Wednesday, August 24, 2016

சட்டை உரிக்கும் பாம்பு

முகத்தை பாறை மீது சரசரவென உரசியதும், ஆம்லெட் போடுவதற்கு மெதுவாக முட்டை ஓட்டை தட்டினால் மெலிதாக விரிசல் வருமே... அப்படி ஒரு விரிசல் உதடு பகுதியில் தோன்றும். அந்த விரிசலை சீரற்ற கருங்கல் அல்லது பாறையில் வாகாய் கோர்த்துக் கொள்ளும். கட்டிடத்தில் கயிறு போட்டு ஏறுவது போல இதுவும் முன்னேறிச் செல்ல போடப்படும் ஏற்பாடு.
உதட்டு வெடிப்பை பாறை இடுக்கில் நன்கு தோதாக மாட்டியதும் மெதுவாக வேலையை ஆரம்பிக்கும். வளைந்து நெளிந்து செல்வதுதான் இயல்பான குணம் என்றாலும் அந்த சமயத்தில் மட்டும் மூங்கில் கம்பு போல விறைப்பாக நீண்டு கிடக்கும். நீண்ட போராட்டத்துக்கு பிறகு பஞ்சு நுரை போல தலைப் பக்கத்தில் இருந்து வெளிவரத் தொடங்கும். அப்படியே தலையை நகல் எடுத்தது போல மற்றொரு தலை வெளியேறும்.
எலியையோ முட்டைகளையோ ஜீரணிக்க முடியாமல் துப்புவதை கேள்விப்பட்டு இருப்போம். இது தன்னையே துப்புவதை போன்றது. கிட்டத்தட்ட இரை எடுத்துக்கொண்டு நகர முடியாமல் கிடப்பது போலவே இப்போதும் கிடக்கும். தலை வந்த சிறிது நேரத்தில் மெல்ல மெல்ல முழு உடலும் வெளிவரத் தொடங்கும். இது குகைப் பாதையை கடந்து வெளி வரும் ரயில் போலவே இருக்கும். தலையை வெளியேற்றும்போது இருந்த சிரமம் இப்போது இருக்காது என்பதால் உடல் பகுதி சற்று வேகமாகவே வெளியேறிவிடும்.
வெளிர் மஞ்சள் நிறத்தில் தங்கத்தை உருக்கியது போல தக தகவென மின்னும் அந்த உயிர், உயிரற்று கிடக்கும் தனது கூட்டை இப்போது பார்க்கும். அதற்கு இது ஒரு புதுப்பிறவி. உடலை முழுமையாக வெளியேற்ற வசதியாக தோலில் சுரந்த பிசுபிசுப்பும் கலந்து ஒருவித மதமதப்புடன் மயங்கி கிடக்கும். நீண்ட நேரம் உடலை விரைப்பாக வைத்திருந்த களைப்போ என்னவோ அப்படியே சுருண்டு ஓய்வெடுக்கத் தொடங்கும்.
பாம்பு சட்டை உரிப்பதைத்தான் சொல்கிறேன்....


நல்ல பாம்பு, சாரை தொடங்கி தண்ணீர் பாம்பு பச்சை பாம்பு வரை பொது விதி இதுதான்.
சிறிய வயதில் ஊருக்கு தெற்கே இருக்கும் பரம்பு காட்டில் உள்ள கிணற்றில் இறங்கி குளிக்கும்போது சுவரில் (கல் பாறை) இதுபோன்ற பாம்பு சட்டைகள் தொங்குவதை வைத்து அதன் நடமாட்டத்தை அனுமானிப்போம். தண்ணீர் பாம்பு , பச்சை பாம்பு போன்றவை மனித பயமின்றி திடீரென கிளம்பி வருவதுண்டு. மற்றவை எல்லாம் ஆள் அரவமற்ற தருணங்களில் தான் அவற்றின் வேலைகளை செய்யும். நம்மை அவை கவனிக்காத தருணங்களில் மூச்சை பிடித்துக் கொண்டு உச்சி முதல் உள்ளங்கால் வரை பீதியில் உறைந்தபடி இது போன்ற அரிய நிகழ்வுகளை பார்த்ததுண்டு....

Sunday, August 21, 2016

தேவதை மொழி..

வார்த்தைகள் இல்லா
வர்ணமற்ற பொழுதொன்றில் 
புருவத்தை சற்றே உயர்த்தி
கறுப்பு வெள்ளை விழிகளால்
வினா எழுப்பி நின்றாய்...
கண்களாலேயே
அபிநயம் பிடித்தபடி
புருவத்தை மட்டும்
சில கணம் நெளித்து
கண்ணின் மணிகளை
சுழற்றியபடி நீ எழுதிய
எழுத்தில்லா சொற்காவியங்கள்
காற்றில் நீந்தி வந்து
என்னை சேர்ந்த சமயத்தில்
கற்றுக் கொள்ள தொடங்கினேன்
தேவதை விழி மொழியை...

மனித நேயம்....

உலகெலாம் உறவென
பூச்செண்டு கரம் நீட்டிய
பூங்குன்றனாரும்
வாடிய பயிர் கண்டு
வாடிய வள்ளலாரும்
அவதரித்த மண் இது...

சமய குரோதங்கள்
சங்கறுத்து நிற்க
சாதி பேதங்களும்
சுற்றி நின்று அச்சுறுத்த
வீச்சரிவாளின் நுனியில்
பேச்சின்றி கிடக்கிறது
இன்றைய மனித நேயம்...

கடல் கடந்த தேசத்தின்
ஐந்தறிவு ஜீவனுக்கும்
கண் காணா ஊரில்
துடிக்கும் உயிருக்கும்
கண்ணீர் வடிக்கும்
இதயங்களில் இருந்து
கண்ணெதிரில் நசுங்கும்
மனித நேயத்துக்காக
துளியும் ஈரமில்லை....

இனி ஒரு விதி செய்வோம்
நம் வீதிகளில் இருந்தே
மனித நேய சாலையை
செப்பனிடுவோம்...

தொடங்கும் இப்பணியால்
நாளைய நம் உலகில்
மனித நேயம் பூச்செடி
மலர்ந்து மணம் வீசட்டும்...
சாதி சமய மாச்சரியங்கள்
அதற்கு எருவாகட்டும்...

நவீன மனு நீதி

ஆராய்ச்சி மணி ஒலிக்க
யாரங்கே என விளித்தான்
நவீன மனு நீதி
சேதியுடன் வந்தனர்
சேனையின் வீரர்கள்
கண்ணீருடன் நிற்கிறது
அபலை பசு ஒன்று
இளவரசர் தேரில் சிக்கி
சிதைந்து போனதாம்,
அந்த பசுவின் கன்று...
யோசித்தான் மனு நீதி,
பின்னர், அழைத்தான்...
லகுட பாண்டிகளுள்
ஒரு அப்பாவி
லகுட பாண்டியை
பசுங் கன்றின்
உயிர் கொலைக்கு
காலையில் விசாரணை
தப்பாமல் ஆஜராகுமாறு
ஆணையிட்டான்
வீட்டுக்கு மானியம்
குழந்தைகளுக்கு சொத்து
மனைவிக்கு அரண்மனை பணி
அடுக்கடுக்காக வழங்கினான்
நவீன மனு நீதி
விசாரணை மண்டபம்...
தேருக்கு முன் சென்றது
பசுவின் குற்றமாக கருதி ...
தேரோட்டிக்கு விதித்தனர்
ஆயுள் தண்டனை
புகார் இந்திர விழாவில்
கருணையின் பேரில்
தேரோட்டியை விடுவிக்கலாம்
மனு நீதியும், மகனும்
மனதினுள் யோசித்தனர்
நீதியை யாசித்த பசுவின்
கண்ணீர் உறைந்தது
பசுவும் கல்லாய் சமைந்தது
நவீன மனு நீதி சோழன்
மகிழ்கிறான், மகனுடன்...

கழுதை....

கழுதை கெட்டா குட்டிச் சுவரு. இந்த பழமொழியை எல்லோரும் கேட்டிருப்போம். ஆனால், கழுதை என்ற விலங்கை இன்றைய தலைமுறையினரில் எத்தனை பேர் நேரில் பார்த்திருப்பார்கள்...? இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்.

முன்பெல்லாம், கிராமங்களில் வீடு, வீடாக அழுக்குத் துணிகளை சேகரித்து கழுதை மீது பெரிய பொட்டலமாக (பொதி மூட்டை) கட்டி, துவைப்பதற்கு கொண்டு செல்வார்கள். அந்த தொழிலில் ஈடுபடுவோர், அதற்கென வீடுகளில் கழுதைகளை வளர்த்து வந்தனர். அதிக அளவில் அழுக்கு இருக்கும் துணியை வீட்டில் வெள்ளாவி (வெந்நீரில் துணியை வேக) வைத்துக் கொள்வார்கள். அதன்பிறகு, ஊருக்கு வெளியே உள்ள குளம், ஊருணி போன்றவற்றில் துவைத்து கழுதையின்மீது ஏற்றி கொண்டு வருவார்கள். விசேஷ தினங்கள் தான் கழுதைக்கு விடுமுறை தினம்.

எங்கள் ஊரில் சித்திரை மாத கொடை விழாவின்போது, ஊரில் உள்ள கழுதைகள் எல்லாம் ஒட்டு மொத்தமாக ஒரு இடத்தில் கூடி நிற்கும். கழுதை வாலில் பட்டாசு கொளுத்தி ஓட விடுவதும், பனை ஓலையை கட்டி விடுவதும் சிறிய வயது விளையாட்டுகள். தனக்கு பின்னால் இருந்து வினோதமாக ஒரு சத்தம் கேட்கத் தொடங்கியதும் அச்சத்தில் கழுதை ஓட்டம் பிடிக்க, அந்த சத்தமும் அதன் பின்னாலேயே செல்வதால் மிக வேகமாக ஓட்டம் பிடிக்கும்.இப்போது குளமும் இல்லை. ஊருணியும் இல்லை. கழுதையும் இல்லை. இது வாஷிங் மெஷின் காலம். வீதிகளில் சின்ன சின்ன சில்மிஷங்கள் செய்து ஓடி விளையாண்ட சிறுவர்களும் இப்போது இல்லை. ஏனென்றால், இது டெம்பிள் ரன் காலம். அதனால் தான், ‘என்னைப் பார் யோகம் வரும்’ என்ற அதிர்ஷ்ட சட்டங்களுக்கு இடையே புகைப்படமாக மாறி விட்டது, கழுதை.
= பாரு. இங்க ஒரு கழுத கம்ப்யூட்டர் முன்னால ஒக்காந்துகிட்டு பழச கிளறிகிட்டு இருக்கு..ன்னு ‘சின்ன கவுண்டர்’ கவுண்டமணி பாணியில நீங்க நெனைக்கிறது எனக்கு கேட்குது...