனக்கு உயிரும் உடலும் தந்த அந்த தெய்வத்தின் இறுதி நாளில் அருகில் இருக்கும் கொடுப்பினை வாய்க்கவில்லை.

இருபது ஆண்டுகளில் வாழ்க்கையில் எவ்வளவோ மாற்றங்கள். இன்பம், துன்பம், அதிர்ஷ்டம் என்று பல... ஆனால், கடைசி முகம் பார்க்க முடியாத அந்த துரதிர்ஷ்டம் மட்டும் நெஞ்சு கூட்டுக்குள் துடித்துக் கொண்டே இருக்கிறது, வேறு எவருக்கும் இந்த நிலைமை வரவே வேண்டாம் என்ற முணுமுணுப்புடன்...

#நெல்லை_ரவீந்திரன் 

Monday 24 July 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -59

தமிழ் சினிமாவில் இயக்குநர் டூ நடிகர்கள் பலர் உண்டு. ஆனால், இசையமைப்பாளர் டூ நடிகர்கள் வெகு சிலரே. அவர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. நாகர்கோவில் காரர். அடிப்படையில் சவுண்ட் என்ஜினீயர். அவருக்கு விஜய் என்ற பெயரை சூட்டியவர் இளைய தளபதி விஜயின் தந்தை இயக்குநர் எஸ்ஏசி.

2 கே சினிமாக்களில் இசையமைப்பாளராக  நுழைந்த விஜய் ஆண்டனி, தமிழ் சினிமாவின் ராப் பாடல்களுக்கு சொந்தக்காரர். 'டிஷ்யூம்', 'நான் அவனில்லை', 'காதலில் விழுந்தேன்', 'வேட்டைக்காரன்', 'அங்காடி தெரு', 'உத்தம புத்திரன்', 'வேலாயுதம்' இப்படி பல படங்களில் அவரது பாடல்கள் சூப்பர் ஹிட் ரகம்.

"டைலமோ டைலமோ, டைல டைல டைலாமோ காலைலேக்கி ராத்திரி மேல் காதலே..."

"ஆத்தி சூடி ஆத்தி சூடி நியூ வே ஆத்திச் சூடி..."

"அட்றா அட்றா... நாக்க முக்க... நாக்க முக்க.."

"மஸ்காரா போட்டு மயக்குறீயே..."

"என் உச்சி மண்டைல சுர்ருங்குது..."

"தப்பெல்லாம் தப்பே இல்லை..."

"அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..".

"நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன் போல் வருமா..."

"அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே..."

"கரிகாலன் கால போல கருத்திருக்கு குழலு...

"இடிச்ச பச்சரிசி புடிச்ச மா விளக்கு... "


இப்பிடியான வெரைட்டியான பாடல்களை கொடுத்த விஜய் ஆண்டனி, பல பாடல்களை பாடியும் இருக்கிறார், குறிப்பா ராப் டைப் பாடல்கள்

 "ஆத்திச்சூடி.." பாடலில் அவரே ஆடிப்பாடி நடித்திருப்பார். அவர் முழுமையான நடிகராக மாறியது, 'நான்' படத்தில் தான்.  யாரையும் சோதனை செய்து பரீட்சித்து பார்க்காமல் அவரே அந்த படத்தை சொந்தமாக தயாரித்தார்.



தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை பிளஸ் திரைக்கதைகளை மட்டுமே தேர்வு செய்யும் இன்றைய நடிகர்களாக இரண்டு பேரை சொல்லலாம். ஒருவர் விஜய் ஆண்டனி. அடுத்தவர் அருள்நிதி.

கதையைப் போலவே தன்னுடைய படத்தின் டைட்டில்களிலும் வித்தியாசம் காட்டி, எதிர்மறையான பெயர்களாக இருந்தாலும் அலட்டிக் கொள்ளாதவர், விஜய் ஆண்டனி.

விஜயகாந்த் நடித்த 'தெருப்பாடகன்' பட டைட்டிலையே 'புதுப்பாடகன்' என மாற்றிய அளவுக்கு சென்டிமெண்டில் சிக்கி தவிக்கும் தமிழ் திரையுலகில், இவரது பட டைட்டில்களைப் பாருங்கள். 'எமன்', 'சைத்தான்', 'பிச்சைக்காரன்', 'கொலை', 'கொலைகாரன்'... 



விஜய் ஆண்டனியின் 'கோடியில் ஒருவன்' படம், சாமான்யன் ஒருவன் முதல்வர் ரேஞ்சுக்கு உயருவது போன்ற கதை. ஒரு மாஸ் ஹீரோ அதில்  நடித்திருந்தால் அரசியலுக்கு அச்சாரம் போடும் படமாக இருந்திருக்கும்.

'திமிரு பிடிச்சவன்' - மாநரில் போதை பொருள் கடத்தல் தாதாவை ஒழிக்கும் காவல் அதிகாரியின் கதை.

'காளி' - டிஎன்ஏ மூலமாக தனது தந்தையை கண்டு பிடிக்கும் ஒரு டாக்டரின் கதை.

அவரது படம் எல்லாமே ஒன் லைனில் மிக எளிமையாக இருந்தாலும் திரைக்கதையும் படத்தை கொண்டு செல்லும் விதமும் அருமையாக இருக்கும். விஜய் ஆண்டனி படம் என்றால் போரடிக்காமல் போகும் என்பது உறுதி.



பெரும்பாலும்  திரில்லர் கலந்த கிரைம் ஸ்டோரியாகத்தான் அவரது படம் இருக்கும். அதே நேரத்தில் அடித்தட்டு, விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலையும் ஆர்ப்பாட்டமே இல்லாமல் தனது படங்களில் மிகத் தெளிவாக பதிவு செய்பவர், விஜய் ஆண்டனி.

'பிச்சைக்காரன்' படம் அவரது திரை வாழ்வின் அச்சீவ்மெண்ட். ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது விவகாரத்தை அவரது பிச்சைக்காரன் படத்தில் முன்கூட்டியே பேசியதெல்லாம் வேற லெவல்.

கிரைம் பிளஸ் திரில்லரை தாண்டி, 'இந்தியா பாகிஸ்தான்' படத்தில் எம்.எஸ் பாஸ்கர்,  மனோபாலா ஜெகன் ஆகியோருடன் காமெடியில் கலக்கி இருப்பார். 

'பிச்சைக்காரன் 2' படத்தின் படப்பிடிப்பில், மிகவும் பயங்கரமான விபத்தில் சிக்கி மறு பிறவி எடுத்து வந்துள்ள விஜய் ஆண்டனி அவரது பாணியிலேயே மேலும் பல படங்களை கொடுக்க வாழ்த்துகள்.

 கூடவே, இசையமைப்பாளராக  துள்ளல் பாடல்களும் நிறைய தர வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு...

ஜூலை 24, அவரது பிறந்த தினம்.

#நெல்லை_ரவீந்திரன்

Friday 21 July 2023

சிவாஜியை வியக்க வைத்த குரு, சிஷ்யன்

முதல் படத்திலேயே மிக நீளமான வசனங்களை பேசி பெயர் பெற்றதாலோ என்னவோ, சினிமாவில் வசனங்கள் என்றால் சிவாஜியே அழைக்கப்பட்டார். 

சிவன் துவங்கி வீரபாகு வரை கடவுள்களையும் புராணங்கள்,  வரலாறு மற்றும் சுதந்திர போராட்ட கதாபாத்திரங்களை பார்த்தது, இவர் வடிவில்தான். 

'தெய்வமகன்', 'பாசமலர்', 'படிக்காத மேதை', 'திரிசூலம்', 'புதியபறவை' என ஏராளமான படங்களில் நடிப்புக்காகவே கொண்டாடப் படுபவர்.

நடிப்பு ஒருபுறம் என்றால் வசனம் தான் சிவாஜியின் மற்றொரு அடையாளம். 'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'திருவிளையாடல்', 'மனோகரோ' மாதிரியான படங்கள் எல்லாம் வேற லெவல். 

உண்மையில், 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படம் எம்ஜிஆருக்கானது. ஆனால் கடைசியில் இறப்பது போன்ற காட்சி கடடாயம் என்பதால் எம்ஜிஆர் அதில் நடிக்கவில்லை. மதுரை வீரனுக்கு பிறகு அதை கொள்கையாகவே எம்ஜிஆர் வைத்திருந்தார். 'வீரபாண்டிய கட்டபொம்மன்', சிவாஜியால் வசன காவியமானது.  எம்ஜிஆர் நடித்திருந்தால் அது வேறு விதமாகி இருந்திருக்கும்.

நிற்க...


இப்படி வசனத்தாலேயே தூள் கிளப்பிய சிவாஜி, 1984ல் வெளியான 'தாவணிக் கனவுகள்' படத்தில் ஸ்கிரிப்டுக்காக தவித்திருக்கிறார். துணை இயக்குநர்களிடம் வசன பேப்பர் கேட்பாராம். ஆனால், முன்கூட்டியே ஸ்கிரிப்ட் எழுதி வசனத்தை மனப்பாடம் செய்வது கே.பாக்யராஜ் ஸ்டைல் கிடையாது. எல்லாமே ஷூட்டிங்கில்தான். அப்படித்தான் சிவாஜிக்கும். அதுவும் ஒன்றிரண்டு வசனங்கள் தான் இருக்கும். 



இந்த படத்தில், எக்ஸ் மிலிட்டரி மேனான சிவாஜி, சைக்கிள் ரிப்பேர் கடை வைத்திருப்பார். நான்கு தங்கைகளுக்கு அண்ணனாக, வேலையில்லாத வாலிபராக சைக்கிள் கடையின் எதிர் வீட்டில் வசிப்பவராக பாக்யராஜ். இந்த படத்தில் சிவாஜியை தனக்கு இணையாக ஒரு காமெடியனாகவே மாற்றி இருப்பார், பாக்யராஜ்.

படம் சூப்பர்ஹிட். "எப்பிடிடா... இப்பிடி படம் எடுக்கிறீங்க. ஹிட் குடுக்கிறீங்க..."ன்னு தன்னோட நீண்ட வசனம் பேசிய சினிமா அனுபவத்தோடு முடிச்சிப் போட்டு ஆச்சரியப்பட்டிருக்கார், சிவாஜி.


இதுக்கு அடுத்த வருடமே 1985ல் பாரதிராஜாவின் 'முதல் மரியாதை' படம். சிஷ்யன் பாக்யராஜாவது சிவாஜிக்கு ஒன்றிரண்டு வசனம் குடுத்திருப்பார். ஆனால், 'முதல் மரியாதை' படத்தில் ஒரு வசனம் கூட குருநாதர் பாரதிராஜா, சிவாஜிக்கு கொடுத்திருக்க மாட்டார். 


"சும்மா இப்பிடி அப்பிடி நடங்கண்ணே போதும். இப்பிடி பாருங்க.. இந்தப் பக்கமா போங்க்ணே.."ன்னு பெரிதாக வசனமே இல்லாமல் சிவாஜியின் உடல், முக அசைவுகளைக் கொண்டே அந்த படத்தை ஹிட்டாக்கி  இருப்பார் பாரதிராஜா.

"சிஷ்யனாவது ஏதாவது டயலாக் குடுத்தான். நீ அது கூட தரலியேப்பா..."ன்னு பாரதிராஜா கிட்ட சலிச்சிகிட்ட சிவாஜி, அந்த படம் முழுமையானதும், "அட... இது தெரியாம இத்தன வருஷமா மூச்சப் பிடிச்சி வசனம் பேசி நடிச்சிருக்கேனப்பா..."ன்னாராம்.

பாடல்களுக்காகவும் கொண்டாடப்படும் 'முதல் மரியாதை'யில், சிவாஜியின் மனைவியாக வரும் வடிவுக்கரசி முழம் முழமாக வசனம் பேசுவார். கிராமத்து சொல்வடயில் கழுவி கழுவி ஊற்றுவார். ஆனால், சிவாஜிக்கு ஒரு வார்த்தை கூட வசனம் இருக்காது...! முக பாவனை மட்டுந்தான். 

இந்த படத்தில், "சாமி எனக்கு ஒரு உண்ம தெரியணும்..." என்ற டயலாக் நல்ல பேமஸ்... ஆனால், அது சிவாஜிக்கு அல்ல... சிவாஜியை சந்திக்கும் மற்றொரு கேரக்டருக்கானது...!

சிவாஜின்னதும் அவரது வசனங்களையே எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும்போது, இந்த ரெண்டு படங்களும் தான் எனக்கு நினைவுக்கு வருது...

இன்று சிவாஜி கணேசன் நினைவு நாள்...

  #நெல்லை_ரவீந்திரன்

Thursday 20 July 2023

எஸ்.ஏ.ராஜ்கண்ணு... சினிமா உலகம் மறந்து போன பிரபலம்...

 16 வயதினிலே...

தமிழ் சினிமாவை முற்றிலுமாக திருப்பிப் போட்ட படம். இயக்குநராக பாரதிராஜா, நாயகியாக ஸ்ரீதேவி என  மாஸ் அறிமுகங்கள் ஒருபுறம் இருக்க... ரஜினி, கமல், கவுண்டமணி, பாக்யராஜ், காந்திமதி என பின்னாளைய பிரபலங்கள் பலரையும் மொத்தமாக ஒரே படத்தின் மூலமாக ரசிகர்களிடம் சேர்த்த படம் அது. அப்போது பிரபலமாக இருந்த இயக்குநர்  பாலசந்தருக்கு நிகராக இந்த படத்தின் அறிமுக இயக்குநரும் வருவார் என உறுதியாக சொன்னவர், அந்த படத்தின் தயாரிப்பாளர்...



கிழக்கே போகும் ரயில்...

அதே இயக்குநருக்கு அடுத்த சூப்பர் ஹிட் படம். 1980களின் நாயகன் சுதாகர், தமிழின் எவர்கிரீன் நாயகி ராதிகா என இருவரையும் இந்த படத்தில்தான் அறிமுகம் செய்தார், அந்த தயாரிப்பாளர்...



கன்னிப் பருவத்திலே...

படு பயங்கர காமுக வில்லனாக நடிப்பின் மறு பக்கத்தை கே.பாக்யராஜ் காண்பித்த படம். தமிழ் சினிமாவின் அம்மா நடிகை வடிவுக்கரசி, நாயகியாக திரைக்குள் அறிமுகமான படமும் இதுதான். ஹீரோ அன்றைய பிரபல நாயகன் ராஜேஷ். இந்த படத்தையும் அவர் தான் தயாரித்தார்...

இது தவிர, 'வாலிபமே வா வா' (கார்த்திக்), 'எங்க சின்ன ராசா' (பாக்யராஜ்), 'மகாநதி' (கமல்), 'பொண்ணு புடிச்சிருக்கு' (ரேவதி) என பத்துக்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் படங்களை 'ஸ்ரீ அம்மன் கிரியேசன்ஸ்' என்ற பேனரில் தயாரித்தவர்...

அப்போதெல்லாம் படம் ரீலிசுக்கு முன் மொத்த பாடல்களுமே ஆடியோ கேசட்டாக வெளியாகி விடும். வழக்கமாக, அனைத்து படங்களுக்குமே பாடல்கள் மட்டுமே வரிசையாக ஒலிப்பதிவு செய்து கேசட் வெளியிடுவார்கள்.



ஆனால் இவர் தயாரிப்பு படங்களுக்கான கேசட்டுகள் மட்டும் வித்தியாசமாக, பெண் குரல் ஒன்று, பாடல்களை தொகுத்து வழங்கும். ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் படத்தின் இயக்குநர் ஹீரோ தயாரிப்பாளர் பெயர்களுடன் படத்தின் பெயரை சொல்லி விட்டு பாடலை அறிமுகம் செய்யும் அந்த குரல். 'பொண்ணு ஊருக்கு புதுசு',  'எங்க சின்ன ராசா' பட பாடல் கேசட் வரை கேட்ட அந்த குரல் இன்னமும் காதில் ஒலிக்கிறது...

அன்றைய நாளில் மிகச் சாதாரணமானவர்களாக இருந்து இன்று பிரபலங்களாக இருக்கும் பலர், இவரிடம் வாய்ப்பு கேட்பதற்காக காத்துக் கிடந்த காலம் உண்டு.



அவர்தான் 1980ஸ்களின் பிரபல தயாரிப்பாளர் 'ஸ்ரீ அம்மன் கிரியேசன்ஸ்' எஸ்.ஏ.ராஜ்கண்ணு.

சில நாட்களுக்கு முன், சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள வாடகை வீட்டில் அவர் மரணமடைந்து விட்டார். சினிமா துறையில் இருந்து யாருமே எட்டிப் பார்க்கவில்லை. சமூகவலை தளங்களில் இரங்கல் பதிவுகளோடு சரி... 

இதைப் பார்த்தால், ஓய்வு பெற்ற தலைமை செயலாளரும் எழுத்தாளருமான இறையன்பு எழுதிய 'நரிப்பல்' என்ற சிறுகதை தொகுப்பில் உள்ள ஒரு கதைதான் நினைவுக்கு வருகிறது...

இதுதான் இன்றைய உலகம்... அதுவும் இது கனவு தொழில் உலகம்... கேட்கவா வேண்டும்...?

#நெல்லை_ரவீந்திரன்

Saturday 15 July 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -58

"நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி...", "கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய குடுப்பான் ஆனா கை விட்டிருவான். நல்லவங்கள நிறைய சோதிப்பான். ஆனா கைவிட மாட்டான்..." - பாட்ஷா

"நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும தப்பு இல்ல...", "அவன நிறுத்த சொல்லு நின் நிறுத்துறேன்...", "தாத்தா... நீங்க நல்லவரா? கெட்டவரா? தெரியலியேப்பா..." -நாயகன்

"கோபமோ, ஆத்திரமோ, பத்து வரைக்கும் எண்ணு. அப்புறமா முடிவு பண்ணு..." -காதலன்

"நான் தனி ஆள் இல்ல...", "இது ஒரு கருப்பு சரித்திரம்..." -சிட்டிசன்

"பயப்படுறீயா குமாரு..." -புதுப்பேட்டை

இப்படி தமிழ் சினிமாவில் சாகாவரம் பெற்ற வசனங்களை வடித்தவர் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.

தமிழ் இலக்கிய உலகின் பொக்கிஷம். சுமார் 200 நாவல்கள், 100 சிறுகதைகள் வாரி வழங்கிய அவரது

உடையார், கங்கை கொண்ட சோழன் என தஞ்சை பெருவுடையார் கோயிலையும் ராஜராஜ சோழனையும் அவனது மைந்தன் ராஜேந்திர சோழனையும் பேசிய நாவல்களாகட்டும்...

இரும்புக் குதிரைகள், மெர்க்குரி பூக்கள், அம்மையப்பன் தெரு, கடரோர குருவிகள், கல்யாண முருங்கை, மீட்டாத வீணை என சமூகம் பற்றி பேசும் புத்தகங்களாகட்டும்...

மகாபாரதம், பிருந்தாவனம் (ராகவேந்திரர்), பேய் கரும்பு (பட்டினத்தார்), காதல் பெருமான் (அருணகிரி நாதர்) சிம்மாசனம் (குமரகுருபர்) என பக்தி சுவை ஊட்டும் வரிசைகளாகட்டும்...

அவரது புத்தகங்களின் ஒவ்வொரு வரிகளுமே வாழ்வியலுக்கான அறிவுரை கூறுபவை. அதனாலேயே, அவர் எழுத்துச் சித்தரானார். 

'விசிறி சாமியார்' எனப்படும் யோகி ராம்சுரத் குமாரின் சீடரான இவரும் தவ யோகியே.

ஆரம்ப கால ஆனந்த விகடன், குமுதம், கல்கி என வார பத்திரிகைகளில் இவர் எழுதிய கட்டுரைகளும் கதைகளும் நாவல்களும் பெரும்பாலும் பெண்மையை முன்னிலைப் படுத்துபவையே.

ஒரு மனிதரால் அதிகபட்சம் பத்து பதினைந்து ஆண்டுகள் தீவிரமாக எழுத முடியும். அதன் பிறகு வாசகர்களை கவர முடியாது அல்லது வேறு வீச்சுக்கு மாறி விடும். ஆனால், 40 ஆண்டுக்கு மேல் தொய்வே இல்லாமல் எழுதியவர். 

1970களில் வெளியான 'மவுனமே காதலாக...' அவரது முதல் எழுத்து படைப்பு. அவரே இன்றைய டிரெண்டுக்கு புதுப்பேட்டை திரைப்படத்துக்கும் திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார்...!

அவரது எழுத்துகளை பற்றி அறியாதவர்களுக்கு அவரை வேறு வகையில் அறிமுகம் செய்ய முடியும்.

ஜனரஞ்சக துறையான சினிமாவிலும் கால் பதித்து சுமார் 25 படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார் பாலகுமாரன். 'குணா', 'நாயகன்', 'பாட்ஷா', 'ஜென்டில்மேன்', 'காதலன்', 'ஜீன்ஸ்', 'சிட்டிசன்', 'முகவரி', 'புதுப்பேட்டை', 'மன்மதன்'.... இப்படி அந்த படங்களின் வரிசை மிக நீளம்.

கே.பாலசந்தரிடம் 'புன்னகை மன்னன்', 'சிந்து பைரவி' படங்களில் உதவி இயக்குநராக இருந்திருக்கிறார். கே.பாக்யராஜின் 'இது நம்ம ஆளு' படத்துக்கு இவர்தான் இயக்குநர்...!



சித்தர்களுக்கு ஒருபோதும் இறப்பு இல்லை...


#நெல்லை_ரவீந்திரன்

Monday 10 July 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -57

சிலருக்கு நிறைய துறைகளில் நிறைய விஷயங்கள் தெரியும். அதன் அடி நாதம் வரை அலசி பார்க்கவும் முடியும். ஆனால் அவர்களால் தனக்கு தெரிந்ததை மிக எளிமையாக மற்றவர்களுக்கும் புரிய வைக்க முடியுமா என்றால் சந்தேகம். ஆனால், எழுத்தாளர் சுஜாதா விதிவிலக்கானவர்.



உண்மையான பெயர் ரங்கராஜன். சென்னை எம்ஐடி-யில் படித்த என்ஜினீயர். முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் நண்பர். அறிவியல், வானியல், இயற்பியல், எழுத்து, தமிழ் இலக்கியம், சினிமா எல்லாவற்றிலும் கரை கண்டவர். மனைவி பெயரில் எழுத ஆரம்பித்து அதுவே நிலைத்து விட்டது. 100க்கும் அதிகமான நாவல்கள், 250க்கும் அதிகமான சிறுகதைகள் ஏராளமான கட்டுரைகள் என எழுதியவர்.

ஆனந்த விகடன், குமுதம், கல்கி, தினமணி கதிர் பத்திரிகைகளில் எழுதிய தொடர்கள் எல்லாம் வாசகர்களை வெகுவாக கவர்ந்தவை. பின்னாளில் நாவலாகவும் திரைப்படமாகவும் மாறியவை. கணையாழி புத்தகத்தின் கடைசி பக்க கட்டுரைகளே,  தனி தொகுப்பாக ரசனைக்குரியது.



சுஜாதாவின் எழுத்துக்களை வாசித்தால் எந்த அளவுக்கு அவர் எதிர் காலத்தை துல்லியமாக கணித்திருக்கிறார் என்பது புரியும். அறிவியல் புனைவு கதைகளுக்கு அவருக்கு நிகர் அவர்தான். கம்ப்யூட்டர் பற்றி பரவலாக அறியாத காலத்திலேயே கம்ப்யூட்டர் என்னென்ன செய்யும் என சொன்னவர். இன்றைய மெய்நிகர் தொழில் நுட்பத்தையும் ரோபோக்களையும் அந்த நாளின் அவரது கதைகளில் பார்க்கலாம். உலகை அச்சுறுத்தும் கிருமிகளையும் கூறியவர்.

அறிவியல் கதை, பிரபஞ்சம் பற்றிய கதை, அரசியல் கதை, துப்பறியும் கதை, கூடவே கிராமத்து மனிதர்களை பற்றிய கதை என எல்லாவற்றிலும் புகுந்து விளையாடியவர். அவரது ஸ்ரீரங்கத்து தேவதைகள் புத்தகம் உதாரணம். எதை தொட்டாலும் அதை விரிவாக அலசி எளிதாக விளக்கி சொல்பவர். 

கம்ப்யூட்டரின் ஆரம்ப காலத்தில் தமிழே கிடையாது, ஆங்கிலம் தான். ஆனால் தமிழில் எப்படி எழுதலாம் என்பதை சொல்லி அதற்கு கோட் உருவாக்குவது வரை ஆலோசனை சொன்னவர். இப்போது தமிழிலேயே செல்போனிலும் கம்ப்யூட்டரிலும் எழுதுவதற்கு நன்றி சொல்ல வேண்டியவர்களில் அவரும் ஒருவர்.



கமல் நடித்த பழைய 'விக்ரம்' படம் இவரது கதைதான். அதில் இவர் சொன்ன ஏவுகணை தான் இன்றைய நவீன ஏவுகணையான டொமோஹாக்.

எழுத்தாளர் சுஜாதாவை கதாசிரியர் சுஜாதாவாக சினிமாவுக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் பாலச்சந்தர். ரஜினிக்கு 'காயத்ரி', 'ப்ரியா', 'நினைத்தாலே இனிக்கும்', 'சிவாஜி' படங்கள். கமலுக்கு 'விக்ரம்', 'இந்தியன்' படங்கள். இயக்குநர் மணிரத்னத்தின் 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ரோஜா', 'உயிரே' படங்கள். இயக்குநர் சங்கரின் 'எந்திரன்', 'முதல்வன்', 'அன்னியன்' படங்கள். இப்படி தமிழ் சினிமாவின் பல ஹிட் படங்கள் சுஜாதாவின் கைவண்ணம் தான். இவரது வசனங்கள் தான்.



என்ஜினீயர் ரங்கராஜனாக சுஜாதா படைத்த முக்கிய சாதனை இன்று உள்ளாட்சி தேர்தல் முதல் நாடாளுமன்ற தேர்தல்கள் வரை பயன்படுத்தும்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம். ஈவிஎம் மெஷின்களை முதன் முதலில் வடிவமைத்து அதை அறிமுகப்படுத்திய குழுவில் இவர் முதன்மையானவர்.

என்ஜினீயராக, எழுத்தாளராக, சினிமா கதாசிரியராக தனக்கு தெரிந்த அனைத்தையும் பாமரருக்கு புரியும்படி சொல்லத் தெரிந்த திறமைசாலியாக வாழ்ந்து மறைந்த எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம் மே 3...

#நெல்லை_ரவீந்திரன்

Wednesday 5 July 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -56

சாகர சங்கமம் @ சலங்கை ஒலி, சுவாதி முத்யம் @ சிப்பிக்குள் முத்து, சங்கரா பரணம்... இந்த மூன்று படங்கள் போதும், இயக்குநர் கே.விஸ்வநாத்தின் பெயரை காலத்துக்கும் திரையுலகம் பேசிக் கொண்டிருப்பதற்கு.



நடனம் மீது பெரு விருப்பம் கொண்டு வெறியாய் சுற்றும் ஒரு கலைஞனுக்கு உதவும் பெண். அவளுடனான காதல், அந்த காதலில் தோல்வி, நடனத்தை வணிகமாக்கிய சமூகத்தின் மீது வெறுப்பு, இறுதியில் போதையில் மூழ்கி வாழ்வை முடிக்கும் கதைதான் 'சலங்கை ஒலி'.



 1980களின் காதல் இளவரசனையும் காதல் இளவரசி ஜெயப்பிரதாவையும் அப்படி காட்டி இருப்பார் இயக்குநர் கே.விஸ்வநாத். "இது மவுனமான நேரம்..." பாடலே போதும்...

படத்தில் வெவ்வேறு விதமாக வெவ்வேறு காட்சிகளில் வலம் வரும் "ஓம் நமச்சிவாயா..." பாடலும் அதில் வரும் "பஞ்ச பூதங்களும் முக வடிவாகும்..." என தொடங்கி வரும் வரிகளும் சலங்கை ஒலியோடு இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.



திருமணமாகிப் போன தனது காதலி, வயதுக்கு வந்த மகளுடன் இருப்பதை  அறிந்து காண செல்லும் காதலன்... அவன் வரும் போது விதவை கோலத்தில் தன்னை பார்த்தால் வேதனைப் படுவானே என நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு வரும் காதலி... அப்படி வரும் போது மழையில் அவளது குங்குமம் கரைய அதை கையால் மறைத்து தடுக்கும் காதலன்... 


"தகிட தகிட தகிட தகிட தம் தானா..." இது பாடல் அல்ல... காதல் காவியம்.


1980களில் விதவைக்கு பொட்டு வைப்பது, மறுமணம் எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாதது. அதிலும் சினிமாக்களில் அது போன்ற காட்சிகளை எல்லாம் ரசிகர்கள் எந்த அளவுக்கு ஏற்று கமர்சியலான வெற்றியை தரும் என்பதெல்லாம் நிச்சயம் கிடையாது. நாயகன் நாயகியை மணம் ஆனவர்களாக காண்பித்தாலே ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள். ஆனால், அதையெல்லாம் உடைத்தவர், இயக்குநர் கே விஸ்வநாத்



அதற்கு சாட்சி சுவாதி முத்யம் @ சிப்பிக்குள் முத்து. சலங்கை ஒலியில் சிவன் பாடல் பிரபலம் என்றால் இதில் ராமன் பாடலும் சீதா கல்யாணமும். மன வளர்ச்சி குறைந்த ஆட்டிசம் குறைபாடு கொண்ட நாயகன். ஒரு மகனுடன் வாழும் விதவைப் பெண், நாயகி. கிராமம், வீடு என சுற்றிலும் கொடுமைகளை அனுபவிக்கும் அந்த விதவைக்கு கோயிலில் சீதா கல்யாண வைபவம் நடக்கும் போது தாலியை கட்டி விடுவான் நாயகன். கிராமத்தாரின் எதிர்ப்புகள் சூழ, பல போராட்டங்களுக்கிடையே  நாயகனை குணமாக்கி விட்டு ஒரு குழந்தையையும் பெற்றுத் தந்து விட்டு அந்த பெண் இறந்து போவார். இதுதான் கதை. 

முழுவதும் பிளாஷ் பேக்காக செல்லும் படத்தின் முதல் காட்சியே மனைவி நினைவாக துளசியை வைத்து பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் இருக்கும் நாயகன், கடந்த கால நினைவுகளில் மூழ்குவதாகத்தான் படம் தொடங்கும். 



முந்தைய படத்தில் சிறந்த நடன கலைஞராகவும் இந்த படத்தில் சரியாக குதிக்கக் கூட தெரியாத ஆட்டிசம் நபராகவும் கமலை வாழ வைத்திருப்பார், கே.விஸ்வநாத். பிரபல நாயகியாக இருந்தாலும் துணிச்சலாக இளம் விதவையாக, ஒரு சிறுவனுக்கு தாயாக நடித்த ராதிகாவையும் பாராட்டியே ஆக வேண்டும்.

கே.விஸ்வநாத்தின் இந்த இரண்டு படங்களுமே ஓராண்டுக்கு மேல் தெலுங்கில் ஓடி வசூலை குவித்து அப்படியே தமிழ் பேசியவை. இரண்டுக்குமே எஸ்.பி.பி. கூடுதல் பலம். 'சிப்பிக்குள் முத்து'எல்லா பாடல்களுமே அவர்தான். தமிழில் அந்த படத்தில் கமலுக்கு டப்பிங்கும் எஸ்பிபி தான்.

இசைப் படைப்பான 'சங்கரா பரணம்' எல்லாம் விஸ்வநாத்தை போலவே சாகாவரம் படைத்தவை. அந்த படத்தில் யாருமே அதுவரை அறிந்திராத சோமயாஜுலுவை (இது நம்ம ஆளு பாக்யராஜின் மாமனார்) பட்டை தீட்டியிருப்பார். 



இயக்குநரை கடந்து நடிகராக கே.விஸ்வநாத்தை தனுஷின் 'யாரடி நீ மோகினி' தான் நினைவுக்கு வரும். அதற்கு முன் 'காக்கைச் சிறகினிலே...' படத்தில் பார்த்திபனின் (வடிவேலு வாடகை சைக்கிள் காமெடி வருமே) வளர்ப்பு தந்தையாக படம் முழுதும் வாழ்ந்திருப்பார், கே.விஸ்வநாத். நடித்தது மாதிரியே தெரியாது.

1960களிலேயே சினிமாவுக்கு வந்தாலும் தாமதமாகவே ஜொலித்த கே.விஸ்வநாத் வெற்றி இயக்குநராக மட்டுமல்ல... அப்பா  வேடங்களுக்கு ஏற்ற சிறந்த குணசித்திர நடிகராகவும் கொண்டாடப்பட வேண்டியவர்.

பத்மஸ்ரீ தாதா சாகேப் பால்கே விருது வரை வென்ற அவர் 90 வயதை கடந்து நிறைவான வாழ்வை வாழ்ந்திருக்கிறார். 

அதுவும் அவரது 'சங்கரா பரணம்' படம் வெளியான நாளின் நள்ளிரவில் தான் மறைந்திருக்கிறார். இசை உள்ளளவும் சங்கராபரணமும், சங்கராபரணத்துடன் விஸ்வநாத் பெயரும் வாழ்வாங்கு வாழும்.

#நெல்லை_ரவீந்திரன்