Wednesday, November 30, 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 20

ஆயிரமாண்டுகளை கடந்த அதிசயம் ஒன்றும் புதுச்சேரியில் இருக்கிறது. அது வில்லியனூரில் உள்ள திருக்காமீஸ்வரர் கோவில். சோழர் காலத்தில் கட்டப்பட்ட அந்தக் கோவிலின் கோபுரங்களை, பிரெஞ்சியர் காலத்தின்போது பீரங்கிகளை நிறுத்தி வைக்க பயன்படுத்தி உள்ளனர். புதுச்சேரியின் பிரெஞ்சிந்திய பகுதிக்குள் ஆங்கிலேயர் நுழையாமல் தடுக்க பாதுகாப்பு அரணாக உதவி இருக்கிறது. அதனாலேயே, இந்த கோவிலுக்கு ஏராளமான திருப்பணிகளை பிரெஞ்சு ஆட்சியாளர்கள் செய்துள்ளனர். கோவிலுக்கு பிரான்சில் இருந்து பெரிய மணி ஒன்றும் வரவழைத்து தந்தனர்.

சமீபத்தில், கும்பாபிஷேக பணிகளுக்காக கோவிலை புதுப்பித்தபோது நிலவறை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. சோழர்கள், பிரெஞ்சியர் என காலங்களை கடந்து தற்போது வரை கம்பீரமாக அருள் பாலித்து கொண்டிருக்கிறார், திருக்காமீஸ்வரர்.வில்லியனூர் அருகிலேயே திருக்காஞ்சியில் உள்ள சிவன் கோவில் விசேஷமானது. சங்கராபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இந்த கோவிலின் சிவ லிங்கம், மேற்கு நோக்கி அமைந்திருக்கிறது. கங்கை வராக நதீஸ்வரராக சிவ பெருமான் வீற்றிருக்கும் இந்த தலம், பித்ரு தோஷத்துக்கு பிரசித்தி பெற்றது. காசியை விட, மிகச் சிறந்த புண்ணிய தலம் திருக்காஞ்சி என கூறுவது உண்டு. நான் அங்கிருந்த சமயத்தில் தான், இந்த கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்தது. அகத்தியர் வழிபட்டதாக கருதப்படும், சிவ லிங்கத்தை கும்பாபிஷேக தருணத்தில் வழிபடும் பாக்கியம் வாய்த்தது.

மாசி மகம் அன்று இங்கு நடைபெறும் தீர்த்தவாரி திருவிழா மிகவும் சிறப்பானது. பவுர்ணமி தினமான அன்று, மூதாதையருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தர்ப்பணம் செய்வது வழக்கம். தீர்த்தவாரி விழாவுக்காக சங்கராபரணி ஆற்றின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்திருப்பார்கள். ஆறு முழுவதுமே, மனித தலைகள் தான் தென்படும். திருக்காஞ்சி மட்டுமல்ல, அன்றைய தினம் புதுச்சேரி நகரமே களை கட்டும்.

புதுச்சேரி மற்றும் திண்டிவனம், செஞ்சி, மயிலம் என சுற்றுப்பகுதியில் இருக்கும் ஏராளமான கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் புதுச்சேரி வந்து அருள் பாலிப்பார்கள். கடற்கரை சாலை அருகே உள்ள வைத்திக்குப்பம் கடலோரத்தில், எல்லா சாமிகளையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். அன்னதானம், நீர் மோர் பந்தல், கடைத்தெரு என புதுச்சேரியே விழாக்கோலம் பூண்டிருக்கும். மாசி மக தீர்த்தவாரிக்காக உள்ளூர் விடுமுறை உண்டு. பவுர்ணமி தினத்தில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதை, அன்றைய தினத்தில் புதுச்சேரியில் பார்க்கலாம்.
(அனுபவம் இனிக்கும்)

என்னை கவர்ந்த புதுச்சேரி - 19

பிரியமானவர்களை மருத்துவமனை படுக்கையில் பார்ப்பது மிகவும் கொடுமை. அது போன்ற அனுபவமும் புதுச்சேரியில் எனக்கு வாய்த்தது. அங்கு சென்ற சில மாதங்களிலேயே முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட எனது தந்தை, ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார்.

சுமார் 45 நாள், எனக்கு மருத்துவமனையில் தான் இரவு வாசம். அலுவலகத்தில் பணியை முடித்து விட்டு, இரவு 11 மணிக்கு ஜிப்மர் சென்று, வார்டின் வெளிப்பகுதியில் உறவினர்கள் தங்குமிடத்தில், தரையில் பெட்ஷீட் விரித்து படுத்துக் கொள்வேன். மிகத் தீவிரமான பாதிப்பில் இருந்து 10 நாளில் அவர் மீண்ட பிறகு, அதிகாலை 5 மணிக்கு மருத்துவமனை ஊழியர்கள் எழுப்புவார்கள். வார்டுக்குள் சென்று தந்தையை எழுப்பி, வீல் சேரில் அமர வைத்து, அவரை குளிப்பாட்டி மீண்டும் பெட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். 7 மணிக்குள் டிபனும் ஊட்டி விடுவேன். டாக்டர்கள் ரவுண்ட்ஸ் வந்து சென்ற பிறகே, வீட்டுக்குச் சென்று குளிப்பது, காலை உணவு போன்ற எனது வேலைகள் தொடரும்.

மருத்துவமனையில் இதுபோன்று கழிந்த எனது நாட்களில் பலவும் கசப்பானவை. எத்தனை நோயாளிகள், எத்தனை உறவினர்கள், ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை எத்தனை சோகங்கள். சேலம் மாவட்ட எல்லையோர கிராமத்தில் இருந்தெல்லாம் உள் நோயாளியாக வந்திருந்தனர். ஒருநாள், எனது தந்தையின் பக்கத்து படுக்கையில் இருந்த 45 வயது நிறைந்த ஒருவருக்கு தீவிர மூச்சிறைப்பு. வென்டிலேசன் உதவியோடு அவரை எமர்ஜென்சி வார்டுக்கு கொண்டு சென்றனர். சில மணி நேரத்தில் நன்றாக திரும்பி வந்தார். ஆனால், மறுநாள் ஹீ நோ மோர். 45 நாட்களில் இதுபோன்று பல அனுபவங்கள்.

இறைவனையோ, நம்மை மீறிய சக்தி ஒன்று உள்ளது என்பதையோ மறுப்பவர்களும் கூட, இது போன்ற அனுபவத்தை பார்த்தால், அவர்களையும் மீறி, நம்மை எல்லாம் மிஞ்சிய எல்லாம் வல்ல சக்தி ஒன்று இருப்பதை நிச்சயமாக உணருவார்கள்.

ஓரளவுக்கு உடல்நிலை தேறிய பிறகு, பிசியோதெரபி மட்டுமே தேவை என்ற நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட எனது தந்தை, வீட்டுக்கு வந்த ஒரு வாரத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்ததை மறக்க முடியாது. கண் எதிரிலேயே உயிர் பிரியும் கணத்தை, வாழ்க்கையில் முதன் முதலில் அன்று தான் நேரில் பார்த்தேன். குழந்தைகள் பள்ளிக்கு சென்ற நிலையில், நான், எனது மனைவி, அண்ணி மூவரின் முன்பாக அவரது சுவாசம் மெதுவாக அடங்கிய தருணம், ஒரு வித சப்தத்துடன் வெளியேறிய அவரது கடைசி மூச்சு, நீண்ட நாள் என்னை உறங்க விடாமல் செய்தது. சித்தர்களின் பூமியான புதுச்சேரியில் தான், எனது தந்தையின் இறுதி சடங்குகளும் நடந்தன.

நெல்லையில் பிறந்து, சென்னையில் குடியேறி, பின்னர் மீண்டும் சொந்த ஊருக்கே சென்று 73 வயது வரை வாழ்ந்த எனது தந்தை, தனது இறுதி மூச்சு புதுச்சேரியில் அடங்கும் என எதிர்பார்த்திருப்பாரா…? இது(இவ்வளவு)தான் மனித வாழ்வு…
(அனுபவம் இனிக்கும்)

Sunday, November 20, 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 18

அது, அருமையான ஒரு அதிகாலைப்பொழுது. இயக்குநர் லிங்குசாமியின் புதிய திரைப்பட வேலைகளுக்காக புதுச்சேரி வந்திருந்த எழுத்தாளர் எஸ்.ரா., என்னை தொலைபேசியில் அழைத்தார். அவரது புதிய புத்தகம் வெளியாகி இருந்த தருணம். கி.ரா அவர்களை நேரில் பார்த்து தனது புத்தகத்தை தர வேண்டும் எனவும், அவரது வீட்டுக்கு அழைத்து செல்ல முடியுமா எனவும் கேட்டார். கரும்பு தின்ன கூலி வேண்டுமா என்ன? அன்று மாலையே எனக்கு அந்த அருமையான, வேறு யாருக்கும் கிடைக்காத அந்த தருணம் வாய்த்தது.

புதுச்சேரியில் நான் குடியிருந்த வீட்டில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் தான் கி.ரா. வீடு. அரசு ஊழியர் குடியிருப்பில் இருக்கிறது. அதே குடியிருப்பில், கி.ரா வீட்டில் இருந்து இரண்டு மூன்று தெருக்களுக்கு அடுத்தாற்போல் மாடியில் எழுத்தாளர் பிரபஞ்சன் குடியிருந்தார்.
கடற்கரை பகுதியில் உள்ள அதீதி ஓட்டலில் தங்கி இருந்த எஸ்.ரா.வை எனது பைக்கில் அழைத்துக் கொண்டு கி.ரா. வீட்டுக்கு சென்றேன். தமிழகத்தின் மிகப் பிரபலமான இரண்டு எழுத்தாளர்கள், அவர்களுடன் நான் மட்டும். அவர்களின் இரண்டு மணி நேர நீண்ட உரையாடலின்போது, நான் கேட்ட விஷயங்களை மட்டுமே குட்டியாக ஒரு புத்தகம் எழுதலாம்.கோபல்லபுரம் தாத்தா கி.ரா, தனது இளமை பருவ அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். எலும்புறுக்கி நோயால் அவதிப்பட்டது, ஆங்கிலேய மருத்துவரிடம் சிகிச்சை பெற்றது, புதுச்சேரி பல்கலைக் கழக பேராசிரியராக வந்து அங்கேயே குடியேறியது என ஏராளமான தகவல்களை கூறினார். அந்த காலத்தில் எல்லாம் ஊர்களுக்கு எப்படி பெயர் வைத்தார்கள் என வேறொரு தளத்தில் அவரது உரையாடல் திரும்பியது சுவாரஸ்யம். புதுச்சேரிக்குள் உள்ள பதஞ்சலி முனிவர் சிலை, வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் சிலை (மரத்தால் ஆனது) எனவும் உரையாடல் நீண்டது.

இந்த உரையாடலின்போது, எஸ்.ரா. கூறிய அனுபவங்கள் தனி. அவர் தேசாந்திரி என்பது அனைவரும் அறிந்த விஷயம். வட மாநிலம் ஒன்றில் மாவோயிஸ்ட் நிறைந்த ஒரு மலைப்பகுதி கிராமத்துக்கு சென்று வந்த அனுபவங்களை எஸ்.ரா. பகிர்ந்து கொண்டார். அந்த பகுதி மக்களின் கலாச்சாரம், வரவேற்பு முறை, புதிய விருந்தினர்களை பற்றிய தகவல்கள் உடனடியாக மாவோயிஸ்டுகளின் கவனத்துக்கு செல்வது என அவரது தகவல் சுரங்கம் விரிந்தது. கிராமங்களுக்கு பெயர் வைப்பது பற்றிய உரையாடலின்போது, காஷ்மீர் எல்லையையொட்டி சில கிராமங்களுக்கு தமிழ் பெயர்கள் இருப்பதை குறிப்பிட்டார். தமிழர்கள் யாரேனும் அங்கு வரை வியாபாரத்துக்கு சென்றிருக்கலாம் எனவும் எஸ்.ரா. கூறினார்.

இரண்டு பெரிய எழுத்து இமயங்களின் உரையாடலும், எழுதப்படாத இரு புத்தகங்களை படித்து முடித்த திருப்தியை அளித்தது. அதன்பிறகு, ‘தி இந்து‘ நாளிதழில் வெளிவந்த ஒரு தொடரின் கட்டுரைக்காக மானா.பாஸ்கரன் சார் கேட்டுக் கொண்டதற்காக ஒரு முறை கி.ரா. அவர்களை சந்தித்து நீண்ட நேரம் உரையாடும் சந்தர்ப்பம் வாய்த்தது. இந்த இரண்டு சந்திப்புகளையும் அப்போதே குறிப்புகளாக எழுதி வைத்திருந்தேன், விரிவான கட்டுரை எழுதலாம் என்ற எண்ணத்தில். ஆனால், குறிப்புகள் காணாமல் போனதாலும், அப்போதைய வேலைப் பளுவாலும் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை என்ற வருத்தம் எனக்குள் இருக்கிறது.

அப்புறம், கி.ரா வீட்டில் அவரை சந்தித்து விட்டு அதீதி ஓட்டலில் எஸ்.ரா அவர்களை கொண்டு விடுவதற்காக திரும்பியபோது, சந்திப்பு பற்றி பேசியபடியே வந்தோம். அப்போது, எஸ்.ரா. கூறிய வார்த்தைகள், ‘இப்போது 90 வயது தாண்டிய முதுபெரும் தமிழ் எழுத்தாளர்கள் இருவர் மட்டும் தான். ஒருவர் கி.ரா., மற்றொருவர் கலைஞர்‘. எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.
(அனுபவம் இனிக்கும்)

Wednesday, November 16, 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 17

புதுச்சேரியின் பழங்கால வரலாற்றை அறிவதற்கு உதவும் நூல்களில், ‘அனந்தரங்கப் பிள்ளை டைரி குறிப்புகள்’ முக்கியமானது. அடிப்படையில் தறி நூல் மற்றும் சாய வியாபாரியான அனந்தரங்கப் பிள்ளை, பிரெஞ்சு கவர்னர்களுக்கு தலைமை மொழி பெயர்ப்பாளராக பணி புரிந்தவர். அந்த சமயத்தில், தான் அறிந்த, கேள்விப்பட்ட, நேரில் பார்த்த ராஜாங்க விஷயங்களை டைரி குறிப்புகளாக எழுதி வைத்தார். அதுதான், இன்றளவும் புதுச்சேரியின் காலக் கண்ணாடி. 300 ஆண்டுகளுக்கு முன் சென்னை பெரம்பூரில் இருந்து புதுச்சேரிக்கு வியாபாரத்துக்காக குடியேறியவர் தான், அனந்தரங்கப் பிள்ளை.

சாதாரண தறி நூல் வியாபாரியாக வந்த ஒருவருக்கு அரசாங்கத்தின் மிக உயரிய பதவி வரை வழங்கி, அவரின் தினசரி டைரி குறிப்புகளையும் கூட, காலம் கடந்த அரிய பொக்கிஷமாக மாற்றும் இயற்கையான ரசவாத வித்தை நிறைந்த மண், புதுச்சேரி.

அத்தகைய பெருமை மிகுந்த இலக்கிய மணம் வீசும் மண்ணில் வாழ்ந்த நாட்கள், எனது (எங்களது) ஆசீர்வதிக்கப்பட்ட தருணங்கள். 15 ஆண்டுகளாக வெறும் பத்திரிகையாளராக, கட்டுரையாளனாக மட்டுமே இருந்த என்னை எழுத்தாளர் என்ற ஒரு நிலைக்கு உயர்த்தியதில் புதுச்சேரியை மறக்கவே முடியாது. எனது ஆதர்ச எழுத்தாளர்களில் முதன்மையானவரான எஸ்.ரா அவர்களின் அறிமுகமும் அங்கு இருந்தபோது கிடைத்தது எனது பாக்கியம். என்னுடைய புத்தகத்தின் நூல் அறிமுக, விமர்சன கூட்டத்துக்கு வந்து அவர் கவுரவித்ததும் மறக்க முடியாதது.அந்த நிகழ்வுக்கு முழு முதல் காரணமாக இருந்தவர்களான புதுச்சேரி தமிழ்ச் சங்க தலைவர் முனைவர் முத்து, எனது அலுவலக சகாவும் மூத்த சகோதரருமான வில்லியனூரை சேர்ந்த செய்தியாளர் பாரதி, போட்டோகிராபரான அருமை தம்பி ஸ்டீபன் மற்றும் உறுதுணையாக இருந்த ஒவ்வொரு நண்பர்களும் எனது நன்றிக்குரியவர்கள். புதுச்சேரி பற்றிய நினைவு எழும்போதெல்லாம் எனது நினைவலைகளில் இவர்களின் பெயர்களும் தவழ்கிறது. இந்த நினைவலைகளுக்குள், இரண்டு பெரிய எழுத்து இமயங்களை ஒரே சமயத்தில் சந்தித்த ஒரு பொன்மாலை பொழுதும் நினைவுக்கு வந்து செல்கிறது.
(அனுபவம் இனிக்கும்)

என்னை கவர்ந்த புதுச்சேரி - 16

இலக்கியம் வளர்ப்பதில் புதுச்சேரியை போன்ற நகரம் எதுவும் இல்லை. வெறும் 10 கி.மீட்டர் சுற்றளவிலான நகர எல்லைக்குள் ஏராளமான இலக்கிய அமைப்புகள் உண்டு. அவற்றுக்கு பெயர் வைப்பதிலும் ரசனையானவர்கள். குறளிசை கூடு, புதிமம் (திருக்குறள் அமைப்பு) என்பது போன்ற வித்தியாசமான பெயர்களை பார்க்க முடியும். இது தவிர, திருக்குறள் மன்றம், கம்பன் கழகம் போன்ற பெரிய அமைப்புகளும் உண்டு. வாராந்திர கூட்டம், மாதாந்திர ஆலோசனை, கவிதை வாசிப்பு, நூல் ஆய்வு என வித்தியாசமான நிகழ்வுகள்.
புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் உள்ள பல்வேறு துறைகள், புதுச்சேரி தமிழ்ச்சங்கம், கம்பன் அரங்கம் போன்றவை அதிக அளவில் இலக்கிய சொற்பொழிவு அரங்கேறும் இடங்களில் முக்கியமானவை. இது தவிர, நகருக்குள் உள்ள ஓட்டல்களின் கருத்தரங்குகள், மினி ஹால்கள் போன்றவற்றிலும் அவ்வப்போது இலக்கிய கூட்டங்கள் களை கட்டும். நூல் அறிமுக கூட்டம், நூல் மதிப்புரை கூட்டம் ஆகியவற்றோடு பல்கலைக்கழக அரங்கம் போன்ற ஒரு சில இடங்களில் நவீன நாடக அரங்கேற்றங்களும் உண்டு. உண்மையில், புதுச்சேரியில் தமிழ் இலக்கியம் மிக நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது.இந்தியாவில் உள்ள நூற்றாண்டுகளை கடந்த ஒரு சில நூலகங்களில், ரோமன் ரோலண்ட் நூலகமும் ஒன்று. பிரெஞ்சியர்கள் மட்டுமே படிப்பதற்காக 300 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த நூலகம், பின்னாளில் பொதுமக்களும் படிக்கும் வகையில், ‘பிப்ளியோதிக் பிப்லிக்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அதன் பிறகு, பிரான்சை சேர்ந்த பிரபல இலக்கிய எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவருமான ரோமன் ரோலண்ட் பெயரில் மூன்று தளங்களில் மிகப் பெரிய பரப்பளவில் இயங்கி வருகிறது. இங்குள்ள புத்தகங்களில் சுமார் 15 ஆயிரம் புத்தகங்கள், மிகவும் அரிதானவை.எழுத்தாளர்கள் வேர் பிடித்து வளரவும், கற்பனை சிறகுகளை எல்லையின்றி விரித்து பறக்கச் செய்யவும் புதுச்சேரி மண்ணும் வானமும் உதவி செய்பவை என்றால் மிகையான வார்த்தைகள் அல்ல. ஆன்மிக போதனைகளை அருளிய அரவிந்தர் தொடங்கி, பாரதியார் வழியாக இன்றைய கி.ராஜநாராயணன், பிரபஞ்சன், விடுதலை சிறுத்தைகள் பிரமுகரும் சிறந்த இலக்கியவாதியுமான ரவிக்குமார் வரை புதுச்சேரியில் எழுத்தாளர்கள், கவிஞர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்கா.
(அனுபவம் இனிக்கும்)

என்னை கவர்ந்த புதுச்சேரி - 15

அரசு அலுவலகங்கள் என்றதும் ஒருவித பிம்பம் மனதுக்குள் எழும். புதுச்சேரியில் அதுபோன்ற நிகழ்வை எங்குமே நான் பார்த்ததில்லை. மின்வாரிய அலுவலகம், கல்வி அலுவலகம், வழங்கல் துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு அலுவலகங்கள் என நான் பார்த்த ஒவ்வொரு அலுவலகத்திலுமே அரசு ஊழியர்கள் என்னை வியக்க வைத்தனர். தமிழகத்தில் ஏதோ ஒரு வேலைக்காக சென்று ஒரு கேள்விக்கு அடுத்து இரண்டாவது கேள்வியை கேட்டாலே எரிந்து விழுவதை பார்த்தே அனுபவப்பட்ட எனக்கு வித்தியாசமாக இருந்தது.

ஒவ்வொரு வேலைக்கும் எவ்வளவு நாளாகும்? என்பதில் தொடங்கி பொறுமையாக பதில் சொல்வதில் வித்தியாசமானவர்கள். நமக்கு பின்னால் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் சந்தேகங்களுக்கு எரிச்சல் படாமல் விளக்குவார்கள். அரசு அலுவலகங்களில் வேலை துரிதமாக முடிகிறதோ இல்லையோ? அது வேறு விஷயம். வந்தவர்களுக்கு பொறுமையாக பதில் கூறுவதிலேயே பாதி வேலை முடிந்த திருப்தி, பொது மக்களுக்கு ஏற்படும். இது, அரசு கொண்டு வந்த நடைமுறையாக தெரியவில்லை. அரசு ஊழியர்களின் சுபாவமே, அதுதான்,

1964 வரை பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்ததாலும், இன்னமும் பிரான்சுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாலும் பிரெஞ்சு மொழி நெருக்கமாக இருக்கிறது. அங்குள்ள மக்களின் பேச்சு வழக்கில் பிரெஞ்சு வார்த்தைகளின் கலவையை பார்க்கலாம். பள்ளியிலும் விருப்பப் பாடமாக பலர், பிரெஞ்சு மொழியை தேர்வு செய்கின்றனர். குளூனி பெண்கள் பள்ளி, பெத்தி செமினார் ஆண்கள் பள்ளி போன்றவை பிரெஞ்சியர் காலத்தில் தொடங்கப்பட்ட பள்ளிகள். பிரெஞ்சு பள்ளிகள் இன்னமும் புல்வார் பகுதியில் இருக்கின்றன.

பிரெஞ்சு பற்றி பேசும்போது, பிரெஞ்சு இன்ஸ்டிடியுட் பற்றிய சில தகவல்களும் நினைவுக்கு வருகிறது. கடற்கரையோரத்தில் அரவிந்தர் ஆசிரம கண் மருத்துவமனை அருகில் உள்ள அந்த நிறுவனத்தில் ஓலைச் சுவடி ஆராய்ச்சி, பழங்கால சிற்ப ஆராய்ச்சி போன்றவை பிரசித்தம். பல அரிய ஓலைச் சுவடிகளை சேகரித்து வைத்து, அவற்றை ஆய்வு செய்து வரும் பெரியவர் ஒருவருக்கு இரு ஆண்டுகளுக்கு முன் ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.

வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் சாமி சிலைகளை அடையாளம் காண்பதில், இந்த நிறுவனம் உதவுகிறது. அங்குள்ள சிற்ப ஆராய்ச்சி பிரிவில் இந்தியா முழுவதும் உள்ள பல நூற்றாண்டுகள் பாரம்பரியம் மிக்க சிலைகளின் புகைப்படங்கள், அவற்றின் முழுமையான பயோ விபரங்களுடன் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் இந்திய சிலைகளை அடையாளம் கண்டறிவதற்கு இந்த தகவல்கள் உதவுகின்றன. நான், அங்கிருந்த சமயத்தில், இந்த தகவல்களைக் கொண்டு ஆஸ்திரேலியாவில் சில சிலைகள் கண்டறியப்பட்டிருந்தது. அவற்றை, பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்தபோது அவரிடம் ஆஸ்திரேலிய அரசு வழங்கியது. இதுபோன்ற தகவல்களை பெறுவதற்காக, பல்வேறு நாடுகளின் புலனாய்வு அதிகாரிகள் வருவது, அடிக்கடி நடைபெறும் நிகழ்வு…

(அனுபவம் இனிக்கும்)

Tuesday, November 8, 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 14

புதுச்சேரி குட்டி மாநிலம் என்பதாலும், அதிலும் புதுச்சேரி என்பது அந்த யூனியன் பிரதேசத்தின் ஒரு பிராந்தியம் என்பதாலும் அரசு சார்பிலான அனைத்து பரீட்சார்த்த முயற்சிகளும் அங்குதான் முதலில் அரங்கேறும். மத்திய அரசை எதிர்பார்த்து இருக்கும் மாநிலம் என்பதால், நல்லதோ, கெட்டதோ அங்கு சோதனை நடத்தி பார்ப்பது எளிது. அதனால், சில வசதிகளும் முதலில் கிடைத்தன.

சமையல் காஸ் மானிய தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தும் முறை, முதன் முதலில் புதுச்சேரியில் தான் அறிமுகமானது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அறிமுகம் செய்த 45 மாவட்டங்களில் புதுச்சேரியும் ஒன்று. அங்கு 2013ம் ஆண்டிலேயே வங்கிக் கணக்கில் காஸ் மானிய தொகை செலுத்தப்பட்டது. அந்த முயற்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதாலும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியதாலும் ஒன்றிரண்டு மாதங்களிலேயே அந்த திட்டம் கைவிடப்பட்டது. இப்போது, நாடு முழுவதும் அமலில் இருக்கும் அந்த திட்டத்தின் முதல் விதை அங்குதான் ஊன்றப்பட்டது.

தற்போது, ரேஷன் பொருட்களுக்கு பதிலாக மானிய தொகையை வங்கியில் நேரடியாக செலுத்துவது குறித்து மத்திய அரசு யோசித்து வருகிறது. அந்த முயற்சியும் புதுச்சேரியில் ஆரம்பமாகி விட்டது. சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வரை ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு பதிலாக மாதந்தோறும் 300 ரூபாயை வங்கி கணக்கில் செலுத்தினார்கள். இந்த திட்டத்துக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் இன்னமும் அறிமுக நிலையிலேயே இருக்கிறது.

இந்த திட்டங்களுக்கு எல்லாம் முக்கிய தேவை, ஆதார். அதிலும் புதுச்சேரி முதன்மை மாநிலம். கிட்டத்தட்ட 100 சதவீதம் பேருக்கு ஆதார் வழங்கப்பட்டு விட்டது. ரேஷன் கார்டு, ஆதார், வங்கிக் கணக்கு எண், சமையல் காஸ் இணைப்பு இவை எல்லாம் இணைந்த சிஸ்டம் அங்கு வெற்றிகரமாக ஓடுகிறது. 2 ஆண்டுக்கு முன்பே 25 ரூபாய்க்கு வண்ண பிளாஸ்டிக் வாக்காளர் அட்டை, அங்கு அறிமுகமாகி விட்டது.

வங்கி பற்றி கூறும்போது, இன்னொன்றையும் சொல்வது அவசியம். சில தனியார் ஏடிஎம் மையத்தில் செக் டெபாசிட் செய்யும் பாக்ஸ் இருப்பதை பார்த்திருப்போம். வங்கியில் காத்திருக்காமல் ஏ.டி.எம் இயந்திரத்திலேயே பணத்தை டெபாசிட் செய்யும் வசதி அங்கு உண்டு. பாஸ்புக்கில் கணக்கு வரவு, செலவை பதிவு செய்வதற்காக தனியாக ஒரு இயந்திரம் உண்டு. அதற்காக, பாஸ்புக்கின் பின்புறத்தில் அதற்கான ‘பார் கோடு’ பிரிண்ட் செய்து தந்து விடுவார்கள். நெட் பேங்கிங் வசதிகள் இருந்தாலும், வங்கிகளில் குவியும் சாதாரண வாடிக்கையாளர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க அது சிறப்பானது.

(அனுபவம் இனிக்கும்)

என்னை கவர்ந்த புதுச்சேரி - 13

புதுச்சேரியில் என்னை கவர்ந்த மற்றொரு விஷயம், இயற்கை உணவு. எங்கள் சொந்த மாவட்டத்தில் கூட, இந்த அளவுக்கு இயற்கை உணவையோ பசுமையையோ இப்போது பார்க்க முடியவில்லை. ஆனால், புதுச்சேரி அப்படி இல்லை. நகரை சுற்றிய புறநகர் பகுதி, கடலூர், விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாய பொருட்கள் வருகின்றன. திருக்கனூர், பண்டித சோழ நல்லூர், பாகூர் போன்ற பகுதிகளில் பருவமழை சமயங்களில் கண்ணுக்கு பசுமையாக இருக்கும்.

புதுச்சேரியில் ஏராளமான உழவர் சந்தைகள் உண்டு. விவசாயிகளே நேரடியாக வந்து விற்பதால் மிக சல்லிசான விலையில் நாட்டு காய் வகைகளை ஏராளமாக வாங்கலாம். 100 ரூபாய் செலவில் ஒரு வாரத்துக்கான காய், கனிகளை வாங்கி விடலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தென்னாற்காடு மாவட்டத்துக்கே உரித்தான உணவு வகைகள் மற்றும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு, வேர்க் கடலை, செடியில் இருந்து அப்படியே பறித்து வந்த தட்டை பயிறு, மொச்சை பயிறு என ஏராளமாக கிடைக்கும். கோடை காலங்களில், வீதிகளில் வெடித்த வெள்ளரிப்பழம் குவிந்து கிடக்கும். கோடையில் ஜூஸுக்கு ஏற்ற பழம் அது.

கம்பு, நாட்டு சோளம், கேழ்வரகு, சாமை, குதிரை வாலி, கம்பு போன்ற சிறு தானிய வகைகள் எல்லாம் புதுச்சேரியில் தான் எனக்கு அறிமுகமானது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டின் மினியேச்சராக இருக்கும் குபேர் மார்க்கெட், அதை சுற்றிய ரங்கபிள்ளை வீதி உள்ளிட்ட வீதிகளில் எல்லாம் பலவிதமான பொருட்கள் கிடைக்கும். ‘நானும் ரவுடிதான்’ படத்தின் ஒரு பாடலில் அந்த மார்க்கெட்டை பார்க்கலாம்.கடலோர பூமியான புதுச்சேரியில் கடல் உணவுக்கும் பஞ்சம் கிடையாது. கடலுடன் ஆறு கலக்கும் நோணாங்குப்பம் கழிமுக பகுதியில் விரால், கெண்டை, தேளீ போன்ற மீன்களை உயிருடன் வாங்கலாம். தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் போன்ற சில இடங்களும் மீன்களுக்கு பிரபலம். தேங்காய் திட்டுக்கு அதிகாலை நேரத்தில் சென்றால் இறால், நண்டு போன்றவற்றை மொத்தம், மொத்தமாக வாங்கி வரலாம். சீசன் சமயங்களில் புதுச்சேரி கடலோர பகுதியில் குவியல் குவியலாக மத்தி மீன்கள் கிடைக்கும். கருவாடு மற்றும் கோழி தீவனத்துக்கு அந்த மீன் பிரசித்தம். கேரளா போன்ற வெளிமாநில வியாபாரிகள் வந்து அந்த மீன்களை மொத்தமாக வாங்கிச் செல்வது வழக்கம்.

குறைந்த செலவில் ஆரோக்கியமான உணவு. இதுதான், நான் அறிந்த புதுச்சேரி.
(அனுபவம் இனிக்கும்)

என்னை கவர்ந்த புதுச்சேரி -- 12

புதுச்சேரியை நேரில் பார்த்து அறியாத ஒவ்வொருவரும் கோவா போன்ற பிம்பத்தை கற்பனை செய்து வைத்திருப்பார்கள். புதுச்சேரியில் எங்கள் வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர் கூட, இது போன்ற எண்ணத்துடன் தான் வந்திருந்தார். எனது பைக்கில் சுமார் 3 மணி நேரம் நகரை சுற்றி காண்பித்ததும் அவரது எண்ணம் வடிந்து விட்டது. நகரை அழகிய சுற்றுலா தலமாக மாற்றலாம்.

ஆனால் வருவாய் பற்றாக்குறை, மத்திய அரசின் நிதி குறைப்பு போன்ற பல்லவியை ஆட்சியாளர்கள் பாடுவது வழக்கம். சுற்றுலா வாரிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவே தடுமாறிக் கொண்டிருந்தனர். வாரிய சேர்மனே (இப்போது அ.தி.மு.க. எம்எல்ஏ) இதை வருத்தமாக கூறியதும் வேதனை. இந்த நிலைமையை மாற்றலாம் என்பது எனது எண்ணம்.

நூற்றாண்டுகளை கடந்த தேவாலயங்கள், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், அழகிய கடற்கரை, கடற்கரையோரத்தில் அழகழகான தங்கும் விடுதிகள், கடைத் தெருக்கள் இப்படி நகருக்குள் பலப்பல சுவாரஸ்யங்கள். கடலுடன் ஆறு கலக்கும் கழிமுக பகுதியில் சுண்ணாம்பாறு படகு குழாம். சொகுசு படகில் அரை மணி நேரம் பயணம் செய்து கடற்கரைக்கு சென்று பொழுது போக்கி விட்டு, மீண்டும் அரை மணி நேர பயணத்தில் திரும்பலாம். இது தவிர, அதிவேக படகுகளும் உண்டு. தமிழக எல்லை வரை விரிந்து கிடக்கும் ஊசுடு ஏரியிலும் இதுபோன்ற படகு சவாரி உண்டு. கூடவே, அழகழகான பறகைவளை பார்த்து ரசிக்கலாம். அதன் அருகில், தனியார் அம்யுஸ்மென்ட் பார்க் போகோ லேண்டு என புதுச்சேரியில் ஏராளம்.

தமிழக பகுதிக்குள் இருக்கும் ஆரோவில், ஆரோவில் கடற்கரை, பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர், மொரட்டாண்டி பாதாள பிரத்தியங்கிரா தேவி, சனீஸ்வரர் கோயில் தனி. கடற்கரையோரத்தில் சர்வதேச தரத்திலான சொகுசு ரிசார்ட்டுகளும் உண்டு. 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இவ்வளவு ஆச்சரியங்கள் குவிந்து கிடக்கின்றன. சரி விஷயத்துக்கு வருகிறேன்.புதுச்சேரிக்கு மிக அதிக அளவில் வருவாயை தரும் மது விற்பனையை, தமிழகம் போல அரசே ஏற்கலாம். 5 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில் தொடங்கி 15 ரூபாய் சாராய பாட்டில் வரை அங்கு விற்கப்படுகிறது. நகரம் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள கள், சாராய கடைகள் (1980களில் வெளியான தமிழ் படங்களில் காண்பிப்பார்களே அதே போன்ற கடைகள் தான்) ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு அரசுக்கு 100 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. ஆனால், அவற்றின் விற்பனை ஆயிரம் கோடியை தாண்டும்.
உயர் ரக மதுபானக் கடைகள் ஏராளம் உண்டு. அவற்றின் உரிமங்களை புதுப்பிக்கும் வருவாய் மட்டுமே அரசுக்கு வருகிறது. ஆனால், அங்கு விற்பனையாகும் சரக்கு மதிப்பு பல ஆயிரம் கோடிகளை எட்டும். கள், சாராயம் மற்றும் மதுபான கடைகளை அரசே நடத்தினாலே ஓராண்டு பட்ஜெட்டை போடலாம். இப்போது, அரசிடமே சொந்த சாராய வடி ஆலை உண்டு. அமுதசுரபி உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாகவும் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தவிர, பேருந்து போக்குவரத்தையும் அரசுடைமை ஆக்கலாம்.

இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்தால் யாரிடமும் அரசு கையேந்த தேவையில்லை. ஆனால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, குட்டி கட்சி, சிறிய கட்சி என பேதமில்லாமல் அனைவரின் வசம் தான் இவை அனைத்தும் இருக்கின்றன.…

(அனுபவம் இனிக்கும்…)

என்னைக் கவர்ந்த புதுச்சேரி - 11

சுற்றுலா செல்லும் பலருக்கும் புதுச்சேரியின் மிகச் சிறிய பரப்பிலான இடத்துக்கு தான் சென்று வருகிறோம் என்பது தெரியாது. கிழக்கு கடற்கரை சாலையில் மகாத்மா காந்தி சாலை முத்தியால்பேட்டை மணிக்கூண்டில் தொடங்கி அதீதி ஓட்டல், கடற்கரை சாலை, துறைமுகம், ரயில் நிலையம், பொட்டானிகல் கார்டன், அண்ணாசாலை, ராஜா தியேட்டர், ஆனந்தா இன் ஓட்டல் என அரை முட்டை வடிவில் ஒரு பகுதி. குறுக்காக நேரு வீதி, அனந்த ரங்க பிள்ளை வீதி உட்பட ஏழெட்டு வீதிகள். அதுதான், புதுச்சேரியின் முக்கியமான பகுதி. புல்வார் எனப்படும் பிரெஞ்சு கலாச்சாரம் மாறாத பகுதி.

கடல் வழியாக இந்தியாவுக்கு வந்த பிரெஞ்சியர்கள் முதலில் இறங்கியது, கடலோர கிராமமாக இருந்த இங்கு தான். சென்னை செயின்ட் தாமஸ் கோட்டை போலவே, பிரெஞ்சியர்களும் 200 ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் செயின்ட் லூயி கோட்டை என ஒரு கோட்டையை கட்டி இந்திய பகுதிகளை ஆட்சி செய்துள்ளனர். பின்னாளில், ஆங்கில பிரெஞ்சியர் இடையிலான நாடு பிடிக்கும் போட்டியில் அந்த கோட்டையை ஆங்கிலேயர் தரை மட்டமாக்கி விட்டனர்.

கல் குவியல்கள் நிறைந்த அழகிய கடற்கரை, மணக்குள விநாயகர் கோயில், பிரெஞ்சு கட்டிடங்கள், அரவிந்தர் ஆசிரமம், ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, தலைமை செயலகம், புதுவை அரசின் சின்னமான ஆயி மண்டபம், ரோமன்ட் ரோலன் நூலகம், அரசு பொது மருத்துவமனை, காவல்துறை தலைமை அலுவலகம், பிரெஞ்சு தூதரகம், புதுச்சேரியின் துறைமுகம், பல திரைப்படங்களில் தலை காட்டிய நீண்ட ஜெட்டி, கடல் காற்றை அனுபவித்துக் கொண்டே சிப் சிப்பாக மதுவை இறக்கும் வசதியுடன் கூடிய பால்கனிகள் நிறைந்த விடுதிகள் என சகலமும் நிறைந்த பகுதி. அருகில் உள்ள நேரு வீதி கடைத் தெரு பஜாரையும் சேர்த்தால் மொத்தம் 3 கி.மீ நீளம் 1 கி.மீ அகலம் மட்டுமே பரப்பளவு கொண்ட குட்டி சொர்க்கம்.

வங்கக் கடலை ஒட்டிய புல்வார் பகுதி மற்றும் அதன் நீட்சியாக இருக்கும் கடைத்தெருக்கள் நிறைந்த காந்தி வீதி, நேரு வீதி மற்றும் அதையொட்டிய நேர்க்கோடு வரைந்தது போன்ற தெருக்கள் ஆகியவையே புதுச்சேரியின் இதயம் போன்ற பகுதி. புதுச்சேரியில் இருந்த ஐந்தாண்டுகளிலும் எனது வார விடுமுறை தினமான ஞாயிற்று கிழமைகளின் பெரும்பாலான பிற்பகல் பொழுதுகளை களவாடியவை இந்த இடங்கள்தான். சென்னையில் இருந்த 15 ஆண்டு கால வாழ்க்கையில் மெரீனா சென்றதை விட, பல மடங்கு அதிகமாக புதுச்சேரி கடற்கரை மற்றும் புல்வார் பகுதிக்கு சென்றிருக்கிறேன், குடும்பத்துடன்.

இந்த பகுதிகளின் வடிகால் வசதி, சுத்தம் போன்றவை என்னை கவர்ந்தவை. 2015 இறுதியில் சென்னையே மூழ்கி கிடந்தபோது, அதற்கு சற்றும் குறைவில்லாத மழை, இங்கும் பெய்தது. ஆனால், புதுச்சேரி புல்வார் பகுதிகளில் தண்ணீர் தேங்கி கிடந்ததை நான் பார்த்ததே இல்லை. 10 நிமிடம் மழை ஓய்ந்தால் போதும். தெருக்கள் பளீச். புல்வார் மட்டுமல்ல, புதுச்சேரியின் பெரும்பாலான மற்ற பகுதிகளிலும் கூட சிறப்பான வடிகால் வசதி. கிழக்கு கடற்கரை சாலையை ஓட்டிய கிருஷ்ணா நகர் போன்ற ஒரு சில இடங்களை தவிர.

கடற்கரையோர புல்வார் பகுதியில் ஏராளமான பிரெஞ்சியர்களையும் வெளி நாட்டினரையும், சுற்றுலா பயணிகளையும் பார்க்கலாம். புல்வாரில் உள்ள சிமெண்ட் சில்லுகளால் போடப்பட்ட தெருக்கள், தார் சாலைகள் மற்றும் அந்த பகுதியை பராமரிப்பதற்காக பிரெஞ்சு அரசிடம் இருந்து நிதி உதவி வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்…

(அனுபவம் இனிக்கும்…)

என்னை கவர்ந்த புதுச்சேரி - 10

சுத்தமான காற்று, மாசு இல்லாத நிலத்தடி நீர் இவை எல்லாம் புதுச்சேரியின் அடையாளங்கள். நகரை சுற்றிலும் உள்ள பகுதிகளில் பெரும்பாலானவை விவசாய பூமி. தஞ்சையை ஆண்ட சோழ பேரரசர்களின் ஆட்சிப்பரப்பின் எல்லை, புதுச்சேரி வரை விரிந்து கிடந்துள்ளது. அதனால் தானோ என்னவோ, பாகூர் ஏரி, ஊசுடு ஏரி என ஏரிகளுக்கு பஞ்சமில்லை. பாகூர், பண்டித சோழ நல்லூர், திருக்கனூர் போன்ற ஊர்களெல்லாம் பசுமை போர்த்தி இருப்பதை பார்த்திருக்கிறேன்.

சங்கராபரணி ஆறு புதுச்சேரி வழியாக கடலில் கலக்கிறது. புதுச்சேரிக்குள் பாயும் ஆறுகளில் கூட பல இடங்களில் படுகை அணைகள் (தடுப்பணை அல்லது செக் டேம்) கட்டி இருக்கிறார்கள். ரங்கசாமியின் முந்தைய ஆட்சி காலங்களின் சாதனைகளில் இதுவும் ஒன்று. நிலத்தடி நீர் மட்டம் நன்றாக இருப்பதால் தண்ணீருக்கு (குடிநீருக்கு) பஞ்சமே இல்லை. தினமும் மூன்று வேளை சராசரியாக 2 மணி நேரம் வீதம் குழாயில் தண்ணீர் விடுவது வழக்கம். முதலாவது தளம் வரை அந்த தண்ணீர் தானாக மேலேறி வருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

புறநகரம் மட்டுமல்லாமல் புதுச்சேரி நகரும் கூட, குளுமையானது தான். ஒவ்வொரு வீடுகளிலும் குறைந்தது இரண்டு மரங்களையாவது வளர்க்கின்றனர். இது தவிர, பூஞ்செடிகளும் வளர்ப்பது உண்டு. சாலையோர மரங்கள் தனி கணக்கு. ரயில் மற்றும் பேருந்து நிலையம் அருகிலேயே மிகப்பெரிய தாவரவியல் பூங்கா. இதன் வயது, 300 ஆண்டுகளுக்கு மேல்.

புதுச்சேரி மண்ணில் முதன் முறையாக அடி எடுத்து வைத்த சமயத்தில் தான், ‘தானே’ புயல் உக்கிரதாண்டவமாடி இருந்தது. பெரிய பெரிய மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்து கிடந்தன. வீடுகளில் தென்னை மரங்கள் முறிந்து கிடந்தன. சட்டப்பேரவை மற்றும் ஆளுநர் மாளிகை அருகில் உள்ள பாரதி பூங்காவும் உருக்குலைந்து கிடந்தது. பல ஆயிரம் மரங்கள் முறிந்து விட்டதாக அலுவலக சகாக்கள் என்னிடம் கூறியபோது மிகை என்றே எண்ணினேன். நாளடைவில் நகரை சுற்றி வந்தபோது அது பொய்யில்லை என்பது புரிந்தது.

தானே புயலின் பாதிப்பு சில மாதங்கள் தான் நீடித்தது. அரசும் மக்களும் உடனடியாக மரங்களை நடத் தொடங்கியதன் விளைவை 5 ஆண்டு கழித்து பார்க்க முடிந்தது. இப்போது மீண்டும் ஜொலிக்கும் பாரதி பூங்கா, புத்துணர்ச்சியுடன் மலர்ந்திருக்கும் தாவரவியல் பூங்கா எல்லாம் ஒரே நாளில் சாத்தியமில்லை. புதுச்சேரி மக்கள் மற்றும் அரசின் முயற்சியின் பலன். அரசு ஊழியர்களுக்கும் கூட அதில் பங்கு உண்டு. கடமையாக கருதாமல் ஆத்மார்த்தமாக பணிகளை செய்பவர்கள். அரசு அலுவலகங்கள், அரசு ஊழியர்கள் பற்றி விரிவாக எழுதலாம்.

என்னுடைய வாழ்வில் புதுச்சேரியின் செழுமையையும் வற்றாத தண்ணீர் வளமையையும் மறக்கவே முடியாது. சொந்த ஊரில், எனது சிறிய வயதில் கூட இதுபோன்ற பசுமையை நான் பார்த்து அனுபவித்தது இல்லை. இப்படிப்பட்ட புதுச்சேரியில், நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாகவும் கடல்நீர் உட்புகுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதனால், அங்குள்ள நீர் நிலைகளை பாதுகாக்கும் முயற்சியில், அரசு பள்ளி ஆசிரியரும் எனது நலனில் அக்கறை கொண்டவருமான ராம் மூர்த்தி போன்றோரை நிர்வாகிகளாக கொண்ட செம்படுகை நன்னீரகம் (பெயரே எவ்வளவு இனிமை) போன்ற சுற்றுச் சூழல் அமைப்புகள் குரல் கொடுத்து வருவது ஆறுதல்.

(அனுபவம் இனிக்கும்…)

என்னை கவர்ந்த புதுச்சேரி - 9

புதுச்சேரியில் தொழில் வளர்ச்சி என பார்த்தால் எதுவும் கிடையாது என்றே சொல்ல முடிகிறது. மேட்டுப்பாளையம் தொழில்பேட்டை பகுதியில் இருந்த சில தொழிற்சாலைகளும் அரசின் செயல்பாடு மாமூல் தொல்லை போன்றவற்றால் மூடப்பட்டன. ஏடிஎம் இயந்திரம் தயாரிப்பு தொழிற்சாலைகள் இரண்டு இருந்தன. ஏ.எடி.எம்மில் ஆயிரம் ரூபாய் திருடு போனால் கூட அங்கு சென்று போலீசார் விசாரிப்பது, உள்ளூர் ரவுடிகளின் மாமூல் தொல்லையால் அந்த நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூர் சென்று விட்டன. இது சிறிய உதாரணம்.

உயர் கல்வியை பொறுத்தவரை அரசு மருத்துவ கல்லூரிக்கு ஆண்டுதோறும் டெல்லி சென்று அனுமதி வாங்கி வருவது வழக்கம். தனியார் மருத்துவ கல்லூரிகளும் (ஏழு இருக்கின்றன) பொறியியல் கல்லூரிகளும் அரசு ஒதுக்கீடு இடங்களை அளிப்பதே கிடையாது. தமிழகம் போல இல்லை. அரசு ஒதுக்கீடு இடங்களை பெற ஆண்டுதோறும் அரசு தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அப்படியும் கூட போதுமான இடங்களை தனியார் கல்வி தந்தைகள் வழங்குவதில்லை.

சென்டாக் (உயர்கல்வி சேர்க்கை மையம்) முன்பு ஆண்டுதோறும் மாணவர்களும் பெற்றோரும் போராட்டம் நடத்துவதும் ஈசிஆரில் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் வாடிக்கையான நிகழ்வு. பொறியியல் கல்லூரிகளில் பாண்டிச்சேரி என்ஜினியரிங் கல்லூரி மட்டுமே அரசு கல்லூரி. மற்றவை தனியார் கல்லூரிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜிப்மரில் அகில இந்திய நுழைவு தேர்வு மூலமாக சேர்க்கை நடைபெறும். அதில், புதுச்சேரிக்காக 25 இடங்கள் வரை உண்டு.

புதுச்சேரியில் பேருந்து மற்றும் மதுபானம் அனைத்தும் தனியார் வசம் இருப்பதால் அரசுக்கு வருவாய் கிடையாது. மதுபானம், கள், சாராயக்கடை ஏலம் மூலம் 100 முதல் 200 கோடி வரை மட்டுமே கலால் துறைக்கு கிடைக்கும். இதுபோக, சுற்றுலா வருவாய். அதுவும் தனியார் விடுதிகள் மற்றும் 5 கி,மீ தொலைவுக்கு 200 ரூபாய் வரை கேட்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கே அது போய் சேரும்.

இப்படியாக தொழில், கல்வி, நிர்வாகம் என அனைத்திலும் ஆட்சியாளர்களிடம் திட்டமிடல் எதுவும் இல்லை. பேருந்துகள், மதுபானக் கடைகள் அனைத்தும் கட்சி பாகுபாடின்றி அரசியல் தலைகளிடம் தான் இருக்கின்றன. இப்படி ஒரு சூழ்நிலையில், மாநில அந்தஸ்து பெற்றால் வளம் கொழிக்கும் என்ற கோஷத்தையும்…. வெளி மாநிலத்தவர் வருகையால் தான் மாநில வளர்ச்சி முடங்கியது என்ற வாதத்தையும் புதுச்சேரி மக்களிடம் அரசியல் தலைவர்கள் பரப்புகின்றனரோ என்ற சந்தேகம் எனக்குள் உண்டு.

எல்லா மாநிலங்களையும் போலவே ஆளுங்கட்சிக்கு அணுக்கமாக சில லட்டர் பேடு கட்சிகளும், எதிர்க்கட்சிக்கு அணுக்கமாக சில லட்டர் பேடு கட்சிகளும் புதுச்சேரியில் உண்டு. அவற்றின் அணுகுமுறைகள் மற்றும் போராட்ட அறிவிப்புகளும் கூட இதையே பெரும்பாலும் பிரதிபலிக்கும்.
(அனுபவங்கள் இனிக்கும்…)