Saturday 1 September 2018

கவனம் திருப்பும் குயிலிசை...

பாளம் பாளமாய் கிடந்த
வெடிப்புகளில் பாய்ந்த
புது வெள்ளத்தால்
பருவ பெண்ணாய்
பூத்து கிடக்கிறது கண்மாய்

உடை வேம்பு ஊடாய்
வேம்பு புளியை கடந்தலைந்த
வெயிலின் வெம்மை தணிந்து
குளுமை குளம்வலம் வருகிறது
உறுத்தாத நறுமணம் தரித்து...

பொட்டலில் காற்றுக் குடித்து
மயங்கி கிடந்த அரவங்களின்
கும்மாளம் குளக்கரையில்...
மஞ்சள் பாம்பாக நெளிகிறது
தண்ணீரில் தவறி விழுந்த
மத்தியான நேரத்து சூரியன்...

பழுத்த இலைகளை
துளி துளி கண்ணீராய்
உகுத்து நின்ற ஆலமரத்தில்
புதிதாக பரவிய பசுமை
புது பணக்காரன் போல
காற்றுடன் கலந்து
அருவியாய் சலசலக்கிறது

மனித இயற்கை பந்தயமாய்
மீன் கொக்கு சடுகுடு ஆட்டம்
சீட்டியடித்து உற்சாகமூட்டும்
குருவி, கிளிகளின் கூட்டம்
நொடியில் கவனம் திருப்பும்
தூரத்து குயிலிசை...

= நெல்லை ரவீந்திரன்


அதிகாலை சிணுங்கல்...

போதும் என்கிறது மனம்
தேகமோ இன்னும் கொஞ்சமென
பாவமாய் கெஞ்சுகிறது
போர்த்திய இருளின் சுகத்தில்
நீடிக்கிறது கதகதப்பு
இருட்டு போர்வையை விலக்கி
எட்டிப் பார்க்கும் சூரியனுக்கும்
மசமசப்பு கலந்த மயக்கம்

தாழ்வாரத்தில் சொட்டும்
மழை நீரின் மத்தள சத்தமும்
மாமர குயிலின் குழலிசையும்
உள்ளுக்குள் குறுகுறுவென
எங்கோ இழுத்து செல்கிறது
அதிகாலை மழை குளிரின்
வேணும் வேணும் என்ற
மெல்லிய சிணுங்கலில்
கலைய மறுக்கிறது உறக்கம்...

= நெல்லை ரவீந்திரன்

சிதறிப்போன எழுத்துகள்...

குதிருக்குள் குவிந்து கிடக்கும்
நெல்மணிகளாய் எழுத்துகள்...
வெல்லக்கட்டியை இழுத்துச்
செல்லும் எறும்பாக மாறி
துண்டுகளாக சேகரித்து 
வைக்கிறேன் எழுத்துகளை
கதிரின் ஊடாக பறந்து
கம்பும் சோளமுமாக
கொத்திச் செல்லும்
கிளியாக எடுத்து வந்து
உள்ளங் கையில் சேமித்து
வைக்கிறேன் எழுத்துகளை
இடையில் முடிந்திருக்கும்
சில்லறை காசுகளை
திரும்ப திரும்ப எண்ணும்
பராரியாக ஒவ்வொன்றாய்
எண்ணிப் பார்த்து
வைக்கிறேன் எழுத்துகளை
எப்படியாவது எழுத்துகளை
வார்த்தைகளாக்கி
கவிதை தோரணம்
கட்டி விடும் வேகம் எனக்குள்
எழுத்துகள் ஒன்று கூடி
வார்த்தையாகும் தருணம்
சிறுவாடாய் சேகரித்த
எழுத்துகள் எல்லாம்
சில்லறையாய் சிதறின
உன் விழி ஈர்ப்பு விசை கண்டு..